Arts
13 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாண நகரம் தோன்றிய காலத்தை மீளாய்வு செய்யும் யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வாய்வு

July 5, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

 2500 ஆண்டுகால இலங்கை வரலாற்றில் வட இலங்கை சிறப்பாக யாழ்ப்பாணம் பாளி மொழியில் நாகதீப(ம்) எனவும், தமிழ் மொழியில் நாகநாடு எனவும் தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்திக் கூறும் மரபு பண்டுதொட்டுக் காணப்படுகின்றது. இதற்கு இப்பிராந்தியத்தில்  தோன்றி வளர்ந்த தனித்துவமான பண்பாட்டு அம்சங்களும் ஒரு காரணம் என்பதை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதிசெய்து வருகின்றன. இதை யாழ்ப்பாண நகரத்திற்கு தெற்கே கடல் நீரேரியுடன் அமைந்துள்ள ஒல்லாந்தர்காலக் கோட்டையின் உட்பகுதியில் 2012- 2017 ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகள் மேலும் உறுதிசெய்கின்றன. இதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நம்பகரமான ஆதாரங்கள் யாழ்ப்பாண நகரம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும், யாழ்ப்பாணத்தின் ஆதிகால இடைக்கால வரலாறு பற்றியும் இதுவரை வரலாற்று அறிஞர்கள் முன்வைத்த கருத்துக்கள் பலவற்றையும் மீள்வாசிப்பிற்கு உட்படுத்துவதாக உள்ளன.

தற்போதைய யாழ்ப்பாண நகரம் தோன்றிய காலம், தோற்றத்திற்கான வரலாற்றுப் பின்னணி தொடர்பாக வரலாற்று அறிஞர்கள் பலர் ஆராய்ந்துள்ளனர். அவர்களில் ஒருசாரார் அதன் தோற்ற காலத்தை நல்லூர் இராசதானி காலத்துடனும், இன்னொரு சாரார் போத்துக்கேயர் கால ஆட்சியுடனும்  தொடர்புபடுத்திக் கூறியுள்ளனர். நல்லூர் இராசதானி காலத்துடன் யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தை தொடர்புபடுத்துவோர் யாழ்ப்பாண இராசதானி கால வரலாறு பற்றிப் பிற்காலத்தில் எழுந்த தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் சிங்கை, நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய வேறுபட்ட தலைநகரங்களின் பெயர்கள் ஒரேயிடத்தைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். இக்கூற்று யாழ்ப்பாணம் ஒரு நகராக வளர்ந்ததைக் காட்டுகின்றதே தவிர அதன் தோற்றகாலத்தைக் கூறுவதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் (1621-1658) யாழ்ப்பாணம் ஒரு நகராகத் தோன்றியதெனக் கூறுவோர் அதற்கு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் கட்டிய கோட்டையை முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர். இக்கோட்டை போர்த்துக்கேயர் ஆட்சியில் சதுர வடிவில் கட்டப்பட்டு ஒல்லாந்தர் ஆட்சியில் (1658-1796) நட்சத்திர வடிவில்  மாற்றியமைக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை 350 ஆண்டுகள் ஐரோப்பியரது ஆதிக்கம் யாழ்ப்பாணத்தில்  இருந்ததன் ஒரு மரபுரிமை அடையாளமாகக் காணப்படுகின்றது. ஆயினும் இக்கோட்டையை முக்கியமான ஆதாரமாகக் காட்டி யாழ்ப்பாண நகரத்தின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் போர்த்துக்கேயர் வருகையுடன் தொடர்பு படுத்துவதை மறுதலிப்பதாகவே கோட்டை அகழ்வாய்வில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

