Arts
21 நிமிட வாசிப்பு

இலங்கையின் வடகடலில் இந்திய அத்துமீறல் : கடல் வள அழிவும் சமூகப் பொருளாதார பாதிப்புகளும் – பகுதி 3

September 19, 2023 | Ezhuna

 ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

இந்தியக் கடல்கொள்ளையும், அதை மூடிமறைக்கச் சொல்லப்படும் காரணங்களும்

‘இந்திய மீன்பிடிப் படகுகள், நீரோட்டத்துடன் அவர்களின் வலைகள் அடித்து செல்லப்படுவதால்தான் எல்லை தாண்டுகின்றனர்; இலங்கையின் கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்கல்ல.’ என இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்திய நாசகார மீன்பிடிக்கு ஆதரவாகச் செயற்படும் சில புலம்பெயர் ‘இடதுசாரித்துவப் புரட்சி’ பேசும் சக்திகளும் இந்தியப் படகுகளின் அத்துமீறலை நியாயப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிரசுரமாகும் ‘புதிய ஜனநாயகம்’ பங்குனி 2011 இதழில், எல்லை தாண்டிய கடற்கொள்ளை இவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது. 

“விசைப்படகுகளில் சென்று வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல்கல் தூரம் இழுத்துச் சென்றுவிடுவதாகவும், இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்றுதான் வெளியே எடுக்க முடியும் என்றும், பருவநிலைக்கு ஏற்ப மாறும் இத்தகைய கடல் நீரோட்டங்கள், பாக்குநீரிணையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பிரச்சினை தான் என்றும் கூறுகின்றனர் தமிழக மீனவர்கள்.” 

எல்லை தாண்டிய இந்திய நாசகார மீன்பிடியை ஆதரிப்போர் அனைவரும், தொழில்நுட்பச்  சொற்பதங்கள் மற்றும் கடல்சார் கலைச்சொற்களை திரித்துச் சொல்கின்றனர். அல்லது அவற்றுக்குத் தவறான விளக்கம் கொடுப்பதன் மூலம் இலகுவாகத் தெரிந்து கொள்ளக்கூடிய தரவுகளை நேர்மையாக எழுதாமல், “மீனவர்கள் சொல்கின்றார்கள்” என்ற சொல்லாடல்களை உபயோகிப்பதன் மூலம் உண்மைக்கு மாறானவற்றை எழுதி தமது அரசியல் அங்கிடுதத்தத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ரோலர்கள் எனப்படும் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தியே, இலங்கைக் கரையோரத்தின், பிரத்தியேக பொருளாதார எல்லைக்குள் இந்திய எல்லை தாண்டிய நாசகார மீன்பிடி நடைபெறுகிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான இழுவைப் படகுகள் பாக்கு நீரிணையில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இவற்றில் ஈராயிரத்துக்கும் அதிகமானவை மன்னார் கரையோரத்திலிருந்து பருத்தித்துறை முனை வரையான பிரதேசத்தில் மீன்பிடிக்கின்றன. இவைகள் அனைத்தினதும் வலைகள் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டா இலங்கையில் கரைப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கும் உள்ளான பகுதிக்கு வருகின்றன?

அடுத்ததாக, இழுவைப்படகின் கடையாலில் (Stern of the Trawling Vessel) பின் பகுதியில் பிணைக்கப்பட்ட மடியையே (Trawling Net) இயந்திரவலுவின் உதவியுடன் படகு இழுத்துச் செல்கிறது. மடியின் அல்லது வலையின் அசைவுகள் முழுவதும் படகின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே மீன்களைக் குறிவைத்து மடியின் உதவியுடன் பிடிக்க முடியும். ஒரு இழுவைப்படகின் (அல்லது புதியஜனநாயகம் கட்டுரை பாவிக்கும் சொல்லான விசைப்படகு) வலுவும், இழுதிறனும் நீரோட்டத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாததாக இருந்தால் அதனை நீரோட்டமும், கடல் அலையும், அதிக விசையுடன் வீசும் காற்றும் உள்ள எந்தக் கடலிலும் பாவிக்க முடியாது. குறிப்பாக பாக்கு நீரிணையில் பாவிக்கவே முடியாது.

