Arts
17 நிமிட வாசிப்பு

விவசாயமும் சுற்றாடல்சார் பல்வகைமையும் – பகுதி 1

February 7, 2024 | Ezhuna

எமது சுற்றாடல் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக் கூறுகளின் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கமைந்த செயற்பாடுகளே சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்தியில் பங்காற்றும். மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் சுற்றாடல் பற்றி சரிவர அறிந்துகொள்ளப்படுதலும் சிறப்பான வழிமுறைகளில் பயன்படுத்தலும் இக்கூறுகளை பேணிப்பாதுகாத்தலும் முக்கியமானவைகள். அந்த வகையில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் உயிர்ப்பல்வகைமையின் பங்களிப்பு பற்றிய பயனுள்ள கருத்துகளை ‘வடக்கு–கிழக்கு பிராந்திய அபிவிருத்தியும் உயிர்ப்பல்வகைமையும்’ எனும் இக் கட்டுரைத் தொடர் தாங்கிவருகின்றது.

இந்தப் பகுதி உணவளிக்கும் விவசாயம், உற்பத்தி பற்றியும் சுற்றாடலின் பல்வகைமை பற்றியும் ஆராய்கிறது. உலகின் சகல பகுதியிலிருந்தும் உணவு உற்பத்தியாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள்கள் இயற்கை எமக்குத் தந்த அருங்கொடையாகும். அறுசுவை கொண்ட இவ் உணவுகளே உலகத்தை நிலைபெறச் செய்கிறது. தாவரங்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, உணவின்றி இயங்கமுடியாது. இவ் உலகில் உணவுற்பத்தி இன்றியமையாத ஒன்றாகும். உணவு உற்பத்தியில் பிரதான காரணகர்த்தா சூரியனே. சூரிய ஒளி கிடைக்கும் பட்சத்திலே உற்பத்தியாக்கிகளின் (தானாக உணவைத் தயாரிக்க வல்லன) செயற்பாடு உலகிற்கு பயனளிக்கும். ஆனால் உலகின் எல்லாப் பாகத்திலும் சூரிய ஒளி கிடைக்கப்பெறும் தன்மை ஒரே சீரானதாக இல்லை. பல்வேறு வகைப்பட்ட அளவில் சூரிய ஒளி கிடைப்பதால் வேறுபட்ட பருவ காலங்கள் உருவாகின்றன. பருவகாலங்களின் அடிப்படையில் உற்பத்தியாக்கிகளின் பரம்பல், செயற்பாடு, உற்பத்தித் திறன், உற்பத்தியாக்கப்படும் உணவுகளின் தன்மை, அவற்றின் பயன்பாடு என்பன வேறுபடுகிறது. இவ் வேறுபாட்டுக்கு அமைவாகவே உணவு உற்பத்தியின் அளவு, பயன்படுத்தும் வழிமுறைகள் போன்றன வேறுபடுகின்றன. உற்பத்தியாக்கிகளோடு தொடர்புபட்ட சுற்றாடல்  வெவ்வேறு வகை அங்கிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அங்கிகள் கூட்டமும் அவற்றின் வாழ்விடங்களில் ஏற்படும் சமநிலையும் மிக நிலைபேறான ஒன்றாக இருத்தல் அவசியம். அத்துடன் உயிர் வாழ் அங்கிகளும் அவற்றைச் சூழவுள்ள பௌதீக, இரசாயன, உயிரற்ற சடப் பொருள்களுடனான தொடர்பும் முக்கியமானவை. சாகியச் சமநிலையில் பங்குபற்றும் ஒவ்வொரு பகுதிகளும் தனிப்பட்ட ரீதியில் முக்கியமானவை. சாகியத் தொகுதியின் அங்கத்தவர்கள் ஒரே வகையாய் இருந்தால் சமநிலை பேணப்படமாட்டாது.

சாகியத் தொகுதிகளில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு உயிருள்ள, உயிரற்றவைகளுக்கும் வலையமைப்புடனான தொடர்பு ஒன்று நிலவுகின்றது. இவ் வகைத் தொடர்பாடலுக்கு பல்வகைத் தன்மை பேணப்படுதல் அவசியம். இதனாலேயே எமது கட்டுரைத் தொகுதியின் இப் பகுதி உணவு சம்பந்தமான மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பன்முகத்தன்மையை ஆராய முனைகிறது. இயற்கையாகவே கிடைக்கும் உணவுப் பொருள்களின் பயன்பாடு பெரும்பாலும் காட்டுச் சூழலில் வாழும் உயிர்ச் சூழலில் காணப்படும்.  

இயற்கையாக கிடைக்கும் உணவு எம் முன்னோர்களின் காலத்தில் போதுமானதாக இருந்தது. அக்காலத்திலிருந்த உயிரங்கிகளின் சுற்றாடலுடனான பரிணாம மாற்றம் மற்றும் குடித்தொகையின் அளவு என்பன இப் பல்வகைமைத் தன்மையில் செல்வாக்குச் செலுத்தி, தக்கண பிழைத்தலும்  தகாதன அழிதலும் ஏற்பட்டு, தற்போதுள்ள பல்வகைமைத் தன்மை உண்டாகியிருக்கிறது. இப் பல்வகைமை உருவாக்கச் செயன்முறையில் ஈடுபட்டிருந்த, ஈடுபடவுள்ள உயிருள்ளவைகளின் எண்ணிக்கையைக் குறித்துக்காட்ட முடியாதுள்ளது. ஏனெனில் முன்னைய காலத்திலிருந்த டைனோசர்கள் அழிந்துவிட்டன. புதிகாகத் தோன்றும் வைரசுகளின் வகையும் அதிகம். ஆகவே இப் பல்வகைமைத் தன்மை நிலைபேறான ஒன்றாக கருத முடியாது. ஆனாலும் நிலைபேறான சாகியத்திற்கு இப் பல்வகைமை அவசியமானது. சாகியத்தின் பல்வகைமைத் தன்மையின் வலையமைப்பின் பிரதான கூறு உணவுச் சங்கிலியாகும். 

