Arts
12 நிமிட வாசிப்பு

பிள்ளைகளை ஆளுமைமிக்கவர்களாக வளர்ப்பது எப்படி?

October 24, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
-திருக்குறள்-

விளக்கம் : பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

கடல் கடந்து கண்டங்கள் கடந்து ஈழத் தமிழர்களான நாங்கள் இன்று உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றோம். எமது தாய் நாடான ஈழத்தில் குடும்பங்களாகவும் சிறு சமூகங்களாகவும் ஓர் அடையாளத்துடன் வாழ்ந்துவந்த நாம், எமது நாட்டின் இனப்போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் எமது பிறந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. 

எமது மூதாதையினர் பல்வேறு தொழில்களை இயற்கையை நம்பியே செய்து வந்தார்கள். அதற்கு அவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு  முன் எழுந்து வயலுக்கோ கடலுக்கோ சென்று, மத்தியான சுடு வெயிலில் வேலை செய்து மாலையில் இருள் வரும்வரை உழைத்தார்கள். அதேபோல் அவர்கள் பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பாடசாலைகளை அமைத்து, பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். அவர்களது குறிக்கோள் தமது அடுத்த தலைமுறை தங்களைப் போல் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பது. அவர்களது எதிர்பார்ப்பின் படி நம்மில்  பலர் மேற்கு நாடுகளுக்கு வந்து வளமாக வாழ்கின்றோம். அது சந்தோஷப்பட வேண்டிய விடயம் மட்டுமன்றி அதற்காக பெற்றோர்களைப் பாராட்டவும் செய்யவேண்டும்.. 

parenting

ஈழத்திலும் மேலை நாடுகளிலும் எமது பிள்ளைகளின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் தாராளமாகவே மாறிவிட்டது. எங்களது வாழ்க்கையின் அனுபவங்களும் கண்ணோட்டமும்  மிக வித்தியாசமானவை. நாம் இன்று வாழும் தேசத்தில் (அமெரிக்கா) எங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்புகள் ஏராளம். பாடசாலைகளில் கற்பிக்கும் முறை தொடக்கம் தொழில்நுட்பத் தொடர்புகளால் அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய கல்வி மிக அதிகம். அதேநேரம், இச் சூழலால் எமது பிள்ளைகளுக்கு உண்டாகும் மன அழுத்தங்களும் அதிகம். இந்தச் சூழ்நிலையில் குழந்தைகளை சந்தோசமானவர்களாகவும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை மன அழுத்தங்கள் இல்லாமல் சந்திக்கவும் செய்ய, பெற்றோர்கள் கடைப்பிடிக்கக் கூடிய நான் அறிந்த சில குறிப்புகளை இக் கட்டுரையில் பகிர உள்ளேன்.

