Arts
10 நிமிட வாசிப்பு

பசுமை என்ற எண்ணக்கரு: நல்லுணர்வா? கொடுங்கனவா?

January 23, 2024 | Ezhuna

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

தொடக்கக் குறிப்புகள்

காலநிலை மாற்றம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நாம் வாழும் சூழல் குறித்து நாம் கவனங்கொள்ள வைத்துள்ளது. நகரமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், தூய்மையான வாழிடம் குறித்து எல்லோரும் அக்கறை செலுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது. இப்பின்புலத்தில் பசுமை என்ற எண்ணக்கரு தவிர்க்கவியலாத ஒன்றாக முன்னிலையடைந்துள்ளது. பசுமைக்கு மாறுதல் (Going Green) என்பது இன்று அநேகமான அனைவரதும் தாரக மந்திரமாகவுள்ளது. வேலைத்தலங்களில், பாடசாலைகளில், விற்பனை நிலையங்களில், அரச நிறுவனங்களில், பொருட்களின் விளம்பரங்களில் என அன்றாட வாழ்வின் அம்சமாக பசுமைக்கு மாறுதல் என்பது இருக்கிறது. பசுமைசார் செயற்பாடுகளை மேற்கொள்வோர் ‘பூவுலகைக் காக்கவந்த இரட்சகர்கள்’ போலக் கருதப்படுவது பசுமை குறித்த நல்லுணர்வை எல்லோரிடமும் ஏற்படுத்துகிறது. பசுமைசார் செயல்களைச் செய்வோர், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பங்களிப்போராகவும் சுற்றுச்சூழல் காவலர்களாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

பசுமைச் செயல்கள் குறித்த நல்லுணர்வானது, இன்னும் சரியாகச் சொல்வதானால் பசுமைக்கு முரணானதாகச் சொல்லப்படும் விடயங்களைச் செய்வது தவறானது என்ற குற்றவுணர்வையும் சேர்த்தே ஏற்படுத்துகிறது. இது இரண்டு வகையான விளைவுகளுக்கு வழிகோலியுள்ளது. முதலாவது பசுமைத் தீர்வுகள் நல்லதொரு இலாபம் தரும் வர்த்தக நடவடிக்கையாகப் பல்கிப் பெருகியுள்ளன. பசுமைப் பொருட்கள் (green products) இயற்கையானது (natural) சூழலுக்குத் தீங்கில்லாது (environmental friendly) போன்ற தலைப்புகளோடு சந்தைக்கு வரும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று இந்தப் பசுமைப் பொருட்களும் சேவைகளும் கவனமீர்ப்பதாக உள்ளன. இது ஒரு புதிய சந்தையை உருவாக்கியுள்ளது. காலநிலை நெருக்கடி புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால் உண்மையில் இவை பசுமைத் தீர்வுகளா அல்லது பசுமை என்ற பெயரில் நடக்கும் வியாபாரத் தந்திரங்களா? இவ்வினா முக்கியமானது.

பசுமை குறித்த நல்லுணர்வு ஏற்படுத்தும் இரண்டாவது விளைவு, உரியோர் பொறுப்பைக் கைகழுவுதலாகும். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்குப் பங்களித்தல், பசுமைத் தீர்வுசார் கொள்கைகள், அதன் நடைமுறைப்படுத்தல் போன்றவற்றைச் செயற்படுத்த வேண்டிய அரசாங்கங்களும் பங்களிக்க வேண்டிய தனியார் துறையும் தங்கள் பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கி அதைப் பொதுமக்களின் பொறுப்பாக்க முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் காலநிலையைக் கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பை மக்களிடம் சுமத்துகிறார்கள். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தனிமனிதர்களின் பொறுப்பாகிறது. இது ஒரு ஏமாற்றும் யுத்தி. 

ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். இலங்கையின் பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் “துவாயை மீண்டும் பயன்படுத்துங்கள்: சூழல் காப்புக்கு பங்களியுங்கள்” போன்ற வாசகங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதைக் காணலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் துவாயை பல தடவைகள் பயன்படுத்தும்படி கோரப்படுகிறார்கள். இது துவாய் கழுவிச் சுத்தமாக்கப்படும் தடவைகளைக் குறைப்பதன் மூலம் நீர்ச் சேமிப்புக்கும், மின்சாரச் சேமிப்புக்கும் பங்களிக்கிறது. இது பேண்தகைமை (sustainable) மிக்கது. துவாயைப் பல தடவைகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர், தான் பசுமைபேண பங்களிப்பதாக உணர்கிறார். அதேவேளை துவாய் அசுத்தமாக இருந்தாலும் மீளப் பயன்படுத்தாவிட்டால் பசுமைக்கு பங்கம் விளைவிக்கிறோமோ என்ற குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். ஹோட்டலின் வாசகம் அத்தகையை மனநிலையை ஏற்படுத்தும் வகையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் துவாயைப் பலதடவைகள் மீளப் பயன்படுத்தும் போது அது ஹோட்டலுக்கு பொருளாதார இலாபத்தை ஏற்படுத்துகிறது. எனவே பசுமையை இலாபம் பார்க்கும் ஒரு வழியாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் பொதுப்புத்தியில் இவ்வாறு செய்வது நல்லது தானே என்று சிந்திக்க வைக்கப்பட்டுள்ளது. 

சிக்கல் யாதெனில், இவ்வாறு பேண்தகைமைச் செயற்பாடுகளை வாடிக்கையாளர்களிடம் வலியுறுத்தும் ஹோட்டல்கள் தங்களுடைய செயல்களில் பேண்தகைமையைப் பேணுவதில்லை. உதாரணமாக, தங்களுக்கான மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் இருந்து பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்ற போதும் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஏனெனில் அதற்கு மேலதிக முதலீடு தேவை. அதேபோல பொலித்தீனுக்கு மாற்றான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்ற போதும் பொலித்தீன் பொருட்களே பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஏனெனில் அது இலாபகரமானது. இங்கு கேள்விக்குட்படுத்துவது இந்த ஹோட்டல்களின் நோக்கங்களையே. 

வாடிக்கையாளரிடம் பசுமைக்கும் சூழலுக்கும் பங்களிக்கக் கோருமிடத்து ஹோட்டல்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டாமா? வாடிக்கையாளரின் பங்களிப்பை மொத்தமாக தங்களின் பங்களிப்பு என்று கணக்குக்காட்டுவது எவ்வாறு நியாயமாகும். இந்த இரட்டை நிலைப்பாடு தான் பிரச்சனைக்குரியது. பசுமை என்பது பூவுலகத்தைக் காப்பதற்கான வழிவகையாக இல்லாமல் இலாபத்தைப் பெருக்குவதற்கான புதிய வழிமுறையாக மாறியிருக்கிறது. இதனாலேயே பசுமை என்பது பேரபாயமாக மாறியிருக்கிறது.    

இந்தப் பேரபாயத்திற்கு இலங்கையும் விலக்கல்ல. கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் பசுமைப் பொருட்கள் அதிகரித்துள்ளன. மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. அதேவேளை காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளையும் நாம் தினமும் அனுபவிக்கிறோம். எமது சுற்றுச்சூழல் குறித்து அதிகம் அக்கறையற்ற ஒரு சமூகமாகவே நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. இப்பின்புலத்தில் மக்களின் நலமானதும் வளமானதுமான வாழ்வுக்கு பேண்தகைமையை எவ்வாறு கையாள்வது? பேண்தகு அபிவிருத்தியைச் சாத்தியமாக்குவது எவ்வாறு? எமது சூழலியல் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள் எவை? நுகர்வை முன்தள்ளும் இலாபநோக்க சந்தைப் பொருளாதாரச் சூழலில் மக்கள் நோக்கிலான பசுமைத் தீர்வுகள் சாத்தியமா?  

இவை இயல்பாக எம்முன் எழும் கேள்விகள். இவற்றின் அடிப்படையில் தத்துவார்த்தம் சார்ந்தும் நடைமுறை சார்ந்தும் எழும் மூன்று கேள்விகள் முக்கியமானவை:

  • பேண்தகு அபிவிருத்தி  சாத்தியமானதா?
  • பொருளாதார வளர்ச்சி என்பது எல்லையற்றதா? 
  • எல்லையற்ற வளர்ச்சியிலும் நுகர்விலும் பேண்தகைமை எவ்வாறு சாத்தியமாகும்?

இவ்வினாக்களை இக்கட்டுரைத் தொடர் விரிவாக இலங்கை அனுபவங்களின் வழி ஆராய விழைகிறது. 