இயற்கையின் உணவுப் பங்களிப்பு போதுமானதாக இராத சந்தர்ப்பத்தில் மனிதன் இயற்கையின் செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்குத் தேவையானவற்றை தானே தேட வேண்டியதாயிற்று. இம் முயற்சியில் வேறு இடங்களுக்கு படையெடுத்த மனிதன் உணவு உற்பத்தியில் ஈடுபட்டான். தானாக தனக்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் உற்பத்தியாக்கிகள் மனித குலத்திற்கு கைகொடுத்தன. விவசாயம் என்பது அங்குதான் ஆரம்பித்தது. சுற்றாடலில் கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்தி தாவரங்களிலிருந்து உணவு தயாரிக்கும் பொறிமுறையே விவசாயம் என வரையறுக்கப்படும். ஆதிகால விவசாயத்திலிருந்து தற்கால விவசாயம் வரை அநேக பரிணாம மாற்றங்களை வரலாறு பதிவாக்கியுள்ளது. இப் பதிவாக்கலின் சிறுபகுதியே எம் அறிவுக்கு எட்டியுள்ளது. 

மண்ணிலே மட்டும் விவசாயம் செய்த மனிதன் தற்போது மண்ணில்லாத விவசாயத்தில் ஈடுபட்டுள்ளான். ஆற்றோரம் குளக்கரையில் மட்டுமே பயிரிட்டுவந்த மனிதன் நகர்ப்புற மாடிகளில் விவசாயம் செய்கிறான். ஒட்டுமொத்த மனித சமுதாயமும் விவசாயத்தில் மட்டுமே தங்கி வாழ்கிறது. ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கமைய விவசாயத்தின் முக்கியத்துவம் இன்றியமையாததே. மழையை நம்பி மட்டுமே செய்யப்படும் பயிர்ச் செய்கையுடன் ஆறு குளங்களிலிருந்து பெறப்பட்ட நீரோடு விவசாயத்தின் உற்பத்தி பூர்த்தியான காலம் ஒன்று இருந்தது. இக் காலகட்டத்தில் ஆரம்பித்ததே ஆற்றோர நாகரிகம். இவற்றின் பரம்பல் மேம்பட, சற்றுத் தூரம் அப்பாலே சென்று பயிரிட வேண்டிய கட்டாயத்துக்கு மனிதன் தள்ளப்பட்டான். இந்த நேரத்திலேயே ஆறுகள், குளங்களிலிருந்து ஏதோவொரு வகையில் விவசாயி நீரைக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. சிறு சிறு மரங்களிலிருந்து உருவாக்கப்பட்ட வாய்க்கால் போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி ஓரளவு அண்மித்துள்ள நிலங்களுக்கு நீர் பெறப்பட்டது. அப்படியே நீர்ப்பாசனம் உருவாகிற்று. தாழ்ந்த பகுதிகளிலேயே பூமியின் புவியீர்ப்பு விசையின் அடிப்படையில் ஆரம்பகாலத்தில் நீரைப் பெற்றனர். பூமியிலிருந்து பொன்னை உருவாக்கும் விவசாயத்திற்கு நீர் போதுமானதாக இராத பட்சத்தில் மனிதன் பள்ளங்கள், பொக்கணைகள் போன்ற நீர்த் தேக்கங்களிலிருந்து நீரைப் பெற்றான். இந் நீர் வரையறுக்கப்படவே, நிலத்தை தோண்டி நீர் எடுக்க வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டது. தோண்டப்பட்ட பகுதிகள் துரவுகளாக உருவெடுத்து சிறு கிணறுகளாக மாறி விவசாயக் கிணறுகளாகின. விவசாயக் கிணறுகளிலிருந்து கிடைக்கப்பெறும் நீர் போதுமானதாக இராத பட்சத்தில் அநேக தந்திரோபாயங்கள் விவசாயத்தில் புகுந்தது. விவசாய நடைமுறைகளின் பல்வகைமை நீரைச் சிக்கனமாக பயன்படுத்தும் முறைகளிலும் தேவைப்பட்டது. இதனடிப்படையில் சொட்டு நீர்ப்பாசனம், தூறல் நீர்ப்பாசனம் என்பன தற்போதைய விவசாயிகளால் மேற்கொள்ளபப்பட்டு வருகிறது.

