Arts
13 நிமிட வாசிப்பு

பெண்களின் வன்முறைத் தேர்வும் அரசியல் வகிபாகமும்

May 3, 2023 | Ezhuna

ஈழம் சார்ந்தும் ஈழப்பிரச்சினை சார்ந்தும் ஆங்கிலத்திலும் தமிழல்லாத பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 2009 இற்கு பின்னர் வெளியாகிய அபுனைவு நூல்களை அவற்றின் சமூக – அரசியல் முக்கியத்துவம் கருதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு ‘திக்குகள் எட்டும்’ என்ற தொடர் வெளிவருகின்றது. இத்தொடரின் மூலம் தமிழ் சூழலுக்கு தமிழல்லாத பரப்பில் நடைபெறும் ஈழம் சார்ந்த வெளிப்பாடுகள் அறிமுகமாகும்.

நூல் அறிமுகம்

பெண்களின் வன்முறைத் தெரிவு, அதற்கான அக-புற நிர்ப்பந்தங்கள், கள அனுபவங்கள், போருக்குப் பின் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சமூக நெருக்கடிகளை இந்நூல் அனுபவரீதியாகவும் உரையாடல்கள் கதையாடல்கள் வழியாகவும் முன்வைக்கின்றது. இதில் பேசப்படும் அனுபவங்களும் கதையாடல்களும் தகவல்களும் பெரும்பான்மையாக நிலவும் கட்டமைக்கப்பட்ட பார்வைகளைக் கட்டுடைக்கவும் புரிதலை வளர்த்துக்கொள்ளவும் உந்தக்கூடியது. உலகளாவிய பெண் போராளிகளின் அரசியல் வகிபாகத்தினை பெண்ணிய மற்றும் சமூக, பண்பாட்டு, அரசியல் நோக்கு நிலைகளில் விளங்கிக்கொள்ளவும் உதவக்கூடியது. அவை தொடர்பான உடையாடல்களுக்கும் வழிகோலக்கூடியதாகும்.

‘Radicalizing Her: Why women choose violence’ என்ற இந்தப் புத்தகம், பெண்கள் வன்முறையை எதிர்ப்பரசியலாகத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்ற புறநிலைகளை அனுபவப்பகிர்வுகள் ஊடாக முன்வைக்கின்றது. ஈழம், கொலம்பியா, எரித்ரியா, பாகிஸ்தான் உட்பட்ட தேசங்களைச் சேர்ந்த வன்முறையை எதிர்ப்பரசியல் வழிமுறையாகக் கைக்கொண்ட பெண்களின் அனுபவங்கள் பகிரப்படுகின்றன.

நூலாசிரியர்

Dr.-Nimmi

‘எனக்கும் இந்தப் புத்தகத்தில் நான் விபரிக்கும் பெண்களுக்கும் வன்முறை என்பது ஓர் அரசியல் யதார்த்தம்’ என்கிறார் நூலாசிரியர் நிம்மி கௌரிநாதன். பாலினம் மற்றும் அதிகாரம் தொடர்பான உரையாடல்களில் பெண் போராளிகளைத் தவிர்த்துவிட முடியாது என்பதை வலியுறுத்துகின்றார்.

இவர் ஈழத்தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அமெரிக்காவில் வாழும் எழுத்தாளர். இவர் பாலினம் மற்றும் வன்முறை சார்ந்த பேசுபொருளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இராணுவமயமாக்கல், பாலினம் மற்றும் அரசியல் வன்முறை மற்றும் மனிதாபிமான தலையீடு பற்றிய கல்வியியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஊடகப் பத்திகளையும் தொடர்ச்சியாக எழுதிவருபவர். பாலின வகிபாகமும் வன்முறையும், பெண் தீவிரவாதம், சமூக இயக்கங்கள், புகலிடப் பிரச்சினைகள், இன மோதல்கள், மற்றும் இலங்கை இனப்பிரச்சினை, இராணுவமயமாக்கல், இடம்பெயர்வு ஆகியவற்றின் தாக்கம் என்பன கௌரிநாதனின் ஆர்வத்திற்குரிய ஆய்வுத்துறைகளாக உள்ளன. அவர் Deviarchy என்ற வலைப்பதிவின் ஆசிரியராகவுள்ளதோடு, Foreign Affairs  மற்றும்  CNN உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களிலும் கருத்துரைத்து வருகின்றார்.

