Arts
19 நிமிட வாசிப்பு

தொடர்ச்சியான மாற்றுப்பயிர்களின் தேடல்

May 2, 2023 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

Estate-workers-Dimbula-area-2

1867 இல் பத்து ஏக்கரில் தொடங்கப்பட்ட தேயிலை உற்பத்தி 1887 ஆம் ஆண்டில் – இருபது வருடங்களுக்குள் – சுமார் 350,000 ஏக்கராக விரிவடைந்தது. இவ்வளவு விரைவாக தேயிலை வளர்ச்சியடைவதற்கு அழிந்த கோப்பிப் பெருந்தோட்டம்  உருவாக்கிவிட்டுச்சென்ற பெருந்தோட்ட நிலங்களையும் கட்டமைப்பையும் அது எளிதாக நிரப்பக்கூடியதாக இருந்தமை தான் காரணம். தேயிலை விளைந்த நிலப்பரப்பு கோப்பி பெருந்தோட்டங்கள் இருந்த நிலப்பரப்பை விடவும் விரிவடைந்து சென்றது. 1890 களில் பெரும்பாலான தேயிலைத்தோட்டங்கள் திம்புள்ள, டிக்கோயா, மஸ்கெலியா, களனிப் பள்ளத்தாக்கு,  தொலஸ்பாகே, புஸ்ஸல்லாவ, மாத்தளை  ஆகிய பகுதிகளில் மையம் கொண்டிருந்தன.   கோப்பி உச்சம் தொட்டபோது எந்தப் பெருந்தோட்டத்தின்  அளவும்  400 – 500 ஏக்கரைத்  தாண்டவில்லை. ஆனால் 1892 இல் 11 தேயிலைத் தோட்டங்கள் 1,000 ஏக்கருக்கு அதிகமானதாக இருந்தன. அவையாவன டயகம, மதகும்பற, ஸ்ப்ரிங் வெல்லி, தம்பதென்ன, கிலன் எல்பின், வட மாத்தளை, பல்லேகெலை, வெஸ்ட்ஹால், கிரேட் வெஸ்டர்ன், ரோத்சைல்ட், லெபனான் என்பனவாகும். இவற்றுள்  டயகம 2,343 ஏக்கர் கொண்ட முதலாவது கொம்பனி தோட்டமாகும்.    

The-works-at-Rothschild-Pussellawa-1

எனினும் 1887 முதல் 1903 வரை நீடித்த உலகப் பொருளாதார நெருக்கடியில் தேயிலை சிக்கிக்கொண்டது. பெருந்தோட்ட உற்பத்திப் பொருட்களின் விற்பனை பெரும்பாலும் அல்லது முற்று முழுக்க வெளிகாரணிகளால் நிர்ணயிக்கப்படுவதன் விளைவு இது. வெளிநாடுகளில் தேயிலை உற்பத்தி அதிகரித்ததாலும் அதன் விலை உலக சந்தையில் வீழ்ச்சியுற்றதாலும் தேயிலைப் பெருந்தோட்டம் முதல் தடவையாக சிக்கலுக்குள்ளானது. மறுபுறத்தில் சாதாரண வணிகமூலதனம் படைத்தவர்களால்  நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. இக்காலப்பகுதியில் தான் உலக வர்த்தகத்தில் ஏகபோகம்  செலுத்துகின்ற புதியவகையிலான இராட்சதக் கம்பனிகளும் ஏகாதிபத்திய அரசுகளும் உருவாகின. அதன் பின்னர் பெரும்பாலான தேயிலைத்தோட்டங்கள் இத்தகைய  இராட்சதக் கம்பனிகளின் பிடிக்குள் வந்தன.

ரப்பர் பெருந்தோட்டங்கள்

Henry-Alexander-Wickham-1
Sir-Henry-Wickham-1846-1928-standing-by-the-largest-original-plantation-rubber-tree-grown-from-seed

