Arts
26 நிமிட வாசிப்பு

பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றுதல்

September 23, 2022 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

12 ஆம் நூற்றாண்டில் இந்து  சமுத்திரத்தில் அதுவரை கடலாதிக்கம்  செலுத்திய சோழ சம்ராச்சியம் பலவீனப்பட்டபோது அவர்களது பிடியில் இருந்த கடல் வர்த்தகம் அரேபியர்களினதும் முஸ்லிம்களினதும் கைகளுக்கு மாறியது. ஐரோப்பிய நாடுகளின் கடல் வலிமை ஓங்கியபோது அவர்களது துப்பாக்கிப் பலத்தின் முன்னால்  ஆரியர்களின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதலில் போர்த்துகேயர் இலங்கைக்கு  வந்தது ஒரு தற்செயலான  விடயம்.  அவர்கள் கடலாதிக்கத்துக்காக அரேபியர்களோடும்,  இலங்கையிலும் இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட – அப்போது நிலவிய நிலவுடைமை சமூகத்தின் காவலனாகத் திகழ்ந்த – உள்ளூர் மன்னர்களோடும் போராட வேண்டியிருந்தது. இலங்கையில் வாசனைத்திரவியங்களின்  கட்டுப்பாடு முஸ்லிம் வர்த்தகர்களின் பிடியில்  இருந்ததால் அவர்களும் போர்த்துகேயருடன் மோதினர். இச்சவால்களை எல்லாம் போர்த்துகேயர் துப்பாக்கி முனையால் மாத்திரம் சமாளிக்கவில்லை; குரூரமான அடக்குமுறையாலும்  வஞ்சனையாலும்  சூழ்ச்சிகளாலும், தமக்கு ஆதரவான சுதேசத் தலைவர்களுக்கு பதவியும் லஞ்சமும் கொடுப்பதன் மூலமும், மிசனரி கல்விமூலமும், கிறிஸ்தவ மதத்தை பரப்பி மதமாற்றம் செய்வதன் மூலமும் அதனை வெற்றிகரமாக செய்தனர்.  ஆயினும் அவர்களால் இலங்கையிலும் அவர்கள் கைப்பற்றிய ஏனைய ஆசிய நாடுகளிலும்  தொடர்ச்சியாக ஆட்சி செய்யமுடியாமல் போனதற்கு மற்றுமொரு  புதிய சவால் காரணமாகியது. அதுதான்  ஒல்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா  ஆகிய ஐரோப்பிய நாடுகளும் காலனியல் கொள்ளையில் போட்டியிடத் தொடங்கியமையாகும். ஸ்பெயின் போன்ற நாடுகளின் கவனம் புதிய உலகமான அமெரிக்க கண்டத்தின்  மீது இருந்தபடியால் அவர்கள் இந்து சமுத்திர பிரதேசத்தில் கவனம் செலுத்தவில்லை. எனினும் அதுவரை நிலப்பிரபுத்துவ காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்த ஆசிய மன்னர்களின் நிலகொள்ளைக்கான மையமாகத் திகழ்ந்த இந்து சமுத்திர பிரதேசம், ஐரோப்பிய நாடுகளின் காலனித்துவ கொள்ளைக்கான போட்டியின் மற்றொரு குவிமையமானது.

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவம்

இலங்கை இந்தியாவுக்கு அருகில் இருந்தபடியாலும் – இரு பருவக் காற்றின் போதும் பாதுகாப்பாக கப்பல்களை நிறுத்தக்கூடிய  – உலகின் இரண்டாவது  பெரிய ஆழ்கடல் இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகம் இங்கிருந்தபடியாலும் காலனியல் போட்டியில் இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்தது. ஒல்லாந்தர் போர்த்துகேயரிடமிருந்து இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றியதற்கு இலங்கையில் விளையும் கறுவா ஒரு காரணமாக இருந்தாலும்  இந்தியாவில் தமது நிலைகளைக்  காப்பாற்றிக்கொள்வதற்கு திருகோணமலைத் துறைமுகத்தின் தேவையும் மற்றொரு  முக்கிய காரணமாக அமைந்தது.

திருகோணமலை இயற்கை துறைமுகம்

ஆனால் பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றியதற்கு  ஒரே முக்கிய காரணமாக திருகோணமலை இயற்கைத் துறைமுகமே அமைந்தது. இந்தியாவில் முகலாயப் பேரரசு (1526 – 1757) வீழ்ச்சியடைந்துக்கொண்டிருந்த வேளையது.  ஐரோப்பிய காலனித்துவ நாடுகள், துணைக் கண்டத்தில் ஏற்பட்ட  அதிகார வெற்றிடத்தை நிரப்ப போட்டியிட்டன.  பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையிலான போட்டி கடுமையானது.   இந்தியாவின்  மலபார் மற்றும் கோரமண்டல் கடற்கரையில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய கட்டளை நிலைகளை பாதுகாப்பதற்கு  இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள திருகோணமலை இயற்கைத் துறைமுகம்  பிரித்தானியாவுக்கு தேவைப்பட்டது. எனவே திருகோணமலைத் துறைமுகத்தை ஒல்லாந்தரிடம் இருந்து  பிரித்தானியர்  1782 ஜனவரி 8 ஆம் திகதி  கைப்பற்றினர். அதனால்  பிரான்ஸ் படை அதனை அதே வருடம் ஓகஸ்ட் 29 ஆம் திகதி மீட்டு ஒல்லாந்தரிடம் மீண்டும் சில மாதங்களில்  ஒப்படைத்தது. இது திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தினை உணர்த்தும்  மற்றொரு  உதாரணமாகும்.