எல்லா வகை மண்ணிலும் ஒருவகைப் பயிர் வளர்ந்துவிட முடியாது. அதேபோல ஒரு பயிர் எல்லா மண்ணிலும் பிரியப்பட்டு வளர்வதும் இல்லை. இதனை அறிந்து கொண்ட மனிதன் வேறுபட்ட பயிர்களை வேறுபட்ட இடங்களில் நட ஆரம்பித்தான். நடுகையின் போது இயற்கைத் தெரிவு சம்பந்தப்பட்டு புதிய புதிய வகைகளை மனிதன் தெரிந்துகொண்டு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டான். பல்லாண்டுத் தாவரங்களை அவதானித்த மனிதன் அவற்றையும் பயன்படுத்த முயற்சித்தான். தான் செல்லுகின்ற இடங்களிலெல்லாம் அவற்றின் விதைகளையோ அவற்றின் கன்றுகளையோ தன்னுடன் எடுத்துச்சென்று பழப்பயிர்களின் பல்வகைமைக்கு வழிவகுத்தான். ஏலவே கூறப்பட்டதற்கு அமைவாக காலநிலையின் மாற்றம் பூமியின் பல்வேறு இடங்களில் பல்வேறு வகைப்பட்ட விவசாயச் செய்கைக்கு மனித குலத்தை உள்வாங்கியது. இப் பல்வகைமை பண்டமாற்றுக்கு வழிகோலியது. இதனால் உணவுப் பழக்கங்களின் பல்வகைமை உருவெடுத்தது. மழையை நம்பி, வாய்க்காலில் நீரெடுத்து என பல்வகை வழிகளில் நீரைப் பெற்றுக்கொண்ட மனிதன் தேங்கி நிற்கும் நீரில் வளரக்கூடிய, செய்கை பண்ணப்பட்டு பயன்தரக்கூடிய நெல்லை கண்டுபிடித்தான். ஆறுமாத காலம் வரை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் கூட நெற்செய்கை மேற்கொள்ளப்படுவது ஆச்சரியத்தை தருகிறது. நெற்செய்கை அறுவடையின் போது தோணிகளும் வள்ளங்களும் பயன்படுத்தும் முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவுகிறது. இவ்வாறு நெற்செய்கையில் பல்வகைமை உருவெடுத்தது. மனிதனோடு இசைந்து வாழும் மிருகங்கள் பழக்கப்பட்டு அவற்றின் பயன்பாடு விவசாயத்தில் நுழைந்தது. 

பயிர்ச்செய்கையும் பல்வகைமையும்

அறுசுவை உணவுக்காகவும் அதனுள் அடங்கியிருக்கும் பிரதான மற்றும் நுண் மூலகங்களுக்காகவும் உணவு தேவைப்படுகிறது. தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு வகைகளுடன் விலங்குணவுகளும் சேர்க்கப்படும்போது எல்லா வகைப் போசணைகளும் கிடைக்கும் வழி பிறக்கிறது. தாவரங்களின் செய்கை உணவுத் தேவையை மட்டுமல்ல மனித குலத்தின் ஏனைய தேவவைகளுக்கும் பயனுடையது. மருத்துவ குணமுள்ள மரம், செடிகளும் காணப்படுவதால் உணவே மருந்தாகும் வழிகளும் உண்டு. இவ் வகைப் பழக்கம் பல்வேறுபட்ட பயிர்ச்செய்கை வகைகளுக்கு வழி வகுத்துள்ளது. 

பயிர்ச்செய்கை வகைகள்

அ. தனிப்பயிர்ச்செய்கை (Sole cropping) : ஓரிடத்தில் ஒருவகைப் பயிரை பயிரிட்டு அப் பயிரின் பயன்பாட்டைப் பெற்றுக்கொள்வது தனிப்பயிர்ச்செய்கை ஆகும். மானாவாரியில் விளையும் நெல், உழுந்து மற்றும் பாசிப்பயிர் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றினுள் களைகள் கூட பிற பயிராக கருதப்பட்டு அகற்றப்படும். இவ்வகைப் பயிர்ச் செய்கையில் காலநிலைகள் சரிவர இருந்தால் பூரண விளைவைப் பெற முடியும். ஆனால் பொய்த்துப்போன காலநிலைகளால் முற்றாகச் சேதமடைதல் மிகப்பெரிய சவாலாகும்.

mixed cropping

ஆ. கலப்புப் பயிர்ச்செய்கை (Mixed cropping) : ஒரே காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒத்துப்போகக்கூடிய போட்டியை தருவிக்காத பயிர்வகைகளின் விதைகள் ஒருகலவையாக விதைக்கப்பட்டு பயன்தரும் வழிமுறையே கலப்பு பயிர்ச்செய்கை ஆகும். இங்கு ஒரு பயிரின் வளர்ச்சி மற்றும் மற்றப் பயிரோடு இசைந்துபோதல் என்பன பிரதானமாகும். பயிர் இடைவெளிகள் சரியாக பேணப்படாவிட்டாலும், போட்டியில்லாத வகையில் தங்களுக்குள்ளே இசைந்து இப் பயிர்கள் வளர்வது பயனுள்ள பொறிமுறையாகும். உதாரணமாக, மானாவாரி நெல் அறுவடையின் பின் மீந்திருக்கும் ஈரப்பற்றை பயன்படுத்தும் முகமாக சணல் பாசிப்பயறுடன் சேர்த்து விதைக்கப்படும். பயறை, சேதப்படுத்தவரும் கிளி போன்ற பறவைகளிடருந்து உயர்ந்து வளரும் சணல் பாதுகாக்கும். அத்துடன் இரண்டு அவரை இனப்பயிர்கள் சேர்ந்து வளர்வதால் மண் வளம் பெரிதும் பாதுகாக்கப்படும். நிலப்பயன்பாடு தனிப்பயிர்ச்செய்கையை விட சற்று அதிகரிக்கலாம்.

