Arts
20 நிமிட வாசிப்பு

மானிடவியலாளர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையாவின் தேரவாத பௌத்தம் குறித்த ஆய்வுகள்

December 20, 2023 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கில மூலம் : எச்.எல். செனிவிரத்தின

Jeyaraj thambiah

ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக விளங்கியவர். இலங்கையில் பிறந்தவரான தம்பையா இலங்கைப் பல்கலைக்கழகம், கொர்ணல், ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை விரிவுரையாளராக 1960 களில் கடமையாற்றினர். 1980 – 83 காலப்பகுதியில் ‘யுனெஸ்கோ’விலும் அதன் பின்னர் கேம்பிரிட்ஜ், சிக்காக்கோ, ஹார்வாட் ஆகிய பல்கலைக்கழகங்களிலும் கடமையாற்றினார். உலக அளவில் செல்வாக்குள்ள கோட்பாட்டாளரும் தேரவாத பௌத்தம் குறித்த புலமையாளருமான தம்பையா தமது 84 ஆவது வயதில் 2014, ஜனவரி 19 ஆம் திகதி காலமானார். அவ்வாண்டு ஜனவரி 25 ஆம் திகதி ‘Colombo Telegraph’ இணைய இதழில் எச்.எல். செனிவிரத்தின எழுதிய குறிப்பின் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது. எச். எல். செனிவிரத்தின இலங்கையின் புகழ்பெற்ற மானிடவியலாளர்களில் ஒருவர்.

காலம் சென்ற போராசிரியர் ஸ்டான்லி ஜெயராஜ் தம்பையா பற்றிய இக்குறிப்பு வழமையான இரங்கல் கட்டுரையிலிருந்து வேறுபட்டதாக அவரது புலமை, ஆளுமை பற்றியும், அவரது ஆக்கங்கள் பற்றியதுமான சுருக்கமான அறிமுகமாக உள்ளது. பேராசிரியர் தம்பையா சமூக விஞ்ஞானத்துறைப் புலமையாளர்களில் முன்னணியில் திகழ்ந்தவர். அவர் செல்வாக்குடைய கோட்பாட்டாளராகவும் (Influential Theorist) தேரவாதம் பற்றிய புலமையாளராகவும் விளங்கினார். இலங்கை வாசகர்களுக்காக எழுதப்படும் இக்கட்டுரையில் நான் தம்பையா அவர்களின் தேரவாத பௌத்தம் பற்றிய புலமைசார் ஆய்வுகள் பற்றியே குறிப்பிட விரும்பிகிறேன். அவர் கோட்பாட்டுத்துறையில் செய்த பங்களிப்பு பற்றியும் இடையிடையே குறிப்பிடுவேன்.

Book1

பௌத்தம் பற்றித் தம்பையா மூன்று சிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்டதோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் ‘வடகிழக்கு தாய்லாந்தில் பெளத்தமும் நாட்டார் தெய்வ வழிபாடுகளும்’ (Buddhism and spirit cults in North Thailand) என்பது அவரது முதலாவது பெரும் ஆக்கமாகும் (1970). இவ் ஆய்வை எழுதுவதற்காக அவர் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியின் பின்தங்கிய கிராமப்புறத்தில் தங்கியிருந்து களஆய்வு மேற்கொண்டார்.

பௌத்தமும் நாட்டார் சமயமும்

வடகிழக்கு தாய்லாந்தில் கிராம மட்டத்தில் நிலவிய பௌத்த வழிபாட்டு முறைகளை மேற்குறித்த ஆய்வில் அவர் விளக்கிக் கூறினார். பௌத்த சமயப் பனுவல்களை ஆதாரமாகக் கொண்டு ஆய்வுகளை எழுதிய மேற்கு நாட்டின் புலமையாளர்கள் (Western Scholars) வழிபாடுகளை பௌத்தத்தின் சீரழிந்த வடிவமாகவே நோக்கினர். இதற்கு மாறுபட்ட வகையில் பௌத்தத்திற்கும் நாட்டார் சமயத்திற்கும் (Folk Religion) இடையிலான தொடர்ச்சியையும், பௌத்தத்தின் நிலைமாற்றத்தையும் தம்பையா தனது ஆய்வில் விளக்கியிருந்தார். எல்லாத் தேரவாத பௌத்தப் பண்பாடுகளிலும் பௌத்தம் – நாட்டார் சமயம் என்னும் இரு அம்சங்களும் இருந்து வந்துள்ளன. ஆகையால் தம்பையா எழுதிய விடயம் பொதுப்புத்தியின் பாற்பட்ட ஒன்றாக முதற் தோற்றத்தில் தென்படலாம். ஆனால், தம்பையாவின் ஆய்வு மானிடவியலின் பல்வேறு கோட்பாடுகளின் ஒளியில் தாய்லாந்தின் பௌத்தம் பற்றிய பகுப்பாய்வாக அமைந்தது. அவர் அங்கு நிலவிய சமயவழிபாட்டு முறைகள் பற்றிய பொதுமுடிவுகள் பலவற்றை எடுத்துக் கூறினார். புராணக் கதைகளுக்கும் சடங்குகளுக்கும் இடையிலான தொடர்புகள், மந்திர உச்சாடனங்களிலும் சொற்களிலும் உறையும் சக்தி என்பன பற்றி அவர் கூறியிருப்பவை கருத்தாழம் மிக்கவை.

