Arts
11 நிமிட வாசிப்பு

இயக்கர் அல்லது பத்தர் : இலங்கை வரலாற்றுக் காலத்தின் துவக்கம்

December 31, 2023 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

கீழைக்கரையில் மாப்பாறைக்காலம் அல்லது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பல கட்டமைப்புகள், வாகரை, உகந்தை உள்ளிட்ட இடங்களில் அவதானிக்கப்பட்டிருந்ததை கடந்த அத்தியாயத்தில் கண்டிருந்தோம். மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்கு வாகரையில் வெருகலாற்றின் கழிமுகத்தை அண்டிய குரங்கு படையெடுத்த வேம்பில் பாறைக் கற்களாலான கற்கிடை [1] அடக்கங்களும் போரதீவுப்பற்று வெல்லாவெளி மண்டூரை அண்டி பெருங்கற்கால அடக்கங்களும் முன்பு இனங்காணப்பட்டிருந்ததுடன், திருக்கோணமலை – கொட்டியாரப்பற்று கிழக்கு – வெருகல் இலந்தைத்துறையில் கரும்-செம் கலவோடுகள் பெறப்பட்டிருக்கின்றன (பத்மநாதன், 2013:16).

பாணமைப்பற்று பொத்துவில் பகுதியில் உகந்தை, பூமுனைப் பகுதிகளிலுள்ள மாப்பாறைக்கால அல்லது பெருங்கற்காலச் சின்னங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் (Coast Conservation Department, 1990:56, பத்மநாதன், 2013:17) அவற்றின் தற்போதைய நிலை அறியக்கூடவில்லை. அண்மைக்காலத்தில் கோரளைப்பற்று தெற்கு கிரான் வடமுனையிலும் பெருங்கற்கால ஈமக்காடு கண்டறியப்பட்டுள்ளது (Wickramaarachchi n.d). அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று தெற்கு திருக்கோவில் சாகாமம், மன்னன்குளம், காஞ்சிரங்குடா முதலிய இடங்களும், பாணமைப்பற்று பொத்துவில் சங்கமன்கண்டி, இலாகுகலை முதலிய இடங்களும் நாடுகாடுப்பற்று இறக்காமம் மாணிக்கமடு, முதலிய இடங்களும் மாப்பாறைக்காலம் நீடித்த முன்னை-வரலாற்றுத் தொல்லியல் இடங்களாக இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன (அரசாங்க அச்சுத் திணைக்களம், 2014:9-14). எனினும் கீழைக்கரையில் நீடித்த மாப்பாறைக்காலம் பற்றி விரிவான ஆய்வுகளெதுவும் மேற்கொள்ளப்படாத படியால், அக்காலப்பின்னணி பற்றி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.

தென்னிந்தியாவிலும் இலங்கையினதும் முன்னை-வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான  ஒற்றுமை, அவற்றில் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் செப்புப்பாறைக்காலம் (Chalcolithic period) இல்லாததாகும். அதாவது, அந்நிலப்பகுதிகளில் கிடைத்த சான்றுகள் அங்கு வாழ்ந்தோர் கற்காலத்திலிருந்து உடனடியாக இரும்புக்காலத்துக்கான பாய்ச்சலைக் காண்பித்ததை உறுதிப்படுத்துகின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால் அவற்றின் மாப்பாறைக்காலமும் இரும்புக்காலமும் ஒன்றோடொன்று மேற்பொருந்துவதுடன், இலங்கையின் முதற்பொறிப்புகளும் அதே காலத்திலேயே தோன்றிவிடுகின்றன (Seneviratne, 1989, John, 2006). தென்னிந்திய தொல்மாந்தரும் இலங்கைத் தொல்மாந்தரும் ஒரே பண்பாட்டு வரையறைக்குள் வருகின்றனர் என்பதற்கான வலிதான சான்று இதுவாகும்.

