Arts
11 நிமிட வாசிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனங்கள் – ஒரு கூர்மையான ஆய்வு

June 20, 2023 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

பெருந்தோட்டத்துறையில் வேதனப் பொறிமுறைகள்

உலகில் செயற்பட்டுவரும் ஏறக்குறைய அனைத்து விவசாயக்கம்பனிகளுமே தமது ஊழியருக்கு நாளாந்த வேதனங்களைச் செலுத்தும் ஒரு முறையையே பின்பற்றிவருகின்றன. பெருந்தோட்ட விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இதற்கு விதிவிலக்கன்று. இந்தக்கம்பனிகள் எங்கெங்கு உருவாக்கப்பட்டனவோ அங்கெல்லாம் ஊழியருக்கு அவை நாளாந்த வேதனங்களையே செலுத்திவருவதோடு மலிவான ஊழியம் அவற்றின் ஒரு விசேட பண்பாக இருந்து வருகின்றது. அதாவது, தொழிலாளருக்குச் செலுத்தப்படும் வேதனங்கள் குறைந்தமட்டத்திலேயே பராமரிக்கப்பட்டதோடு, நெடுங்காலத்திற்கு அவை தேக்கநிலையிலும் வைக்கப்பட்டன. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும் இதே நிலையே காணப்பட்டது. 1980 ஆம் ஆண்டு  வரையிலும் வேதனங்கள் ஏனைய துறைகளில் அதேதரமான அந்தஸ்தினைக் கொண்ட தொழிலாளருக்கு செலுத்தப்பட்ட வேதனங்களிலும் பார்க்கக் குறைவாகவே இருந்தன. வேதனங்கள் இவ்வாறு குறைந்தமட்டத்திலும் நீண்ட காலத்தேக்க நிலையிலும் காணப்பட்டபோதும், பெருந்தோட்ட வேதனங்களும் தொழில்நிலைமைகளும் பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்டவையாக இருந்துவந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு இரண்டு காரணங்களைக்  கூறலாம்.

estate workers (2)

ஒன்று, பெருந்தோட்டங்கள் பெருமளவிலான தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் பேரளவு விவசாய முயற்சிகளாக இருந்தமை. மற்றது, பெருந்தோட்டங்களின் ஊழியச்சந்தைகள், தொழிலாளர் வேலைசெய்யும் இடங்கள், ஊழியப்படைகள் என்பன பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்டனவாக இருந்தமை. இதன் காரணமாக அந்தத்துறையின் வேதனங்கள், தொழில் நிலைமைகள், தொழில் நிபந்தனைகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக காலத்திற்குக்காலம் இலங்கையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. தோட்டத்துறைக்கு மட்டுமே செல்லுபடியானவையாக இருந்த இந்தச்சட்டங்கள் தோட்டத்தொழிலாளர்களின் வேலைநிலைமைகள், அவர்களது வாழ்க்கைநிலைமைகள் என்பன தொடர்பில் தொழில்வழங்குநரின் பொறுப்புக்களை வரையறைசெய்வனவாக இருந்தன. இந்தச்சட்டங்களுள் முக்கியமானவை கீழே தரப்பட்டுள்ளன:

  1. 1865 ஆம் ஆண்டு 11ஆம் இலக்க சேவைகள் ஒப்பந்தச்சட்டம்
  2. 1872 ஆம் ஆண்டு 14ஆம் இலக்கச் சட்டம். தொழிலாளரது சுகநலனுக்கு தொழில்வழங்குநரே பொறுப்பு என இந்தச்சட்டம் விதித்தது
  3. 1880 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மருத்துவத்தேவைகள் சட்டம்
  4. 1889 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க (இந்திய) தோட்டத்தொழிலாளர் சட்டம்
  5. 1912 ஆம் ஆண்டு 9 ஆம், 10 ஆம் இலக்க மருத்துவ உதவிச்சட்டம்
  6. 1914 ஆம் ஆண்டு பிரசவநலன் பேணல்சட்டம்
  7. 1920 ஆம் ஆண்டு கல்விச்சட்டம்
  8. 1923 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க இந்தியத்தொழிலாளர் சட்டம்
  9. 1927 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க இந்தியத்தொழிலாளர் இழிவு வேதனச்சட்டம்
  10. 1931 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க தோட்டக்குடியிருப்புக்கள் (விசேடசரத்துக்கள்) சட்டம்
  11. 1939 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க குழந்தைப்பேற்று நலன்கள் சட்டம்

