Arts
18 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 9

February 13, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

கலாநிலையம் நூலகம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1920 ஆம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்து 1958 வரை பணியாற்றியவர் கலைப்புலவர் க. நவரத்தினம். தன்னிடமிருந்த பெரும்பாலான நூல்களைக் கொண்டு ‘கலாநிலையம்’ என்ற பெயரில் ஒரு  அறிவுத்தேடலுக்கான கழகமாக, ஒரு நூலக நிறுவனமாக உருவாக்கி, 1930 டிசம்பர் மாதம் 5ம் திகதி அதனைத் தொடக்கிவைத்தார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையின் மேற்கில் உள்ள பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மனையொன்றில் ‘கலாநிலையம்’ இயங்கத் தொடங்கியது. 

இதன் தலைவராக பரமேஸ்வராக் கலாசாலைத் தலைவராக இருந்த சு. நடேசபிள்ளை அவர்களும், செயலாளராக கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்களும் சேவையாற்றியுள்ளனர். அத்துடன் கலாநிலையத்தின் சிறப்பு அங்கத்தினர்களாக சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், டாக்டர் அன்றியாஸ் நெல், முதலியார் செ. இராசநாயகம், டாக்டர் ஐசாக் ரி. தம்பையா ஆகியோர் இருந்துள்ளனர். கலாநிலைய நூலகத்தின் பொறுப்பாளராக யாழ். வைத்தீஸ்வரா வித்தியாலய ஆசிரியரான திரு.கா. வைரமுத்து பணியாற்றியுள்ளார். 

அமரர் க.சி. குலரத்தினம் அவர்கள் எழுதிய ‘பண்டிதமணி அவர்களும் கலாநிலையமும்’ என்ற கட்டுரை, 1989 இல் வெளியிடப்பெற்ற ‘பண்டிதமணி நினைவுமலர்’ என்ற சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

Pandithamani Ninaivu Malar

“இக்கழகத்தின் அங்கத்தினர் பொது வகையினர் எனவும் சிறப்பு வகையினர் எனவும் இரு திறத்தினராயமையப் பொதுவகையினரானோர், நாட்டின் கலையாக்கத்தில் ஊக்கமுள்ளவராயும், சிறப்பு வகையினரானோர் கலையாக்கத்துக்கு உபகரித்த அறிஞராயுமிருந்தனர். தமிழ்க் கலைகளின் வளர்ச்சியில் கருத்துடையவர்கள் பலர் இந்நிலையத்தில் அங்கத்தவராய்ச் சேர்ந்திருந்தனர். திருவாளர் சு. நடேசபிள்ளை அவர்கள் தலைவராயும், மத்திய கல்லூரி வர்த்தக ஆசிரியர் திரு. கந்தையா நவரத்தினம் அவர்கள் செயலாளராகவும் பணியாற்றிய கலாநிலையத்தில் பண்டிதமணி அவர்கள் மதிப்புக்குரிய அங்கத்தவராயிருந்தார். இன்னும் பரமேஸ்வராக் கல்லூரியில் சமய குருவாயிருந்த சுவாமி உருத்திரகோடீஸ்வரர், முதலியார் சு. சிற்றம்பலம், வழக்கறிஞர் வி. நாகலிங்கம், வித்தியாதரிசி சிவத்திரு தி. சதாசிவ ஐயர், வட்டுக்கோட்டை ஆசிரியர் திரு. க. மதியாபரணம், இந்துக் கல்லூரி ஆசிரியர் பொ. தம்பு, வைத்தீஸ்வர வித்தியாலய ஆசிரியர் திரு.கா. வைரமுத்து, மத்திய கல்லூரி ஆசிரியர் வியாகரண சிரோமணி மகோபாத்தியாய வை. இராமசாமி சர்மா, தெல்லிப்பழை வழக்கறிஞர் வ. குமாரசுவாமி, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.ச. சுப்பிரமணியம், நியாயவாதி எஸ்.ஆர். கனகநாயகம்,  பெரியார் எஸ். கந்தையா முதலானோர் அங்கம் வகித்தனர்.”

