Arts
9 நிமிட வாசிப்பு

தாயகம் திரும்பியோரின் அவலங்கள்

August 9, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1964 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை அடுத்து இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வரலாறு இரண்டு பாதைகளாகப் பிரிகின்றது. ஒன்று இலங்கைப் பிரஜைகளாக அந்தஸ்து பெற்று இங்கேயே தங்கி விட்டவர்கள்; நாடற்றவர்கள் என்ற பெயர் பெற்ற மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. மற்றையது இந்தியப் பிரஜாவுரிமை பெற்று  ‘தாயகம் திரும்பியோர்’ (Repatriate) என்ற திருநாமத்தை பெற்றுக்கொண்ட மற்றுமொரு மக்கள் கூட்டத்தினரின் வரலாறு. எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டு நாடற்றவர் ஆக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் என்ன விதங்களில் எல்லாம் துன்பங்களை அனுபவித்தார்களோ அதைவிட சற்றுக் கடினமான வாழ்க்கையையே தாயகம் திரும்பியவர்கள் என்று அழைக்கப்பட்ட அந்த மக்கள் கூட்டத்தினர் அனுபவித்தனர். அப்படி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர்கள் அங்கே சென்று தமது இனசனத்தினருடன் இணைந்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று அவ்வளவு சுலபமாக கூறிவிடமுடியாது. அவர்கள் முன்பு தம் மூதாதையர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டின் அதே பிரதேசங்களுக்கு அனுப்பப்படவில்லை. அவர்கள் வட இந்தியாவுக்கும் இந்தியாவின் தேயிலை விளைந்த கண் காணாத தூர பிரதேசத்திற்குமே அனுப்பப்பட்டார்கள். அங்கே அவர்கள் அனுபவித்த துன்பங்கள் சொல்லும் தரமன்று.

தாயகம் திரும்பியோரதும் அவர்கள் பயணித்த ஒப்பாரிக் கோச்சியில் சென்றவர்களதும் துன்பங்கள் தொடர்பிலும் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் சிவலிங்கம் அவர்கள் தனது  ‘ஒப்பாரிக் கோச்சி’ என்ற சிறுகதையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார் : 

talawakole village

“தலைமன்னார் கோச்சி பதுளையில் காலை 6:00 மணிக்கு புறப்படும். இந்தக் கோச்சிக்கு ‘ஒப்பாரிக் கோச்சி’ என்று பட்டப்பெயர் சூட்டி இருந்தார்கள். தலைமன்னார் கோச்சி தலவாக்கலை ஸ்டேஷனுக்கு வந்ததும் எல்லோரும் ‘குய்யோ முறையோ’ என்று ஓலமிட்டு கதறினார்கள். மரண வீட்டைப்போல் ஒப்பாரி வைத்து அழுதார்கள். கோச்சு வண்டியில் ஏறி அவர்கள் கரங்களை நீட்டி கீழே நிற்பவர்களை பிடித்துக் கொண்டு அலறும் அந்தத் துயரக் காட்சி உயிரையும் ஆத்மாவையும்கூட பிடுங்கி எறிவதாக இருந்தது. ஒப்பாரிச் சத்தத்தோடு கோச்சி புறப்பட்டது. கோச்சி ஓடத் தொடங்கியதும் பல இளைஞர்கள் தங்கள் உறவுகளைப் பிரிய முடியாமல் கைகளை அசைத்துக் கொண்டு சிறிது தூரம் கோச்சியின் அருகிலேயே ஓடினார்கள். சட்டத்தின் முன்னால் மனிதத் தவிப்புகள், எப்படி எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்படுகின்றன என்பதை அந்த காட்சி கண்முன்னே காட்டியது. அந்த ரயில் வண்டியை ‘இந்தியாக் கோச்சி’ , ‘ஒப்பாரிக் கோச்சி’ என்று பெயர் வைத்துக் கொண்டார்களே தவிர அதனை ‘சாஸ்திரிக் கோச்சி’ , ‘சிறிமாக் கோச்சி’ என்று சொல்லுமளவுக்கு கடைசி வரை அவர்களுக்கு அரசியல் தெரியாமலேயே போய்விட்டது. “

