Arts
16 நிமிட வாசிப்பு

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆரம்பம்

April 6, 2024 | Ezhuna

முதலாளி வர்க்கம் வசதியாக வாழ தம் வாழ்க்கையைத் தியாகம் செய்த மலையகத் தமிழ் மக்கள் தாது வருடப் பஞ்சத்தின் போது தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அண்மை நாடான இலங்கைக்கும் அழைத்துவரப்பட்ட இம் மக்கள் ஏமாற்றப்பட்டே அழைத்துவரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. இந்த நாட்டிலே உழைத்து இந்த நாட்டின் சகல மக்களுக்காகவும் தங்களை மாய்த்துக் கொண்ட இலங்கை மலையகத் தமிழ் சமூகம் 200 வருடங்களாக அடையாளச் சிக்கலைச் சந்தித்து வருகிறது. மலையகத் தமிழர்களின் அவலங்களையும் கடந்த காலத்தின் துன்பியல் சுவடுகளையும் அனுபவங்களாகக் கொண்டு, எதிர்காலத்தில் இச் சமூகம் தனியான ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதையும், சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி நகருவதையும் நோக்கமாகக் கொண்டு “இலங்கை மலையகத் தமிழ் மக்களின் இன அடையாளச் சர்ச்சை : 200 வருடங்கள்” என்னும் இத் தொடர் அமைகின்றது.

தொழிலாளர்கள் தங்களின் ஊதியத்தைக் கொண்டு வாழ முடியாத நிலைமையில் போராட்டங்கள் ஆரம்பமாகும் என்று அனுபவங்கள் கூறுகின்றன. தொழிலாளர் எழுச்சி என்பது விவசாயிகளின் வளர்ச்சியையும் போராட்டங்களையும் பார்க்கிலும் வித்தியாசமானதாகும். தொழில் வழங்குநர்களான முதலாளி வர்க்கத்தினருக்கு எதிராக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகக் கட்டமைப்பாக தொழிலாளர் வர்க்கமும் அவர்களின் போராட்டங்களும் காணப்படுகின்றன.

தொழிலாளர் வர்க்கமானது இலங்கையின் அரச காலத்தில் இருந்து வந்ததாக காணப்படுகின்றது. ஆனாலும் அன்றைய நிலைமை சாதிய ரீதியாகவே காணப்பட்டது. காலனித்துவ ஆட்சியாளர்களினால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் வருகையுடனே இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொழிலாளர்கள் என்ற வார்த்தைப் பிரயோகமும் ஆரம்பமாகிறது. இத்தோடு சேர்த்து வர்க்கக் கட்டமைப்பும் நவீன தொழிலாளர் படையும் தோற்றம் பெற்றது. தொடர்ந்து, தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டங்கள், தொழிற்சங்கங்களை நிர்மாணிப்பதற்கான அடித்தளங்கள் என்பவற்றோடு தொழிலாளர் வர்க்கத்தினர் முன்னெடுத்த புரட்சிகரச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

tea plantation

பிரித்தானிய பணக்கார வர்க்கம் இவர்களுக்குச் சேவகம் செய்த சுதேசிய பணக்கார வர்க்கம் என்பவற்றுடன் நகர்ப்புறம் சார்ந்த தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் ஆகிய மிகப் பிரதானமான வகுப்புக்கள் நாட்டில் தோற்றம் பெற்றன. இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருகையும் அவர்களின் வாழ்வியலுமே எமது நாட்டில் தொழிலாளர்கள் என்ற பதத்தினை மக்கள் மத்தியில் பரவலடைய செய்தது என்றால் மிகை ஆகாது. இலங்கையின் பணக்கார வர்க்கம் என்ற கட்டமைப்பு தோட்டத் தொழிலாளர்களின் வருகையாலும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையுடனான உப வியாபாரங்களாலும் தோற்றம் பெற்றது. 1830 ஆம் ஆண்டு துவங்கி 1880 ஆம் ஆண்டு வரை கோப்பி பயிர்ச்செய்கை பிரித்தானியாவின் உயர் வர்க்கத்தினரின் தேவை கருதி ஆரம்பிக்கப்பட்ட போதும், 1870 ஆம் ஆண்டிலேயே ஐரோப்பிய தனவந்தர்கள் முகம் கொடுத்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஐரோப்பியப் பொருளாதாரம் நிறுவனமயப்படுத்தப்பட்டது. அதுவரைக்கும் ஐரோப்பிய பொருளாதார கட்டமைப்பு நேர்த்தியான முகாமைத்துவ முறைமையினை கொண்டிருக்கவில்லை.