இனி, கீழைக்கரையின் வரலாற்றுக் காலம், அங்கு கண்டறியப்பட்ட பிராமி மற்றும் தமிழ்ப்பிராமிப் பொறிப்புகளோடு ஆரம்பிக்கின்றது. இந்தப் பொறிப்புகள் எழுந்த பண்பாட்டுப் பின்னணியை முழு இலங்கைப் பின்னணியில் பார்க்கும் போது ஒரு தெளிவான சித்திரம் எமக்குக் கிடைக்கும்.

இலங்கையில் பாகத (பிராகிருதம் – ப்ராக்ரு_தம், Prākṛtam) மொழிக் குடும்பத்தைச் [2] சேர்ந்த ஈழப்பாகதமும்  தமிழ் மொழியும் எழுதப்பட்ட  இரு விதமான எழுத்துருக்களில் (உரு.1) அமைந்த பொறிப்புகள் கிடைத்துள்ளன. 

tamil and brahmi chart

ஈழப்பாகதம் வணிக – சமய நோக்கங்களின் வழியே இலங்கையில் அறிமுகமான பாகதக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி [3]. ஈழப்பாகதத்திலிருந்து வளர்ச்சி கண்ட “எழு” மொழியிலிருந்தே சிங்கள மொழி உருவானது. ஈழப் பாகதம் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளதுடன், பிராமிக் கல்வெட்டுகள் பௌத்த சமயம் சார்ந்த கட்டடங்கள், குகைகள், கற்பாறைகளிலேயே கிடைக்கின்றன. இவை பொதுவாக பொமு 3 முதல் பொபி 3 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் கிடைக்கின்றன.

இலங்கையில் கிடைக்கும் இரண்டாவது வகையான கல்வெட்டுகள் தமிழ் மொழியில் தமிழ்ப்பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்டவை. ஏராளமான தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுகள் கிழக்கிலங்கையிலும் வட இலங்கையிலும் கிடைத்துள்ளன. இவை ஈழப்பாகதத்தில் எழுதிய பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கும் அதே பொமு 3 ஆம் நூற்றாண்டளவிலிருந்து கிடைக்க ஆரம்பிக்கின்றன [4] என்பது குறிப்பிடத்தக்கது (பத்மநாதன், 2016:8-72).

இலங்கையில் கிடைத்த ஈழப்பாகத மொழிப் பிராமிப் பொறிப்புகளுக்கும் தமிழிப் பொறிப்புகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. தமிழிப் பொறிப்புகள் அதிகம் வடகிழக்கிலும் அரிதாக தென்னிலங்கையிலும் (உ-ம்: திசமாராமைக் கலவோட்டுப் பொறிப்பு [Pushparatnam, 2014]) கிடைக்க, பிராமிப் பொறிப்புகள் இலங்கையெங்ஙணும் பரவலாகக் கிடைக்கின்றன. பிராமிப் பொறிப்புகள் புத்த மதச் சின்னங்கள், குகை – மலை வாழ்விடங்களிலே பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழிப் பொறிப்புகள் பிராமிப் பொறிப்புகள் போலன்றி செங்கல், சிற்பங்கள், மட்கலங்கள், தூண்கள் முதலியவற்றிலும் அன்றாடப் பாவனைப்பொருட்களிலும் (ஏறாவூரில் கல் உரல், களுவாஞ்சிக்குடியில் செக்கு, கொம்மாதுறையில் ஆட்டுக்கல் தமிழிப் பொறிப்புடன் கண்டெடுக்கப்பட்டன) பொறிக்கப்பட்டவையாகக் கிடைக்கின்றன.

பிராமிக் கல்வெட்டுகள் குறிப்பாக பௌத்த சமயச் சார்பாகவே கிடைக்க, தமிழிக் கல்வெட்டுகள் பௌத்தம், சமணம், சைவம், நாக வழிபாடு ஆகிய நான்கு சமயச்சார்பு கொண்டவையாகக் கிடைக்கின்றன. பிராமிப்பொறிப்புகள் பல்வேறு இனக்குழுக்களை அல்லது சமூகங்களைக் குறிப்பிட, தமிழிப் பொறிப்புகள் “நாகர்” எனும் ஒரே இனக்குழுவையே பிரதானமாகக் குறிப்பிடுகின்றன (பத்மநாதன், 2016:1-32).