1897-1903 தேயிலை சந்தித்த நெருக்கடியின் மற்றொரு விளைவு யாதெனில்  ஒரே பயிரில் தங்கியிராமல் வேறு பயிர்களையும்  தேடுகின்ற முயற்சி தொடங்கியதுதான்.  இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு பயிர்தான் ரப்பர். கார் உற்பத்தி (1885) தொடங்கிய பின்னர் ரப்பரின் தேவை உலக அரங்கில் அதிகரித்தது. இலங்கைக்கு ரப்பர் அந்நியமான பயிர். எனவே அது இலங்கையில் விளையுமா என்ற பரிசோதனை கவனமாக மேற்கொள்ளப்பட்டது. இப்பரிசோதனை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன் வரலாறு 1876  இல்  தொடங்குகிறது. அவ்வாண்டில்தான் அமேசன் சமவெளியில் வளர்ந்த ரப்பர் தோட்டங்களிலிருந்து சேர் ஹென்றி விக்காம் (Sir Henry Wickham) என்பவரால் கடத்தப்பட்ட 1,919 ரப்பர் செடிகள்  பிரித்தானியாவிலுள்ள கியூ (Kew) தாவரவியல் பூங்காவில் வெற்றிகரமாக நடப்பட்டது.  அங்கிருந்து இலங்கையில் அப்போது சிலேவைலன்டில் இருந்த  கியூ  தாவரவியல் பூங்காவுக்கு ரப்பர் கன்றுகள் கொண்டுவரப்பட்டு நடுகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இத் தாவரவியல் பூங்கா பின்னர் 1813 இல்  களுத்துறைக்கும் அதன்பின்னர் 1821 இல் பெரதெனியாவுக்கும் மாற்றப்பட்டது. இங்கு ரப்பர் பயிர் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.

Tapping-rubber-tree-sri-lanka-1
Tapping-rubber-tree-sri-lanka-1
Tapping-rubber-tree-sri-lanka-1

1890 இல் இலங்கையில் ரப்பர் வெறுமனே 678 ஏக்கரில்  களுத்துறைப் பகுதிகளில் மாத்திரம் பயிரிடப்பட்டது. விரைவில் அது 1500 அடிக்கு  கீழ்ப்பட்ட  தாழ்நிலங்களில் பரவத்தொடங்கியது. 1905 முதல் 1910 வரையிலான காலப்பகுதியில் ரப்பர் உற்பத்தி வேகம் கண்டது. இதில் தேயிலைப் பெருந்தோட்ட பொருளாதாரத்தைப் போலல்லாது சுதேச சிற்றுடைமையாளர்களும் உள்ளூர் தனவந்தர்களும்  பெருமளவில் ஈடுபட்டனர். அதற்குக்  காரணம் ரப்பர் உற்பத்திக்கு பெருமளவு முதலீடு தேவைப்படவில்லை என்பதுதான். மிகச்சிறிய அளவிலேதான் வெளிநாட்டு முதலீடு இத்துறையில் இருந்தது. தேயிலையைப்போலவே ரப்பர் பெருந்தோட்டத்துக்கும் வருடம்தோறும் வேலைசெய்கின்ற நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். ஆயினும் தேயிலை பெருந்தோட்டங்களுக்கு  தேவையான அளவு பெருந்தொகையான தொழிலாளர்கள் இங்கு தேவைப்படவில்லை. அத்துடன் ரப்பர்த் தோட்டங்களில் ஆரம்பம் முதலே கிராமிய சிங்களத் தொழிலாளர் வேலை செய்தனர். இங்கு குறிப்பிடவேண்டிய விடயம் ஒன்றுள்ளது. அதுதான் கோப்பியும் தேயிலையும் பெரும்பாலும் அதுவரை மனிதர் வாழ்ந்திராத உயர் மலைப்பகுதிகளில் செழித்து வளர்ந்த அதே சமயம் ரப்பர் மரபுரீதியான பொருளாதாரம் நிலைபெற்றிருந்த தாழ்நிலக் கிராமப்பகுதிகளில் பரவியது.

1910 ஆம் ஆண்டளவில்  ரப்பர் தென்னையைப் பின்தள்ளிக்கொண்டு அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 1904 இல் சுமார் 25,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட  ரப்பர் ஆறு வருடங்களில்  (1910) 203,000 ஏக்கராகவும் 1934ல் அது சுமார் 600,000 ஏக்கராகவும் விரிந்தது.

