Arts
20 நிமிட வாசிப்பு

பெருந்தோட்ட மக்களும் சமூக நலன் சேவைகளும் : நேற்றும் இன்றும் நாளையும்

July 13, 2023 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

அறிமுகம்

காலனித்துவ ஆட்சியின் விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் பெருந்தோட்ட விவசாய முறையொன்று தோன்றி வளர்ந்தது என்பதும், இன்று வரையும் அது எமது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வகித்து வருகின்றது என்பதும் யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்விவசாய முறையின் பிரதான உற்பத்தி அலகாகவிருக்கும் தோட்டங்கள் முக்கியமானதொரு தாபன அமைப்பாக இன்று விளங்குகின்றன. பெருமளவு எண்ணிக்கையான தொழிலாளரைக் கொண்ட அமைப்பாக இருந்து வரும் அதேவேளையில் இவை தோட்டங்களில் வதியும் மக்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன், அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையுமே வழங்குவதால் தோட்ட மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முற்று முழுதாகத் தோட்ட முகாமையிலேயே தங்கியிருக்கும் நிலை அங்கு காணப்படுகின்றது. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளனைத்தும் தோட்ட எல்லைகளுக்குள்ளேயே தனியொரு அமைப்பின் கீழ் வழங்கப்படுவதால் இவை சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் அலகுகளாக விளங்குகின்றன. இதன் காரணமாக அவற்றைப் பூரணத்துவத் தன்மை கொண்ட அமைப்புகளெனக் கருதுவது பொருத்தமானதே. வாழ்க்கையின் வேறுபட்ட மூன்று கூறுகளாகிய தொழில், வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு என்பவற்றிற்கிடையிலான தடைகள் இங்கு உடைத்தெறியப்படுகின்றன. இதனால் இவை முற்றிலும் பூரணத்துவம் வாய்ந்தனவாக இல்லாத போதும் அவ்வாறு கருதுவது ஏற்கக் கூடியதே என்பது ஹொல்லப் என்பாரது கருத்தாகும்.

தேசியமயமாக்கத்திற்கு முன்னர் சமூகநலன் சேவைகள்

இந்திய தமிழ்த் தொழிலாளர் இங்கு தருவிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட தோட்டங்கள் பெரும்பாலும் மலைப்பாங்கான தொலைப்பிரதேசங்களில் அமைந்திருந்ததால் அவர்களது பல்வேறு தேவைகள் தோட்டங்களுக்குள்ளேயே பூர்த்திசெய்ய வேண்டியிருந்தது. வாடகையற்ற குடியிருப்பு, இலவச மருந்து விநியோகம், வைத்தியசாலை, பிரசவ விடுதி, குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்ற வசதிகள் இவ்வாறு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளுட் சிலவாகும். எனினும், இவ்வசதிகள் ஒரு போதும் ஆகக் குறைந்த மட்டத்திற்கும் மேலாக இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கென காலப்போக்கில் விரிவான சட்டப் பிரமாணங்களும் உருவாக்கப்பட்டன. தோட்டத்துறைக்கே பிரத்தியேகமானவையாகவிருந்த இச்சட்டங்கள் தோட்டத்தில் வதியும் மக்களுக்குத் தொழில் வசதியையும் வாழ்க்கை வசதிகளையும் செய்து கொடுப்பதைத் தோட்ட உரிமையாளரின் பொறுப்பாக்கின. காலனித்துவ ஆட்சியின் கீழ் அறிமுகமான மேற்படிச் சட்டங்கள் பல இன்றும் அமுலிலிருந்து வருகின்றன. இவற்றுட் சில பின்வருமாறு :