இன்னொரு சுவையான விடயத்தையும் பார்க்கலாம். ஈழப்பாகத பிராமிக் கல்வெட்டுகளிலிருந்து இலங்கையில் வசித்த ஐந்து இனக்குழுமங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. பொறிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களை பத்தர் (பத – சுமார் 150 பொறிப்புகள்) [5], நாகர் (சுமார் 70 பொறிப்புகள்), பிராமணர் (பமண – சுமார் 24 பொறிப்புகள்), பரதர் (சுமார் 21 பொறிப்புகள்), தமிழர் (சுமார் 5 பொறிப்புகள்), காம்போசர் [6] (2 இற்குக் குறையாதவை) என்று வரிசைப்படுத்த முடியும்.

இந்த ஆய்வுகளிலிருந்து பேரா.சி. பத்மநாதன் சில தீர்மானங்களுக்கு வருகிறார். குறிப்பாக பிராமிக் கல்வெட்டுகளில் பெரும் எண்ணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், அரசன் (ரா|ச) அல்லது வேள் (வேள) அல்லது ஐயன் (ஆய) என்ற அரசு சார் பட்டங்களையோ “கமிக” என்ற அடைமொழியையோ [7] கொண்டிராத பத்தர்களை இந்த எல்லா இனக்குழுவினரிலும் ஆதியான ஈழத்துப் பூர்வ குடிகள் என்று அவர் அடையாளப்படுத்துகிறார். மகாவம்சம் குறிப்பிடும் இயக்கர் – நாகர்களில், பத்தர்களே இயக்கர்கள் என்பது அவரது துணிபு.

பத்தர்கள் இலங்கையில் வாழ்ந்த குறுணிக்கற்காலப் பண்பாட்டு பலாங்கொடை மனிதனின் சந்ததியினர். அவர்கள் மறைந்து போன முண்டாமொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைப் பேசினார்கள். பத்தரை விடக் குறைந்த எண்ணிக்கையில் இலங்கையில் வாழ்ந்த நாகர், பத்தருக்குப் பின்னர் இங்கு குடியேறியவர்கள். அவர்கள் தென்னகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்து மாப்பாறைக்கால அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டையும் இரும்புப் பயன்பாட்டையும் இலங்கைக்கு அறிமுகப்படுத்தினர். பெரும்பான்மையாகத் தமிழைப் பேசிய நாகர்களிடம், “மணிநாகன்” என்ற நாகதெய்வத்தின் வழிபாடு பிரதானமான சமய நம்பிக்கையாக இருந்தது. அவர்கள், தமக்கென சிற்சில நிலப்பரப்புகளைப் பிரித்துக்கொண்டு வேளிர் சிற்றரசுகளை அமைத்து ஆண்டுவரலாயினர்.

நாகருக்குச் சமாந்தரமாக அல்லது அவர்களுக்குப் பின்னர் தொடர்ச்சியாக இடம்பெற்ற வணிக – சமய நோக்கிலான குடிபெயர்வு அலைகளின் வழியே இலங்கைக்கு சைவம், பௌத்தம், சமணம் [8] ஆகிய சமயங்கள் அறிமுகமாயின. இவற்றில் பௌத்தம், சமணம் என்பன வட இந்தியாவிலிருந்து தென்னகத்துக்கு அறிமுகமான வணிகப்பாதையின் நீட்சியாகவே இங்கும் வந்திருக்கும் என்பதால், அவையே ஈழப்பாகத மொழியை இலங்கைக்கு அறிமுகம் செய்திருக்கவேண்டும்.

மாப்பாறைக்காலப் பண்பாடு, இரும்புப் பயன்பாடு என்பவற்றின் வழியே அக்காலத்தில் தனிநாகரிகம் அடைந்திருந்த நாகர்கள், புதிதாக அறிமுகமான சமயங்களைத் தழுவிக்கொண்டார்கள். அச்சமயங்களின் சின்னங்களில் நாகங்கள் இடம்பெறலாயின. பௌத்தத்தின் செல்வாக்கின் வழியே நாகரில் ஒருசாரார் ஈழப்பாகதம் பேசுவோராயினர்.