தென்னை

ஏற்கனவே தென்னை இங்கு பெருந்தோட்டமாக உருவாகத்தொடங்கிவிட்டது. தென்னையும் இலங்கைக்கு அந்நியமான பயிராக இருந்தபோதும் அது நீண்டகாலமாக வீட்டுத்தோட்டப் பயிராக இருந்து வந்துள்ளது. தேயிலையும் ரப்பரும் இலங்கை மக்களின் நுகர்வுப் பண்டமாக இல்லாதபோதும் தென்னை அவர்களினால் பயன்படுத்தப்படும் உணவுப் பண்டமாக இருந்து வந்துள்ளது. இது தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு பிரதேசங்களில் செழித்து வளர்ந்தது. 1840 களில் இருந்தே  ஐரோப்பியர் யாழ். குடா நாட்டிலும், மட்டக்களப்பிலும், தென் மேற்கில் சில பகுதிகளிலும் தென்னையைப் பயிரிட்டனர்.  1860 களிலிருந்தே தென்னை உற்பத்தி வேகமடைந்தது. இக்காலப்பகுதியில் 250,00 ஏக்கராக இருந்த தென்னை இருபதாம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தில் 850,000 ஏக்கராக பரவியிருந்தது. இவற்றுள் கணிசமானவை கோப்பியின் வீழ்ச்சிக்கு முன்னமே உருவாகிவிட்டன.

இங்கு குறிப்பிடவேண்டிய ஒருவிடயம் யாதெனில் முடிக்குரிய காணிகள் விற்பனைக்குள்ளான காலத்தில் 1880 களில் வட மேற்கு மாகாணத்தில் 200 முதல் 300 சதவீத தென்னை உற்பத்தி  பெருகியது.  ஏக்கர் பரப்பளவைப் பொறுத்தளவில் தேயிலை ரப்பர் ஆகிய இரு பயிர்கள் விளைந்த பெருந்தோட்டங்களின் கூட்டுத்தொகையைவிட தென்னை விளைந்த நிலப்பரப்பின் அளவு அதிகமாக இருந்தது.  குறிப்பாக கோப்பி – தேயிலை விளைந்த பகுதிகளுக்கு வெளியே கொழும்பு, சிலாபம், குருநாகல் ஆகிய  நகரங்களை இணைக்கும் தாழ்நிலப்பரப்பின் முக்கோணப் பகுதிகளில் தென்னை செழிப்பாக வளர்ந்தது.

தென்னை-பயிர்செய்கை

கே. எம். டி. சில்வா தென்னை பெருந்தோட்டம் தொடர்பாக அதன் நான்கு பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்: முதலாவதாக, தென்னைப் பெருந்தோட்ட உற்பத்தியில்  ஈடுபட்டோர்களில் சுதேச தனவந்தர்களே – குறிப்பாக கரையோரச் சிங்களவரே -அறுதிப் பெரும்பான்மையினர். சிறியளவில் சுதேசத் தமிழர்களும் இவர்களில் அடங்குவர். 1890 களில் ஐரோப்பிய முதலீட்டாளர்களின் தொகை ஐந்து சத வீதத்தைத் தாண்டவில்லை. தென்னையைப் பயிரிடுவதற்கு அதிக மூலதனம் தேவைப்படவில்லை. அத்துடன் தென்னையைப் பராமரிப்பது மிக எளிதாக இருந்தது. இதனால் சுதேச தனவந்தர் அதிகளவில் ஈடுபட முடிந்தது. இரண்டாவதாக, பெரும்பாலான தென்னைத் தோட்டங்கள்  சிற்றுடைமையாகவே இருந்தன. பெரும்பாலும் அவை நெல் விளைந்த நிலங்களில் உருவாகின. 1900 ஆம் ஆண்டில் பத்து சதவீதமான தென்னைத் தோட்டங்கள் மாத்திரமே பெருந்தோட்டங்களாக இருந்தன. மூன்றாவதாக, கோப்பி, தேயிலைப் பயிர்களைப்போலல்லாது தென்னைத்தோட்டங்களுக்கு அதிக அளவு நிரந்தரத் தொழிலாளர் தேவைப்படவில்லை. அத்துடன் அது  கிராமியப் பொருளாதாரத்தோடு இரண்டறக் கலந்திருந்தது. கிராமவாசிகள் தமது வயல்களில் செய்யும் வேலை பாதிக்கப்படாமல் மேலதிக வேலை வாய்ப்பையும், நெல்விளைச்சல்  ஓய்ந்தபின்னர்  அவர்களுக்கு தொழிலையும் அது வழங்கியது. (அத்துடன் அவர்களது உணவுக்கு தேவையான தேங்காய், தேங்காயெண்ணெய், பதனீர், கள்ளு ஆகியவற்றையும், விறகாக காய்ந்த தென்னோலைகளையும் உரித்த தேங்காய் மட்டையையும், குடிசைக்கும்  வேலிக்கும் தேவையான கிடுகுகளையும் அது வழங்கியது). நான்காவதாக, தென்னைத் தோட்டங்களின் வளர்ச்சி போக்குவரத்துப் பாதைகளையும், ரயில்வே  சேவைகளையும்  இவை  விளைந்த பிரதேசங்களுக்கு விஸ்தரிக்க காரணமாயமைந்தது.

பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் தாக்கம்

பெருந்தோட்டப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இலங்கை நிலப்பிரபுத்துவ நாடாக பின்தங்கிய நிலையில் இருந்தது. நிலப்பிரபுத்துவத்தின் பொற்காலம் முடிவுக்கு வந்து நீண்ட காலமாகிவிட்டிருந்தது. அதன் இறங்குமுக காலகட்டத்தில் தேக்க நிலையை அது எட்டிக்கொண்டிருந்தது. வரலாற்றாசிரியர் எம். ஜி. மெண்டிஸ் கூறுவதைப்போல 1505 இல் போர்த்துகேயர் இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் வரை இலங்கை மக்களின் வாழ்க்கையில் சகல அம்சங்களிலும் இந்தியாவின் தாக்கம் மேலோங்கியிருந்தது.

அப்போது இலங்கை ஒரு தீவாக இருந்ததே தவிர ஒரே நாடாக இருக்கவில்லை. பல்வேறு சிற்றசுகளாக பிளவுபட்டுக்கிடந்தது. நீர்ப்பாசன வசதியுள்ள நிலங்களிலும் ஆறுகளை  ஒட்டிய வெளிகளிலும், மலைச்சரிவுகளிலும் அமைந்த  நெல்வயல்களை மையமாகக் கொண்ட  கிராமங்களின் தொகுப்பாகவே அது இருந்தது. ஒரு கிராமத்துக்கும் இன்னொரு கிராமத்துக்கும் இடையே கூட அரிதாகவே தொடர்பு இருந்தது. சனத்தொகை மிகக்குறைவாக இருந்தது. தேவைகள் மிகக்குறைவாக இருந்தன. கிராமங்களில் வயல்களை அண்டிய மேட்டு நிலத்தில்  வறிய  விவசாயிகளினதும் சில கைவினைஞர்களினதும்   குடிசைகள் இருந்தன. ஒதுக்குப்புறமாக நிலச்சுவாந்தார்களின் மண்வீடுகள்  இருந்தன. அன்றைய  சில நகரங்களில்  பிரதானிகளின் மாடங்கள், மதபீடங்கள், அரச மாளிகைகள்  காணப்பட்டன.

விளைச்சல் நிலங்களைத்தவிர ஆடு, மாடு, எருமை, கழுதை ஆகிய கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்களும் ஆங்காங்கு காணப்பட்டன. அவற்றைத்தவிர ஏனைய நிலங்கள் மனித நடமாட்டமற்ற அடர்ந்த காடுகளாக இருந்தன. கிராமங்களில் இருந்து நகரங்களில் வாழ்வோருக்குத் தேவையான உணவும், வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொருட்களை தொலைதூர கிராமங்களில் இருந்து கொண்டு செல்வதற்கும்   மாட்டு மந்தைக் கூட்டங்களும் கழுதைக் கூட்டங்களும் பயன்படுத்தப்பட்டன. சில இடங்களில் மாத்திரம், குறிப்பாக அன்றைய நகரங்களை அண்டிய பகுதிகளில்  மாட்டுவண்டிப் பாதைகள் இருந்தன அரசர்களும் பிரதானிகளும் குதிரைவண்டியை அல்லது தேரைப் பயன்படுத்தினர். பெரும்பாலான கிராமங்களில் ஒற்றையடி நடைப்பாதையே காணப்பட்டது. மத யாத்திரைக்காக கதிர்காமம் செல்வதும் சிவனொளிபாத மலை செல்வதும் கண்டி தலதாமாளிகைக்கும் செல்வதும் தான் இவர்களது தூரப்பயணங்களாக  இருந்தன. வசதி படைத்தோரும் அதிகாரத்தில் இருந்தோரும் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டனர். அதுவரை சுயதேவை – கிராமிய பொருளாதாரமே நிலவியது. நிலவுடமையாளர்= பண்ணை அடிமைகள் உறவு வித்தியாசமானமுறையில் வேரூன்றியிருந்தது. கிறிஸ்தவ மதமோ, ஐரோப்பிய மொழிகளோ இருக்கவில்லை. பறங்கியரோ, மலையகத் தமிழர்களோ அன்று குடியிருக்கவில்லை. இந்து மதத்தின் தாக்கம் – சாதிமுறைக்கு எதிராகத்தொடங்கப்பட்ட பெளத்த சித்தாந்தம் சாதி கட்டமைப்பைக்கொண்ட  ஒரு மதமாக மாறும் அளவுக்கு – அதிகமாக  இருந்தது. இஸ்லாம் மதம் இருந்தது. அதைப் பின்பற்றுவோரிடையே  சாதிப் பிரிவினை இல்லாதபோதும் வர்க்க அடிப்படையிலான பிளவு துலக்கமாகக் காணப்பட்டது. நிலவுடைமையாளரின் நலன்களைப் பாதுகாக்கும் அரணாக அரசர்கள் செயல்பட்டனர். இதனைத்தவிர நிலவுடமை – மத நிறுவனங்களும், பிரதானிகளும் பிரதான வகுப்பினராகத் திகழ்ந்தனர்.