இந்நிலையில் “வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல்கல் தூரம் இழுத்துச் சென்று விடுவதாகவும், இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்றுதான் வெளியே எடுக்க முடியும்” எனத் தவறான தகவல்களை தமது அரசியலுக்குத் தக்கதாக சொல்வதுடன், “பாக்கு நீரிணையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள பிரச்சினைதான் இதுவென்றும் கூறுகின்றனர் தமிழக மீனவர்கள்” என மீனவர்களைச் சாட்சிக்கு இழுப்பது அடிப்படை அரசியல் நேர்மையற்ற விடயமாகும். தொழில் நேர்மையும், சுய மரியாதையும், பெருமையும் கொண்ட எந்தக் கடற்றொழிலாளியும் மேற்படி கருத்தை கூறியிருக்க முடியாது என்பதே எனது வாதமாகும்.

இதேவேளை, நாம் இலங்கையில் செய்வது போன்ற  வலைப்படுப்பு தொழில் இந்தியர்களாலும் செய்யப்படுகிறது. நைலோன் வலைபடுப்புத் தொழில் இந்தியர்களால் நாட்டுப் படகுகளிலும் கட்டுமரங்களிலும் கரையோரத்திலிருந்து ஐந்திலிருந்து – பத்து கிலோமீற்றருக்கு உட்பட்ட பகுதியிலேயே செய்யப்படுகின்றது. இவர்கள் எல்லை தாண்டுவதுமில்லை, இவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையால் பாதிக்கப்பட்டதாக எந்தவித ஆதாரமுமில்லை. இதற்கு காரணம் என்ன? நாட்டுப்படகு மற்றும் கட்டுமரத்தில் தொழில் செய்யும் மீனவர்கள் உபயோகிக்கும் வலையின் அடிப்பகுதியில் கற்கள் கட்டப்பட்டிருக்கும். அதனால் வலையைக் கடலிலிருந்து படகில் ஏற்றும்போது நீரோட்டம் மற்றும் காற்றின் வலுவுக்கு எதிராக அவை ஈடுகொடுக்கும். ஆகவே, படகு அடையும் தூரம் கட்டுப்படுத்தப்படும். அத்துடன், இந்தியக் கரைக்கு அருகில் படுக்கப்படும் ஒரு கிலோ மீற்றர் வரை நீளமான இவ்வலைகள், நீரோட்டத்தின் வலுவால் இலங்கையின் வடகரை வரையும் வந்தடைவது என்பது சாத்தியமில்லாத விடயம்.

trawling Before after

இந்தியர்கள் நடத்தும் கடற்கொள்ளையை நியாயப்படுத்துபவர்கள், எவ்வாறு தொழில்நுட்ப சொற்பதங்கள் மற்றும் கடல்சார் கலைச்சொற்களைத் திரிகின்றார்கள் என்பதற்கு உதாரணமாக, ‘இழுவைப்படகு’ (Trawling Vessel) என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இந்தியர்கள் நமது கடல்வளங்களை இழுவைப்படகுகளை உபயோகித்தே அழிக்கின்றனர். ஆனால், இழுவைப்படகு என்ற சொல்லுக்குப் பதிலாக ‘விசைப்படகு’ என்ற சொல் திட்டமிட்ட முறையில், எந்தவித விளக்கமும் இன்றி, இந்திய பெரும்மூலதன மீன்பிடிக்கு ஆதரவானவர்களால் பாவிக்கப்படுகிறது. இங்கு இவர்கள் விசைப்படகு என்று கூறுவது இயந்திரம் இணைக்கப்பட்ட படகுகள் அல்லது கடற்கலங்களையே (Motorized Sea Vessels). இயந்திரங்களை (Inboard or Outboard Motors) கட்டுமரங்களிலும், வள்ளங்களிலும், சிறுவகைக் கண்ணாடிநார்ப் படகுகளிலும், நாட்டுப்படகுகளிலும் கூட இணைக்கலாம். ஆகவே, விசைப்படகு என்பது பொதுவாக இயந்திரம் இணைக்கப்பட்ட எல்லாவகைப் படகுகளுக்கும், கப்பல்கள் தவிர்த்த அனைத்துக் கடற்கலங்களுக்கும் பொருந்தும். இதனாலேயே, மீனவ சமுதாயம் கடற்கலன்களை வகை வகையாகப் பிரித்துத் தனித்தனியான பெயரை உபயோகித்து வருகின்றது. வள்ளம், தோணி, கட்டுமரம், இழுவைப்படகு, 17-25-30-40 அடி உள்இணைப்பு இயந்திரப் படகுகள், கண்ணாடி இழைப் படகுகள், வெளியிணைப்பு இயந்திரப் படகுகள் என பலப் பல வகைகளில் ‘விசைப்படகுகள்’ அழைக்கப்படுகின்றன.      