“நடேசன் (சு. நடேசபிள்ளை) அவர்கள் கலாநிலையத்தின் தலைவராயிருந்து அதன் ஆக்கவேலைகளுக்குத் தமிழ்நாட்டுப் புலவர்களையும் ஈழநாட்டுப் புலவர்களையும் அன்புக்கரம் நீட்டி அழைத்த அமைவு பண்டைத் தமிழ்ப் பண்பாட்டிலமைந்த பெருந்தன்மையாகும்.”

கலா நிலையம் அடிப்படையில் மூன்று நோக்குகளைக் கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. அவையாவன,

1. இலக்கியம், இலக்கணம், தத்துவஞானம், பௌதிக சாத்திரம், ஓவியம், நாகரிகம், சரித்திரம் என்னும் இவற்றில் இந்தியாவும் இலங்கையும் அடைந்த பெறுபேறுகளை ஆராய்ந்தறிதல்.

2. இவற்றை இக்கால ஆராய்ச்சி அறிவின் முறையில் விளக்குதல்.

3. கலைகளின் புத்துயிர்ப்புக்காகவும், நாட்டின் நோக்கங்கள் கைகூடுவதற்கும் முயலுதல்.

1930 களில் கலா நிலையம் ஆரம்பிக்கப்பட்டபோது யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய அரசியல், சமூக, பண்பாட்டுப் பின்னணிகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்றபோது கலா நிலையம் மிகுந்த அவதானமாக, பலத்த முன்னேற்பாடுகளுடனும், முன்னெடுப்புகளுடனும் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. 

கலா நிலையம் தன்னிடத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றினைக் கொண்டிருந்தது. அத்துடன் அங்கே இலக்கியம், தத்துவம், கலை, சமயம், பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் தொடர்ச்சியாக விரிவுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன.  அன்றைய காலத்தில் வாழ்ந்த முக்கியமான ஆளுமைகள் பலர் அங்கே வந்து விரிவுரையாற்றியிருக்கின்றனர். என் கைக்கெட்டிய கலாநிலையத்தின் இரண்டாவது ஆண்டு அறிக்கையின் படி, அவ்வாண்டில் மாத்திரம் தமிழில் 21 விரிவுரைகளையும், ஆங்கிலத்தில் 3 விரிவுரைகளையும் அது ஒழுங்கமைத்துள்ளது என்று தெரிகின்றது. அத்துடன் அதன் நூல் நிலையத்தில் 1035 நூல்கள் இருந்திருக்கின்றன என்றும் அவற்றில் தமிழ் நூல்கள் 421, ஆங்கில நூல்கள் 614, ஏட்டுப் பிரதிகள் 41, அச்சில் இல்லாத (Manuscripts) தமிழ் நூல்கள் 76, அச்சில் இல்லாத ஆங்கில நூல்கள் 92 என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

கலாநிலையத்தின் மூன்றாம் ஆண்டின் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

“1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நூல் நிலையம் கிட்டத்தட்ட 1135 நூல்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. இவற்றுள் அச்சில் இல்லாத நூல்களும் ஏட்டுப் பிரதிகளும் இருந்தன. ஒவ்வொரு ஆண்டிலும் புது நூல்கள் இங்கு சேர்க்கப்பட்டன. இன்னும் ஒழுங்கமைப்பிலும் முன்னிருந்ததும், சமகாலத்தில் காணப்பட்டவையுமான புத்தகசாலைகளை (நூல்நிலையங்களை) விட சில வேறுபட்ட விதிமுறைகள் கலாநிலைய நூல்நிலையத்தில் கடைப்பிடிக்கப்பட்டன. புத்தகங்களை விட மாத வெளியீடுகளும், வார வெளியீடுகளும் ஆங்கில மாத வெளியீடுகளும், ஆங்கில வார வெளியீடுகளும் ஆங்கிலத் தினசரி வெளியீடுகளும் இங்கு ஒழுங்காக கொள்வனவு செய்யப்பட்டு பொது மக்கள் பாவனைக்காக விடப்பட்டிருந்தன. இன்னும் நூற்கொடைகளும் இங்கு நடைபெற்றன. (தகவல்: யாழ்ப்பாணம்: கலாநிலைய வெளியீடு. 1933-1934: ப. 4-6).”

