Arts
18 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கை முஸ்லிம் மக்கட்பெயராய்வு

October 5, 2023 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

மொழியின் பிரதான அம்சமே பெயரிடுவதாகும். பெயர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் விரவிக்கிடக்கின்றன. ஒரு பொருள் அல்லது செயற்பாடு பெயரிடப்படுவதன் மூலமே தனித்துவப்படுத்தப்படுவதோடு, அர்த்தம் கொள்ளச் செய்யப்படுகின்றது. இப்பெயர்கள் தொடர்பான கற்கை Onomastics எனப்படுகின்றது. தமிழில் பெயராய்வு எனலாம். இது பெயர்களின் சொற்பிறப்பியல், வரலாறு, அவற்றின் பயன்பாடு, தனித்தன்மைகள் என்பவற்றை ஆய்வு செய்யும் துறையாகும். இது பலவகைப்படுகின்றது. 

  1. இடப்பெயராய்வு (Toponomastic)
  2. ஆட்பெயராய்வு (Anthrophonomastic)
  3. இலக்கியப்பெயராய்வு (Literary Onomastic)
  4. சமூகப் பெயராய்வு (Socio Onomastic)

இடப்பெயர்கள் என்பது ஒரு குறித்த பிரதேசத்தின் நிலம், நீர்நிலைகள், கட்டிடம், மலைகள், காடுகள், பாதைகள், சந்திகள், ஊர், கிராமம், எல்லைகள், வெளி ஆகியவற்றின் பெயர் தொடர்பான கற்கையாகும். ஆட்பெயராய்வு அல்லது மக்கட்பெயராய்வு என்பது நபர்களின், குலங்களின் பெயர்கள் பற்றிய ஆய்வாகும். இவற்றின் மூலம் குறித்த மக்கட் குழுமத்தின் பண்பாட்டு மாற்றங்கள், பாரம்பரியங்கள், மரபுகள் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும். 

ஆட்பெயர்கள் (Personal Names)

பெயர்கள் இனங்காணுங்குறிகளாகும். ஒருவரை தனித்து விளிக்க பயன்படும் வார்த்தைகள் பெயர் எனப்படுகின்றன. இது அவர் பிறந்ததிலிருந்து அவரின் சுயத்திற்கான அடையாளமாக கொள்ளப்படுகின்றது.  மதம், இனம், மூதாதையர்கள், பால், சமூக வகுப்பு, பிறப்பு வரிசை, உடற்தோற்றம், பிறந்த இடம், பிறந்தகாலப்பகுதி எனப் பல்வேறு விடயங்கள் ஒருவரின் தனித்தன்மையை இனங்கான உதவுகின்றன. அடையாளம் எனும் இச்சிக்கலான கட்டமைப்பின் தாக்கங்கள் பெயர்களின் உருவங்களில் (Morpheme) தொனிக்கின்றன. இக்கட்டுரை கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டில் ஆட்பெயர்களைப் பற்றி உரையாடுகின்றது. 

பிள்ளைகளிற்கு பெயரிடும் பண்பாடு பிறசமூகங்களைப் போலவே கிழக்கிலங்கை முஸ்லிம்களிடமும் காணப்படுகின்றது.  பிள்ளைகளிற்கு பெயரிடும் பண்பாடு இங்கு ஆதிதொட்டே நிலவிவந்துள்ளது. ஒரு நபரிற்கு இரு பெயரிடும் வழக்கம் கிழக்கிலங்கை முஸ்லிம்களிடத்திலும் காணப்படுகின்றது.  உத்தியோகபூர்வ ஆவணங்களிற்காக வைக்கப்படும் பெயர் ‘உள்பேர்’ (உட்பெயர்) என்றும், விளிப்பதற்காக் பயன்படுத்தும் பெயர் ‘வெளிபேர்’ (வெளிப்பெயர்) என்றும் இரு பெயர்கள் வைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த உள்பேர் என்பது ஆவணப்பெயர், பதிவுப் பெயர் (Registry Name) என்றும் அழைக்கப்படுகின்றது. பிறப்பத்தாட்சிப்பத்திரம், ஆளடையாளஅட்டை, கடவுச்சீட்டு, அனுமதிப்பத்திரங்கள், காணி உறுதிகள், திருமணப்பதிவு, இறப்புச்சான்றிதழ், பட்டச்சான்றிதழ், பெறுபேற்றுச் சான்றிதழ்கள் போன்ற உத்தியோகபூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் இப்பெயர்கள் பொருள் செறிந்ததாகவும் காணப்படும். 