1945 ஆம் ஆண்டிற்குப் பின்னருங்கூட இவ்வித சட்டங்கள் சில இயற்றப்பட்டன. அவை கீழே தரப்பட்டுள்ளன:

  1. தோட்டங்களுக்குள் தொழிற்சங்கப்பிரதிநிதிகளின் பிரவேசம் தொடர்பான 1970 ஆம் ஆண்டு 625 ஆம் இலக்கச்சட்டம்
  2. 1971 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க தோட்டக்குடியிருப்புக்கள் (விசேட) சட்டம்
  3. 1981 ஆம் ஆண்டு 72 ஆம் இலக்க தோட்டத்தொழிலாளருக்கான சம்பளப்படிகள் தொடர்பான சட்டம்

1940 ஆம்  ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இவ்வாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் பல இன்றும் எமது சட்டநூல்களில் இடம் பிடித்துள்ளன. ஆனாலுங்கூட, தோட்டத்தொழிலாளருக்கு நன்மைபயப்பதற்கென உருவாக்கப்பட்ட இந்தச்சட்டங்கள் அண்மைக்காலம்வரை அந்நியராகவும் வந்தேறுகுடிகளாகவும் கருதப்பட்டுவந்த தோட்டத்தொழிலாளருக்கு ஆகக்குறைந்த சேவைகளையேனும் வழங்கவேண்டிய பொறுப்பினின்றும் அரசாங்கத்திற்கு விலக்கு அளித்தன என்பதை இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. அரசாங்க சேவைகளினூடாகத் தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்கத்திடமிருந்து ஆகக்குறைந்த நன்மைகளையாவது பெற்றுக்கொள்வதற்கு இந்தச்சட்டங்கள் தடையாகவிருந்தன என்று கூறின் அது மிகையாகாது. எழுபதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தோட்டங்கள் தேசியமயமாக்கப்படும் வரை அவை தனியார் கம்பெனிகளுக்கே உரித்தானவையாக இருந்தநிலையில் 1941 ஆம் ஆண்டு வேதனங்கள் சட்டத்தின்கீழ் வேதனசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த வேதனசபைகளில் அரசாங்கம், தொழில்வழங்குநர், தொழிற்சங்கங்கள் ஆகிய மூன்று பிரிவினர் பிரதிநிதித்துவம் வகித்தனர். இச்சபையானது இழிவுவேதனங்கள், வேலைநேரம், விடுமுறைதினங்கள் என்பவற்றையும், தொழில் தொடர்பான ஏனைய நிபந்தனைகளையும் நிர்ணயிக்கும் கடமைகளைக் கொண்டிருந்தது. தொழில்வழங்குநரும் தொழிற்சங்கங்களும் இதில் சமஅளவு எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்டிருந்த அதேவேளையில் அரசாங்கம் தனது சார்பாக ஒற்றை எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை நியமித்தது.

workers_protest

1970 ஆம் ஆண்டுகளில் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபின்னர் வேதனங்களை நிர்ணயிப்பதில் வேதனசபைமுறை செயலிழந்தது. தோட்டங்கள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர் வேதனசபையில் இருந்த அரசபிரதிநிதிகள் அங்கு பெருமளவிற்கு தொழிற்சங்கப்பிரிதிநிதிகளை ஆதரித்தே வாக்களித்து வந்தனர். அதாவது, வேதனசபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாகவே அவர்கள் வாக்களித்தனர். ஆனால் தேசியமயமாக்கத்திற்குப் பின்னர் தோட்டங்கள் அரச உடைமையாக்கப்பட்ட நிலையில் தொழில் வழங்குநரும் அரசபிரதிநிதிகளும் ஒரேவித நலனையே பிரதிநிதித்துவப்படுத்தினர். அதாவது, தோட்டங்கள் அரசஉடைமைகள் என்றவகையில் அரசபிரதிநிதிகள், தொழில்வழங்குநரின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்தியதால், வேதனசபையானது மூன்றுசாராரைக் கொண்ட ஒருதாபனம் என்ற விதியினைப் பின்பற்றமுடியாதநிலை ஏற்பட்டது. தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை வேதனசபையில் தொழில்வழங்குநரையும் அரசபிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தொழிலாளரின் நலன்களுக்கு எதிரான பலம்பொருந்திய ஒரு சக்தியை உருவாக்கிற்று. அத்துடன், இக்காலப்பகுதியில் வேதனங்களை நிர்ணயிப்பதில் மத்தியமந்திரிசபையில் முக்கியமானபதவிகளை வகித்த பலம்வாய்ந்த தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதான பங்குவகிக்கத் தொடங்கினர். அதேபோன்று, தொண்ணூறாம் ஆண்டுகளின் பிற்பகுதிமுதல் கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே காலத்திற்குக்காலம் கைச்சாத்திடப்பட்டுவந்த கூட்டுஒப்பந்தங்கள் வேதனங்களை நிர்ணயிப்பதற்கான பிரதானவழியாக மாறின.

