Arts
7 நிமிட வாசிப்பு

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடர்

July 5, 2022 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

இவர் யாழ்ப்பாண மருத்துவ வரலாற்றுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர் அல்லர். யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஜோன் ஸ்கடர்(சீனியர்) ஆற்றிய மருத்துவத் தொண்டு பற்றி எழுதுகின்ற வரலாற்று ஆய்வாளர்கள் மருத்துவர் ஐடா சோபியா ஸ்கடரைப் பற்றிய இரண்டு விடயங்களைச் சொல்வார்கள். முதலாவது, இவர் மருத்துவர் ஜோன் ஸ்கடரது பேர்த்தி. மற்றையது, இன்று இந்தியாவில் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்குகின்ற வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஸ்தாபகர் மருத்துவர் ஐடா ஸ்கடர் என்று.

பூகோள வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகள், தனிமனிதர்களது சிந்தனைமிக்க, துணிச்சலான செயற்பாடுகள் உலக வரைபடத்தில், மானுட வரலாற்றில், மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

 பெற்றோருடன் ஐடா ஸ்கட்டர்

1955 டிசெம்பர் மாதம் முதலாம் திகதி, அமெரிக்காவின் அலபாமாவில் மொன்ரகோமெரி என்ற இடத்தில் ரோசா பாக்ஸ் என்ற கறுப்பினப் பெண்மணி பேருந்தில் பயணம் செய்யும் போது வெள்ளையின ஆண்களுக்கு தனது இருக்கையை விட்டுக் கொடுக்க மறுத்தார். இதனால் சிறைக்குச் சென்றார். கறுப்பினத்தவர்கள் அனைவரும் ரோசா பாக்குக்காகத் தெருவுக்கு வந்தார்கள். அமெரிக்கா அதிர்ந்து, கறுப்பர்களது சிவில் உரிமை இயக்கம் தோற்றம் பெற்றது. ரோசா பாக்சினது துணிச்சலான ஒரு செயற்பாடு அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு சிவில் உரிமையைப் பெற்றுக் கொடுத்தது.

நேபாம் குண்டுவீச்சில் இருந்து உயிர் தப்பியோடும் சிறுமியின் புகைப்படம் அமெரிக்க மக்களை வியட்நாம் போருக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்து வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பீரங்கி வண்டி மனிதனது (ராங் மான்) புகைப்படம் சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில் 1989 இல் நடைபெற்ற மாணவர்களது எதிர்ப்புப் போராட்டத்தை வெளியுலகுக்குக் கொண்டு வந்தது.

நாஜிக்களிடம் இருந்து உயிர் தப்புவதற்காக நெதர்லாந்தில் ஒரு வீட்டினருகே 2 ஆண்டுகள் ஒளிந்திருந்தபோது ஆன் பிராங் என்ற யூத – ஜேர்மனிய இன 13 வயதுச் சிறுமி டச்சு மொழியில் எழுதிய நாட்குறிப்புக்கள் “டயரி ஒவ் எ யங் கேர்ள்” என்ற பெயரில் 1947 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இன்று உலகின் 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உலகை மாற்றிய புத்தகங்களில் ஒன்றாக விளங்குகிறது. அமெரிக்காவிலும் , ஐரோப்பாவிலும் பள்ளிகளில் இது பாடப்புத்தகமாகவும் உள்ளது.

உலகை மாற்றிய 10 புத்தகங்கள்

மருத்துவத்தின் வரலாற்றை மாற்றிய பெண் மருத்துவ வல்லுநர்

இராணிப்பேட்டையில் உள்ள மிஷன் மருத்துவமனையில் 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி பிறந்த ஐடா ஸ்கடரின் வாழ்வு பலருக்கும் ஒரு பாடமாகும். சென்னையில் 1890 களில் ஒருநாள் இரவு பிரசவத்தின் போது மருத்துவம் பார்க்க ஒரு பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால் 3 பதின்ம வயதுப் பெண்கள் மரணித்தமை ஐடா ஸ்கடர் என்ற அமெரிக்க இளம்பெண்ணை மருத்துவர் ஆக்கியது. ஐடா தாபித்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவனை தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் மட்டுமன்றி இந்திய மருத்துவ வரலாற்றிலும் பல புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தி சாதனை புரிந்துள்ளது.