  • 1865 ஆம் ஆண்டு சேவை ஒப்பந்தச் சட்டம் :  தோட்டங்கள் திறக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் புலம்பெயர்ந்து வந்து குடியேறிய தொழிலாளர்களிடையே வறுமை, கடன்படு நிலை பரவலாகக் காணப்பட்ட சுகயீனங்கள் என்பன காரணமாக வாழ்க்கைத் தரமானது குறைந்த மட்டத்தில் இருந்தது. தொழிலாளரைத் திரட்டும் முறை, நீண்ட வேலை நேரம், சுகாதார வசதியற்ற வாழ்க்கை நிலைமைகள் என்பவற்றோடு, இம்மக்களது அறியாமை, கல்வியறிவின்மை என்பனவும் இதற்குக் காரணமாகவிருந்தன. எனினும், தோட்ட முகாமையாளர்கள் இக்காரணிகளில் பின்னையவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.  (Wesumperuma – 1986) வைத்தியசாலைகளில் இறப்போரின் விகிதம் ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டு ரீதியாக இத்தொழிலாளர்களிடையே உயர்வாகவிருந்தால், சுகவீனமுற்றிருக்கும் காலப்பகுதியில் அவர்களுக்கு இருப்பிட வசதி, உணவு, வைத்திய வசதி போன்ற சில குறைந்தபட்ச வசதிகள் செய்து கொடுக்கப்படுவதை இச்சட்டம் வலியுறுத்திற்று.
  • 1984ஆம் ஆண்டு 14 ஆம் இலக்கச்சட்டம் : தொழிலாளரது சமூக நலனிற்குத் தொழில் வழங்குநரே பொறுப்பு என இச்சட்டம் விதித்தது. தொழிலாளர்களிடையே  காணப்பட்ட உயர்ந்த இறப்பு விகிதங்கள், உடல் நலக்குறைவுகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு ஆகக் குறைந்த மருத்துவ வசதிகளாவது அவர்களுக்குச் செய்து கொடுக்கப்படுவதை இது வலியுறுத்திற்று. அவர்களிடையே காணப்பட்ட மேற்படி நிலைமைகள் போஷாக்கின்மை, கடினமான வேலை நிலைமைகள் என்பவற்றின் விளைவாகும். குறைந்த மட்ட வேதனங்கள், தரங்குன்றிய வீட்டு வசதிகள் என்பவற்றோடு, குடிநீர்வசதி, சுகாதார வசதிகள் என்பன இல்லாதிருந்தமை நிலைமையை மேலும் மோசமாக்கிற்று. அவர்களுக்கு சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுவதை இச்சட்டம் கட்டாயமாக்கிற்று. எனினும் மேற்படி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னருங்கூட தொழிலாளர்களிடையே இறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடையவில்லை என்பது கவனிக்கற்பாலது. சட்டவிதிகளை அமுலாக்குவதில் தோட்ட முகாமையாளர் அக்கறை காட்டாது விட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
  • 1880 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மருத்துவத் தேவைகள் சட்டம் : தொழிலாளருக்கான மருத்துவ நலன் திட்டங்களை நிதிப்படுத்துவதற்கும் முகாமை செய்வதற்கும் அரசாங்கமே பொறுப்பென தோட்டக் கம்பனிகள் வாதிட்டு வந்தன. 1880 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் இப்பொறுப்பை அரசாங்கம் ஏற்றது. எனினும், இத்திட்டத்தை நிதிப்படுத்துவதில் தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்பட்டது. இறுதியாக, 1892 இல் பெருந்தோட்ட ஏற்றுமதிப் பொருட்களின் மீது ஏற்றுமதித் தீர்வையொன்றை விதிப்பதன் மூலம் மருத்துவ நிதியொன்று உருவாக்கப்பட்டதுடன் தோட்டத் தொழிலாளருக்குத் தோட்டங்களை அண்டிய அரசாங்க வைத்தியசாலைகள் திறந்துவிடப்பட்டன.
  • 1912 ஆம் ஆண்டு 9 ஆம் 10 ஆம் இலக்க மருத்துவ உதவிச்சட்டங்கள் : தோட்டத் தொழிலாளருக்குச் சுகாதார வசதிகளையும் வைத்திய வசதிகளையும் செய்து கொடுப்பதில் 1912 ஆம் ஆண்டுவரை குடியேற்ற அரசாங்கத்திற்கும் தோட்டக்கம்பனிகளுக்குமிடையே கசப்பான கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன.  உதாரணமாக, 1865 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் சுகயீன காலங்களில் தொழிலாளருக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்கான செலவினை யார் செலுத்துவது என்பது பற்றிய சர்ச்சையை இங்கு குறிப்பிடலாம். 1912 ஆம் ஆண்டுச் சட்டம் முதன் முறையாக ஒரு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் முறையான பராமரிப்பு, போஷாக்கு என்பவற்றிற்கு தோட்ட முகாமையாளரே பொறுப்பு என விதித்தது. தோட்டங்களில் காணப்படும் சுகாதார வசதிகளையும் , தோட்ட மக்களுக்கான சமூக நலன் வசதிகளையும் அரசாங்க மாவட்ட வைத்திய அதிகாரிகள் மேற்பார்வை செய்வதற்கும் இச்சட்டம் அதிகாரமளித்தது. ஆனாலும், தோட்டங்களில் மலசலகூடங்களை அமைப்பதற்கும், வடிகாலமைப்புகளை திருத்துவதற்குமான சட்டவிதிகளை உருவாக்குவதற்கும் இது அனுமதியளித்தது. இவ்வாண்டு முதல் தோட்டக் கம்பனிகளிடமிருந்து மருத்துவ வரியொன்று அறவிடப்பட்ட போதும், தோட்டங்களில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படுமானால் மேற்படி வரியின் மூலம் திரட்டப்பட்ட வருவாய் அவற்றிடமே மீளவும் செலுத்தப்பட்டது.
  • 1920 ஆம் ஆண்டு கல்விச்சட்டம் : பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதுமே தோட்டச் சிறார்களின் கல்விக்கென பாடசாலைகளை நிறுவுதல், அவற்றைப் பராமரித்தல் என்பவற்றை அரசாங்கம் தனியார் கைகளிலேயே விட்டது. அவ்விதப் பாடசாலைகள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அரசாங்கம் அவற்றிற்கு நிதியுதவியளித்தன. எனவே, மத நிறுவனங்களினாலும் தோட்ட முகாமையாளராலும் நடத்தப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை அரசாங்கப் பாடசாலைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க சார்பளவில் கூடுதலாகவிருந்தன. தோட்டத்தொழிலாளரது பிள்ளைகள் கல்வி கற்பது தோட்டங்களில் அவர்கள் செய்யும் வேலையினளவைப் பாதிக்குமெனக் கருதியதோட்ட முதலாளிகள் பாடசாலைகளை அமைப்பதை விரும்பவில்லை. எனினும் 1907 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 8 ஆம் இலக்க ஆரம்ப கல்விச்சட்டம், தினசரி குறைந்தது இரண்டு மணி நேரமாவது பிள்ளைகளுக்கு ஆரம்பக்கல்வி புகட்டுவதைக் கட்டாயப்படுத்தியது. தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டுச்சட்டம் தோட்டங்களில் ஆரம்பப்பள்ளிகள் நடத்தப்படுவதைக் கட்டாயமாக்கியது.
  • 1941 ஆம் ஆண்டு பிரசவ நன்மைகள் சட்டம்