பெருந்தோட்ட பயிர் செய்வதற்கான அதிகாரத்தினை இலங்கையிலும் அறிமுகப்படுத்தியதுடன் பிரிட்டிஷ் தயாரிப்புகள் இலங்கை வர்த்தகத்தில் பிரதான இடத்தினைப் பெற்றன. “மேட் இன் இங்லாண்ட்” என்ற அடையாளத்துடனான பொருட்கள் இறக்குமதியானமை தேசிய உற்பத்தியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலானது. 1930 ஆம் ஆண்டு இலங்கையின் சுய உற்பத்திகளாக சிகரெட், சவர்க்காரம், மெழுகுவர்த்தி, ஐஸ்கட்டிகள், குளிர்பானங்கள், விளக்குகள் போன்ற உற்பத்தி பொருட்களே உற்பத்தி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் உற்பத்திகள் ஐரோப்பியர்களின் நிறுவனங்கள் ஊடாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இத்துடன் புதிய தொழிலாளர்களின் உருவாக்கம் இலங்கையின் தலைநகர் பகுதியில் உருவாகியது. ஆனால் இவை தவிர்ந்த வேறு பொருளாதார நடவடிக்கைகள், பெருந்தோட்டப் பொருளாதாரத்துடன் தொடர்புபட்டவையாகவே காணப்பட்டன. இதில் பிரதானமாக, தேயிலைப் பயிர்ச்செய்கையுடன் தொடர்புபட்ட போக்குவரத்து அபிவிருத்தியின் பிரதான அங்கமான புகையிரதப் பாதைகளும் அவற்றை முகாமை செய்த அரச தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் அதிகமாகக் காணப்பட்டன. மேலும் துறைமுகங்களுடன் தொடர்புபட்ட தொழில் நிலையங்களும் காணப்பட்டுள்ளன. தேயிலைத் தொழிற்சாலைகளின் இயந்திர உபகரணங்களை பழுது பார்க்கும் நிறுவனங்களும் தென்னை, தேயிலை போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் அதிகமாகக் காணப்பட்டன. அக் காலகட்டத்தில் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலை இந்திய நிறுவனமாகக் காணப்பட்டதுடன் தீக்குச்சி, பீடி, பலகையில் செய்த வீட்டுப் பாவனைப் பொருட்கள் போன்ற சிறு கைத்தொழில்கள் உள்நாட்டு வியாபாரிகளுக்கு சொந்தமானதாகக் காணப்பட்டது. மிகப் பெரிய இலாபகரமான வியாபார நிறுவனங்கள் ஆங்கிலேயக் கம்பெனிகளுக்கும், சில இந்தியக் கம்பெனிகளுக்கும் சொந்தமானவையாகக் காணப்பட்டன.

இந் நாட்டின் வளங்களைச் சூறையாடுவதற்காக குறைந்த கூலிக்கு தொழிலாளர்களைத் தேட வேண்டிய கட்டாயம் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. தேயிலை, கோப்பி பயிர்ச் செய்கைக்காக தமிழகத்தில் காணி இல்லாத ஏழைகளைத் தேடிப்பிடித்தனர். நகர்ப்புறத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களாக சிங்கள, தமிழ், மலையாள இனங்களைச் சேர்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இவ்வாறான காலத்தில் தான் இன, மத, சாதி, பிரதேசம் ஆகிய வேற்றுமைகளுடைய மக்களை ஒன்றிணைத்த புதிய தொழிலாளர் படை உருவானது. அதிகமான தொழிலாளர்கள் மலையகத் தோட்டப்புறங்களில் செறிவாக வாழ்ந்தனர். தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்ட  வளர்ச்சியானது தலைநகரில் வலுப் பெற்றது.