ஐடா சோபியா ஸ்கடர்

ஐடா சோபியா ஸ்கடர் – மருத்துவ உலகின் வரலாற்றை மாற்றி, புதிய அத்தியாயம் படைத்த பெண் மருத்துவ வல்லுநர்களில் ஒருவர் என்று அமெரிக்காவில் கௌரவிக்கப்பட்டுள்ளார். (Changing the face of Medicine: Celebrating America’s Women Physicians)

தென் சென்னையில் திண்டினத்தில் உள்ள மிஷன் இல்லத்தில் ஐடா பெற்றோருடன் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு, மூன்று தடவை ஐடாவின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. முதலில் வந்த பிராமணர் தனது பதின்ம வயது மனைவி பிரசவத்தின் போது உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் ஐடா வந்து உதவாவிட்டால் மனைவி உயிர் பிழைக்கமாட்டார் என்றும் ஐடா ஸ்கடரிம் கெஞ்சினார். ஐடா அவருக்கு உதவ விரும்பிய போதும் மருத்துவப் பயிற்சி பெறாததால் தனது தந்தை மருத்துவர் ஸ்கடரைக் கூப்பிடுவதாகவும் கூற அம்மனிதர் மறுத்து விட்டார். தானும் தந்தையுடன் கூட வருவதாக கூறியபோதும் அவர் சம்மதிக்கவில்லை.

அடுத்து வந்த முகம்மதியர் தனது மனைவியைக் காப்பாற்ற ஐடாவிடம் மன்றாடினார்: மூன்றாவதாக வந்த முதலியாரிடமும் ஐடா மேற்கூறிய பதிலையே கூறுகிறார்.

ஐடா ஸ்கடரின் நாட்குறிப்பில் மேல்வருமாறு எழுதப்பட்டிருந்து,

“அன்று இரவு என்னால் நித்திரைகொள்ள முடியவில்லை. ஒரு பெண் மருத்துவர் இல்லாத காரணத்தால், என்னுடைய கைகளுக்கு எட்டிய தூரத்தில் முன்று பெண்கள் பிரசவத்தின் போது இறந்து போனமையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இரவு முழுவதும் பெருந்துயருடனும் பிரார்த்தனையுடனுமே கழிந்தது. என் இதயத்தைப் பிழிந்த துயரைப்போக்க, ஆறுதலளிக்க வேண்டி நீண்டநேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டேன். அதிகாலை வேளையிலேயே நித்திரைக்குச் சென்றேன். என்னுடைய வாழ்நாளில் அன்றுதான் முதற்றடவையாக இறைவனை நேரில் தரிசித்தேன். என்னை எப்போதும் இந்தப் பணிக்காக இறைவன் அழைப்பதைக் கண்டேன்”

அடுத்தநாள் அந்த 3 இளம் பெண்களதும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளதும் இறுதி யாத்திரையினைக் கண்ணுற்று, துவண்டுபோன ஐடா தனது வாழ்வின் அர்த்தத்தைத் தேடுகிறார்.

ஐடா தான் ஒரு மருத்துவராக வந்து இந்தியாவில் பெண்களுக்கு மருத்துவம் செய்து மறுவாழ்வு கொடுக்கவேண்டும் என்று உறுதி பூண்டார். பெற்றோரிடம் தான் அமெரிக்கா சென்று மருத்துவம் பயின்று இந்தியாவுக்குத் திரும்பி பெண்களுக்கு மருத்துவம் செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளதாகத் தெரிவித்து அமெரிக்கா திரும்புகிறார்.