தொல்லியல் மேலாய்வு

2010 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை நெதர்லாந்து அரசுகளின் நிதியுதவியுடன் அழிவடைந்த யாழ்ப்பாணக் கோட்டையை இலங்கைத் தொல்லியற் திணைக்களம் மீள்புனரமைப்புச் செய்து வருகிறது. இப்பணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பட்டதாரிகள் முக்கியமான பங்காற்றி வருகின்றனர். இம்மீள்புனரமைப்புப் பணிகளின் போது 62 ஏக்கர் பரப்பில் அமைந்த கோட்டையின் பெரும்பகுதி தொல்லியல் மேலாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் 32 ஏக்கர் பரப்பைக் கொண்ட கோட்டையின் உட்பகுதியில் அழிவடைந்த கிறிஸ்தவ ஆலயம், இராணிமாளிகை, ஆயுதக்களஞ்சியங்கள், பீரங்கித்தளங்கள், படைவீரர்களின் இருப்பிடங்கள், காவல் மையங்கள் என்பன அமைந்துள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வில் போர்த்துக்கேயர் வருகைக்கு முந்திய வரலாற்றை வெளிப்படுத்திக் காட்டும் நம்பகத்தன்மையுடைய பல தொல்பொருட் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆதிகால இடைக்கால உள்நாட்டு வெளிநாட்டு நாணயங்கள், பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த உள்நாட்டு வெளிநாட்டு  மட்பாண்டங்கள், சுடுமண்ணாலான இந்துச் சிற்பங்கள், கருங்கல் மற்றும் சுண்ணாம்புக் கல்லால் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகள், கலைவடிவங்கள், சமயச் சின்னங்கள், கல்வெட்டுக்கள் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவ்வாதாரங்கள் போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னரே தற்போதைய கோட்டைப் பிரதேசமும், அதன் சுற்றாடலும்  புராதன குடியிருப்பு மையங்களாகவும்,இந்து சமுத்திர கடல் சார் வாணிபத்தில் மேற்காசிய தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான வாணிப மையமாகவும் இருந்துள்ளதை உறுதிசெய்கின்றன.

அகழ்வாய்வு – 1

jaffna-fort-coins

2012 ஆண்டு கோட்டையின் களஞ்சிய அறைக்கு அருகில் பிற தேவைக்காக நிலம் அகழப்பட்டபோது எதிர்பாராதவகையில் தொன்மையான தொல்லியல் ஆதாரங்கள் பல வெளிவந்தன. இவ்விடத்தின் கலாசார மண் அடுக்குகள் குழம்பிய நிலையில் காணப்பட்ட போதும்  ஆறடி ஆழத்தில் கடல் நீர்மட்டம் வரை  அகழ்வாய்வு செய்யப்பட்டபோது நான்கு கலாசார மண் அடுக்குகளை சரிவர அடையாளம் காணமுடிந்தது. அவற்றுள் கடல்நீர் வெளிவந்த கலாசார மண் அடுக்குகளில் இருந்து ஆதி இரும்புக்காலத்தைச் சேர்ந்த (Early Iron Age Culture or Megalithic Culture) பலவகை மட்பாண்ட ஓடுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவற்றுள் ஆதி இரும்புக்காலத்தை சேர்ந்த கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்களும் கண்டுபிக்கப்பட்டமை இப்பிரதேசத்தில் கந்தரோடை, சாட்டி, பூநகரி முதலான இடங்களை ஒத்த பெருங்கற்காலக் குடியிருப்புக்கள் இருந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இக்கலாசார மண் அடுக்கிலும், இரண்டாவது மண் அடுக்கிலும் பிற தொல்பொருட்களுடன் மங்கிய நிலையில், பெருமளவு ரொளட் மட்பாண்டங்களும், உரோமர் கால மதுச்சாடிகளின் பாகங்களும் பிற தொல்பொருட்  சின்னங்களும் கண்டுபிடிக்கப்படடுள்ளன. மூன்றாவது மண் அடுக்கில் இருந்து பலவகை மட்பாண்டங்களுடன் அரேபிய மற்றும் சீன நாட்டு மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள், பீங்கான் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிதைவடைந்திருந்த நான்காவது மண் அடுக்கில் இருந்து பெரும்பாலும் ஐரோப்பியர் கால மட்பாண்டங்கள், நாணயங்கள், நாளாந்தப் பாவனைப் பொருட்கள், கட்டடச் சிதைவுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

