Arts
7 நிமிட வாசிப்பு

மக்களுக்காக குரல் கொடுத்த மணிலாலும், நாடு கடத்திய காலனித்துவ அரசும்

November 22, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாக்டர்.-டி.-எம்.-மணிலால்

இந்திய வம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாகவும், வர்த்தகரீதியாகவும் ஸ்தாபனப்படுவதற்கு முன்னரே அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பிலும், சர்வதேச ரீதியாகவும் பலமாக குரல் எழுப்பப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இலங்கையில் மாத்திரம் அன்றி பல்வேறு உலக நாடுகளிலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன. அவற்றுள் அடிமைத்தனத்துக்கு எதிரான சங்கம் (anti slavery society), பிரித்தானியாவில் இயங்கிய வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான சங்கம், சென்னையில் இயங்கிய இந்தியர் காலனித்துவ நாடுகளுக்கான சங்கம், தனிப்பட்ட இந்திய அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக சீர்திருத்தவியலாளர்கள் ஆகியோர் வெளிநாடுகளில் சுரண்டப்படும் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக உரத்துக் குரல் கொடுத்தனர். இத்தகையவர்களில் இலங்கையிலிருந்து குரல் கொடுத்த இந்தியரான டாக்டர். டி. எம். மணிலால் (1881-1956) மிக முக்கியமானவராவார். இவ்விதம் கடுமையாக செயற்பட்டமைக்காக 1922 ஆம் ஆண்டு இவர் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், சிங்களவர்கள் ஆகியோரை தன் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு செயற்பட்டார். இந்தியாவில் பரோடா என்ற இடத்தில் பிறந்த இவர் பம்பாயில் (இப்போதைய மும்பை) சட்டக்கல்வி பயின்று சட்டத்தரணி ஆனார். லண்டனில் மிடில் டெம்பிள் என்ற நகரத்தில் சட்டத்தரணியாக கடமையாற்ற 1907ஆம் ஆண்டு அழைக்கப்பட்டார்.

அவர் இக்காலத்தில் மகாத்மா காந்தியின் நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டார். இதன் காரணமாக இவர் மகாத்மா காந்தியால் மொரிசியஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் நீதிமன்ற வழக்குகளில் அவர்களுக்கு உதவ அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டார். 1907ஆம் ஆண்டு முதல் 1920ஆம் ஆண்டு வரை அவர் அங்கே இருந்து செயற்பட்டு, அந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவர் நீதிமன்றத்துக்கு டர்பான் அணிந்து சென்றதால் நீதிபதிகளுடன் முரண்பட்டார். அங்கு அவர் இனவாதத்துக்கு எதிராகவும் செயற்பட்டார். அங்கே இருந்த நாளில் லேபர்டொன்நைஸ் என்ற தோட்டத்தின் சில தொழிலாளர்கள் ஒரு தோட்டத்துரையை கொலை செய்த ஒரு புகழ்பெற்ற வழக்கிலும் வாதாடி வெற்றி பெற்றார்.

தேயிலைத் தோட்டத்தொழிலாளிகள்

அவர் அங்கிருந்த காலத்தில் பல்வேறு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். கொத்தடிமை முறைக்கு எதிராக துணிந்து செயற்பட்டார். இந்துஸ்தானி என்ற பத்திரிகையை வெளியிட்டு அந்தப் பத்திரிகை வாயிலாக இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் இனவெறி தொடர்பாகவும் விரிவாக குரல் எழுப்பினார். இந்து இளைஞர் சங்கம் ஒன்றை ஏற்படுத்தி அதன் வாயிலாகவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவர் அங்கு இருந்து கொண்டே இந்திய தேசிய காங்கிரஸின் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் தென்னாபிரிக்காவிலும், பிஜித் தீவுகளிலும் இதே விதமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

டாக்டர் மணிலால் தனது மனைவியுடன் ஒக்டோபர் 1921ஆம் ஆண்டு இலங்கை வந்தார். அப்போது இலங்கையில் தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடும்போக்காளர்களுடன் இணைந்து கொண்டார். அவர்களில் நடேசய்யர், லோரி முத்துக்கிருஷ்ணா, சி .எச். பெர்னாண்டோ ஆகியோர் முக்கியமானவர்கள். இக்காலத்தில் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருவதாக இருந்தது. வருடம் 1922, வேல்ஸ் இளவரசனின் வருகையில் மணிலால் தலையிடக்கூடும் என்று பொலிஸார் சந்தேகப்பட்டனர். இதனால் போர்க் கால கட்டளைச் சட்டத்தின்படி மணிலாலை நாடு கடத்த ஆளுநர் கட்டளை பிறப்பித்தார்.