தோட்டங்களில் வதியும் மக்களுக்கு ஆகக்குறைந்த வசதிகளையாவது ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், மோசமான சுரண்டலினின்றும் அவர்களைப் பாதுகாப்பதற்குமாகவே மேற்படி சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், இவை முறையாக அமுல் செய்யப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க எவ்வித தாபன ரீதியான ஏற்பாடுகளும் இல்லாததால் நடைமுறையில் இச்சட்டங்கள் அதிகம் பலனளிக்கத் தவறின. நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட மேற்படி சட்டங்கள் நீக்கப்படாத போதும், இம்மக்களது குடியுரிமை பறிக்கப்பட்டதால் நடைமுறையில் இவை  தோட்ட மக்களுக்கு எவ்வாறு பாதகமாக மாறினவென்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.

an estate

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரிருந்தே பதவியிலிருந்த அரசாங்கங்கள் மக்களுக்குப் பல சமூக நலத் திட்டங்களை அமுலாக்கி வந்தன. இலவசக்கல்வி, இலவச சுகாதார மருத்துவ வசதிகள், வெறும் சமூக நலன் சேவைகள் என்பவற்றை உள்ளடக்கிய இவை காலப்போக்கில் மேலும் விரிவாக்கப்பட்டன. ஆனால், தோட்ட மக்களது நலன்களைப் பேணுவதற்கென இருந்துவந்த விஷேட சட்ட ஏற்பாடுகள் தொடர்ந்தும் அமுலிலிருந்ததைச் சாதமாகக் கையாண்டு, நாட்டு மக்களுக்குப் பொதுவாக வழங்கிவந்த  சமூக நலன் சேவைகளைத் தோட்ட மக்களுக்கு விஸ்தரிப்பதினின்றும் அரசாங்கம் தன்னை விடுவித்துக்கொண்டது. அத்துடன் இச்சேவைகளை வழங்கும் பொறுப்பு தொடர்ந்தும் தோட்டக் கம்பனிகளிடையே ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தோட்டக் கம்பெனிகளோ இவ்வசதிகளை முறையாக வழங்கத் தவறின. சுகாதாரம், வதிவிட வசதி போன்றவற்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தோட்டங்களை பராமரித்த முகவர் இல்லங்கள் பெரிதும் அக்கறை காட்டவில்லை. தமது குறுங்கால இலாபங்களைப் பாதிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் சாதகமாக நோக்காத இவை இச்சேவைகளை வழங்குவது தமது செலவைக் கூட்டுமெனக் கருதின. இதன் விளைவாக, நாட்டின் ஏனைய சமூகங்கள் பொதுச்சேவைகளைப் பயன்படுத்தி கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பல முன்னேற்றங்களைக் கண்டபோதும், தோட்ட மக்கள் தொடர்ந்தும் தோட்ட முகாமையிலேயே தங்கியிருக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் காலத்திற்குக் காலம் அரசாங்கம் அறிமுகம் செய்த பல்வேறு சமூகநலன் சேவைகளின் நன்மைகளைத் தோட்டத்துறை சார்ந்த மக்கள் அனுபவிக்க முடியாது போயிற்று. இவர்களது சமூக அபிவிருத்தியில் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டபோதும் நாட்டின் ஏனைய துறை மக்களோடு சார்பளவில் இன்றுங்கூட இவர்கள் பின்தங்கி காணப்படுவதற்கு இதுவே முக்கியமான காரணமாகவிருந்தது எனக் கூறின் அது தவறாகாது. இது தொடர்பான புள்ளி விபரங்கள் சில காட்டப்பட்டுள்ளன. தேசியமட்டத்திலான சராசரிகளிலும் பார்க்க இம் மக்கள் தொடர்பான அபிவிருத்திக் குறிகாட்டிகள் குறைந்த மட்டத்திலிருப்பது நாட்டின் ஏனைய துறைகளோடு ஒப்பீட்டளவில் தோட்ட மக்கள் பின் தங்கி இருப்பதைக் காட்டுகின்றன.