பசுமை பற்றிய கட்டுகதைகள்

எம்மத்தியில் பசுமை தொடர்பான கட்டுக்கதைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக சந்தையில் உள்ள பொருட்களில் எமக்கு வழங்கப்படும் சேவைகளில் இவை பல்கிப் பெருகியுள்ளன. அதில் மூன்றை பற்றி மட்டும் இங்கு நோக்கலாம். இது பசுமை என்பது இருபக்கமும் கூரான கத்திபோன்றது என்ற யதார்த்தத்தை விளங்கப்படுத்த உதவும். 

முதலாவது, இன்று பல பொருட்களில் ‘இயற்கையானது’ என்ற லேபலைக் காண்கிறோம். அது எமக்கு ஏற்படுத்துகின்ற தோற்றம், குறித்த பொருள் இயற்கையான பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்பதே. ஆனால் உண்மையில் அவ்வாறு அமையவேண்டிய தேவை இல்லை. ஏனெனில் இலங்கைச் சட்டத்தின் கீழ் ‘இயற்கை’ என்ற சொல் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இயற்கை அல்லது இயற்கை என்று பெயர் உள்ள எதிலும் செயற்கைப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் உட்பட இயற்கை அல்லாத பொருட்கள் இருக்கலாம். இன்று இயற்கையான சுவை கூட செயற்கையான சுவையூட்டிகளின் வழியே தயாரிக்கப்படுகிறது. இயற்கையானது என்று குறிப்பிடப்பட்ட பல பொருட்களின் லேபலில் பல செயற்கைப் பொருட்கள் இடம்பெற்றிருப்பதை அவதானிக்கலாம். 

fertilizer

இரண்டாவது கட்டுக்கதை, கரிமப் (organic) பொருட்கள் சிறந்தவை என்பது. இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் கரிமப் பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டவை அல்லது அவ்வாறான உற்பத்தியை உள்ளடக்கியவை தரமானவை. கரிம உணவுகளை வாங்குவோரிடையே நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அவர்கள் அதைக் கொள்வனவு செய்வதற்கு மூன்று காரணங்களைச் சொன்னார்கள்:

  1. கரிம உணவுகளில் இராசயனப் பொருட்கள் இல்லை, எனவே பாதுகாப்பானது. 
  2. கரிம உணவுகள் சாதாரண உணவுகளை விட ஊட்டச்சத்து நிறைந்தவை.
  3. கரிம உணவுகள் சாதாரண உணவுகளை விடச் சுவையானவை. 

இந்த மூன்றும் உண்மையல்ல. அவை கட்டுக்கதைகள் என்பதே வருந்தத்தக்க உண்மை. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படாமை நல்லதே. ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. ஒப்பீட்டளவில் கரிம உணவுகளில் கரிமமல்லாத உணவுகளை விட குறைவான பூச்சிக்கொல்லிகளே பயன்படுத்தப்படுகின்றன. அதன் பொருள், கரிம உணவுகளில் பூச்சிக்கொல்லிகளே இல்லை என்பதல்ல. ஆனால் 20 இற்கும் மேற்பட்ட இரசாயனங்களை விவசாயிகள் கரிமப் பயிர்களில் பயன்படுத்துகின்றனர். அவை அப்பயிர்களை பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்க உதவுகிறது. முக்கியமாக, விவசாயிகள் பயிர்களுக்குச் சிகிச்சையளிக்க இயற்கைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்தப் பூச்சிக்கொல்லிகள் செயற்கை பூச்சிக்கொல்லிகளை விட சுற்றுச்சூழலுக்கு (அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு) மிகவும் பாதுகாப்பானது என்று பொருளல்ல. பாரிய கரிம உணவு உற்பத்தித் தளங்களில் செயற்கைப் பூச்சிக்கொல்லிகளும் இரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் கரிம உற்பத்திச் சான்றிதழைப் பெற்றுவிட்ட பிறகு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் சேதத்தைக் குறைக்கவும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். 

