Arts
25 நிமிட வாசிப்பு

ஆரியர் கோட்பாடும் இலங்கையின் ‘சிங்கள பௌத்த’ அடையாள உருவாக்கமும்

September 13, 2023 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கில மூலம் பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன

பேராசிரியர் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன அவர்கள் ‘The People of the Lion: Sinhala Identity and Ideology In History and Historiography’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதினார். இக் கட்டுரை யொனதன் ஸ்பென்சர் பதிப்பித்து Routledge பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘Sri Lanka History and Roots of Conflict (1990)’ கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் நவீன காலத்தில் இலங்கை வரலாற்றைப் பற்றி எழுதிய எழுத்தாளர்கள் சிங்கள இனக்குழுமத்தின் அடையாளத்தை (Identity) கட்டமைப்பதற்கு ஆரியர் என்ற கருத்தியலை (Ideology) பயன்படுத்தியிருப்பதைப் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. 40 பக்கங்களைக் கொண்ட இக் கட்டுரையின் 10 பக்கங்களில் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்தும் சுருக்கியும் கூறுவதாக இவ்வாக்கம் அமைந்துள்ளது.

Sri Lanka History and the Roots of Conflict

இனம்- மொழி

‘இனம்’ (Race), ‘மொழி’ என்ற இருவேறு எண்ணக்கருக்கள் (Concepts) மானிடவியல் நூலாசிரியர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ் இருவேறு விடயங்களையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்திக் கூறும் இனவாதக் கருத்தியல் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சியுற்றது. ‘ஆரியர்’ என்ற கருத்துப் பரவலாக்கப்படுவதற்கு காரணமாகவிருந்த இந்தியவியலாளர்களில் மக்ஸ்முல்லர் ஒருவர். ஆரியர் என்ற இந்தக் கருத்து ‘ஆரிய இனம்’ என்ற ஒரு இனவாதக் கருத்தியலாக விஸ்வரூபம் எடுத்ததைக்கண்டு மக்ஸ்முல்லர் அதிர்ச்சியுற்றார். 1888 ஆம் ஆண்டில் இவர் எழுதிய நூல் ஒன்றில் ‘ஆரிய இனம், ஆரிய இரத்தம், ஆரியரின் கண்கள், ஆரியரின் முடி என்றெல்லாம் பேசுவதை ஒரு இனவரைவியலாளன் என்ற முறையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்துப்பட எழுதினார். ஒரு மொழியியலாளர் ஒரு சொல்லகராதியை வெளியிடுகிறார் எனக் கொள்வோம், அந்த அகராதிக்கு ‘சப்பட்டை மூக்கினரின் சொல்லகராதி’ ‘தட்டைத் தலையோட்டுச் சொல்லகராதி’ என்றெல்லாம் பெயரிட்டால் எப்படி இருக்கும்? மனிதர்களின் பௌதீக உறுப்புகளின் இயல்புகளோடு அவர்களின் மொழியைத் தொடர்புபடுத்தி ஒரு மொழியியலாளர் பேசுவது ஒரு வேடிக்கையாக மட்டுமல்லாது மோசடியாகவும் அமைந்துவிடும். அது போன்றது தான் இனத்தை (Race) மொழியுடன் தொடர்புபடுத்துவதும் என்ற உண்மையை 1888 இலேயே மக்ஸ்முல்லர் வெளிப்படுத்தினார். இருந்த போதும் ‘ஆரியர்’ என்ற கருத்தியல் இந்தியாவிலும் இலங்கைச் சிங்களவர் மத்தியிலும் ஓர் இனவாதக் கருத்தியலுக்கு அத்திவாரம் இட்டது. பேராசிரியர் ஆர்.எல்.ஏ.எச். குணவர்த்தன அவர்கள் இலங்கை வரலாறு, வரலாறு எழுதியல் (Historiography) என்பவற்றில் ‘ஆரியர்’ என்ற கருத்தியல் புகுந்தமையைப் பகுப்பாய்வு செய்கிறார். இலங்கையில் ஆரியர் என்ற கருத்து சிங்கள பௌத்த இனத்தின் மேன்மையைக் கட்டமைப்பதாக 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியுற்றது.

Maxmullar

இலங்கையின் வரலாற்று எழுத்தியலும் ‘ஆரியர்’ என்ற கருத்தும்

நவீன காலத்தில் சிங்கள பௌத்த தேசியவாதம் தனது கருத்தியலைக் கட்டமைப்பதற்கு இரு வகையான மூலங்களில் இருந்து கருத்துக்களைப் பெற்றது. அவை:

  1. மகாவம்சம் போன்ற பாளி நூல்கள்.
  2. மேற்கு நாட்டில் தோன்றிய இனவாத கோட்பாடுகள் (Racial Theories).