தோட்டத் தொழிலாளர்கள் ஓர் அறிமுகம்

சிங்களத் தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்ய விரும்பாதவர்களாகவும் அன்றாடம் தங்களின் வீடுகளுக்குச் செல்ல முற்படுபவர்களாகவும் இருந்தமையால் இவர்களை தோட்டத் தொழிலாளர்களாக நியமிக்க காலனித்துவ கம்பெனிகள் இணங்கவில்லை. மேலும், சிங்களத் தொழிலாளர்கள் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக காணப்பட்டதால், பெருந்தோட்டங்களில் வேலை செய்ய விரும்பவில்லை. இவர்கள் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்ந்தாலும் விவசாய நிலங்களையும் வாழ்விடங்களையும் விவசாயத்துடனான வாழ்வியலையும் கொண்ட மக்கள் கூட்டமாக காணப்பட்டனர். பிரித்தானியக் கம்பெனிகளின் உழைப்புச் சுரண்டலுக்கு ஏதுவான நில உரிமையற்ற மக்கள் இலங்கையில் இல்லாத காரணத்தினால் தென் இந்தியாவில் இருந்து நிலமற்ற ஏழை விவசாய நாட்கூலி மக்கள் கூட்டத்தினை அழைத்து வர ஆங்கிலேயர்கள் முற்பட்டனர். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தை சாதகமாக்கிய பிரித்தானியர்கள், 1825 ஆம் ஆண்டு தொடக்கம், இந்தியர்களை இலங்கை பெருந் தோட்டத் தொழிலாளர்களாக கொண்டு வரத் தொடங்கினர். 1931 இல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சமாக அதிகரித்தது. ஆரம்ப காலங்களில் கங்காணிகள் அல்லது ஆள்கட்டிகளால் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள்

1827 ஆம் ஆண்டு முதலாவது தொழிலாளர் கூட்டம் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தது. இவர்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரம் என்று கூறப்படுகிறது. மலையகத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் பயணித்த பாதைகளை அவர்களே வெட்டிச் செப்பனிட்டு பயணித்தார்கள். உலகப் பொருளாதாரச் சந்தையின் தேவை கருதி புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாகக் கொண்டு வரப்பட்டதாகவும், மலையகத் தொழிலாளர்களே அவ்வாறு அதிகமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகின்றது.

கடத்தி வரப்பட்ட தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் அதிகமாக ஆள் கட்டிகளால் அல்லது கங்காணிமார்களால் அழைத்துவரப்பட்டதாக கூறப்பட்டாலும், அந்த முறைமை ஆள் கடத்தல் முறைமைக்குள்ளேயே அடங்குகிறது என்பதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. பலர் மோசமான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர். சில வசதியாக வாழ்ந்தவர்கள் கூட ஆசை வார்த்தைகளால் மயங்கி வந்ததற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன.

“சீரான சீமை விட்டு
சீரழிய காடு வந்தோம்
கூடை தலை மேலே
குடி வாழ்க்கை கானகத்தில்”

என்ற எமது நாட்டார் பாடலும்,

“ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியில
பெத்த தாயை நான் மறந்தேன்”

என்ற பாடலும் வசதியான மானிடரும் தொழில் செய்ய இங்கே வந்ததற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன.

“சோளம் குரக்கன்
கம்பு கேவரு
மொச்சை மறந்து போச்சே,
கண்டி சீமை துரை
நெல்லு சோறு
கோதுமை தின்னல் ஆச்சே”

எனும் பாடலும் மேற்சொன்ன கருத்திற்கான சான்றாகும்.