வேதனங்களின் கட்டமைப்பு

இரண்டாவது உலக யுத்த காலம் வரையிலும் தோட்டத்தொழிலாளரது வேதனங்கள் ’அடிப்படை வேதனம்’ என்ற ஒரேயொரு கூறினைமட்டுமே கொண்டதாக இருந்தன. யுத்தகாலத்தில் நுகர்வுபொருட்களின் விலைகள் முன்னொருபோதும் இல்லாதவகையில் உயர்ந்தமையால் வாழ்க்கைச்செலவு சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியது, இதினின்று தொழிலாளருக்கு நிவாரணம் அளிப்பதற்காக வாழ்க்கைச்செலவுப்படி ஒன்றினைச் செலுத்தும் நோக்கில் வேதனக்குறியீட்டுமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன்கீழ், வாழ்க்கைச்செலவில் ஏற்படும் அதிகரிப்பை ஈடுசெய்வதற்காக அடிப்படை வேதனத்துடன், வாழ்க்கைச் செலவுப்படி ஒன்றும் இணைத்துக் கொள்ளப்பட்டது. வாழ்க்கைச் செலவுச்சுட்டியின் ஆரம்ப ஆண்டான 1938ஆம் ஆண்டுமுதல் தோட்டத்தொழிலாளரின் வாழ்க்கைச் செலவுச்சுட்டியில் ஏற்படும் ஒவ்வொரு 1.8 புள்ளி அதிகரிப்பிற்கும் வாழ்க்கைச் செலவுப்படியாக நாளாந்த வேதனத்தில் 3.0 சதங்களை சேர்த்துக் கொள்வதற்கு முடிவுசெய்யப்பட்டது. 1951ஆம் ஆண்டு வாழ்க்கைச்செலவைக் கணிப்பதற்கு கொழும்புநுகர்வோர் விலைச்சுட்டெண் கையாளப்படத் தொடங்கியபோது அந்தச்சுட்டெண்ணில் ஏற்படும் அதிகரிப்பிற்கேற்ப வாழ்க்கைச் செலவுப்படியானது பழைய அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவுப்படியானது தேசியபாதீட்டினூடாக ஒருபுள்ளி அதிகரிப்பிற்கு ரூபா 2.0 ஆகஉயர்த்தப்பட்டபோது, பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் வாழ்க்கைச்செலவுக் குறியீட்டில் ஏற்படும் ஒவ்வொரு புள்ளி அதிகரிப்பிற்கும் வாழ்க்கைச் செலவுப்படியாக தமக்கு 11.0 சதங்கள் செலுத்தப்படவேண்டும் என்ற பிரேரணையை வேதனசபையில் கொண்டுவந்தன. இது பற்றிப் பலதடவைகள் கூடி ஆராய்ந்ததன் பின்னர் ஒவ்வொரு புள்ளிஅதிகரிப்பிற்கும் 6.0 சதங்களை செலுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஆனால் அந்தத்தீர்மானத்தை நடைமுறைபடுத்துவதற்கு வேதனசபை மீண்டும் கூட்டப்படாததால் அது நடைமுறைபடுத்தப்படவில்லை. மாறாக, வாழ்க்கைச் செலவுப்படியானது 1.8 புள்ளி அதிகரிப்பதற்கு 3.0 சதங்களாக பழைய அடிப்படையிலேயே செலுத்தப்பட்டுவந்தது.