மேற்கு நாட்டில் தோன்றிய இனவாதக் கோட்பாடுகளிற்கு மொழியியல் துறைக் கண்டுபிடிப்பு ஒன்று ஆதாரமாய் அமைந்தது. இம்மொழியியல் கண்டுபிடிப்பை 1788 ஆம் ஆண்டில் வில்லியம் யோன்ஸ் என்பவர் அறிவித்தார். ஐரோப்பிய மொழிகளுக்கும் இந்தியாவின் மொழிகளுக்கும் இடையே அமைப்பியல் உறவுகள் (Structural Affinities) உள்ளன என்பதே வில்லியம் யோன்சின் கண்டுபிடிப்பு. நவீன மொழியியலின் தோற்றத்திற்கும், உலக மொழிகளை மொழிக் குடும்பங்கள் என வகைப்பாடு செய்வதற்கும் வழி செய்த மிக முக்கியமான கண்டுபிடிப்பு இது. இதன் பக்க விளைவாக ஐரோப்பாவில் மனித இனங்கள் பற்றிய இனவாதக் கொள்கை ஒன்று உருவானது. இந்த இனவாதக் கொள்கை இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்த எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையம் கவர்ந்தது. இலங்கையில் சிங்கள தேசியவாத உணர்வு சிங்களக் கருத்தியல் ஒன்றை உருவாக்கியபோது ஐரோப்பாவின் இனவாதக் கோட்பாட்டில் இருந்து சில கருத்துக்களைச் சிங்களக் கருத்தியல் உள்வாங்கிக் கொண்டது. யோன்ஸ் கண்டுபிடிப்பின் பயனாக சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் அமைப்பியல் உறவுகள் உள்ளன என்பது தெளிவாயிற்று. இந்தோ – ஆரிய மொழிக் குடும்பம் என்னும் கருத்து இதன் பயனாக எழுந்தது.

ஆரிய இனம்

மொழிகளுக்கு இடையிலான உறவுகளைக் கண்டுபிடித்ததனால் இன் னொரு கருத்துத் தோன்றியது. உறவுடைய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வெவ்வேறு கண்டங்களில் பிரிந்து போய் வாழ்ந்தாலும், இனம் என்ற வகையில் அவர்கள் ஒரே குடும்பத்தினர் தாம் என்பதை ‘ஆரிய இனம்’ என்ற கருத்துத் தோற்றுவித்தது. அதாவது ஒரு மூல மொழியில் இருந்து கிளைத்தனவான உறவுடைய மொழிகளைப் பேசும் மக்கள் யாவரும்,

  1. பொதுவான மூதாதையர்
  2. ஒரே இரத்தம்

என்ற வகையில் உறவுமுறையுடையவர்கள் என்றும் ‘ஆரிய இனம்’ என்ற வகைக்குள் அடக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சிலர் கூறத் தலைப்பட்டனர். உதாரணமாக வங்காளியின் உடம்பில் ஓடும் இரத்தமும், வங்காளத்தில் போரிடும் ஆங்கிலேயப் படைவீரர்களின் உடம்பில் ஓடும் இரத்தமும் ஒன்றுதான் என்ற பொருள்பட மக்ஸ்முல்லர் கருத்துரைத்தார். ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையிலான உறவைக் கண்டுபிடித்தது புதிய கண்டம் ஒன்றைக் கண்டு பிடித்ததற்கு ஒப்பானது எனப் புகழ்ந்த ஹெகல் (Hegel) என்னும் தத்துவஞானி ஜேர்மனியருக்கும் இந்தியர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி விதந்து குறிப்பிட்டார். வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் ஐரோப்பாவிற்குள்ளும், ஆசியாவிற்குள்ளும் பரவினர் என்றும் நாகரிகத்தின் தொட்டில் என்று கருதப்படும் இடம் ஆசியாவில் ஒரு இடத்தில் இருந்தது என்றும் பல அறிஞர்கள் கருதத் தொடங்கினர். இவ்விதம் ஓரிடத்தில் இருந்து பரவிய மக்கள் கூட்டத்தினர் பொது மூதாதையரில் இருந்து தோன்றியவர்கள் என்ற கருத்தை ‘மறுக்க முடியாத உண்மை’ என்றே ஹெகல் கருதினார்.

ஹெகல் ஒரு தத்துவஞானி – மக்ஸ்முல்லர் புகழ்பெற்ற இந்தியவியலாளர், மக்ஸ்முல்லரின் ஆய்வுப் பணிகளின் முதன்மை நோக்கங்களாக இரண்டு விடயங்கள் இருந்தன. ஒன்று ‘எமது (ஆரிய) இனத்தின் தொட்டில்’ (the cradle of our race) எது என அறிவது. மற்றது ஆரிய மொழிகள் என்ற வகைக்குள் அடக்கக் கூடிய மொழிகளை அடையாளம் காண்பது. ஆரிய இனம், ஆரிய மொழிகள் என்பன பற்றி மக்ஸ்முல்லர் காட்டிய அக்கறையின் வெளிப்பாடாகவே அவரின் முற்கூறிய வங்காளிகள் – ஆங்கிலேயப் படைவீரர் இரத்தம் பற்றிய கூற்று அமைந்தது.