நாகரில் ஏற்பட்ட இம்மாற்றங்கள் பத்தரையும் வெகுவாகப் பாதித்தன. அவர்கள் தங்களை விட மேம்பட்ட நாகரின் மாப்பாறைப் பண்பாட்டுக்கும் இரும்புப் பயன்பாட்டுக்கும் அடிபணிய வேண்டி நேரிட்டது. பத்தருக்கும் நாகருக்குமிடையே இடம்பெற்ற குலக்கலப்புக்குச் சான்றாக “பதநாக” (பத்தநாகன்) முதலிய ஆட்பெயர்கள் பிராமிக்கல்வெட்டுகளில் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டலாம். பத்தரின் சந்ததியினர் பௌத்த, சைவ, சமண சமயங்களைத் தழுவவும் தமிழ், பாகதம் ஆகிய மொழிகளைப் பேசுவோராகவும் மாற, அவர்களது முண்டாமொழியும் பத்தரின் குறுணிக்கற்கால நாகரிகமும் இலங்கையிலிருந்து வேரோடு அழிந்தன.

பத்தர் – நாகரை விடக் குறைவான எண்ணிக்கையில் இலங்கையில் வாழ்ந்த பிராமணர், பரதர், தமிழர், காம்போசர் பற்றியும் பல தகவல்களைத் திரட்டிக்கொள்ள முடிகின்றது. அவர்கள் பெரும்பாலும் நாகருக்குப் பின் இங்கு புலம்பெயர்ந்தோராதல் வேண்டும். பிராமணரில் சிலர் பௌத்தத்தைத் தழுவியிருந்தனர் அல்லது பௌத்தத்துக்கு ஆதரவளித்தனர் என்பதை சில கல்வெட்டுகள் சொல்கின்றன. பரதர் என்பது சங்க இலக்கியங்களில் பரதவர் என்று குறிப்பிடப்பட்ட தமிழக நெய்தல் குடிகளின் சந்ததியினர். அவர்கள் கடலோடிகளாகவும் மீனவர்களாகவும் விளங்கினர். தமிழர் தமிழகத்திலிருந்தும் [9] காம்போசர் காம்போச நாட்டிலிருந்தும் வந்து குடியேறிய வணிகர்களாகலாம்.

ஆக, தொன்றுதொட்டு சொல்லப்பட்டு வரும் வி|சயன் வருகை, மகிந்த தேரர் வருகை என்பவற்றுக்கு மேலதிகமாக, அறிவியற்பூர்வமான நாகரிக அறிமுகம், பௌத்தத்தின் வருகை  என்பவற்றை இந்த பாகத – தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளின் வழியே நாம் ஊகிக்கமுடிவது பெரும் வரப்பிரசாதமாகும். இனி கீழைக்கரையின் வரலாற்றுக் காலத்தில் இந்த இனக்குழுக்களில் யார் யார் வாழ்ந்தனர், எத்தகைய அரசியல் – சமூக பண்பாட்டுச் சூழ்நிலை காணப்பட்டது என்பதைப் பார்ப்போம். 

அடிக்குறிப்புகள்

[1] கற்கிடை (டொல்மன், Dolmen) என்பது மாப்பாறைக்காலத்துக்குரிய ஒரு கல்லறை வடிவம். இதில் மூன்று அல்லது மேற்பட்ட கற்கள் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டு அவை மீது கிடையான கற்பலகை ஒன்று கிடத்தப்பட்டிருக்கும். இவற்றில் இறந்தோர் புதைக்கப்பட்டு ஈமக்கடன் செலுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. 2010 களில் வீதி அபிவிருத்திக்காக இவ்விடத்தில் கல் குவாரி அமைக்கப்பட்டபோது, இந்தத் தொல்பொருள்கள் சிதைத்தழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