சக்கரவர்த்தியும் சந்நியாசியும்

தம்பையா அவர்கள் 1976 இல் World conqueror and world Renouncer – சக்கரவர்த்தியும் சந்நியாசியும் என்ற நூலை வெளியிட்டார். இது முன்னைய நூலின் நோக்குமுறையில் இருந்து வேறுபட்டது. தம்பையா அவர்களே கூறியது போல் முன்னைய ஆய்வு, நிலத்தில் ஊரும் புழுவின் பார்வைக்கு (Worm’s eye view) ஒப்பானது என்றால், ‘சக்கரவர்த்தியும் சந்நியாசியும்’ நூல் வானில் பறக்கும் பறவையின் பார்வைக்கு (Bird’s eye view) ஒப்பானது. அது வரலாற்று இனவரைவியல் தரவுகளை ஆவணப்படுத்தும் சிக்கலான ஆய்வு. 550 பக்கங்கள் வரை விரியும் பெரும்படைப்பு. இந்நூலின் முக்கியமான கூறு ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

book7

அரச அதிகாரத்தின் இயல்பு 

தாய்லாந்தின் வரலாற்றில் இருவகையான அரசுகள் இருந்துள்ளன. ஒன்று மத்தியப்படுத்தப்பட்ட அரசு (Centralised State), இன்னொன்று மத்தியில் அதிகாரம் குவிக்கப்படாது சுற்றயல் பகுதிகளை நோக்கி அதிகாரம் பரவிச் செல்லும் அரசு ஆகும். இதனை ‘Centre Oriented’ அரசு என வேறுப்படுத்திக் குறிப்பிடலாம். தாய்லாந்தின் மரபுவழிச் சமூகத்தில் அரசு, நிலையான ஒரு மத்தியையும் (Fixed Centre) வரையறை செய்யப்பட்ட வெளி எல்லைகளையும் உடையதாக இருக்கவில்லை. சுருங்கியும் விரிந்தும் (Pulsating) மாறிக் கொண்டிருக்கும் எல்லைகளைக் கொண்டனவாய், மத்தியில் அரசு அதிகாரம் கொண்டவையாய், பல அரசுகள் அங்கே ஒரே சமயத்தில் இருந்தன. அவை எழுச்சியும் பின்னர் வீழ்ச்சியும் அடைவனவாய் இருந்தன. தொடர்ச்சியாக உறுதியற்ற அரசியல் சூழல் நிலவும் பின்னணியில், வெற்றிவீரன் ஒருவன் அரசியல் வானின் ஒரு மூலையில் இருந்து திடீரென வெளிப்படுவான். அந்த வீரபுருஷன் பல பிராந்தியங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விஸ்தாரமான ஒரு நிலப் பகுதியில் தன் பேரரசை நிறுவுவான். ‘ஒரு குடைக்கீழ்’ விரிந்த பிராந்தியத்தில் தன் அதிகாரத்தை செலுத்தும் அச்சக்கரவர்த்தி, சுற்றயல் பகுதிகளிலும், தூரப்பகுதிகளிலும், ஒருபோதும் தனது முழுமையான அதிகாரத்தை வைத்திருப்பதில்லை. அப்பகுதிகளில் அவன் சடங்கியல் அதிகாரத்தை (Ritual Dominion) கொண்டிருப்பான். சக்கரவர்த்தி என்ற சொல்லின் முற்பகுதியில் உள்ள ‘சக்கரம்’ என்ற சொல் ‘சக்கரத்தைச் சுழற்றும் பேரரசன்’ (Wheel Rolling Emperor) எனும் கருத்துடைய சொல் ஆகும். ‘சக்கரத்தை சுழற்றும்’ எனும் இப்பௌத்தப் புனைவு அக்கால அரசு அமைப்பை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது. இலங்கை வரலாற்றிலும் இதனையொத்த அரசு முறைகள் இருந்தமை புலனாகிறது. துட்டகைமுனு இலங்கையின் தென்மூலையில் இருந்த உருகுணையில் இருந்து தோன்றியவன். அவன் வெற்றிமிடுக்கோடு படைநடத்தி வந்து அனுராதபுரத்தைக் கைப்பற்றினான். ‘ஒரு குடைக் கீழ்’ முழுநாட்டையும் கொண்டுவந்து ஆட்சிபுரிந்தான். 