மக்ஸ்முல்லர் பிற்காலத்தில் தம் கருத்துக்களைத் திருத்திக் கொண்டார் என்று கூறப்படுகின்றது. இருந்த போதும் மொழியியலில் இருந்து இனவரைவியலிற்கு இனவாத கொள்கைகள் பரவின. ‘ஆரிய இனம்’ என்பதை மையமாகக் கொண்டு இனவாத நோக்கு முறை உருவாகத் தொடங்கியது.

‘ஆரியர்’ கருத்து இலங்கையின் வரலாற்று எழுதியலில் புகுந்தமை

‘ஆரியர்’ என்ற கருத்து இலங்கையின் வரலாற்று எழுதியலை எவ்விதம் பாதித்தது என்பதை ‘The People of the Lion’ என்னும் கட்டுரையில் ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன ஆராய்ந்திருக்கிறார். 40 பக்கங்களைக் கொண்ட இக்கட்டுரையில் 10 பக்கங்களில் ஆரியர் என்ற கருத்தின் வரலாறு கூறப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டில் எழுதப்பட்ட இக் கட்டுரை ‘Sri Lanka : History and the Roots of Conflict’ (1990) என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. குணவர்த்தனவின் கருத்துகளை கீழே தொகுத்துத் தருகிறோம்.