[2] பாகத மொழிக்குடும்பம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கிய பல மொழிகளை உள்ளடக்கியது. பாகதம், பாலி  முதலிய பாகதக் குடும்ப மொழிகள் ஒரு காலத்தில் சமயமொழியாகவும் இலக்கிய மொழியாகவும் திகழ்ந்தன. பாகத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த அர்த்தமாகதி, மாகதி, சௌரசேனி, பைசாசி, மகாரா^ச்ட்ரி, அப||ப்ராம்^^ச (Mahārāṣṭri, Apabhraṃśa) முதலிய மொழிகள் பொபி 8, 9 ஆம் நூற்றாண்டுகள் வரை இந்தியத் துணைக்கண்டத்தில் பேச்சுமொழியாக விளங்கிய போதும், பின்னாளில் சங்கத (`சம`ச்கிரு_தம், saṃskṛtam) மொழியின் மேலாதிக்கத்தால் அழிந்தோ உருத்திரிந்தோ விட்டன (Ollet, 2017:9-21). 

[3] “இலங்கைப் பிராமிச் சாசனங்களில் காணப்படும் மொழிநடையும் சொல்வளமும் கர்நாடகம், தெலுங்குதேசம் என்பவற்றிலுள்ள சமகாலப் பிராமிச் சாசனங்களில் உள்ளவற்றைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. எனவே இலங்கைப் பிராமிச் சாசனங்களைச் சிங்களம் என்று செனரத் பரணவிதான கூறுவதை ஒப்புக்கொள்ளுமிடத்து தென்னிந்திய பிராமிச் சாசனங்களின் மொழியும் சிங்களமென்றே ஆகிவிடும். சிங்கள மொழி பிராகிருதத்தை மூலமாகக் கொண்டது. ஆனால் அதன் உருவாக்கத்தை கிபி 5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலம் முதலாகவே ஆவணங்களிலிருந்து அறிய முடிகின்றது.” – பத்மநாதன், 2013:8-9.

[4] பிராமி, தமிழி வரிவடிவங்கள் பற்றிய விரிவான விளக்கத்துக்கு இத்தொடரின் ஐந்தாம் அத்தியாயத்தைப் பார்க்கவும் : கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும். தமிழ்ப்பிராமி அல்லது தமிழி வரிவடிவில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இலங்கையில் கிடைக்கவில்லை என்ற கருத்து, மிக அண்மைக்காலத்தில் – வெறும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் – நிராகரிக்கப்பட்டது. பேரா.சி. பத்மநாதனின் வழிகாட்டலில் கீழைக்கரையைச் சேர்ந்த அவரது மாணவர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தமிழியில் அமைந்த ஏராளமான தனித்தமிழ்க் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து வடமேல் இலங்கையில் கற்பிட்டி, குதிரைமலையிலும் வட இலங்கையிலும் தமிழிப் பொறிப்புகள் கண்டறியப்பட்டன (பத்மநாதன், 2016:9-10). பேரா.சி. பத்மநாதனின் நூலிலும் கூட அவை தெளிவான புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தப்படவில்லை. திருத்தமான ஆதாரங்களுடன் இவ்வாய்வு முடிவுகள் இதுவரை ஆங்கிலத்திலோ சிங்களத்திலோ விரிவாக வெளியாகவில்லை என்பதால் இம்முடிவுகளால் இலங்கை ஆய்வுலகில் எவ்வித விவாதங்களையும் ஏற்படுத்தமுடியவில்லை.

[5] பத என்பது பரதரிலிருந்து வேறுபட்ட ஒரு இனக்குழுவினர். பிராமிக்கல்வெட்டுகளின் சில இடங்களில் மெய்யெழுத்து இரட்டிப்பதில்லை என்ற விதிக்கிணங்க, பத என்பதை “பத்தர்” என்று வாசிக்கமுடியும். மேலும் வாசிக்க: அத்தியாயம் 05 கீழைக்கரைக்கான வரலாற்றுச் சான்றுகள் : கல்வெட்டுக்களும் பொறிப்புகளும்.