வன்முறைக்கான நிர்ப்பந்தங்களும் அனுபவங்களும்

பெண்கள் ஆயுதத்தையும் வன்முறையையும் கையிலெடுப்பதற்கான நிர்ப்பந்தங்கள் எவ்வகையான புறச்சூழல்களினால் ஏற்படுகின்றன, போராட்ட அமைப்பில் அவர்களின் அனுபவங்கள், போர்க்கள அனுபவங்கள், போருக்குப் பின்னான சமூக இணைவு சார்ந்து அவர்கள் முகம்கொள்ளும் நெருக்கடிகள் அனுபவ ரீதியாகப் பேசப்படுகின்றன. பாலினம், வன்முறை மற்றும் அதிகாரம் தொடர்பான சமகால உரையாடல்களுக்கு ஒரு வகையான கண்ணாடியாக இக்கதையாடல்களின் பிரதிபலிப்புகள் உள்ளன. பெண்கள் வன்முறையைத் தேர்ந்துகொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் அனைத்துவகையான சிக்கலான அக-புறச் சிக்கல்களும் பேசப்படுகின்றன. குடும்ப, சமூக, அரசியல், பொருளாதார, ஆண்மையவாத, அரச ஒடுக்குமுறைகள் குறித்த விபரிப்புகள் உள்ளன.

Radicalizing-Her-Why-women-choose-violence
Radicalizing-Her-Why-women-choose-violence

இதில் விபரிக்கப்படும் பெண் போராளிகள் ஆயுதப் போராட்ட அமைப்பின் அங்கத்தவர்களாகச் செயற்பட்டவர்கள்.  பெண் போராளிகள் குறித்த மேற்கின் அணுகுமுறை மீதான விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. பெண்கள் வன்முறையைத் தெரிவுசெய்வதற்கான தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணிகள் பேசப்படுகின்றன.

‘இயக்கத்தில் இணைந்தது தொடர்பாக எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. அடுத்த தலைமுறை செல் சத்தங்களைக் கேட்கக் கூடாது. இயக்கம் இன்று இல்லாமற் போனதையிட்டு நான் கவலை கொள்கிறேன். இப்ப எனக்கிருக்கிற பயமெல்லாம் இத்தனை இராணுவத்தினருக்கு நடுவில் என் மகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஆயுதமேந்தியிருந்த போது இயக்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக உணர்ந்தனர்’ என்கிறார் முன்னாள் போராளியான நாயகி.

அடிப்படையில் ஆயுத இயக்கங்களில் அங்கம் வகித்த-வகிக்கும் பெண் போராளிகள் பற்றிய புரிதற் குறைபாடுகளும், தவறான மதிப்பீடுகளும் பல மட்டங்களிலும் நிலவுகின்றன என்பதை உணர்ந்தமையே இந்நூலை எழுதுவதற்கான தூண்டுதலாக அமைந்ததை நூலாசிரியர் பதிவு செய்திருக்கின்றார்.

‘பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட பெண்களுக்கு அருகில் எவ்வளவு நெருக்கமாகச் சென்றேனோ, அவ்வளவு அதிகம் அவர்களுடைய முடிவுகள், தீர்மானங்கள் (ஆயுதமேந்திய வன்முறை, எதிர்ப்பரசியல் சார்ந்த அவர்களின் தீர்மானங்கள்) வெகு இயல்பானவையாகத் தெரியத் தொடங்கின’ என்று குறிப்பிடுகின்றார்.

ஒரு பெண் ஆயுதம் ஏந்த நேர்வதானது என்பது அவளுடைய அழிவாக வெளியுலகத்தாற் பார்க்கப்படுகின்றதும் தோற்றப்படுத்துகின்றதுமான நிலை உள்ளது. ஆனால் அவள் (ஒடுக்குமுறைக்காக) இலக்கு வைக்கப்படுவதால் ஆயுதம் ஏந்துகிறாள். எனவே ஆயுதம் ஏந்துவதென்பது அடிப்படையில் ‘எதிர்ப்பின்’ வடிவம் என்பதாக வலியுறுத்துகின்றன இந்நூலில் பெண் போராளிகள் பகிர்ந்திருக்கும் அனுபவங்கள். பெண் ஆயுமேந்துவது தொடர்பான பொதுப்புத்தியின் கருதுகோள்கள் மற்றும் அனுமானங்கள் சமூகத்தில் நிலவுகின்ற பாலின வகிபாகங்கள் சார்ந்து பெண்களின் இயல்பான பலவீனங்களாகக் கட்டமைக்கப்பட்ட சமூக நம்பிக்கைகளின் வெளிப்பாடாகும்.