அரசும் சமயமும்

காலத்திற்குக் காலம் ‘ஒரு குடைக்கீழ்’ ஆண்ட அரசர்கள் பௌத்த சங்கத்தை வலுப்படுத்தல், பொருளாதார ஒருங்கமைப்பை வலுவுடையதாக்குதல் என்ற இரண்டு விடயங்களிலும் கவனம் செலுத்தினர். இவர்களது எழுச்சியும் வீழ்ச்சியும் அமைந்த போக்கிலேயே பௌத்த சங்கத்தின் வளவாய்ப்புக்களும், பெருக்கமுற்றும், இடையிடையே தேய்வுற்றும் தாழ்வுற்றும் ஏற்ற இறக்கங்கள் உடையதாகச் சென்றது. ‘சங்க’ மீது சக்கரவர்த்திகள் செலுத்திய செல்வாக்கு எதிர்முரண்களின் சேர்க்கையாய் அமைந்தது. ‘சங்க’வின் படித்தர அதிகார வரன்முறையை (Hierarchical Authority) அரசன் பலப்படுத்தினான். அதேவேளை ‘சங்க’வை களையெடுத்துத் தூய்மைப்படுத்தும் (சாசன விசிசோதன) செயலையும் அரசன் நிறைவேற்றினான்.

நவீன காலத்து அரசு முறையின் தோற்றம் 

மேற்குறிப்பிட்ட மாதிரி அரசில் மத்தியில் சடங்கியல் அதிகாரம் (Ritual Dominion) இருக்கும். ஆயினும் அவ்வரசு வரையறுக்கப்பட்ட எல்லைகளையுடைய மத்தியப்படுத்தப்பட்ட அரசாக (Centralised State) இருப்பதில்லை. இத்தகைய அரசு முறைக்கு மாறுபட்ட மத்தியப்படுத்தப்பட்ட அரசினை, தாய்லாந்தின் ‘சக்கிரி வம்ச’ அரசர்கள் (‘Chakri Kings’) 19 ஆம் நூற்றாண்டில் பாங்கொக் நகரை மத்தியாகக் கொண்டு நிறுவினர். அவ்வாறான மத்தியப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தை கொண்ட அரசர்களுக்கு உதவும் அலுவலர் குழுவை (Bureaucracy) உருவாக்கும் தேவை உண்டானது. இவ்வாறு உருவாக்கப்பட்ட அலுவலர் ஆட்சிக்குழு நவீனமானதும், அறிவுசார் பண்புடையதுமாகும் (Modern and Rational) என்பதை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். அலுவலர் ஆட்சி மூலம் தாய்லாந்தின் முழுமையும் அரச நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அரசின் ஆதரவுடன் கிராமிய அபிவிருத்தித் (Rural Development) திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இவ் அபிவிருத்தித் திட்டங்களை பழங்குடி மக்கள் வாழும் பின்தங்கிய பகுதிகளில் பௌத்த பிக்குகள் தலைமை தாங்கிச் செயற்படுத்தினர். இப்பழங்குடிகள் பௌத்த சமயத்தினராக இருக்கவில்லை. அரசு ‘Centre Oriented’ என்ற நிலையில் இருந்து மத்தியப்படுத்தப்பட்ட அரசாக மாறிய நிலையில் சிறுபான்மையினர் வாழ்வியலில் அரசின் தாக்கம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஊகித்து உணரலாம். இச்சிறுபான்மையினர் அனுபவித்து வந்த பண்பாட்டுச் சுதந்திரத்தை (Cultural Autonomy) இழந்தனர், மத்திய அரசும் அம்மக்களுக்குப் பண்பாட்டுச் சுதந்திரத்தை வழங்கத்தயாராகவும் இருக்கவில்லை. ‘சக்கரவர்த்தியும் சந்நியாசியும்’ நூலின் மூலம் தம்பையா வெளிக்கொணர்ந்த இந்த விடயத்தை அவர் பின்னர் இலங்கை பற்றிய ஆய்வுகளில் தெளிவுபடுத்தினார்.