[6] பிராமிக் கல்வெட்டுகளில் “க|பொ|ச” (Kaboja) என்று இடம்பெறும் சொல்லை செ. பரணவிதான “காம்போ|சர்” (Kāmboja) என்று வாசிக்கிறார். வேதகால இறுதியில், காம்போசர் என்ற பெயரில் தென்கிழக்கு ஈரானிலும் ஆப்கானிலும் வாழ்ந்த ஒரு இனக்குழுவினர் அறியப்பட்டார்கள் (Schmitt, 2021). பின்னாளில் வங்கநாட்டு அரசொன்றும், மிகப்பிற்காலத்தில் கம்போடிய நாடும் காம்போசம் என்று அறியப்பட்டன. பிராமிக் கல்வெட்டுகளிலுள்ள காம்போசர்கள் ஆப்கானிலிருந்து வந்து வணிகம் செய்தோர் என்று அவை பொறிக்கப்பட்ட காலத்தைக் கொண்டு ஊகிக்கமுடியும்.
  

[7] கமிக என்ற பிராமி முன்னொட்டை செ. பரணவிதான “ஊர்ச்சபையின் உறுப்பினன்” என்று வாசிக்கிறார். ஊர்ச்சபைகள் பற்றிய தகவல்கள் பழைய இலக்கியங்களில் கிடையாமையால் இவ்வாசிப்பை நிராகரிக்கும்  சி.பத்மநாதன், கமிக என்ற சொல்லை கிராமத்தவன் அல்லது கமக்காரன்/விவசாயி என்று வாசிக்கிறார். பத்மநாதனின் வாசிப்பே அதிக பொருத்தம் போல் தென்படுகின்றது. எவரது வாசிப்பை சரியென்று கொண்டாலும் பத்தர்களில் “கமிக” யாரும் இல்லை என்பதை இயல்பாகக் கடந்து செல்ல முடியாதுள்ளது. அந்த இனக்குழுவினரிடம் நிலக்கிழாரிய ஆட்சிமுறைமையோ பரந்த அளவிலான விவசாயமோ கிராமக் கட்டமைப்போ இருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மையாகின்றது.

[8] நாகரிடம் நீடித்த சைவசமயத்துக்குச் சான்றாக, திருக்கோணமலையின் கரைசை, யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் கிடைத்த “மணிநாகன்” பெயர் பொறித்த சிவலிங்கங்கள், நந்திகளைச் சுட்டிக்காட்டலாம். “சமண” என்ற பெயர் பொறித்த பிராமிக்கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. வெல்லாவெளியில் 2007 இல் கண்டறியப்பட்ட முதலாவது தமிழிக்கல்வெட்டு ஒரு சமணக்கல்வெட்டு ஆகும் (பத்மநாதன் 2016:481-505). இவை எல்லாமே பொது ஆண்டை அண்மித்த மிகப்பழைய சான்றுகள். புகழ்பெற்ற இன்னொரு வைதிக சமயமான வைணவம் தொடர்பான பழைய ஆதாரங்கள் இதுவரை இலங்கையில் கிடைக்கவில்லை. ஆனால் “கண்ணன்” என்ற பெயரை பெரும்பாலான நாகர்கள் சூடியிருந்தார்கள். அப்பெயர் பிராமிக் கல்வெட்டுகளிலும் கண அல்லது கண்ஃக (Kana, kanha) என்று இடம்பெற்றுள்ளது.

[9] திருக்கோணமலையின் சேறுவில் தவிர, தமிழர் என்ற இனக்குழுப்பெயர் இடம்பெற்றுள்ள அனுராதபுரம், வவுனியா பெரியபுளியங்குளம், அக்கரைப்பற்றுக் குடுவில் ஆகிய மூன்று இடங்களிலும் வணிகர் என்ற தொழிற்பெயருடனேயே தமிழர் என்ற பெயர் இடம்பெற்றுள்ளதால், தமிழர் என்று குறிப்பிடப்படுவோர் தமிழ் வணிகர்களே என்று ஊகிக்கலாம். இலங்கையில் அப்போது தமிழ் பேசும் வேறு இனக்குழுக்கள் வாழ்ந்து வந்த போதும், தமிழகத்திலிருந்து வந்த புதிய குடியேறிகளே பாகத, பாலி, சிங்களக் குறிப்புகளில் தமிழர் என்று அறியப்பட்டனர் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது. தமிழர் எல்லோரும் அந்நியர் என்ற உளப்பாங்கு சிங்களவரிடம் தோன்றுவதற்கும், போர்த்துக்கேயரும் அவர்களால் தமிழர் என்றே அறியப்பட்டனர் என்ற வரலாற்றுண்மைக்குமான காரணம் “தமிழ் மொழி, தமிழர்” என்ற இரு சொற்களுக்குமான வேறுபாட்டை இலங்கை வரலாற்றுச் சட்டகத்தில் பிரித்தறிய முடியாததாலேயே.