தேசியமயமாக்கமும் சமூக நலன் சேவைகளும்

தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னர் தோட்ட மக்களுக்குச் சமூக நலன் சேவைகளை வழங்குவதில்  ஓரளவு சிரத்தை காணப்பட்டது. 1972 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பின்வந்த காலப்பகுதியில் மேற்படி குறிகாட்டிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதனைக் காட்டுகின்றது. அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்கள் ஒவ்வொன்றிலும் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவென தனித்தனி சமூக அபிவிருத்திப் பிரிவுகள் அமைக்கப்பட்டன (1978).  வதிவிடவசதி, சுகாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம், குழந்தைப் பராமரிப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கென இவை பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. தோட்ட மக்களது சமூக, கலாசார, கல்வித்தரங்களை மேம்படுத்துவது இவற்றின் நோக்கமாகவிருந்தது. தோட்ட மக்களது சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவை பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாகவே மேற்கொண்டன.

  1. 1975 ஆம் ஆண்டு கூட்டுத்தாபனங்களிரண்டும் தலா 100 Polyclinics களை ஆரம்பித்தன. பிரசவத்திற்கு முன்னரும் பின்னரும் தாய்மாரதும், சிசுக்களினதும் சுகநலன்களைக் கவனிப்பது இவற்றின் பிரதான நோக்கமாகவிருந்தது. எனினும், நடைமுறையில் இவை குடும்பத் திட்டமிடல் (அதாவது, கருத்தடைக்கான தேவை, அதற்கான வழிமுறைகள்), பொதுவான நோய்தடுப்பு முறைகளான தடுப்பூசி ஏற்றுதல், சுகாதாரக்கல்வி போன்றன தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கடமைகளையே ஆற்றின.
  2. தோட்டங்களில் நிலவும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையைத் தணிக்கும் வகையில் ஒவ்வொரு தோட்டத்திற்கும் சுகாதார நலன் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தோட்ட மருத்துவ உதவியாளரது கடமைகளுட் சிலவற்றை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

தோட்ட மக்களது சமூக நலனை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டுத் தாபனங்களின் பங்களிப்பும் இக்காலப்பகுதியில் நாடப்பட்டது. 1970 களில் வெளிநாட்டு உதவி தரும் தாபனங்களின் உதவியுடன் சுகாதாரம், வீடமைப்பு, குடிநீர் விநியோகம், கல்வி என்பவற்றை முன்னேற்றுவதற்குப் பல வேலைத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. நோர்வே, டச்சு அரசாங்கங்கள் நிதிப்படுத்திய சமூகநலன் திட்டங்கள், சுவிடிஸ் அபிவிருத்தி நிறுவனம் நிதிப்படுத்திய கல்வி அபிவிருத்தித் திட்டம், ஜெர்மனிய அரசாங்கத்தினால் நிதிப்படுத்தப்பட்ட கல்விக் கல்லூரி என்பன இவற்றுள் முக்கியமானவையாகும். (Manickam,p.1995) மேலே குறிப்பிட்டவற்றிற்குப் புறம்பாக, யுனிசெப் அமெரிக்க கெயார் நிறுவனம்  போன்ற சர்வதேச நிறுவனங்களினது உதவியுடன் வேறு பல திட்டங்களும்  அமுலாக்கபபட்டன. இவை மிகவும் விரிவானவையாக இருந்ததோடு, மக்களுக்கு நேரடியான நன்மையான நன்மைகளை அளிப்பனவாகவும் இருந்தன. மேற்படித்திட்டங்கள் அரசாங்கத் தாபனங்களினூடாகவும், தோட்ட முகாமையினூடாகவும் செயற்படுத்தப்பட்டன. இவற்றைச் செயற்படுத்துவதில் இரு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன. ஒன்று ஏற்கனவே இருந்த சுகாதார வசதிகளை மேம்படுத்தல் (உ  + ம் சுகாதார உத்தியோகத்தர்களைப் பயிற்றுவித்தல்) மற்றது, நேரடியாகவே மருத்துவ உதவிகளை மக்களுக்கு வழங்குதல். இவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களும் அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் கீழ் விளக்கப்பட்டுள்ளன.