மின்சாரமோ, மோட்டார்  வாகனங்களோ அப்போது இருக்கவில்லை. செய்தித் தாள்கள் எதுவும் வெளியாகவில்லை. வியாபாரக்கடைகள் என்பன இன்றைய அர்த்தத்தில் அன்று காணப்படவில்லை. தீவின் தென் மேற்குப்  பகுதியில் இயற்கையாக கராம்பு விளைந்ததாலும் , வீட்டுத் தோட்டங்களில் பாக்கு வளர்ந்ததாலும் அவற்றைக் கொள்வனவு செய்யும் முஸ்லிம் வர்த்தகரிடமிருந்து அப்போது கடல்வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அராபியர்கள் அவற்றை பிரதானமாக கொழும்புத் துறைமுகத்துக்கு  வந்து வாங்கிச்சென்றனர். உள்நாட்டு வர்த்தகத்தில் பண்டமாற்று முறையே பொதுவான நடைமுறையாக இருந்தது.

போர்த்துகேயர் இலங்கையில் கால் பதித்த 1505  காலப்பகுதியில் இன்னும் தொலைபேசியோ வானொலியோ, விமானமோ, விரைவாக ஓடும், நீராவிக் கப்பல்களோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே ஒரு மடலை இலங்கையில் இருந்து போர்த்துக்கல்லுக்கு அனுப்பி அதற்கு பதில் கிடைப்பதற்கு ஒருவருடம் முதல் இரண்டு வருடங்கள் பிடித்தன. ஒல்லாந்தர் இலங்கையில் கால்பதித்த 1658 லும் இதுவே நிலைமையாக இருந்தது. 1787 இல் முதலாவது நீராவியால் இயங்கும் படகும், 1830 களில் சாமுவேல் மோர்ஸ் கண்டுபிடித்த தந்தி அனுப்பும் முறையும் நடைமுறைக்கு வந்தபின்னர் தொலைத்தொடர்பு புதிய பாய்ச்சலைக் கண்டது. 1876 இல் தொலைபேசியும் 1890 களில் வானொலியும்  கண்டுபிடிக்கப்பட்டபின்னர் சில நிமிடங்களில் அவசரத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டது.

பிரித்தானியர் இலங்கையைத் தமது காலனித்துவப் பிடிக்குள் 1796 இல்  கொண்டுவந்தபோது அவர்களே உலகில் மிகவும் முன்னேறிய உற்பத்திமுறையைக் கொண்டிருந்தனர். சூரியன் அஸ்தமிக்காத  அவர்களது விரிந்த சாம்ராஜ்யம் உதயமாகிக்கொண்டிருந்தது. ஆனால் இலங்கையோ இன்னும் பின்தங்கிய – நிலப்பிரபுத்துவ – சுயதேவைப் பொருளாதாரத்தையே  கொண்டிருந்தது. இந்தியாவில் காணப்பட்ட முன்னோடி-தொழில்மயமாக்கப்பட்ட முகலாய வங்காளம் (Proto-industrialized Mughal Bengal) போன்ற  ஆரம்ப முதலாளித்துவ வளர்ச்சி இங்கு காணப்படவில்லை. பிரித்தானியர் கண்டியை 1815 இல் கைப்பற்றி முழு இலங்கையையும் ஒரே ஆட்சியின்  கீழ் கொண்டுவந்த  பின்னர்தான், குறிப்பாக 1823 இல் மலையகத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான் இலங்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

