Arts
10 நிமிட வாசிப்பு

ஒல்லாந்தர் காலமும் இந்துக் கோயில்களும்

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

போர்த்துக்கேயர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களும் அழிக்கப்பட்டன. தமது மதமான கத்தோலிக்கம் தவிர்ந்த ஏனைய மதங்களைப் போர்த்துக்கேயர் ஒடுக்கினர். பல இடங்களில் இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் உருவாகின. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க மதத்தையும் தடை செய்து, தமது சீர்திருத்தக் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்கு முயன்றனர். இலங்கையிலிருந்த ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி அரசாங்கம் சீர்திருத்தக் கிறித்த மதத்துக்கான தனியுரிமையைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருந்த போதும் அதன் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததாகத் தெரியவில்லை.

போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண நகரத்தில் கத்தோலிக்க சமய நிறுவனங்களுக்குப் பெருமளவு முக்கியத்துவமும் வசதிகளும் இருந்தன, சீர்திருத்தக் கிறித்தவ சமயத்துக்கு இவ்வாறான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ஒல்லாந்த அரசாங்கம் போதிய அளவு அக்கறை காட்டவில்லை என்றே தோன்றுகின்றது.

வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப்பெருமாள் கோயில்

இதனாற்போலும், போர்த்துக்கேயர் காலத்தில் மதம் மாறிய பலர் ஒல்லாந்தர் காலத் தொடக்கத்தில் தமது பழைய மதத்துக்குத் திரும்புவதற்குத் தன்னிடம் அனுமதி கேட்டதாக அப்போது இலங்கையின் ஆளுனராக இருந்த வான் கோயென்ஸ் என்பவரின் குறிப்புக்களிலிருந்து அறியமுடிகின்றது. இது அக்காலத்தில் மதம் மாறிய பலர் விருப்பமில்லாமல் சூழ்நிலைகள் காரணமாகவே மதம் மாறியதைக் காட்டுகின்றது. எனவே, இவ்வாறானவர்கள் ஒல்லாந்தர் காலத்தில் மறைவாகவேனும் இந்து சமயத்தைக் கடைப்பிடித்திருப்பர் என்பதில் ஐயமில்லை. வன்னித் தலைவர்கள் சிலரும், அவர்களது பிள்ளைகளும், தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், வசதிகளைப் பெறுவதற்காகவும் வெளியில் கிறித்தவர்களாக நாடகமாடினாலும், வீடுகளில் இந்துக்களாக இருந்ததாக ஒல்லாந்த அதிகாரிகள் எழுதியுள்ளனர். இதனால் தமது வீடுகளுக்குள் ஒல்லாந்தரை அவர்கள் அனுமதிக்க விரும்புவதில்லை எனவும் குறிப்புக்கள் உள்ளன. இவ்வாறே யாழ்ப்பாணத்திலும் பல அதிகாரிகளும், பொதுமக்களும் இருந்திருக்கக்கூடும்.

இதனால், யாழ்ப்பாணப் பகுதி முழுவதிலும் ஒல்லாந்தர் காலத்தில் மடங்கள் என்ற போர்வையில் இந்துக் கோயில்கள் ஆர்ப்பாட்டமின்றி இயங்கின. தனிப்பட்டவர்களின் வளவுகளுக்குள்ளும் சிறிய கோயில்களை உருவாக்கி மக்கள் வணங்கி வந்தனர்.

ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் பொருளாதார இலக்குகளுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடியதான விடயங்களில் சமயம் சார்ந்த கொள்கைகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் விரும்பியதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் நெசவுத் தொழிலையும், துணிகளுக்குச் சாயமிடும் தொழிலையும் ஊக்குவிப்பதற்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள், விபூதி முதலிய இந்து சமய அடையாளங்களைத் தரித்துக்கொள்வதையும், சமய விழாக்களை வெளிப்படையாகவே நடத்துவதையும் அதிகாரிகள் கண்டும் காணாமல் விட்டதாகத் தெரிகின்றது. இவை தொடர்பான கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தினால் மேற்படி தொழிலாளர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவிடுவர் என அதிகாரிகள் பயந்தனர். இவ்விடயம் தொடர்பாகத் தான் எழுதிய நூலில் குறிப்பிடுள்ள பல்தேயஸ் பாதிரியார் இதற்காக அதிகாரிகள்மீது குற்றம் சுமத்தியுள்ளார். மேற்குறிப்பிட்ட சூழலிலேயே, நெசவாளர் சமூகம் வாழ்ந்த இன்றைய வண்ணார்பண்ணைப் பெருமாள் கோயிலடிப் பகுதியில் அக்கோயில் சிறிய அளவில் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

20 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வண்ணார் வைத்தீசுவர்ன் கோவில்

ஒல்லாந்தர் காலப் பிற்பகுதியில் சமயம் சார்ந்த கெடுபிடிகள் தளர்வடைந்தபோது, இந்துக் கோயில்களைக் கட்டுவதற்கு அனுமதி பெற்றவர்கள் அல்லது அதற்கு உதவியவர்கள் பெரும்பாலும் ஒல்லாந்த அரசில் பதவியில் இருந்தவர்கள் அல்லது அவர்களுடன் வேறு வகையில் நெருக்கமாக இருந்தவர்களாவர். குறிப்பாக யாழ்ப்பாண நகரப் பகுதியில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், நீராவியடிப் பிள்ளையார் கோயில் என்பன இவ்வாறு உருவானவை.