தோட்டத் தொழிலாளரின் 1984 ஆம் ஆண்டு 10 நாள் வேலைநிறுத்தத்தின் பின்னர் அதனை 4.0 சதமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் ஏனைய துறைகளைச் சார்ந்த தொழிலாளருக்கு அறிமுகம் செய்யப்பட்ட மதிப்பிறக்கப்படியினை தோட்டத் தொழிலாளருக்கும் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வாழ்க்கைச் செலவுப்படியை செலுத்துவதை முற்றாகவே கைவிடுவதற்கு வேதனசபையில் ஒருதீர்மானத்தைக் கொண்டுவருவதில் வெற்றியடைந்த கம்பெனிகள் அதனைச் செலுத்துவதை முற்றாகவே கைவிட்டன. எனினும், 1988 ஆம் ஆண்டில் அது மீண்டும் நடைமுறைக்கு வந்தபோதும், தோட்டங்களின் தேசியமயமாக்கல் காரணமாக 1993 க்கும் 1996 க்குமிடையே தோட்டத் தொழிலாளருக்கு எவ்வித வாழ்க்கைச்செலவுப்படியும் செலுத்தப்படவில்லை. பெருந்தோட்டங்கள் மீண்டும் தனியார்மயப்படுத்தப்பட்டபோது தோட்டத்தொழிலாளரின் வேதனங்கள் வேதனசபைத் தீர்மானங்களுக்கு உட்பட்டனவாக மாறியதால் பெருந்தோட்டக் கம்பெனிகள் தமது தொழிலாளருக்கு வாழ்க்கைச் செலவுப்படியைச் செலுத்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின.  ஏனைய துறைகளைச் சார்ந்த தொழிலாளரைப் போன்று  தோட்டத் தொழிலாளருக்கும் மதிப்பிறக்கப்படியை செலுத்துவது தொடர்பாக தோட்டத்தொழிற்சங்கங்களுடன் ஏற்பட்ட கருத்துமுரண்பாடு காரணமாக 1996 ஆம் ஆண்டு ஜூன்மாத வேதனச்சபைக் கூட்டத்தில் வாழ்க்கைச் செலவுப்படியை செலுத்துவதனின்று தோட்டக்கம்பெனிகள் தம்மை முற்றாகவே விடுவித்துக்கொண்டன.

தோட்டத்தொழிலாளருக்கு அதுவரைகாலமும் செலுத்தப்பட்டுவந்த வாழ்க்கைச் செலவுப்படியானது வாழ்க்கைச்செலவில் ஏற்பட்டுவந்த அதிகரிப்பிலிருந்து அவர்களுக்கு பூரணமான பாதுகாப்பினை அளிக்கத்தவறியபோதும், அவர்களுக்கு அது ஓரளவு நட்டஈட்டையாவது அளித்துவந்தது. இந்தப்படியைச் செலுத்துவது முற்றாகவே கைவிடப்பட்டபின்னர் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான எவ்விதஏற்பாடுகளும் இல்லாதொரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். மேலும், வாழ்க்கைச்செலவுப்படி தொடர்ந்தும் அவர்களுக்கு செலுத்தப்பட்டிருக்குமாயின், அவர்களது நாளாந்த வேதனம் இக்காலப்பகுதியில் அவர்களுக்கு செலுத்தப்பட்ட ரூபா 121.00க்கு மாறாக ரூபா 186.66 ஆக உயர்ந்திருக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Tpiy – பங்கு ஆதாரப்படி என அழைக்கப்பட்ட விலை – வேதன ஆதாரப்படி என்ற மூன்றாவது படியொன்றும் 1995 இல் தொழிலாளரது அடிப்படைவேதனத்துடன் இணைக்கப்பட்டது. தேயிலையின் விலையானது பூகோளமட்டத்தில் அதற்கான கேள்விநிரம்பலில் தங்கியிருக்கும் ஒன்றாகும். பூகோளமட்டத்தில் தேயிலையின் கேள்வி – நிரம்பல் என்பவற்றில் ஏற்படும் தளம்பல்களைக் கவனத்திற்கொண்டு இந்தப்புதியபடி அறிமுகம் செய்யப்பட்டது. உலகசந்தையில் தேயிலையின் விலையில் காணப்படும் உறுதியற்றதன்மை காரணமாக வேதனங்களை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேலாக உயர்த்தமுடியாது இருந்தமையினாலேயே விலை – வேதனஆதாரப்படியை செலுத்துவதன் மூலம் வேதனங்களை கொழும்பு ஏலவிற்பனை விலைகளோடு (தேறிய ஏலவிற்பனைச் சராசரி விலையோடு) பிணைக்கவேண்டிய தேவை இருந்ததாகக் கூறப்பட்டது. வேதனங்களானவை தேயிலையினது சந்தைவிலையில் தங்கியிருக்கும் என்பதை வெளிப்படையாகவே ஏற்கும் ஒன்றாக இது இருந்தது.

1980 ஆம் ஆண்டுகளில்  பணவீக்கம் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தபோது வாழ்க்கைச்செலவில் ஏற்பட்ட அதிகரிப்பினை ஈடுசெய்வதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு படிகள் அறிமுகம் செய்யப்பட்டன. தோட்டத்தொழிலாளர் உட்பட அனைத்து வேதனசபை ஊழியருக்குமே இவை விஸ்தரிக்கப்பட்டன. தோட்டத்தொழிலாளருக்கு நாளாந்த வேதனங்களின் அடிப்படையிலேயே அவை செலுத்தப்பட்டன. எனவே, நாட்டின் ஏனையதுறைத் தொழிலாளருக்குச் செலுத்தப்பட்ட தொகையிலும் பார்க்க அவை குறைவானவையாகவே இருந்தன.