ஆகவே இன்று மீனவர் பிரச்சினை பற்றி விவாதிக்கும் போது எந்தவகையான ‘விசைப்படகு’ என விபரிப்பதுடன் அதில் எந்த வகையான வலைகள், உபகரணங்கள் மீன்பிடிக்கப் பாவிக்கப்படுகிறன என்பதை பகிரங்கமாக முன்வைத்து விவாதிப்பது தான் நேர்மையானதாகும். அதை விடுத்து ‘பெரிய விசைப்படகு’, ‘சிறிய விசைப்படகு’ என்ற சொற்பதங்களைப் பாவிப்பது விவாதத்தில் முக்கியமான விடயங்களை மறைப்பதற்கேயாகும்.

இந்திய மீனவரும் தமிழ்சிங்கள தொழிலாளர் உறவும் 

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல் ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர் ஜே.வி.பி இல் இணைந்திருந்தனர். இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய மீன்பிடி அபிவிருத்தியொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் 77 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு, உலக நாணய நிதியத்தின் உதவியுடனும் மேற்கு நாடுகளின் உதவியுடனும் இப்பகுதியைச் சேர்ந்த 80% மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்களில், உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகள், கேளிக்கை அரங்குகளை அமைத்தது.

இன்றும் கூட 70 % வீதத்திற்கும் அதிகமான உல்லாச விடுதிகள் இப்பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார மாற்றங்களையும் அங்கு ஏற்படுத்தியது. யுத்தத்தால் உல்லாசப்பயண வியாபாரம் வீழ்ந்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். வளங்கள் நிறைந்த கடலிருந்தும் அவர்களால் தொழில்செய்ய முடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில் செய்யாததனால் தொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உட்கட்டுமானம் அழிக்கப்பட்டிருந்ததுமாகும். 

வறுமையைப் போக்க பல குடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும் இணைத்துக் கொண்டனர். பாணந்துறை, பேருவளை, ஹிக்கடுவ, காலி, மிரிஸ்ஸ, தங்காலை போன்ற இலங்கையின் தெற்கு கரையோரப்  பிரதேசங்கள் உல்லாசப்பயண அபிவிருத்தியால் பாதிக்கப்பட்டமையை இலங்கை மீன்பிடித் துறையின் முந்தைய பெருமைமிகு செயற்பாடுகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறு தென்னிலங்கை மீனவர் சமுதாயத்தில் பொருளாதார வறுமை நிலவிய காலமான 1977 இற்கும் 1983 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சில ஆயிரம் சிங்கள கடல்தொழிலாளர்கள், வடக்கில் மன்னார், பொலிகண்டி, பருத்தித்துறை, மயிலிட்டி, மண்டைதீவு, குருநகர், ஊர்காவற்துறை, தொண்டைமானாறு போன்ற தமிழ் பிரதேசத்தில் தமிழர்களுடன் இணைந்து ஒன்றாக தொழில் செய்தார்கள் என்பதும், பலர் இப்பகுதிகளில் திருமண உறவை ஏற்படுத்திக்கொண்டார்கள் என்பதும் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் நினைவிற்கொள்வது நன்று. தமிழ், சிங்கள மீனவர்களுக்கு இடையிலான உறவானது பல நூறாண்டு வரலாற்றை கொண்டது. சிங்கள மீனவர்களுக்கு படகு கட்டும் உதவியை பல நூறாண்டுகளாக தமிழர்களே செய்தார்கள்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் பருத்தியடைப்பு, நயினாதீவு, தோப்புகாடு, அராலி, வட்டுகோட்டை போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்கள், பல பரம்பரையாக கப்பல் கட்டி வணிகம் செய்த வரலாறைக் கொண்டவர்கள். ஆங்கிலேய நீராவிக் கப்பல்கள் இவர்களின் பாய்கப்பல் வணிகத்தை இலாபமற்றதாக ஆக்கியதால், சிறு வள்ளங்கள் செய்தும், மீன்பிடியில் ஈடுபட்டும் தமது சீவியத்தை நடாத்தினர். இந்தக் காலகட்டத்தில் இச் சமூகத்தை சேர்ந்தவர்கள் திருகோணமலை, புத்தளம், போன்ற தமிழ் பிரதேசங்களிலும் கொழும்பு, ஜாஎல, சீதுவ போன்ற சிங்களப் பிரதேசங்களிலும் குடியேறி மீன்பிடி மரக்கலங்களை கட்டும் தொழில் செய்தனர். இதே சமூகத்தினர்தான் பிற்காலத்தில் ‘சீ-நோர்’ நிறுவனத்தின் ஊடாக கண்ணாடி இழைப் படகு செய்யும் முறையை சிங்களப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தினர்.