வனவாசிகளான துறவிகள்

பேராசிரியர் தம்பையாவின் முதலாவது ஆய்வு, தாய்லாந்தின் கிராமப்புறத்தை ஆதாரமாகக் கொண்டது. அவரது இரண்டாவது ஆய்வு அரசுத்தலைநகரான பாங்கொக் நகரை மையமாகக் கொண்டது. மூன்றாவது ஆய்வு காட்டில் வாழும் பௌத்த ஞானியர்களையும் துறவிகளையும் பற்றியது. அந்நூலின் தலைப்பு ‘Buddhist Saints of the forest and the cult of The Amulets’ (1984) ‘வனவாசிகளான பௌத்த துறவிகளும் மந்திர சக்தியுடைய தாயத்துகளை அணியும் வழிபாட்டு முறைகளும்’ என இதன் பொருளை விரித்துக் கூறலாம் (கழுத்தில் தொங்கவிடப்படும் தாயத்துக்களை இலங்கையில் ‘அட்சரக் கூடு’ எனவும் குறிப்பிடுவர்). இந்நூல் தாய்லாந்தின் அரசியல் சமூகத்தை (Political) விரிந்தவோர் தளத்தில் வைத்து ஆராய்கிறது. அரசின் அதிகாரமையம், மக்கள், தாய்லாந்தின் ‘சங்க’ அமைப்பின் முக்கிய கிளையான வனவாசிகளான பிக்குகள் ஆகிய மூன்று விடயங்களையும் உள்ளடக்கியதாக இது அமைகிறது. ஞானியர்களின் வாழ்க்கை வரலாறு, உலகைத் துன்பத்தில் இருந்து மீட்கும் அவதாரங்களின் யுகமாற்றம் (Millennialism), உபாசனையாலும் தியானத்தாலும் பௌத்த துறவிகளிடம் தோன்றும் புதிரானதான மந்திரசக்தி என்பனவும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. உலகைத் துறந்தவர்களான ஞானிகளுக்கு மந்திர சக்தியால் கிடைக்கக் கூடிய பயன் ஏதும் இல்லை. ஏனெனில் அவர்கள் உலக இன்பங்களையும் சொத்துச் சுகங்களையும் துறந்தவர்களாவர். ஆயினும் இவை உலகில் வாழும் ஏனைய மக்களுக்கு நன்மைபயப்பவை. இம்மக்கள் துறவிகளுக்கு உணவும், உடையும், உறையுளும் வழங்கி அவர்களைப் பாதுகாப்பதன் மூலமும், ஞானியரான துறவிகளால் வழங்கப்பட்ட தாயத்துகளை (Amulets) அணிவதாலும், வைத்திருப்பதாலும் நன்மையைப் பெறலாம்.

தாய்லாந்தின் பழங்குடிகள்

தாய்லாந்தின் விண்ணைத் தொடும் மலைப்பகுதிகளில் வனவாசிகளான பிக்குகள் வாழ்கின்றார்கள். அம்மலைகளின் கீழே உள்ள பள்ளத்தாக்குகளின் அடர்த்தியான காடுகளுக்குள் கிளர்ச்சியாளர்கள் ஒழிந்து வாழ்கிறார்கள். வனவாசிகளான பிக்குகளின் ஆசியைப் பெறுவதற்கும் மந்திரசக்தியுடைய தாயத்துக்களைப் பெறுவதற்குமாக நகரத்தில் வாழும் உயர் குழாத்தினரான இராணுவ அதிகாரிகள், வங்கியாளர்கள் ஆகியோர் கடினம் மிக்க பயணத்தை மேற்கொள்வர். தாய்லாந்தில் தேரவாத பௌத்தம் பரவிய போது அதன் தூய்மைவாத நடைமுறைகளும் அங்கு புகுந்தன. பௌத்தம் பரவுவதற்கு முந்திய காலத்து மந்திர- தந்திர வழிபாட்டு முறைகள் தூய்மையற்றவை என ஒதுக்கப்பட்டன. அவ்வழிபாட்டு முறைகள் காடுகளை நோக்கிச் சென்று அடைக்கலம் தேடின. அச்சமயநெறிகள் தாய்லாந்தில் நிழல்போன்று தொடர்வதோடு, மீண்டு எழவும் முயற்சிக்கின்றன. தாயத்துக்களை அணிவதால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என நம்பப்படுகிறது. அதன் மூலம் பழைய இரசவாத வித்தைகள் (Alchemy) மீள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. தூய்மையான பௌத்த நெறிமூலம் மன அமைதியைத் தேடலாம் எனக் கருதுவோர் இவற்றை நிராகரிக்கின்றனர்.

