Arts
12 நிமிட வாசிப்பு

முஸ்லிம்களிடையே வழக்கிலுள்ள தமிழ்க்குடிகள்

August 2, 2023 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் மொத்தமாக மத்தியகிழக்கில் இருந்தோ இந்தியத்துணைக்கண்டத்தில் இருந்தோ வந்து இலங்கையில் குடியேறியவர்களல்ல. அவ்வாறு குடியேற்றத்தின் பொருட்டே அவர்களின் முழு நிலவுகையும் காணப்பட்டிருக்குமாயின் அவர்கள் இலங்கை சனத்தொகையில் பத்து சதவீதத்தை அண்மித்துக் காணப்படுவது சாத்தியமற்றதாகும். அவர்கள் இலங்கையின் பூர்வகுடிகளிலிருந்து திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதன் மூலமாகவும், இஸ்லாமிய வாழ்க்கைநெறியை பின்பற்றத் தொடங்கிய பூர்வகுடிகள் மூலமாகவுமே இது சாத்தியப்பட்டிருக்கின்றது. 

இவர்களின் தாய்மொழி தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்தாலும், தென்கிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் செறிவாகக் காணப்படுகின்றார்கள். இவ்விரு பிரதேசங்களிலும் பூர்வீகமாக தமிழ்மொழியும் பண்பாடும் நிலவிவந்திருக்கின்றது. இவற்றுள் மிகத்தனித்துவமான பண்பாட்டுக்கூறாகவே தாய்வழிக் குடிவழிமுறையைக் குறிப்பிடலாம். கடந்த தொடர்களில் முஸ்லிம்களிடையே வழக்கிலிருக்கும் குடிகளில் முஸ்லிம்களிடையே மாத்திரம் காணப்படும் குடிகளின் பின்னணிகளை பார்த்தோம். இக்கட்டுரை முஸ்லிம்களிடையேயும் தமிழர்களிடையேயும் வழக்கிலுள்ள குடிகளைப்பற்றி நோக்குகின்றது.  

கிழக்கிலங்கையில் இயக்கர், நாகர், திமிலர்கள் போன்ற பழங்குடியினர் வாழ்ந்துவந்த அதேவேளை பின்னர் கலிங்கர், வங்கர், சிங்கர் என இந்தியப்பிராந்தியங்களிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் மக்கள் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது. 

பண்டைய மட்டக்களப்பான சம்பான்துறையை கி. மு. 2 ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த கூத்திகன் காலத்திலிருந்தே சேரநாட்டுக் குடியேற்றம் இப்பகுதியில் ஆரம்பித்துள்ளது. இச் சேரநாட்டுத் தொடர்புகளே மலையாள (கேரள) பண்பாடுகளின் பரவலுக்கும் காரணம் எனலாம். கேரளத்தின் மருமக்கள்தாய முறையிலிருந்து மருவிய கிழக்கின் தாய்வழிக் குடிமரபும் இவ்வாறே தோற்றம்பெற்றது. இதை கேரள ஆய்வாளர் பணிக்கர் அவர்களின் கூற்றிலிருந்து வெல்லவூர்கோபல் இவ்வாறு குறிப்பிடுகின்றார். 

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக கேரளத்தில் (சேரநாடு) இருந்து ஈழ நாட்டுக்கு மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். ஈழத்தின் வடமேற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் இவர்கள் பெருமளவில் குடியேறினர். இவர்களில் முக்குவர்கள் மற்றும் பணிக்கர்கள் முக்கியமான சமூகத்தினராகின்றனர். மலையாளத்து மரபுவழிப் பாரம்பரியங்களையும் கலாசார விழுமியங்களையும் இம்மக்கள் தங்களுடன் கொண்டு சென்றதோடு, மேலும் அவற்றை அவர்கள் அங்கு உயிர்ப்போடு வளர்த்தெடுக்கலாயினர். நமது பண்பாட்டின் உண்மையான வேர்களைக் கேரளம் பெருமளவு படிப்படியாக அழித்துவிட்ட போதிலும் ஈழத்துத் தென் கிழக்குப் பிரதேச மக்கள் அவற்றை இன்றுவரை வளர்த்தெடுத்ததன் மூலம் நமது பாரம்பரியத்திற்கும் அவர்களே பெருமை சேர்த்தவர்களாகின்றனர். ”