Intercrops

இ. ஊடு பயிர்ச்செய்கை (Inter cropping) : காலநிலை மாற்றத்தாலோ அல்லது நோய் பீடைத் தாக்கத்தாலோ ஒரு குறிக்கப்பட்ட பயிர் சேதமாக்கப்படுகையில், மறுபயிரின் பயன்பாடு பாதுகாப்பான பயிர்ச்செய்கை வருமானத்துக்கு வழிவகுக்கும். இரு பயிர்கள் குறித்த  இடைவெளிகளில் வரிசைக்கிரமமாக நடப்பட்டுள்ளதால் ஒரு பயிரின் இடைவளியில் மறுபயிர் நடப்படுவதால் இவ்வகைப் பயிர்ச்செய்கை ஊடு பயிர்ச்செய்கை எனப்படும். ஊடு பயிர்ச் செய்கையாலும் நிலத்தின் பயன்பாடு மற்றும் நீரின் பயன்பாட்டு வீதம் அதிகரிக்கும். குறைந்த செலவுடன், குறைந்த வளங்களுடன் சவால்களை எதிர்கொண்டு விளைவை தட்டிச் செல்லும் வழிமுறை இதுவாகும். உதாரணமாக சோளத்துடன சோயா அவரை, கொய்யா மரங்களுக்கிடையில் ஏதாவது அவரை இனப்பயிர், தென்னை மரங்களுக்கிடையில் மாதுளை மற்றும் கொய்யா போன்றன. இரண்டு பயிர்கள் தனித்தனியாக செய்யப்படும் வேளையில் குறித்த இடைவெளிகளில் நடப்படும் பயிர்களின் எண்ணிக்கையில் சிறிதளவேனும் மாற்றம் ஏற்படாதவகையில் பயிர் வரிகளை சரிசெய்து இரு பயிர்களை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் பொறிமுறை ஊடுபயிர்ச்செய்கையில் தற்போது புகுத்தப்பட்டுள்ளது.

Multi layer cropping

ஈ. பலதட்டுப் பயிர்ச்செய்கை (Multi layer cropping) : ஓரிடத்தில் பெறப்படும் சூரிய ஒளியை முற்றுமுழுதாக பயன்படுத்தும் பொறிமுறை பலதட்டுப் பயிர்ச்செய்கை ஆகும். அதாவது வெவ்வேறு தட்டுகளில் அல்லது மட்டங்களில் வளரும் பயிர்வகைகளை ஒரே இடத்தில் வளர்த்தெடுத்தல் ஆகும். இவ்வகை பயிர்ச்செய்கை பல்லாண்டுப் பயிர்களுக்கு மிகவும் பொருத்தமானது. உதாரணமாக தென்னை, கமுகு மற்றும் வெற்றிலைக்கொடி அல்லது மிளகுச்செடி என்பன ஒரே இடத்தில் வளர்க்கப்படுவதால் சூரிய ஒளிக் கீற்றுகளின் சக்தி விரயமாகாமல் பயன்படுத்தப்படும்.

convergence Farming

உ. ஒருங்கிணைந்த பயிர்ச்யெ்கை அல்லது பண்ணை : பிரதான பயிர்ச்செய்கையோடு விலங்கு வகைகளும் சேர்த்து வளர்க்கப்படுதல் ஒருங்கிணைந்த பண்ணையாகும். சுற்றாடலிலுள்ள நிலம் அல்லது பயிர்ச்செய்கையுடன் சிறு நீர்நிலைகளை உருவாக்கி அவற்றுள் மீன்கள் வளர்க்கப்படும். நீர்நிலைகளின் மூலைகளில் குடில்கள் அமைத்து புறா, கோழி மற்றும் முயல் இனங்கள் வளர்க்கப்படும். இவற்றுக்கு வழங்கப்படும் உணவுகளும் எச்சங்களும் மீன்களுக்கு உணவாகும். மீன்கள் வளர்க்கப்படாத சந்தர்ப்பத்தில் வாத்துகள் வளர்க்கப்படலாம். நீர்நிலைகளின் மேற்பரப்பில் அசோலா வளர்க்கப்படும். மீன்கள் உணவாக்கிய அசோலாவின் மீதியை அவ்விடத்தில் வளர்க்கப்படும் மாடு, ஆடுகள் போன்றனவற்றுக்கும் கோழிகளுக்கும் உணவாக்கலாம். மாடு, ஆடுகளின் எச்சங்கள் தாவரங்களுக்கு எருவாகும். இவ்வகையில், பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காக சூரிய ஒளிக் கலங்களில் பிறப்பிக்கப்படும் மின்சக்தி பயன்படும். கிடைக்கப்பெறும் வளங்களை பூரண பயன்பாட்டுக்கு உட்படுத்தி சேதங்களை, சுற்றாடலின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதிகரித்த இலாபம் பெறும் வழிமுறையே ஒருங்கிணைந்த பண்ணை முறையாகும்.