  • யுனிசெப் திட்டங்கள் (1979 – 85) :  தோட்ட மருந்தகங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றை திருத்தியமைத்தல், குடிநீர் விநியோகம், மலசல கூடங்களை அமைத்தல், சுகாதாரக் கல்வி வழங்குதல் போன்றன இதன் பிரதான கூறுகளாகவிருந்தன. 1987 ஆம் ஆண்டளவில் 80 வீதமான தோட்டப்புறக் குழந்தைகளுக்கு இது தடுப்பூசி ஏற்றியது. குழந்தைப் பராமரிப்பு நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கைளும் இதில் அடங்கியிருந்தன.
  • சர்வதேச அபிவிருத்தித் தாபனம் (IDA) : இதனது உதவியுடன் அமுலாக்கப்பட்ட தேயிலை புனருத்தாபனம் தொடர்பான இரண்டாவது செயற்றிட்டம் மஸ்கெலியா பிரதேசத்தில் 13000 வீடுகளைக் கட்டவும், குடிநீர்வசதி, சுகாதார வசதி என்பவற்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டது.
  • ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஊபெக் தாபனம் : என்பவற்றின் உதவியுடன் அமுலாக்கப்பட்ட தேயிலை அபிவருத்தித் திட்டம் பதுளை மாவட்டத்தில் 3480 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியை மேற்கொண்டது.
  • தேசிய அபிவிருத்தி வங்கியினது நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை புனருத்தாரனத் திட்டத்தின் கீழ் 5900 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
  • அமெரிக்க நிறுவனமான “கெயார்” நிறுவனம் திரிபோசா (Triposha) திட்டத்திற்கு நேரடி உதவிவழங்கிற்று. பிரசவத்திற்கென தாய்மார்கள் பிரசவ வார்ட்டுக்களில் தங்கியிருக்கும் ஏழுநாட்களுக்கு முன்னரும் பின்னரும் மேற்படி சத்துணவு வழங்கப்பட்டது.
  • பல மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் தோட்டங்களுக்கென சில விசேட செயற்றிட்டங்களும் அமுலாக்கப்பட்டன. உதாரணமாக, நுவரெலியா மாவட்டத்திற்கான திட்டம் தோட்ட மருந்தகங்கள், பிரசவ வார்ட்டுக்கள் என்பவற்றைத் திருத்தியமைத்ததோடு தோட்ட மருத்துவ உதவியாளர், மருத்துவிச்சிகள் என்போரைப் பயிற்றுவிக்கவும் நிதி ஒதுக்கியது.
  • சனத்தொகை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் நிதியமும் சில வேலைத்திட்டங்களை அமுலாக்கிற்று.
triposha

மேற்படித் திட்டங்களினூடாக நன்மையடைந்தோர் அவற்றின் பலன்களை அனுபவித்தரென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனினும், பெருந்தோட்ட மக்களின் சமூகநலக் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு இவை போதுமானவையாக இருக்கவில்லை. பொதுநலன் சேவைகளை வழங்கும் அரசாங்க திணைக்களங்கள் முற்று முழுதாக இக்கடமைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றன. மாறாக, தோட்ட முகாமையாளர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு முதன்மையளித்து, சமூக நலன் சேவைகளுக்கு இரண்டாமிடத்தையே அளிக்கின்றனர். எனவே தான், பெருந்தோட்டங்களுக்கான நடுத்தரக்கால முதலீட்டுத்திட்டமானது (MTIP), பெருந்தோட்டத் துறையில் சமூகக் கட்டமைப்புக்களை மேம்படுத்தும் அண்மைக்கால முயற்சிகள் மெச்சத்தக்கனவையாக இருந்தபோதும், தோட்ட மக்களின் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவை நன்மையளித்ததெனக் கூறியது போலும். இச்சமூக நலன் நடவடிக்கைகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படாததுடன், அவை தொடர்பான அணுகுமுறையிலும், திட்டவமைப்பிலும் ஒருமைப்பாடு காணப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியது.

அண்மைக்கால தனியார்மயமாக்கலும் சமூக நலன் சேவைகளும்

பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்படும் வரை தோட்ட மக்களுக்கான சமூக நலன்சேவைகள் தோட்ட முகாமையாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தனவென்பதும், தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் இப்பொறுப்பு பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களினது சமூக அபிவிருத்திப்பிரிவுகளுக்கு மாற்றப்பட்டது  என்பதும் மேலே விளக்கப்பட்டது. தோட்டங்கள் மீளவும் தனியார் கைகளுக்கு மாற்றப்பட்ட பின்னர் மேற்படி சேவைகளை வழங்குவதற்கெனப் பெருந்தோட்ட வீடமைப்பு, நலன்புரி நிதியம் (Plantation housing and Social Welfare Trust – PHSWT) என்ற புதிய தாபனமொன்று உருவாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு கம்பெனிச்சட்டத்தின் கீழ் இலாப நோக்கமற்ற ஒரு தாபனமாக உருவாக்கப்பட்ட இது, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒன்றாகும். பெருந்தோட்டக் கம்பெனிகள், தொழிற்சங்கங்களினூடாகத் தொழிலாளர் உதவி வழங்கும் வெளிநாட்டு முகவர் தாபனங்கள், அரசாங்கத் தாபனங்கள் என்பன இதில் பிரதிநிதித்துவம் வகிக்கின்றன. அறுபது வீதமான தொழிலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபெரும் தொழிற்சங்கங்கள், தனியார் கம்பெனிகள் என்பவற்றின் பிரதிநிதிகளோடு சமூக நலவமைச்சு, வீடமைப்பு அமைச்சு, பெருந்தோட்ட தொழிலமைச்சு , நிதியமைச்சு என்பவற்றினது பிரதிநிதிகளையும் இது  கொண்டுள்ளது. எனவே அரசாங்கம், தோட்டக்கம்பெனிகள், தொழிற்சங்கங்கள் ஆகிய மூன்று பிரதான பிரிவினரும் கூட்டாக அமர்ந்து கலந்துரையாடுவதற்கு இது சிறந்த ஒரு மையமாக விளங்குகின்றது.