மட்டக்களப்புப் பிரதேச குடிகளின் தோற்றம் கேரளத்தில் இருந்து தோற்றம் பெற்றிருக்கின்றது. இங்கிருந்து காலப்போக்கில் குடியேற்றங்கள் படிப்படியாக நிலவிவந்த பொழுது, புதிய குடிகளும் உருவாகி வந்திருக்கின்றன. என்றாலும், இடையே கலிங்க மாகோன் வகுத்த குடிமுறை, குலவிருதுகள் போன்றவை இவற்றை ஒரு முறைமைக்குள் கொண்டுவந்திருந்ததை ஆய்வுகளிலிருந்து அவதானிக்க முடிகின்றது. 

மட்டக்களப்பு பிரதேச முக்குவர்களிடையே வழக்கிலிருக்கும் ஏழு குடிகளாக,

  1. உலகிப்போடி குடி
  2. காலிங்கா குடி
  3. படையாண்ட குடி
  4. பெத்தான்ட குடி
  5. பணிக்கனா குடி
  6. கச்சிலா குடி
  7. பெத்தான்ட படையாண்ட குடி 

ஆகியன உள்ளன என்று எஸ். ஓ கனகரத்தினம் குறிப்பிடுகின்றார். (Canagarathinam S. O 1912 : 36)

  1. கண்டன் குடி
  2. சருகுபில்லி குடி
  3. கட்டப்பத்தன் குடி
  4. கவுத்தன் குடி
  5. அத்தியாயன் குடி
  6. பொன்னாச்சி குடி
  7. வயித்திகுடி குடி 

என்று மாகோன் வகுத்த கல்வெட்டுப்பாடலில் முக்குவக் குடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. (நடராசா எப். எக்ஸ். சி 1964 : 101)

இதேபோல முக்குவக் குடிகளில் பணிக்கனார், மாளவன், முரண்டர் குடி, சட்டிலான், தனஞ்சயன், கச்சிலான் பெத்தான், வில்லவராயன் குடி, கோப்பி குடி என இந்தக்குடிகள் வேறு பெயரிலும் அல்லது வேறு குடிகளாகவும் ஊருக்கு ஊர் மாறுபட்டுக் காணப்படுவதாக எப். எக்ஸ். சி. நடராசா குறிப்பிடுகின்றார். (நடராசா. எப். எக்ஸ். சி 1980 : 53) இவ்வாறே காலத்துக்குக்காலம் தோற்றம் பெற்ற வெள்ளாளக்குடிகளும் இங்கு பரவலாயின.

கிழக்கில் முஸ்லிம்களும், தமிழ் மக்களும் கொண்டுள்ள ஒத்த பண்பாட்டம்சங்களில் இந்தக் குடிவழிமுறைகள் முக்கியமானவை. இங்கு பிரதானமாகக் காணப்படும் தமிழர் வரலாற்றோடு இணைந்ததாகக் கூறப்படும் குடிகளினை அவதானிக்கலாம். 