கரிமப் பொருட்கள் சிறந்தவை என்பதற்குச் சொல்லப்படும் இன்னொரு கட்டுக்கதை அவை ஊட்டச்சத்து மிக்கவை என்பது. ஆனால் கரிம உணவுகள் சாதாரண உணவுப் பொருட்களைவிட மேலதிக சக்தியோ, ஊட்டச்சத்தோ கொண்டவையல்ல. ஆனால் இயற்கை விவசாயம் அதிக சத்தான உணவை உற்பத்தி செய்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், கரிம உணவுகள் சாதாரண உணவுகளை விட எந்த வகையிலும் ஆரோக்கியமானவை என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக இது தொடர்பான தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கரிமப்பொருட்கள் ஊட்டச்சத்தானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  

கரிம உணவு சிறந்த சுவையைத் தரக்கூடியது என்று வாதிடுவோரின் பெரும்பான்மையோர் மாட்டு இறைச்சியில் இதைக் குறிப்பாக உணர முடியும் என்கிறார்கள். இதை மையமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகையான இறைச்சியையும் உண்ணக் கொடுத்து வேறுபாட்டைக் கண்டுபிடிக்கும் சோதனையை மேற்கொண்டார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பங்குபற்றியோரால் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சுருக்கமாக, கரிமப் பொருட்கள் நமக்குச் சிறந்தவை அல்ல, அவற்றிற்கும் கரிமமல்லாத உணவுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் சொல்ல முடியாது. இயற்கை வேளாண்மையில் நல்ல பல விஷயங்கள் இருக்கின்றன – பண்ணைகளில் பல்லுயிர் பெருக்கத்திலிருந்து ஒற்றைப் பயிர்களை விட்டு விலகுவது வரை – ஆனால் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளை உற்பத்தி செய்வது அவற்றில் ஒன்றல்ல.

கரிம மாமிச உணவுகளைப் பொறுத்தவரையில் அறம் சார்ந்த கேள்வி மேலோங்குகிறது. கரிம உணவுக்காக வளர்க்கப்படும் கால்நடைகள் நோயுறும் போது நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் (antibiotics) பயன்படுத்த முடியாது. எனவே இவ்வாறான கரிமப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் சாதாரண பண்ணைகளில் வளர்க்கப்படுவவற்றை விட அதிக துன்பத்துக்கு ஆளாகின்றன. ஒரு ஆய்வின்படி சாதாரண பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளை விட கரிமப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் அதிகமாகவே நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளாகின்றன. 

மிகுந்த கவனத்துடன் வளர்க்கப்படும் போது கரிமப் பண்ணைகளில் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது உண்மை. ஆனால் கடந்த ஒரு தசாப்த காலத்தில் கரிம மாமிசத்திற்கான கேள்வி தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. எனவே இப்பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இது இவ்விலங்குகள் நோய்த்தொற்றுக்கு ஆளாவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளன. இதைக் குறைக்க வேண்டுமாயின் சாதாரணப் பண்ணைகளின் அளவை விட அதிக நிலப்பரப்பைக் கொண்ட பண்ணைகள் தேவைப்படுகின்றன. இது நிலம் சார்ந்த இன்னொரு நெருக்கடியைச் சுட்டுகிறது. உலகளாவிய காடழிப்பில் 41% விலங்குணவுப் பண்ணைகளுக்காக செய்யப்படுபவை. இப்பண்ணைகளை உருவாக்குவற்காகவே 80% அமேசன் மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. 

மூன்றாவது கட்டுக்கதை, கழிவகற்றலின் இறுதித் தீர்வு மீள்சுழற்சியே. பொதுவாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிம்பம் யாதெனில் நீங்கள் எவ்வளவு பொருட்களையும் வாங்கலாம், பயன்படுத்தலாம். ஆனால் அவை மீள்சுழற்சிக்கு உள்ளாவதை உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் நீங்கள் பேண்தகு வாழ்வியலுக்கு பங்களிக்கிறீர்கள் என்பதாகும். இது அடிப்படையில் தவறான ஒரு கருத்தாகும். சந்தையில் பொருட்கள் விற்கப்பட வேண்டும், மக்கள் தடையின்றி நுகர்வை மேற்கொள்ளவேண்டும் என்பதே முதலாளித்துவ சந்தை விதி. இந்த விதியை பசுமைக்கு ஏற்றவகையில் பொதிசெய்து வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த கட்டுக்கதை.

