Arts
7 நிமிட வாசிப்பு

வாணிப புத்திசாலித்தனமும் அதன் அடித்தளமும் (Business Acumen and its foundation)

January 30, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்”
– திருக்குறள் (461)

மு.வரததாசனார் விளக்கம்:

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

உலகில் மிகப்பிரபலமான  மைக்ரோசொஃப்ட் (Microsoft) நிறுவனத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். அதன் நிறுவுநர் பில் கேட்ஸ் (Bill Gates). உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய முதன்மைப் பணக்காரர்களில் பில்கேட்ஸும் ஒருவர். பில்கேட்ஸ் உருவாக்கிய மென்பொருட்களைப் பயன்படுத்தாத எவருமே இந்த உலகத்தில் இல்லையென்று கூறுமளவுக்கு ஒரு பெரும் வணிக சாம்ராஜ்ஜியத்தை அவர் கட்டமைத்தார். ஆனால் அவர் முதல்முறையாக சந்தைக்கு கொண்டுவந்த மென்பொருள் அவரால் உருவாக்கப்படவில்லையென்பது பலருக்குத்தெரியாத ஒரு விடயம்.

மைக்ரோசொஃப்ட்‘-நிறுவனம்

அந்தக் காலத்தில் ‘ஐபிம்’ (IBM) என்ற நிறுவனம் கணினி ஒன்று தயாரித்துக் கொண்டிருந்தது.  ஆனால் அதைச் சீராகச் செயற்படுத்த ஒரு அடிப்படை மென்பொருள் (Operating System Software) அந்த நிறுவனத்துக்குத் தேவைப்பட்டது. அதை பில் கேட்ஸ் எப்படியோ தெரிந்துகொண்டார். எந்தவகையான மென்பொருளை ‘ஐபிஎம்’ நிறுவனம் தேடிக் கொண்டிருந்ததோ அதே பயன்பாட்டைக் கொண்ட மென்பொருளை பில்கேட்ஸின் நட்புவட்டத்தில் இருந்த ஒருவர் உருவாக்கியிருந்தார். அதை உருவாக்கியவருக்கு ‘ஐபிஎம்’ நிறுவனம் அப்படியான மென்பொருளைத் தேடிக்கொண்டிருப்பது தெரியாது. அதேபோல ‘ஐபிஎம்’ நிறுவனத்துக்கும் குறித்தநபர் தமக்குத் தேவையான மென்பொருளை உருவாக்கியிருப்பது தெரிந்திருக்கவில்லை. ஆனால் பில்கேட்ஸ் இரு தரப்பையும், அவர்களின் தேவையையும், உற்பத்தியையும் சரியாக இனங்கண்டார். அதன் பின்னர் அவர் செய்த துணிச்சலான முன்னெடுப்பே, மைக்ரோசொஃப்ட் என்ற பெருவிருட்சத்துக்கான விதையாக மாறியது.

தனது தந்தையின் மொத்த சேமிப்புத் தொகையான 55 ஆயிரம் டொலரை கடனாக வாங்கிய பில்கேட்ஸ், அதை அப்படியே நண்பரிடம் கொடுத்து அவர் கண்டுபிடித்த மென்பொருளுக்கான காப்புரிமையைத் தனதாக்கிக் கொண்டார். நண்பரும் பெருந்தொகைப் பணம் கிடைப்பதால் தன் மென்பொருளை பில்கேட்ஸுக்கு அப்படியே கொடுத்தார். அதன் பின்னர் தான் முதலிட்ட தொகையை விடவும் பலமடங்கு தொகைக்கு அதை ‘ஐபிஎம்’ நிறுவனத்துக்கு வழங்கி, மைக்ரோசொஃப்ட் நிறுவனத்துக்கு அடித்தளம் போட்டார் பில்கேட்ஸ். வெறும் 55 ஆயிரம் டொலரை அவர் துணிச்சலோடும், தொலைநோக்கான சிந்தனையோடும் சரியான பொருளின் மீது முதலிட்டதால் பல ஆண்டுகள் உலகின் முதல்நிலைப் பணக்காரராக பில்கேட்ஸால் இடம்பிடிக்க முடிந்தது.