அதனைத்தொடர்ந்து  ஆங்கிலேயர்  ஒல்லாந்தருடனும்  பிரெஞ்சுக்காரருடனும் திருகோணமலைத் துறைமுகத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில்  ஈடுபட்டு  அம்முயற்சியில்  இறுதியில்  1796 இல் வெற்றிபெற்றனர். அதன் பின்னர்  டச்சுக்காரர்களை தீவில் இருந்து வெளியேற்றத் தொடங்கினர். ஐரோப்பாவில் நடைபெற்ற திடீர் மாற்றங்களும் பிரித்தானியரின் சூழ்ச்சித் திறனும் இதற்கு பெரிதும் காரணமாயின.

அப்போது பிரெஞ்சுப் புரட்சி  (1792-1801) யுத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. ஒல்லாந்து  பிரெஞ்சுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதனால் ஒல்லாந்தைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரரிடம் தமது  ஆளுகையின் கீழிருந்த இலங்கை கரையோரப்பகுதிகளையும்  ஒல்லாந்தர் தாரைவார்த்து கொடுத்துவிடுவார்களோ என்ற பீதியில் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்ற விரும்பினர். ஆனால் ஒல்லாந்தர்  கோட்டைகள் அமைத்து தமது பகுதிகளை பலமாக அரண்செய்திருந்தனர். பிரான்சியருடன் மோதிக்கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவில் கூடி கவனம் செலுத்தவேண்டிய தருணத்தில்,  இலங்கையில் நீண்டதொரு யுத்தத்தை நடத்த அவர்கள் தயாரில்லை. ஆகவே நரித்தனமாக தமது காய்களை நகர்த்தத் தொடங்கினர்.

ஒல்லாந்தரிடமிருந்த கரையோரங்களின் ஆட்சி ஆங்கிலேயர் வசமாதல்

ஒல்லாந்து  கவர்னரின் கீழ் இருந்த கரையோரப்பகுதிகள்  பலவும் கொழும்பில் இருந்த கவர்னரின் மாளிகையும் சுவிட்சர்லாந்தின் திறமைமிக்க கூலிப்படை வீரர்களின் துணையோடு  பலமாகக் காவல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த சுவிட்சர்லாந்து காவலாளிகளை தம்பக்கம் இழுக்க ஒரு காரியத்தை பிரிட்டிஷார் செய்தனர். செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின்  பேராசிரியராக இருந்த 34 வயதான  ஹியூக் கிளெஹோர்ன் (Hugh Cleghorn) என்ற  ஒரு ஸ்காட்லாந்துகாரரை தமது ஏஜெண்டாக மாற்றினர்.  இலங்கையில் உள்ள   சுவிட்சர்லாந்தின்  கூலிப்படைகள்  சுவிஸ் பிரபுவான   கவுண்ட் சார்லஸ் டி மியூரனுக்கு (Count Charles de Meuron) சொந்தமான  தனியார் இராணுவத்தின் ஒரு பிரிவாக இருந்தது. அந்தப் பிரபுவை பிரித்தானிய ஏஜென்டான ஹியூக் இரகசியமாக சந்தித்து  டச்சுக்காரர்கள் செலுத்தும் பணத்தை விட கூடுதலான தொகையை தருவதாகவும் அதற்கு  கைமாறாக  இலங்கை கவர்னரிடம் சேவையிலிருக்கும் அவரது படைகளை லாவகமாக பிரித்தானியருக்கு சாதகமாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது. இலங்கையில் கூலிப்படைக்கு தலைமை தாங்கிய  சுவிஸ்பிரபுவின்  சகோதரருக்கு டச்சு காவலர்களுக்கு தெரியாமல்  கவுண்டின் கட்டளையை கொண்டு சேர்ப்பதில் பெரும்  சிக்கல் இருந்தது.  சமயோசிதமாக, ஹியூக்  கவுண்டின் கையொப்பமிடப்பட்ட கட்டளையை  ஒரு வெண்ணெய்க் கட்டியில் (cheese) மறைத்துக்கொண்டுப்போய் உரியவரிடம் ஹியூக் ஒப்படைத்தார். இவ்வாறுதான்  பெப்ரவரி 1796 இல் பெரிதாக எந்த  யுத்தமும்  நடத்தாமல்  பிரிட்டிஷ் படையிடம் ஒல்லாந்துப் படை சரணடைந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனி

எனினும் அப்போது  ஐரோப்பாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபடியால்  இலங்கை மீண்டும்  டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்படுமோ  என்ற ஐயம் பிரித்தானியரிடம் நிலவியதால் மெட்ராஸ் பிரசிடென்சியின் (Presidency  of  Madras) ஒரு பகுதியாக கிழக்கிந்தியக் கம்பெனியால் இலங்கை நிர்வகிக்கப்பட்டது. ஆனால் இந்தியப் பாணியில்  கிழக்கிந்தியக் கம்பெனி விதித்த வரிகளை எதிர்த்து மக்கள் கிளர்ந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குள் ‘இரட்டை ஆட்சி முறை’ (dual system)  நிறுவப்பட்டது. இதன்படி கிழக்கிந்தியக் கம்பனி இலங்கையின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்திய அதே சமயம் சட்டமும்  நிர்வாகமும்  ஆளுநரின் கைகளில் இருந்தது. அவர் பிரித்தானிய அரசாங்கம், கிழக்கிந்தியக் கம்பனி  ஆகிய இரண்டிற்கும் பதில் கூறவேண்டியிருந்தது.