பாரம்பரிய பொருளாதாரத்தை பின் தள்ளிய பெருந்தோட்டப் பொருளாதாரம்

இலங்கையின் வரலாற்றின்  எக்காலப்பகுதியிலும் இடம்பெறாத சூறாவளி வேகத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விரிவடைந்தது. அதன் பின்னர் நீண்ட காலம் 150 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் பொருளாதாரம் பெருந்தோட்டங்களையே தங்கியிருந்தது. முதலாவதாகவும் பிரதானமாகவும் தேயிலை, அடுத்து ரப்பர் அதையடுத்து  தென்னை என இம்மூன்று பெருந்தோட்டங்களின் மூலம் கிடைத்த வருமானமே  இலங்கையின் 90% சதவீதத்துக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்தது.

பெருந்தோட்டப் பொருளாதாரத்துறையின் வளர்ச்சிக்கு  பிரித்தானிய காலனித்துவ அரசு முன்னுரிமை அளித்தமைக்கு பல காரணங்கள் இருந்தன. இலங்கையில் பெருந்தோட்டமாக நெல்லுற்பத்தி செய்வதைவிட கோப்பி, தேயிலை, ரப்பர் ஆகிய காசுப்பயிர்களை பெருந்தோட்ட முறையில் உற்பத்தி செய்வது இலாபகரமானதாக இருந்தது. கடற் போக்குவரத்து அதிகரித்து சர்வதேச வர்த்தகம் வளர்ச்சியுற்று சர்வதேசச் சந்தைவிரிவைடைந்தபோது தேயிலை, ரப்பர் ஆகியவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டது. இவை எல்லாநாடுகளிலும் செழிப்பாக வளர்வதில்லை. இலங்கை இவை விளைவதற்கான உகந்த காலநிலையையும் மண்வளத்தையும் கொண்டிருந்தது.  

இலங்கையில் ஆட்சியாளர்களாக இருந்த வெள்ளையர் முதலில் கோப்பியிலும் பின்னர் தேயிலைப் பெருந்தோட்டத்திலும் முதலீடு  செய்தனர். இவர்கள் கூடிய இலாபத்தை  ஈட்டுவதற்காக அதிகாரத் துஷ்பிரயோகம் என்ற அளவுக்கு தாம் வகித்த பதவிகளைக் கொண்டு தேவையான சட்டங்களை உருவாக்கிக்கொண்டு  சலுகைகளைப்  பெற்றனர். இவ்வாறு தேவையான நிலத்தை  முதலில் இலவசமாகவும் பின்னர் குறைந்த விலைக்கும் வாங்கினர்.  இந்தப்பெருந்தோட்டங்களில் உற்பத்தியான பொருட்களை கொழும்புக்கு கொண்டு சென்று அங்கிருந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தேவையான உள்ளகக் கட்டமைப்பை  – ரயில்வே பாதைகளையும், மோட்டார் பாதைகளையும், தொலைத்தொடர்பு வசதிகளையும், அரசின்  செலவில் செய்துகொண்டனர். இவற்றை உருவாக்குவதற்காக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இலவச உழைப்பையும் பெற்றுக்கொண்டனர்.

பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தது. அதன்மூலம் கிடைத்த வருவாய், இலங்கை மக்களின் அன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தபால் சேவை போன்றவற்றை வழங்குவதற்கும்   ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்கும் போதுமானதாக இருந்தது, அதுமாத்திரமல்ல பெருந்தோட்டத்துறையை தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரித்தானியாருக்கும் அதன் மூலம் பெரும் இலாபம் கிடைத்துவந்தது. அப்போது போடப்பட்ட பாதைகளாகட்டும்   புகையிரத வீதிகளாகட்டும் தொலைத்தொடர்பு வலைப்பின்னலாகட்டும் கொழும்புத்துறைமுக அபிவிருத்தியாகட்டும் அனைத்துமே பெருந்தோட்டத்துறையை மையமாகக்கொண்டு  அல்லது அதனை சார்ந்து அமைந்தன. பிரித்தானியர் என்றென்றும் இலங்கை தமக்குரிய காலனியாக  இருக்கும் என்ற நினைப்பில் தான் காரியங்களைச் செய்தனர். அப்போது சூரியன் அஸ்தமிக்காத பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த பிரித்தானியர் சர்வதேச நிலைமை மாறும் என்றோ தாம் இலங்கையை விட்டு செல்லநேரும் என்றோ எதிர்பார்த்திருக்கவில்லை.