எங்களில் பலருக்கு பல யோசனைகள் இருக்கும். அத்தோடு அந்த யோசனையை உற்பத்திப் பொருளாக மாற்றும் ஆற்றலும் இருக்கும். ஆனால் அதை வணிக நுணுக்கத்தைப் பாவித்து பொருத்தமான வாடிக்கையாளர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் தேவைக்கேற்ப பொருட்களை உருவாக்கி சந்தைக்கு கொண்டுவருவதென்பதுதான் வெற்றிபெறுவதற்கு மிகவும் முக்கியம்.

பில்-கேட்ஸ்-Bill-Gates

அதற்கான சில படிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

தேவையைக்கண்டுபிடித்தல்:

ஒருவர் தன் அறிவு, அனுபவம் என்பவற்றின் மூலம் பலவித உற்பத்திகளைக்  கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதை வியாபாரப் பண்டமாக மாற்றி, பணமீட்டுவதற்கு வாடிக்கையாளர்கள் தேவை. அவ்வாறு அடையாளம் காணும் வாடிக்கையாளர் பணம் கொடுத்து வாங்கக்கூடிய வசதிகொண்டோராக இருக்க வேண்டும். நிறுவனங்களைத் தொடங்கும்போதே வாடிக்கையாளர்களையும் அடையாளம் செய்வதன் மூலம் பிழைகளைக்குறைத்து குறைந்த காலத்தில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யமுடியும். இதைத்தான் பில் கேட்ஸ் ’ஐபிம்’ உடன் சேர்ந்து செய்தார்.

குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு (Minimum Viable Product):

தொடக்க நிறுவனங்களை ஆரம்பிக்கும் போது குறைவான தொழிலாளர்களும், குறைவான பணமும், வரையறுக்கப்பட்ட நேரமுமே இருக்கும். அவற்றை வைத்து அதிகமான அம்சங்களுடன், தரமான உற்பத்திப் பொருட்களைச் செய்வதென்பது கடினம். அதற்குத்தான் எந்த அம்சங்கள் அவசியமானவையென்று அறிந்து அதை முன்னிலைப்படுத்தி, சாத்தியமான பொருட்களைச் செய்வது முக்கியம். இதன் மூலம் குறைந்த காலத்தில் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவரலாம். அத்தோடு வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வைத்து உற்பத்திப் பொருளின் மதிப்பையும் கூட்டலாம்.

பெரிய வாடிக்கையாளரை அணுகுதல்:

பலர் வியாபாரம் தொடங்கும்போது தாங்கள் நேரடியாக இறுதி வாடிக்கையாளர்களுக்கே விற்கலாமென்று கருதுவார்கள். அது தொடக்கத்தில் செய்யமுடியுமென்றாலும் அதை விரிவுபடுத்துவது என்பது இலகுவில்லை. அத்தோடு அவ்வாறு விரிவுபடுத்த நிறையப்பணமும் தேவைப்படும். அதற்கு மாறாக சந்தையில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுடன் சேர்ந்து அவர்களின் விற்பனை மார்க்கங்களைப்  பயன்படுத்தி, சந்தைக்குப் போவது சிறந்தது. உதாரணமாக பில் கேட்ஸ்,  ’ஐபிஎம்’ நிறுவனத்தினூடான சந்தை மார்க்கத்தை தனது முதலாவது மென்பொருளை வணிகமயப்படுத்தியதைச் சொல்லலாம்.

தொழில்நுட்ப ஒத்துழைப்பு:

எந்த ஒரு தொழில் நிறுவனமும் சிக்கலான உற்பத்திப்பொருட்களை தனியாகச் செய்யமுடியாது. அதற்குத்தான் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து பொருட்களைச் செய்வார்கள். இப்படி பரபஸ்பரம் ஒத்துழைப்பதன்மூலம் ஒவ்வொருவரும் தங்களது சொந்தத் திறன்களில் கவனம் செலுத்தி வெற்றிகரமாக பொருட்களை செய்துமுடிக்கலாம். அத்தோடு சந்தைக்கும் ஒன்றாகச்சேர்ந்து சக நிறுவனங்களுடன் செல்லலாம்.