வேலூர் மருத்துவ கல்லூரியில் மாணவர்களுடன் ஐடா சோபியா ஸ்கடர்

1895 இல் பென்சில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவின் புகழ்பெற்ற கோ்ரனல் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். கோ்ரனல் பல்கலைக்கழகத்தின் வேய்ல் மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற முதற்பெண் ஐடா ஸ்கடர் ஆவர். 1899 இல் மருத்துவப் படிப்பைப் பூர்த்தி செய்ததும் வேலூரில் பெண்களுக்குப் பெண்களே மருத்துவம் பார்க்கும் மருத்துவமனை ஒன்றை நிறுவ 8000 அமெரிக்க டொலரைத் திரட்டத் தீர்மானிக்கிறார். பல இடங்களுக்கும் சென்று தனது விண்ணப்பத்தை முன்வைக்கிறார். ஆரம்பத்தில் உதவி கிடைக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து பாய்மரக் கப்பல் புறப்பட ஆயத்தமாகியது. கப்பல் புறப்பட ஒருவாரத்துக்கு முன் மன்காற்றன் நகரில் உள்ள ‘ஷெசல்’ என்ற வங்கியாளர் இறந்து போன தனது மனைவியின் நினைவாக 10000 அமெரிக்க டொலர் பெறுமதியான காசோலையை வரைந்து ஐடாவுக்கு வழங்கியதுடன் மருத்துவ உபரணங்களையும் வாங்கிக் கப்பலில் அனுப்புகிறார்.

1900 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி வேலூருக்கு வந்து தந்தையாருடன்(ஜோன் ஸ்கடர்) ஐடா இணைந்து பணியாற்றுகிறார். ஏப்ரலில் தந்தையார் காலமானதைத் தொடர்ந்து மிஷன் பங்களாவில் உள்ள அறையில் ஒரு படுக்கையுடன் ஐடா தனது சிகிச்சை நிலையத்தை ஆரம்பிக்கிறார். வேலூரில் 1902 இல் மேரி தபேர் ஷெசல் ஞாபகார்த்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையை 40 படுக்கை வசதிகளுடன் ஆரம்பித்தார்.

ஐடா 1909 இல் இந்தியாவில் முதன்முதல் தாதியர்களுக்கான டிப்ளோமா பயிற்சிப் பாடசாலையை வேலூரில் ஆரம்பித்தார். 1918 இல் ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார். 1942 இல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டு எம்.பி.பி.எஸ். பட்டம் வழங்கும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகமாகியது.

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்குக் கீழ் இயங்கும் தாதியர் பயிற்சிக் கல்லூரியை 1946 இல் நிறுவினார். இதுவே இந்தியாவில் தாதியர்களுக்குப் பட்டம் வழங்கிய முதலாவது தாதியர் பயிற்சிக் கல்லூரியாகும். 1948 முதன்முறையாக இந்தியாவில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீளஅமைப்பு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வேலூரில் ஒரு சிறிய அறையில் 1900 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை நிலையம் , வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லுரி மருத்துவனை என்ற பெயரில் இன்று 3000 படுக்கைள் மற்றும் அதிவிசேட மருத்துவ வசதிகளுடன் இந்தியாவின் முதல்தரமான மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்குகிறது.

சோபியா ஸ்கடர்

வேலூர் மருத்துமனையிலேயே இந்தியாவின் முதலாவது திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்தியாவில் முதன்முதலில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை, நரம்பியல் சத்திர சிகிச்சை மற்றும் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை என்பன வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லுரி மருத்துவனையிலேயே மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் நிலவிய தொழுநோய்க்கான சிகிச்சை, மீள்வாழ்வு சிகிச்சை, உளவள சிகிச்சைகள் எனபனவும் வேலூர் மருத்துவமனையாலேயே ஆரம்பிக்கப்பட்டன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4888 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)