அப்போது  பிரித்தானிய அரசின் கொள்கை தனது சர்வதேச வர்த்தகத்துக்கு சேவை செய்யும் விதத்தில்- தனது கட்டுப்பாட்டின் கீழ்- காலனிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே  பொருளாதாரத்தை வளர்த்து அதன்மூலம் காலனிகளை  தமக்கு பொருளாதாரச் சுமையாக இல்லாமல்  அந்தந்த நாடுகளின் அனைத்து  செலவுகள் போக தமக்கு  லாபமீட்டித் தரும் இடங்களாக மாற்றுவதாகவே இருந்தது. அப்போது இலங்கை அன்றைய ஆளுநர்களின் கீழ் பெருந்தோட்டங்களை  அடிப்படையாகக்கொண்ட இலாபகரமான  காலனியாக ஆளப்பட்டு வந்ததையிட்டு பிரித்தானியா திருப்தி கண்டது. அத்துடன் நெல் உற்பத்தி செய்யும் தனது காலனிகளான இந்தியா, பர்மா போன்ற  நாடுகள் அருகில் இருந்ததால் அதிக போக்குவரத்து செலவின்றி  அரிசியை ஏற்றுமதி செய்து அதற்கான விற்பனைச் சந்தையாக  இலங்கையை மாற்றுவது பிரித்தானிய அரசுக்கு இலாபகரமாக இருந்தது.

இதனால் பெரும்பாலான மக்கள் சார்ந்திருந்த உள்நாட்டு விவசாயம் காலனிய அரசால் கைவிடப்பட்டது. அதன் இறக்குமதி கொள்கையால் உள்நாட்டு கைத்தொழில்களும் பாதிக்கப்பட்டன. பெருந்தோட்டத்துக்கு தேவையான உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய மண்வெட்டி, அலவாங்கு, முள்ளு போன்ற சாதாரண உபகரணங்கள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. உலகின் மிகச்சிறந்த காரீயம்  இலங்கையிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட்டது .ஆனால்  காரீயம் மூலம்  செய்யப்படும் பென்சில்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ரப்பர் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது, அதைக்கொண்டு தயாரிக்கப்படும் டயர் உட்பட  ரப்பர், பொம்மைகள் முதல் காலணிகள் வரை அனைத்துமே இறக்குமதி செய்யப்பட்டன. துணிமணிகள் மாத்திரமல்ல வெங்காயம், மிளகாய் போன்ற அனைத்து உணவுப்பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன. இலங்கையை சுற்றி மீன்வளமுள்ள கடல் இருந்தது. ஆனால் மீன் டின்கள் இறக்குமதிக்கு ஊக்கமளித்த அளவுக்கு மீன்பிடித் துறையை வளர்க்க முயற்சி எடுக்கப்படவில்லை. ஒரு சாதாரண ஆணி கூட இங்கு உற்பத்திசெய்யப்படவில்லை.

இவ்வாறு உள்ளூர் விவசாயம் மாத்திரமல்ல உள்ளூர்க் கைத்தொழில்கள் கூட புறக்கணிக்கப்பட்டபோதும் வேகமாக வளரும் பெருந்தோட்டத்தின் பிரமாண்டம் பிரமிக்க செய்தபோதும் நலிவடைந்த விவசாயிகளின் போராட்டமோ அதிருப்தியடைந்த கிராமவாசிகளின்  கிளர்ச்சியோ 1848 இன் பின்னர் அதாவது பெருந்தோட்டம் விஸ்வரூபம் எடுத்தபின்னர் ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு பலகாரணங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று கிராமிய அதிருப்திகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டத்தை  நடத்தவேண்டிய சமூக சக்திகள் – காலனிய  அரசுடன் கைகோர்த்துநின்ற புதிதாக உருவாகிய ஆங்கிலம் கற்ற உயர் சாதியை சேர்ந்த மத்தியதர  வர்க்கத்தின் சரணாகதி  அரசியலின் முன்னால் – பலவீனமாக இருந்தது தான்.