அகழ்வாய்வு – 2

இவ்வாய்வுக்குழிக்கு அருகே 2017 ஆண்டின் பிற்பகுதியில் மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாண செயல்  திட்டத்தின்  அனுசரணையுடன் Durham பல்கலைக்கழகமும் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பிரிவும் இணைந்து அகழ்வாய்வொன்றை மேற்கொண்டிருந்தது. சமகாலத் தொல்லியல் அறிஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பேராசிரியர் கொனிங்காம் வழிகாட்டலில் நடைபெற்ற இவ்வகழ்வாய்வில்  நவீன தொழில் நுட்பக்கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டதால்  இங்கு கிடைத்த தொல்பொருட்  சின்னங்களின் காலம், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான கணிப்பீடுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாய்வுக் குழியில் இயற்கை மண்படைவரை  மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் ஒன்பது வேறுபட்ட கலாசார மண் அடுக்குகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் இயற்கை மண்ணோடு ஒட்டிய கலாசார மண் அடுக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்காலப்பண்பாட்டிற்குரிய கறுப்பு – சிவப்பு மட்பாண்டங்கள்  கி. மு. 700க்கும் கி. பி. 100 நூற்றாண்டுக்கும் நரைநிற மட்பாண்டங்கள் (Grey ware) கி. மு. 500க்கும் கி. பி. 200க்கும் இடைப்பட்டதெனவும் கணிப்பிடப்பட்டுள்ளன. இக்காலக்கணிப்புகள் போர்த்துக்கேயர் வருகைக்கு 1500 ஆண்டுககளுக்கு முன்னரே கோட்டைப் பிரதேசம் முக்கிய குடியிருப்புகளைக் கொண்ட பிரதேசமாக இருந்துள்ளதை உறுதி செய்கின்றன.

jaffna-fort-clay-pots

மேலும் இவ்வகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு காலகட்டத்திற்குரிய தொல்பொருட்  சின்னங்கள் ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட கோட்டைப் பிரதேசத்தின் தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. அவற்றுள் பல்வேறு காலத்தை சேர்ந்த பல நாடுகளுக்குரிய பலவகை மட்பாண்டங்கள் கிடைத்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இவ்வாதாரங்கள் போர்த்துக்கேயர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தற்போதைய யாழ்ப்பாண நகரம் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கால அடிப்படையில் உறுதிப்படுத்த உதவுகின்றன. பேராசிரியர் கொனிங்காம் அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டங்களை முக்கியமான ஆதாரமாகக் கொண்டு கோட்டைப் பிரதேசத்துடன் கடசார் வாணிபத்தில் ஈடுபட்ட நாடுகளையும், அவற்றின் காலங்களையும் கணித்துள்ளார். அவற்றுள் இந்திய Northern Black Polished Ware (500 BC to 100 BC), உரோமநாட்டு Rouletted Ware (200 BC to 200 AD), தமிழக Arikkamdu Type- 10(200 BC to 200 AD), Arikkamdu Type – 18 (300 BC to 200 AD), உரோம கிரேக்க நாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்ட  Omphalos Ware (200 BC to 100 AD), உரோம நாட்டு Larretine Ware (100 BC to 100AD), Amphora (200 BC to 100AD), இந்திய Polished Ware (100 BC to 800AD), தமிழகத்திலும் இலங்கையிலும் பயன்பாட்டிலிருந்த White Slipped with Red Paint (600 AD to 1100AD), Appliqué Ware (1300 AD to 1400AD), ஈரான் ஈராக் நாடுகளுக்குரிய FupaSasanian Islamic Ware (200 BC to 700 AD), Buff Ware (400 AD to 800 AD), Lustre Ware (800 AD to 1000 AD), Imitation Lustre Ware (800 AD to 1000 AD), White Tin-Glazed Ware (800 AD to 1000 AD), Lead-Glazed Ware (800 AD to 1000 AD) மற்றும் சீன நாட்டுக்குரிய hangsa Painted Ware (800 AD to 900 AD), Xing Ding White Wares (800 AD to 1000 AD), Yue green Ware (800 AD to 1000 AD), Coarse Stone Ware (700 AD to 1100 AD), Green Splashed White Ware (800 AD to 1000 AD), Chinese Porcelain (1400 AD to 1700 AD) முதலான நாடுகளுக்குரிய மட்பாண்டங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