வெளிப்பேர் என்பது அழைப்பதற்கு இலகுவான பெயராக காணப்படும். சிலவேளைகளில் பெயர் சூட்டுவதற்காக இரண்டு பெயர்களை இறுதியாக தீர்மானித்திருக்கும் போது ஒன்றை பதிவுப் பெயராகவும் மற்றையதை விளிப்பெயராகவும் பயன்படுத்துவர். உட்பெயர்களை பிறர் சூட்டிவிடக் கூடாதென்பதற்காகவும், வெளிப்பெயரை புழக்கத்தில் வைத்திருக்கும் வழக்கமும் இருக்கின்றது. இவ்வழக்கம் மிக அண்மைக்காலம் வரை பெருமளவு காணப்பட்டது. எடுத்துக்காட்டாக முஹம்மட் சிறாஜ் என்ற பதிவுப் பெயர் கொண்ட ஒருவர், வீட்டில் நௌசாட் என்று அழைக்கப்படுகிறார். அதேபோல் நஸீறா என்ற பதிவுப் பெர் கொண்ட ஒருவர் வீட்டில் மாஹிறா என்ற அழைக்கப்படுகின்றார். பாடசாலை மற்றும் அலுவலக மட்டங்களில் நண்பர்கள், சகஊழியர்கள் ஒருவரின் பதிவுப் பெயரையே விளிக்க பயன்படுத்துகின்றனர்.  வெளிப்பெயர் வைக்கும் வழக்கம் தற்காலத்திலும் நீடித்து வருகின்றது. சிறுவர்களிற்கு இடும்போது செல்லப் பெயர்கள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. 

பெயரின் அமைப்பு

பெயரினை மூன்று கூறுகளாக பகுக்கலாம். 

  1. முதற்பெயர் அல்லது வழங்கும் பெயர். (First Name or Given Name)
  2. இறுதிப்பெயர் அல்லது குடும்பப்பெயர். (Last Name or Family Name)
  3. சிறப்பு இணைப்புகள் (Special Tags)

முதற்பெயர் அல்லது வழங்கும் பெயரே ஒரு நபரின் அடையாளமாக கொள்ளப்படுகின்றது. இதனையே நபரை விளிக்கப் பயன்படுத்துவர். இறுதிப்பெயராக தந்தையின் பெயரை பயன்படுத்தும் வழக்கமே முஸ்லிம்களிடம் காணப்படுகின்றது. எழுதும் போது தந்தையின் பெயரைத் தொடர்ந்து பிள்ளையின் பெயர் எழுதப்படும். தந்தையின் பெயரின் முன்னெழுத்துக்களே (First Letters) பெயரின் முதலெழுத்துக்களாக (Initials) பயன்படுத்தப்படுகின்றன. பெயரின் பின்னால் சிறப்பு இணைப்புக்களாக பதவிகள், பட்டங்கள், பரம்பரைப் பெயர்கள் போன்றவை இணைத்துப் பயன்படுத்துவதுண்டு. இவை பெயர் பதிவேட்டில் பயன்படுத்தப்படுவதும் உண்டு; தவிர்க்கப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டாக ‘ஆதம்பாவா பரிகாரி ஆமிதுலெவ்வைப் பரிகாரி’ என்ற பெயரில் பரிகாரி என்ற தொழில் நிமித்தமான பாரம்பரிய வைத்தியர் என்பதைக்குறிக்கும் சொல் சிறப்பு இணைப்பாக பயன்படுகின்றது. 

முதற்பெயர்கள்

ஆரம்பகாலங்களில் பிள்ளைகள் பிறந்தால் பிறந்த நாளைக் கொண்டு பெயரிடும் வழக்கம் சம்மாந்துறையில் இருந்துள்ளதாக எம்.எம்.மீராலெவ்வை (2018:64) எழுதிய குறிப்புகளில் இருந்து அறிய முடிகின்றது.

name table

சிறந்த கருத்துள்ள பெயர்களை இடவேண்டும் என்ற நோக்கில் மக்கள் ஆலிம்களை நாடியுள்ளனர். இவை தவிர பிறபெயர்களும் இடப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் இடப்பட்ட பெயர்களினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. தனித்தமிழ்ப் பெயர்கள்
  2. தமிழ் பின்னொட்டுக்களுடனான பெயர்கள்
  3. தமிழாக்கப்பட்ட அரபுப் பெயர்கள்
  4. அரபுப் பெயர்கள்
  5. பிறமொழிப் பெயர்கள்

தனித்தமிழ்ப் பெயர்கள்

கிழக்கிலங்கை முஸ்லிம்களிடம் ஆரம்பகாலங்களில் பெருமளவான தமிழ்மொழிப் பெயர்கள் வழக்கிலிருந்துள்ளன. 