line houses

பெருந்தோட்டங்களுக்கான சமூக நலன் சேவைகளைத் திட்டமிடல், அவற்றை செயற்படுத்துதல் போன்ற கடமைகளைக் கொண்டுள்ள இது, தோட்ட மக்களுக்கு உட்கட்டமைப்புக்கு வசதிகளை உருவாக்குவதிலும் பல்வேறு சேவைகளை வழங்குதலிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் செயற்படும் இதற்கு தோட்டக் கம்பெனிகளும் தமது இலாபங்களில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை வழங்க வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடனான திட்டங்களுக்கு இது பொறுப்பாக உள்ளது. அத்துடன் படிப்படியாக செயற்படுத்துவதற்கு இது வேறு சில கடமைகளையும் ஆற்றத் தொடங்கியுள்ளது  தோட்டத் துறை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல், சுகாதார நலன்புரி உத்தியோகத்தர்களைப் பயிற்றுவித்தல் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். சமூக  நலன் வசதிகளை வழங்குவதில் இது ஒரு முக்கியமான மாற்றத்தினை ஏற்படுத்திற்று. இதுவரை காலமும் இவற்றை வழங்குவதில் இருந்துவந்த அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்களினது படிமுறையமைப்பினை இது மாற்றியமைத்தது. எனினும்  இந்தப் புதிய தாபன அமைப்பின் கீழ் சமூக நலன் சேவைகளை வழங்கும் பொறுப்பு யாருடையது என்பது தெளிவாக நிர்ணயிக்கப்படாதிருப்பதோடு, இன்றுவரையும் அரசாங்கம் இதற்குத் தீர்க்கமானதொரு விடையை அளிக்கத் தவறிவிட்டது. தோட்ட மக்களின் மனிதவள அபிவிருத்திக்கு தனியார்துறைக் கம்பெனிகளே  பொறுப்பாகவிருக்கும் தாபன அமைப்பொன்று  காலப்போக்கில் உருவாகுமென்ற  எதிர்பார்க்கை இதில் காணப்படுகின்றது. அதாவது, கல்வி, அடிப்படை சுகாதாரம் தொடர்பான சேவைகளை வழங்குவது அரசாங்கத்தினது பொறுப்பாகவிருக்கும். அதே வேளையில், சமூகத்திற்குத் தேவையான மருந்தகங்கள், பிரசவ வார்டுகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்ற ஏனைய வசதிகளை அமைத்துக்கொடுப்பதற்கு தோட்டக் கம்பனிகளே பொறுப்பு வகிக்கும் தாபன ஏற்பாடொன்று உருவாகுமென்பதே இவ்வெதிர்பார்ப்பாகும். கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைச் சேவைகளை வழங்குவதற்கான ஒரு இடைக்கால ஏற்பாடே இதுவென்றும், நீண்ட காலத்தில் அரசாங்கமே இவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும்  எதிர்பார்க்கலாம்.

நலன்புரி நிலையத்தின் இன்றைய செயற்பாடுகள்

நோர்வே, டச்சு அரசாங்கங்கள் கூட்டாக நிதிப்படுத்தும் சமூக நலன் செயற்றிட்டங்களை 1993 இன் பின்னர் இந்நிதியமே அமுல்படுத்துகின்றது. இவற்றுள் முதலாவது செயற்றிட்டம் , 1985 – 92 காலப்பகுதியில் பெருந்தோட்டங்களுக்கான நடுத்தரக்கால முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களினாலேயே அமுலாக்கப்பட்டது. குடிநீர் விநியோகம் , சுகாதார வசதிகள், பிரசவ வார்டுகள், மருந்தகங்கள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றில் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துவதன் மூலமோ, புதியவற்றை நிர்மாணித்தல் மூலமோ தோட்டத்தொழிலாளரின் சுகாதார, சமூக நலனை மேம்படுத்தல் இதன் நோக்கமாகும். அத்துடன், இச்சமூக நலன் திட்டத்தைத் திட்டமிடுவதற்கும் அமுலாக்குவதற்குமான உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்ப உதவிக்குழுவிற்குத் (Technical Assistance Team – TAT) தேவையான நிதிகளையும் அது ஒதுக்கிற்று. தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் இரண்டாவது சமூக நலச் செயற்றிட்டத்தை அமுலாக்கும் பொறுப்பை இந்நிதியம் ஏற்றது.