“அவர்களது மூதாதையர் இதே திசையில், இதே கடல் பாதையில், தோணிகளிலும் வள்ளங்களிலும் வந்த வரலாறு, அந்த வழிப் பயணத்தின் போது பலரை கடல் விழுங்கிய கதைகள்; தப்பிக் கரையேறிய வம்சத்தினரின் இன்றைய எச்சங்கள் ஆகிய இவர்கள்,  இன்று  ‘அரச மரியாதையுடன்’ கப்பலேறி மீண்டும் அக்கரைக்கே திரும்பிப் போகும் அவலமான கசந்த வரலாறு இன்று காவியமாகிக் கொண்டிருக்கிறது .”

“ராமானுஜம் கப்பல் ஊளையிட்டுக் கொண்டு அசைந்து செல்கிறது”

இவ்வாறு கப்பலேறி அக்கரைக்குச் சென்றவர்கள் “இங்கு எதற்காக எம்மை அனுப்பினார்கள்?” என்று தத்தளித்து தவிக்கும் அளவுக்கு அவர்களின் நிலைமை அங்கே மோசமாக இருந்தது. அவர்கள் இலங்கையில் இருந்து தமது உற்றார் உறவினருக்கு தப்பித்தவறியாவது நீங்கள் இங்கே வந்துவிட வேண்டாம் என்று கடிதங்கள் எழுதினார்கள்.

“கவர்மெண்ட் கொடுக்கிற ரேஷன் சாமான்களை வாங்கித் தான் வயிறு கழுவறோம். அது தர்மமோ, பிச்சையோ தெரியல. வியாபாரக் கடன், விவசாயக் கடன் எல்லாம் வாங்கினாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. பெருமாளு, கோவிந்தசாமி, தங்கராசு மூணு பேரும் வடநாட்டுப் பக்கம் போய், காடுவெட்டி கொஞ்சம் காலம் இருந்து,  சுகமில்லாமபோய்  செத்துப் போனாங்கன்னு பாப்பாத்தி காகிதம் போட்டு இருந்துச்சு. மத்தவங்க எல்லாம் என்ன கெதின்னு தெரியாது.”

இந்திய அரசாங்கம், தாயகம் திரும்பியோருக்கான மறுவாழ்வுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதன் வாயிலாக பல்வேறு நலன்புரிச் செயற்திட்டங்களை செய்து கொடுத்த போதும் அவையெல்லாம் அந்தக் கீழ்மட்ட மக்களுக்கு போய்ச் சேர்ந்ததா என்பது ஒரு பாரிய கேள்வியாகும். காரணம், இவற்றை எல்லாம் பெற்றுத் தருவதாக்கூறி பெருந்திரளான ‘தரகர்’ என்ற நரிக் கூட்டங்கள் அவர்களைத் தொடர்ந்தும் சுரண்டித் தின்றுகொண்டே இருந்தன. அந்தக் குள்ளநரிக் கூட்டங்கள் தமது அன்றாட சோற்றை இவர்களின் வயிற்றில் அடித்தே பெற்றுக்கொண்டன. ஆதலால் இந்த மக்களுக்கு கிடைக்கவிருந்த உதவிகள் எல்லாமே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமலே போய்விட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இவ்விதம் தாயகம் திரும்பிச் சென்றவர்கள் நீலகிரி, திருச்சி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, பெரியார் மாவட்டம், தென் ஆற்காடு, வட ஆற்காடு, தர்மபுரி, மெட்ராஸ், செங்கல்பட்டு ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டனர். 1984 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் படி மேற்படி பிரதேசங்களில் இவர்களது சனத்தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரமாக இருந்தது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஒரு மரத்தையோ, செடியையோ அது இருந்த இடத்தில் இருந்து பிடுங்கி வேறு இடத்துக்கு கொண்டு சென்று நட்டால் அதன் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பது நாம் அறிந்ததே. என்னதான் அதற்கு நீரூற்றி உரம் போட்டு வளர்த்தாலும் அது அவ்விடத்தில் வளர்ச்சி பெற நீண்ட காலம் எடுப்பதுடன் பெரும் பிரயத்தனம் செய்யவும் வேண்டி இருக்கும் என்பது கண்கூடு.

