Arts
16 நிமிட வாசிப்பு

வரலாற்றுக்கால யாழ்ப்பாணத்தில் நூலகங்கள்: ஒரு தேடல்

April 5, 2023 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

இலங்கையின் வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழர்களும் சிங்களவர்களும் சமய நம்பிக்கை, மொழி, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்ற பல்வேறு விடயங்களிலும் வேறுபட்ட இனங்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அதிகளவு வாழ்ந்த வேளையில் தென்னிலங்கையிலும், மேற்குப் பிரதேசங்களிலும் சிங்களவர் வரலாற்றுக் காலம் முதலாக வாழ்ந்து வருகின்றனர். தென்னிந்திய மன்னர்களின் ஆக்கிரமிப்புகளின் காரணமாக இலங்கையின் சிங்கள இனத்தவர்களின் பார்வையில் தமது ஆக்கிரமிப்பாளர்களின் எச்சங்களே இங்குள்ள தமிழர்கள் என்ற காழ்ப்புணர்வு தொன்றுதொட்டு விதைக்கப்பட்டு புரையோடிப்போயுள்ளது. அது இன்று வரை தொடர்வது கண்கூடு.

saraswathy-mahal

வடக்கில் யாழ்ப்பாண இராச்சியம் நிலைகொண்டிருந்த நிலையில், செழுமையான தனித்துவக் கலாசாரங்களோடு தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வேரோடியிருப்பது என்னவோ தமது மண்ணில் அடாத்தாக தமது முன்னாள் ஆக்கிரமிப்பாளர்களின் எச்சங்கள் இன்னும் துடைத்தெறியப்படாமல் உள்ளதே என்ற ஆதங்கத்தை காலம்காலமாக சிங்கள இனத்தின் வரலாற்று மூலங்களான தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் ஆகியவை அந்த இனத்துவேஷத் தீயை அணைந்துவிடாதவாறு பொத்திப் பாதுகாத்து வந்துள்ளன. சிங்கள மக்களின் மகாவம்சம் பாகம் பாகமாக இன்றும் எழுதப்பட்டுக்கொண்டுதான் உள்ளது.

கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.3ஆம் நூற்றாண்டு வரையிலான கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்கிடையிலான நிகழ்வுகளின் தொகுப்பாக கி.பி. 5ஆம் நூற்றாண்டில் (1100 ஆண்டுக்கால வரலாறாக) மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கிறார். அதுவரை வழிவழியாக எழுதப்பட்டு வந்த பல்வேறு ஓலைச் சுவடிகளையும் வாய்மொழிக் கதைகளையும் கொண்டே அவர் மகாவம்சத்தினை எழுதியிருந்தார். அத்துடன் மகாவம்சத்தின் கதை முற்றுப்பெறவில்லை. இன்று அது 2600 ஆண்டு காலப் பதிவுகளைக் கொண்டது. உலகில் ஒரு அரசே பொறுப்பேற்று இவ்வாறு நீண்டகால வரலாற்றை உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்து வருகின்ற ஒரே நாடாக இலங்கையைக் குறிப்பிடலாம். வேறெந்த நாட்டிலும் அப்படி இல்லை என்று இறுதியாக 2018 இல் வெளிவந்த 6 ஆவது மகாவம்சத் தொகுதியின் முகவுரையில் குறிப்பிடப்படுகின்றது. கலாசார அமைச்சின் கீழ் அதற்கென ஒரு தனியான அரச நிறுவனம் உருவாக்கப்பட்டு தனிச் சிங்கள பௌத்த அணியொன்றின் தலைமையில் அந்தப் பணிகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன. (என்.சரவணன், ‘மகாவம்சம்: அறிதல் புரிதல், தெளிதல்”, எங்கட புத்தகங்கள், ஜுலை 2021: பக்கம் 37-42).