இதே போன்று வடமாராட்சி, மண்டைதீவு, குருநகர் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ மீன்பிடிச் சமூகம் நீர்கொழும்பு மீன்பிடி சமூகத்துடன் 83 ஆம் ஆண்டுவரை நெருங்கிய நல்லுறவைக் கொண்டிருந்தது. திருமணங்கள் கூட இந்த சமூகங்கள் இடையில் நடந்துள்ளன. இலங்கையின் சிங்கள மீனவச்சமூகம், ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசின் சுற்றுலா அபிவிருத்தியால் பாதிக்கப்பட்டவேளை, மேற்கூறிய தமிழ் மீனவ சமூகத்தவர்கள் சிங்கள மீனவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கினர். இந்திய இராணுவ நடவடிக்கையால், பின்வந்த காலத்தில் மேற்கண்ட சமூகத்தவர் பலர், நீர்கொழும்பு பகுதியில் தற்காலிகமாக குடியேறினர். சிலர் அங்கு மீன்பிடியையும் தொழிலாகச் செய்தனர். இதற்கு அடிப்படைக் காரணம், வரலாற்று ரீதியாக இந்த இருவேறு இனம் சார்ந்த மீன்பிடி சமூகங்களுக்கிடையே நிலவிவந்த நெருங்கிய உறவேயாகும். 

இணையத்தளம் ஒன்றில், இந்தியர் ஒருவர் தனது கட்டுரையில் “கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருநாள் தமிழ்நாடு மீன்பிடிச் சமூகமும், இலங்கை தமிழ் மீன்பிடிச் சமூகமும் தமது தொப்புள்கொடி உறவை வளர்க்கும் நிகழ்வு” என்று தொனிப்பட எழுதியிருந்தார். ஆனால் உண்மை அதுவல்ல. பொதுவாக கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருநாள், குடும்பங்கள் பங்குகொண்டு கலந்துறவாடும் விழாவல்ல. அது பெரும்பாலும் இலங்கை-இந்திய ஆண்கள் பங்குகொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும். பண்டமாற்றுச் செய்யும் பொருட்டு மக்களை ஈர்க்கும் இடமாகவும் இது இருந்து வந்துள்ளது. (கிராம்பு, ஏலம், கறுவாப்பட்டை, தேங்காய் எண்ணையும், கோம்பா சோப், சந்தனசோப், ரேக்ஸ்சோனா சோப் போன்ற சவற்கார வகைகளை இலங்கையர்கள் கச்சத்தீவுக்கு கொண்டுபோய், பண்டமாற்றாக பிளாஸ்டிக் பொருட்கள், காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள், கைத்தறிப் புடவைகள், வேட்டி, கிப்ஸ் சாரம் போன்றவற்றையும் பெற்றுக்கொண்டனர்.)