கலா நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்குடன் 1933 இல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இதழே ‘ஞாயிறு’ சஞ்சிகையாகும். கலாநிலையத்தின் இரண்டாவது ஆண்டு அறிக்கையில் ‘ஞாயிறு’ இதழின் அறிமுகமாகக் கொள்ளத்தக்கதாக பின்வரும் பகுதி அமைகின்றது:

Gnaayiru

“தமிழ்க் கலை ஆக்கத்தின் பொருட்டு முயலுதற்குச் சிறந்த தமிழ் வெளியீடு ஒன்று இன்றியமையாத கருவியாகும். ஆதலினால், ஒரு சிறந்த தமிழ் இதழ் வெளியிட வேண்டுமென்பது எங்கள் நோக்கங்களிலும் ஒன்றாய் இருந்தது.  இந்நோக்கம் நிறைவேறுவதற்கேற்ற பொருத்தங்கள் சில வாய்ப்புற்றமையை நினைத்து நாம் மகிழ்ச்சியடைதல் வேண்டும். ‘ஞாயிறு’ என்னும் பெயருடன் இரு திங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு பெரும் பொழுதிலும் வெளிவரும் சிறந்த செந்தமிழ்க் கட்டுரை வெளியீடு ஒன்று அச்சிடப்பட்டு வருகின்றது. இளவேனிற் காலமாகிய சித்திரைத் திங்கள் முதல் வாரத்தில் முதற்கதிர் வருமென எதிர்பார்க்கின்றோம்.”

‘ஞாயிறு’ சஞ்சிகை தனது ஆரம்பம் முதலே தனக்கென ஒரு உள்கட்டுமான ஒழுங்கினைச் செய்திருந்தது என்பதை அதன் நிர்வாக ஒழுங்கிற்கு நல்லதோர் சான்றெனக் கொள்ளலாம். க.சி. குலரத்தினம் அவர்கள் ஞாயிறு இதழ் பற்றி மேற்குறிப்பிட்ட கட்டுரையில் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“கலாநிலையம் செய்துவந்த கலையாக்கப் பணிகளில் ஒன்று அவர்கள் இரு மாதங்களுக்கு ஒருமுறை ‘ஞாயிறு’ என்னும் பெயரில் வெளியிட்ட சஞ்சிகையாகும். அது புத்தக உருவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், பாடல்கள், நாடகங்கள் அமைய வெளிவந்தது. இளவேனிற் கதிர், முதுவேனிற் கதிர், கார்க் கதிர், கூதிர்க் கதிர், முன்பனிக் கதிர், பின்பனிக் கதிர் என்னும் பெயர்களில் பருவகாலம் தோறும் அது மலர்ந்து தேன்பிலிற்றி வந்தது. அதன் பெருமையை நன்கறிந்த தமிழ்நாட்டாரும் அதனை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள்.” 

‘நான் கண்ட கலைப்புலவர்’ என்ற நூலினை 1958 இல் எழுதிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நூலகர், கா. மாணிக்கவாசகர், அந்நூலின் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். 