பாளி மொழியிலும் சிங்கள மொழியிலும் மட்டுமே அது வெளியிடப்படுகின்றது. இதனால் தமிழர்களுக்கு அதில் எத்தகைய வரலாறு எழுதப்பட்டு வருகின்றதென்ற செய்திகள் தெரியவரும் வாய்ப்பில்லை. மகாவம்சப் புனைவின் மனநிலை வெளிப்பாடே எமது தமிழ் மண்ணில் நூலகங்களின் எரிப்பும், இன்றைய வவுனியா- வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய இடித்தழிப்பும்.  

சக்யா-மடாலய

இலங்கையில் பௌத்த மதம் பிரதான மதமாகக் கொள்ளப்படுகின்றது. இங்கு எழுத்துக் கலை நெடுங்காலமாக அறியப்பட்டிருந்த போதிலும் புத்தரின் போதனைகள் வாய்மொழி மூலமே போதிக்கப்பட்டுவந்துள்ளன. ஏடுகளை எழுதுவதில் சிரமம் எதிர்நோக்கப்பட்டமையாலும், ஏடுகள் அளவிலே பெரியனவாகவும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகள் மடாலயங்களால் எதிர்கொள்ளப்பட்டமை காரணமாகவும் சுவடிகளில் தங்கியிருப்பதிலும் பார்க்க வாய்மொழியான மத போதனையில் ஈடுபடுவதிலேயே பௌத்த துறவியர் நாட்டம் கொண்டிருந்தனர். (‘இலங்கையில் கல்வி: நூற்றாண்டு விழா மலர்” பாகம்1. 1969.)

பௌத்த சமயம் தொடர்பில் வாய்மொழியாக நிலவி வந்த கருத்துக்கள் கி.மு முதலாம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுத்துருவம் பெறத் தொடங்கியது. பௌத்த மதச் சிந்தனைகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் பௌத்தத் துறவியர் தங்கி வாழும் இடங்களான விகாரைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

விகாரைகள் பலவும் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் சுவடிகள் காப்பகங்களாகச் செயற்பட்டுவந்துள்ளன. இலங்கையில் முதலில் தோன்றிய இத்தகைய காப்பகமாக மாத்தளையில் அமைந்துள்ள ‘அலுவிகாரை” (Aluvihare)  மடாலயத்தைக் குறிப்பிடலாம். கி.மு. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த வட்டகாமினி அபயன் என்ற சிங்கள அரசன் புத்த சமய நூலாகிய திரிபீடகத்தை (Tripitaka) இந்த அலுவிகாரை நூலகத்தில் எழுதி வைத்துப் பாதுகாத்ததாக அறிய முடிகின்றது.

தமிழகத்திலும் புராதன காலத்தில் இத்தகைய ஆவணக்காப்பகங்கள் கோவில்களில் வைத்துப் பேணப்பட்டுள்ளன. ‘முதலாம் இராசராசனது ஆட்சிக் காலத்திலே (985-1014) இதுவரைக்கும் சரஸ்வதி பண்டாரங்களிலே வகைப்படுத்தப்படாது சேமித்தும், பாதுகாத்தும் வைக்கப்பெற்றிருந்த  ஏட்டுச்சுவடிகள் எல்லாவற்றையும் பட்டியலாக்கம் (Catalogue) செய்யும் பொறுப்பினை அக்காலத்திலே திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்பவரிடம் மாமன்னன் இராசராசனாலேயே ஒப்படைக்கப்பட்டது. இசை, இலக்கியத்திலும் நன்கு புலமை கொண்டிருந்த நம்பியாண்டர் நம்பி, தில்லையம்பலத்திலே பல்லவராட்சிக்காலம் தொடக்கம் சேமித்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தேவாரத் திருப்பதிக ஏடுகளை மிகவும் நுணுக்கமாக வகையீடு செய்து, அவற்றினை Author catalogue என்பதன் அடிப்படையிலே 12 திருமுறைகளாக வகுத்து மாணவர்களும் மக்களும் பாவிப்பதற்கென சரஸ்வதி பண்டாரங்களிலே ஒழுங்குபடுத்தி வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்வாறு பல ஆண்டுகட்கு முன்பே சைவ மன ஆர்வ மாட்சிமையாக வளர்ந்த இலக்கியம் இராசராசன் காலத்தில் உயிர் துலக்கம் பெற்று வாழும் இலக்கியமாக, வளர்கின்ற இலக்கிய உணர்வுக்கு வழிசமைத்தமை போன்று ஒரு நூலக வடிவினைப் பெற்றது. அவ்வகையில் நம்பியாண்டார் நம்பி ஒரு நூலகருக்குரிய தொழிற்பாட்டினையும் ஆற்றினார் எனக் குறிப்பிடலாம்”. (‘சோழர் காலத் தமிழகத்திலே நூலக நடவடிக்கைகள்”, செ.கிருஷ்ணராஜா, நூலகவியல், செப்டெம்பர் 1985).

