Arts
23 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 4

September 8, 2023 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

க.மு.செல்லப்பாவின் யாழ்ப்பாண மத்திய இலவச தமிழ் நூற் கழகம்

நகுலேஸ்வரா படிப்பகம் திறக்கப்பட்ட காலகட்டத்தின் பின்னரும் சரி அதற்கு முன்னரும் சரி, குடாநாட்டு பல்வேறு அறிஞர்களின் வீடுகளில் குடும்ப நூலகங்கள் இருந்துள்ளன என்பதை பல்வேறு வகையிலும் அறியமுடிகின்றது. இன்றும் பிரித்தானிய நூலகத்தில், எமது மூதாதையர் பலரின் தனிப்பட்ட சேகரிப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் பிறந்த சேர். முத்து குமாரசுவாமி (Muttu Coomaraswamy, 23.01.1833 – 04.05.1879) பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்துச் சேவை புரிந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி சட்டவாக்கப் பேரவையின் முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். ஆசியாவில் பிறந்து முதன் முதல் “சேர்” பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் முத்துக்குமாரசுவாமி. சேர் முத்துக் குமாரசுவாமியின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஆவார். இவர்கள் இருவரினதும் தனிப்பட்ட சேகரிப்புகள் பிரித்தானிய நூலகத்திற்கு வழங்கப்பட்டு, இன்றும் எம்மால் லண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் பார்வையிட முடிகின்றது. 

பிரித்தானிய நூலகம் போன்ற பிரபல நூலகங்களிடம் சேர்ப்பிக்கும் வழி அறியாதவர்களும், அதற்கான சக்தியற்றவர்களும், தமது சேகரங்கள் வெளிநாடுகளைச் சென்றடைவதில் விருப்பமற்றவர்களும் தமது குடும்ப சேகரிப்புகளை முன்னீடாக வைத்து வாசிகசாலைகளை உள்ளூரிலேயே ஆங்காங்கே ஆரம்பிக்கத் தலைப்பட்டனர். பல்லாண்டுகளாக சேகரிக்கப்பட்டுத் தமது மூதாதையரினால் அடுத்த தலைமுறைக்கு பெட்டகங்களிலும், பிற வழிவகைகளிலும் கடத்தித் தரப்பட்டு தத்தம் இல்லங்களில் போற்றிப் பாதுகாக்கப்பட்டுவந்த ஏடுகளையும், நூல் தேட்டங்களையும் திரட்டி, சாதாரண பொதுமக்களும் படிக்கக்கூடிய நூலகங்கள் ஆங்காங்கே திறக்கப்பட வேண்டும் என்ற வேணவா படித்த மக்களிடையே  அக்காலகட்டத்தில் வெளிக்கிளம்பியிருந்தது. 

பிரித்தானியர் காலத்தில் நீதித்துறைச் சூழலிலும், கிறிஸ்துவ மிஷனரிச் சூழலிலும் இத்தகைய ஐரோப்பிய பாரம்பரிய நூலக கட்டமைப்புகள் கருக்கொண்டு செயற்படுத்தத் தொடங்கிய 19 ஆம் நூற்றாண்டுக்காலப் பகுதியில் தான் அச்சுவேலியைச் சேர்ந்த க.மு.செல்லப்பா என்ற தமிழ் அறிஞர் தம்மிடமிருந்த ஏராளமான நூல்களைக் கொண்டு ஒரு நூலகம் நிறுவ முன்வந்தார். யாழ்ப்பாண மாவட்ட நீதி மன்றத்தின் சக்கடத்தார் என்னும் காரியதரிசிப் பதவியிலிருந்தவர். இவரும் நீதிமன்றச் சூழலில் இருந்து வெளிவந்தவரே. அவர் கந்தர்மடத்துச் சந்திக்கு மேற்கில் உள்ள குத்தகைக்காரன் வளவு என்னும் வாடகை மனையில் வாழ்ந்து வந்தார்.

தனிப்பட்டவர்களின் இல்லங்களில் அதுவரை சேகரிக்கப்பட்டு வந்த நூல்களை அங்கு வாழும் பிற மக்களின் அறிவைப் பரப்பும் நோக்கத்துடன் எல்லோரும் படிப்பதற்குரிய பொது இடத்திலே வைக்கவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே படிப்படியாக இக்கால கட்டத்தில் வளரத் தொடங்கியது. இதனால் குறிப்பிட்ட சில நூல் நிலையங்களுக்கு அதனைக் கொடுத்துதவினார்கள். அதில் க.மு.செல்லப்பாவின் நூலகமும் பயன்பெற்றது.