ஆள்பதி பிரடெரிக் நோர்த்

இந்த “இரட்டை ஆட்சிமுறை”  1798 முதல் 1802 வரை நீடித்தது. 1801 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் செய்துகொள்ளப்பட்ட  அமியன்  (Peace of Amiens)  ஒப்பந்தத்தின்படி பிரான்சும் பிரித்தானியாவும் தற்காலிக யுத்த நிறுத்தத்துக்கு இணங்கின. பிரித்தானியா – பிரான்சுக் குடியரசை அங்கீகரித்தது. ஒல்லாந்தர்  இலங்கைத் தீவில் தம்மிடமிருந்த ஆட்சி உரிமையை   பிரித்தானியர்களிடம் முறையாக ஒப்படைத்தனர். அதன் பின்னர்  இலங்கை பிரிட்டனின் முதலாவது  முடிக்குரிய  காலனியாக மாறியது. இலங்கையின் முதலாவது  ஆள்பதியாக   இருந்த 32 வயதே ஆன ஃபிரடெரிக் நோர்த் புத்திசாலித்தனமான ஆனால் உல்லாச – ஆடம்பரப் பிரியராக இருந்தார். கலைப்பட்டதாரியான திருமணமாகாத இளைஞரான இவர் மூன்றாவது  ஜோர்ஜ் மன்னனின் பிரதமராக இருந்த நோர்த் பிரபுவின் மகன்.  ஆகவே ஃபிரடெரிக் நோர்த் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் தலையீடுகள் அவருக்கு பிடிக்கவில்லை.  தனது செல்வாக்கை பிரிட்டனில் பயன்படுத்தி இரட்டை ஆட்சி முறையை இவ்வாறு 1802 இல் முடிவுக்கு கொண்டுவந்தார்.

1803 கண்டி மீதான படையெடுப்பு

அவரது அளவுகடந்த உற்சாகம் சீக்கிரம் அவரை சிக்கலில் மாட்டிவிட்டது. அப்போது கண்டி இராச்சியத்தின் இயற்கை வளம் வெகுவாக அறியப்பட்டிருக்கவில்லை. கண்டியின் படையெடுப்புகள் பெரும்பாலும் ஓய்ந்து போயிருந்தன.  ஆகவே கண்டி தனி இராச்சியமாக தொடர்வதையிட்டு பிரித்தானியா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு ஆசியாவில் விரிந்து செல்லும் அவர்களது சாம்ராச்சியத்தின் பாதுகாப்புக்கு இலங்கையின் கரையோரப்பகுதிகள் தேவைப்பட்டன. ஆனால், நாயக்க வம்ச ஆட்சியில் அதிருப்தியுற்றிருப்பதாக காட்டிக்கொண்டு அரியணையின் மீது குறிவைத்திருக்கும்  அதிகார அடுக்கில் மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்த   மகா அதிகாரம்  பிலிமத்தலாவையுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவனது ஆதரவைப் பெற்றுக்கொண்டதால் பெரிதும் உற்சாகமடைந்த ஆள்பதி  ஃபிரடெரிக் நோர்த் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முடிவெடுத்தார்.

இயற்கை அரணால் பாதுகாக்கப்பட்ட கண்டி இராச்சியத்தின் அரண்மணை நிலைவரம் தெரியாமல் கண்டி மக்களின் மனநிலை தெரியாமல் ,சுருக்கமாகக்கூறின் போதிய தகவல்களும் ஆதரவும் இன்றி – கண்டிய பிரதானி பிலிமத்தலாவையை நம்பி –  1803 ஆம் ஆண்டு  3,400 படையினரைக் கொண்டு  (இத்தொகை பல துணை இராணுவபிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்). மெக் டோவெல் (McDowell) தலைமையில் கண்டிமீது அவர் போர் தொடுத்தார்.  

ஆரம்பத்தில் பிலிமத்தலாவையின் மறைமுக ஆதரவோடு  பிரித்தானிய படைகள் முன்னேறிச்சென்றன. தாம் வெற்றிபெற்றுவிட்டதாகக் கருதி அவசரப்பட்டு  போலி இளவரசன் ஒருவனை முத்துசாமி என்ற பெயரில்    1803 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி கண்டி மன்னனாக ஆங்கிலேயர் பிரகடனப்படுத்தினர்.  இதனால் அரியணையில் அமர்வதற்கு ஆசைப்பட்டுக்கொண்டிருந்த  பிலிமத்தலாவ ஏமாற்றமடைந்து ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினான். கண்டி மக்கள் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன்  பின்னால் அணிதிரண்டனர். ஆங்கிலேயப் படைகளை உள்ளேவரவிட்டு  கண்டியப் படைகள் மறைந்திருந்து  கொரில்லாத் தாக்குதலை நடத்தி ஆங்கிலேயப் படைகளை  முற்றாக துவம்சம் செய்தன. பிரித்தானிய படைப்பிரிவொன்றுக்கு   தலைமை தங்கிய மேஜர் டேவி ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டார். அந்த மரம் இன்றும் நினைவு கூறப்படுகிறது.

