Arts
10 நிமிட வாசிப்பு

மொழிகளுக்கிடையே கண்ணுக்குப் புலனாகாத மோதல்

June 22, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டை இரண்டு கூறுகளாக்கி ஒரு தரப்பில் தமிழர்கள் மறுதரப்பில் சிங்களவர்கள் என்று கபடி களமாக்கி ஒருவர் காலை மற்றவர் வாரிவிட்டு குப்புற தள்ளி மிதிக்கும் நிலைமையை தோற்றுவித்த பெருமை முற்றிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே சாரும். அதற்கான ஆடுகளத்தைத் தயாரித்து அமைத்தவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா என்ற மக்கள் ஐக்கிய  கட்சியின் (M.E.P) தலைவர் ஆவார். இவர் இனவாதம் என்ற தீப்பந்தத்தை ஆயுதமாகக் கையில் ஏந்தி 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமரான போது அவர் இந்த நாட்டில் இத்தனை பெரிய ரத்தக்களறியைத் தோற்றுவிக்கப் போகின்றார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர் ஏற்படுத்திய ரத்தக்களறியின் பச்சை இரத்தம் காய்வதற்கு முன்னரேயே  அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது எல்லோரும் அறிந்த வரலாறுதான்.

தனிச்-சிங்கள-மொழி-சட்டம்-எதிர்ப்பின்-போது-1

அவர் 1956 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைவர்களான டி. எஸ். சேனநாயக்கா அவரது மகன் டட்லி சேனநாயக்கா,  இடையில் வந்த பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல, ஆளுநர் நாயகமாக இருந்த சேர். ஒலிவர் குணதிலக்க ஆகியோர் தம் தோள் மேல் சுமந்து வந்த இனவாதம் என்ற தீப்பந்தத்தை மேலும் சுவாலை விட்டு எரியச்  செய்தார் பண்டாரநாயக்க. இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு எதிராக இருக்கும் மிகப்பெரிய எதிரிகள் இலங்கைத் தமிழர்கள் என்றும் அதற்கு அடுத்ததாக இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் என்றும், இரண்டாவதாக இருக்கும் எதிரிகளான இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இந்தியாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு இந்த நாட்டை மிரட்டுகின்றனர் என்றும் தேர்தல் பிரசாரம் செய்தார். இத்தகைய ஒரு தேர்தல் பிரசாரமானது சிங்கள மக்கள் மத்தியில் புகைந்து கொண்டிருந்த சிங்கள – பௌத்த பேரினவாதத்தை தூசி தட்டி, எண்ணெய் வார்த்து பெரு நெருப்பாக கிளர்ந்தெழச் செய்தபெருமையும் பண்டாரநாயக்கவையே சாரும். இந்த நெருப்பு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து  அவர் முதலாவதாக கொண்டுவந்த சிங்களம் மட்டும் சட்டத்தை அடுத்து இலங்கையில் பாரிய அளவில் இனக் கலவரங்களை ஏற்படுத்தியது. அந்த இனக் கலவரங்களால் ஏற்பட்ட வன்மமே பின்னர் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் ஊடுருவி கொடுவாளை கையிலெடுத்து எமக்கு தனி நாட்டைப் பிரித்துக் கொடு என்று போராடும் அளவுக்கு அவர்களை பிடரியைப் பிடித்து தள்ளிச் சென்றது. பல்லின, பல கலாசாரம், பல மதங்கள் கொண்ட ஒரு நாட்டில் ஒரு இனக் குழுவினருக்கு மாத்திரம் அரசாங்கத்தின் எல்லா உரிமைகளையும், சலுகைகளையும் வழங்குவது ஏனைய பிரிவினரின் மனதில் எத்தனை குரோதத்தையும், ஆக்ரோஷத்தையும், வன்மத்தையும் வளர்த்து விடும் என்பதற்கு சாட்சியாக அமைந்த 30 ஆண்டு யுத்த காலம் இந்நாட்டு மக்கள் சமூகங்களின் ஒவ்வொருவர் மனதையும் ஆழக்கீறிய காயம் ஒருபோதும் மறைந்தோ மறந்தோ போய்விடாது.