ஒருவேளை சேரர்-சோழர்-பாண்டியர் ஆட்சிக்குட்பட்ட தமிழகம் அல்லது தமிழ்நாடு என்று வரையறுக்கப்பட்ட நிலத்தில் நீடிப்பது மட்டுமே தமிழ். அதைப் பேசுவோர் மாத்திரமே தமிழர் என்ற கருத்து முன்னொருபோது நிலவியிருக்கக்கூடும். செந்தமிழ், கொடுந்தமிழ் பற்றிய கருத்துக்களும் இப்பின்னணியிலேயே உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. ஒப்பிடுக: 

  • “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி”. (தொல்காப்பியம் சொல். எச்சவியல் 4)
  • “செந்தமிழ் நிலஞ் சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற்று இரட்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் தம் குறிப்பினவே திசைச்சொற் கிளவி” (நன்னூல் 273)
  • “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” (பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரம்)
  • “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாடு” (சிலப்பதிகாரம், வேனிற்காதை:1-2)
  • “தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம்” – பரிபாடல் 08),
  • “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” (இளம்பூரணர் தொல்காப்பிய உரை)
  • “தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன் வடக்கு — நன்றாய சீதமலாடு புனல்நாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட்டு எண்.” (பழம்பாடல்)
  • “சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுகுடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கவுடம் கடாரம் கடுங்குசலம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ் பதினேழ் புவி தாம் இவையே” (பழம்பாடல்)

உசாத்துணை

  1. அரசாங்க அச்சுத் திணைக்களம். (2014). இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை, கொழும்பு. இல. 1884.
  2. பத்மநாதன், சி. (2013). இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, கொழும்பு: இந்து சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்.
  3. __________________  (2016). இலங்கைத் தமிழர் வரலாறு : கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் (பாகம் I), கொழும்பு: இந்து சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்.
  4. Coast Conservation Department. (1990). Coastal Zone Management Plan, Sri Lanka.
  5. John, V. (2006.01.27). Reading the past in a more inclusive way : Interview with Dr. Sudharshan Seneviratne, Frontline. retrieved from: www.frontline.thehindu.com on 2023.12.20
  6. Ollet, A. (2017). Language of the Snakes: Prakrit, Sanskrit, and the Language Order of Premodern India. Oakland (CA): University of California Press.
  7. Paranavitana, S. (1970). Inscriptions of Ceylon: Volume I, Ceylon: Department of Archaeology.
  8. Pushparatnam, P. (2014). Tamil Brahmi Inscription Belonging to 2200 years ago, Discovered by German Archaeological Team in Southern Sri Lanka. In Jaffna University International Research Conference (pp. 541-545).
  9. Schmitt, R. (2021). “Kamboja”. In Yarshater, Ehsan (ed.). Encyclopædia Iranica, Online Edition. Encyclopædia Iranica Foundation.
  10. Seneviratne, S. (1989). Pre-State Chieftains And Servants of the State: A Case Study of Parumaka, Sri Lanka Journal of Humanities vol. XV 1989, pp. 99-131·       
  11. Wickramamarachchi, N.S. (n.d). Wadamunai Megalithic Burial Grounds in Maduru Oya Valley, Amazing Lanka, retrieved from www.amazinglanka.com on 2023.12.20

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8164 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)