  1. வில்லியம் நைற்றன் 1845 ஆம் ஆண்டில் “The History of Ceylon’ என்ற நூலை எழுதினார். 1849 ஆம் ஆண்டில் சாள்ஸ் பிரிதாம் என்பவர் ‘An Historical, Political and Statistical Account of Ceylon and Its Dependencies’ என்ற நூலை எழுதினார். இவ்விரு நூல்களிலும் ஆரியர் கோட்பாடு (Aryan Theory) என்பதன் தடயங்கள் எதுவும் இல்லை. இலங்கைவாசிகள் அருகே உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து குடியேறியவர்கள் என்ற கருத்தை வில்லியம் நைற்றன் கூறினார். பிரிதாம் கருத்து சிறிது வேறுபட்டது. அவர் இலங்கையின் மக்கள் இந்தியாவினதும், சீனா அல்லது தாய்லாந்து மக்களதும் கலப்பினால் உருவானவர்கள் என்றார்.
  1. சிங்கள மொழி சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என்ற கருத்தை முதலில் கூறியவர் கிளவ் (B.C. Clough) ஆவார். இவர் சிங்கள – ஆங்கில அகராதி ஒன்றைத் தொகுத்தவர். இந்த அகராதியின் ஒரு பகுதி 1821 இலும் எஞ்சிய பகுதி 1830 இலும் வெளியிடப்பட்டது. கிறிஸ்ரியன் லஸ்ஸன் (Christian Lassen) என்பவர் 1847ம் ஆண்டில் எழுதிய நூல் சிங்களம் – சமஸ்கிருதம் தொடர்பு பற்றிய வேறுபட்ட கருத்தைத் தெரிவித்தது. வட இந்தியாவின் ஆரிய மொழிகளுடன் தொடர்புள்ள மொழியாக சிங்களத்தை அவர் வகைப்படுத்தவில்லை. அது தென்னிந்திய மொழிகளுடன் தொடர்புபட்டது என்றே லஸ்ஸன் குறிப்பிட்டார். லஸ்ஸன் ஆரியர் கோட்பாட்டைத் தழுவிய ஒருவரே. ஆனால் சிங்கள மொழியை அவர் ஆரியத்துள் சேர்க்கவில்லை.
  1. இலங்கையரான ஜேம்ஸ் டி அல்விஸ் ‘சிதத்சங்கராவ’ என்னும் சிங்கள இலக்கண நூலினைப் பதிப்பித்து, அதற்கு ஓர் முன்னுரையை எழுதினார். இப்பதிப்பு 1852 இல் வெளிவந்தது. அம் முன்னுரையில் சிங்களமும் சமஸ்கிருதமும் ஒரு பொது மொழி மூலத்தையுடையவை என்ற கருத்தை முன்வைத்தார். வில்லியம் யோன்ஸ், பிரான்ஸ் பொப் (Franz Bopp) ஆகியோரது ஆய்வுகளில் பரிச்சயமுடையவராக யேம்ஸ் டி அல்விஸ் இருந்தார். தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளோடு சிங்களத்திற்கு உள்ள உறவு பற்றியும் குறிப்பிடும் அல்விஸ், சமஸ்கிருதத்தோடு சிங்களத்திற்கு உள்ள உறவுதான் அதிகமானது என்ற கருத்தைக் கூறுகிறார். 1852 இல் தம் கருத்தினைக் கூறும்போது இவரிடம் தயக்கம் வெளிப்பட்டது. பின்னர் 1866 இல் தமது கருத்தை அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
  1. இவ்விடயம் பற்றிய முக்கியமான குறிப்புக்கள் ஜேம்ஸ் எமர்சன் ரெனன்ற் (J.E.Tennent) என்பவரிடம் இருந்து வெளிப்படுகின்றன. சிங்களம் தென்பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றோடுதான் நெருங்கிய உறவு உடையது என்று ரெனன்ற் தெரிவித்தார். சமயம் தொடர்பான சொற்களை பாளியில் இருந்தும் விஞ்ஞானம், கலைகள் தொடர்பான சொற்களை சமஸ்கிருதத்தில் இருந்தும் சிங்களம் பெற்றது என்றும் ரெனன்ற் கூறினார்.
  1. 1816 இல் மக்ஸ்முல்லர் ‘Lectures on the Science of Language’ (மொழி குறித்த விஞ்ஞானம் பற்றிய விரிவுரைகள்) என்ற நூலை வெளியிட்டார். இதில் அவர் தெரிவித்த கருத்து இலங்கையின் படித்த வகுப்பாரின் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில் பேசப்படும் மொழியும் இலங்கையில் பேசப்படும் மொழியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள்; அவை உறவுடைய மொழிகள் என்றார் மக்ஸ்முல்லர். இவ்விதமாக சிங்களம் இந்தோ ஆரிய மொழிகளுடன் உறவுடையது என்று கூறி அதற்கும் சமஸ் கிருதத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறினார். 1856 இல் கால்டுவல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்’ என்ற நூல் வெளிவந்தது. கால்டுவல் ‘திராவிட மொழிகளின் குடும்பம்’ என்றே கூறினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை முன்னேறிய மொழிகளாகவும், வேறு ஆறு மொழிகளை திருந்தா மொழிகளாகவும் குறிப்பிட்ட கால்டுவல் திராவிடம் என்ற குடும்பத்தை அடையாளம் காட்டியதோடு, தமிழிற்கும் சிங்களத்திற்கும் நேரடித் தொடர்பு கிடையாது என்றார். இவ்விதமாக ‘ஆரியம்’ கருத்து 1852 இற்குப் பிற்பட்ட காலத்தில் பலம் பெற்றது.
  1. 1866 இல் அல்விஸ் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். சிங்களம் வட இந்திய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும், திராவிட மொழிகளான தென்னக மொழிகளில் இருந்து அது வேறுபட்டது என்றும் அக்கட்டுரையில் அவர் எடுத்துக் கூறினார். இலங்கைக்கு ‘ஆரியர் வரவு’ என்பது பற்றியும் விஜயன் பற்றிய புராணக் கதைகளுக்கு புது உருவம் கொடுப்பதற்கும் 1866 இல் அல்விஸ் கூறிய கருத்துக்கள் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும். 1852 இற்கும் 1866 இற்கும் இடையில் அல்விஸ் அவர்களின் கருத்துக்களைப் பாதித்த இரு முக்கியமான நூல்கள் வெளிவந்தன. மேலே குறிப்பிட்ட ‘Lectures on the Science of Language’, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ ஆகியவையே அவ்விரு நூல்களாகும். இவ்விரு நூல்களில் வெளிப்பட்ட கருத்துக்கள் அல்விஸ்சின் சிந்தனையைப் பாதித்தன என்பதில் ஐயமில்லை.

இலங்கையின் வரலாறு, சிங்கள மொழி என்பன பற்றிய எழுத்துக்களில் ‘ஆரியம்’ என்ற கருத்தின் தடயங்களை குணவர்த்தன அட்டவணைப்படுத்தியுள்ளார்.

Chart A (2)

ஜேம்ஸ் டி அல்விஸ் 1866 இல் தமது கட்டுரையை எழுதி வெளியிட்ட காலத்தில் ஆரியர் – திராவிடர் ஆகிய சொற்கள் வரலாற்று ஆய்வாளர்களாலும் மொழியியலாளராலும் உபயோகிக்கப்படும் சொற்களாக புழக்கத்திற்கு வந்துவிட்டன. இக்காலத்தின் பின்னர் இலங்கையின் வரலாற்று எழுதியலில் ஆரியர் குடியேற்றம் என்னும் புனைவு படிப்படியாக உருவாக்கப்பட்டது. இது பற்றி கா. இந்திரபாலா அவர்கள் 2006 ஆம் ஆண்டில் எழுதிய நூலில் கூறியிருப்பதைக் கீழே தருகின்றோம்:

“ஆரியர் என்போர் இலங்கைக்கு வந்து குடியேறினர் என்ற கருத்துக்கு இடமே இல்லை. வெளியில் இருந்து பெருந்தொகையான மக்கள் குடியேறியதற்கோ, முன் வாழ்ந்து வந்த மக்கள் அழிக்கப்பட்டமைக்கோ தொல்லியல் சான்றுகள் இல்லை.” (கா. இந்திரபாலாவின் நூல், பக். 142.)