பண்டைய பிரதான சைவ, பௌத்த மடாலயங்கள் பெரும்பாலானவற்றில் ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையங்கள் இருந்தன. பௌத்த சமய நூல்கள் இங்கு கவனமாகப் பாதுகாக்கப்பட்டன.

புராதன பௌத்த மன்னரின் வரலாற்றைக் குறிப்பிடும் தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் என்பவற்றைப் போல தமிழ் மன்னர்களின் புராதன வரலாற்றைக் கூறும் நூல்களாகக் கைலாயமாலை (கி.பி 16), யாழ்ப்பாண வைபவமாலை (கி.பி 18), யாழ்ப்பாண வைபவ கௌமுதி (1918) முதலான நூல்களைக் கருதுவர். இலக்கியங்களான இந்த நூல்கள் தரும் குறிப்புக்கள் மூலம் அக்கால இலக்கிய வளர்ச்சி நிலைமைகளை அறிய முடிகின்றது.

சரஸ்வதி மகாலயம்

‘பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் சரஸ்வதி மகாலயம் என்ற பெயரிலமைந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் நல்ல நிலையில் செயற்பட்டது. இந்த நூலகத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய நூல்கள் காணப்பட்டன. தற்போது நாயன்மார்கட்டு என அழைக்கப்படும் இடமே முன்னர் சரஸ்வதி மகாலயம் இருந்த இடமென அறியப்படுகின்றது”. (க.சி குலரத்தினம் ‘பொன்விழா பொலிவு காணும் பொதுசன நூலகம்” யாழ்ப்பாணப் பொதுசன நூலகத் திறப்பு விழா மலர், பக்.57).

கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் முத்துக் கவிராயர் எழுதிய ‘கைலாயமாலை” என்னும் நூலில் இந்நூலகம் பற்றிய செய்தி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணத்து அரசன் வரோதய செகராசசேகரன் காலத்தில் வைத்தியம், சோதிடம் என்பன தொடர்பான நூல்கள் எழுதப்பட்டன. இவை இந் நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன.”

கைலாயமாலையின் வழி நூலாகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாண வைபவமாலை நூலில் , ‘கி.பி 1215  முதல் 1441 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சுதந்திரமான தமிழ் இராச்சியம் நடைபெற்றிருக்கின்றது. இக்காலப்பகுதியில் ஆட்சி செய்த விஜயகாலிங்க ஆரியச் சக்கரவர்த்தி என்னும் மன்னன் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கல்வி வளர்ச்சி வசதிகளை உருவாக்கும் நோக்கில் இம் மன்னனால் சரஸ்வதி மகாலயம் நூலகம் உருவாக்கப்பட்டது.’ என்றுள்ளது.  (விவியன் சத்தியசீலன், ‘யாழ்ப்பாணத்தில் ஆரம்பகால நூலகங்கள்”, யாழ் பார்வை இணையம், 24.10.2013)