இதனோடு ஒப்பிடும்போது, தமிழ் மற்றும் சிங்கள கிறீஸ்தவ மீன்பிடிச் சமூகங்கள், மீன்பிடி குறைந்த சோழகக்காற்று வீசும் காலமான ஆவணியில், குடும்பம் குடும்பமாக வந்து சந்திக்கும் மன்னார் (மாந்தை) மடுமாதா ஆலயத் திருவிழா, பல பரம்பரைகளாக நடைபெறும் பண்பாட்டு தொடர்ச்சியுடைய விழாவாக அமைகிறது. இது யுத்தம் தொடங்கிய பின்னும் நடைபெற்றது. அதே போன்று தமிழ் மீன்பிடிகார கிறீஸ்தவர்கள், நீர்கொழும்பு தேவாலயத் திருவிழா, புத்தளம் ‘தனைவில்லு சந்தானாள்’ ஆலய திருவிழா ஆகியவற்றில் பங்குகொண்டதுடன், அப்பிரதேசங்களில் வாழ்ந்த நீண்டகால  சிங்கள நண்பர்களின் குடும்பங்களை தரிசித்தும் வந்தனர்.

மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் சைவர்களில் பலர், தென்மன்னாரில் அமையப்பெற்ற அரிப்பு முதல் முந்தல் வரையான பகுதிகளில் பறிக்கூடு மூலமும், களக்கடல் வலைகள் மூலமும் தொழிலில் ஈடுபடுவது வழக்கம். இதே பகுதியில் சிங்களத் தொழிலாளர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதும், தமிழர்களும் சிங்கள மீன்பிடிகாரரும் அருகருகு வாடிகளில் தங்கியிருப்பதும் வழமை. இவர்கள் கூட, வருடத்தில் சில நாட்கள் உடப்பு பத்தினியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வது வரலாறு. இவ் வரலாறு புளொட் இயக்கத்தினர் ‘நிகரவேட்டிய’ வங்கிக்கொள்ளை நடத்தும் வரை தொடர்ந்தது.

இவ்வாறு பரம்பரை பரம்பரையாக தொழில் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் இந்த இரு மீன்பிடிச் சமூகத்திற்குள்ளும் இருந்த உறவு, மறுபுறத்தில் வடபகுதி மீனவர்களின் ஒரு பகுதியினரால், இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு முரணாக கடத்தப்பட்ட பொருட்களை சிங்களப் பிரதேசத்தில் சந்தைப்படுத்துவதற்கும், அப்பகுதிகளில் தமிழர்கள் வர்த்தக நிறுவனங்களை அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.

இவ்வுறவு பலகாலம் நின்று நிலைப்பதற்கு பல காரணங்கள் கூறலாம். முதல் முக்கிய காரணம் இரு பகுதியினரின் மீன்பிடிப் பொறிமுறை பெரும்பாலும் வித்தியாசமானதாகும். உதாரணமாக மேற்கூறியபடி அரிப்பு பிரதேசத்திற்கும் புத்தளம் முந்தல் பிரதேசத்திற்கும் இடையில் தொழில் செய்த சிங்களத் தொழிலாளர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டனர். பருவகாலத்தில் வடபகுதியை சேர்ந்தோர் இப்பகுதியில் பறிக்கூடு, வலைபடுப்பு, கடலட்டை குளித்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டனர். இந்த இரு பகுதியினராலும் குறிவைக்கப்படும் மீன்வகை கூட ஒரே வகையானதல்ல. இதனால் முரண்பாடுகள் சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கவில்லை. அடிப்படையில் இரு பகுதியினரின் தொழில் பார்க்கும் முறையும், தொழில் செய்யும் பிரதேசங்களும் பெரும்பாலும் வெவ்வேறானதாகவே உள்ளன.

இதை அடிப்படையாக் கொண்டே பருத்தித்துறை தொழிலாளி ஒருவர் வீரகேசரி பத்திரிகைக்குகருத்து தெரிவிக்கும்போது “சிங்களவர்களால் அல்ல, இந்திய மீனவர்களால் தான் தமக்கு பாதிப்பு” என்று கூறினார். ஆனால் இந்திய குறுந்தமிழ் தேசியவாதிகளும், இடதுசாரித்துவம் பேசும் புலம்பெயர் தமிழினவாதிகளும் இணைந்து அத்தொழிலாளியை சிங்களப் பேரினவாதிகளின் பேச்சாளர் என முத்திரை குத்தினர்.