அப்படியான ஒரு நிலைக்கே இந்தத் தாயகம் திரும்பியவர்கள் என்ற வகையினர் தள்ளப்பட்டனர். உதாரணத்துக்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். இவர்களுக்கு வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கான வாழ்வாதாரமாக வர்த்தகக் கடன் ஒன்று வழங்கப்பட்டது. ஒரு தோட்டத் தொழிலாளியாக அன்றாடம் கொழுந்து பறித்து, மாதம் முடிந்ததும் எத்தனை நாள் வேலை செய்து இருக்கிறான் என்று கணக்குப் பார்க்கப்பட்டு கூலி பெற்றவர்களுக்கு ‘உனக்கு வர்த்தக கடன் ஒன்று தருகிறேன். நீ என்ன வர்த்தகம் செய்ய போகிறாய் என்ற ஒரு திட்டத்தை தயாரித்து கொண்டுவா. உனக்கான கடன் வழங்கப்படும்.” என்று கூறினால் அவர்கள் என்ன செய்வார்கள்? இங்குதான் தரகர்களின் பணி ஆரம்பமாகிறது. அவர்கள், குறித்த கடன் நிலையத்தில் உள்ள அலுவலர்களை கைகளில் போட்டுக்கொண்டு, அவர்களுக்கு கமிஷன் தருவதாகக் கூறி, கடன் விண்ணப்பப் படிவங்களை தாமே பூர்த்தி செய்து, அவற்றில் குறித்த நபர்களின் கையொப்பங்களைப் பெற்று, கடன் பணத்தை கூட தாமே பெற்றார்கள்.

கிடைத்த பணத்தில் சொற்பத் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தார்கள். அங்கே எந்த விதமான வர்த்தக நடவடிக்கையும் இடம்பெறுவதில்லை. கையில் கிடைத்த பணத்தை பெரும்பாலும் அன்றாடச் செலவுக்கே அவர்கள் செலவிட்டுவிடுவார்கள். அதன் பின்னர் அவர்கள், தரகர் கொள்ளையடித்த பணத்தையும் சேர்த்து மீளச் செலுத்த வேண்டும். இந்தக் கடன் தொகை  ஒரு வங்கி மூலமே கொடுக்கப்பட்டிருந்ததால், குறித்த வங்கி பணத்தை மீளச் செலுத்தும்படி அவர்களை நெருக்குதலுக்கு உள்ளாக்கும். அவர்கள் மீண்டும் ஒருமுறை தமது மூதாதையர்களைப் போலவே கொத்தடிமைகள் ஆகிவிடுவார்கள். இப்படி அவர்களின் கதை, விட்ட கதை தொட்ட கதை என பரதேசிகளின் கதையாகிப் போய்விட்டது.

ramanujam ship (1)

அதன்பிறகு இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் ஆரம்பத்துடன், 1984 ஆம் ஆண்டளவில் இலங்கையிலிருந்து மண்டபம் முகாம் வரை சென்ற தாயகம் திரும்புவோரை சுமந்து சென்ற எம்.வி. இராமானுஜன் கப்பலும் பண்டாரவளையில் இருந்து மன்னார் நோக்கி வந்த ஒப்பாரிக் கோச்சியின் பயணங்களும் நின்று போய்விட்டன. ஆய்வாளர் பி. சகாதேவன் அவர்களின் கணிப்பின்படி 1987 ஆம் ஆண்டளவில் நாடற்றவர்கள் என்ற பட்டியலில் இருந்த இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த அல்லது இலங்கைப் பிரஜாவுரிமை நிராகரிக்கப்பட்ட  3,37,410  பேர் இந்திய மண்ணைச் சென்றடைந்துவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பீட்டில் அவர்களின் இயற்கை அதிகரிப்பு உள்ளடக்கப்படவில்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6812 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)