தோட்டத்துறையில் இன்று பல்வேறு அமைச்சரகளால் ஐந்து முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. அவையாவன :

  1. பெருந்தோட்ட அபிவிருத்தி ஆதாரத்திட்டம்.
  2. பெருந்தோட்ட மறுசீரமைப்புத்திட்டம்.       
  3. ஹற்றன் தொழில்நுட்ப பயிற்சி நிலையம்.
  4. தோட்ட வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம்.
  5. தோட்டப்  பாடசாலைகள் கல்வி அபிவிருத்தித் திட்டம்.

இவற்றுள் முதலாவது திட்டத்தை (WSP III ) அமுலாக்கும் பொறுப்பு இந்நிதியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது இரண்டாவது சமூக நலன் செயற்றிட்டத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இதனது நோக்கங்கள் முன்னைய திட்டத்தின் நோக்கங்களை ஒத்திருந்தபோதும் தோட்டத்துறையின் முழுமையான செயற்பாட்டினை மேம்படுத்துவதினூடாகவே மேற்படி நோக்கங்களை அது அடைய முயல்கின்றது. முன்னைய திட்டம் வறுமை ஒழிப்பிலேயே கூடிய கவனம் செலுத்திற்று. ஆனால், புதிய திட்டமானது தனியார் உடமையினூடாகத் தோட்டத்துறையினது நீண்டகால அபிவிருத்திக்கு முக்கியத்துவமளிக்கின்றது. இதன் பிரதான கூறுகள் பின்வருமாறு:

  • சமூக நலன் வசதிகளைத் திட்டமிடல், அபிவிருத்தி செய்தல், முகாமை செய்தல் போன்றவற்றிற்கு உதவுதல்.
  • தோட்டங்களில் வதியும் மக்கள் சுய உதவிகளினூடாக வீடுகளையும் மலசல கூடங்களையும் அமைத்துக் கொள்வதற்கு உதவுதல் .
  • முறைசாரக் கல்வி, பயிற்சி என்பவற்றினூடாக சுகாதாரம், சமூக சேவைகள் என்பவற்றின் தரத்தைப்பேணுவதோடு, அவற்றைத் திறமையான முறையில் ஒழுங்கு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • வீடுகளை நிர்மாணித்தல், அவற்றை வதிவோரின் பெயர்களுக்கு மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கான சுயாதீன வீடமைப்பு சங்கங்களை உருவாக்குவதற்கும் அவற்றின் செயற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கும் உதவுதல்.

பல்வேறு சமூக நலன் சேவைகளில் முதலீடு செய்வதனூடாகப் பெருந்தோட்ட  மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும் , இவற்றிற்கான முழுச்செலவையும் முன்னரைப்போன்று அரசாங்கம் தானே ஏற்க முடியாது என்பதை இப்பொழுது உணர்ந்துள்ளது. எனவே, தோட்டத்தொழிலாளரை வெறுமனே சமூக நலன் சேவைகளின் நன்மைகளை அனுபவிப்போராக மட்டுமே கருதாது தமது வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்குவிக்கவும் இது முயலுகின்றது. சமூகத்தின் தேவைகள் என்னவென்பதைத் தெளிவாக இனங்கண்டு, அவற்றை நிறைவேற்றிக்கொள்ள சமூகம் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் அதற்கு உதவி செய்யும் நோக்கம் இதில் காணப்படுகின்றது. மேலும், மனிதவள அபிவிருத்தியானது கம்பனி முகாமையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்பதையும் தொழிலாளரது பூரணமான ஒத்துழைப்புடனேயே அதனை அடைய முடியும் என்பதையும் அது ஏற்கின்றது. நிலைத்திருக்கக்கூடிய தன்மை கொண்ட சமூக அபிவிருத்தி, மனிதவள அபிவிருத்தி, என்பவற்றை முன்னெடுத்துச்செல்ல இது முனைகின்றது. வீடமைப்பு அபிவிருத்தி, சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு, தொழில்உறவுகளைச் சீராக்கல் என்பவற்றோடு, நலன்புரிநிதியத்தை வலுப்படுத்துவதும் அதன் பிரதான நோக்கங்களாகும். நிதியம் மேற்படி திட்டத்தை அமுலாக்கி வருகின்ற போதும், தனியார்மயமாக்கலின் பின்னர் சமூக நலன் சேவைகளை வழங்குதல், வீடமைப்பு முயற்சிகள் என்பவற்றில் ஓரளவு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், நலன்புரிநிதியத்தை அமைப்பதற்கும் அதனது நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்களின் கீழ் செயற்பட்டு வந்த சமூக அபிவிருத்திப் பிரிவுகள் சரியான முறையில் கலந்தாலோசிக்கப்படவில்லையென குறைகூறப்படுகின்றது. அத்துடன், இந்நிதியமானது தேவைக்குமதிகமாகவே மத்தியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், தோட்டங்களினின்றும் அது விலகி நிற்கின்றதென்றும் கூறப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர் தோட்ட எல்லைகளுக்குள்ளேயே கம்பனிகளுக்கு உரித்தான தொடர் லயன் அறைகளில் அல்லது வீடுகளில் குடியமர்த்தப்பட்டதாலும் தோட்டங்கள் மலைப்பாங்கான தொலைவிடங்களில் போக்குவரத்து வசதிகளற்று காணப்பட்டதாலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை சமூக நலன் வசதிகளை தோட்டங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆரம்பகாலங்களில் தோட்டக் கம்பெனிகளே இதற்குப் பொறுப்பாகவிருந்தன. தூரங்குறைந்த சேவைகளே வழங்கப்பட்டதால் அம்மக்களது வாழ்க்கை நிலைமைகள் மிக மோசமாகவிருந்தன. மந்தபோசனம், நோய்களுக்குட்படல், கல்வியறிவின்மை உயர்ந்த இறப்பு விகிதங்கள் என்பன இவர்களது வாழ்க்கையின் முக்கிய பண்புகளாகவிருந்தன. காலப்போக்கில் தோட்ட மக்களுக்கான சமூக நலன் சேவைகள் தொடர்பாக பல சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதும் இவர்களது வாழ்க்கை நிலையில் குறிப்பிடக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