விசேடித்த பயிர்ச்செய்கை வழிமுறைகள்

சேதனப் பயிர்ச்யெ்கை : பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறுவகையான அசேதன இடுபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து சேதன வழிமுறைகளில் மட்டுமே பயிர்செய்கைகளுக்கு போசணையளிப்பதும் பூச்சித் தாக்கங்களிலிருந்து பாதுகாத்தலும் சேதனப் பயிர்ச்செய்கைகளின் பிரதான அம்சங்களாகும். இதற்கு முன்னைய காலங்களில் பயன்பட்டு வந்த பயிரினங்களிலிருந்தே கலப்புப் பிறப்பாக்கம் செய்யப்பட்டு புதிய இனங்கள் உருவாக்கப்பட்டன. இப் புதிய இனங்களின் வருகையால் பழைய பயனுள்ள பயிர்களின் பயன்பாடு அழிந்து போயிற்று. இதனால் மிக முக்கிய கருவூலங்களும் அழிந்து போயிற்று. தற்காலத்தில் சேதனப் பயிர்ச்செய்கை மீள அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், இப் பயனுள்ள கருவூலங்களை தேடுதல் பிரதான சவாலாக அமையும். தற்கால புதிய இனங்கள் சேதனப் பயிர்ச்செய்கையின் போது எதிர்பார்க்கப்படும் விளைச்சலை தராமல் இருப்பது அடுத்த சவாலாகும். ஆகவே சேதனைப் பயிர்ச்செய்கையின் பயன்பாடு, அதிகரித்த சனத்தொகைக்கு உணவளிப்பது போதுமானதாக இராது. எவ்வாறாயினும் இச் செய்கை முறை மனிதச் சுற்றாடலைப் பேணிப் பாதுகாப்பதுடன் பயனுள்ள போசணை மிக்க நஞ்சூட்டலற்ற உணவு பெற வழிவகுக்கும்.

மண்ணின்றிய பயிர்ச்செய்கை (Soilless Agriculture) : தாவர வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு ஊடகம் அவசியமாகிறது. அங்குரப் பகுதியை தாங்கி நிற்கும் வேர்த் தொகுதியானது ஏதாவது ஒரு ஊடகத்தில் ஊன்றப்பட வேண்டும். நிலையான ஒரு ஊடகம் கிடைக்கப் பெற்றால் வேர்த் தொகுதிக்கு உறிஞ்சப்படும் மூலகங்களுக்கு உரிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டு, வளரும் அங்குரத்தை தாங்கி நிற்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு மண்ணின்றிய பயிர்ச்செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும். இக் கருத்தானது தற்போது பிரயோகப்படுத்தப்படுகிறது. ரெஜிபோர்ம் போன்ற தட்டுகளில் தாவரத்தை நிலை நிறுத்தி தாவரங்களின் வேர்ப்பகுதிகளுக்கு நீரும் தேவையான போசணைச் சத்துகளும் சீராக கிடைக்கப்பெறும் வழிமுறை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ் வழிமுறைகளில் ஒன்றே நீர்க்குழாய் பயிர்ச்செய்கை முறை ஆகும்.

soilless farming

பாதுகாப்புப் பயிர்ச்செய்கை (Protected Agriculture) : காலநிலையின் வேறுபாட்டுக்கு அமைவாக பூச்சிகள் மற்றும் நுண்ணுயிர்களின் பல்வகைமைத் தன்மை பெரிதளவில் உருவாகும். உதாரணமாக கோடை காலத்தில் பூச்சிகளின் பெருக்கமும் மாரிகாலத்தில் பங்கசு மற்றும் பக்டீரியா போன்றவற்றால் உருவாகும் நோயும் அதிகரித்து காணப்படும். இச் சூழலின் வேறுபாட்டுக்கு இவைகள் தங்களை தற்காத்துக்கொள்ள சுற்றாடலில் உள்ள தாவரத் தொகுதிகளின் பல்வகைமையை வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றன. அத்துடன் இவற்றின் தாக்கங்களிலிருந்து விடுதலையாகி எல்லாக் காலத்திலும் உட்சூழலை சாதகமாக்கும் பொறிமுறையோடு உருவாக்கப்பட்ட பயிர்ச்செய்கையின் பல்வகைமையில் ஒன்றாக பாதுகாப்பு பயிர்ச்செய்கை நிலவுகிறது.

இழைய வளர்ப்பு : குறிக்கப்பட்ட காலத்தில் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து, புதிய தாவரத் தொகுதிகள், குணாம்சங்கள் மாற்றமில்லாமல் உருவாக்கப்படும் பொறிமுறை தற்போதுள்ளது. ஆய்வுகூடங்களில் பாதுகாப்பான குழாய்களுள் தாவர இழையங்களை வளர்த்து பல்லாயிரக்கணக்கில் தாவரங்களை உருவாக்கும் பொறிமுறை இழைய வளர்ப்பு ஆகும்.

மேற்கூறிய வழிகளில் பல்வகைமையுடனான பயிர்ச்செய்கை முறைகளுக்கு ஈடுகொடுக்கும் முகமாக கிடைக்கப்பெறும் தாவரங்களின் பல்வகைமை கீழ்வரும் பகுதிகளில் ஆராயப்படுகிறது.

நெல்லிலுள்ள பல்வகைமை

நெற்பயிரில் Oryza Sativa, Omnivora போன்ற ஓர் ஆண்டு மற்றும் பல்லாண்டு நெல் வகைகள் காணப்படுகின்றன. ஆனால் வடக்கு கிழக்குப் பகுதிகளில் Oryza Sativa எனும் ஆண்டு நெல்வகைகளே பயன்பாட்டிலுள்ளன. மரபு ரீதியான வெவ்வேறு வயதுடைய நெல்லினங்கள் பல உள்ளன. H4, பினிலொட், BG 11-11, BG 94-1 போன்ற பழைய இனங்கள் பசுமைப் புரட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் மொட்டைக் கருப்பன், பச்சைப் பெருமாள், சீனட்டி, அணில் வரியன், பெரிய வெள்ளை, சின்ன வெள்ளை, குருவை மற்றும் சுகந்தல் போன்ற இன்னோரன்ன நெல் வகைகள் காணப்படுகின்றன. இவற்றை விட அநேக புதிய நெல்வகைகளும் தற்காலத்தில் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆட்டக்காரி எனும் நெல்லினத்தை இதுபோன்ற நெல்லினங்களில் ஒன்றாகக் குறிப்பிட முடியும். தாழ்வுப் பகுதிகளில் அல்லது நீண்ட நாள்கள் நீர்தேங்கும் பகுதிகளில் கூடிய வயதுடையவையும், மேட்டு நிலங்களில் குறைந்த வயதுடையதுமாக இரண்டு மாதத்திலிருந்து ஐந்து மாதத்திற்கிடையில் முற்றக்கூடிய நெல்லினத்தின் பல்வகைமைகள் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன.