‘ஆரியர் குடியேற்றம்’ என்ற புனைவை இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் பலர் ஏற்றுக் கொண்டிருப்பதை இந்திரபாலா அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இந்தப் புனைவை உடைப்பதற்கு வழி வகுப்பது ஆர்.எல்.ஏ.எச். குணவர்த்தனவின் ஆய்வுதான் என்பதையும் கா.இந்திரபாலா எடுத்துக் கூறியிருக்கிறார்.

1866 முதல், 1932 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜி.சி. மெண்டிஸ் எழுதிய ‘The Early History of Ceylon’ நூல் வரையான காலப்பகுதியில் ‘ஆரியர் கோட்பாடு’ பெற்ற வளர்ச்சியை நோக்குவோம். மொழியியலாளர்களின் கருத்துக்களை விபரித்த பின்னர் குணவர்த்தன அவர்கள் இனவரைவியலாளர்கள் கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். அவற்றைக் அடுத்துக் காண்போம்.

இனவரைவியலாளர்கள் (Ethnologists)

19 ஆம் நூற்றாண்டில் இனவரைவியல் (Ethnology) என்னும் துறை வளர்ச்சி பெற்றது. பிற்காலத்தில் பௌதீக மானிடவியல் என அழைக்கப்பெற்ற துறை வளர்ச்சி பெறுவதற்கு முந்திய கட்டத்தில் இனவரைவியல் தொடர்பான ஆய்வுகள் முதன்மை பெற்றன. 19 ஆம் நூற்றாண்டின் இனவரைவியல் இனவாத ஆரியர் கோட்பாட்டின் செல்வாக்கையும் காணலாம். இலங்கையில் வாழ்ந்த சிங்களவர், தமிழர், வேடர் ஆகிய இனக் குழுமங்களின் பௌதீக உடலமைப்பியல் பற்றிய தகவல்களின் படி இனவரைவியலாளர்களின் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

எம்.எம். குன்ட் (M.M. Kunte) என்பவர் ‘Lecture on Ceylon’ என்னும் உரையில் (1879) சிங்களவர்களை ஆரியர் என்று கூறினார். நெற்றி, கன்னம், தாடை, உதடுகள் போன்ற உடலுறுப்புக்களின் அமைப்பு, வடிவம் ஆகியவற்றைக் கொண்டு தமிழர்களையும் சிங்களவர்களையும் வெவ்வேறு இனங்களாக (Race) பிரித்துப் பார்க்கும் முறைக்கு இவரது கூற்று சிறந்த எடுத்துக் காட்டாகும். இலங்கையில் ஆரியர்கள், தமிழர்கள் என்று இரு இனங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். அவரது உரை 1880 இல் நூலாகப் பிரசுரிக்கப்பட்டது. P.B. சரசின் மற்றும் C.F. சரசின் என்பவர்கள் இலங்கையில் சிங்களவர், தமிழர், வேடர் ஆகிய மூன்று இனங்கள் இருப்பதாகவும் வேடர்கள் தமிழர்களோடு கொண்டுள்ள உறவு சிங்களவர்களோடு கொண்டுள்ள உறவை விட அதிகம் என்று குறிப்பிட்டார்கள். ‘Outline of Two Years Scientific Research in Ceylon’ (1886) என்பது இவர்களது கட்டுரைத் தலைப்பு. ஆர். விர்ச்சௌ (R Virchow) என்பவர் இலங்கையில் மூன்று இனங்கள் உள்ளன என்ற கருத்தை ஆதரித்தார். “Ethnological Studies on the Sinhalese Race’ என்னும் இவரது கட்டுரை 1886 இல் ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியிடப்பட்டது. இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்கள் வேடர்களுடன் கலப்புற்றதால் சிங்கள் இனம் உருவானது என்றார் விர்ச்சௌ. சிங்களவர்களின் முக அமைப்பு இந்தியாவின் ஆரியர் பிராந்தியத்தில் (Aryan Province) இருந்து இறக்குமதியான ஒன்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் விர்ச்சௌ கூறினார். இலங்கை வேதியல் கழகச் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையில் ஆரியர்களும் ஆதிக்குடிகளும் கலப்புற்றதால் உருவாகியவர்கள் சிங்களவர்கள் என்ற கருத்து வெளியிடப்பட்டது. அத்தோடு வேடர்கள், சிங்களவர்கள், தமிழர்கள் ஆகிய மூன்று குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதுபற்றி குணவர்த்தன அவர்களின் கூற்று பின்வருமாறு:

“Thus, by the end of the nineteenth century linguistic groups were being given new definitions in terms of physical characteristics, which were supposed to be specific to those groups. The Sinhala and Tamil identities thereby acquired a racial dimension” (p. 74).