அவதார புருஷர் கிளர்ச்சி இயக்கம்

அவதார புருஷர்களால் நடத்தப்படும் கிளர்ச்சி நடவடிக்கைகளில் மந்திர சக்தியுடைய தாயத்துக்களுக்கும் பங்கு உண்டு. தென்கிழக்கு ஆசியாவின் அவதார புருஷர் கிளர்ச்சி இயக்கம்  (Millennialism) பற்றிய பொதுவான பரிசீலனையுடன் நூலின் இறுதி அத்தியாயத்தை தம்பையா நிறைவு செய்கிறார். இப்பரிசீலனையின் மீது சமூகவியல் உயர் ஆய்வுகள் மூலம் முன்வைக்கப்பட்ட மூன்று எண்ணக்கருக்களைத் தம்பையா வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார்.

அவையாவன:

  • மார்சல் மோஸ் (Marcel Mauss) குறிப்பிட்ட ‘மனா’ என்ற எண்ணக்கரு. மோஸ் பொலினீசியாவின் பழங்குடி மக்களின் பண்பாடுகளின் மந்திரசக்தி சார்ந்த நடைமுறைகளை ‘மனா’ என்று குறிப்பிட்டார்.
  • கார்ல்மார்க்ஸ் குறிப்பிட்ட பொருண்மையாக்கம் (Fetishism) என்ற எண்ணக்கரு.
  • மக்ஸ்வெபரின் கவர்ச்சி ஆளுமை (Charisma).
book5

மேற்குறித்த மூன்று கருத்துக்களையும் தம்பையா தெளிவாக விளக்குகிறார். இவற்றுள் மூன்றாவதான மக்ஸ்வெபரின் கவர்ச்சி ஆளுமை (Charisma) பற்றி விளக்கும்போது தாயத்துகளின் மந்திரசக்தி கவர்ச்சி ஆளுமையில் புறநிலையாக வெளிப்படுவதை (Objectification of Charisma) தம்பையா எடுத்துக்காட்டுகிறார். இது மக்ஸ்வெபரால் கூறப்படாத விடயம். நிறுவனக் கட்டமைப்புகளில் மந்திரசக்தி புறநிலை வடிவம் பெறுவது விளக்கப்பட்டுள்ளது.

தம்பையாவின் உயர்தரமான கோட்பாட்டு ஆய்வுகளைத் தெரிந்துகொள்வதற்கு அவரது கீழ்குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் துணை செய்யும்.

  • Magic Science Religion and the Scope of Rationality (1990)
  • Edmond Leach: an Anthropological Life (2002)
  • Bride Wealth and Dowry (1973)
book2

இறுதியாகக்குறிப்பிட்ட நூல் (மணப் பெண்ணிற்கு கொடைவழங்கலும் சீதனமும்) Jack Goody என்ற மானிடவியலாளருடன் இணைந்து எழுதியது.