‘சோழ ராஜனால் அனுப்பப்பட்ட அவனது புதல்வனான ஒருவன் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி என்னும் பெயரோடு முடிசூடப்பெற்று அரசாண்டான். அவன் தனது இராசதானியாகிய நல்லூருக்குத் தன் நாட்டிலிருந்தும் பிற இடங்களில் இருந்தும் பண்டிதர்களை அனுப்பி வைத்து ஒரு கிராமத்து வயல் நிலங்களையும் விடுவித்தான். இக்கிராமம் இப்போதும் சங்குவேலி என்னும் பெயரோடு விளங்குகின்றது. இப்பண்டிதர்கள் ஆக்கிய நூல்கள் யாவும் சரஸ்வதி மகாலயம் என்னும் நூலகத்தில் வைக்கப்பட்டன. அது சிங்கள அரசன் ஒருவனால் தீ வைக்கப்பட்டது என்று சரித நூல் கூறுகின்றது. அதனால் போலும் அவர்கள் செய்த நூல்களாயினும் செய்யுள்களாயினும் எமக்குக் கிடைத்தில.” என்று சி.கணேசையர் குறிப்பிடுகிறார். (சி.கணேசையர், ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம்”, யாழ்ப்பாணம் 1939. பக்.6)

கோட்டை இராசதானியில் இருந்து யாழ்ப்பாண இராசதானி மீது படையெடுத்து வந்த கோட்டை இராசதானியின் சேனாதிபதி சப்புமல்குமாரயா தான் நாயன்மார்கட்டில் அமைந்திருந்த யாழ்ப்பாண இராசதானியின் தேசிய நூல் நிலையமாகிய சரஸ்வதி நூலகத்தை தீயினால் அழித்தான் என்பதும் பழைய வரலாறு.

பின்னாளில் செகராசசேகர மன்னனின் தம்பியாகிய பரராசசேகரன் என்னும் மன்னன் யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த காலத்தில் அழிந்து போன நூலகம் புனரமைப்புச் செய்யப்பட்டது என்னும் தகவலை சி.கணேசையர் மற்றும் செ.இராசநாயகம் (செ.இராசநாயகம். யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணம், 1933. பக்.17) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான கருத்துகளின்படி நோக்கும்போது யாழ்ப்பாணத்திலே பதின்மூன்றாம் நூற்றாண்டு மற்றும் அதனையடுத்த காலப்பகுதிகளில் நூலகங்கள் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப நல்ல நிலையில் அமைக்கப்பட்டிருந்தன என அறிய முடிகின்றது.

பௌத்த மரபின் வரலாற்றினை நோக்கும் போது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்து ஏடுகளும் நூல்களும் பௌத்த சமயப் பின்னணியில் காலங்காலமாகப் பேணப்பட்டமை போன்ற ஒரு வரன்முறையான சுவடிகள் பாதுகாப்பு முறை தமிழ் மரபில் அல்லது யாழ்ப்பாணப் பகுதியில் காணப்பட்டதா இல்லையா என்பதனை அறிவதற்கான புராதன சான்றுகள் இதுவரை இல்லை. ஏட்டுச் சுவடிகள் சுவடிக் கூடங்களில் அல்லது வழிபாட்டு இடங்களில் பாதுகாக்கப்படாத காரணத்தினால் பெரும்பாலும் தனியார் வீடுகளில் ஆங்காங்கு காணப்பட்டிருக்கின்றன எனக் கருத இடமுண்டு. (விவியன் சத்தியசீலன், ‘யாழ்ப்பாணத்தில் ஆரம்பகால நூலகங்கள்”, யாழ் பார்வை இணையம், 24.10.2013)

தென்னிந்திய வரலாற்றில் ‘சரஸ்வதி பண்டாரங்கள், சரஸ்வதி மகாலயங்கள் ஆகிய சொற்கள் கல்வெட்டுக்கள், சாசனங்கள் எனப் பலவிடங்களிலும் விரவிக் காணப்படுகின்றன.