இந்திய மற்றும் புலம்பெயர் தமிழ் குறுந்தேசிய, பாசிச சக்திகள் கூறுவது போல இவ்விரு மீன்பிடி சமூகத்தினருக்கிடையில் மீன்பிடித் தொழில் ரீதியாக முரண்பாடு நிலவுகின்றதென யாராவது கூற முயன்றால் அது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்வது போலாகும். அதேபோன்று இனப்பிளவை விரிவாக்க அயராது செயற்படும் குறுந்தேசியத்துடனும் தமிழ் இனவாதிகளுடனும் தமிழ் நாட்டின் இடதுசாரிகளான ‘ம.க.இ.க’ போன்ற அமைப்புக்கள் கைகோர்ப்பது குளத்தைக் கலக்கி பருந்திற்கு இரைகொடுத்தது போலாகும்.

குறிப்பு : இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்தில், இலங்கையில் சிங்கள – தமிழ் மீனவர் பிரச்சினைகள் தோன்றியிருக்கவில்லை. ஆனால் இன்று, நீண்டகால யுத்தம், தமிழ் மீனவ சமூகத்தின் புலம்பெயர்வு, சிங்கள சமூகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழில் ரீதியான சமூகமாற்றம், பேரினவாத அரசியல் போன்ற காரணிகளால் இந்த இரு சமூகத்திற்குமான உறவு மங்கிய நிலையில் உள்ளதென்பது நிதர்சனம். தற்போது இக் கட்டுரை ஆசிரியர் முல்லைத்தீவில் நடைபெறும் தமிழ் – சிங்கள மீனவர் பிரச்சினை தொடர்பான ஆய்வைச் செய்துவருகிறார். 

ஒரு நினைவு  நினைவு மீட்டல்  

எனது கிராமம் இலங்கையின் பொருளாதார அடிப்படையில், ஒப்பீட்டளவில் அநேகமாக நடுத்தர வர்க்க மீனவர்களைக் கொண்ட கிராமம். அங்கு எனது தந்தை வழி மாமா ஒருவர் இருந்தார். அவரை ‘அய்யா  மாமா’ என்று நாங்கள் அன்பாக அழைப்போம். அவரை நான் எங்கு கண்டாலும் அவர் என் பக்கத்தில் வந்து ”ஒழுங்கா படிக்கிறியா மருமகன்” என்று விசாரித்து விட்டு, எனது சேட்டுப் பையில் பணம் வைத்து விட்டு போவார். அதில் குறைந்தது ஐம்பது ரூபாயாவது இருக்கும். நாங்கள் அவரை ‘அய்யா  மாமா’ என்று அழைத்தாலும், ஊருக்கு வெளியில் அவரை ‘சர்க்கரைச் சம்மாட்டி’ என்று அழைப்பார்கள். சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் அவர் பதின்ம வயதில் இருந்தபோது, ஒருநாள் அதிகாலை வேளை அவர் கோர்வலை வைக்க கடற்கரை பக்கம் சென்றார். அங்கே கரையில் ஆளில்லாத கட்டுமரமொன்றில் சர்க்கரை மூட்டைகள் இருப்பதைக் கண்டார். கடத்தல்காரர்கள் கட்டுமரத்தை கரையில் விட்டுவிட்டு அருகிருந்த பற்றைக்கருகில் நித்திரை கொள்வதை கவனித்த அவர், கட்டுமரத்துடனும் சர்க்கரை மூட்டைகளுடனும் அங்கிருந்து தலைமறைவானார். 

பலவருடங்கள் கழித்து ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பதாம் ஆண்டு, ‘Toyota Rosa Bus’ வாகனத்தில் நான்கு பிள்ளைகளுடனும் மனைவியுடனும் ஊரில் வந்து இறங்கினார். ஊரில் அவரின் மனைவியை சிங்களத்தி என கிசுகிசுத்தனர். ஆனால் அவரின் நெருங்கிய குடும்பத்தினரோ, அவர் மனைவி தமிழச்சிதான் என்றும், அவர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சரியாக தமிழ் தெரியாதெனவும் கூறினர். மாமா வரும்போது தனக்கு சொந்தமாக ரோசா மினி பஸ்சுடன் மட்டும் வரவில்லை. எமது ஊருக்கு முதன் முதலாக உள்ளக இயந்திரம் இணைத்த பாரிய மரத்தாலான படகுடன், தொழிலுக்கு தேவையான, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த நவீன வலைகள், உபகரணங்களுடனும் வந்திருந்தார். உபகரணங்களையும் படகையும் அவரின் மனைவியின் உறவினர்களும், சில தென்னிலங்கைத் தொழிலாளிகளும் கடல் வழியால் எமது ஊருக்கு கொண்டுவந்தனர். ஊரே வாயில் விரலை வைத்து அதிசயமாகப் பார்த்தது. இவ்வாறு, சர்க்கரை கடத்தியவர்களிடமிருந்து இவர் களவாடியதும், அதை வைத்து படகு வேண்டியதும் தான் இவர் ‘சர்க்கரைச் சம்மாட்டி’ என்று அழைக்கப்பட்டதன் பின்னணி. 