வயது மட்டுமல்லாமல் சாய்ந்து விழுவது (Lodging), கதிர் உதிர்வது (Shattering) நோய் பீடைத் தாக்கத்தில் எதிர்ப்புத் தன்மையுடையது என்பனவோடு நெல்மணிகளின் பருமன், நிறம், போசணைச் சத்து, ருசி என்பனவற்றின் பல்வகைமைகளும் இந் நெல்லினங்களில் காணப்படுகிறது.

சிறுதானியங்கள்

கால மாற்றத்தினால் தற்போது தானிய வகைகளின் பயன்பாடு சற்றுக் குறைவடைந்து வருகின்றது. வெற்றிகரமாக வளர்த்தெடுக்க்கூடிய சாமை (Panicum sumatrense), தினை (Setaria italica), கேழ்வரகு (Eleusine coracana), வரகு (Panicum miliaceum), இறுங்கு (genus) மற்றும் கம்பு (Pennisetum glaucum) போன்ற பயனுள்ள தானிய வகைகள் எம் பிரதேசத்தில் காணப்படுகின்றன. குதிரைவாலி எனப்படும் புல்லினத்தில் உருவாகும் தானியங்களும் வெற்றிகரமாக பயிரிப்படக்கூடியன. இவற்றின் பல்வகைமை உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் வேண்டப்படுகிறது. இவ்வகைத் தானியங்கள் தமக்கிடையே நிறம், பருமன், சுவையில் வேறுபாடுகளைக் காட்டும் பல்வகைமையுடன் காணப்படுவது எம்மரின் உணவுப் பழக்கத்துக்கு பொருத்தமானதாக அமைந்து வருகிறது. உலக உணவு ஸ்தாபனம் கடந்த ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Kuthirai Vaazhi

அவரை இனப் பயிர்கள் அல்லது பருப்பு வகைகள் 

பாசிப்பயறு (Phaseolus aureus Roxb), உழுந்து (Urad bean, Vigna mungo), பயற்றை, போஞ்சி (Phaseolus vulgaris L.) போன்ற பயிர்கள் இப்பிரிவுக்குள் அடங்கும். பாசிப்பயற்றில் சிறிய விதையிலிருந்து பெரும் பயறு வரையிலும், உழுந்தில் வளர்ச்சியை முடிக்கும் இனங்களிலிருந்து வளரும் இனங்கள் வரையிலும், பயிற்றையில் குறுகிய நீளமுடையதிலிருந்து நீண்ட காய்களையுடையது வரையிலும், போஞ்சியில் பச்சை மற்றும் மஞ்சள் நிறமுடையதுமாக அவரையினத்தின் பல்வகைமை நீண்டு செல்கிறது. இவற்றில் வெவ்வேறு இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாசிப்பயற்றில் MI5, MI6 என்பனவும் – உழுந்தில் அனுராதா, Type 9, MIVG 1 போன்றனவும் – பயிற்றையில் குரங்குவாலன், ஏ9 போன்றனவும் – போஞ்சியில் கப்ரி போன்ற வகைகளுமாக அவரை இனப்பயிர்கள் காணப்படுகின்றன. கெளபி எனும் பயிரும் இவ்வுணவுப் பாதுகாப்பின் பிரதான பயிராகும். பொம்பே கௌபி, விஜய், வருணி, தவல, MICP 1, ANK CP 1 போன்ற வேறுபட்ட நிறங்களையுடையதும் தரம், பருமன், சுவையில் வேறுபாடுகளைக் கொண்டதுமான கௌபி இனங்களும் உண்டு. பொதுவாக மானாவாரி எனும் தற்போது சிறுபோகத்திலும் மேற்கூறிய பயிர்கள் செய்கை பண்ணப்படுகிறது. சணல் எனும் அவரை இனப் பயிர் உணவாகப் பயன்படாவிடினும் விலங்குணவாக பயன்படுவதுடன் மண் வளத்தைப் பாதுகாக்கும் பயிர்வகையாகவும் காணப்படுகிறது.

மரக்கறிப் பயிர்ச்செய்கையின் பல்வகைமை

வடக்கு கிழக்கு பகுதிகளில் அநேக மரக்கறிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றன. மரக்கறிகள், இலை வகைகள், காய் கனிகள், கிழங்குகள் மற்றும் வாசனைப் பயிர்கள் போன்றன அவற்றுள் சில.