‘யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம்’ என்ற பெயரில் அமரர் க.சி.குலரத்தினம் எழுதிய கட்டுரைத் தொடர் ஈழநாடு தினசரியில் 20.7.1982 முதல் 18.8.1982 வரை 29 வாரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது. இத்தொடர் சடுதியாக ஈழநாடு நிர்வாகத்தினால் ‘இனித் தொடராது’ என்ற குறிப்புடன் நிறுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டுவரை ஆவணப்படுத்தப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தின் வரலாறு கூறிய அந்த ஒரே ஆவணத்தினைத் தொடர்ந்திருந்தால் அது 1981 இல் எரியும் வரையிலான விரிவான வரலாற்றுப்பதிவாக எமக்குக் கிட்டியிருக்கும். அக்கட்டுரையின் மகிமை அறிந்திராத ஈழநாடு நிர்வாகம் அத்தொடரை ஒரு மாதத்திலேயே இடைநடுவில் நிறுத்தியமை ஒரு வரலாற்றுத் தவறாகும். 

kularathinam

அமரர் க.சி.குலரத்தினம் அவர்கள் “யாழ்ப்பாணத்துப் பொதுசன நூல் நிலையம் 11-11-1933 இல் உதயமாகி ஒரு கொட்டிலில் தவழ்ந்து, ஒரு கடையில் எடுத்தடி வைத்து, இன்னொரு கடையில் சிறு நடை நடந்து, ஒரு வீட்டின் மாடியில் ஒடியாடித் திரிந்து, ஓர் அழகிய மாடிக் கட்டிடத்தில் ஒளிவீசி உலகப் புகழ் பெற்றது.” என்று தனது கட்டுரையை தொடங்குகின்றார். 

அக்காலத்தில், கந்தர்மடத்தில், முன்னேற்றத்து முதல் நூற்றுவர் கழகம் (The Progressive hundred ) என்ற பெயரில் வாசகர் அமைப்பொன்று இயங்கிவந்தது. நூற்றுவர் கழகத்து இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் பழக்கியவர் பெரியார் க.மு.செல்லப்பா அவர்களே. பின்னாளில் யாழ்ப்பாணம் நீதி மன்றத்துக்கு அண்மையிலேயே ‘லங்கா ஹோம்’ என்னும் மனையில் அவர் வசிக்கத் தொடங்கினார். அங்கிருந்து அவர் 11-12-1933 ஆம் நாளில், தமிழர் தேசிய அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட விண்ணப்பப் பத்திரங்கள் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் உலவிவந்தன. ‘யாழ்ப்பாணத்துக்கு ஒரு மத்திய இலவச தமிழ் வாசிகசாலையும் நூற்கழகமும்’ (A Central Free Tami Library in Jaffna) என்பதே அத்துண்டுப் பிரசுரத்தின் தலைப்பு. செல்லப்பா அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி பொது மக்களிடம் நிதி சேர்ப்பதற்கு விண்ணப்பித்த படிவங்களில் தமது விடுதி விலாசத்தையும், உத்தியோக விலாசத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுத் துலாம்பரமாகத் தமது கையொப்பத்தையும் கறுப்பு மையால் இட்டிருந்தார். செல்லப்பா அவர்கள் விடுத்த விண்ணப்பத்தின் முன்னோடியாக அவர் ‘இந்து சாதனம்’ என்னும் பத்திரிகையிலும், ‘சிலோன் பிறீ பிறெஸ்’ என்னும் பத்திரிகையிலும் விளம்பர வடிவில் விண்ணப்பித்துமிருந்தார்.

sellappa

செல்லப்பா அவர்கள், யாழ்ப்பாண மத்திய இலவச தமிழ் நூற்கழகம் சம்பந்தமாக விடுத்த விளம்பரத்தின்படி 09.06.1934 இல் யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிகழ்ச்சிகளாக நூலகச் சபை ஆரம்பித்தலும் உத்தியோகத்தர் தேர்வும், அமைப்பாளர் செல்லப்பா அவர்கள் அறிக்கை படித்தலும், பெரியவர் பேச்சும் இடம் பெற்றன. 