தாது வருடப் பஞ்சம்

1876 தொடக்கம் 1978 வரை சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இதனை பெரும் பஞ்சம், தென்னிந்தியப் பெரும் பஞ்சம், சென்னை மாகாணப் பஞ்சம், தாது வருடப் பஞ்சம் எனப் பல பெயர்களில் அழைத்தனர். இரு ஆண்டுகள் நீடித்த இப் பஞ்சம் முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் தாக்கியது. இப் பஞ்சங்களுக்கு ஆங்கிலேயரின் அடக்கு முறையும் பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது. 1640 முதல் 1907 வரை சுமார் 17 முறை சென்னை மாகாணத்தை பஞ்சங்கள் வாட்டிய போதும் 1877 ஆம் ஆண்டின் பஞ்சம் அதிக உயிர்களை காவு கொண்ட பஞ்சம் என்று கூறுவதில் பிழையில்லை. கடுமையான நிலவரி விதிப்பு, விளைந்த பயிர்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தமை என்று உணவு உற்பத்தி பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் விளைவாக தாது வருடப் பஞ்சம் மக்களை அதிகமாகப் பாதித்தது. வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைக் கூட உணவாக்கி உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆயினும் கூட பிரிட்டிஷ் அரசாங்கம் தனது நாட்டிற்கான தானிய ஏற்றுமதியை நிறுத்தவில்லை. பஞ்சத்தை பயன்படுத்தி தானிய சிறு வியாபாரத்தை முற்றாகத் தடை செய்த ஆங்கிலச் சர்வாதிகார ஆட்சி சிறு வணிகங்களை முற்றிலும் தனதாக்கிக் கொண்டது. பிரிட்டிஷ் அரசு வரி செலுத்த முடியாத உள்நாட்டு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் ஆடு, மாடுகளைக் கூட பறிமுதல் செய்து கொண்டது. பஞ்ச காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பினை முழுதாக இழந்தனர். வருமானமற்ற நிலையில் நகைகள், உடைமைகள் என்பவற்றை விற்று உணவு உண்டனர். பணம் கரைந்ததும் நாடோடி வாழ்க்கைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டனர். யாசகர்கள் ஆக்கப்பட்ட மக்கள், கூட்டம் கூட்டமாக பெருநகரங்களை நோக்கி புலம்பெயரத் தொடங்கினர். ஒரு துண்டு ரொட்டிக்காகச் சண்டை போட்ட வரலாறுகளும் கசப்பான பதிவுகளாகக் கூறப்படுகின்றது. சந்தைக்கு தானியங்கள் வராததன் காரணத்தால் பெரு முதலாளிகளின் கைகள் ஓங்கின. இவர்கள் ஆங்கில அரசாங்கத்தின் அடிமைகளாகவே வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. பர்மாவிலிருந்து தானியம் இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் கள்ளச் சந்தை, பொருட்களைப் பதுக்கி விற்பனை செய்தல், கொள்ளை இலாபம், கருப்புக் கடை வியாபாரம் என்பவற்றை உள்ளூர் வியாபாரிகள் ஆரம்பித்தனர். கிராமங்களில் இருந்து மக்கள் நடைபயணமாக பெருநகரங்களைத் தேடி பயணிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் பாதி வழியிலேயே இறந்து வீழ்ந்த நிலைமையும் காணப்பட்டது. ஊர்வன, பறப்பன என அனைத்தையும் உண்ணத் தொடங்கினர். காட்டுக் கிழங்குகள், விஷக் கிழங்குகள், விஷக் கொட்டைகளை உண்டதனால் பலர் நோயுற்று இறந்தனர். எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்காக இலங்கை, மலேசியா, பர்மா, பிஜி, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொத்தடிமைகளாகச் சென்றனர். இலங்கை மலையகத் தமிழர்களின் புலம்பெயர்வில் தாது வருடப் பஞ்சம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

வஞ்சனை செய்த கங்காணிகள்

கங்காணி என்பதை மலேசியாவில் ‘கிராணி’ என்று கூறுவர். இந்த கங்காணிமார் பற்றிய பல கசப்பான வரலாற்றுக் கதைகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலிருந்து மக்களைத் தெரிவு செய்து கடத்தி வரும் செயலை சிறப்பாகச் செய்ய இந்த கங்காணிகளை ஆங்கிலேயர்கள் விசேடமாகத் தெரிவு செய்தனர்.