இலை வகைகளுள் கீரை (Amaranthus), பொன்னாங்காணி (Alternanthera sessilis), வல்லாரை (Centella asiatica (L) Urban.), பசளி (Spinach; Spinacia oleracea), பயளி, அகத்தி (Sesbania grandiflora), கருவேப்பிலை (Murraya koenigii) போன்ற இலை வகைகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மருத்துவ குணங்கள் உள்ள முருங்கையிலை, முள்முருங்கு, வாதனாராணி, பூவரசு, சண்டி, கோவா போன்றனவும் எம் பிரதேசத்தில் வளர்கின்றன. அண்மைக் காலத்தில் சித்தரத்தை வகையில் ஒன்றான இன்சுலின் தாவர இலையின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இயல்பாகவே களைகளாக கருதப்படும் சாரணை, குப்பைக்கீரை, புளிக்கீரை, அரைக்கீரை, தயிர்வளை, தொய்யில், சாரணை போன்றனவும் இக்கீரை வகைகளில் அடங்கும். இவற்றின் பல்வகைத் தன்மை அழிந்து போகாமல் பாதுகாப்பதில் எமக்கு பெரும் பொறுப்பு உண்டு என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

கிழங்கு வகைகள்

எம் பிரதேசத்தில் சாதாரணமாக வளரக்கூடிய கருணைக்கிழங்கு, மோதகவள்ளி, வற்றாளை, மரவள்ளி (Manihot esculenta), இராசவள்ளி (dioscorea alata) போன்றனவற்றுடன் மலையகப் பிரதேசங்களில் வளரக்கூடிய இங்கு பரவலாகப் பயிரிடக்கூடிய உருளைக் கிழங்கும் இக் கிழங்கு வகைகளுக்குள் அடங்கும். இவை பல்வேறு வகைப்பட்ட வயதுடையவையாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக மரவள்ளியில் மூன்று மாதத்திலிருந்து ஒரு வயது வரை வயதுடையனவும், தோல் மற்றும் சதையில் வேறுபாடு உடையனவும், நீளம் மற்றும் பருமன் என்பனவற்றில் வேறுபாடுள்ளதுமான பல்வகைகள் உண்டு. இவற்றின் பயன்பாடும் பிரதேசங்களுக்கு அமைவாக வேறுபடுகிறது. விசுவமடுப் பிரதேசத்தி்ல் மூன்றிலிருந்து ஆறுமாத வயதுடையதும் மஞ்சள் நிற தசைப்பிடிப்பானதுமான ஓரினம் உண்டு. யாழ்ப்பாணத்தில் பொதுவாக செம்பாட்டுப் பகுதிகளில் ஆறிலிருந்து ஒன்பது மாதம் வரையான முதிர்வைக் கொண்டுள்ள பயன்தரு மரவள்ளி இனங்கள் உண்டு. முத்தையன்கட்டு, முழங்காவில் போன்ற பகுதிகளில் ஒரு வருட வயதுடைய கிழங்கு வகை உண்டு. சம்பூரில் ஆறு மாத வயதுடைய வெள்ளை நிற இலைக் காம்மை கொண்ட இன்னோர் வகையும் உண்டு. இவ்வகையான கிழங்கு வகைகள் வரட்சிக் காலங்கிலும் கூட வளர்ந்து கனமான மாப்பொருளின் விளைவை உருவாக்குவதால் கிழங்கு வகைகளின் பல்வகைமை வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பேணப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றன.

மரக்கறி வகைகளின் பல்வகைமை ஒரு நீண்ட நிரலாகும். ஆனாலும் இக் கட்டுரையின் வரையறைக்குட்பட்ட வகையில் சிறிதளவையே இங்கு நிரற்படுத்த இயலும். இங்கு வளரும் பயிர்களுக்கு காலநிலையின் சாதகத் தன்மை கை கொடுப்பதோடு மத மற்றும் கலாசார வழக்கங்களும் இப் பல்வகைமைத் தன்மையில் செல்வாக்குச் செலுத்துகிறது எனலாம். கத்தரி (Solanum melongena), கறிமிளகாய் (Capsicum annuum), வெண்டி (Abelmoschus esculentus), சர்க்கரைப் பூசணி, நீத்துப்பூசணி, பயிற்றை, அவரை (Lablab purpureus) போன்றவை மரபு ரீதியாக பயிர் செய்யப்பட்டு வருபவை. இருப்பினும் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் சீதோசண நிலை கோவா (Brassica oleracea var. capitata), போஞ்சி, கரட் (Daucus carota subsp. sativus), பீற்றூட் (Beta vulgaris subsp. vulgaris ‘Conditiva Group’), லீக்ஸ் (Allium ampeloprasum) மற்றும் உருளைக்கிழங்கு (Solanum tuberosum) போன்ற பயிர்வகைகளை அறிமுகப்படுத்தி உற்பத்திசெய்ய வழிவகுக்கின்றது. தற்போது மேலும் பல பயிர்களும் அறிமுகமாகியுள்ளன.

மண்டூர் கத்தரி, இறால் குழி மற்றும் பழுகாமம் போன்ற கத்தரிவகைகள் கிழக்கு மாகாணத்தில் பிரபல்யமானவை. திருநெல்வேலி சிவப்பு, மலப்பே, மட்டுவில் முட்டி, ஈக்குவெள்ளை, கத்திப்பிடியன் போன்ற வெள்ளை நிறத் தோலுடைய கத்தரி இனங்களும் தற்போது பயிரிடப்படும் வீரிய இனக் கத்தரிவகைகளும் காணப்படுகின்றன. நிறம், பருமன், தோற்றம், தாவரச் செடியின் அமைப்பு என்பவற்றில் மட்டுமல்லாது சுவையிலும் பல்வகைமைத் தன்மையை இக் கத்தரி இனங்கள் கொண்டுள்ளன. இவை மட்டுமல்லாது தானாக வளரும் சுண்டங்கத்தரி மற்றும் கண்டங்கத்தரி போன்றனவும் உண்டு. பாகற்காய் (Momordica charantia), புடலங்காய் (Trichosanthes cucumerina), பீர்க்கங்காய் (Luffa), சுரக்காய் (Lagenaria siceraria) எனும் ஏறிகளும் உண்டு.