இரத்த உறவுமுறையும் நில உரிமையும் 

இலங்கை பற்றிய தம்பையாவின் ஆய்வுகளை இருவேறு காலப்பகுதிக்குரியவையாகப் பிரித்து நோக்கலாம். முதற் காலப்பகுதியில் அவர் இரத்த உறவுமுறை (Kinship) பற்றி ஆராய்ந்தார். இலங்கையின் மத்திய மாகாணப் பகுதிகளில் நிலவிய பல்கணவ முறை (Polyandry) என்ற வழக்கத்திற்கும் சிற்றுடமையாளர்களின் நில உரிமைக்கும் (Land Ownership) இடையே உள்ள தொடர்பை இவ் விடயம் குறித்த ஆய்வில் தம்பையா தெளிவுபடுத்தினார். இலங்கையில் உறவு முறை பற்றி அவர் எடுத்துக் கூறிய பல விடயங்களில் இது முக்கியமானதாகும். நிலங்கள் துண்டாடப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இலங்கையின் சிற்றுடமையாளர் சமூகத்தில் பல்கணவ மணம் நிலவியது என்பதை அவர் எடுத்துக்காட்டினார். உறவுமுறை பற்றித் தம்பையா எழுதியவை சிறு நூல்கள் என்ற வகையினவே. ஆயினும் அந்நூல்களின் அறிவுலகத்தாக்கம் பெரிது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானிடவியலாளர் எட்மன்ட் லீச் இலங்கையின் நிலஉரிமை முறை பற்றி திருப்பு முனையாக அமைந்த நூலை எழுதினார். அதுவரை காலமும் உறவு முறையை சுயத்துவமானதாக (Autonomy of Kinship) நோக்கும் மரபு மானிடவியலாளர்களிடம் வேரூன்றியிருந்தது. ரலென்சி (Tallensi) எனும் மானிடவியலாளரும், கேம்பிரிட்ஜிஜை சேர்ந்த இன்னொரு மானிடவியலாளரான மெயர் ஃபோரெஸ் (Meyer Fortes) என்பவரும் உறவுமுறையின் சுயத்துவத்தை எடுத்துக் கூறியவர்கள். இப்பின்னணியில் எட்மண்ட் லீச் எழுதிய ஆய்வு நூல் புதுமையானது.

லீச், தம்பையாவைப் போன்றே நில உரிமையை முதன்மையானதாகவும், உறவு முறையை அதற்குத் துணையான இரண்டாம் நிலை அம்சமாகவும் விளக்கினார்.

சனக்கும்பல்களின் கூட்டுவன்முறை

book3

பேராசிரியர் தம்பையாவின் இலங்கை பற்றிய முதற்கட்ட ஆய்வுகள் அவரை சமூகப்பிரச்சினைகள் அரசியல் என்பனவற்றினை சார்பு எதுவும் இன்றி நோக்கும் அறிஞராக எடுத்துக்காட்டின. இரண்டாவது கட்டத்தின் ஆய்வுகள் சமூக அக்கறை என்ற இலட்சியத்தை வெளிப்படுத்துவனவாயும், அவருக்கு அறிவுலக மதிப்பைத் தேடித்தந்தனவாகவும் அமைந்தன. 1996 இல் வெளியான Levelling Crowds: Ethno-Nationalist Conflicts and Collective Violence in South Asia (தரைமட்டமாக்கும் சனக்கும்பல்களின் கூட்டுவன்முறை) என்னும் தலைப்பிலான தென்னாசியாவின் இனக்குழும முரண்பாடுகளும் வன்முறைகளின் புதிய வடிவங்களும் பற்றிய ஆய்வு குறிப்பிடத்தக்கதொன்று. இது போன்ற பெருநூல்களை தம்பையா இரண்டாம் காலகட்டத்தில் எழுதினார். தம்பையாவின் சமூக அக்கறை என்ற இலட்சியம் அவர் வெளியிட்ட இரு நூல்களில் சிறப்பாக வெளிப்பட்டன.

1. Ethnic Fratricide and Dismantling of Democracy (1986) (இந்நூல் இலங்கையில் சகோதர இனக்குழுமப் படுகொலை (Ethnic Fratricide), ஜனநாயக நிறுவன அமைப்புகளைக் குலைத்தல் (Dismantling of Democracy), ஆகிய இரு விடயங்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வது.)

2. Buddhism Betrayed & Religion, Politics and Violence in Sri Lanka (1992) (பௌத்தத்திற்கு துரோகம் ?)

இவ்விரு நூல்களும் வெளியாகிய காலத்தில் இலங்கையில் இனக்குழுமங்கள், சமயப்பிரிவுகள் என்பனவற்றிடையே நிலவிய உறவுகளும், அக்கால அரசியல் நிலையும், தம்பையாவைச் சர்ச்சைக்குரிய ஒருவராக ஆக்கின. 1992 ஆம் ஆண்டு வெளியான அவரது நூல் தடை செய்யப்பட்டது.

1986 இல் வெளியான ‘Ethnic Fratricide and Dismantling of Democracy’ நூல் இலங்கையில் கிடைத்தற்கரிய நூலாகியது.

book6

ஜனநாயக நிறுவன அமைப்புகளைக் குலைத்தல் 

இலங்கையில் பண்டைய வரலாற்றுக்காலம் முதல் இருந்து வரும் சமய இனக்குழும வேறுபாடுகளே இன்றைய இனக்குழும முரண்பாடுகளுக்குக் காரணம் என்ற கருத்தைத் தம்பையா நிராகரித்தார். சகோதர இனக்குழுமப் படுகொலையும் ஜனநாயக நிறுவன அமைப்புக்களைத் குலைத்தலும் பற்றிய அவரது நூலில், அண்மைக்காலத்தில் உருவான பின்வரும் பிரச்சினைகள் இனமுரண்பாடுகளை வளர்த்தன என அவர் கூறுகிறார்.