அவர்களில் ஒரே ஒருவரைத் தவிர எவரும் உயிரோடு திரும்பவில்லை. அவ்வாறு உயிர்பிழைத்த கோப்ரல் ஜார்ஜ் பார்ன்ஸ்லி (George Barnsley) தான்  உயிர் பிழைத்த கதையை ஆள்பதிக்கு கூறினார்.  வளைத்து பிடிக்கப்பட்ட பிரித்தானியப் படைவீரர்கள்  ஜோடி  ஜோடிகளாகக் கட்டப்பட்டு   அவர்களது மண்டை அடித்துடைக்கப்பட்டு அவர்களின்   மூளை வெளியே எடுக்கப்பட்டது  என்பதை விபரித்தார். பார்ன்ஸ்லி உயிருடன் இருப்பதை கண்டியர்கள் கண்டறிந்தபோது, அவர் இரண்டு முறை தூக்கிலிடப்பட்டார். ஆனால் இரண்டு முறையும் கயிறு பிரிந்தது. அவர் இறந்தவரைப்போல நடித்து  இறுதியில் இருட்டில் ஊர்ந்து சென்றார். ஒரு கிராமவாசியால் பராமரிக்கப்பட்டு தப்பி வந்தார்.

இத்தோல்வியை அடுத்து  ஆள்பதி  ஃபிரடெரிக் நோர்த் பதவி நீக்கம்  செய்யப்பட்டார். ஆனால் பிரித்தானிய பாராளுமன்றில் ‘கிறிஸ்தவர்களுக்கும் ஹீத்தனுக்கும் (Heathen) இடையில் நடைபெற்ற இந்த குரூரமான யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட   கிறிஸ்தவர்களுக்கு எதிரான படுகொலைக்கு எதிராக ஏன் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?’ என கேள்வி எழுப்பப்பட்டது.

1815 கண்டி இராச்சியத்தின் வீழ்ச்சி

The reception hall in the palace of the King of Kandy 1785 JAN BRANDES

உலகம் அதுவரை கண்டிராத முன்னேறிய மூர்க்கமான போர்களை ஐரோப்பா 18 மே 1803 முதல்  20 நவம்பர் 1815 வரை நெப்போலியன் காலத்தில் கண்டது.   பிரித்தானியாவும் ஏனைய  ஐரோப்பிய நாடுகளும் பிரான்சுடன் வாழ்வா? சாவா? யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது கண்டி மீது மற்றொரு போரை நடத்துவதில் பிரித்தானியாவினால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் அது கவனமாகவும் அதற்கான தந்திரமாகவும் திட்டத்தை வகுத்தது.  1803 ஆம் ஆண்டு படையெடுப்புக்கு பழிவாங்குவதற்கு அப்பால் அதற்கு  வேறு சில காரணங்களும் இருந்தன.

நிர்வாகத்தை ஒழுங்கமைக்கத் தொடங்கியபோது கண்டியின் தொடர்ச்சியான சுதந்திரம் சிக்கல்களை ஏற்படுத்துவதாக  ஆங்கிலேயர் கருதினர்.  கண்டி இராச்சியத்தின் நீண்ட எல்லையைப் பாதுகாக்க பெருமளவு செலவானது. கண்டியிலிருந்து இறக்குமதி செய்யப்படும்   கறுவா மற்றும் பாக்கு ஏனைய வாசனைத் திரவியங்களுக்கு கணிசமான சுங்க வரி செலுத்த வேண்டியிருந்தது. தீவின் மையப்பகுதி வழியாக சாலைகள் அமைக்கப்படுமானால் நாட்டின் மேற்கு பகுதியை கிழக்குடன் நிலத் தொடர்பை  விரைவுபடுத்தக்கூடியதாக  இருக்கும். அத்துடன் அரசியல் ஒருங்கிணைப்பின் நன்மைகள் ஆங்கிலேயர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன.

Sir John D'Oyly, 1st Baronet, of Kandy

எனவே கண்டி விவகாரங்களில் படிப்படியாக நிபுணத்துவம்  பெற்ற சிவில் உத்தியோகத்தரான ஜோன் டி’ஓய்லியின் (D’Oyly )தலைமையில் கண்டியை வேறுவிதமாக கைப்பற்றுவதற்கு நன்கு திட்டமிடப்பட்டது. அவர் திறமையான முறையில் தனது  புலனாய்வு வலையமைப்பைக் கட்டியெழுப்பினர். 1803 இல் பிலிமத்தலாவ  தனக்கெதிராக பிரித்தானியரோடு சதியில் ஈடுபட்ட பிறகும் அவனுக்கு மன்னிப்பளித்து அதே பதவியில் நீடிக்க ஸ்ரீ விக்ரமராஜசிங்கன் அனுமதித்தான். அதற்கு மற்றொரு காரணம் பிலிமத்தலாவ  மீது நடவடிக்கை எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆயினும்  பிலிமத்தலாவ மன்னனுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளை தூண்டவும் மன்னனை கொல்வதற்கு சதி திட்டங்கள் தீட்டவும் முயன்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு அவனுக்கு 1810 ல் மரண தண்டனை வழங்கப்பட்டது. அவன் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டான். இது ஒரு சாதாரண விடயம் அல்ல. மன்னனுக்கு அடுத்த இடத்தில்  இருந்த இவனுக்கே இந்தக் கதியா என ஏனைய பிரதானிகள் வெலவெலத்துப் போயினர்.  மறுபுறத்தில் பிலிமத்தலாவ போன்ற மகா அதிகாரம் பதவியில் இருக்கும் ஒருவருக்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் மரணதண்டனை விதித்தால் மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்க முடியாது. ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