ஆண்பெயர்கள்

  1. இளையாம்பி
  2. குஞ்சித்தம்பி
  3. சின்னத்தம்பி
  4. சின்னராசா
  5. சின்னவன்
  6. சின்னத்தொர
  7. சீனிக்கண்டு
  8. சீனித்தம்பி
  9. செல்லத்தம்பி
  10. செல்லத்தொர
  11. தங்கராசா
  12. தம்பிக்கண்டு
  13. தம்பிராசா
  14. நல்லாம்பி
  15. பெரியாம்பி
  16. ராசா
  17. ராப்புள்ள
  18. வெள்ளத்தம்பி
  19. வெள்ளையன்

பெண்பெயர்கள்

  1. இளையபுள்ள
  2. இளையம்மா
  3. குஞ்சிக்கிளி
  4. கொச்சிம்மா
  5. சின்னக்கிளி
  6. சின்னப்புள்ள
  7. சின்னம்மா
  8. சீனிக்கண்டு
  9. சீனிம்மா
  10. செல்லக்கண்டு
  11. செல்லப்புள்ள
  12. செல்லம்
  13. செல்லம்மா
  14. தங்கம்
  15. நல்லபுள்ள
  16. நல்லம்மா
  17. நோம்பு
  18. பெரியபுள்ள
  19. பொன்னி
  20. மைனா
  21. மைனாக்கிளி
  22. ராணி
  23. வரிசையும்மா
  24. வெள்ளச்சி
  25. வெள்ளம்
  26. வெள்ளம்மா
  27. வெள்ளி
  28. றோசா

பின்னொட்டுக்களுடனான பெயர்கள்

தமிழ்ப்பின்னொட்டுக்களான கண்டு, தம்பி, புள்ள, ராசா என்பவை ஆண்களுக்கும் உம்மா, கண்டு, கிளி, நாச்சி, புள்ள போன்றவை பெண்களுக்கும் இடப்பட்டுள்ளன. கண்டு என்பது இனிமையான வெல்லத்தைக் குறிக்க பயன்படும் சொல்லாகும். இவ்விகுதியுடன் இணைந்ததாக பெயர்கள் அமைக்கப்பட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன்பட்டுள்ளன. ராசா, தம்பி ஆகிய ஈற்றுப் பெயர்கள் ஆண்களுக்கே பயன்பட்டுள்ளன. 

சிலருக்கு தொடர்ந்து பிறக்கும் குழந்தைகள் இறப்பதனால் அவர்கள் பிள்ளை இறப்பதைத் தடுக்கவென அமங்கலமான பெயர்களை இடும் வழக்கமும் இருந்துள்ளது. உதாரணமாக பிச்சை என்ற பெயரைக் குறிப்பிடலாம். மேலும் சில குடும்பங்கள் தந்தைவழிக் குடும்பப் பெயரினை பின்னொட்டாக சேர்த்துப் பயன்படுத்திவரும் வழக்கமும் உள்ளது. இவைதவிர லெப்பை, பாவா என்கிற பெயர் பின்னொட்டினை பெருமளவான 18,19 ஆம் நூற்றாண்டைய பெயர்களில் காணலாம். ஆதம்லெவ்வை, உதுமாலெவ்வை, பக்கீர்லெவ்வை, அலிலெவ்வை, ஆதம்பாவா, காஸீம்பாவா போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலும் பதவிப்பெயர்களும் பிற்காலத்தில் பெயர்களோடு மரியாதை நிமித்தம் இணைத்துக் கூறப்பட்டு பின் அது பெயர் போலவே  ஆவணங்களிலும் பயன்பட்டுள்ளது. வன்னியார், உடையார், காரியப்பர், பரிகாரி, வாத்தி, முகாந்திரம், போடியார் போன்றவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். மேலும் ஹாஜி, ஜனாப், ஸெய்யித் போன்ற பாரசீக சொற்களும் பெயர்களின் முன்னொட்டாக காரணங்களுடன் பயன்படுகின்றன.