  • Busy time vs Free time : எமது மேற்குலக வாழ்க்கை வேலைப்பளு மிக்கது. வேறு செயல்களில் ஈடுபட எமக்கு நேரம் குறைவு. இதனாலும் பிறரின் அழுத்தங்களாலும், எமது பிள்ளைகளை பல வகுப்புக்களில் சேர்த்து, அவர்கள் சிந்திப்பதற்கான நேரத்தை பறிக்கிறோம். ஒவ்வொரு விடயத்திற்கும், எமது பிள்ளைகளுக்கு ஒலிம்பிக்கிற்கு போகப் போவது போல் வகுப்பு, பயிற்சி, வீட்டுப் பயிற்சியென்று கொடுத்து, அவர்களது சுய கற்றலை தடைசெய்கிறோம். நாங்களும் எமது முதற் பிள்ளையை வளர்க்கும்போது இந்த வலையில் சிக்கியிருந்தோம். பின், சனி – ஞாயிறு வகுப்புகளை குறைத்து, அவர்களின் சிந்தனைக்கு அதிக நேரம் கொடுத்தோம்.
  • Private vs Public School : இது ஓர் சர்ச்சைக்குரிய விடயம். எனது பார்வையில் அரச பள்ளியில் பிள்ளைகள் படிப்பதன் மூலம் அவர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கின்றது. அரச பள்ளியில் மாணவர்கள் அதிகம். அதனால் அவர்கள் பலதரப்பட்ட மாணவர்களுடன் பழகி விதம் விதமான அனுபவங்களைக் கற்றுக் கொள்வார்கள். பன்மைத்துவம் மிக்க சமூகப் பொருளாதார வாழ்வின் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களோடு படித்து போட்டியிட்டு மேலே வருவதன் மூலம், அவர்கள் எதிர்கால உலகத்தில் பல்வேறுபட்ட நிலைமைகளை எதிர் நோக்க தயாராகக்கூடிய வலுவோடு வளருவர். தனியார் பள்ளியின் செலவு மிகவும் கூடியது. அதனை வங்கியில் முதலீடு செய்தால், குழந்தைகள் வளர்ந்தபின் அவர்கள் வியாபாரம் தொடங்கவோ அல்லது முதல் வீடு வாங்கவோ கொடுக்கலாம். 
  • Learning many things vs doing few things passionately : பிள்ளைகளின் சிறு வயதில் அவர்களுக்கு கலைகளை அறிமுகப்படுத்துவது நல்லது. அதன் மூலம் அவர்களது திறமைகளையும், ஆர்வங்களையும் அவர்கள் கண்டறிய முடியும். வயது கூடக்கூட அவர்கள் செலவழிக்கக் கூடிய நேரம் குறைந்து போகும். அதனால் அவர்கள் ஆர்வம் செலுத்தும் விடயங்களை  அவதானித்து, அவற்றை மட்டும் தெரிவு செய்து, கற்கற் செய்வது அவசியம். அப்படிச் செய்யாது போனால், குழந்தைகள் எப்போதும் களைப்பாக இருப்பதுடன் மகிழ்ச்சியற்ற பிள்ளைகளாக மாறிவிடுவார்கள். சில தேர்ந்தெடுத்த விடயங்களில் ஆர்வத்துடன் நீண்ட காலம் தொடர்ந்து செயல்படுவது (மேலைத்தேய) பல்கலைக்கழகத் தெரிவின்போது பிள்ளைகளுக்கு சாதகமான வாய்ப்பினை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுகின்றன.
  • Natural vs Forced leadership : எமக்கு பிள்ளைகள் செய்யும் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டுமென்று ஆசை. இதனால், பிள்ளைகள்  தங்களின் விருப்பத்திலும் பார்க்க பெற்றோரின் விருப்பத்திற்கு இசையவேண்டி ஆகிறது. இதன் மூலம் பிள்ளைகளுக்கு வரும் மன அழுத்தங்களையும் கவலைக் கோளாறுகளையும் பெற்றோர்கள் அவதானிக்க மறுக்கிறார்கள். சில விடயங்களில் பிள்ளைகள் தலைமைத்துவம் எடுப்பார்கள்; சில விடயங்களில் பங்கேற்பாளராக இருப்பார்கள். இது பாடசாலைக்கு வெளியிலிருக்கும் நிஜ வாழ்க்கைக்கு அவர்களை தயார்ப்படுத்தும்.
  • Parents guiding vs doing the work : நாம் படித்த காலத்தில், எமது பெற்றோருக்கு நாம் படிப்பது என்னவென்று கூட தெரியாது. அவர்கள் எமது படிப்பில் அக்கறைகாட்டுவது குறைவு. அவர்களுக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு கலையை அல்லது ஒரு தொழிலை வேண்டுமானால் சொல்லித் தருவார்கள். இப்போது பெற்றோர்கள் பிள்ளைகளின் வேலைகளை தாமும் சேர்ந்து செய்வது மட்டுமன்றி  சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை அவர்களது வேலைத்திட்டங்களை செய்யவே விடுவதில்லை; முழுமையாக அவற்றை பெற்றோர்களே செய்கின்றனர். பிள்ளைகள் சுயமாக முயற்சியெடுத்து  ஒரு செயலைச் செய்வதன் மூலம், அவற்றிலுள்ள குறை நிறைகளை தாமே உணர்ந்து, பிற்காலத்திற்குத் தேவையான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். 
parenting 2