பிலிமத்தலாவயை  தேசபக்திமிக்க சிங்களத் தலைவன் என சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்களை  பின்வருமாறு சுருக்கலாம்: சிங்களம் தெரியாத நாயக்க மன்னர்கள் தமிழ் மொழியில் அரசவை காரியங்களை நடத்திக்கொண்டு, தென் இந்தியாவிலிருந்து இளவரசிகளை வரவழைத்து திருமணம் செய்துகொண்டு தமது நாயக்க வம்ச ஆட்சியை தொடர்வதும்,  பெரும்  தொகையான தமது உறவினர்களை அரண்மனையிலும் அரண்மையை சுற்றியுள்ள மாடமாளிகைகளிலும் குடியேற்றி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதும் கண்டிய சிங்களப் பிரதானிகளுக்கு அதிருப்தியை  தந்தது. பாரம்பரியமாக கண்டி சமுதாயத்தில் தமக்கிருந்த மரியாதையும் அதிகாரமும் குறைக்கப்பட்டுவருவதாகவும், சிங்கள மொழி  முக்கியத்துவம் இழந்து வருவதாகவும், கண்டி குளம், தலதாமளிகை போன்றவற்றை கட்டுவதற்கு  தென் இந்திய  தொழில்வல்லுநர்கள் பயன்படுத்தப்படுவதால் கண்டியின் பாரம்பரிய தொழில்நுட்பம் பின்தள்ளப்பட்டுவருவதாகவும் கண்டியத் தலைவர்கள் உணர்ந்தனர்.  ஆகவே சிங்கள தேசபக்தனான  பிலிமத்தலாவ நாயக்க வம்ச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்கள வம்ச ஆட்சியை நிலைநிறுத்தவிரும்பினான். அதே சமயம் ஆங்கிலேயரின் பிடியில் கண்டி விழாமலும் கவனமாகச் செயல்பட்டான். இவையே அவர்களின் வாதமாகும்.

இந்த வாதத்தில் உள்ள அடிப்படைக் குறைபாடு  யாதெனில் அக்காலகட்டத்தை அவர்கள்  சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதாகும். அரண்மனைச் சதிகள் என்பன நிலப்பிரபுத்துவ காலத்துக்கே உரிய இலட்சணமாகும். அதிகார மையத்தில் இரண்டாம்  நிலையில் நீண்ட காலம் இருந்த ஒருவருக்கு முதலாம் இடத்துக்கு வருவதற்கான அரிய  சந்தர்ப்பம் ஒன்று  வாய்க்கும் போது அதனை பெரும்பாலும்  நழுவவிடுவதில்லை. அவர்கள் அரியணை ஏறுவதற்கு மதத்தை, இனத்தை, மொழியை, வம்சத்தை அல்லது சாதியை தமக்கான ஆயுதமாக பயன்படுத்தத் தவறியதில்லை. இத்தகைய அரண்மனை சதிகள் காலாகாலமாக உலகம் பூராவும் நடந்தேறியுள்ளன. நிலைமை சற்று வேறுபட்டாலும், ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் கொலை செய்ததும் இவ்வாறுதான் விளக்கப்படுகிறது.  நாயக்க மன்னர் காலத்தில் மேலே கூறப்பட்ட அத்தனை குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் பெளத்தர்களாகவும் பெளத்தமதத்தை பேணி காப்போராகவும் இருந்தனர் – பெளத்தத்தில் இந்துமத பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட. கண்டி மக்கள் மத்தியில் அவர்களுக்கு மிகுந்த நன்மதிப்பு இருந்தது. அவர்கள் கட்டிகாத்த சாதி முறையால் கண்டி பிரதானிகளும் பயன் பெற்றனர். எனவே மக்கள் கிளர்ச்சிகளை தூண்டி இம்மன்னர்களை வெளியேற்றிவிட்டு ஆட்சியை தம்வசமாக்கிக்கொள்ள இவர்களால் முடியவில்லை. எனவேதான்  புத்திசாலியான பிலிமத்தலாவ வேறுவிதமாக தனது திட்டத்தை வகுத்தான்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இவனே ஸ்ரீ விக்ரமசிங்கவை அரியணை ஏற்றினான். கண்டியை ஆண்ட நாயக்கவம்ச மன்னன் ராஜாதி ராஜசிங்கனின் மரணத்திற்குப் பிறகு வாரிசுரிமை போட்டி ஏற்பட்டது. அரசிகளில் ஒருவரின் சகோதரரின் மகனை அரசவை பிரதானிகளில் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் அரியணையில் அமர்த்த இறந்த மன்னனின் உறவினர்கள்  முயற்சித்தபோது,  மன்னனுக்கு அடுத்த நிலையில் அதிகாரம் படைத்த  மகாஅதிகாரம் (பிரதமர்) பிலிமத்தலாவ, மற்றொரு அரசியின்  சகோதரியின் மகனான, பதினெட்டு வயது மாத்திரமே நிரம்பிய, அப்போது வசீகர குணம் கொண்ட,  கண்ணுசாமி நாயுடு என்ற இளைஞனை ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் என்ற பெயரில் பட்டம் சூட்டினான்.