படித்த இளைஞர்களுக்கு அப்பொழுது தொழில் வாய்ப்பு வழங்கிக் கொண்டிருந்த ஒரே ஒரு அரச இயந்திரமாக அரச நிர்வாக சேவையாகவே இருந்தது. அந்த வாய்ப்பு தமிழ் மக்களுக்கு முற்றிலும் இல்லாமல் போனது. அத்துடன் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறுதல் வாயிலாகவே சமூக, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி நகரலாம் என்றும் தமிழ் மக்கள் பெரிதும் நம்பி அதனைத் தலைமேல் கொண்டு செயற்பட்டனர். அதனோடு சேர்த்து சிங்கள மொழியில் தேர்ச்சி பெறவில்லையாயின் அல்லது தடை தாண்டல்  பரீட்சைகளில் தேர்ச்சி பெற முடியாமல் போகுமாயின் அவர்கள் பார்த்த தொழில்களிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். அரசாங்கத்தின் மேற்படி தனிச்சிங்களக் கொள்கையானது ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களின் மனதிலும் ஏற்படுத்திய வெறுப்பு  கனன்றெரியும் நெருப்பாக   சுவாலை விட்டு எரியச் செய்தது.

1956-காலி-முகத்திடல்-சத்தியாக்கிரகம்-768x498-1

இதற்கு மத்தியில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களைத் தலைமையாகக் கொண்ட இலங்கை தமிழ் சமஷ்டி கட்சி இதற்கு எதிராக 5 ஜூன் 1956ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போராட்டத்தின் மீது குண்டர்களையும், காடையர்களையும் ஏவி அரசாங்கம் தாக்குதல்  நடத்தியதில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் மற்றும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோர்  காயமடைந்தனர்.   கொழும்பில் பல இடங்களில் இனக்கலவரமும் தூண்டி விடப்பட்டது. தொடர்ந்து நாட்டில் ஒரு அரசியல் நிச்சயமற்ற நிலைமை இருந்து கொண்டே இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளில் இலங்கை சமஷ்டிக் கட்சியினர் திருகோணமலையில் தமது பேராளர் மாநாட்டை நடத்தி, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி முறையிலான சமஷ்டி அரசியலமைப்பு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததுடன்,  மலைநாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். தமது இந்த கோரிக்கைக்குப் பதில் கிடைக்காவிட்டால் 20 ஓகஸ்ட் 1957 ஆம் திகதி  இன்னொரு சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தப் போவதாக இலங்கை சமஷ்டிக் கட்சி அறிவித்தது. இந்தக் கோரிக்கை பற்றித் தெரிந்து கொண்டபோது பண்டாரநாயக்க மிகுந்த எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் கொண்டார். அவரது மீசையில்லாத சிறு உதடுகள் இரண்டும் மேலும் கீழும் அசைந்து துடித்து கோணல் ஆகிப்போனது. அவர் சில மணி நேரங்கள் கடுமையாகச் சிந்தித்ததன் பின்னர் அப்படி ஒரு சத்தியாக்கிரகம் நடக்குமாக இருந்தால் அந்த இடத்தைச் சுற்றி வளைக்கப் பொலிஸாரும் இராணுவத்தினரும் அனுப்பப்படுவதுடன் அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு லட்சம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தொண்டர்களும் அனுப்பப்படுவார்கள் என்று பெருங்குரலெடுத்து கொக்கரித்துப் பயமுறுத்தினார்.