உத்தியோகத்தர் தெரிவு கண்ணியமாகவும் பரந்த அடிப்படையிலும் நடைபெற்றது. தலைவராக அன்றைய மாவட்ட நீதவான் சி. குமாரசுவாமி அவர்கள், உப தலைவராக வணக்கத்துக்குரிய கலாநிதி தம்பையா அவர்கள், இணைச் செயலாளராக அப்புக்காத்தர் சி. பொன்னம்பலம் அவர்களும் சக்கடத்தார் க. மு. செல்லப்பா அவர்களும் தெரியப் பெற்றார்கள். தனாதிகாரிகளாக சிறாப்பர் முதலியார் வேலுப்பிள்ளை அவர்களும் தபாலதிபர் முத்தையா அவர்களும் தெரியப் பெற்றார்கள். நிர்வாக சபையினராக வட மாநிலக் கல்வியதிகாரி அருணந்தி, வணக்கத்துக்குரிய மிடில்ரன் லீவர், நெவின்ஸ் செல்லத்துரை, முடிக்குரிய புரொக்ரர் கனகசபை, மேலதிக நீதவான் சின்னத்தம்பி, புரொக்ரர் ஆர். ஆர். நல்லையா, இந்து போட் இராசரத்தினம், அப்புக்காத்தர் நைல்ஸ், வணக்கத்துக்குரிய ஞானப்பிரகாசர், பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் நடேசபிள்ளை, தெல்லிப்பளை புரொக்டர் வி.குமாரசுவாமி, மானிப்பாய் இந்து கல்லூரி அதிபர் ப. வீரசிங்கம், வட்டுக்கோட்டை உப அதிபர் கே. வி. செல்லையா, மத்திய கல்லூரி அருட்பிரகாசம், சென். யோன்ஸ் கல்லூரி ஏ.எம்.கே. குமாரசுவாமி, புலோலி சைவப் பெரியார் சிவபாதசுந்தரம், முதலியார் வை. சுப்பிரமணியம், புரொக்ரர் ப. முருகேசபிள்ளை, ஜனாப் அபூபக்கர், புறொக்ரர் ப. இராமலிங்கம், புறொக்ரர் ப. நாகலிங்கம் ஆகியோர் தெரியப் பெற்றனர். கணக்குப் பரிசோதகர்களாகக் கச்சேரி உத்தியோகத்தர் ஏ. முத்துத்தம்பி, எஸ். தம்பி ஆகியோர் தெரியப் பெற்றனர். கூட்டத்தில் தலைவர் அவர்களும், கல்வியதிகாரி அருணந்தி அவர்களும், வெஸ்லியன் மிஷன் தலைவர் வணக்கத்துக்குரிய மிடில்ரன் லீவர் அவர்களும், ஏ. மகாதேவன் அவர்களும், முடிக்குரிய புறொக்ரர் கனகசபை அவர்களும், அப்புக்காத்தர் சி.பொன்னம்பலம் அவர்களும் நூலகத்தின் இன்றியமையாமை பற்றியும் அமைப்பு முறை பற்றியும் ஆராய்ந்து பேசினார்கள்.

முடிக்குரிய புறொக்ரர் கனகசபை அவர்கள் முக்கியமாகப் பலவிடயங்களைக் குறிப்பிட்டு, வாசிகசாலை உருவாவதைப் பிரேரணை ஒன்றின் மூலம் முன் மொழிந்தார். “That a Central free Tamil Library Association be formed with the Original Subscribers and others who are present at this Meeting as Original Members of the Association.” இப்பிரேரணை, கல்வியதிகாரி அருணந்தி அவர்கள் வழிமொழிய ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பெற்றது. (யாழ்ப்பாண நுல்நிலையம்-ஓர்ஆவணம், க.சி.குலரத்தினம், 1997).