தோட்டத்தொழிலாளரது ஊதியமுறையில் வேறுபல ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டமை அவர்களது வேதனங்களைப் பொறுத்தவரை இன்னுமொரு புதிய கண்டுபிடிப்பாகும். தொழிலாளி நாளொன்றிற்குப் பறிக்கவேண்டிய நியமஅளவு தேயிலைத் தளிரிலும் பார்க்க மேலதிகமாகப்பறிக்கும் தளிருக்கான கொடுப்பனவு (Over-Poundage Rate) இதில் ஒன்றாகும். இதன்கீழ் ஒருநாள் வேதனத்திற்குத் தொழிலாளி பறிக்கவேண்டிய இழிவுமட்டத் தளிரின் அளவிலும் பார்க்கக் கூடுதலான அளவு தளிரைப்பறிப்போருக்கு ஒவ்வொரு மேலதிக கிலோ தளிருக்கும் ஒரு குறிப்பிட்டதொகை செலுத்தப்பட்டது. ஒரு வேலைநாளில் பறிக்கவேண்டிய நியமமான தளிரின் அளவானது பருவகாலம், காலநிலைத்தன்மைகள், தேயிலை மலையின் உயரம், முகாமையாளரின் கொள்கைகள் என்பவற்றினால் நிர்ணயிக்கப்படும். பெண்கள் மட்டுமே தேயிலைத் தளிரைப் பறிப்பதில் ஈடுபடுவதால் மேற்படிக்கொடுப்பனவு அவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும். ஒருநாளில் பறிக்கவேண்டிய இழிவுமட்டத் தளிரிலும் பார்க்கக் கூடுதலாய்ப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் இத்தொகை செலுத்தப்பட்டது.

நாளாந்த மொத்த வேதனம்

1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற பெருந்தோட்டங்களின் மீள் தனியார்மயமாக்கத்திற்குப் பின்னர் நாளாந்த வேதனம் ரூபா 95.00 ஆகவும், ஊக்குவிப்புக் கொடுப்பனவு ரூபா 6.00 ஆகவும் மொத்தவேதனம் ரூபா 101.00 ஆகவும் இருந்தது. 2000 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டுஒப்பந்தத்தின் கீழ் விலை – பங்குஆதாரப்படியாக ரூபா 6.00 உம் சேர்க்கப்பட்டு மொத்த நாளாந்த வேதனம் ரூபா 107.00 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக வேலை வழங்கப்படும் நாட்களில் 90.0 வீதத்திற்கும் மேலான நாட்களில் வேலைக்கு சமுகமளிப்போருக்கு ரூபா 14.00 இணைக்கப்பட்டு நாளாந்த வேதனம் ரூபா 121.00 ஆக உயர்த்தப்பட்டது. அதேவேளையில் 90.0 வீதத்திற்கும் குறைவான நாட்களில் வேலைக்கு சமுகமளிப்போருக்கு ரூபா 8.00 மட்டுமேசெலுத்தப்பட்டது. மேற்படி கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் அது நடைமுறையிலிருக்கும் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு எவ்வித வேதன அதிகரிப்பையும் கோருவதில்லையென தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்தன.

2004 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புதிய கூட்டுஒப்பந்தத்தின் கீழ் (இல.42) நாளாந்த வேதனம் ரூபா 180.00 ஆக உயர்த்தப்பட்டது. இது பின்வரும் கூறுகளைக் கொண்டிருந்தது:

  1. ஊழியர் சேமலாபநிதியம் ஊழியர் நம்பிக்கைநிதியம் என்பவற்றிற்கான கொடுப்பனவுகளுடன் கூடிய நாளாந்த வேதனம்
  2. விலை – பங்கு ஆதாரப்படி நாளொன்றிற்கு ரூபா 20.00
  3. வேலை வழங்கப்படும் நாட்களில் 90.0 வீதத்திற்கும் மேலான நாட்களில் வேலைக்கு சமுகமளிப்போருக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு ரூபா 25.00 உம் அதற்குக் குறைந்த நாட்களில்   வேலைக்கு சமுகமளிப்போருக்கு அதிலும் குறைந்தளவு கொடுப்பனவும் வழங்கப்பட்டன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5148 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)