இதை விளங்கிக் கொள்ள முதலில் உலகளாவிய கழிவுகள் பற்றிப் பேசியாக வேண்டும். மனிதர்கள் எப்பொழுதும் கழிவுகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள். ஆனால் இப்போதுள்ள அளவில் ஒருபோதும் கழிவுகளை நாம் உற்பத்தி செய்ததில்லை. உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 480 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் போத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு வினாடிக்கும் அண்ணளவாக 20,000 போத்தல்கள். மனிதன் அதிகம் பயன்படுத்திக் கழிக்கும் பொருள் என்ற பெருமை பிளாஸ்டிக் சிகரெட் வடிப்பான்களுக்குரியது. ஆண்டுதோறும் நான்கு டிரில்லியன் பிளாஸ்டிக் சிகரெட் வடிப்பான்கள் சாதாரணமாக தரையில் கழிவுகளாகப் போடப்படுகின்றன. 

இரண்டு பில்லியன் மக்கள் தற்போது திடக்கழிவுச் சேகரிப்புக்கு அணுகல் இல்லாமல் வாழ்கின்றனர். உலகின் மூன்றில் ஒரு பங்கு திடக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. அவை நமது ஆறுகள், கடல்களில் வீசப்படுகின்றன அல்லது கழுவப்படுகின்றன. தொழிற்சாலைகள், மின் நிலையங்களில் இருந்து நச்சுகளோடு வெளியேறும் கழிவுகள் சாக்கடைகளில் இணைகின்றன. 

எவரெஸ்டின் உருகும் பனிப்பாறைகளிலும் நமது ஆழமான கடல் அகழிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கின்றன. எவெரெஸ்டில் 27,700 அடி உயரத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். பிளாஸ்டிக் கழிவுகளிலேயே மிகவும் மோசமானவை மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள்; அவை கண்களுக்குத் தெரியாதவை. அவற்றை அகற்றுவது மிகக் கடினம். உலகின் மிக ஆழமான அகழியான மரியான ஆழியின் அடியிலும் பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, கடல்கீழ் ஆய்வாளர் விக்டர் வெஸ்கோவோ இந்த ஆழியின் ஆழமான புள்ளியை அடைய முயன்றார். அங்கு, மேற்பரப்பிலிருந்து 10,900 மீட்டர் கீழே, மரியானா அகழியின் ஒளியற்ற வெற்றிடத்தில் பிளாஸ்டிக் பையைக் கண்டார். இது பிளாஸ்டிக் நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. 

கடந்த சில தசாப்தங்களாக மறுசுழற்சி செய்வதற்கான இடைவிடாத உந்துதல் இருந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக அதிகரிக்கின்ற பிளாஸ்டிக் கழிவுகளை எவ்வாறு விளங்கிக் கொள்வது. நாம் வீட்டில் கழிவுகளைப் பிரித்தே பராமரிக்கிறோம். கழிவுகற்றல் பிரித்தே நடக்கிறது. ஆனால் ஏன் இன்னும் பிரச்சனை தொடர்கிறது?

மறுசுழற்சி செய்யப்படுவதாக நாம் நினைத்தவற்றில் பெரும்பாலானவை உண்மையில் மறுசுழற்சிக்கு உள்ளாவதில்லை. பல தசாப்தங்களாக, மேற்குலக நாடுகள் நமது குப்பைகளை மூன்றாமுலக நாடுகளுக்கு அனுப்பியுள்ளன; அங்கு உழைப்பு மலிவானது. அங்கு சுற்றுச்சூழல் தரங்கள் பலவீனமாக உள்ளன. பசுமைச் செயற்பாடுகள், மீள்சுழற்சி என்ற பெயரில் சேகரிக்கப்படுபவை இவ்வாறு குப்பைகளாக மூன்றாமுலக நாடுகளில் கொட்டப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு இவ்வாறான குப்பைகள் இலங்கைக்கு வந்தது உங்களுக்கு நினைவிருக்கக்கூடும். இது ‘நச்சுக் காலனித்துவம்’ (toxic colonialism) என்று அழைக்கப்படுகிறது.

Meethodamule

மேற்குலக நாடுகளில், அனைத்து வீட்டுக் கழிவுகளில் பாதிக்கும் குறைவானதே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் பெரும்பாலானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆசியாவின் நதிகளை அடைத்துக்கொண்டிருக்கும் கழிவுகள் அவர்களுடையவை. உலகளாவிய வடக்கில் உள்ளோரது அதிகப்படியான நுகர்வு வாழ்க்கை முறைகளால், கழிவுகளின் அளவு எல்லையற்றதாக மாறிவிட்டது.