ஒல்லாந்த அரசிடமிருந்து பலவகையான குத்தகைகளைப் பெற்றுப் பெரும் பணம் சம்பாதித்தவர் வண்ணார்பண்ணையில் வாழ்ந்த வைத்திலிங்கம் செட்டியார். ஒல்லாந்த அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்த அவர் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டுவதற்கு அனுமதி பெற்றார். 1787 ஆம் ஆண்டில் அத்திவாரம் இடப்பட்டு, 1790 ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களுள் இதுவே பெரிதாக இருந்திருக்கக்கூடும். அதேவேளை வண்ணார்பண்ணை வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஐயனார் கோயிலும் இதே காலப் பகுதியிலேயே தோற்றம் பெற்றதாகத் தெரிகின்றது. வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டிய வைத்திலிங்கம் செட்டியாரே இக்கோயிலையும் கட்டியுள்ளார். வைத்தீஸ்வரன் கோயிலின் பரிவாரக் கோயில்களுள் ஒன்றான வேம்படிப் பிள்ளையார் கோயிலிலுள்ள பிள்ளையார் வைத்திலிங்கம் செட்டியாரின் தந்தையாரான கோபாலச் செட்டியார் வணங்கியதெனக் கூறப்படுகின்றது. எனவே இதுவும் ஒல்லாந்தர் காலத்துக் கோயிலாக இருக்கலாம்.

வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில் (தற்காலத் தோற்றம்)

அதேவேளை, வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்டுவதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்பிகள் காளியை வைத்து வணங்கிய இடத்திலேயே இன்று கன்னாதிட்டிப் பகுதியில் உள்ள காளிகோயில் உருவானதாக அதன் வரலாறு கூறுகின்றது. எனவே, இதுவும் ஒல்லாந்தர் காலப் பிற்பகுதியில் ஒரு சிறிய கோயிலாகத் தோற்றம் பெற்றது எனலாம்.  

ஒல்லாந்தர் காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகர எல்லைக்குள் கட்டப்பட்ட இன்னொரு முக்கியமான கோயில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாகும். உண்மையில் இது ஒரு புதிய கோயிலாக அல்லாமல் தமிழரசர் காலத்தில் இருந்த நல்லூர்க் கந்தசாமி கோயிலின் மீளுருவாக்கமாகவே கருதப்படுகின்றது. எனினும் இது முன்னர் இருந்த இடத்தில் அல்லாமல் வேறிடத்திலேயே கட்டப்பட்டது.  இதன் வரலாறு குறித்துப் பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும், இன்றைய கந்தசாமி கோயில் ஒல்லாந்தர் கால இறுதிப் பகுதியிலேயே உருவானது என்பதில் ஐயமில்லை.

நல்லூர்க் கந்தசுவாமி கோயில் – 2010

வண்ணார்பண்ணை கிழக்கில் நீராவியடி என்னும் இடத்தில் அமைந்துள்ள ஜெயநீராவி வீரகத்தி விநாயகர் ஆலயம் (நீராவியடிப் பிள்ளையார் கோயில்) ஒல்லாந்த அரசின் கீழ் முக்கியமான பதவி வகித்த கனகசபைப்பிள்ளை என்பவரால் கட்டப்பட்டதாக ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தனது நூலில் எழுதியுள்ளார். எனினும், பிரித்தானியர் காலக் கச்சேரிப் பதிவுகள், இக்கோயில் 1805 ஆம் ஆண்டில் பூலோக முதலியார் என்பவரால் கல்லால் கட்டப்பட்டதாகக் கூறுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் மண்ணாலோ, சுண்ணாம்பாலோ கட்டப்பட்டிருந்த இக்கோயிலைப் பூலோக முதலியார் கல்லால் கட்டியிருக்கக்கூடும்.

இவ்வாறே யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் இன்று காணப்படும் பல இந்துக் கோயில்கள் ஒல்லாந்தர் காலத்திலேயே சிறிய கோயில்களாகத் தோற்றம் பெற்றிருந்து பிற்காலத்தில் பெருப்பித்துக் கட்டப்பட்டிருக்கலாம்.  

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

21567 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)