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் 150 மைல் தூரம். அந்தத் தூரத்தை நடந்தே வந்த எம் மக்கள் (தலவாக்கலை பிரதேசத்தில் அதிகமான தொழிலாளர்கள் திருச்சி மாவட்டம், முருக்கன் கிராமத்தில் இருந்து வந்தவர்கள்.) ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் வரை முப்பது மைல் தூரம் கப்பலில் வந்தார்கள். இந்தக் கப்பல் பயணங்களின் போதும் மக்கள் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. மக்களோடு கடலில் மூழ்கிய கப்பல்கள், புயல் காற்று காரணமாக திசை தெரியாமல் போனவர்கள், கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்டவர்கள் என்று சோகக் கதைகள் ஏராளமாக வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது.

up country people

தலைமன்னாரில் இருந்து மாத்தளைக்கான நூற்று எண்பது மைல் தூரத்தை கடந்து வந்த மக்கள் மாத்தளை நகரிலே சிகிச்சை முகாம்களில் நோய் எதிர்ப்புச் சிகிச்சையைப் பெற்றபின் அங்கிருந்து பல திசைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். மாத்தளையிலிருந்து தலவாக்கலைக்கு கிட்டத்தட்ட 70 மைல் தூரம் நடைபயணமாக வந்த மக்களின் மொத்த நடை பயணத் தூரம் கிட்டத்தட்ட 400 மைல்கள் ஆகும். காடுகளை வெட்டி பாதைகள் அமைத்து, விலங்குகளை விரட்டி உணவு தேடி உண்டு, நீர் தேடிப் பருகி, நச்சுப் பாம்புகள் –  குளவிகள் –  நுளம்புகள் – அட்டைப் பூச்சிகள் – விஷ ஜந்துகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் போக, உயிர் தப்பியவர்களே இறுதியாக மலையகம் வந்து சேர்ந்தனர். இம் மக்களை கொண்டு வந்து சேர்த்த கங்காணிகள் தொடர்பாக விசேடமாக ஆய்வு செய்ய வேண்டியதும் மலையக வரலாற்றின் கட்டாயத் தேவையாகும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்காகவும் கங்காணிமாருக்கு ஆங்கிலேயக் கம்பெனி மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியால் பணம் வழங்கப்பட்டது. இந்தக் கங்காணிமார் ஏற்கனவே வெள்ளைக்கார காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு பரிச்சயமானவர்களாகவோ சேவகம் செய்தவர்களாகவோ இருந்தனர். நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டுவதற்காக வெள்ளைக்காரர்களுக்கு உதவி புரிந்து காட்டி கொடுத்த ஒரு மக்கள் கூட்டத்தையே காலனித்துவ ஆட்சியாளர்கள் கங்காணிகளாகத் தெரிவு செய்திருக்க வேண்டும். 

மலையகத்தில் இன்று காணப்படும் ‘பெரட்டு’ (parade) ஆரம்ப காலங்களில் காலையில் தொழிலாளர்களை கணக்கெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே ஆகும். இதன் போது தொழிலாளர்களின் தலை எண்ணிக்கைக்கு ஏற்ப கங்காணிமாருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ‘பிரட்டுக்களம்’ என்பது ஆங்கிலேய காலம் முதல் இன்று வரை எமது பண்பாட்டோடு இரண்டறக் கலந்த ஒரு விடயமாக அமைந்து வந்துள்ளது. கங்காணிமார் தோட்டத் தொழிலாளர்களை கடனாளியாக வைத்திருந்ததும், வைத்திருப்பதும் ஒரு விதமான அடிமை முறைமையின் மாற்று வடிவம் ஆகும். தொழிலாளர்களுக்கும் கண்காணிகளுக்கும் இடையேயான கொடுக்கல் வாங்கல்கள் அவ்வாறான நவீன அடிமை முறைக்கு சான்றாக அமைந்தது. அன்று முதல் இன்று வரை தோட்டத் தொழிலாளர்கள் கடன் பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். கங்காணிக்கும் தொழிலாளர் படைக்கும் இடையில் காணப்பட்ட கடனே கங்காணிமாரின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக எழுதப்பட்ட பல ஆவணங்களில், பிறக்கும் போதும் கடனாளியாகப் பிறந்து, வாழ்ந்த போதும் கடனாளியாக வாழ்ந்து, இறக்கும் போதும் கடனாளியாக இறப்பவனே தோட்டத் தொழிலாளி என்று பதியப்பட்டுள்ளன. கங்காணியே தோட்டத்தில் கடன் கொடுக்கும் ஒரே மனிதனாகவும் கடை வைத்திருந்தவனாகவும் மக்களுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பவனாகவும் காணப்பட்டுள்ளான். இவன் இந்த மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்தமைக்கு பல வாய்மொழி ஆதாரங்கள் காணப்படுகின்றன. பெரிய கங்காணிமார் தோட்ட நிர்வாகத்திடம் கடன் பெற்று தோட்டங்கள் தோறும் கடைகளை நடத்தி வந்துள்ளனர். தொழிலாளர்களின் கூலியாக கடையிலிருந்த பொருட்கள் வழங்கப்பட்டதுடன், கங்காணியின் கடையில் மாத்திரமே பொருட்களை வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. அவர்கள் எவ்வளவு கடனைக் கொடுக்க வேண்டும் என்ற உண்மையைக் கூட கங்காணி தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதில்லை. ஆரம்ப காலங்களில் தொழிலாளர்களின் கூலி, ஒரு மாதம் கூலியாகவும் அடுத்த மாதம் கடனை அளவிடும் தொகையாகவும் காணப்பட்டுள்ளது. இது போன்ற விடயங்களிலிருந்து கம்பெனிகளும் கங்காணிமாரும் தொழிலாளர்களை எவ்வாறு சுரண்டினார்கள் என்பது தெளிவாகின்றது.