மாமனாப்போடி குடி – மாமன்னர்போடி குடி – மாமனாப்பிள்ளைகுடி

இந்தக்குடி தென்கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்று, ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது  ஆகிய கிராமங்களில் காணப்படுகின்றது. பொலநறுவை இலங்கையின் வரலாற்றுக்கால இரண்டாவது தலைநகரமாக விளங்குகின்றது. சோழப் படையெடுப்பின் பின் சோழர்களால் கைப்பற்றப்பட்டு ஜனநாதமங்களம் என்று பெயர்மாற்றம் பெற்றுள்ளது. பின்னர் விஜயபாகு ஆட்சிக்காலத்தில் விஜயராஜபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இது புலஸ்தி நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. இங்கு குறிப்பிடப்படுகின்ற ‘புலன்’ என்ற பெயர் யாரைக் குறிப்பிடுகின்றது என்பது பற்றி மேலதிக தகவல்கள் இல்லையெனினும். 3 ஆம் அக்கபோதி, 4 ஆம் அக்கபோதி, 2 ஆம் சேன ஆகிய அநுராதபுர அரசர்கள் ஓய்வுகாலத்தை கழிக்க இந்நகரை ஆரம்பகாலங்களில் பயன்படுத்தியதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இது ஒரு போர்ப்பாசறை நகராகவும் இருந்துள்ளது. 

பொலநறுவையை ஆட்சிசெய்த ‘புலன்’ என்ற ஆட்சியாளன் அடிக்கடி கிழக்கிற்கு விசயம் செய்து பெண்களைக் கவர்ந்து செல்வதாகவும், பின்னர் பாட்டாணியர்களின் உதவி கொண்டு இவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாகவும், இந்தக்குடியின் தலைவரின் பெயர் மாமன்னன் என்றிருந்தமையினால் இந்தக்குடி மாமன்னர் போடி குடி என்றழைக்கப்பட்டதாகவும் சம்மாந்துறையைச் சேர்ந்த குடிவரலாற்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இந்தக்குடியைச் சேர்ந்தவர்கள் தமது அழகிய பெண்மக்களைப் பாதுகாக்க தந்திரமொன்றை மேற்கொண்டு வந்ததாகவும் அறிய முடிகின்றது. அரசனும் பிரதானிகளும் ஊருக்குள் நுழைவதை அறிந்தவுடன் இவர்கள் பறைமேளங்களை எடுத்து வாசலில் வரவேற்பதற்காக இசைத்துக் கொண்டிருப்பார்களாம். இவர்களைக் கண்ட பிரதானிகள் இவர்கள் பறையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணி வேறு வழியால் சென்றுவிடுவதனால் இவர்கள் சிலகாலம் தப்பி வந்துள்ளனர். இதனால் ஏனைய குடியினர் இழிவரலுக்காக இவர்களை பறக்குடியினர் என்று அழைத்துள்ளனர். அத்தோடு “பாப்பார் குலத்திலையம் பறையர் குடி மேற்குலமாம், கேப்பார் இல்லாம கீழ்சாதியாகிட்டாங்க”  என்று இவர்களின் அக்கால நிலையை கூறுவதான பழமொழியும் இப்பிராந்தியத்தில் நிலவிவருகின்றது. 

இந்தக் குடிப்பெண்களை முஸ்லிம் வர்த்தகர்கள் மணமுடித்தமையினால் இந்தக் குடி அதே பெயருடன் முஸ்லிம்களிடையேயும் வழக்கிலிருந்து வருகின்றது. சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் மாமனாப்போடி குடி என்றும் அக்கரைப்பற்று, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் மாமனாப்புள்ள குடி என்றும் அழைக்கப்படுகின்றது. 

இந்தக்குடியைச் சேர்ந்த பெரியாப்பெத்தா என்பவர் சிரங்குகளை குணப்படுத்தப் பிரார்த்தனை புரிந்து வந்ததாகவும், இவருக்காக கண்ரொட்டி செய்து கொண்டு வந்து கொடுக்கும் வழக்கம் ஒரு காலத்தில் காணப்பட்டதாகவும் இதைத்தொடர்ந்து இந்தக்குடிப் பெண்கள் சிலரும் இப்பரிகாரமுறையை செய்து வந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. 