விற்கும் விலை மதிப்பு:

இந்த நாட்களில் எல்லோரும் பொருட்களை இலவசமாகப் பெறுவதிலும் இலவசமாகக் கொடுப்பதிலும் ஈர்க்கப்படுகின்றனர். ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து வணிகமாக நடத்துவதற்கு பணம் தேவை. ஆரம்பத்தில் பணத்தை வைப்பீட்டார்களிடமும் சொந்த சேமிப்புகளையும் பயன்படுத்தி செய்யலாம். நீண்டகால நடைமுறைக்கு வியாபாரத்தில் பொருட்களை விற்றே பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கேற்ப சந்தையையும் வாடிக்கையாளர்களையும் ஆராய்ந்து விற்கக்கூடிய விலை அத்தோடு பொருட்களை ஆக்கும் செலவுகளை அறிந்து வியாபாரத்தில் இறங்க வேண்டும்.

பரஸ்பர வெற்றிக்கான கூட்டு முயற்சி:

நான் எனது இரண்டு நிறுவனங்களையும் உருவாக்கும்போது பல பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில், பொருட்களைச் செய்வதுடன் சந்தைக்கு கொண்டு சென்றோம். இவற்றில் நான் நேரடியாக முன்னணியில் நின்று பங்குகொண்டேன். இந்தக் கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது என் தலையில் விழும். பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் இரண்டு குழுக்களுக்கும் வெற்றி (Win-Win Strategy) பெறக்கூடியபடி பிரச்சினைகளை தீர்ப்பதே என்னுடைய வழிமுறையாக இதன்போது இருந்தது.

சரியான நேரத்தில் வழி மாறுதல்:

நான் உருவாக்கிய இரண்டு ஆரம்ப நிறுவனங்களும் வெற்றிகரமாக சிலிக்கன் பள்ளத்தாக்கில் வந்தமைக்கு காரணம், நாங்கள் தொடக்கத்திலிருந்தே ஒரே வழியைப் பயன்படுத்தாமையே. இரண்டாவது நிறுவனத்தை உருவாக்கிச் செயற்படுத்தும் போது, 2008 இல் ஐக்கிய அமெரிக்காவில் நிதி நெருக்கடி வந்தது. எங்களுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு செய்த பெரிய நிறுவனம் பணமில்லாமல் மூடப்படவேண்டிய சூழல் உருவானது. நாங்கள் இருந்த பணத்தை வைத்து அதுவரை செய்த தொழில்நுட்பங்களை திசை திருப்பி புதிய ஒரு பொருளை குறைந்த நேரத்தில் செய்து சந்தைக்கு இறக்கினோம். அதனால் அந்த நிறுவனம் பிழைத்ததுடன் வெற்றிகரமாக புதிய வாடிக்கையாளர்களையும் எம்மால் கைப்பற்ற முடிந்தது.

எனது அனுபவத்தின்படி வணிக நோக்கமும், வர்த்தகத்தின் அடித்தளமுமின்றி புதுத்தொழில் செய்யும் பாதையில் போவது திசையின்றிப் பயணம் தொடங்குவது போன்றதே. எப்படி நூலின்றி வானில் பட்டம் ஏற்ற முடியாதோ அதேபோன்ற வணிகநோக்கம், வர்த்தகம் தொடர்பான அடிப்படைப் புரிதல் இல்லாமல் புதிய தொழில் தொடங்கினாலும் அது வெற்றியளிக்காது. சர்வதேச ரீதியாக பொருட்களை விற்கக்கூடிய நிறுவனங்களை தொடங்குவதற்கு வர்த்தக கூட்டு முயற்சி மிக முக்கியம். வர்த்தக கூட்டுக்களை ஆரம்பத்திலேயே யோசித்து, அதன்மூலம் அளவான தேவையான பொருட்களைச் செய்வதன் மூலன் பில் கேட்ஸ் உருவாக்கியமை போன்று  ஒரு சிறிய மென்பொருளிலிருந்து பல பில்லியன் டொலர் கொழிக்கும் வணிக நிறுவனங்கள் எவரும் தோற்றுவிக்கலாம். அதன் மூலம் திசையெங்கும் பறக்கலாம். அதற்கு யாழ்ப்பாணத்தில் சிறு கிராமத்தில் பிறந்த நான்  உங்களுக்கு கண்கண்ட சாட்சி.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10764 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (16)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)