பெண்கள் கொழுந்து நிறை பார்க்கும் இடம்

இதனைத் தொடர்ந்து இந்த ஆபத்தான கட்டளையை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி கொழும்பு நகரசபை முன்றலில் மாபெரும் கூட்டம் ஒன்று 1922 ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கோ. நடேசய்யர், லோரி முத்துகிருஷ்ணா, எம். யு .மூரே, டி. பி. ஜயதிலக்க, டாக்டர் சி. எப். ஹேவா விதாரண, டி. எஸ். சேனாநாயக்க, சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, பி. டி. சில்வா குணரட்ன, திருமதி. லீலாமணி முத்து கிருஷ்ணா, திருமதி டாக்டர் நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர் ஆகியோர் செயற்பாட்டாளர்களாக பங்குபற்றினர்.

இக்கூட்டத்தில் தொழிற்சங்கத் தலைவர் ஏ. ஈ. குணசிங்க மற்றும் சி. எச். இஸட். பெர்னாண்டோ ஆகியோர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் காரசாரமாக உரையாற்றினார்கள். அங்கே இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. முதல் பிரேரணையில் டாக்டர் மணிலால் அவர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிராக இலங்கை வாழ் இந்தியர்கள் மற்றும் தொழிலாளர் சமூகம் தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டது. அத்துடன் உலகம் முழுவதிலுமான பிரிட்டிஷ் பிரஜைகளின் உரிமைகளுக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டது.

சமாதானமான ஒரு காலம் நிலவுகின்ற நேரத்தில் நெருக்கடி நிலைமை மற்றும் யுத்த நிலைமை காணப்படுவதுபோல் யூகித்துக்கொண்டு இத்தகைய ஒரு பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை ஒரு காட்டுமிராண்டித் தனமான செயல் என்றும் இது ஏனைய பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளுக்கு மத்தியில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் உண்டு பண்ணுவதாக அமையும் என்றும் அப் பிரகடனத்தில் மேலும் குறிப்பிடப்பட்டது. இறுதியாக இந்த கூட்டத்தில் இந்த நாட்டின் தமிழ் – சிங்கள மக்கள் ஒற்றுமையாக இணைந்து இந்த நாட்டு ஆளுநரிடம் டாக்டர் மணிலால் மீதான நாட்டைவிட்டு வெளியேற்றும் உத்தரவை மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான பத்திரிகை செய்தி ஒன்று 1922 ஜனவரி 9ஆம் திகதி சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகையில் விரிவாக வெளிவந்திருந்தது.

நடேசய்யர்

இதற்கு மேலதிகமாக கொழும்பு மாநகரசபையில் மேற்படி ஆளுநரின் பிரகடனமானது கொழும்பு மாநகரம் நெருக்கடி நிலைமையில் காணப்படுகின்றது என்றும் இங்கே அவசரகால நிலைமை நிலவுகிறது என்றும் போலியான பிரமையை ஏற்படுத்தும் என்றும் சி. எச். இசட். பர்ணாந்து அவர்களால் கண்டனப் பிரேரணை ஒன்றும் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்தப் பிரேரணைக்கு சார்பாக மாநகரசபை அங்கத்தவர்களான ஏ. இ. டி. சில்வா மற்றும் டாக்டர் ஈ. வி. ரட்ணம் ஆகியோர் மட்டுமே வாக்களித்தனர். இப் பிரேரணைக்கு எதிராக அனைத்து ஐரோப்பிய அங்கத்தவர்களும் மற்றும் அப்போது கொழும்பு மாநகரசபையின் அங்கத்தவர்களாக இருந்த சி. பி. டயஸ், ஆத்தர் அல்விஸ். டாக்டர் டபிள்யூ. பி. ரோட்ரிகோ மற்றும் அப்துல் காதர் ஆகியோர்  வாக்களித்தனர். சில உள்நாட்டு பத்திரிகைகளும் மேற்படி  டாக்டர் மணிலாலை நாட்டைவிட்டு வெளியேற்றும் பிரகடனத்துக்கு எதிராக செய்திகளை பிரசுரித்திருந்தன. சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிக்கை இலங்கையில் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து டாக்டர் மணிலால் உலகத்துக்கு அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தினாலேயே அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது என செய்தி வெளியிட்டிருந்தது. (சிலோன் டெய்லி நியூஸ் 9 ஜனவரி 1922)  எனினும் இந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாது டாக்டர் மணிலால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். இருந்தாலும் இலங்கையில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய கோ. நடேசய்யர் தொடர்ந்தும் மணிலாலுடனான தனது உறவைப் பேணிவந்தார்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6513 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)