துன்பம் யாதெனில், உலகளவில் 20 மில்லியன் மக்கள் கழிவுகளைச் சேகரிப்பவர்களாகவும், பிரித்தெடுப்பவர்களாகவும் வாழ்கின்றனர். அவர்களது வாழ்வாதாரம் இவ்வாறான கழிவுகளிலேயே தங்கியிருக்கிறது. அவர்களுக்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன: எகிப்தில் அவர்கள்  ஜபலீன், மெக்சிகோவில் பெபெனாடோர்ஸ், பிரேசிலில் கேடடோர்ஸ், தென்னாப்பிரிக்காவில் பாகெரேசி, இந்தியாவில் கபடிவாலா (கந்தல் ஆண்கள்). குப்பை மலைகள் வழியாக அவர்கள் ஊர்ந்து செல்கிறார்கள்; நாம் கழிவென எறியும் பொருளின் மதிப்பைக் கண்டறிகிறார்கள். உலக அசமத்துவம் ஒருபுறம் அளவுக்கதிகமாக செல்வத்தின் வழி மிகை நுகர்வையும் எல்லையற்ற கழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் கழிவுகளை நம்பிச் சீவிக்கும் மக்கள் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளது. 

garbage

மறுசுழற்சி செய்வது அவசியமானதும் பயனுள்ளதும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உதாரணமாக, ஒரு அலுமினியத்தை மறுசுழற்சி செய்வதற்கு தோராயமாக 92 சதவீதம் குறைவான ஆற்றல் தேவைப்படுகிறது. கன்னி உலோகத்திலிருந்து ஒன்றை தயாரிப்பதை விட 90 சதவீதம் குறைவான கார்பனை இது வெளியிடுகிறது. சேமிக்கப்படும் ஒவ்வொரு டன் அலுமினியத்திற்கும், எட்டு டன் மதிப்புள்ள பாக்சைட் தாதுவை வெட்டி எடுக்காமல் தவிர்க்க முடிகிறது. ஒரு டன் எஃகு மறுசுழற்சி செய்வதற்கு, அதை புதியதாக உருவாக்குவதற்கு தேவைப்படும் சக்தியின் காற்பங்கே அவசியமாகிறது. இது அதனுடன் தொடர்புடைய காற்று மாசுபாட்டை 86 சதவீதம் குறைக்கிறது. அத்தோடு சுமார் 3.6 பீப்பாய்கள் எண்ணெய்யைச் சேமிக்கிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடியை உற்பத்தி செய்ய 30 சதவீதம் குறைவான சக்தியே தேவைப்படுகிறது. மறுசுழற்சி குறைந்த நீர் மற்றும் காற்று மாசுபாட்டை உருவாக்குகிறது. இது குப்பையின் அளவைக் குறைக்கிறது. அவ்வகையில் அது முக்கியமானது. 

பிரச்சனை யாதெனில் உலோகக் கழிவுகள் போன்றதல்ல ஏனைய கழிவுகள். பிளாஸ்டிக் தனியே கழிவுகளாக மட்டும் முடிவடைவதில்லை; அவை கழிவுகளாகத் தொடங்குகின்றன. எத்திலீன், பென்சீன், ஃபீனால், ப்ரோப்பிலீன், அக்ரிலோனிட்ரைல் போன்ற பல பிளாஸ்டிக்கின் வேதியியல் கட்டுமானத் தொகுதிகள், புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் உருவாக்கப்பட்ட இயற்கையான கழிவுப் பொருட்கள் ஆகும். 1920 கள் மற்றும் 1930 கள் வரை அவை வழக்கமாக எரிக்கப்பட்டன அல்லது வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டன. காலப்போக்கில் தொழில் முனைவோரும் எண்ணெய் மற்றும் நிலக்கரித் துறைசார் அறிவியலாளர்களும் இணைந்து அவற்றை பாலிமர்களாக திடப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடித்தனர்.

இரண்டாம் உலகப் போர் பிளாஸ்டிக் புரட்சியை ஏற்படுத்தியது. பாராசூட்டுகள், விமான உதிரிப்பாகங்கள், ரேடார்கள், போர்வீரரின் பூட்ஸ் சப்பாத்துகள், துப்பாக்கிகள், போரியல் உபகரணங்கள் – அனைத்தும் ஆய்வகங்களில் இருந்து புதிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. 1939 மற்றும் 1945 இற்கு இடையில், உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்தது. விரைவில், அதே பொருட்கள் பல – நைலான், பெர்ஸ்பெக்ஸ், பாலிஎதிலின் –  வீடுகளுக்குள் வெள்ளம் போல் புகுந்தன.

குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும் பிளாஸ்டிக்குகள் ஒரு அற்புதமான வகைப் பொருட்கள் என்பது உணரப்பட்டது. மலிவான, ஈயக்கூடிய, இலகுரக, நீடித்த, கிட்டத்தட்ட எந்த வடிவத்தையும் அல்லது நிறத்தையும் எடுக்கும் திறன் கொண்டவையாக அவை இருந்தன. திடீரென்று, எமது அன்றாட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீக்கமற நிறைந்ததாக பிளாஸ்டிக் மாறியுள்ளது. புதிய பிளாஸ்டிக் துறையில் லாபம் என்பது, உள்ளார்ந்த நிலைத்தன்மையுடன் உயர்தரத் தயாரிப்புகளை உருவாக்குவதில் அல்ல, மாறாக அதற்கு நேர்மாறாக ‘ஒற்றைப் பயன்பாட்டில்’ (single use) உள்ளது என்பதை உணர்ந்து கொண்டதுதான் இன்றைய நெருக்கடிக்கும் அதன் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள கட்டுக்கதைக்கும் காரணம். 

பானைகள், பாத்திரங்கள், தட்டுகள் என உற்பத்தியாளர்கள் விரைவில் கிட்டத்தட்ட அனைத்தையும் ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கியெறியும் (use and throw) பிளாஸ்டிக் பொருட்களாக உருவாக்கினர். இதனால் குப்பைக் கிடங்குகள் மற்றும் எரியூட்டிகள் விரைவில் பிளாஸ்டிக் போத்தல்கள், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் குழாய்கள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக்கில் உருவான காகிதாதிகள் ஆகியவற்றால் நிரம்பி வழிகின்றன. பிளாஸ்டிக்கை அசாதாரணமானதாக மாற்றும் குணாதிசயங்களே அவற்றைச் சிக்கலான கழிவுகளாக்குகின்றன. அவற்றின் மூலக்கூறுகளை ஒன்றாக இணைக்கும் கோவலன்ட் பிணைப்புகள் பிடிவாதமாக நிலைத்து நீடித்திருக்கும். உயிருள்ள எதுவும் அவற்றை மக்கச் செய்வதில்லை; எனவே அவை சிதைவதில்லை.

பிளாஸ்டிக்குகள், புற ஊதாக் கதிர்வீச்சினால், தனிமங்களால் அல்லது சக்தியால் உடைக்கப்படும்போது, ​​அவை பிரியும் அளவுக்குச் சிதைவதில்லை; அவற்றின் சங்கிலி போன்ற கட்டமைப்புகள் சிறிய சிறிய துண்டுகளாகப் பிரிகின்றன. மேக்ரோபிளாஸ்டிக்ஸ், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகிப் பின்னர் நானோபிளாஸ்டிக் ஆகிறது. அவை நம் இரத்த ஓட்டங்கள், மூளை, பிறக்காத குழந்தைகளின் நஞ்சுக்கொடி ஆகியவற்றில் நுழையும் அளவுக்குச் சிறியதாக இருக்கும். நமது உடலில் இந்தப் பொருட்களின் தாக்கங்களை மனிதகுலம் இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. இது தருகின்ற கெட்ட செய்தி யாதெனில்; யாரும் நலமுடன் இருக்க வாய்ப்பில்லை. 