எஹலபொல

அப்போது அவனது நோக்கம் தனது இரத்த உறவுள்ள ஒரு அழகிய இளம்பெண்ணை மன்னனுக்கு திருமணம் செய்துவைத்து  அதன் மூலம் வாரிசுரிமையை தனது குடும்பத்திற்கு சொந்தமாக்கிக் கொள்வதாகவே இருந்தது. ஆனால் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் தென்னிந்தியாவிலிருந்து இளவரசிகள் இருவரை வரவழைத்து திருமணம் செய்து கொண்டதும் பிலிமத்தலாவயின் திட்டம் தவிடு பொடியானது. எனவே நாயக்க வம்சத்தை வெளியேற்றிவிட்டு தனது வம்சத்தில் ஒருவரை அரியணையில் அமரவைப்பதற்கு ஆங்கிலேயரின் துணையை நாடினான்.  ஆங்கிலேயரின் நோக்கம் வேறாக இருப்பதை புரிந்துகொண்டதும் கண்டி அரியணை ஆங்கிலேயர் வசமாகாமல் தடுத்தான். பின்னர் மன்னனைக் கொலை செய்வதற்கு  கூலிப்படையினரை வாடகைக்கு அமர்த்தினான். எப்படியும் கண்டி இராச்சியத்தை தனது வம்சத்தின் கீழ் கொண்டுவரும் அவனது முயற்சியை  வாரிசுரிமை வம்ச போட்டியாகவே கருத முடியும். அதற்கு  தேசபக்தி மூலாம் பூசுவது இனவாத சித்தாந்தத்தை நியாயப்படுத்துவோருக்கே சாதகமாக அமையும்.

பிலிமத்தலாவ விசாரணைக்கு பின்னர் கண்டியரசன் அனைத்து அதிகாரிகளையும் சந்தேகத்தோடு பார்க்கத்தொடங்கினான். அவன் தனக்கெதிராக சதியில் ஈடுபட்டவர் என சந்தேகித்தவர்களை குரூரமான முறையில் தண்டித்தான். ஏற்கனவே பாரம்பரியமாக கண்டி சமுதாயத்தில் தமக்கிருந்த மரியாதை குறைக்கப்படுவதாக அதிருப்தி கொண்டிருந்த கண்டியப் பிரதானிகள் கண்டியின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன்  காலத்தில் மிகவும்  மனசஞ்சலத்துள்ளாகினர். ஒருபுறம் மன்னன் இவர்களுக்கு அஞ்சினான், மறுபுறத்தில் பிரதானிகள் தமக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என நடுங்கினர். இத்தகைய ஒரு நிலைமையை உருவாக்கி மக்கள் மத்தியிலும் மன்னனைப்பற்றி வெறுப்பேற்படுத்தும் பொய்யான செய்திகளை தமது ஒற்றர்கள் மூலம் பரப்பி சரியான தருணத்திற்காக பிரித்தானியர் காத்திருந்தனர்.

ஆள்பதி ரொபர்ட் பிரவுன்ரிக்

பிலிமத்தலாவவுக்கு பின்னர் அவனது  மருமகன் எஹலபொல முதன்மை பிரதானி  பதவிக்கு நியமிக்கப்பட்டான். அவனும்  அரசனுக்கு  எதிராக தனது மாமனாரின்  வழியைப் பின்பற்றத் தொடங்கி பிரித்தானிய ஆட்சியாளரோடு இரகசியமாக உறவுபூண்டதை அறிந்த மன்னன் கடும் கோபமடைந்தான். எஹலபொல தப்பியோடி பிரித்தானிய ஆட்சியாளரிடம் சரணடைந்தான். ஆத்திரமுற்ற மன்னன் அவனது மனைவியையும் பிள்ளைகளையும் தண்டித்தமை தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட பீதியூட்டும் செய்திகள் பரப்பட்டன.  அவை மக்களை அதிர்ச்சியடையச்    செய்தன. இதனால்   ஆங்கிலேயர்கள் எதிர்பார்த்த அந்த தருணம் உருவாக்கப்பட்டுவிட்டது.

‘மலபார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து கண்டி சிங்கள மக்களை மீட்பதற்காக அவர்களின் வேண்டுகோளை ஏற்று பிரித்தானிய மன்னரின் ஆணையின்படி படையெடுக்கிறோம்’ என பிரகடனப்படுத்திக்கொண்டு கண்டிக்குள்  பிரவேசித்த பிரித்தானிய படைக்கு எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை, மகத்தான வரவேற்பே காத்திருந்தது. இவ்வாறு 1803 இல் பெரும் படையெடுப்பால் ஆள்பதி ஃபிரடெரிக் நோர்த் சாதிக்காததை ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் ஒரு தோட்டாவைக்கூட செலவழிக்காமல்  ஆள்பதி ரொபர்ட் பிரவுன்றிக்  1815ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி பிரித்தாளும் சதியால் – இனவாதத்தின் துணையோடு  – சாதித்தார். கண்டி மாளிகையிலிருந்து தப்பியோடிய மன்னன் பின்னர் கைது செய்யப்பட்டு வேலூருக்கு நாடுகடத்தப்பட்டான்.