அன்றைய தினத்தில் ஏட்டுச் சுவடிகளை வாங்கிப் பாதுகாப்பது என்ற தீர்மானமும் அங்கு நிறைவேற்றப்பட்டது. 01.08.1934 முதல் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள ஒரு சிறிய வாடகை வீட்டில் படிப்பகமும் நூலகமும் செயற்படத் தொடங்கின. அடுத்த ஆண்டு ஜனவரியில் க.மு.செல்லப்பாவின் நூலகம் பிரதான வீதிக்கு இடம் மாறியது. 1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாண நகரசபைக் கட்டடம் நிறுவப்பட்ட போது, ஏராளமான நூல்கள், ஆவணங்களைத் தன்னகத்தே கொண்டிருந்த க.மு.செல்லப்பாவின் இந்த நூலகமும் நகர சபையின் சூழலில் இயங்க ஆரம்பித்தது. இந்நிலைமை ஓரிரவில் உருவாகவில்லை. க.மு.செல்லப்பா அவர்கள் முன்னைய நாளில் நிகழ்ந்த கூட்டத்தையொட்டி ஒரு அறிக்கையை ஆங்கிலத்தில் எழுதி வாசித்திருந்தார். அவ்வறிக்கை எமக்கு அன்றைய காலகட்டத்தின் சூழலை ஓரளவு காலப்பயணத்தில் பின்நோக்கிச் சென்று உய்த்துணர வைக்கின்றது.

ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் தமிழார்வமுள்ள பொதுமக்களுக்கும் உதவும் வகையில் இத்தகைய நூலகம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும் என அவர் உணர்ந்து, பொறுப்பு வாய்ந்த பெரியவர்கள் பலருடன் கலந்தாலோசித்துப் பத்திரிகைகள் மூலம் பணம் திரட்டுவதற்கு முயற்சி செய்துள்ளார். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் வெளியான எல்லா நூல்களையும் விலைக்கு வாங்குவதோடு முக்கியமான ஆங்கில நூல்களையும் வாங்குதல் வேண்டும் என்பதும் அவரது விருப்பமாகவிருந்தது. இந்நூலகம் பரந்த அளவில் உசாத்துணை (Reference) நூலகமாகவும் பயன்தர வேண்டும் என்ற நோக்கில், பழைய ஏட்டுச் சுவடிகளையும் தேடிச் சேகரிக்க முயற்சி செய்துள்ளார்.  

இந்நூலகத்தை நல்ல முறையில் அமைப்பதற்கு நண்பர்களின் ஆலோசனைகளுக்கிணங்கக் குடாநாடெங்கும் நிதிதிரட்டுவதற்கான ஒழுங்கைச் செய்ததுடன், இலங்கையின் ஏனைய பாகங்களிலும், மலேசியாவிலும் அன்பர்களிடம் இருந்து நிதி சேகரிக்க ஒழுங்கு செய்துள்ளார். அவ்வகையில் தன்னிடம் ரூபா 1184.22 சேர்ந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதில் பூர்வாங்கச் செலவாக ரூபா 181.81 போக மிகுதி ரூபா 1002.41 ஐ, இலங்கைத் தேசிய வங்கியில் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர்களும் பெரியவர்களும் இந்நூலகத்தை உள்ளூராட்சி மன்றத்திடம் அல்லது அரசாங்கத் திணைக்களத்திடம் ஒப்புவிக்கலாம் என்று ஆலோசனை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 

“தனிப்பட்ட ஒருவர் தம் பணத்தை இதில் செலவிடுதல் முறையாகாது. எங்கள் தமிழினத்தார் எமக்குப் போதியளவு உதவி செய்வதாகக் கூறியுள்ளார்கள். நூல்நிலையம் நல்ல முறையில் உருவாகும். ஊர்கள் தோறும் வாசிகசாலைகள், நூல்நிலையங்கள் உருவாதல் வேண்டும். அவையாவும் மத்திய நூலகம் ஒன்றோடு ஒருங்கிணைந்து சேவை செய்தல் வேண்டும். கிராம சபைகள் நிறுவப்பெற்று பதினான்கு ஆண்டுகள் கழிந்தும், இன்றுவரை ஒரு கிராம சபையாவது எங்காவது இலவச வாசிகசாலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சி எடுக்கவில்லை. ஊர் மக்கள் தங்கள் பிரதிநிதிகளிடம் இலவச வாசிகசாலை-நூலகத்தைப் பற்றி வற்புறுத்தல் வேண்டும். யாழ்ப்பாண நகரிலேயே எங்கள் நகரசபை இதுவரை நகர மாந்தர் படிப்பதற்கான வாசிகசாலை அல்லது நூலகம் ஒன்றை ஆரம்பிக்கவில்லை. இதனை நகரசபைத் தலைவருக்கு நான் சுட்டிக்காட்டிய பின் அவர் இதற்காவன செய்வதற்கு உபகுழுவை அண்மையில் நியமித்துள்ளார்.”