  • Social Skill Development : எனது சமூகத்தில் இரண்டு விதமான பிள்ளைகளை அவதானித்து இருக்கிறேன். ஒன்று எப்போதும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் சொன்னது போலவே செய்பவர்கள். மற்றவர்கள், பெரியவர்களை மதிக்காமல் தங்கள் பாட்டில் திரிபவர்கள். என்னைப் பொறுத்தவரை இது இரண்டுமே சரியான வழியல்ல. சின்ன வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பகுப்பாய்வுத் திறனுடன் கதைக்கப் (விவாதிக்க) பழக்குவது நல்லது. நான் இப்படித்தான் செய்வேன் என்று அடம் பிடிக்காமல், ஒரு செயலுக்கான விளக்கத்தையும் விளைவுகளையும் எடுத்துரைப்பதன் மூலம் பெரியவர்களின் நல்லெண்ணத்தைப் பெறமுடியும்.
  • Precision Coaching : இங்கு எமது சமூகத்தில் அதிகமான பெற்றோர்கள் படித்தவர்கள். அதனைப் பயன்படுத்தி, பிள்ளைகள் எந்தப் பாடங்களில் எந்த அத்தியாயங்களில் சிரமப்படுகிறார்கள் என்று கவனித்து உதவி செய்வதால், பிள்ளைகள் கல்வியில் நன்றாகச் செயற்பட முடியும். அமெரிக்கப் பள்ளிகளில் கட்டுரை எழுதுவது, புத்தகங்கள் வாசித்து அதைப்பற்றி சுருக்கம் எழுதுவது, வகுப்பில் அவற்றைப் பற்றி வாதிப்பது என்று பல விதமாக கற்பிப்பார்கள். இது எமது முந்தைய படிப்பு முறையை விட மிக வித்தியாசமானது. பிள்ளைகளை தனியார் வகுப்புகளில் சேர்ப்பது மேற்குறித்த கல்வி நடவடிக்கைகளில் மேம்பட உதவும். 
  • Free work vs Paid job : இங்கு உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு சில மணித்தியாலங்கள் தொண்டர் பணி செய்யும்படி கேட்பார்கள். இது ஒரு  நல்ல விடயம். பிள்ளைகளுக்கு தொண்டு செய்யும் மனப்பான்மையை  வளர்ப்பது மட்டுமன்றி மற்றவர்களின் பிரச்சினைகளையும் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆனால் சில பெற்றோர் பிள்ளைகளை அளவுக்கதிகமாக தொண்டர் சேவை செய்ய வைப்பார்கள். இதனால் பிள்ளைகளுக்கு ஏனைய வேலைகள் செய்ய நேரம் இல்லாமல் போகும். பிள்ளைகள் சிறுவயது முதலே உழைக்கப் பழக வேண்டும் என்பது எனது கருத்து. வேலை செய்வதன் மூலம் மேல் அதிகாரிகளுடன் எப்படி பழகுவது, கூட வேலை செய்பவர்களுடன் எப்படி அனுசரித்துப் போவது என்பதில் சிறிய வயதிலேயே அனுபவம் கிடைக்கும். அத்தோடு, பணம் உழைப்பது எவ்வளவு கடினம் என்று தெரியவருவதுடன், வேலைத்தலத்தில் பல்வகையான தொழில்களுடனும் தொழில் செய்யும் ஆட்களுடனும் பழக சந்தர்ப்பம் கிடைக்கும். 
  • Tell them about Your life Challenges : ஈழ நாட்டவர் பல இடையூறுகளுக்கும் மத்தியில் உயிர் பிழைத்து, நாடுகள் கடந்து, புது மொழிகள் கற்று, பல வாழ்க்கைச் சவால்களை மீறி இங்கு வாழ்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஓர் நீண்ட (சோக) கதை பின்னால் இருக்கின்றது. அதை நாங்கள் மூடி மறைத்து, பிள்ளைகளுக்கு நல்ல கதைகளை மட்டும் சொல்லி வளர்க்கக் கூடாது. அவர்களுக்கு எமது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி சொல்ல வேண்டும். கூறும்போது அவர்கள் உதாசீனப்படுத்துவதாக இருந்தாலும், அவர்கள் வளரவளர அதைப்பற்றி புரிந்து கொள்வார்கள். நாங்கள் விடாமல் தொடர்ந்து ஈழத்தமிழரின் கஷ்டங்கள், பண்பாடுகள் பற்றிச் சொன்னதால், எனது மூத்த மகள் இப்போது பல்கலைகழகத்தில் தமிழை, முக்கியமாக ஈழத்தமிழ் எவ்வாறு உலகின் ஏனைய தமிழிலிருந்து வித்தியாசப்படுகிறதென்று, ஆராய்ச்சி செய்யுமளவிற்கு முன்னேறியிருக்கிறார்.
  • Finally accept it is their life : அனைவரது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள், எமது பிள்ளைகள் எங்களிலும் பார்க்க நன்றாகப் படித்து வாழ்க்கையில் எமது அந்தஸ்திலும் மேலே போகவேண்டும் என்பது. நாமெல்லாம் இங்கு ஒன்றுமில்லாது வந்து, இப்போது அமெரிக்காவின் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்திருக்கிறோம். இது ஓர் பெரிய உயர்வு. எமது பிள்ளைகள் எமக்கு மேலே உயர்வது என்பது இலகுவான விடயமல்ல. அவர்கள் காலவோட்டத்தில், இன்னும் ஒன்றோ இரண்டோ சந்ததியில், சராசரி அமெரிக்கர்களாகவே மாறிவிடுவார்கள். அது தான் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைக் கதை. அதனால் பிள்ளைகளை கொடுமைப்படுத்தாமல், அவர்களுக்கு அறிவு சொல்லி, வழி காட்டி, ஊக்கப்படுத்தி, மகிழ்ச்சியாக வளர்ப்பதன் மூலம் எமது சமூகத்தின் நிலையை உயர்த்தலாம். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10738 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)