பால்வெண்டி, முள்ளுவெண்டி, சிவப்பு வெண்டி, ஹரித்த போன்ற பல்வேறுவகை வெண்டியினங்கள் குறுகிய காலத்தில் விளைவுகளைத் தரும் வேறுபட்ட வகைகளாகும். இவற்றை விட பல்லாண்டு வெண்டி வகைகளும் பல்வகைமைக்குள் சேர்க்கின்றன.

குரங்குவாலன், கட்டைப் பயற்றை, ஏ9 மற்றும் புசிட்டாவோ போன்ற பயிற்றை இனங்களும் கத்தி அவரை, சிறகவரை, பனி அவரை, கராம்பவரை போன்ற இன்னோரன்ன அவரை இனங்களும் பயனுள்ள பல்வகைமைகளாக அமைகின்றன. பாம்பே கௌபி, வருணி, விஜே, தவல மற்றும் அங்குணு கொல, பலச ஆகிய புதிய இனங்களும் பயனுள்ள கௌபி வகைகளாகும். பாசிப்பயறு, உழுந்து என்பனவும் தம்முள் வேறுபட்ட வகைகளை கொண்டுள்ளன.

பெரும் பருமனுள்ள சர்க்கரைப்பூசணி வகைகள் அருகிவருவது துரதிஷ்டமே. அறிமுகமாக்கப்பட்டுள்ள பூசணி வகைகளும் பலவுண்டு. நீத்துப் பூசணியிலும் வேறுபட்ட வகைகள் இருப்பதால் இப்பூசணி வகைகளைப் பாதுகாப்பது பெரும் சவாலாக உள்ளது.

மிளகாய், வெங்காய இனங்கள் (Allium cepa) எம் பிரதேசத்தில் தாராளமாக வளர்கின்றன. MI-1, MI-2, KA-2, அருணலு, MI green, வன்னி மிளகாய், நிழல் மிளகாய், கொச்சி மிளகாய் மற்றும் தற்போது அறிமுகமாகியுள்ள வீரிய மிளகாய் இனங்கள் என நீண்டு செல்லும் இவ் வரிசையில் கறி மிளகாயும் அடங்கும். வேறுபட்ட காலங்களில் சந்தையில் கிடைக்கக்கூடிய வகையில் பல்வேறு வகையான மிளகாய் இனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உள்ளூரில் வளர்க்கும் வெங்காய இனங்கள் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. அதாவது குறுகிய வயதுடைய சின்ன வெங்காயமும், நீண்ட வயதுடைய – 60 நாட்களுக்கு மேலாக முதிர் வயதைக் கொண்ட வெங்காயமும் இரு பெரும் பிரிவுகளாகும். சின்ன வெங்காயத்தில் யாழ்ப்பாண உள்ளூர் இனமும் புதிய தெரிவாக வெளியிடப்பட்ட தின்னவேலி சிவப்பு வெங்காயமும் அடங்கும். தமிழ் நாட்டின் வேதாரணியப் பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு அறிமுகமாக்கப்பட்டு மருவிய பெயரான வேதாளம் என அழைக்கப்படும் இனங்களில் பல வெங்காய இனங்கள் உண்டு. வடலி வேதாளம், கல் வேதாளம், முறி வேதாளம் (முறியன்), குண்டு வேதாளம், குண்டு வல்லாரை, பீரங்கி வேதாளம் மற்றும் பூ வேதாளம் என நீளமான இவ்வரிசையில் நோய் எதிர்ப்பு தன்மையுள்ள TVM – 6 எனும் புதிய இனமும் (கட்டுரை ஆசிரியரால் உருவாக்கப்பட்டது) தற்போது பயிரிடப்பட்டு வருகிறது. சிறுபோகம் மற்றும் பெரும்போகம் என வேறுபட்ட காலங்களில் வளர்த்துப் பயன்தரக்கூடிய வகையில் இப் பல்வகைமை காணப்படுகிறது. எம் பிரதேசத்தில் மிகவும் பயனுள்ள வகையில் செய்கை பண்ணப்பட்டு வரும் ஓராண்டு பயிர்வகைகளாக இவை அமைகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4368 பார்வைகள்

About the Author

சி. ஜேம்சன் அரசகேசரி

விவசாய விஞ்ஞானியும் சூழலியலாளருமான கலாநிதி.சி.ஜேம்சன் அரசகேசரி அவர்கள் விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் முன்னைநாள் மேலதிக பணிப்பாளர் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான இவர் விவசாயத்துறையில் மூன்று தசாப்தங்களாக பயனுள்ள பங்காற்றி வருவதுடன் மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, குரக்கன் மற்றும் மா போன்ற பயிர்களில் புதிய வகைகளைக் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் சம்பந்தப்பட்ட அநேக பிரச்சினைகளின் தீர்வுகளுக்கு வழிவகுத்துள்ள அரசகேசரி அவர்கள், மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் விவசாய மற்றும் சுற்றாடல் சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு ஆலோசகராகவுள்ளதுடன் சமூக சேவையாளராகவும் திகழ்கிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)