சம்மாட்டி என்றால் வழமையாக ‘முதலாளி’ என்று விளங்கிக் கொள்ளும் தன்மை கடற்தொழிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம் உண்டு. வழமையாக முதலாளிகள் தொழிலாளிகளுக்கு நாட்கூலி, அல்லது மாதக்கூலி கொடுப்பது வழக்கம். ஆனால் இலங்கை மீன்பிடிச் சமூகத்தில், அது சிங்களவன் ஆனால் என்ன தமிழன் ஆனால் என்ன, கூலி கொடுக்கும் வழமை எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இலங்கையில் பங்குமுறை தான் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது. 

உதாரணமாக, பிடிக்கப்படும் மீனின் வருமானத்தில், எரிபொருள் மற்றும் தொழிலாளிகளின் சாப்பாட்டுச் செலவுபோக மீதமானது, படகும் வலையும் சொந்தமான ஒருவருக்கு இரண்டு பங்கும், தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு பங்கும் வழங்கப்படும். வள்ளம்-வலை வைத்திருப்பவர் கடன் வாங்கி, வட்டி கட்டினால் அதற்காக தொழில் நன்றாக இருக்கும் போது ஒரு பகுதியை ஒதுக்குவர். அதேபோன்று ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஏதாவது நல்லது-கெட்டது நடந்தால், ஒருநாள் உழைப்பையோ அல்லது உழைப்பின் ஒரு பகுதியையோ வழங்குவதும் வழமை. இதில் கிராமத்திலுள்ள மற்ற தொழிலாளர்களும் பங்கெடுப்பது இயல்பாக நடப்பதொன்று. இதே போலவே கிராமங்களில் பள்ளிக்கூடம் திருத்துதல், கோவில் திருவிழா, வீதி செப்பனிடல் போன்ற பொதுச் செலவுகளுக்கும் உழைப்பை வழங்குவர். இதை ‘உழைப்பெடுத்தல்’ என்று கூறுவர்.

சர்க்கரைச் சம்மாட்டியான எனது மாமனும் சமுதாய வழமைக்கேற்ப பங்கு வழங்கி தொழில் நடத்துபவராக விளங்கினார். எண்பத்தி மூன்றாம் ஆண்டிற்கு பிற்பாடு உள்நாட்டு யுத்த சூழலில் கடல்வலய மீன்பிடி தடைச்சட்டம் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சர்க்கரை மாமாவின் தொழில் முடக்கப்பட்டது. எண்பத்தி ஆறாம் வருடம் முற்றாகத் தொழில் செய்ய முடியாததினால் அவரின் இயந்திரப்படகு கரையில் ஏற்றப்பட்டது. 

அந்தக் காலப்பகுதியில் காரைநகர் கடற்படை முகாமை சேர்ந்த ‘வீரயா சூரயா’ என்ற பீரங்கிப் கப்பல் கடலில் இருந்து கரையை நோக்கி எந்தவிதக் காரணமும் இல்லாமல் குண்டுமழை பொழிவது வழக்கம். இதனால் மீன்பிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வீடுகளும், கரையில் நின்ற படகுகளும், உபகரணங்களும் அழிக்கப்பட்டன. எண்பத்தாறாம் வருடம் சித்திரை மாதத்தில் ஒரு நாள் வீரயா சூரயா பீரங்கியின் குண்டுகள் சர்க்கரை மாமாவின் கரையோரமிருந்த அவரின் வீட்டையும், அதன் முன் ஏற்றியிருந்த படகையும் முற்றாக அழித்தன. குண்டு விழுந்து படகு தீப்பற்றி எரிந்தது. குடும்பத்தினர் காயங்களுடன் உயிர்தப்பினர். றிபிள் பைவ் சிகரட்டுடன், கிப்ஸ் சாறமும் வெள்ளைச் சேட்டும் அணிந்து கம்பீரமாக வலம் வந்தவர், குறுகிப்போனார். வறுமை தாக்கியது. மூத்தமகளுக்கு சீதனம் கொடுக்கக் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் அடைக்க முடியாமல் திண்டாடினார். 

