Arts
10 நிமிட வாசிப்பு

ஒல்லாந்தர் கால நல்லூர்-2

February 11, 2021 | Ezhuna

யாழ் நகரம் அதன் வரலாற்றுக் காலத்தில், அதன் நிர்வாக எல்லைகளுக்கும் அப்பால் பரந்துள்ள பிரதேசங்கள் தொடர்பிலும் பல்வேறு பொருளாதார, அரசியல், நிர்வாக, பண்பாட்டு வகிபாகங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண நகர வரலாறு, அதன் மரபுரிமை சார் அம்சங்கள், ஐரோப்பியர் ஆட்சியில் யாழ். நகரின் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் திரட்டுகள் என்பனவற்றை உரிய ஆதாரங்களோடு ‘யாழ்ப்பாண நகரம் 400’ என்ற இத்தொடர் முன்வைக்கின்றது. 400 ஆண்டுகால யாழ்ப்பாணத்தின் வரலாறு, பண்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சார்ந்த கட்டுரைகளை இத்தொடர் கொண்டமைந்துள்ளது.

இத்தொடரில் கடந்த கிழமை வெளியான கட்டுரையில் நல்லூரில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் தொடர்பான சில தகவல்களையும், அக்காலத்துக்குரிய சில கட்டிடங்களின் எச்சங்கள் பற்றிய விபரங்களையும் பார்த்தோம். இன்றைய கட்டுரை ஒல்லாந்தர் கால நல்லூர் குறித்த மேலும் சில விபரங்களைத் தருகின்றது.

நல்லூரில் உள்ள மந்திரிமனை என அழைக்கப்படும் கட்டடம், தமிழரசர் காலத்து மந்திரி ஒருவரின் மாளிகையின் எச்சம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவியபோதும், இது ஒரு ஒல்லாந்தர் காலக் கட்டடத்தின் எச்சம் என்ற கருத்தையே இன்றைய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்தக் கட்டடம்  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. இக்கட்டடத்தின் பிரதான பகுதி ஒல்லாந்தர் காலத்துக்கு உரியதாக இருக்கலாம். எனினும், காலத்துக்குக் காலம் இதில் திருத்த வேலைகள் இடம்பெற்றுள்ளன. இங்குள்ள மரத் தூண்கள் சிலவற்றிலும், வேறிடங்களிலும் திராவிடப் பாணிப் போதிகைகள் காணப்படுகின்றன. பிற்காலத் திருத்த வேலைகளின்போது பழைய கட்டடங்களில் இருந்து எடுக்கப்பட்ட கூறுகளை இக்கட்டடத்தில் பயன்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இக்கட்டடத்தில் திருத்த வேலைகளோ, விரிவாக்கமோ இடம்பெற்றுள்ளன.

மந்திரிமனையின் வெளிப்புறத் தோற்றம்

இக்கட்டடத்தின் முன் பகுதியில் இருக்கும் வாயில் அமைப்பு இப்போதிருக்கும் நிலையில் பிற்காலத்தைச் சேர்ந்தது. இதில் உள்ள கல்வெட்டொன்றிலிருந்து, திரி ஓலக்க வாயில் என அழைக்கப்பட்ட இந்த அமைப்பு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது எனத் தெரிகின்றது. இந்த வாயில் அமைப்பு அந்தக் காலத்தில் கட்டப்பட்ட பிற கட்டட அமைப்புக்களை ஒத்ததாகக் காணப்படவில்லை. ஒருவேளை இதேயிடத்தில் முன்னர் இருந்து பழுதடைந்த ஒரு கட்டிட அமைப்பின் பாணியை ஒத்ததாகப் புதிதாகக் கட்டப்பட்டிருக்கலாம்.

இந்தத் திரி ஓலக்கவாயில் கட்டடத்துக்குப் பின்னால் அமைந்துள்ள பகுதி பிரித்தானியர் காலத்திலும் அதற்குப் பின்னரும் வீடாகப் பயன்பட்டுள்ளது. பிரதான வாயிலுக்கு நேரெதிரே பெரிய கூடத்துக்கு மேற்கில் காணப்படும் அறைகள் பிற்காலத்தனவாகவே தோன்றுகின்றன. இக்கட்டடத்தை வீடாகப் பயன்படுத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். தொடக்கத்தில் இக்கட்டடம் என்ன பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டது என்பது தெளிவில்லை. இன்று எஞ்சியுள்ள கட்டடப் பகுதியில் தொடக்கத்தில் ஒரு குடும்பம் வாழ்வதற்குப் போதுமான அறைகள் இருந்ததாகத் தெரியவில்லை. இன்று எஞ்சியிருக்கும் இப்பகுதி முன்னர் பெரிதாக இருந்த ஒரு வீட்டின் பகுதியாக இருக்கலாம். அல்லது உயர் பதவியில் இருந்த அதிகாரி ஒருவர் மக்களைச் சந்திக்கும் மண்டபமாக இது இருந்திருக்கலாம். இது ஒல்லாந்தர் காலத் திசாவை ஒருவரின் அலுவலகமாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