“அனைத்தையும் விட அழகான அலுமாரிகளில் நான் கண்ட நூல்கள் என்னை வியக்கச் செய்தன. அவை பல்லாண்டுகளுக்கு முந்தியவை. கிடைத்தற்கரிய நூல்களையெல்லாம் தேடித் திரட்டி வைத்திருக்கிறார். ஒன்பது அலுமாரிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான நூல்கள் இருக்கின்றன. அவைகளில் பெரும்பாலான நூல்கள் சமயம், கலை, தத்துவஞானம், சரித்திரம் சம்பந்தமானவை. இவைகளில் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருநோக்கத்துடன் 1930 ஆம் ஆண்டு ‘கலாநிலையம்’ என்றதோர் தாபனத்தை நிறுவினார். அந்நாளில் யாழ்ப்பாணத்தில் அறிவுக் களஞ்சியமாக விளங்கிய நிலையம் இது ஒன்றே எனின், அது மிகையாகாது. கலாநிலையத்தில் ஆயிரத்து நூறு நூல்களும், அச்சில் இல்லாத பல ஆங்கில, தமிழ் நூல்களும் ஏட்டுப் பிரதிகளும் உள்ளன. அவ்வப்போது அறிஞர்களின் விரிவுரைகள் நிகழும். அதன் கண் அமர்ந்து ‘ஞாயிறு’ என்னும் கலையாக்கம் கருதிய வெளியீடொன்றைச் செப்பமுறச் சிலகாலம் வெளியிட்டார். ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற நோக்கத்துடன் வெளியான அவ்விதழில், அந்நாளில் நம் கல்லூரி ஆசிரியராகக் கடமையாற்றிய திரு.தா. ஆபிரகாம் அவர்களால் எழுதப்பட்டு கலைப்புலவர் நவரத்தினம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘சாள்ஸ் டார்வின்’ என்ற கட்டுரையையும், நெடுங்காலமாக தமிழ், சமஸ்கிருதத்துறைத் தலைவராகக் கடமையாற்றிய வயாகரண மகோபாத்யாய வை. இராமசாமி சர்மா அவர்கள் தொடர்ந்து எழுதிய ‘பெருங்காப்பிய ஆராய்ச்சி’ என்னும் கட்டுரையையும் இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமுடையதாகும்.”

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகை தனது 25 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பு மலராக 11.2.1984 அன்று வெளியிட்டிருந்தது. அதில் ச. அம்பிகைபாகன் அவர்கள் ‘கலைப்புலவரும் ஈழநாடும்: இலட்சிய இளைஞர்களைக் கவர்ந்தவர்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சில பகுதிகளை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.  

Kalaipulavar Navarathinam

கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் தமக்கு முன்னும் பின்னும் இல்லாத முறையில் யாழ்ப்பாணத்தில் கலைக்கு அரும் சேவை புரிந்தார். இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், ஆபரணம், நெசவு முதலிய சகல கலைத்துறைகளிலும் ஈடுபட்டார். அவற்றில் சில அரிய பொருள்களைத் தேடித் தம் வீட்டில் வைத்திருந்தார். அவர் மனைவி இந்தியாவின் சாந்தி நிகேதனத்தில் படித்தபடியால் அதன் ஞாபகமாக அவர் வீட்டுக்கு ‘சாந்தி நிகேதனம்’ என்றும் பெயர்வைக்கப்பட்டது.

கலைப்புலவருக்குத் தாகூர் போன்றோ, அல்லது ஹொறனை வில்மற் பெரேரா போன்றோ வசதிகள் இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தில் ‘சாந்தி நிகேதனம்’ போன்ற ஒரு ஸ்தாபனத்தையே நிறுவியிருப்பார்.

கலைகளில் கொண்ட ஆர்வத்தினால் அவற்றை வளர்ப்பதற்குக் ‘கலா நிலையம்’ என்னும் ஸ்தாபனத்தை நிறுவினார். அவருக்கு உதவி செய்வதற்கு இளைஞர்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை. அவரிடம் ஒரு ஆகர்ண சக்தி இருந்தது. இந்த சக்தி யாழ்ப்பாணத்தில் இலட்சியங்களில் ஆர்வமுள்ள பல இளைஞர்களை இவர்பால் ஈர்த்தது. இவர்களில் ஏ.ஈ. தம்பர், கே.சி. தங்கராஜா, து. சீனிவாசகம், மு. கதிரைவேலு, கா. வைரமுத்து, குமாரவேலு என்போர் சிலர். கலைப்புலவரால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் (ச.அம்பிகைபாகன்) ஒருவன்.