‘இயக்கத்தில் இணையப் பல்வேறு காரணிகள் இருந்தன. தமிழ்க் கலாசார வாழ்வில் பெண்களுக்குப் பல்வேறு சவால்கள் நிலவுகின்றன. ஆனால் முதன்மையாக அரசின் அழிப்பிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இணைந்தேன்.’ என்கிறார் நாயகி அவரைப் பொறுத்தவரை எதிர்ப்பு என்பது சமூகக் கூட்டுணர்வு மற்றும் பாலின அடிப்படையிலான ஆழமான அர்ப்பணிப்பாகும்.

இந்நூலில் ஈழம் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் போராளிகளுடனான நேர்காணல்களிலிருந்து பெறப்பட்ட பகிர்வுகள் முதன்மையாக உள்ளன. அகிலா, நாயகி, கொலம்பியாவைச் சேர்ந்த சாண்ட்ரா ஆகியோர். ஈழப் போராட்டம், கொலம்பியப் போராட்டம் என்பன அரச பயங்கரவாதம் மற்றும் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் என்ற வகையில், ஒப்பீட்டளவில் போராட்டத்திற்கான இணைவு என்பதற்கான புறத்தூண்டுதல்கள் ஒரே தன்மை கொண்ட அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன. நூலாசிரியர் இருபது ஆண்டுகளாக முன்னெடுத்த (2001 – 2020) உரையாடல்களின், அவதானிப்புகளின் தொகுப்பு இந்நூல்.

கட்டமைக்கப்பட்ட ஒற்றைப் பார்வை

2009 போரின் இறுதியிற் கைதுசெய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பெண் போராளி ஒருவரைச் சந்தித்து உரையாடுவதுடன் நூலின் முதல் அத்தியாயம் தொடங்குகின்றது.

பெண் போராளிகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கட்டமைக்கப்பட்ட கதை என்பது அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இயக்கத்திற்குள் இணைக்கப்பட்டவர்கள் என்பதாகும். அல்லது ஆயுதக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்கள் என்ற கருத்தும் நிலவுகின்றது. ஆனால் அடிப்படையில் அது அப்படியல்ல. இயக்கங்களிற் பெண்களின் பங்களிப்பும் வகிபாகவும் காத்திரமானவையாக இருந்திருக்கின்றன. போராட்ட அமைப்பின் அனைத்து அரசியல், சமூகமயமாக்கல் வடிவங்களிலும் போர் நடவடிக்கைகளிலும் அவற்றின் முன்னேற்றங்கள் பின்னடைவுகள் உட்படப் பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கின்றது என்கிறார் நிம்மி. அதுவும் முன்னர் இல்லாமலிருந்த அல்லது தடுக்கப்பட்டிருந்த அரசியல் வெளியில் அவர்கள் இயங்கியிருக்கின்றனர்.

போராட்டம் மூலம் பெண் போராளிகள் மத்தியில் ஒரு அரசியல் சுய உணர்வு வெளிப்பட்டிருக்கின்றது. ஒரு பெண் போராளி எல்லா வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதற்கான திறன்கொண்டவளாக உருவாகுகின்றாள். அதன் பொருள் ஒரு முன்னோக்கும் தெளிவான அரசியல் இலக்குமுடைய அமைப்பு அவ்வாறு அவளை உருவாக்குவதற்குரிய தன்மைகளைக் கொண்டிருக்கக்கூடியது என்பதாகும்.

சிக்கலான சமூக உளவியல்

’நான் இயக்கச் சீருடை அணிந்துகொண்டு துப்பாக்கியோடு நகருக்குட் சென்ற போது,  அனைவரும் என்னைப் பார்க்கும் விதத்தில் ஒருவித மரியாதை தென்பட்டது. ஆனால் இப்போ சீருடை, ஆயுதம் இன்றிச் செல்கிறேன். மனிதர்கள் என்னைக் கண்டவுடன் தமது முகங்களைத் திருப்பிக் கொள்கின்றனர் அல்லது என்னைப் பார்த்து ஏளனம் செய்கின்றனர். போலி நாணயம் போல் எனக்கு மதிப்பேதும் இல்லை.’ என்ற கூற்று மேற்கோளாக இடம்பெற்றிருக்கின்றது. இக்கூற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழினியின் ’கூர்வாளின் நிழலில்’ நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

தமிழினியின் கூற்று தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூகப் பார்வை சார்ந்த சிக்கலான உளவியலின் விளைவுகள். வெளித்தோற்றத்தில் இது ஆயுதப்போரின் தோல்வியின் விளைவாகத் தோன்றலாம். ஆனால் அதனைத் தாண்டிய சமூக உளவியலின் பின்னணியில் நோக்கப்பட வேண்டியது இதுவாகும்.