“நான் கௌரவ கல்வி மந்திரியாருக்கு நிதியுதவி கோரி விண்ணப்பித்துள்ளேன். அவர் என் வேண்டுகோளைப் பரிசீலனை செய்து வருகிறார். நான் உள்ளூராட்சி மன்றங்களிடையேயும் உதவி நிதிகோரி விண்ணப்பித்துள்ளேன். ஆங்கிலம் பயில்வதற்குப் பலவித வசதிகளோடு கூடிய பெரிய கல்லூரிகள் நிலவுகின்ற அளவுக்குச் செந்தமிழ் பயில்வதற்கு பெரிய தமிழ்க் கல்லூரிகள் எங்கள் நாட்டில் இல்லாமை வேதனைக்கு உரியதாகும். இன்று வடமாகாணத்தில் ஏறக்குறைய 300 தமிழ்ப் பாடசாலைகள் V.S.I.C. என்னும் வகுப்போடு கல்வித் தரத்தை நிறைவு செய்கின்றன. மாணாக்கர் தங்கள் V.S.I.C. பரீட்சைக்கு விதிக்கப் பெற்ற பாடநூல்களைத் தவிர வேறு நூல்களை மனங்கொண்டு படிப்பதாகத் தெரியவில்லை. இன்று V.S I.C. சித்தியடைந்து ஆசிரியப் பயிற்சி பெற்றுக் கல்வி கற்பிப்போர், ஏறக்குறைய 1500 பேர் வட மாகாணத்தில் வாழ்கின்றார்கள். இவர்கள் தம்முட் கலந்து இதுவரை ஒரு நூல் நிலையத்தையாவது உருவாக்கவில்லை. இவ்வாறான காரணங்களைக் கொண்டு நாம் எங்கள் நகரில் ஒரு நூல் நிலையத்தை ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனக் கருதினோம். எமக்கு வேண்டிய மூலநிதியை நாம் இலகுவாகப் பொதுமக்களிடையே திரட்டிக் கொள்ளலாம். பூநகரி மக்கள் தாராள மனத்தோடு 40 ரூபா திரட்டி அனுப்பியுள்ளார்கள். யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு பாடசாலையும், ஒவ்வொரு கிராம சபையும், ஒவ்வொரு சமூக நிறுவனமும், தனிப்பட்டவரும் தங்களால் இயன்றளவு நிதி திரட்டி உதவினால் சிறுதுளி பெருவெள்ளமாகும் வகையில் பெருநிதி சேரும். நான் இதுவரை பொதுமக்களிடம் நூல் நிலையத்துக்காகத் திரட்டிய பணவிபரம், செலவு விபரம், மிகுதிப் பணம் என்பனவற்றை உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்” என்று க. மு. செல்லப்பா அவர்கள் 09-06-1934 அன்று ஆங்கிலத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

அவரது விடாமுயற்சியினால் உருவான நூல் நிலையச் சபையின் பெயர் ‘மத்திய இலவச தமிழ் வாசிகசாலைச் சங்கம், யாழ்ப்பாணம்’ என்பதாகும். இச்சங்கத்தின் நோக்கங்கள் அவர் அறிக்கையில் குறிப்பிட்டவாறு ஆறு படிமுறைகளைக் கொண்டிருந்தது.