  • கண்டு – உதுமான்கண்டு, தம்பிக்கண்டு
  • லெவ்வை – அகமதுலெவ்வை, அலிலெவ்வை, அலியார்லெவ்வை, ஆதம்லெவ்வை, ஆமிதுலெவ்வை, இஸ்மாலெவ்வை, இப்றாலெவ்வை, ஈஸாலெவ்வை, உதுமான்லெவ்வை, உதுமாலெவ்வை, கலந்தர்லெவ்வை, சாஹிர்லெவ்வை, சாய்வுலெவ்வை, சாஹிபுலெவ்வை, சின்னலெவ்வை, சுலைமாலெவ்வை, மகுமுதுலெவ்வை, மீராலெவ்வை, நூஹுலெவ்வை, யூசுப்லெவ்வை
  • பாவா – ஆதம்பாவா, முகைதீன்பாவா, யாஸீன்பாவா
  • துரை – செல்லத்துரை
  • பிச்சை – நாகூர் பிச்சை
  • தம்பி – சரிபுத்தம்பி, சலீம்தம்பி, சாயிவுத்தம்பி, சின்னத்தம்பி, பக்கீர்த்தம்பி, முகம்மட்தம்பி, மொகம்மதுத்தம்பி, வெள்ளத்தம்பி
  • ராசா – சின்னராசா, தம்பிராசா
  • போடி – அலியார்போடி, ஆதம்போடி 
  • மரைக்கார்– சின்னமரைக்கார், ராசாமரைக்கார்
  • ஹக் – சியாஹுல் ஹக், நூறுல்ஹக்
  • தீன் – அஸீமுத்தீன், முஜாஹிதீன், ஜலால்தீன், பதுர்தீன், ஸலாஹுத்தீன், நிஜாமுத்தீன், நஸ்றுதீன், நஜ்முத்தீன்
  • அல்லாஹ் – அப்துல்லாஹ், றகுமதுல்லா, உபைத்துல்லாஹ்
  • முகம்மது – அச்சிமுகம்மது, கோஸ்முகம்மது, சீனிமுகம்மது
  • முகைதீன் – சபீர்முகைதீன், பக்கீர்முகைதீன், காதர்முகைதீன், மீராமுகையதீன
  • கான் – அலிகான், ஷேக்கான்
  • அலி – அமீர்அலி, பாக்கிர்அலி
  • பாத்திமா – பாத்தும்மா, பாத்துமுத்து, பாத்திமா பர்னாஸ்
  • உம்முல் – உம்முல்பஸீலா, உம்முல் மாஜிதா, உம்முஸ் ஸாதிக்கா உம்முல்,மாஹிறா 
  • சித்தி – சித்தி ஆயிஷா, சித்தி சனூபா, சித்தி ஜெமீனா, சித்தி றமீஸா, சித்தி நஸீறா, சித்தி நைமா
  • பானு – றெசான் பானு, அனுசாபானு, நுஸ்ரத் பானு
  • பேகம் – ரஜீலா பேகம்
  • பீவி – ஆசியாபீவி, ஆபிதா பீவி, காமிலா பீவி, கதிசம் பீவி, பாத்திமா பீவி, மரியம் பீவி, ஜல்ஸா பீவி, ஜென்னத் பீவி
  • கிளி – அச்சிக்கிளி, மைனாக்களி
  • நிஸா – சம்சுன்னிஸா, றம்சுன்நிஸா, கயறுன்நிஸா
  • கண்டு – மரியங்கண்டு
  • நாச்சி – அலிமாநாச்சி
  • ம்மா – இளையம்மா, குழந்தம்மா, கொச்சிம்மா, சின்னம்மா, சீனிம்மா, செல்லம்மா, தங்கம்மா, நல்லம்மா, பாத்தும்மா, வரிசைம்மா
  • உம்மா – அமீர் உம்மா, அவ்வா உம்மா, ஆசறா உம்மா, ஆசியா உம்மா, ஆமினா உம்மா, உசேன் உம்மா, கதிஸா உம்மா, கொச்சி உம்மா, சக்கீனா உம்மா, சபினா உம்மா, சவரியத்தும்மா, சாலிஹா உம்மா, சுஹிதா உம்மா, சுபைதா உம்மா, செமிலத்தும்மா, செய்னம்பும்மா, சோறா உம்மா, பஸீறா உம்மா, பரீதா உம்மா, பழீலா உம்மா, பொன்னியும்மா, மூமினா உம்மா, நவ்சூர் உம்மா, ரசிதா உம்மா, விசுவா உம்மா, றஹ்மதும்மா, றாஹிலா உம்மா, றுக்கியா உம்மா, ஜாஹிறா உம்மா, ஜெமீலாஉம்மா