‘சாசன ஆவணங்களிலே அடிக்கடி இடம்பெறுகின்ற சரசுவதி பண்டாரம் அல்லது சரசுவதி பண்டாரகங்கள் என்ற  பதப்பிரயோகங்களானவை சோழர்காலத்  தமிழகத்திலே காணப்பட்டிருக்கக்கூடிய நூலகங்களையே குறிப்பிட்டு நின்றன எனக்கொள்ளலாம். இந்திய மரபின்படி சரஸ்வதி கல்விக்குரிய கடவுளாக உருவகிக்கப்பெற்று வழிபடப்பெற்று வருவதனை நாமறிவோம். அந்த வகையில் சரஸ்வதி பண்டாரங்கள் எனக் குறிப்பிடப்பட்டவை தஸ்தாவேஜுகளையும் ஏட்டுச் சுவடிகளையும் ஒருங்கே கொண்டுள்ள நூலகங்களையே கருதின எனக்கொள்ளலாம். சில வேளைகளில் தற்காலத்தில் நாங்கள் குறிப்பிடும் நூலகர் என்ற பொருளினையும் சரசுவதி பண்டாரம் என்ற பிரயோகம் குறித்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு. ‘சமய நூல்கள் அல்லாமல், சிறப்பு மிக்க இலக்கண இலக்கியங்களின் சுவடிகளும் கோயிலில் இருந்த  சரசுவதி பண்டாரங்களால் போற்றிக் காக்கப்பட்டன” என்று ஒரு குறிப்பு வரும்போது அங்கே பதவிக்குரிய ஒரு பெயராகவே அப்பிரயோகம் அமைவதனைக் காணமுடிகின்றது. (‘சோழர் காலத் தமிழகத்திலே நூலக நடவடிக்கைகள்”, செ.கிருஷ்ணராஜா, நூலகவியல், செப்டெம்பர் 1985).

‘சரஸ்வதி பண்டாரம்: கோவில்களிலும் மண்டபங்களிலும் நூல்நிலையங்கள் இருந்தன என்பது சில கல்வெட்டுக்களால் தெரிகின்றன. இத்தகைய நூல்நிலையங்கள் இருந்திராவிடில், இன்று நாம் காணும் பழந்தமிழ் நூல்கள் பாதுகாக்கப்பட்டிரா அன்றோ? தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பேணி வளர்த்த நூல்நிலையமே அவர்க்குப் பின் வந்த மகாராட்டியர்களால் வளர்க்கப்பட்டது. அதுவே இன்று தஞ்சை அரண்மனையிலுள்ள சரஸ்வதி மகாலில் இருக்கும் பெரிய நூல்நிலையமாகும். (இராசமாணிக்கனார், மா. கல்வெட்டுக்களில் அரசியல், சமயம், சமுதாயம். பக். 109, 1977).

சைவர்களின் கல்வித் தெய்வமான சரஸ்வதியைக் குறியீடு செய்வதால் அவை நூலகங்களாகவோ, சுவடிகள் காப்பகங்களாகவோ இருக்கலாம் என்று கருத வாய்ப்புண்டு.

இந்திய மொழியியல் அகராதிகளின்படி Sarasvati – bhandara ஸ்ரீ ,  a library எனவும், Sarasvati – bhandarika ஸ்ரீ,   librarian எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. (Sircar, D.C., Indian Epigraphical Glossary. P. 301).

பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர் பிரதேசங்களில் காணப்பெற்ற நூலகங்களின் வரலாற்றை குறிப்பிடக்கூடிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. பௌத்தமதம் இலங்கைக்கு வந்த காலப்பகுதியிலிருந்து வரலாற்றுப் பதிவுகளை பேணும் பெரும்பணியை பௌத்த விகாரைகளும் வழிபாட்டுத் தலங்களும் தொடர்ந்து செய்து வந்துள்ளன என்ற வரலாற்று உண்மையை நாம் சீரணித்தே ஆகவேண்டும். சிங்கள வரலாற்றை இடையறுந்து போகாமல் பதிவதில் தீபவம்சம், மகாவம்சம் போன்ற நூல்கள் இப்பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளன. ஆனால் கைலாயமாலை எழுதப்பட்ட காலம் வரை தமிழ்ப் பிரதேசம் சார்ந்த வரலாற்றைக் கூறும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால நூலகங்கள் பற்றிய சிறியதொரு ஆய்வினை மேற்கொண்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்தவைத்தியத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி விவியன் சத்தியசீலன் அவர்கள் தனது ஆய்வின் இறுதியில் பதிவுசெய்துள்ள பின்வரும் கருத்துக்கள் கவனத்துக்குரியன.

புராதன காலத்துச் சிங்கள இராச்சியப் பிரதேசங்களில் வலிமையானதும் நீடித்து நிற்கக் கூடியதுமான கருங்கற்கள் போதியளவு இருந்தன. கருங்கற்களைக் கொண்டே அரசர்கள் தமது மாளிகைகளையும் பௌத்தத் துறவியர்கள் தமது விகாரைகள் முதலான கட்டடங்களையும் அமைத்தனர். இந்தக்கற்களிலேயே அரச சபையின் சாசனங்கள் முதலானவற்றையும் செதுக்கினர். ஏறத்தாழ ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்னரும் கூடப் பாறைகளிலும் கற்றூண்களிலும் எழுதப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் யாவும் சிங்கள பௌத்த மரபின் உண்மைகளைத் தொகுப்பதற்குரிய சான்றினைத் தருவனவாக அமையலாயின.

இலங்கையின் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் பௌதீக நிலவுருவ அமைப்புப்படி இத்தகைய கருங்கற்கள் பெரும்பாலான இடங்களில் இல்லை. சுண்ணாம்புக் கற்களே அதிகம் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தியே இந்தப் பகுதியில் புராதனக் கட்டடங்களும் அமைக்கப்பட்டிருக்கும். சிங்கள மக்கள் புராதன காலத்தில் எழுதவும், கட்டடங்கள் அமைக்கவும் பயன்படுத்திய கற்கள் போன்று வலிமை பொருந்தியனவாக சுண்ணாம்புக் கற்கள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. (ஆ.சிவநேசச் செல்வன் ‘மாவிட்டபுரம் ஆதீன சுவடிச்சாலையும் ஏட்டுப் பிரதிகளும்”  பூர்வகலா மலர், (1973) பக் 42-44)

புராதன இலங்கையில் அரசியல் வரலாற்றை நோக்கும் போது அங்கு அடிக்கடி போர்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிகளவு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. நல்லாட்சிகள் பல அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்தச்சந்தர்ப்பத்தில் அதிகளவு பொருட்கள் நிலத்தின் கீழ் புதையுண்டு போவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. எனினும் கட்டட இடிபாடுகள், கல்வெட்டுகள், பழைய நாணயங்கள் முதலான புராதன காலத்து நூலக வரலாற்றை கூறக்கூடிய தொல்பொருட் சின்னங்களோ அல்லது கல்வெட்டு முதலான தொல்லியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்தகைய நோக்கில் அமைந்த ஆய்வுகளும் இடம் பெறவில்லை.