இவருடைய அரிய நூல்நிலையமே என்னை அதிகம் கவர்ந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த தனிப்பட்டவர்களின் நூல்நிலையங்களில் இது சிறந்தது. கலாநிலையத்தைப் பற்றி மேலும் கூறுமுன் கலாநிலையத்தோடும் கலைப்புலவருடனும் சம்பந்தப்பட்டவர்களில் சிலர் பின்னர் ஈழநாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதைக் கூற விரும்புகிறேன். ஏ.ஈ. தம்பர் ஈழநாட்டில் நெடுங்காலம் ஆசிரியப் பகுதியிலும் நிர்வாகத்துறையிலும் சேவைபுரிந்தார். திரு. சீனிவாசகம், நிர்வாகத்துறைத் தலைவராக இருந்து ஈழநாட்டைப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வருகிறார். யானும் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் இருந்த காலத்தில் ஈழநாட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். 

கலாநிலையத்தில் பல்வேறு ஆக்கவேலைகள் நடைபெற்றன. வாரந்தோறும் பிரசங்கங்கள், வார இறுதியில் இலக்கிய, இலக்கண, சமய, சங்கீத, நடன வகுப்புகள், இவற்றை விட காலத்துக்குக் காலம் இலக்கிய இசைவிழாக்கள், இவையெல்லாம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் நடைபெற்றன. 

கலாநிலையத்திலிருந்து ‘ஞாயிறு’ என்னும் உயர்தர சஞ்சிகை வெளிவந்தது. 

திரு. தங்கராஜா கொழும்பிலிருந்தபோதும், கலாநிலைய வேலைகளில் அதிக அக்கறை காட்டினார். கலைப்புலவர் ‘தென் இந்திய சிற்பவடிவங்கள்’ என்னும் நூலை எழுதியபொழுதும் அதற்கு வேண்டிய படங்களைச் சேகரித்துக் கொடுத்ததோடு அவற்றைச் செவ்வனே அச்சிட்டும் கொடுத்தார். 

மக்கள் ஆதரவு போதாமையால் கலைப்புலவர் கலாநிலையத்தை மூடவேண்டி நேரிட்டது. இது பலருக்கு, சிறப்பாக திரு.கே.சி. தங்கராஜாவுக்கு அதிக மனவருத்தத்தைக் கொடுத்தது. திரு. தங்கராஜா கலாநிலையத்தை நிலையான ஸ்தாபனமாக்க விரும்பினார். கலைப்புலவரின் நூல்கள், கலாநிலையத்தில் இருந்த நூல்கள், கலைப்புலவரின் கலைப்பொருட்கள் முதலியவற்றைக் கொண்டே அந்த நிறுவனத்தை ஸ்தாபிக்க விரும்பினார். கலைப்புலவர் வீடே இதற்குப் பொருத்தமானது எனக் கருதினார். ஏனெனில் கலைப்புலவர் வீடே அரிய கலையம்சங்கள் பொருந்தியதாய் இருந்தது. 

‘கலாநிலையம்’ என்னும் பெயர் அழியாமல் இருக்கவும் அது செய்துவந்த தொண்டுகளை தொடர்ந்து செய்யவுமே திரு கே.சி. தங்கராஜா ‘கலாநிலையம்’ என்னும் அச்சகத்தை தனது மாமனார் இலக்கணம் முத்துக்குமாரத் தம்பிரான் வசித்துவந்த இடத்தில் ஸ்தாபித்தார். இந்த அச்சியந்திரசாலையை ஸ்தாபிக்கும் முன், என்னை இலக்கண சுவாமிகள் பற்றி ஒரு நினைவுமலரைத் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

கலாநிலைய அச்சியந்திரசாலையில் முதன்முதல் அச்சிடப்பட்ட நூல் ‘சுவாமிகள்’ நினைவுமலரே. அச்சுவேலை ஒரு சுபவேளையில் ஆரம்பிக்கப்பட்டது. அச்சுக் கோர்ப்பதற்கு முதல் ‘கொப்பி’யை யானே கொடுத்தேன். அன்று கலைப்புலவர், தம்பர், சீனிவாசகம், வைரமுத்து, தங்கராஜாவின் தாய், சகோதரிகள், ‘இந்து சாதனம்’ ஆசிரியர் திரு.சம்பந்தர் முதலியோர் பிரசன்னமாகியிருந்தனர். கலா நிலைய அச்சியந்திரசாலையிலேயே ‘ஈழநாடு’ வாரப் பதிப்பாக வந்தபோது அச்சிடப்பட்டது. ‘ஈழநாடு’ என்னும் பெயர் வைத்ததற்கு கலைப்புலவருக்கும் பெரும் பங்குண்டு. அவரை ஆலோசியாமல் திரு. தங்கராஜா ஒரு கருமமும் செய்யார்.” 