ஆட்பெயர் வகைப்பாடு

ஆட்பெயர்களை பல்வேறு வகைகளில் வகைப்படுத்த முடியும் எனினும் அவற்றுள் சிலவற்றை சுருக்கமாக நோக்கலாம். இவை தவிர பெரும்பாலும் முஸ்லிம்களிடத்தில் அரபு மொழிப்பெயர்கள் இடும் வழக்கம் இருந்துள்ளது. இது இவர்களின் தனித்துவ பண்பாட்டுக் கூறாகும். அவற்றில் ஆரம்பகாலப் பெயர்கள் இஸ்லாமிய வரலாற்று மாந்தர்களின் பெயர்களாக காணப்பட்டன. இவை பிரதேச மொழியோடு மருவிய வண்ணம் பயன்பட்டுள்ளன. உதாரணமாக;

அப்துல்றஹீம் (அத்துறஹீம்), அப்துல் றஹ்மான் (அத்துறகுமார்) போன்ற இறைநாமங்ளை ஒட்டிய பெயர்களும், 

ஆதம், முகம்மது (மம்மது), அஹமது (அகமர்), இப்றாஹீம் (இபுறார்), இஸ்மாயில், இஸ்ஹாக், யூனூஸ், யூஸுப், சக்கரியா, ஈஸா, மூசா போன்ற நபிமார்களின் பெயர்களும், 

அவக்கர் (அபூபக்கர்), உமர் (ஒமர்), அலியார் (அலி), உதுமார் (உஸ்மான்) போன்ற கலீபாக்களின் பெயர்களும், 

பாத்திமா(பாத்தும்மா), ஹஸன் (அசனார்), ஹுசைன் (ஒசனார்), ஹலீமா (அலிமா), ஸைனப் (செய்னம்பு), றுகையா (றுக்கியா), சோறா (சுகைஹரா), கதீஜா(கஸ்ஸா), சுலைஹா (செலஹா) போன்ற நபியவர்களின் குடும்பத்தினர் பெயர்களும் பயன்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம். மேலும் பாரசீகம், உருது போன்ற மொழிகளின் செல்வாக்கும் சில பெயர்களில் காணப்படுகின்றது. கலந்தர், பாரிசா, லைலா, பானு, யாஸ்மின், கிஸோர், ஜஹான், போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

முகம்மது என்ற முன்னொட்டு ஆண்களுக்கும் பாத்திமா என்ற முன்னொட்டு பெண்களுக்கும் பரவலாக பயன்பட்டது. இவை தவிர கண்டு, பிள்ளை, வாப்பா, தம்பி, கான், ஷா, பிச்சை போன்றவை ஆண்களுக்கும் உம்மா, பிள்ளை, நாச்சி, பேகம், பீவீ, நிஸா, ராணி போன்றவை பெண்களுக்கும் பெயர்களில் பின்னொட்டாக பரவலாக பயன்பட்டுள்ளது. உதாரணமாக ஆதங்கண்டு, உதுமான்கண்டு, வாப்பாப்புள்ள, செல்லப்பிள்ளை, பக்கீரத் தம்பி, ஆமினா உம்மா, இளையாம்பி, அலிமாநாச்சி, வரிசைநாச்சி, ஹைறுன் நிஸா, ஷேக்கான், அலிஷா, நாகூர் உம்மா போன்றவற்றைக் குறிப்பிடலாம்.  

பட்டப்பெயர்கள் 

சம்மாந்துறை மக்களின் தனித்துவமான சிறப்பம்சங்களில் பட்டப்பெயர்களையும் குறிப்பிட முடியும். மிகப்பெரும் பட்டியலைக்கொண்ட இப் பெயர்கள் ஒவ்வொன்று பற்றியும் பல சுவாரஸ்யமான கதைகளும் இருக்கின்றன.  