 1815 கண்டி ஒப்பந்தம்
A drawing depicting the Kandyan Convention being drawn up at the Audience Hall or Magula Maduwa

அதனைத்தொடர்ந்து   மார்ச் 2, 1815 திகதி கண்டியப் பிரதானிகள்  கையெழுத்திட்டு பிரித்தானியரோடு  செய்துகொண்ட கண்டி ஒப்பந்தத்தை  (Kandyan Convention) அடுத்து கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமானது. இவ்  ஒப்பந்தம் ஒரு கண்துடைப்பாக அமைந்து கண்டிய பிரதானிகள் பிரித்தானியரால் ஏமாற்றப்பட்ட வரலாறு நன்கு அறிந்ததே. எனவே அது பற்றி இங்கு விபரிக்கப்படவில்லை.

1818 ஊவா வெல்லஸ்ச (Wellassa) கிளர்ச்சி

கண்டியப் பிரதானிகளோடு ஆங்கிலேயர் ஒப்பந்தம் செய்து கொள்ளும்போது கண்டி இராச்சியத்தில்  கண்டியப் பிரதானிகளின் அதிகாரம் குறைக்கப்படாது என்றும் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது எனவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கண்டியைக் கைப்பற்றிய பின்னர் ஆங்கில அதிகாரிகளே நிர்வாகத்தை நடத்தினர். கண்டியப் பிரதானிகளுக்கு அதில் குறிப்பிடத்தக்க எந்தப் பாத்திரமும் இருக்கவில்லை. சாதாரண அரச உத்தியோகஸ்தரும் கூட இவர்களை பெரிதாக மதிக்கவில்லை. விடயம் கைமீறிப்போவதையிட்டு கண்டியப் பிரதானிகள் ஆத்திரமுற்றனர்.  இவர்களது ஆத்திரத்துக்கு தூபமிடுவது போல பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. மறுபுறத்தில் கரையோர மக்களினதும் கண்டிய இராச்சியத்தின் மக்களினதும் மனோபாவத்தில் இருந்த வித்தியாசத்தை ஆங்கிலேயர் புரிந்துகொள்ளவில்லை. அதுவரை 300 வருடங்களுக்கு மேல் – முதலில் போர்த்துகேயரின் ஆட்சியின் கீழும் பின்னர் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழும் இப்போது ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழும்-  அந்நியர் ஆட்சிக்கு பழக்கப்போயிருத்த கரையோர மக்கள் ஆரம்ப முதலாளித்துவ முறைக்கும் அதன் நிர்வாகத்திற்கும் பரிச்சயமாகி இருந்தனர். ஆனால்  மன்னர் ஆட்சியின் கீழ் நிலவுடமை சமுதாயத்தில் வாழ்ந்து பழகிய கண்டிய மக்களால் இந்த திடீர் மாற்றத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் கொடுங்கோல் மன்னனுக்கு பதிலாக நல்லாட்சி செய்யும் மன்னன் ஒருவனின் ஆட்சியையே விரும்பினர். அத்தோடு பரந்த  கண்டி இராச்சியம் முழுவதிலும் தமது நிர்வாகத்தை ஒரேவிதமாக நடத்தும் பொறிமுறை ஒன்று அப்போது ஆங்கிலேயரிடம் இருக்கவில்லை. இத்தகைய நிர்வாகமுறை 1833லேயே கோல்புரூக் ஆணைக்குழுவால்  அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே தலைநகர் கண்டியை சுற்றியுள்ள பகுதிகளையும் கரையோர நகரங்களுக்கருகில் இருந்த முன்னைய கண்டி இராச்சியத்தின் பகுதிகளையும் மாத்திரமே ஆங்கிலேயர்களால் நேரடியாகக் கண்காணித்து நிர்வகிக்க முடிந்தது.

ஊவா கிளர்ச்சியை விபரிக்கும் படம்

கண்டி நகருக்கும் கொழும்புக்கும் வெகு தொலைவில் ஒதுக்குபுறமாக கைவிடப்பட்ட நிலையில் இருந்த வெல்லஸ்ஸ பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியும் மன்னராட்சியை மீண்டும் உருவாக்கும் அவாவும் குவிமையம் கொண்டது.  நன்கு தமிழில் பேசத்தெரிந்த வில்பாவே முதியான்சே என்ற மாஜி  பெளத்த பிக்கு  தன்னை நாடுகடத்தப்பட்ட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின்  உறவினன்  என்றும் தான் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவன்  என்றும்  தனது பெயர் துரைசாமி என்றும் கூறிக்கொண்டு போலி ராஜாவாக மாறினான். அதனை நம்பிய மக்கள் தமக்கொரு மன்னன் கிடைத்துவிட்டான் என குதூகலித்தனர், அவன் பின்னால் ஆங்கிலேயரை விரட்டியடிக்க அணிதிரண்டனர்.  1817 செப்டம்பர் மாதம் கிளர்ச்சி வெடித்தது. போக்குவரத்து வசதி குறைவாக இருந்த அந்த காலத்தில் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரித்தானியர் தடுமாறினார். கிராமங்களுக்கு தீவைத்து கொளுத்தினர். கண்ட இடத்தில் கிளச்சியாளர்களையும் அதன் ஆதரவாளர்களையும் சுட்டுக் கொன்றனர். இதனால் மக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. அப்போது ஊவா பகுதிக்கு பொறுப்பான  கண்டியப் பிரதானியாக இருந்தவர்  கெப்பெட்டிபொல திசாவ, கிளர்ச்சியை அடக்குவதற்கு  பிரிட்டிஷ் அரசாங்கம் துப்பாக்கி படை சகிதம்  அவரை அங்கு அனுப்பியது. அங்கு மக்கள் எழுச்சியால்  மனம்மாறிய கெப்பெட்டிபொல திசாவ அப்பாவித்தனமாக தனக்கு தரப்பட்ட  படையை, துப்பாக்கி சகிதம் திருப்பி அனுப்பிவிட்டு ‘துரைசாமியுடன்’ சேர்ந்து   கிளர்ச்சியில் இணைந்து அதற்கு தலைமை கொடுத்தார். இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது கெப்பெட்டிபொல திசாவ கிளர்ச்சியில் இணைந்ததை அறிந்த பல பகுதிகளையும் சேர்ந்த பிரதானிகள் கிளர்ச்சியில் தாமும் இணைந்தனர்.