  1. தமிழ்க் கல்வியை மறுமலர்ச்சி செய்து ஊக்கப்படுத்தி வளர்த்தல்.
  2. பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தல்.
  3. பழைய ஓலைச் சுவடிகளான ஏடுகளை விலை கொடுத்து வாங்கிப் பக்குவப்படுத்திப் பயன் செய்தல்.
  4. தமிழ்மொழி சம்பந்தமான ஆராய்ச்சி முயற்சிகளை வழக்கப்படுத்தி, அதற்கான வசதி வாய்ப்பினை நல்குதல்.
  5. தமிழ் மொழியிலுள்ள நூல்களை வேறு மொழிகளில் மொழிபெயர்த்து எழுதியும், வேறு மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் எழுதியும் பயன் செய்தல்.
  6. யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்தையும் வாசிகசாலையையும் அமைத்து நடத்துதல், நூலகம் உடனுதவும் தன்மையில் பிரதானமாகத் தமிழ் நூல்களைக் கொண்டதாகவும், ஓரளவுக்கு ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி நூல்களைக் கொண்டதாகவும் இயங்குதல். இருபத்தொரு வயதுக்கு மேற்பட்ட சகல ஆண் பெண் இருபாலாரும் மாதம் இருபத்தைந்து சதம் செலுத்தி அங்கத்தவராயிருந்து பயன்பெறலாம். தலைவர், உபதலைவர்கள் இருவர். இணைச் செயலாளர், தனாதிகாரிகள், இன்னும் பன்னிரு தெரியப்பெற்ற சபையினர் நூலக வாசிகசாலை முகாமையாளராயிருப்பர். 

இவ்வாறமைந்த பிரமாணங்களோடு இன்னும் பல உபவிதிகள் அமைந்த இறுக்கமான யாப்பு நூலக-வாசிகசாலைப் பரிபாலனத்துக்குத் தொகுக்கப் பெற்றுப் படித்து நிறைவேற்றப் பெற்றது. காரிய நிர்வாக சபையினர் அனுமதியின் படி அதில் 100 பிரதிகள் அச்சடிக்கப்பெற்றன.

kannankara

நேர்மையும் நிர்வாகத் திறமையும், கனிவான பேச்சும், நல்ல பண்பாடும் உள்ள க.மு.செல்லப்பா அவர்களின் வேண்டுகோளை மக்கள் வெகுவாக விரும்பினர். பலர் தங்கள் வீட்டில் தமக்குப் பயன்படாது கிடந்த பழைய புராண-இதிகாசப் பெருநூல்களை நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்தனர். அன்பளிப்புச் செய்த முன்னோடிகளுள் நல்லூர் வித்தியாதரிசி கந்தையா, நாயன்மார்க்கட்டு வைத்தியர் இராமநாதன், வணக்கத்துக்குரிய ஐசாக் தம்பையா என்போர் முதலில் உதவினர். இவர்களைத் தொடர்ந்து உதவியோர் கல்வி மந்திரி சி. டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா, வண. சுவாமி ஞானப்பிரகாசர், மானிப்பாய் ஆசிரியர் ஏ.வி. சோமசுந்தரம், இந்து சாதனம் ஆசிரியர் ம.வே.திருஞானசம்பந்தர், ஈழகேசரி நா.பொன்னையா, நவாலி ந.சி.கந்தையா, புறொக்ரர் ரி. என். சுப்பையா ஆகியோராவர். இன்னும், சங்கைக்குரிய யாழ்ப்பாணத்து அதிமேற்றிராணியார், கிறிஸ்தவ சேவா சங்கத்தார், சென்னை பைபிள் சங்கத்தார், கொழும்பு முஸ்லிம் சங்கத்தார், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை ஆகியனவும் நூல்களை அன்பளிப்புச் செய்தன. 

நல்ல மனம் படைத்த பெரியவர்களின் வீடுகள் தோறும் சென்று ஒரு புத்தகமாவது பெற்று வருவதற்கு அக்காலத்தில் இளைஞராய் அத்தியடி இ.கேதீஸ்வர நாதன், வைமன்வீதி செ.கனகசபை, குமாரசுவாமி வீதி அ.சண்முகநாதன், அம்மன் வீதி க.சி.குலரத்தினம் முதலானோர் உழைத்தார்கள். நூலகப்பயிற்சி நெறியறியாத இளைஞர் ஒருவர் தமிழ் ஆங்கிலம் நன்றாகப் படித்தவர், அன்ன சத்திர ஒழுங்கையில் வாழ்ந்த சி.எஸ். இராசரத்தினம் என்பவர் நூலகத்துக்கு வந்து குவிந்த நூல்களைத் தூசுதட்டித் துடைத்து உறையிட்டுச் செம்மைப்படுத்திப் பட்டியல் தயாரித்துப் பக்குவப்படுத்தி வைத்து வந்தார்.