2009 மே மாதம் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் போராளிகள் சரணடைய நேர்ந்த சூழல் விபரிக்கப்படுகின்றது:

’ஒரு நாளெனினும் புலிகள் இயக்கத்தில் நீங்கள் இருந்திருந்தாற் கூட கட்டாயம் சரணடைய வேண்டும். சரணடையாவிட்டால் நாம் கண்டுபிடித்துவிடுவோம்’. இராணுவத்தினரின் இந்த அறிவிப்பு போராளிகளின் நம்பிக்கை முழுவதையும் ஒரு இயக்கத்திடமிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து அரசிடம் கையளிக்கப்பட்ட தருணமாக உணரப்படுகிறது.

’நீங்கள் போரிற் தோற்றுவிட்டீர்கள் முன்னோக்கி நகருங்கள்’ என்று இராணுவத்தினர் கூறியதை நினைவுகூரும் அகிலா, அவர்கள் தம்மை நடாத்தும் முறை தம்மைப் பழைய நினைவுகளை மறக்க உதவவில்லை. மாறாக ஏன் போராட உந்தப்பட்டோம் என்பதை நினைவூட்டுவதாகவே இருக்கின்றது என்கிறார்.

தமிழினியின் ’கூர்வாளின் நிழலில்’ நூலிலிருந்து மற்றுமொரு மேற்கோள் காட்டப்படுகின்றது.

’போர் நடந்துகொண்டிருந்த நாட்டில் வாழ்ந்ததால் இயக்கத்தில் இணைய வேண்டிவந்தமை முதன்மைக் காரணியாக இருந்தாலும் – பெண்கள் தொடர்பான எனது குடும்பம், என்னைச் சுற்றியிருந்த குடும்பம் கட்டமைத்து வைத்திருந்த பெண் பற்றிய ஒற்றைத்தன்மையான போக்குகளைக் கட்டுடைக்கவும், எதிர்க்கவுமான ஒரு வாய்ப்பாகவும் கொண்டேன்.’

கொலம்பியப் பெண் போராளியின் அனுபவங்கள்

கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படையின் (Revolutionary Armed Forces of Colombia – FARC) முன்நாள் கட்டளைத் தளபதியான சாண்ட்ராவுடனான உரையாடல்களில் வெளிவரும் அனுபவங்கள் இந்நூலில் முக்கியமானவை. 2016ஆம் ஆண்டு அந்த அமைப்பிற்கும் கொலம்பிய புரட்சிப் படைக்குமிடையில் சமாதானத் தீர்வு எட்டப்பட்டதையடுத்து, 2017இல் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. தான் தற்போது போர்க்களத்தில் இல்லாவிட்டாலும், இப்பொழுதும் தன்னையொரு போராளியாகவும்  FARC இன் உறுப்பினராகவும் தன்னை உணர்வதாகக் கூறியிருக்கின்றார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவு, குர்திஸ்தான் விடுதலை இயக்கமான பி.கே.கே இன் பெண் போராளிகள் பிரிவு உட்பட்ட உலகின் பெண் போராளிகள் பற்றி வாசித்தறிந்திருக்கின்றார். இரண்டு அமைப்புகளும் தனிநாட்டுக்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டிருந்தவைகளாகத் தெரிந்தன என்கிறார்.

தான் FARCஇல் இணைந்தபோது, பெண்கள் அரிதாகவே அந்த அமைப்பில் இணைகின்ற சூழல் நிலவியது. FARCஇல் இணைவதென்பது குடும்பத்துடனான தொடர்புகளை முற்றிலும் துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது. எந்தக் குடும்பமும்  FARCஉடன் தொடர்புள்ளதைக் காட்டிக்கொள்ள முடியாத, விரும்பாத காலமும் சூழலும் அரசிடமிருந்து ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய சூழல் நிலவியது.