கிளர்ச்சியாளர்கள் மாத்தளையைக் கைப்பற்றி  கண்டிவரை முன்னேறினர். அப்போது கெப்பிட்டிபொல நோய்வாய்ப்பட்ட  நிலையில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். அவரது தலை  துண்டிக்கப்பட்டது. அத்தருணத்தில் கிளர்ச்சி தோல்வியடைந்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் பிரதானமானவை: கிளர்ச்சி திடீர் என வெடித்ததாலும் ஆங்காங்கு பரவியதாலும் அதனை திட்டமிடவோ மத்தியத்துவப்படுத்தவோ முடியாமல் போய்விட்டது. ஆங்கிலேயருக்கு சார்பான பல கண்டியப் பிரதானிகள் ஆங்கிலேயரோடு ஒத்துழைத்து  காட்டிக் கொடுத்தனர். அத்துடன் துரைசாமி ஒரு வேடதாரி என்பது அம்பலமானபோது கிளர்ச்சியாளர்கள் மனமுடைந்தனர். அதன் பின்னர் பிரித்தானியர் கண்டியப் பிரதானிகளை நம்பவில்லை. அநேகமாக அனைத்து  கண்டியப் பிரதானிகளும் கொல்லப்பட்டனர். இதுவே ஆங்கிலேயருக்கு எதிராக இலங்கையில் வெடித்த  கடைசிக் கிளர்ச்சியாகும். அதன் பின்னர் 1848 இல் மாத்தளை கிளர்ச்சி வெடித்தாலும் அது இத்தனை பாரியதாக இருக்கவில்லை. அதன் தன்மையும் வேறுபட்டது.

இப்பின்னணியில் பார்க்கையில், கண்டி இராச்சியம் 1818 இல் தான் உண்மையில் ஆங்கிலேயர் வசமானது.

உசாத்துணை நூல்கள்:

  • Abeyasinghe, T. B. H., Dewaraja, L. S. and Somaratne, G. P. V., udarata raiadhaniya 1470-1818 (Colombo, 17777
  • Bendix, Reinhard, Max Weber: An Intellectual Portrait (London, 1977)
  • Ceylon, Brief History, n.d. https://www.britishempire.co.uk/maproom/ceylon.htm
  • D’Oyly, Sir John, A Sketch of the Constitution of the Kandyan Kingdom (Colombo, 1929;
  • Keppetipola and the Uva The Great Liberation War Virtual Library Sri Lanka.
  • Marx, Karl, ‘Paliamentary Debate on India’ in Avineri, Shlomo, (ed.), Karl Marx on Colonialism and Modernization (New York, 1968).
  • Marx, Karl, ‘The British Rule in India’ in Avineri, Shlomo, (ed.), Karl Marx on Colonialism and Modernization (New York, 1968), pp.83-9.
  • Marx, Karl, The Future Results of British Rule in India’ in Avineri, Shlomo, (ed.), Karl Marx on Colonialism and Modernization (New York, 1968), pp.125-131.
  • Mendis, V.L.B., The Advent of the British to Ceylon 1762-1803 (published as The Ceylon Historical Journal,XVIII , Dehiwala”! 1971.
  • Peebles, Patrick The History of Sri Lanka. Greenwood (2006). . ISBN 9780313332050.
  • Pieris, P.E., (ed.),Letters to Ceylon 1814-1824 (Cambridge, 1938).
  • Powell, Geoffrey, ‘The Fall of Kandy 1815; The
  • Willerman Letters’ The Ceylon Journal of Historical and Social Studies, New Series, I, 1971,
  • Reimers, E., ‘Feudalism in Ceylon’ Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society,XXXI ! 1928, pp.17-54.
  • Silva, K. M. de.  A History of Sri Lanka, University of California Press  1981. ISBN 0-520-04320-0.
  • Tennakoon, Dr. Dharmadasa. “The brave attempt to regain the Kandyan Kingdom”. Daily News. Retrieved 15 October 2021
  • The Uva Rebellion 1817-1818: with full Details of Military Operations throughout the Kandyan Country (Colombo, 1889).
  • Wittfogel, Karl A., Oriental Despotism: A Comparative Study of Total Power (New Haven and London,1973)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

36023 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)