வெவ்வேறு மொழிகளைப் பேசும் சிங்களவர்களும் தமிழர்களும் பௌதீக உடல் இயல்புகளின்படி வரையறை செய்யப்படும் இன அடையாளங்களைப் பெற்றனர். இவ்விதமாக அவர்கள் வெவ்வேறு இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். மேற்குறித்த ஆங்கில மேற்கோளின் சாராம்சமாக இது அமைகிறது.

பத்திரிகைகள், சஞ்சிகைகள், பாடநூல்கள்

‘ஆரியர் கோட்பாடு’ பத்திரிகைகள், சஞ்சிகைகள், பாடநூல்கள் மூலமாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் பரவத் தொடங்கியது. இது பிரபலமான ஒரு கோட்பாடாக ஏற்புடமை பெறத் தொடங்கியது. இருந்த போதும் ஏ.இ. பிளேஸ் (A.E. Blaze) எழுதிய ‘A History of Ceylon for Schools’ (1900) என்னும் நூலில் ஆரியர் என்ற கருத்து இருக்கவில்லை. இவ்விடயத்தில் பாடநூல்களை விட சஞ்சிகைகளே முந்திக் கொண்டன. ‘பௌத்தர்’ (Buddhist) என்னும் சஞ்சிகை மார்கழி 1897 இல் ‘ஆரிய சிங்களவர்” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. 1899 இல் ‘ஆரிய சிங்களப் பெயர்கள்’ என்னும் தலைப்புடைய சிறு நூல் ஒன்று வெளிவந்தது. ‘ஆரியன்’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை ஏ.ஈ.ஆர். ரணவீர என்பவர் 1910 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஆரியர் கோட்பாட்டை பாடநூல்களில் புகுத்துவதில் தயக்கம் இருந்திருக்கலாம். 1920 அளவில் பாடப் புத்தகங்களிலும் ‘ஆரியர்‘ என்ற கருத்து புகுந்தது. சிங்கள இராச்சியத்தை நிறுவிய மூதாதையர் ஆரிய இனத்தவர்கள் என்றே நம்பப்படுகின்றது (Believed to be of Aryan Race) என்று பிளேஸ் எழுதிய பாடநூல் (திருத்திய 6 ஆம் பதிப்பு 1931) கூறுகிறது. 1926 இல் எச்.டபிள்யு. கொட்றிங்டன் எழுதிய ‘இலங்கையின் சுருக்க வரலாறு’ (A Short History of Ceylon) வெளியிடப்பட்டது. இந்நூல் சிங்களவர்கள் ஆரிய இனத்தின் வழிவந்தோர் என்பதை ஏற்கிறது. இருந்த போதும் தொடக்க கால ஆரிய இரத்தம் பின்னர் கலப்பு மணத்தால் கலப்படைந்து போயிற்று என்றும் இந்நூல் குறிப்பிட்டது.

விஜயனின் தோழர்கள் பாண்டிய இளவரசிகளை மணந்தனர். அவர்களின் பின் வந்தோர் உள்ளூரவர்களை மணந்தனர். விஜயன் கொண்டு வந்த மொழியும் இலங்கையில் புகுந்தது. பிற்காலத்தில் ஆரிய இரத்தம் மேன்மேலும் கலப்புற்றது. இதில் சந்தேகம் இல்லை. சிங்கள மொழி வட இந்தியாவில் இருந்து வந்ததே. சிங்களவர்களின் சமூக அமைப்பு முறை தெற்கிற்கு உரியது. (கொட்றிங்டன் நூல் – பக் 10)

‘ஆரியர் கோட்பாடு’ பற்றிய தமது சந்தேகங்களை சிலர் வெளியிட்டனர். அவர்களுள் பொன்னம்பலம் அருணாசலம் ஒருவர். ஆர்னல்ட்றைற் என்பவர் தொகுத்த நூலில் (Twentieth Century Impressions of Ceylon 1907 – p.333) அருணாசலத்தின் கட்டுரை வெளிவந்தது. ‘சிங்கள மொழி ஆரிய மொழிக் கட்டமைப்புடையது; அதன் சொற்களஞ்சியமும் ஆரிய மொழியில் இருந்து பெறப்பட்டதே என்று ஒரு சாரார் கூறுகின்றனர். சிங்களமொழி திராவிட மொழிக் கட்டமைப்பை உடையது. இருந்த போதும் அதன் சொற்கள் பெரும்பான்மை ஆரியத்தில் இருந்து பெறப்பட்டவை என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர். மொழியியல் ஆராய்ச்சி மூலம் எதிர்காலத்தில் விடை கூறப்படவேண்டிய விடயம் இது’ என்று அருணாசலம் எழுதினார். W.F. குணவர்த்தன அவர்கள் சிங்கள மொழிக்கும் திராவிடத்திற்கும் உள்ள அமைப்பியல் ஒற்றுமையை வலியுறுத்தும் உரை ஒன்றை 1918 ஆம் ஆண்டு செப்டம்பரில் நிகழ்த்தினார்.