 FARC இயக்கம் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவுகளைக் கொண்டிருந்தது. இராணுவப் பயிற்சி அனுபவம் மற்றும் அதன் கடினத்தன்மை குறித்து நூலாசிரியர் வினவியபோது, சாண்ட்ராவின் பதில் இப்படி வெளிப்படுகிறது:

நடத்தைகளின் விலங்குள்

’வாழ்வில் அனைத்தும் ஒரு செயல்முறை சார்ந்தவை. மனிதர்கள் என்பவர்கள், ’பழக்கங்களின்-நடத்தைகளின் விலங்குகள்’. ஒரு இயக்கத்திற்காக ஒருவர் எப்பொழுது தன்னை அர்ப்பணிக்கின்ற முடிவினை எடுக்கின்றாரோ, அவரது மனமும் உடலும் பழக்கப்படுதல் தொடர்பான புதிய வழியைக் கண்டடையும். அவர்கள் செயற்பாட்டு விருப்புக் கொண்ட அரசியற் பொருளாகுகின்றனர்.’

தான் மூளைச்சலவை செய்யப்பட்டு அமைப்பில் இணையவில்லை என்றும் தன்னைச் சுற்றி நடந்த அநீதிகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கையாகத் தனது இணைவு ஒரு அர்த்தத்தினைக் கொடுத்ததாகக் கூறுகின்றார். இணைவிற்கு முன்னர் வெறுமனே பொதுமக்கள் மீதான சில கொலைகள் மற்றும் சமூக மாற்றத்தை விரும்பிய செயற்பாட்டாளர்கள் மீதான கொலைகளை மட்டும் பார்க்கவில்லை. பாரிய படுகொலைகளைக் கண்டேன் என்கிறார்.

FARC பாலின சமத்துவக் கொள்கைகளை வகுத்துக் கொண்ட அமைப்பு. அக்கொள்கைகள் அனைத்தும் நடைமுறை யதார்த்தத்தில் பிரதிபலித்தன எனச் சொல்ல முடியாது. அமைப்பில் பெண் போராளிகள் அதிகரித்தபோது, உள்ளக உரையாடல்களும் அதிகம் இடம்பெற்றதாகக் கூறும் சாண்ட்ரா, பெண்களின் திறன்களைச் சில ஆண்கள் ஒத்துக்கொண்டு மதித்தனர் எனவும் சிலர் உரிய முறையில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். தனது படைப்பிரிவில் பெண்கள் மத்தியில் அரசியல் முன்னோக்குகளை வளர்க்க முடிந்ததையிட்டுப் பெருமை கொள்கிறார்.

தான் கொண்டிருந்த சிந்தனைகளுக்கு மிக நெருக்கமாக FARC அமைப்பு இருந்ததாகவும் சமூக நீதிக்காகவும் போராடிய அந்த அமைப்பின் ஓர் அங்கமாக விரும்பியதாகவும் அவர் கூறுகின்றார். சாண்ட்ரா கல்லூரிப் படிப்பின் போது மாணவ அமைப்பின் தலைவராகவும் பின்னர் சமூக மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

நூலாசிரியர் இரண்டு கோடை காலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற் தமிழ்ப் பெண்களுடன் நேரம் செலவிட்டுள்ளார். அதனை கல்வியியல் ஆய்விலிருந்து வேறுபட்ட கள ஆய்வு சார்ந்த ஒரு அரசியற் செயற்பாடாக வரையறை செய்கின்றார். தனது கல்வியியல் வழிகாட்டிகள், இன மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் தொடர்பான பேரரசியலைப் புறவயமாகக் கற்கச் சொல்லித் தனக்கு ஆலோசனை வழங்கியதாகப் பதிவுசெய்கின்றார். செயற்பாட்டியங்குதலும் பெண்கள் சார்ந்த கற்கையும் அதன் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

நூலாசிரியர் தன்னனுபவக் கதையாடல்களையும் தனது குடும்பப் பின்னணியிலான சம்பவங்களையும் ஆங்காங்கே விபரிக்கின்றார்.