plastics

நல்ல செய்தி என்னவென்றால், சில பிளாஸ்டிக்குகள் இப்போது மறுசுழற்சி செய்யக்கூடியவை; அதற்கான தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் எல்லாப் பிளாஸ்டிக்கும் மறுசுழற்சிக்கு உரியவையல்ல. உலகளாவிய பிளாஸ்டிக் கழிவுகளில் 9% மட்டுமே மீள்சுழற்சிக்கு உள்ளாகிறது. இன்றைய தேவை தனியே மீள்சுழற்சி அல்ல. நுகர்வு குறைய வேண்டும். குறைவான அளவில் மக்கள் பொருட்களை வாங்க வேண்டும். வாங்கிய பொருட்களை மீளப் பயன்படுத்த வேண்டும். அவற்றைச் செய்யாமல் மீள்சுழற்சியைக் காரணங்காட்டி நுகர்வை ஊக்குவிப்பது தீர்வல்ல. ஆனால் நுகர்வே சந்தைக்கு அவசியம். எனவே மீள்சுழற்சியே கழிவுப் பிரச்சனைக்குத் தீர்வு என்ற கட்டுக்கதை பரப்பப்படுகிறது. இதன்மூலம் கட்டற்ற நுகர்வால் பிரச்சனைகள் எதுவுமில்லை; ஏனெனில் அனைத்தும் மீள்சுழற்சிக்கு உள்ளாக்கக் கூடியவை; இவை பசுமைக்குப் பாதகமானவையல்ல என்ற கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தந்திரமானது; இலாபநோக்கத்திற்காக பசுமையைக் காவு வாங்குவது.   

நிறைவுக் குறிப்பு

பசுமை என்பதன் பெயரால் இன்று சந்தைச் சக்திகள் செய்கின்ற விடயங்கள் இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. முதலாவது மக்களை ஏமாற்றுவதனூடு பல்கிப்பெருகிய இலாபத்தை தொடர்ச்சியாகப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது பசுமையின் பெயரால் நடைபெறும் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்களவு பயனைத் தராத, தரவியலாத வகைகளிலேயே பசுமையைப் பேணும் செயல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. பசுமையின் பெயரால் பூவுலகைக் காப்பது என்ற பிம்பம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது, இன்றும் எவ்வாறு அது நிலைபெற்றுள்ளது போன்ற வினாக்கள் ஆழமான பார்வையை வேண்டுவன. குறிப்பாக பொருளதார நெருக்கடியில் அல்லலுறும் இலங்கை போன்ற நாடுகள் இந்த மாயப் பிம்பத்துக்கு இலகுவில் பலியாகின்றன. இவை குறித்தும் அடுத்த கட்டுரையில் நோக்கலாம். 

அடிக்குறிப்புகள்

  1. 1958 இற்கும் 2008 இற்கும் இடைப்பட்ட காலத்தில் கரிம மற்றும் கரிமமல்லாத பயிர்கள், உணவுகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழி வெளியான 162 ஆய்வுக் கட்டுரைகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது சில முக்கியமான முடிவுகளை வெளியிட்டது. விட்டமின் சி, கரோட்டின் மற்றும் கால்சியம் உட்பட 15 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு ஊட்டச்சத்துக்களின் உள்ளடக்கத்தில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. இருப்பினும் வேறு சில வேறுபாடுகள் இருந்தன. வழக்கமான பயிர்கள் அதிக நைட்ரஜன் அளவைக் கொண்டிருந்தன; அதே சமயம் கரிமப் பயிர்கள் அதிக பாஸ்பரஸ் மற்றும் அமிலத்தன்மையைக் கொண்டிருந்தன. இவை எதுவுமே ஊட்டச்சத்து தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இறைச்சி, பால், முட்டை போன்ற கால்நடைப் பொருட்கள் மீதான இதேபோன்ற ஆய்வுகளைப் பகுப்பாய்வு செய்தபோது ஊட்டச்சத்து உள்ளடக்கத்தில் சில வேறுபாடுகள் கண்டறியப்பட்டன. கரிம உணவுகளில் ஒட்டுமொத்த கொழுப்புகள், குறிப்பாக டிரான்ஸ் கொழுப்புகள் (எண்ணெய் திண்மக் கொழுப்பாதல்) அதிக அளவில் உள்ளன. இதன்படி உண்மையில் கரிம கால்நடை உணவுகள் நமக்கு மோசமானவை. மேலதிக தகவல்களுக்கு பார்க்க: Dangour et al. (2010). Nutrition-related health effects of organic foods: a systematic review. The American Journal of Clinical Nutrition. 92(1): 203-210.
  2. Fillion, L. and Arazi, S. (2002). Does organic food taste better? A claim substantiation approach”, Nutrition & Food Science. 32(4): 153-157. 
  3. https://thehumaneleague.org/article/meat-industry-deforestation-cop26 
  4. https://www.nationalgeographic.com/environment/article/microplastics-found-near-everests-peak-highest-ever-detected-world-perpetual-planet 
  5. https://www.nationalgeographic.com/science/article/plastic-bag-mariana-trench-pollution-science-spd 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5954 பார்வைகள்

About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)