கண்டிச் சீமை தந்த ஏமாற்றங்கள்

கண்டிச்சீமை ஓர் சொர்க்கம் என்று பல கற்பனைக் கதைகளைக் கூறி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையகத் தொழிலாளர்கள் கண்ட கனவுகள் பொய்த்து போனதற்கு ஆதாரங்களாக பல நாட்டார் வழக்காற்றியல் வாய்மொழி இலக்கியங்கள் காணப்படுகின்றன. “ஊரான ஊரிழந்தேன்…..” என்ற நாட்டார் பாடல் கண்டிச் சீமை கொடுத்த ஏமாற்றங்களை எமக்குக் கூறுகின்றது. 

1903 ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றம் இலங்கை மலையக மக்களின் கல்வி தொடர்பான தரவுகளைக் கேட்டது. பதிலாக தோட்ட உரிமையாளர் சங்கம், கூலிக்காரர்களுக்கு அத்தியாவசியக் கல்வியினை வழங்க இன்னும் காலம் முதிர்ச்சி அடையவில்லை என்று கூறியது. கூலிக்காரர்களுக்கு கல்வி தேவையில்லை என்பதே இந்தச் சொற்களின் அர்த்தம். கூலிக்காரர்களுக்கு ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் கல்வியினை வழங்க இன்னும் காலம் முதிர்ச்சி அடையவில்லை என்னும் வார்த்தைகளில் அவர்களின் வஞ்சனையை இனம் காணக் கூடியதாக உள்ளது.

tea export

ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் இடத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் மரண வீதம், சிசு மரண வீதம் அதிகமாகக் காணப்பட்டது. இதற்கு காரணம் மந்தபோசனம். நோய்கள் சீக்கிரமாக பரவியது. மலேரியா, யானைக்கால் நோய், அம்மை, வாந்தி பேதி போன்ற கொடுமையான நோய்கள் ஏற்பட்டன. இவைகளுக்கான முறையான மருத்துவ வசதிகள் இல்லாமல் இருந்தது. தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளாததுடன் போதுமான வைத்தியசாலை வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. வேலைக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்னும் நிலைமை அன்று முதல் இன்று வரை செயலில் காணப்படுகின்றது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் வேலைக்கு சென்றே ஆக வேண்டும். கூலிக்காரர்களுக்குச் சொத்து இல்லை; வேலைக்குச் சென்றால் தான் உணவு. சுகயீனம் காரணமாக வேலைக்குப் போகாவிட்டால், குடும்பத்திற்குச் சுமையாகி விடும் நிலைமை உண்டாகும். தொழிலாளர்களின் மரண வீதம் அதிகரித்தது என்பதற்கு ஆதாரமாக மலையக மக்களின் மரணம் தொடர்பான கமிஷன் சபை மூலம் பிரித்தானிய அரசு செய்த ஆய்வுகளைக் குறிப்பிடலாம். 1883 மற்றும் 1891 காலகட்டத்தில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரிழப்பு மிக அதிகமாகக் காணப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன. கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டு பிரதான தேவைகளும் மலையக மக்களுக்கு எட்டாக் கனியாகவே காணப்பட்டுள்ளது. 