Eazhanaadu

கே.சி. தங்கராஜா, கே.சி. சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக ‘ஈழநாடு’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961 இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக் கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. 

‘ஈழநாடு’ ஆரம்பமாவதற்கும் அது ஒரு தேசியப் பத்திரிகையாக நிலைபெறுவதற்கும் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளை ஸ்தாபனத் தலைவர் திரு.கே.சி. தங்கராஜா அவர்கள் ‘ஈழநாடு’ பத்தாவது ஆண்டு மலரில் விபரமாக எழுதியிருந்தார். அதில் ஒரு முக்கியமான பகுதி வருமாறு: 

“மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அவரது பேச்சும் தன்னலமற்ற வாழ்வும் ஈழத்தில் – குறிப்பாக யாழ்ப்பாணத்தில் – பல இளம் உள்ளங்களில் நாட்டுப்பற்றை கொழுந்துவிட்டு எரியச் செய்ததோடு அவர் காட்டிய வழியினைப் பின்பற்றி அரசியல், சமூக, பொருளாதார, ஆத்மீக விடுதலைக்காக முன்னின்று உழைக்கவேண்டுமென்ற ஆர்வத்தையும் வளர்த்துவிட்டன. இதே காலகட்டத்தில் கொழும்புத்துறை முனிவரும் வேறு வழிகளைப் பின்பற்றி, பொதுத் தொண்டில் ஈடுபடும்படி மக்களைத் தட்டியெழுப்பினார். 

எனவே இந்த மாபெரும் சக்திகளின் தாக்கத்துக்கு உள்ளான நானும் (கே.சீ. தங்கராஜா) எனது நண்பர்களான கலைப்புலவர் நவரத்தினம், ஏ.ஈ. தம்பர், ச. அம்பிகைபாகன், கா. வைரமுத்து, து. சீனிவாசகம், மு. கதிரவேலு, கே. குமாரவேலு ஆகியோர் கூடி இவைபற்றி வாதிப்பதுண்டு. பத்திரிகையின் மூலம் அரசியல், சமூக பொருளாதார, ஆன்மீக விடுதலைக்கான பணிகளைச் செவ்வனே செய்யமுடியும் என்ற எண்ணம் எங்கள் அனைவரின் உள்ளத்திலும் வேரூன்றி இருந்தது. அதற்கான வழியில் என்னை அறியாமலே என் உள்ளமும் வாழ்க்கையும் செல்வதாயின.

எனது தாய் மாமனோடு இளவயதிலேயே தமிழகம் சென்று துறவுபூண்டு உயர் சமயத் தொண்டும் தமிழ்ப்பணியும் செய்து வந்தவருமான புகழ்பெற்ற இலக்கண சுவாமிகள் என்னும் ஸ்ரீமத் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் அவர்களைச் சிதம்பரத்தில் கடைசியாக 1948 ஆம் ஆண்டு சந்தித்தபொழுது, அச்சகம் ஆரம்பித்துப் பல நல்ல நூல்களை வெளியிடுவது மேலான தொண்டாகும் என்ற எண்ணத்தை என் மனதில் வித்திட்டார்கள். இதே சமயம் இலங்கை அரசியல் விடுதலையடைந்து ஜனநாயக ஆட்சியிலே தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனத்தவரின் நன்மைகளுக்கு ஆபத்து ஏற்படவும் நாட்டின் ஒற்றுமையும் முன்னேற்றமும் தடைப்பட்டு அமைதி குலைந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலே ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆரம்பித்து சிறுபான்மை சமூகங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்திப் பலவகையாலும் நாடு முன்னேறவும் பணியாற்றவேண்டியது மிக அவசியம் என்பதை உணரலானேன்.