நகரமயமாக்கம்

தென்னாசியாவில் நகரமயமாக்கத்தின் தோற்றமும் அதற்கான வரலாற்றுப் பின்னணியும் இடத்திற்கு இடம் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. பொதுவாக நிலையான குடியிருப்புகள், நிரந்தரப் பொருளாதாரக்கட்டமைப்பு, மிகை உற்பத்தி, சிறுதொழில் நுட்பவளர்ச்சி, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் என்பன நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன தோன்றியதன் தொடக்க காலமாகக் கூறப்படுகின்றது. தமிழகத்தில் சேர நாட்டின் நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன உரோம நாட்டு வணிகத் தொடர்பால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பாண்டி நாட்டிலும், சோழ நாட்டிலும் இவை விவசாய உற்பத்தியால் தோன்றியதாகக் கூறப்படுகிறது. வடஇந்தியாவில் நகரமயமாக்கத்தின் தோற்ற காலம் கி.மு.500 – 400 எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இலங்கையிலும் இதன் தோற்ற காலம் ஏறத்தாழ கி. மு. 200 எனக் கூறப்படுகிறது. இலங்கையில் புராதன நகரங்கள் தோன்றிய இடங்களாக அநுராதபுரம், மகாகமை, கந்தரோடை, மாதோட்டம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு இவ்விடங்கள் பிற நாடுகளுடன் குறிப்பாக உரோம நாட்டுடன் கொண்டிருந்த கடல்சார் வாணிபத் தொடர்புகள் முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணக் கோட்டைப் பிரதேசத்தில் மேற்கொண்ட மேலாய்வில் கிடைத்த பண்டைய நாணயங்கள், பலவகை மட்பாண்டங்கள் இப்பிரதேசம் தொடக்கத்தில் உள்நாட்டு வர்த்தகத்திலும் பின்னர் இந்தியாவுடனும் இவற்றைத் தொடர்ந்து உரோம அரேபிய, சீனா முதலான நாடுகளுடன் கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபட்டதை உறுதிசெய்கின்றன. இவற்றை அகழ்வாய்வில் கிடைத்த ஆதாரங்கள் மேலும் உறுதி செய்கின்றன. இவ்விடத்தில் கொட்றிங்ரன் என்ற அறிஞர் கோட்டைப் பிரதேசத்தில் இருந்து 20 உரோம நாட்டு தங்க நாணயங்களைக் கண்டுபிடித்ததாகக் கூறியிருப்பதும் இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது யாழ்ப்பாண நகர உருவாக்கம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கந்தரோடை, அநுராதபுர, மகாகமை முதலான நகரங்கள் தோன்றியதன் சமகாலத்தில் ஏற்பட்டதெனக் கூறலாம்.

இலங்கை வரலாறு கூறும் பாளி இலக்கியங்கள் இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையின் கடற்கரை சார்ந்த துறைமுக நகரங்கள் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்திருந்த துறைமுக நகரங்களை தமிழில் கோகரணப்பட்டன(ம்) (திருகோணமலை), மாதோட்ட பட்ணன(ம்) (மன்னார்), ஜம்பு கோளபட்டன(ம்) (யாழ்ப்பாணம்?) எனக்குறிப்பிடுகின்றன. இவற்றுள் மாதோட்டம் முக்கியமான துறைமுக நகராக இருந்ததை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இத்துறைமுக நகரங்களை மையப்படுத்தியே 16 ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கேயரும், பின்னர் ஒல்லாந்தரும் தமது கோட்டைகளையும் அமைத்துள்ளனர். இதற்கு போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னரே இவ்விடங்கள் பிரதான குடியிருப்பு மையங்களாகவும், கடல்சார் வாணிபத்தில் முக்கிய துறைமுக நகரங்களாகவும் வளர்ச்சியடைநதிருந்தமை முக்கிய காரணமாகும்.

யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வாய்விலும், மேலாய்விலும் கிடைத்த பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பலவகையான தொல்லியல் ஆதாரங்கள் நகரமயமாக்கம்  ஏற்பட்டதையும், அங்கு வாழ்ந்த மக்கள் தொடர்ச்சியாக இந்தியா குறிப்பாக தமிழகம், மேற்காசியா,  தென்கிழக்காசியா, சீனா முதலான நாடுகளுடன் கடல்சார்தொடர்புகளைக் கொண்டிருந்ததையும் உறுதிப்படுத்துகின்றன. இங்கு வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாக இருந்துள்ளனர் என்பதையும் ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. அவற்றுள் கி. பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்திய சுடுமண் பெண் வங்களின் வடிவமைப்பு குடியிருப்புகளில்  வைத்து வழிபடப்பட்ட தெய்வச் சிலையாகக் காணப்படுகிறன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்கள், நாணயங்களில் கணிசமானவை சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும். 1980 களில் கோட்டை வாசல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கி. பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க் கல்வெட்டு இங்கிருந்த ஆலயம் ஒன்றுக்கு இராஜேந்திர சோழ மன்னன் தானம் வழங்கிய செய்தியைக் கூறுகிறது. கோட்டை அழிபாடுகளிடையே கண்டுபிடிக்கப்பட்ட கருங்கல்லால் கட்டப்பட்ட இந்து ஆலயங்களின் அழிபாடுகளின் கலைமரபு சோழர் கலை மரபைச் சேர்ந்ததாகக் காணப்படுகின்றது. கோட்டையின் பழைய பெயரான ஐநூற்றுவன் வளவு  இலங்கையில் சுயாட்சி கொண்ட நகரங்களை உருவாக்கிய சோழர்கால ஐநூற்றுவன் என்ற வணிகக்கணத்தினை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது சோழர் காலத்தில் கோட்டைப் பிரதேசம் முக்கியமான துறைமுக நகராக வளர்ச்சியடைந்ததைக் காட்டுகிறது. இடைக்கால வரலாற்றில் இலங்கை தென்னிந்தியா, கிழக்காசியா சிறப்பாக சீன நாடுகளுக்கு இடையிலான வணிக நகராக கோட்டைப்பிரதேசம் செயற்பட்டதை கோட்டை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பலவகை நாணயங்கள், மட்பாண்டங்கள் உறுதி செய்கின்றன. இவை கி. பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கேயரின் வருகைக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். அவற்றுள் யாழ்ப்பாண இராசதானி கால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் அதிக எண்ணிக்கையில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்களுடன் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட இந்து ஆலயங்களின் கட்டட அழிபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில கோட்டையில் இருந்த யாழ்ப்பாண இராசதானி கால ஆலயங்களாக இருக்கலாம் எனப் பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகிறார். சூளவம்சம் என்ற பாளி வரலாற்று நூல் கி. பி. 11 ஆம் நூற்றாண்டில் பொலநறுவை அரசு மீது படையெடுத்த  தமிழ்ப்படை வீரர்கள் வட இலங்கையில் களிமண்ணால் வட்டவடிவில் கட்டப்பட்ட கோட்டையில் தங்கியிருந்ததாகக் கூறுகிறது. இவ்வாதாரம் போர்த்துக்கேயருக்கு முன்னரே வட இலங்கையில் கோட்டை இருந்ததை உறுதிசெய்கிறது. தமிழ் – சிங்கள இலக்கியங்கள் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் இருந்த கோட்டை பற்றிக் கூறுகின்றன. போர்த்துக்கேயர்கால ஆவணங்கள் யாழ்ப்பாண் இராசதானியின் படைவீரர்களுக்கும் போர்த்துக்கேயப் படைவீரர்களுக்கும் இடையிலான முக்கியமான போர்கள் கோட்டைப் பிரதேசத்தை அண்டிய இடங்களில் நடந்ததாகக் கூறுகின்றன. இவ்வாதாரங்களை வைத்து நோக்கும் போது போத்ர்துக்கேயர் வருவதற்கு முன்னரே தற்போதைய கோட்டை அமைந்திருக்கும் இடத்தில் களிமண் கொண்டு கட்டப்பட்ட கோட்டையொன்றும் இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. அக்கோட்டை இருந்த இடத்திலேயே 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், பின்னர் வந்த ஒல்லாந்தரும் தற்போதைய கோட்டையை தமது நாட்டுக் கலை மரபில் கற்களைக் கொண்டு கட்டியிருக்கலாம் எனச் சிந்திக்க இடமுண்டு.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10465 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)