  • பொருளாதார வளர்ச்சிக்குலைவும், தேக்கநிலையும்.
  • வேலையின்மைப் பிரச்சினையும் வருமானத்தின் சமத்துவமற்ற பங்கீடும்.
  • சனத்தொகை வளர்ச்சியின் போக்கு.
  • சமூகத்தில் மேலாதிக்கம் பெற்ற குழுக்களால் பக்கச் சார்புடைய மூலங்களை ஆதாரமாகக்கொண்டு விமர்சன நோக்கற்ற முறையில் எழுதப்படும் எழுத்துக்கள்.
  • அரசு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்தல்.

1986 இல் எழுதப்பட்ட இந்நூலை இன்று திருப்பி வாசித்துப் பார்க்கும் போது, சகோதர இனப்படுகொலையும், ஜனநாயக நிறுவன அமைப்புக்களைக் குலைத்தலும், ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல்வன என்னும் அவரது கூற்று தீர்க்க தரிசனம் மிக்கது என்பது தெளிவாகியது. அவரின் நூல் வெளிவந்த 20 ஆண்டு கால இடைவெளியில் ஜனநாயக அமைப்புகள் எவ்வாறு வெறிஉணர்வுடன் குதறப்பட்டன, ஜனநாயகத்தின் தூண்கள் எனக் கருதப்பட வேண்டியவை எவ்வாறு திட்டமிட்ட முறையில் சரித்து வீழ்த்தப்பட்டன என்பதை அன்று யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. அவ்வகையில் தம்பையா ஒரு தீர்க்கதரிசியாகவே விளங்குகிறார்.

book4

தம்பையாவின் ‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ நூலைப் படித்துப் பார்க்காமலே குரோத உணர்வுடன் கண்டனங்கள் வெளியிடப்பட்டன. அந்நூலின் முகப்பு அட்டையில் பௌத்தகுரு ஒருவர் மேடைச் சொற்பொழிவாற்றும் தோரணையில் ஒரு படம் போடப்பட்டிருந்தது. முகப்பு அட்டையையும் நூலையும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டே தவறான முடிவுக்கு வந்தோர் இவ்வாறு கண்டனங்களைச் செய்தனர். ‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ நூலில் தம்பையா இலங்கையின் பௌத்த நெறியின் இருவேறுபட்ட போக்குகளை விளக்கியிருந்தார்.

  1. பௌத்தத்தின் அறவிழுமியங்களை வெளிப்படுத்தும் வகையிலான பௌத்த பனுவல்களில் வெளிப்படும் பௌத்த நெறி முதலாவது போக்காகும்.
  2. பௌத்த குருமார்களால் எழுதப்பட்ட வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு, பௌத்த சமயத்தைச் சிங்கள இனத்துடனும், இலங்கைத் தீவுடனும் இணைத்தும், அவை இரண்டில் இருந்தும் பிரிக்க முடியாத ஒன்றாகவும் அடையாளப்படுத்துதல். இவ்வாறு அடையாளப்படுத்தியதோடு, பௌத்தத்தைப் பாதுகாத்தல் இலங்கை அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட கடப்பாடு எனச் சித்திரிக்கும் வகையிலான பௌத்த நெறி ஒன்று வளர்க்கப்பட்டது. இதனை இரண்டாவது போக்கு என தம்பையா குறிப்பிட்டார்.