அதுவரை தமிழ் தேசியவிடுதலைப் போராட்டம் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதிருந்தவர் திடீர் தேசியவாதியானார். மூன்று மகன்களில் ஒருவன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தான். மற்ற இருவரும் கல்வியை நிறுத்திவிட்டு நாளாந்த சீவியத்தை கவனிக்க கரைசார் கடற்றொழிலில் ஈடுபட்டனர். பின் வந்த காலத்தில் றிபிள் பைவ் சிகரட் வாங்க வசதியில்லாவிட்டாலும் ஆர்.வி.ஜி. பீடியை கையில் ஏந்தியபடி பழைய கம்பீரத்துடன் அவர் தமிழீழ ஆதரவாளராக வலம் வந்ததுடன், வன்னிக்கு புலம்பெயர்ந்து தொழில் செய்தார். முள்ளிவாய்க்கால் அவலத்தில் மீண்டும் எல்லாவற்றையும் இழந்தவர், ஊர் திரும்பி மறுபடியும் தனது பிள்ளைகளுடன் கடற்றொழில் செய்து வயிற்றைக் கழுவ முயலுகின்றார். 

அன்று படகும் வீடும் அழிந்தபோது தேசியவாதியாகி, தமிழீழம் தான் முடிவென்று தன் பிள்ளையை போராட அனுப்பியவர், இன்று அதே பிள்ளைகளுடன், தனது குடும்பத்தின் அன்றாடச் செலவுக்காக கடல் தரும் வருமானத்தை தடுக்கும் இந்திய அழிவு மீன்பிடியை எதிர்த்து, மாதகல் கரையிலும் பருத்தித்துறை முனையிலும் சகதொழிலாளிகளுடன் இணைந்து போராடுகிறார். அன்று அவர் படகும் வீடும் அழிந்தபோது, சரி பிழைகளுக்கப்பால் அவரது அரசியல் அபிலாசையைப் பயன்படுத்த ஏதோ ஒரு சக்தி இருந்தது. இன்று அவர் அன்றாடம் காய்ச்சியாகி, நாளாந்த சோற்றுக்கே கஸ்டப்படும் வேளை, இந்திய அழிவு மீன்பிடிக்கு எதிரான அவரின் நியாயமான போராட்டத்தை நெறிப்படுத்தவோ, ஆதரவு வழங்கவோ அவருக்கென்று ஒருவருமில்லை.

உசாத்துணை :  

  1. Anders Jensen J:  The story of Norwegian cod fisheries
  2. Marine Resource Economics, Vol. 18., 2003 . Harvest Functions: The  Bottom Trawl Fisheries
  3. Massachusetts Division of Marine Fisheries : Technical Report TR-38
  4. பாட்டாவழிச்சமூகம் வட்டுக்கோட்டை    : வணிகர்வரலாறு
  5. Commissioner of Fisheries, Chennai-6 : TamilNadu fisheries development 2007-2008
  6. Director of Marine Products Export Development Authority, Chennai: Marine Products Export 2007- 2008
  7. Ministry of fisheries and aquatic resources, Sri Lanka : Framework of the fisheries and aquatic resources sector 2007-2016

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6591 பார்வைகள்

About the Author

மரியநாயகம் நியூட்டன்

சமூக ஆய்வாளர் மரியநாயகம் நியூட்டன் அவர்கள் 14 வயதில் ஈழத்திலிருந்து நோர்வே நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர். The Arctic University of Norway and NORD University Bodø, Norway பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் இன்று வரை இலங்கையின் அரசியல், சமூக விடயங்கள் சார்ந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். நோர்வே மாநில மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அரசியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)