படையான் குடி – பெரியபடையாண்ட குடி –  பெத்தான்டபடையான் குடி

இந்தக்குடி தென்கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய கிராமங்களில் காணப்படுகின்றது. கலிங்கமன்னரின் படைத்தலைவர்களாக பணிபுரிந்தவர்களின் தாய்வழி சந்ததிகள் படையாட்சிக் குடியினர் என்று அழைக்கப்படுகின்றனர். மேலும் சோழராட்சிக் காலத்திலும் இவர்களின் குடியேற்றம் அதிகம் நிலவியிருப்பதாகவும் இந்திய வன்னியர் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு வெல்லவூர் கோபால் குறிப்பிடுகின்றார். 

இந்தக்குடி சம்மாந்துறையில் பெரிய படையான் குடி, பெரியபடையாண்ட குடி என்று இரண்டாகக் காணப்படுகின்றது. இது பெத்தாண்ட படையான் குடி எனப்படும் முக்குவ குடியிலிருந்து தோற்றம் பெற்றதாக அறியமுடிகின்றது. இதே போல் தமிழர்களிடையேயும் வீரியப்படையாண்ட குடி, சூரியப்படையாண்ட குடி, காரியப்படையாண்ட குடி, சின்னப்படையாண்ட குடி, பெரியபடையாண்ட குடி போன்ற பல்வேறு உபபிரிவுகள் தோன்றியுள்ளன. 

உலகிப்போடி குடி – உலகநாச்சி குடி

குணசிங்கனது ஆட்சிக்காலத்தில் மேகவண்ணணிடம் கையளிப்பதற்காக புத்தரின் தசனத்தை கொண்டு வந்ததாகக் குறிப்பிடப்படும் கலிங்க இளவரசி உலகநாச்சி பின்னர் மண்முனையில் சிற்றரசமைத்து வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவரது காலத்திலேயே உலகநாச்சி குடி தோற்றம் பெறுகின்றது. முஸ்லிம்களிடையே உலகிப் போடி என்ற பெயரில் மருதமுனை, சம்மாந்துறை ஆகிய கிராமங்களில் இந்தக்குடி புழக்கத்திலுள்ளது. 

பணிக்கர்குடி – பணிக்கனார்குடி

இந்தக்குடி சம்மாந்துறை, கல்முனைக்குடி ஆகிய ஊர்களில் காணப்படுகின்ற அதேவேளை கற்குடாவில் பணிக்கர் குடும்பம் என்ற தத்தியும் காணப்படுகின்றது. அதேவேளை அதிகளவில் காட்டுயானைகளை பழக்கிய பணிக்கர்கள் காணப்பட்ட இறக்காமம் பிரதேசத்தில் பணிக்கனார் குடி காணப்படவில்லை. 

பணிக்கர்குடியைப் பொறுத்தவரை கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் சேர நாட்டிற்கு விஜயம் செய்த கஜபாகு மன்னன் திரும்பி வரும்போது சேரக்குடிகளைக் கொணர்ந்ததாகவும் அவர்களில் படைகளுக்கு யானைகளைப் பயிற்றும் பணிக்கர்களின் சந்ததிகளாக அல்லது சேர நாட்டைச் சேர்ந்த சேனன், கூத்திகன் ஆகியோரின் குடியேற்றத்தின் போது கொண்டுவரப்பட்ட கேரள நாட்டவர்களாகவும் இவர்கள் இருந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்களிடையே கருத்துகள் நிலவுகின்றன. (வெல்லவூர் கோபால் 2005)

பணிக்கர்களில் யானைப் பணிக்கர்களும், மாட்டுப் பணிக்கர்களும் காணப்பட்டுள்ளனர். கிழக்கிலங்கையின் தாவள வர்த்தகத்திற்காக காட்டு மாடுகளைப் பழக்கி எடுக்கும் மாட்டுப்பணிக்கர்கள் வர்த்தகத்திலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளனர். இந்தக்குடியும் தமிழ் மக்களிடம் இருந்து முஸ்லிம்களிடம் பரவிய குடிவழிமுறையாகும். 

pannikkar

மழுவரசன்குடி

இந்தக்குடி சாய்ந்தமருது முஸ்லிம்களிடையே காணப்படும் அதேவேளை அக்கரைப்பற்று, பாண்டிருப்புப் பகுதிகளில் தமிழர்களிடையேயும் காணப்படுகின்றது. இவர்களும் சேரநாட்டு வன்னிய மரபினரும் கூத்திகன் காலத்திலும் சோழராட்சிக் காலத்திலும் குடியேறியிருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. 