மந்திரிமனை – நுழைவாயிலை நோக்கிய தோற்றம்

நல்லூரில் காணப்படும் இன்னொரு முக்கியமான விடயம் யமுனாரி என அழைக்கப்படும் கேணியாகும். யாழ்ப்பாண வைபவமாலையிலும், பிற்கால ஆய்வாளர் பலரது நூல்களிலும் இக்கேணி யாழ்ப்பாண மன்னர் காலத்தைச் சேர்ந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாய்ப்புக்கள் உள்ளன எனினும், இதைத் தெளிவாக நிறுவுவதற்கான சான்றுகள் போதிய அளவு இல்லை. இந்தக் கேணி அரச குடும்பத்தினர் குளிப்பதற்காகக் கட்டப்பட்டது என்றும், பழைய நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தீர்த்தக் கேணியாகப் பயன்பட்டது என்றும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், ஒல்லாந்தர் காலத்திலும் இதைத் திருத்தி வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதன் உற்பத்தி பற்றிக் கூறும் வைபவமாலை “பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி” என்கிறது. யமுனாரியின் மூன்று பக்கங்களால் சூழப்பட்ட நடுப் பகுதியில் ஒல்லாந்தர் காலத்தில் மண்டபம் ஒன்று இருந்தது. அது ஸ்நான மண்டபம் அல்ல. ஆனால், தமிழரசர் காலத்தில் இங்கே ஸ்நான மண்டபம் ஒன்று இருந்தது குறித்துத் தெரியவில்லை. மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை எழுதியது ஒல்லாந்தர் காலத்தின் இறுதிப் பகுதியிலாகும். அக்காலத்தில் அழிபாடுகளாக இருந்த இந்தக் கேணியையும், மண்டபத்தையும் நூலாசிரியர் தமிழரசர் காலத்தது என எண்ணியிருக்கவும் வாய்ப்பு உண்டு.

யமுனா ஏரி என்று அழைக்கப்படும் கேணி

இன்று முத்திரைச் சந்தைப் பகுதியில் உள்ள பரி. யாக்கோபு தேவாலயம் இருக்கும் இடத்தில் முன்னர் ஒல்லாந்தரின் தேவாலயம் இருநதுள்ளது. நல்லூரில் இருந்த கிறித்தவத் தேவாலயம் ஓலைக் கூரையுடன் கூடிய மண்ணாலான கட்டடமாக இருந்ததாகப் பல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். பல்தேயஸ் பாதிரியார் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் தொடக்கப் பகுதி. அக்காலத்திலேயே நல்லூர்த் தேவாலயம் நிரந்தரமற்ற கட்டிடப் பொருட்களால் ஆனதாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஒல்லாந்தர் இத்தேவாலயத்தை ஓடு வேய்ந்த கற்கட்டடமாகக் கட்டியிருப்பர் என்பதில் ஐயமில்லை. பிரித்தானியர் காலத் தொடக்க ஆண்டுகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த இக்கட்டிடத்தையே, 1818 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வந்த சேர்ச் மிசன் சபையினர் பொறுப்பெடுத்துத் திருத்தி, அங்கே தமது தலைமையகத்தையும், பாடசாலையையும் அமைத்தனர் என ஊகிக்கலாம். பிற்காலத்திலே பழைய ஒல்லாந்தத் தேவாலயம் இன்றைய தோற்றத்தில் திருத்தப்பட்டது. தற்காலத்தில் இந்தத் தேவாலயத்துக்குக் கிழக்கே அக்கட்டிடத்தை அண்டிக் காணப்படும் பழைய அத்திவாரங்கள் ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.

ஒல்லாந்தர் காலத்தில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒல்லாந்தக் குடியேறிகளுக்கு, நல்லூர் ஒரு சுற்றுலாத் தலமாகவும், குழுவாக வந்து பொழுதுபோக்கிச் செல்லும் இடமாகவும் இருந்ததாகவும் ஹாஃப்னர் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயன்பாட்டுக்காக நல்லூரில் சிறப்பு வசதிகள் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவற்றைக் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், அதன் தலைநகரமாக இருந்த நல்லூரின் வரலாறு குறித்துப் போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை. இது தொடர்பான பல தகவல்கள் ஊகங்களாகவே காணப்படுகின்றன. முறையான அகழ்வாய்வுகள் புதிய தகவல்களைத் தரக்கூடும் ஆனால், இதற்கான வாய்ப்புக்கள் குறைந்து வருகின்றன. உலகின் பல்வேறு ஆவணக் காப்பகங்களில் உள்ள போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆவணங்களைக் கவனமாக ஆய்வு செய்வதன் மூலமும் நல்லூரின் குடியேற்றவாதக் கால வரலாறு தொடர்பான பயனுள்ள தகவல்கள் கிடைக்கக்கூடும். இவ்வாறான ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக போர்த்துக்கேய, டச்சு மொழிப் பயிற்சியுடன், தேவையான பிற பயிற்சிகளும் மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டும். மாணவர்களல்லாத பிற ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பயன்பெறத்தக்க வகையில் இவ்வாறான பயிற்சிகளை வழங்கினால் கூடுதல் பயன் கிடைக்கலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6019 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)