கொறுக்காயர், நூலச்சியர், நெடியஇஸ்மார், கலட்டியர், பல்லுக்காசீம், நெடிய கரவாகார், காலியார், வெல்லஸார், நத்தார், களனியர், கண்ணாடி ஆலிம், புள்ளிஹாபிஸ், பாத்தியாகொட்டர், சட்டி இலவை, அவால்மோதீன், சுல்தான் மரைக்கார், சீச்சி ஹாஜியார், நலஞ்சபூனை, சுவீட்மஜீட், சிப்பி மஜீட், குழட்டுப் போடியார், தோலிப் போடியார், வெள்ளை விதானை, கிடுகிடுப்பர், வத்தாளையார், சந்தணத்தார், புழுகன் பரிசாரி, போயிலக்காம்பர், குளலியர், சுருளிமாஸ்டர், ஊசியன் உடையார், மஞ்சல் உடையார், மிசின்காரர், கண்மூடியர், இரும்பர், மம்பட்டியார், பாறாங்கத்தியர், லோடர், லோட்மேன், நயின்டியர், சிறீமா, சோக்ரடீஸ், குழந்தை, அப்புக்காத்தர், புலாப்புரிச்சார், பரிசிக்கட்டியர், கொக்கு கொத்தியார், வண்டர், மாதளையர், பழம்புளியர், திராயர், மஸ்கத் அவக்கர், பச்சநாவியர், சூலாவர், முட்டையர், கரடியர், மோக்கையர், சுங்கார், சண்டியர், இலுவிசி, திங்கள், தினகரன், டிங்கண்ணர், மஞ்சக்கண்ணர், துள்ளுமுட்டியர், மீசைக்கடியர், வெடிக்காரன் போன்றவற்றை குறிப்பிடலாம். 

இப் பட்டப்பெயர்கள் காலகாலத்திற்கு நிலைப்பவையாகவும் குடும்பங்களின் இடுகுறிப்பெயர்களாகவும் காணப்படுகின்றன. இவற்றை குடும்பத்தினர் அசௌகரியமாக கருதுவது குறைவாகவே உள்ளது. பலரும் வெளிப்படையாக நபர்களை விசாரிக்கும் போது எங்கு இருப்பது, யாருடைய பிள்ளை, பட்டப்பெயர் என்ன என்றுதான் விசாரிப்பார்கள். வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டுவதற்கும் பட்டப்பெயரைச் சொல்லிக் கேட்பதுதான் இலகுவாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இக் குலப்பெயர் வழக்கமானது ஆதிப் பண்பாட்டு அம்சமொன்றின் எச்சமாகவே கருதப்படுகின்றது. 

குடிப்பெயர்கள் 

தென்கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவக் கலாசார அம்சங்களில் தாய்வழிக் குடிவழிமுறையும் முக்கியமான ஒன்றாகும். இங்கு வாழும் தமிழ் மக்களோடான ஆரம்பகால தொடர்புகளை தெளிவாக விளக்கும் பண்பாட்டுக் கூறாக இது காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய குடிகளைக் கொண்ட ஊராக சம்மாந்துறை திகழ்கின்றது. இங்கு 31 குடிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு குடிப்பெயர்களும் பல்வேறு வரலாற்று செய்திகளைக் கொண்டிருக்கின்றன. 

உதாரணமாக; ஆதம்பட்டாணிகுடி, உதுமான்பிள்ளகுடி, உலகிப்போடிகுடி, கச்சன்ஓடாவிகுடி, கணக்கன்கத்தறகுடி, கலிங்கஓடாவிகுடி, கையூம்மலையார்குடி, கோசப்பாகுடி, சங்கதிகுடி, சின்னப்படையான்டகுடி, சின்னவெள்ளரசன்குடி, சுல்தான்பிள்ளகுடி, செட்டிப்பிள்ளகுடி, சேனைக்குடி, சேகுமுகம்மதுகுடி, தேன்முதலிகுடி, நெய்னாஓடாவிகுடி, பட்டிசிங்கிபவள ஆராய்ச்சிகுடி, பணிக்கணாகுடி, பெரியபடையான்டகுடி, பெரியவெள்ளரசன்குடி, பொன்னாச்சிகுடி, மடத்தடிகுடி, மாந்தறாகுடி, மாப்பிள்ள மரைக்கான்குடி, மாமனாப்போடிகுடி, மலையாளத்து லெவ்வைகுடி, மூத்தநாச்சியார்குடி, ராசாம்பிள்ளகுடி, வடக்கனாகுடி, வைத்தியநாச்சியார்குடி போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

இவ்வாறு பெயராய்வானது இப்பிரதேசத்தின் பண்பாட்டுத் தொன்மை, கலாசாரத் தனித்துவம், வராலாற்றுச் செய்திகள் போன்றவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றது. இப்பெயர்க்களின் மூலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றுப் பாத்திரம் தொடர்பில் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6032 பார்வைகள்

About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)