தொல்லியல் சான்றாதாரங்கள் இல்லாமைக்கான பிரதான காரணம் பொதுவாகவே புராதன காலத்து அரசர்கள் வாழ்ந்த தமிழ்ப் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சிகள் விரிவான அளவில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அரசர்கள் பலரும் இந்தப்பிரதேசத்தை சிறப்பாக ஆண்டதாகக் கூறப்படுகின்றது. இவர்கள் தமது ஆட்சியின் நடவடிக்கைகளைக் கல்வெட்டுகள் முதலானவற்றில் பொறித்திருப்பார்கள். ஆனால்  கடந்த காலத்தை அடிப்படையாகக் கொண்ட வரன்முறையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படாமையால் இத்தகைய  வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பண்டைய காலத்து நூலக நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்தப்பிரதேசங்களில் விரிவான புதைபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென்பது வரலாற்றுத் துறைசார்ந்த ஆய்வறிஞர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளபோதிலும் ஏறத்தாழ 1950 களின் பின்னர் இலங்கையில் மிக மோசமான நிலையில் தீவிரமடைந்துவிட்ட சிங்களவர் தமிழர் என்ற இன முரண்பாட்டுச் சூழ்நிலை இத்தகைய ஆய்வுகளில் ஆய்வாளர்கள் ஈடுபடாமைக்கும் அல்லது ஆர்வங்காட்டாமைக்கும் பிரதான காரணங்களாக உள்ளன. தற்போதைய சூழலில் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் வரலாறு சார்ந்து ஆய்வு மேற்கொள்வது சிக்கலான விடயமாகும். இதனால் ஆராய்ச்சியாளர்கள் தயங்கினர் அல்லது தவிர்த்தனர். இவ்வாறான காரணத்தாலும்  புராதன வரலாறு பற்றிய ஆய்வுகள் துலக்கம் பெறாமல் உள்ளன.

காலங்காலமாக வரலாற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்படாமை, பௌதீகச் சூழலில் நலிவான தன்மைகள், புதைபொருள் ஆய்வுக்கான சூழல் இன்மை, ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் முதலான அந்நியர் ஆட்சியின் அழிவுகள் என்பவற்றால் இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிரதேசத்தின் வரலாற்று மூலாதாரங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன. எனினும் இவ்வாறான இடர்களின் மத்தியில் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பேணிப் பாதுகாக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த ஆவணங்களைக் கொண்ட யாழ்ப்பாணப் பொதுநூலகம் 1981 இல் எரிந்து போனதனால் அண்மைக்கால வரலாற்று ஆதாரங்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான தன்மைகளால் பௌத்த மதத்தின் சமய விடயங்கள் காலங்காலமாக அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கப்பட்ட முறைகளையே இலங்கை முழுமைக்குமான நூலக வரலாறாக கூறும் மரபு தொடர்ந்து காணப்பட்டு வருகின்றது.

 இந்நாட்டினுடைய புராதன நூலகங்கள் பற்றிய நீண்ட வரலாற்றிலே ஆரம்பத்திலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் வடக்கு – கிழக்கு பிரதேசத்தின் நூலகங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறவில்லை என்பதனால், இந்தப்பிரதேசங்களில் நூலகங்கள் இருக்கவில்லை எனக் கருதுவது பொருத்தமற்றது.

நூலகங்கள் பற்றிய வரலாறு மட்டுமல்ல இந்தக்காலகட்டத்தில் இந்தப்பிரதேசங்களின் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வாழ்வியற் செய்திகளும் கூட கிடைக்கவில்லை. எனவே தற்போது குறிப்பிடப்படுகின்ற இலங்கையின் புராதன நூலக வரலாற்றையே இந்நாட்டின் முழுமையான நூலக வரலாறாக கருதும் போக்கும் உள்ளது. இது மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய கருத்தாகும்.

முன்னர் போரினால் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. தொல்லியல் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. அகழ்வாராய்ச்சிகள்  செய்யக்கூடிய அரசியல் சூழ்நிலையும் நீண்ட காலமாக இல்லை. மேல்நாட்டவரது ஆட்சிக்காலத்திலும் பல்வேறு மாறுதல்களும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

ஆரம்ப மற்றும் மத்தியகால நூலக நிலமைகளை அறிந்து கொள்ள முடியாமைக்கு இத்தகைய பல காரணங்கள் தடையாக உள்ள நிலையில் மாற்று வழிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது துறைசார் அபிவிருத்திக்கு அவசியமாக உள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12870 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (16)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)