பெண் போராளிகளின் அரசியல் வகிபாகம்

சிக்கலானதும் வன்முறை தழுவியதுமான வழிமுறைகள் மூலமான பெண்களின் அரசியல் வகிபாகத்தினை அணுகுவதற்கு மாற்று உலகப் பார்வை அவசியமானதாகுகின்றது. இது சார்ந்து கட்டமைக்கப்பட்ட பார்வைகள் இயல்பிற் தெளிவற்றவை. பெண் போராளிகள் பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள பார்வைகள் பாலினம் தொடர்பாகக் கட்டமைக்கப்பட்டுப் பேணப்படுகின்ற ஆழமான நம்பிக்கைகளிலிருந்து பிறக்கின்றன. மேலும் அவை ஒடுக்குமுறைக்கான உந்துதலாகவும் உள்ளன.

  • இயற்கையாகவே ஆண்களை விடப் பெண்கள் மென்மையானவர்கள், அமைதியானவர்கள்.
  • பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இணைக்கப்படுகின்றனர்.
  • தமது வாழ்விற் சந்தித்த ஆண்களினால் (அவர்களினாற் பட்ட துன்பங்களின் காரணமாக) இணைகின்றார்கள்.
  • பெண்களுக்கு அதிகாரக் கையளிப்பினைச் (Women Empowerment) செய்தால், வன்முறையைத் தெரிவுசெய்வதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கலாம்

மேற்சொன்ன அம்சங்கள் பெண் போராளிகளின் சுய உணர்வு மிக்க அரசியற் தெரிவு, வகிபாகத்தைக் குறைத்து மதிப்பிடும் போக்குகள், பார்வைகளின் வெளிப்பாடு என்பதை இந்நூலின் கதையாடல்கள் மூலம் ஆசிரியர் நிறுவுகின்றார். இந்நூலில் இடம்பெற்றுள்ள எந்தப் பெண்களும் தாம் மூளைச்சலவை செய்யப்பட்டுப் போராட்டத்தில் இணைந்ததாகச் சொல்லவில்லை.

வன்முறைகளின் வேர்

அனைத்து வன்முறைகளுக்குமான வேர் அதிகாரத்துவம். ’நான் உன்னைக் கட்டுப்படுத்துவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றேன் என்பதிலிருந்து பிறக்கின்றது என்பதை பெண்ணியச் சிந்தனையாளர் Rebecca Solnitஇன் கூற்றினை மேற்கோள் காட்டுகின்றார். தனிமனித, திருமண, குடும்ப உறவிலிருந்து, சமூகம், அரசு என நிறுமனமயப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கும் அடிப்படையாக இக்கூற்றுப் பொருந்தக்கூடியது.

பெண்களின் வன்முறைத் தெரிவு, அதற்கான அக-புற நிர்ப்பந்தங்கள், கள அனுபவங்கள், போருக்குப் பின் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சமூக நெருக்கடிகளை இந்நூல் அனுபவரீதியாகவும் உரையாடல்கள் கதையாடல்கள் வழியாகவும் முன்வைக்கின்றது. இதில் பேசப்படும் அனுபவங்களும் கதையாடல்களும் தகவல்களும் பெரும்பான்மையாக நிலவும் கட்டமைக்கப்பட்ட பார்வைகளைக் கட்டுடைக்கவும் புரிதலை வளர்த்துக்கொள்ளவும் உந்தக்கூடியது. உலகளாவிய பெண் போராளிகளின் அரசியல் வகிபாகத்தினை பெண்ணிய மற்றும் சமூக, பண்பாட்டு, அரசியல் நோக்கு நிலைகளில் விளங்கிக்கொள்ளவும் உதவக்கூடியது. அவை தொடர்பான உடையாடல்களுக்கும் வழிகோலக்கூடியதாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9139 பார்வைகள்

About the Author

சிவராஜா ரூபன்

ரூபன் சிவராஜா அவர்கள் 1993 ஆம் ஆண்டு சிறுவனாக இருக்கும்போது ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, நாடகம் மற்றும் ஊடகம் ஆகிய தளங்களில் இவர் செயற்பட்டு வருவதுடன் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் சார்ந்தும் எழுதி வருகிறார். ஈழம், தமிழகம், மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், இதழ்களில் இவரது எழுத்துக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன.

'எதிர்ப்பரசியல்', 'அதிகார நலனும் அரசியல் நகர்வும்' (உலக அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு), 'எழுதிக் கடக்கின்ற தூரம்' (கவிதைத் தொகுப்பு), 'கலைப்பேச்சு' (திரை நூல் அரங்கு) என்பன இவரது படைப்புகளாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)