கச்சனாஓடாவி குடி – தச்சனாஓடாவி குடி – கச்சனா குடி- கச்சிலார் குடி 

கச்சனா குடி எனப்படும் குடியும் சோழராட்சிக்காலத்தில் படைவீரர்களின் வழிவந்த குடியாக கருதப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் கச்சனா என்பது காஞ்சி நகரத்தைக் குறிப்பிடுவதாக இரண்டாம் மாறவர்ம விக்ரமபாண்டியனின் மெய்கீர்த்தியை மேற்கோள் காட்டி வெல்லவூர் கோபால் குறிப்பிடுகின்றார். இந்தக்குடி அக்கரைப்பற்று, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப்பகுதி முஸ்லிம்களிடையே வழக்கில் உள்ளது. அக்ரைப்பற்றில் தச்சனா ஓடாவி குடி என்றும் சம்மாந்துறையில் கச்சனா ஓடாவிகுடி என்றும் சாய்ந்தமருதில் கச்சனாகுடி என்றும் வழங்கப்படுகின்றது. அதேவேளை சம்மாந்துறையில் ஓடாவிகுடி என்பது கச்சனா ஓடாவி குடி, காலிங்க ஓடாவி குடி, நெய்னா ஓடாவி குடி என மூன்றாகக் காணப்படுகின்றது. ஏனைய ஊர்களில் பொதுவாக ஓடாவி குடி என்றே காணப்படுகின்றது. சம்மாந்துறை குடிவழிமுறை ஆய்வாளர் அப்துல் றாஸிக் அவர்கள் கச்சனா ஓடாவி குடி என்பது தச்சுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட தச்சன் என்ற சொல்லினடியாற் பிறந்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இவைதவிர சின்னக்கதிரன் குடி, சேனன் குடி, களனி குடி, சாயக்காரன் குடி, காளிக் குடி, சங்கரப்பத்தான் குடி, மூத்தநாச்சி குடி, பொன்னாச்சி குடி, அம்மாநாச்சி குடி, வைத்தியநாச்சி குடி, ஓடாவி குடி போன்ற பலகுடிகள் தமிழ்பாரம்பரியத்தைக் கொண்டவை. பெரும்பாலான குடிவரலாறுகள் தொன்மங்களை அடிப்படையாக கொண்டவை. இவற்றிற்கான விஞ்ஞானபூர்வ வரலாற்று ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டியவையாகும். குடிவழிமுறை தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுகள் இவற்றை நோக்கியதாக அமைவது பல வரலாற்றுப் புதிர்களுக்கு விடையளிக்கும்.

உசாத்துணைகள்

  1. அப்துல் றாஸாக், எஸ். (2012). முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை, சம்மாந்துறை குடிமரைக்காயர் சம்மேளனம். 
  2. கந்தையா, வீ.சீ. (1964). மட்டக்களப்பத் தமிழகம், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம். இலங்கை.
  3. கோபாலசிங்கம், எஸ். 2005. மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம், மனுவேதா, மட்டக்களப்பு.
  4. நடராசா, டிப்.டிக்ஸ்.சி. (1980). மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், இந்து வாலிபர் முன்னணி, மட்டக்களப்பு.
  5. Canagaratnam, S.O. (1921). Monograph of Batticaloa District of the Eastern Province, Ceylon, HR Cottle.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7306 பார்வைகள்

About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)