கொழும்பு ஆனந்த கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட இந்த உரையில் சிங்கள மொழிச் சொற்கள் பெரும்பான்மை ஆரிய மொழியில் இருந்து பெறப்பட்டவை. ஆனால் அதன் இலக்கண அமைப்பு திராவிடத்தை ஒத்தது என குணவர்த்தன விளக்கினார். ‘இந்தியாவும் ஆரியரும்’ (Aryan Question in Relation to India) பற்றி 1921 இல் இவர் ஒரு கட்டுரையையும் எழுதினார். இக் கட்டுரையில் சிங்களவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மொங்கோலொய்ட், ஆரியர் என்ற இனங்களின் கலப்பும் ஏற்பட்டது என்று குணவர்த்தன கூறினார். இவர் சிங்களவரைத் திராவிட இனத்தில் சேர்த்தார். இருந்த போதும் ‘ஆரிய இனம்’, ‘திராவிட இனம்’ என்ற வகைமைகளை இவர் ஏற்றுக் கொண்டிருந்ததைக் காணலாம். இ.எ. விஜேசிங்க என்பவர் 1922 ஆம் ஆண்டு குணவர்த்தனவின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மறுத்துச் சிங்களவர் ஆரிய இனத்தவரே என எழுதினார்.

G.C. மென்டிஸ்

‘இலங்கையின் முற்கால வரலாறு’ (The Early History of Ceylon) என்னும் நூலை எழுதிய மென்டிஸ் பிறரில் இருந்து வித்தியாசமான கருத்தை 1932ம் ஆண்டிலேயே எடுத்துக் கூறினார். ஆரியர், திராவிடர் என்பன இனப்பிரிவுகள் அல்ல என்றும் ஒரே மூலத்தை கொண்ட மொழிகள் பேசும் பெரும் தொகுதி மக்களைக் குறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்படும் சொற்களே என்றும் மென்டிஸ் கூறினார். இவர் கூறிய விளக்கத்தை ஒத்த கருத்துக்களை 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களிலும் ரொமிலா தாப்பர், ஹர்பான் மூக்கியா, பிபன் சந்திரா ஆகியோர் கூறியிருப்பதைக் காணலாம். ஜேர்மனியில் நாசிசம் எழுச்சி பெற்ற காலத்தில் இலங்கையில் இருந்து அங்கு சென்று மேற்படிப்பைத் தொடர்ந்தவர் G.C. மென்டிஸ், அவர் இனவாதக் கொள்கைக்கு மாறான கருத்தை கூறியிருப்பது கவனத்துதிற்குரியது. இருந்த போதும் G.C. மென்டிஸ் தமது நூலில் இக்கருத்தைத் தெளிவுபடக் கூறினார் என்று கொள்ள முடியாது. அவரது நூலில் ‘சிங்கள இனம்’ (Race), ‘தமிழ் இரத்தம்’ ஆகிய குழப்பம் தரும் சொற்தொடர்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.

GC Mendis

அடையாள உருவாக்கத்தில் பௌத்த சமயம்

20 ஆம் நூற்றாண்டில் ‘சிங்கள பௌத்தர்’ என்ற தொடரும் உபயோகத்திற்கு வரத் தொடங்கியது. அதற்கு முந்திய நூற்றாண்டுகளில் ‘பௌத்தர்கள்’ என்ற பொது அடையாளம் உருவாகியது. இப் பொது அடையாளத்தினுள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிறமொழி பேசுவோர்களைச் சேர்ந்தவர்களுமான பௌத்த சமயிகளை இணைத்துப் பார்க்கும் சிந்தனை இலங்கையில் தோன்றியது. இந்நிலையில் ‘சிங்கள பௌத்தர்’ என்ற அடையாளம் இருவகைப்பட்ட வேறுபாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் தொடராக அமைந்தது.

  1. சிங்கள மொழி பேசுவோரான பிறமதத்தினரை இவ்வரையறை விலக்கியது.
  2. பிறமொழி பேசுவோரான பௌத்தர்களையும் இவ்வடையாளம் விலக்கியது.