அதைவிடவும் மற்றொரு காரணமும் இருந்தது. வரலாற்றாசிரியர் கே.எம்.டி. சில்வா கூருவதைப்போல, பாரம்பரிய  துறையுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பெருந்தோட்டத் பொருளாதாரத்துறை பல வெப்பமண்டல நாடுகளை விடவும் பெரிதாக இருந்தாலும் கூட இவ்விரு துறைகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மிக வலுவாக இருந்தது. அதன் ஒவ்வொரு  கட்டத்திலும் பெருந்தோட்ட விவசாயத்தில் உள்ளூர்வாசிகள்  பங்கு கொண்டனர். உள்ளூர் மூலதனவாதிகள்  கோப்பியை, தேயிலை தோட்டங்களில் தமது பங்கைக் கொண்டிருந்தனர், ரப்பரில் அவர்களது பங்கு  அதிகமாக இருந்த அதே வேளை தென்னையில் அவர்களே ஆதிக்கம் செலுத்தினர். பெருந்தோட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களில் அறுதிப் பெரும்பான்மை இந்தியர்களே எனினும்  முற்றுமுழுதாக அவர்களை மாத்திரம் இந்தத்துறை கொண்டிருக்கவில்லை. பெருந்தோட்டங்களில் விளைந்த பயிர்களைப்பொறுத்து உள்ளூர்வாசிகளின் ஈடுபாடு வேறுபட்டது. கோப்பித் (தேயிலை) தோட்டங்களை விட கூடுதலான உள்ளூர் உழைப்பாளர் தென்னை, ரப்பர் தோட்டங்களில் ஈடுபட்டனர். தாழ்நிலப் பிரதேசங்களிலும் சப்ரகமுவவின் சில பகுதிகளிலும் மத்திய மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் விட கூடுதலான உள்ளூர்வாசிகள் ஈடுபட்டனர். இதைவிட  பெருந்தோட்டங்களில் சில சேவைகளும் தேர்ச்சிபெற்ற வேலைகளும் அநேகமாக முழுவதுமாக சிங்களவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ரயில்வே அறிமுகப்படுத்தப்படும் வரை போக்குவரத்து துறை சிங்களவர்களின் ஏகபோகமாகவே  இருந்தது, அதில்  ஈடுபட்ட  தொழிலாளர்களும் சரி உரிமையாளர்களும் சரி  சிங்களவர்களாகவே இருந்தனர்.

உசாத்துணை

  1. Asoka Bandarage (1982) The establishment and consolidation of the plantation economy in Sri Lanka, Bulletin of Concerned Asian Scholars, 14:3, 2-22, DOI: 10.1080/14672715.1982.10412654
  2. Colvin R. de Silva, (1953) Ceylon Under the British Occupation, vol. 1, Colombo, Colombo Apothecaries Co., Ltd.
  3. De Silva, K.M (1981) A history of Sri Lanka, C Hurst & Co Publishers Ltd.
  4. De Silva, K.M.  (1965) Social Policy and Missionary Organizations in Ceylon, 1840-1855, (London: Langmans.
  5. Eric Meyer. (1992) ‘Enclave’ plantations, ‘hemmed‐in’ villages and dualistic representations in colonial Ceylon. Journal of Peasant Studies 19:3-4.
  6. Furnivall, J.S. (1948)  Colonial Policy and Practice: A Comparative Study of Burma and Netherlands India (Cambridge: Cambridge University Press.
  7. Jean Grossholtz, “Forging Capitalist Patriarchy: The Effect of British Colonial Rule on Sri Lanka,” (unpublished manuscript).
  8. Meek, C.K. (1956) Land Policy and Practice in the Colonies (London: Oxford University Press.
  9. Mendis, G.C. (2005)  Ceylon Under the British, Asian Educational Services.
  10. Michael Roberts,  (1963) “The Master Servant Laws of 1844 in the 1860’s and Immigrant Labour in Ceylon,” Ceylon Journal of Historical and Social Studies, vol. 8.
  11. Sarkar  N.K. and Tambiah, S.J. (1957)  The Disintegrating Village (Colombo: The Ceylon University Press Board.
  12. Shanmugaratnam, N (1981) “Impact of Plantation Economy and Colonial Policy on Sri Lanka Peasantry.” Economic and Political Weekly, vol. 16, no. 3.
  13. Van Den Driesen, I.H.  (1956) “‘Land Sales Policy and Some Aspects of the Problem of Tenure: 1836-1888, Part 2” University of Ceylon Review, vol. 14 Jan-April.
  14. Wesumperuma, D. (1970) “The Evictions under the Paddy Tax and Their Impact on the Peasantry of Walapane, 1882-1885,” Ceylon Journal of Historical and Social Studies, vol. 10.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6643 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)