அச்சகம் ஒன்றை நிறுவி செய்திப் பத்திரிகையும் வெளியிடவேண்டும் என்ற எனது நீண்டகாலக் கனவு நனவாகக் கூடிய சூழ்நிலை 1956 இல் தான் உருவாகியது. முதல் நடவடிக்கையாகச் சில பழைய அச்சியந்திரங்களை வாங்க முடிந்தது. 1956 ஜுலை மாதம் எனது தங்கையரில் ஒருவருக்குரிய காணியில் காலஞ்சென்ற எனது தாயார் (ஸ்ரீமதி சிற்றம்பலம் தையல்நாயகி) அச்சகக் கட்டிடத்திற்கான அத்திபாரம் இட்டார்கள். 1958 இல் முதல் கட்டிடம் பூர்த்தியாயிற்று. கட்டிடம் முடிக்கப்பெற்று ‘கலாநிலையப் பதிப்பகம்’ என்ற பெயரில் அச்சகமும், பதிப்பகமும் செயல்பட ஆரம்பித்தன. ஸ்ரீமத் இலக்கண முத்துக்குமார தம்பிரான் சுவாமிகளின் நினைவுமலர் தான் இந்த அச்சகத்தில் முதன்முதலில் அச்சேற்றப்பெற்றது. ‘ஈழநாடு’ வார இதழ் கலாநிலையப் பதிப்பக வெளியீடாக 1959 பெப்ரவரியில் முதன்முதலில் வெளிவந்தது.”

‘பத்திரிகைத்துறை: சில நினைவுக் குறிப்புகள்’ என்ற பெயரில் 2002 இல் தான் எழுதிய நூலில் ஊடகவியலாளர் எஸ். பெருமாள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

“இளைஞராகவிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகத் துடிப்போடு செயல்பட்ட வாலிப காங்கிரஸ் (Youth Congress) என்ற அரசியல் அமைப்பும் அவ்வமைப்பின் முக்கிய பிரமுகர்களின் நட்பும் அவரது (திரு.கே.சீ. தங்கராஜா) வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்ததாக அறியமுடிகின்றது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெரும் மதிப்போடு இயங்கிவந்த ‘கலாநிலையம்’ என்ற பண்பாட்டு அமைப்பில் இவருக்கு நெருங்கிய தொடர்பும் ஈடுபாடும் இருந்துள்ளது. கலைப்புலவர் க. நவரத்தினம், எஸ். அம்பிகைபாகன், ரி. சீனிவாசகம், கே. குமாரவேலு, என். பத்மநாதன், எம். கதிரவேலு, ஏ.ஈ. தம்பர், கே.ஸி. தங்கராஜா ஆகியவர்கள் அக்காலத்தில் ‘கலாநிலைய நண்பர்கள்’ என அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது.”

‘ஈழநாடு’ பத்திரிகையுடன் தொடர்புள்ள கே. குப்புசாமி அவர்கள் தாயகம் திரும்பித் தமிழ்நாட்டில் வாழ்பவர். ‘ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை’ என்ற எனது நூலில் தனது கட்டுரையொன்றை ‘ஈழநாடு பணியில் டாக்டர் கே.சி. சண்முகரத்தினம்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அதில் கலைப்புலவரின் நூலகமான ‘கலாநிலையம்’ 1958 இல் ‘கலாநிலையப் பதிப்பகமாக’ உள்வாங்கப்பட்ட செய்தியை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்:

Eazhanaadu Aalamarathin kathai

“திரு.கே.சி. தங்கராஜா, டாக்டர்.கே.சி. சண்முகரத்தினம் ஆகியவர்களின் சகோதரி மகன் பா. சிவானந்தன் அவர்கள் இங்கிலாந்தில் தன்னுடைய அச்சு இயந்திரத்துறையில் உயர்படிப்பை முடித்துக்கொண்டு நாடுதிரும்பியதும் அவருக்காகவும், டாக்டர் குடும்பத்தாரின் மாமாவாகிய இலக்கணச் சுவாமியாரின் சமய, இலக்கிய நூல்கள் சம்பந்தமாக வெளிப்படுத்துவதற்காகவும் ஒரு பதிப்பகத்தை உருவாக்க நினைத்தார்கள். அதன் வெளிப்பாடாக அவர்களது எல்லையிலேயே ஒரு கட்டிடத்தைக் கட்டிமுடித்தார்கள். அக்காலத்தில் கலைப்புலவர் நவரத்தினம் அவர்களின் நூலகமான கலா நிலையத்தையும் ஒன்றுசேர்த்து 1958 ஆம் வருடம் கலா நிலையப் பதிப்பகம் என்னும் ஸ்தாபனத்தை உருவாக்கினார்கள். அதன் முகாமைத்துவத்தை தங்கள் மருமகன் சிவானந்தன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.”