1906 ஆம் ஆண்டில் அநகாரிக தர்மபால ‘சிங்கள பௌத்தய‘ என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். பிரித்தானியர் ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ மதத்திற்கு அரசாங்கச் சலுகை இருந்தது. குறிப்பாக அங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் சலுகை பெற்றோராக இருந்தனர். தர்மபால சிங்கள பௌத்தர்களின் நியாயமான உரிமைகளுக்காக உழைக்கும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்கள் சிங்கள மொழி பேசுவோர் என்ற அடிப்படையிலான உணர்வை வளர்ப்பதற்கான புற நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தன. பிரதேசம், சாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்த பொது உணர்வு சாத்தியமாயிற்று. இந்த உணர்வில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சம் ஒன்று உள்ளடங்கி இருந்தது. இருந்த போதும் இவ்வுணர்வு முரண்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. தர்மபால சிங்கள ஆரியர்களின் பழம்பெருமைகளை எடுத்துக் கூறினார். அவர்கள் ‘ஒரு போதும் பிறரால் வெற்றி கொள்ளப்படவில்லை’ என்று கூறினார். பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அவர் கேட்காமல் பிரித்தானியாவின் பாதுகாப்பின் கீழ் சுய ஆட்சி (Self Government) வேண்டும் என்றார்.

‘ஆரியன்’ பத்திரிகையின் ஆசிரியர் ரணவீர வங்காளத்தின் பிரித்தானிய எதிர்ப்பாளர்களில் இருந்து இலங்கையின் சிங்கள ஆரியர்களை வேறுபடுத்திக் காட்டுவதில் கவனம் செலுத்தினார்.

“எம்மை ஆரிய இனத்தவர்களே இன்று ஆட்சி செய்கிறார்கள் என்பது திருப்தி தரும் விடயம்தான்” என்று ரணவீர குறிப்பிட்டார். இவரது இக்கூற்று 1910 ஆம் ஆண்டு (தொகுதி 1 இதழ் 2) ‘ஆரியன்’ பத்திரிகையில் வெளிவந்தது. ரணவீர போன்ற கருத்தியலாளரின் ஆரியர், சிங்களவர் என்ற உணர்வால் இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு வெளிப்படாமல் போனது. இருந்த போதும் இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு பலம் வாய்ந்த முறையில் வெளிப்படாததற்கு ஆரிய சிங்களக் கருத்தியலை மட்டும் ஒரே ஒரு காரணமாக காட்டுவதும் தவறானது. இலங்கையில் எழுச்சி பெற்ற பூஷ்வா வர்க்கம் எல்லா மக்களையும் ஐக்கியப்படுத்தும் கருத்தியல் ஒன்றை முன் வைக்கவில்லை. ஆரிய சிங்கள இனத்தின் பெருமையை பண்டைய வரலாற்றில் இருந்து அது தேடியது. மேற்குலகின் சிந்தனையின் மனிதாய வாதம் (Humanism) என்ற வளமான பக்கம் மீது கருத்தைச் செலுத்தாமல் அங்கு தோன்றிய இனவாதக் கோட்பாடுகளில் இருந்து கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டது. பூஷ்வா வர்க்கத்தை இக் கருத்தியல் பிளவுபடுத்தியது. அத்தோடு தொழிலாளி வர்க்கத்தையும் பிளவுபடுத்தியது.

தொகுப்புரை

பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் கீழைத்தேய மொழிகள் பற்றிய கல்வியும் ஆராய்ச்சியும் ‘ஆரியர்’ என்ற கருத்தியலின் உருவாக்கத்திற்கு உதவியதை ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் மேற்கு நாடுகளிலும் சமஸ்கிருதம், பாளி, பிராகிருதம் ஆகிய ‘இறந்த மொழிகள்’ பற்றிய கல்வியில் அக்கறை காட்டப்பட்டது, இவ் இறந்த மொழிகள் பற்றிய கல்வி ‘தொலைவில் உள்ள பண்டைக்காலம்’ பற்றிய ஆர்வத்தையும் கிளர்ந்தெழச் செய்தது. இறந்த மொழி பற்றிய கல்வியும் தொலைவிலுள்ள பண்டைக் காலம் பற்றிய வரலாற்றுக் கல்வியும் இன்றைய உணர்வு நிலையையும், சிந்தனையையும் கட்டமைக்க பயன்படுத்தப்பட்டன. குணவர்த்தனவின் ஆய்வு இதனை எடுத்துக் காட்டுகிறது. கல்வியும், ஆராய்ச்சியும் சமூக இயக்கத்துடன் எப்படிச் சம்பந்தமுறுகின்றன, அவற்றின் சமூகத் தாக்கம் எத்தகையது என்பதையும் அவரது ஆய்வு எடுத்துரைக்கிறது.

ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (பேராதனை) 1955-59 வரையான காலத்தில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாகக் கற்று, முதல் வகுப்புச் சித்தி பெற்றவரான ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன, அப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும் உபவேந்தராகவும் பணியாற்றினார். இலங்கை வரலாறு குறித்த பல ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிய மார்க்சிய வரலாற்று அறிஞரான இவர், இலங்கை மடாலய நிலப்பிரபுத்துவம் (Monastic Landlordism) என்னும் விடயம் பற்றி ஆராய்ந்து ‘Robe and Plough’ என்னும் வரலாற்று ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9373 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)