tea workers

1913 அக்டோபர், மார்ச் மாதங்களில் நிவிதிகளை என்னும் தோட்டத்தின் பிரதான பாதையில் தொழிலாளர்கள் ஏழு பேர் மரணம் அடைந்து கிடப்பதாக கிடைத்த தகவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இந்தத் தோட்டத்தில் பலர் நோயுற்றிருப்பது தெரிய வந்தது. 1913 இல் இந்த தோட்டத்தில் 227 மரணங்கள் இடம் பெற்றதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்தத் தோட்டத்தில் வாழ்ந்த மொத்தத் தோட்டத் தொழிலாளர்களில் 24 வீதமானவர்கள் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1914 அக்டோபர் மாதம் பின்கந்த தோட்டத்து தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் காரணமாகவும், உணவு முறையாக இல்லாததன் காரணத்தினாலும் இடை விலகிச் சென்ற தொழிலாளர்களுக்கு, சேவையை கைவிட்டுச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டது. தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததன் காரணத்தினால் அவர்களை நீதிபதி விடுதலை செய்தார். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் ஆரோக்கியம், ஊதியம் தொடர்பாக அக்கறை காட்டவில்லை என்பதனையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி இதனை அடையாளப்படுத்த வேண்டியது முக்கியம் என்பதையும் குறிப்பிட்டார்.

மக்கள் இந்தியாவில் இருந்து இங்கு வந்தபோது ‘8 x 10’ என்ற சிறிய வீட்டுக் கட்டமைப்பிற்ள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டனர். இந்த துன்பியல் வாழ்க்கை முறைமைக்கு தள்ளப்பட்டதானது நவீன அடிமை முறைமையின் மிகவும் கொடூரமான அம்சமாகும். மத்திய மாகாணத்தின் அமுகம் கோரளையின் கூல்போன் தோட்டத்தில் பெரிய கங்காணியாக இருந்து ‘கூல்போன் கண்காணி’ என்று அழைக்கப்பட்ட கங்காணியால் கட்டப்பட்ட இவ் வகை வீடுகளை இன்றும் காணலாம். இவ் வீடுகளில் கால் நீட்டிப் படுக்க கூட வசதி இருக்காத சீவியத்தை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது. தொழிலாளர்கள் தப்பி ஓடிவிடக் கூடாது என்ற காரணத்தினால் கால் நரம்புகள் வெட்டப்பட்டிருக்கின்றன. மலையக மக்கள் ஆபிரிக்க அடிமைகளை விட மோசமாக நடத்தப்பட்டனர் என்றால் மிகை ஆகாது. கண்டி சீமையும் அதன் வாழ்கையும் எமது மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. 

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4108 பார்வைகள்

About the Author

சை. கிங்ஸ்லி கோமஸ்

அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் சை. கிங்ஸ்லி கோமஸ் வீரகேசரி, தினக்குரல், தாயகம் (யாழ்பாணம்), புது வசந்தம் (யாழ்ப்பாணம்) ஆகிய பத்திரிகைகளின் கொட்டகலைக்கான மேலதிக நிருபருமாவார். கட்டுரையாளர், விமர்சகர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், குறும்பட இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்டவர். ‘The Dark Nest’ எனும் இவரது குறுந்திரைப்படத்திற்கு பெண்கள் ஊடக மைய்யத்தின் (இலங்கை) 2023 ஆம் ஆண்டிற்கான விஷேட விருது கிடைத்திருக்கின்றது. ஊடறு, பெண்ணியா, காக்கைச் சிறகினிலே (தமிழ்நாடு), ஜித்தன் (தமிழ் நாடு) போன்ற பிற நாட்டுப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். மலையக வரலாறு, சமூகவியல், அரசியல் சார்ந்த இவரது எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)