தோட்டங்கள், தேசியமயமாக்கப்பட்ட பின்னர் இம்மக்களது சமூக நலன் அரசாங்கத்தின் பொறுப்பாக மாறியது. எனவே, இது தொடர்பான பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கம் மட்டுமன்றி, மனித நேயங்கொண்ட பல வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் ஈடுபட்டன. இதன் காரணமாக இம்மக்களது வாழ்க்கைநிலை ஓரளவு உயர்ந்தமையை இது தொடர்பான சமூக நலன் குறிகாட்டிகள் பிரதிபலித்தன. தோட்டங்கள் மீண்டும் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் தோட்டமக்களது சமூக நலனைக் கவனிக்கவெனத் தாபிக்கப்பட்ட பெருந்தோட்ட சமூக நலன்புரி நிதியமானது வெளிநாட்டு உதவியுடன் பலதிட்டங்களை அமுலாக்கி வருகின்றது. அரசாங்கமும் தோட்டக் கம்பெனிகளும் இதற்கு நிதி வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இம்மக்களுக்குத் தேவையான சமூகநலன் சேவைகளை வழங்குவதற்கான இறுதிப்பொறுப்பு யாருடையது என்பது திட்டவட்டமாக நிர்ணயிக்கப்படாது உள்ளது. மேலும் வெளிநாட்டு நிதியுதவிகளை நம்பியிருக்கும் ஒரு நிலையும் அங்கு காணப்படுகின்றது.

தோட்டங்களுக்குரித்தான லயன் தொடர் அறைகளில் அல்லது வீடுகளில் குடியிருப்பதனாலேயே சமூக நலன் வசதிகளை ஏற்படுத்துவதில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இவ்வீடுகள் குடியிருப்போருக்கே உரிமையாக்கப்பட்டு, தோட்டக் குடியிருப்புகளும் கிராமக் குடியிருப்புகளாக மாறுமாயின், நாட்டின் ஏனைய துறைகள் போன்று இங்கும் சமூகநலன் வசதிகளை வழங்குவது சாத்தியமாகும். அத்துடன், இம்மக்களையும் இலகுவாகத் தேசிய நீரோட்டத்திற்குள் இணைக்கக்கூடியதாகவிருக்கும். தோட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த சமூகநலன் வசதிகளை ஏற்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான வழியுமாகும்.

உசாத்துணை

  1. Hollup, Oddvar,1994. Bonded Labour: Caste and Cultural Identity among Tamil Plantation Workers in Sri Lanka, Charles, Subasinghe & Sons, Sri Lanka.
  2. ISA Workshop: Plantation Sector of Sri Lanka, u;ague, Netherlands, July 1997.
  3. Janatha Estates Development Board, 1986, Social Development Division. Workplan 1986- MTIP Social Welfare Programme.
  4. Manickam, P.1995, Tea Plantation in Crisis: An Overview, Social Scientists Association, Colombo.
  5. Wesumperuma, D.1986. Indian Immigrant Plantation workers in Sri Lanka: A historical Perspective 1880 – 1910, Vidyalankara Press, Kelaniya.  


ஒலிவடிவில் கேட்க

11076 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)