‘பௌத்தத்திற்கு துரோகம்?’ நூல் பற்றிய சர்ச்சை  

19 ஆம் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் முதலாவது வகை பௌத்த நெறியை வளர்க்கும் உள்ளாற்றலைக் கொண்டிருந்தது. ஆயினும் அம்மறுமலர்ச்சி இயக்கம் அப்பணியைச் செய்யத் தவறியது மட்டுமல்லாது, இரண்டாவது வகைப் பௌத்த நெறியை முதன்மைப்படுத்தியது. இதனால் பௌத்த அறம் சார்ந்த ஒழுக்க நெறி என்பது கைவிடப்பட்டது. பௌத்தம் அரசியல், பண்பாடு என்பன சார்ந்த பெறுமதிமிக்க உடைமைப் பொருளாகக் கொள்ளப்பட்டது. அத்தகையதொரு பண்பாட்டுச் சொத்துப் பற்றிய சடங்குகள் நடத்தப்படலாயின. அது பகிரங்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பெருமை பேசல், விழாக்களை நடத்தி கொண்டாடுதல், தொலைக்காட்சி மூலம் பிரசாரப்படுத்தல், உலக சமூகத்திற்குரிய ஏற்றுமதிப் பொருள் ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பௌத்தம் போற்றிய அறநெறிகளைப் பின்பற்றி வாழ்தல் தவிர்க்கப்பட்டது. இரண்டாவது போக்கின் வழிச்சென்றோர் பின்வரும் நடவடிக்கையில் ஈடுபட்டதையும் தம்பையா எடுத்துக்காட்டினார்.

  • பௌத்தத்தை ஒரு இனக்குழுமத்துடன் அடையாளப்படுத்தல். இலங்கை பௌத்தர்களுக்கே உரிய நாடு என்ற கருத்தைப் பிரசாரப்படுத்தல்.
  • ஏனைய இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்களை இரண்டாவது பிரஜைகளாகத் தரம் குறைத்தல்.

மேற்குறித்த இரு நடவடிக்கைகளும் பௌத்தம் யாவரையும் உள்ளடக்கும் சமயம் என்ற உண்மையை மறைப்பன. பௌத்த சமயத்தின் வரலாற்றை எடுத்து நோக்கினால், இலங்கைக்குப் புதிதாகக் குடிபெயர்ந்து காலத்திற்குக் காலம் வந்து சேர்ந்தவர்களின் பண்பாடுகளை அரவணைத்தும், உள்ளீர்த்தும் அம்மக்களை சமத்துவமான பிரஜைகளாகவும், நாட்டின் பங்காளிகளாகவும் ஆக்கியமை தெளிவாகும். இதனை இன்றுவரை வழக்கில் உள்ள நாட்டார் சடங்குகள் உணர்த்தி நிற்கின்றன. மானிடவியலாளர் கணநாத் ஒபயசேகர இவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.

‘பௌத்தத்திற்குத் துரோகம்?’ தடை செய்யப்படவேண்டிய நூல் அன்று. நாட்டுப்பற்று என்ற செய்தி அந்நூலில் உள்ளடங்கியுள்ளது. படித்த இலங்கையர் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. 1960 களிலும் 1970 களிலும் சுதேசியப் பண்பாட்டை வலியுறுத்திய தேசிய வாதம், ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு மேலோங்கியிருந்தமை ஆகியவற்றை தம்பையா ஏற்றுப்பாராட்டுகிறார். இதனை அவரது கண்டனக்காரர்கள் இந்நூலைப் படிப்பதால் மட்டுமே உணரமுடியும். தம்பையா இலங்கையில் பன்மை இனக்குழுமப் பண்பாட்டையும் (Pluralist Culture), அதற்குள்ளே பௌத்த அடையாளம் முதன்மை பெற்றிருப்பதையும் இலட்சியக் கனவாகக் கொண்டவர். அவரது நூலில் வெளிப்படும் சிந்தனைகளை மார்ட்டின் விக்கிரமசிங்க போன்ற சிந்தனையாளர்களின் கருத்துக்களிற்கு நெருக்கமானதாகக் கூறலாம். அவரைப் பிரிவினைவாதி எனவும், புலி எனவும் முத்திரை குத்துவது அறிவீனம். அது ஒரு அபத்தமான குற்றச்சாட்டும் ஆகும்.

20 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தலை சிறந்த புலமையாளர்களில் தம்பையாவும் ஒருவர். அவர் கூருணர்வு மிக்கவராகவும், மனிதாயவாதியாகவும் விளங்கினார். அவரின் இழப்பு அறிவுலகத்திற்குப் பேரிழப்பாகும். அவருடைய கூரறிவு, நகைச்சுவை, தாராள மனப்பாங்கு, பணிவும் அடக்கமும் ஆகியன பற்றி அவரோடு நட்புறவு பூண்டு பழகிய அறிஞர்களும், நண்பர்களும் அறிவர். அவரின் மறைவு எல்லோருக்கும் பேரிழப்பு ஆகும்.

நன்றி: Colombo Telegraph (25 Jan 2014)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6006 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (13)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)