ஆனால் அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை. விஷயங்கள் வேறுவிதமாக நகரத் தொடங்கின. இலங்கை சமஷ்டிக் கட்சியின் கோரிக்கை தொடர்பில் தான் பரிசீலனை செய்வதாகவும், பேசித்தீர்மானித்து ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியும் என்றும் பண்டாரநாயக்க தெரிவித்தார். அந்த பேச்சுவார்த்தைகளின் முடிவாக பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தம் (B – C Pact) 1957 ஜூலை மாதம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான விடயங்கள் வருமாறு-

  1. தமிழர் சனத்தொகை செறிந்து வாழ்கின்ற வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழியை நிர்வாக மொழியாக பயன்படுத்தல்
  2. பிரஜா உரிமை சட்டம் மீள் பரிசீலனை செய்யப்பட்டு  தீர்வு   வழங்கல்
  3. வடக்கு – கிழக்கு பிரதேசங்களுக்கு பிரதேச சபைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான விடயங்களில் குறிப்பாக கல்வி, விவசாயம், போன்ற விடயங்களில் அதிகாரப் பகிர்வு வழங்கல்
S.W.R.D-SELVA

இந்த ஒப்பந்தம் சிங்கள மக்கள் மத்தியிலும் பௌத்த பிக்குகளுக்கு மத்தியிலும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் எதிர்ப்பு போராட்டங்களும் ஒன்றொன்றாக வெடித்துக் கிளம்பின. இதில் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கொண்டு  தன் பங்குக்கு துவேஷத்தைக் காட்டி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது. இவ்விதம் கொழுந்துவிட்டு எரிந்த இனவாதத் தீயை அணைக்க முடியாமல் 1957 அகஸ்ட் 9ஆம் திகதி திரண்டிருந்த பெருந்தொகையான சிங்களமக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் மத்தியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து மேற்படி பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தத்தை ஆவேசத்துடன் கிழித்தெறிந்தார் பண்டாரநாயக்க. எனினும் 1958 ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் தமிழ் மக்களை மேலோட்டமாக திருப்திப்படுத்துவதற்காக வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் நியாயமான அளவுக்கு தமிழ் மொழிப் பிர யோகத்துக்கென தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டார்.

இத்தகைய ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்ட பின்னரும் கூட அன்னாரை அடுத்து, அடுத்த பிரதமராக வந்த அவரின் பாரியார் சிறிமாவோ பண்டாரநாயக்க தமிழர் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து சற்றேனும் விடுபட்டு நடந்துகொள்ளவில்லை. தன் கணவரைக் காட்டிலும் சற்று மேலும் எம்பிப் பாய்பவராகவே அவரும் அரசியல் என்ற குதிரையை முடுக்கிச் சென்றார். இவர்கள் எல்லோருக்குமே பிரதமர் என்ற சொகுசு அதிகாரத்தில் நீண்ட காலத்துக்கு ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே தவிர ஒரு நாட்டின் பொறுப்புள்ள பிரதமராக நடந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை இருக்கவில்லை.  இவர் அதிகாரத்தில் இருந்தபோது வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் நீதிமன்றங்களில் கூட தீர்ப்புகளை சிங்களத்தில் வழங்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. பஸ்களில் பெயர்ப்பலகைகளில் சிங்களம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தபால் நிலையங்களின் மொழி சிங்களமாகவே  இருக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டு படிப்படியாக 1961ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் மீண்டும் ஒரு முறை முற்றிலும் சிங்கள மொழி நிர்வாகம் ஏற்படுத்தப்பட் டது. அதன் பொருட்டு 1960 ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, ஏற்கனவே புழக்கத்தில் இருந்த “ஆங்கில மொழி – நிர்வாக மொழி”  என்ற அந்தஸ்தை நீக்கிவிட்டு சகலவித அரசாங்க கொடுக்கல் – வாங்கல்களும் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்விதம் அதிகாரத்திலிருந்த சிங்கள மொழிக்கும்,  அதிகாரமே அற்றுப்போய் முடங்கிக்கிடந்த தமிழ் மொழிக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத யுத்தம் ஒன்று அன்றே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4758 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)