மத்திய இலவச தமிழ் நூல் நிலையச் சங்கத்தின் காரிய நிர்வாகசபைக் கூட்டம் ஒன்று நீதவான் சி. குமாரசாமி அவர்கள் தலைமையில், நீதிமன்றத்து அயலில் இருந்த சட்டத்தரணிகளின் வாசிகசாலை அறையில் (Law Library Room 28-7-1934) இடம்பெற்றிருந்தது. இக்கூட்டத்தில் சில முக்கிய அலுவல்கள் தீர்மானிக்கப் பெற்று நிறைவேற்றப்பெற்றன. ஆஸ்பத்திரி வீதியில் மின்சார நிலையத்துக்குத் தென்பகுதியில் ஒரு கடையை வருடாந்தம் முந்நூறு ரூபா வாடகைக்கு எடுத்து 01.08.34 அன்று முதல், அதை நூலகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப் பெற்றது.

நூலகர் ஒருவரைக் கௌரவ சேவையிலோ சம்பள அடிப்படையிலோ நியமித்தல் வேண்டும். அவருக்கு மாதாந்தம் இருபது ரூபா வேதனம் கொடுக்கலாம். தளபாடங்களுக்காக ரூபா 160 (நூற்று அறுபது) செலவிடலாம். நூல்கள் வாங்குவதற்கு நூற்றி எழுபத்தைந்து ரூபா செலவிடலாம். இவ்வாறாக ரூபா ஆயிரம் முதல் ஒதுக்கீடாக ஒதுக்கப் பெற்றது.

காரிய நிர்வாக சபைக் கூட்டத்தில் தலைமை தாங்கிய நீதவான் குமாரசுவாமி அவர்கள் அன்று அருமையான பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். பாடசாலைகள், அலுவலகங்கள், மன்றங்கள் தோறும் ஆண்டுக்கொரு முறை நூலகவாரம் கொண்டாடி நிதிதிரட்டுதல் வேண்டும் என்றார். குமாரசுவாமி அவர்கள் முன்மொழிந்த மற்றொரு பிரேரணை, கல்வி மந்திரியிடம் விண்ணப்பித்து ஆண்டுதோறும் நிதியுதவி பெறும் வாய்ப்பினைப் பயன்படுத்தல் என்பதாகும். 

அடுத்து யாழ்ப்பாண நகரசபையிடமும், யாழ் மாவட்டத்தில் கிராம சங்கங்களிடையேயும் ஆண்டுதோறும் ஏதாவது நிதி உதவிகோரவும், ‘ஸ்ரீ சந்திரசேகர நிதி’ எனப் புகழ் பெற்ற தரும சாதனத்தில் நிதி உதவி கோரவும் தீர்மானிக்கப்பட்டது.

காரிய நிர்வாக சபையில் செயலாளர் க.மு.செல்லப்பா அவர்கள் கொண்டு வந்த மற்றொரு பிரேரணை பத்திரிகை பிரசுராலயங்கள் தோறும் இலவசப் பத்திரிகைகள் கேட்டுப் பெறுதல் தொடர்பானதாகும். சைவபரிபாலன சபையும், கிறிஸ்தவ சேவா சங்கமும் பத்திரிகையோடு நூல்களும் அன்பளிப்பு செய்வதாக வாக்களித்திருந்தனர்.

நூலக சங்கத்துக்கு நிதியுதவியையும், அங்கத்தவர்களைச் சேர்த்து உதவி புரிந்தவர்களுக்கு அவர்கள் சேர்க்கும் பணத்தில் பத்து சதவீதத் தொகையை அலவன்ஸ் உதவியாகக் கொடுத்து ஊக்கப்படுத்தலாம் என்று செல்லப்பா அவர்கள் கொண்டு வந்த பிரேரணையை அன்று ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

செல்லப்பா அவர்களின் மற்றொரு பிரேரணை அக்காலத்தில் உயர்நீதிமன்றத்துப் பதிவாளராய் இருந்து ஒய்வு பெற்றிருந்த ஆர். சி. புரெக்ரர் அவர்களை நூலகத்தின் கௌரவ முகாமையாளராக நியமித்து அவரது ஆலோசனையையும் சேவையையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். இவ்வாறாக நூலகத்தின் ஆக்கம், நிலைபேறு வளர்ச்சி கருதி பயன்மிக்கனவான பத்துப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய இலவச தமிழ் நூல்நிலைய சங்கத்தார் தங்கள் நூலகத்தை ஆஸ்பத்திரி வீதியில் உள்ள அகன்ற பெரிய கடையொன்றில் 01-08-1934 இல் ஆரம்பித்த பின்னர், 15-08-1934 இல் மற்றொரு நிர்வாக சபைக் கூட்டத்தை நீதிமன்ற நூல்நிலைய அறையில் தலைவர் தலைமையிற் கூட்டினர்.