ஈழநாட்டில் பணியாற்றிய பின்னர் இந்தியாவுக்குச் சென்று அங்கே திருச்சியில் வாழ்ந்து மறைந்த பத்திரிகையாளர் கே.ஜீ. மகாதேவா அவர்கள், கே. குப்புசாமியின் செய்தியை உறுதிப்படுத்துவதுடன், மேலதிக ஒளியைப் பாய்ச்சுவதான ஒரு தகவலை ‘ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை’ என்ற நூலில் ‘ஆலமரத்தின் ஆணிவேர் – தங்கர்’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். 

“யாழ்ப்பாணம், வண்ணார் பண்ணை மேற்கில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சிவன் கோவிலுக்குப் பின்புறமாக தமது சகோதரியின் காணியில் அச்சகத் துவக்க வேலைகளை ஆரம்பித்தார். கட்டிடப் பணிகளை கே.சி.ரி. யின் நண்பரும் கட்டடக் கலைஞருமான பெங்களுரைச் சேர்ந்த மனோகர் ராவ் வடிவமைத்தார். கட்டிடம் பூர்த்தியானது. பெயரும் ‘கலாநிலையம் பதிப்பகம்’ என்று சூட்டப்பட்டது. தனது தாய்மாமனின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கும் முகமாக கே.சி.ரி. அவர்கள் ‘ஸ்ரீமத் இலக்கண முத்துக்குமார தம்பிரான் சுவாமிகளின் நினைவுமலரை’ முதலாவது பிரசுரமாக கலாநிலையம் பதிப்பகத்தில் பதிப்பித்து – அச்சேற்றித் தனது பத்திரிகைப் பணிக்கு முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டார். 

கலாநிலைய பதிப்பகம் 1958 இல் தனது கால்களை ஊன்றிய சில மாதங்களில், அதன் வெளியீடாக 1959 பெப்ரவரி மாதம் பதினொராம் திகதி, ஈழநாடு வார இதழாகத் தனது பாதத்தை முழுமையாகப் பதித்தது. பின்னர் வாரம் இரு முறையாகி, சுன்னாகத்திலிருந்து நீண்டகாலமாக வெளிவந்த ஈழகேசரி வார இதழின் ஆசிரியர் இ. அரியரத்தினம் அவர்களை முதல் ஆசிரியராகக் கொண்டு ஈழநாடு குழந்தையானதும், வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் கே.பி. ஹரன் அழைக்கப்பட்டு, ‘ஈழநாடு’ தினசரியின் ஆசிரியராக நியமிக்கப்பட, கல்கி (தமிழ்நாடு) இலக்கிய வார இதழின் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் ‘அரிய இராஜரத்தினம்’ என்று புகழாரம் சூட்டப்பெற்ற இராஜ அரியரத்தினம் அவர்கள் ஈழநாடு வாரப் பதிப்பின் ஆசிரியரானார்.” 

‘கலாநிலையம்”, கலாநிலையப் பதிப்பகத்தினால் உள்வாங்கப்பட்ட வேளையில் கலாநிலையத்தின் அரிய சேகரங்களும் கலாநிலையப் பதிப்பகத்தினைச் சென்றடைந்ததாக பல்வேறு பிரமுகர்களின் குறிப்புகளும் உறுதிப்படுத்துகின்றன. அதன் பின்னர் ‘கலாநிலைய பதிப்பகத்தினர்’ அந்த அரிய நூல்களை என்ன செய்தார்கள் என்பது பற்றிய வரலாற்றுத் தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6747 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)