அந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் மூன்று பிரேரனைகள் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றன. அவற்றுள் முக்கியமான பிரேரணை காரியதரிசி அவர்கள் 1934 – 1935 ஆண்டுக்கான புதிய செலவுத் தொகை சம்பந்தமானதாகும்.

  1. உதவி நூலகரும் பணந்திரட்டுபவருமான அலுவலருக்கு மாதம் இருபது ரூபா வீதம் இருநூறு ரூபா ஒதுக்கீடு.
  2. நூலக அறையின் மாதாந்த வாடகையாக இருபத்தைந்து ரூபா வீதம் இருநூற்றைம்பது ரூபா ஒதுக்கீடு.
  3. நூலக தளபாடங்கள் புதிதாக வாங்குவதற்கான தொகை ரூபா இருநூற்றைம்பது ஒதுக்கீடு.
  4. செய்தித்தாள்கள் வாங்குவதற்கான செலவுத் தொகை ரூபா நூற்றைம்பது ஒதுக்கீடு.
  5. புத்தகங்கள் புதிதாக வாங்குவதற்கான செலவுத் தொகை ரூபா இருநூற்றைம்பது ஒதுக்கீடு.
  6. நானாவித செலவுக்காக முன்கூட்டியே ஒதுக்கிய ரூபா நூற்றி எழுபத்தைந்து ஒதுக்கீடு.

இவ்வாறு ஏற்பட்ட செலவுத்தொகை ரூபா 1275 ஒரு வருடத்துக்கானதாகும். இதைக் காரியதரிசி செல்லப்பா அவர்கள் முன்மொழிய, தலைவர் அவர்கள் வழிமொழியப் பிரேரணை ஏகமனதாக நிறைவேறியது.

முந்தைய நிர்வாக சபைக் கூட்டத்தின்பின் நான்கு மாதங்கள் கழித்து மற்றொரு நிர்வாக சபைக் கூட்டம் நீதிமன்ற நூலக அறையில் உபதலைவர் தலைமையில் 14-12-1934 வெள்ளிக்கிழமை மாலை கூடியது. இக்கூட்டத்தில் கொழும்பிலிருந்து வந்த கடிதங்கள் படிக்கப் பெற்றன. கல்வி மந்திரியார், உள்ளூராட்சி மந்திரியார், பிரதம காரியதரிசி ஆகிய முப்பெரும் பிரமுகர்கள் எழுதியவை சங்கத்தாருக்கு மிகுந்த உற்சாக மூட்டின. பிரதம காரியதரிசி என்பவர் தேசாதிபதிக்கு அடுத்த படியில் உள்ள பரிபாலன அலுவலராவார்.

பொதுநல நோக்கினை மாத்திரம் இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் எழுந்த மத்திய இலவச தமிழ் நூல்நிலைய சங்கத்தாரின் பணிகளின் ஊடாக நூலகம் வளர்பிறைபோல் நாளும் வளர்ந்து வந்தது. இவ்வாறு வளர்ந்து வந்த நூலகத்தை யாழ்ப்பாண நகரசபையினரே பொறுப்பேற்று நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வந்தன. அக்காலத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் பலர், நகரசபை அங்கத்தவராயிருந்தனர். 

நூலகத்தைப் பொறுப்பேற்பதற்கு நகரசபையார் (Urban District Council – U.D.C.) தீர்மானித்தமையின் பெறுபேறாக நூல்நிலையம் 01-01-1935 முதல் நகரசபையாரின் பரிபாலனத்தில் விடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. சங்கத்தாரிடம் கையிருப்பில் உள்ள மிகுதிப் பணத்தை முதலியார் கி. இராசநாயகம், முகாமையாளர் ஆர். சி.புறொக்கர், காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா ஆகிய மூவரிடமும் ஒப்படைக்க வேண்டும். இவர்கள் பணத்துக்குத் தக்கதாக நல்ல நூல்களை வாங்கி நூலகத்துக்குக் கொடுத்தல் வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4108 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)