Arts
15 நிமிட வாசிப்பு

18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : நிலமும் உழைப்பும் சமூக உறவுகளும் – பகுதி 3

August 4, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

ஆங்கில மூலம்: பேராசிரியர் சி. அரசரத்தினம்

1674 ஆம் ஆண்டு டச்சுக்காரர் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளினதும் காணிகளின் உடைமையாளர்கள் பற்றிய பதிவினை மேற்கொண்டனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். இக்காணிப் பதிவு நடவடிக்கையின் பயனாக 12,000 குத்தகைக்காரர்களின் (Tenants) கணக்கை வேளாளத் தலைமைக்காரர்களால் காண்பிக்க முடியவில்லை. குத்தகைக்காரர்களின் பெயரில் தலைமைக்காரர் காணிகளைத் தமக்கு சொந்தமாக்கி பயனை அனுபவித்தனர் என்பது தெரியவந்தது. காணிப் பதிவு நடவடிக்கையினால் ஏற்பட்ட கசப்புணர்வைப் பயன்படுத்தி வேளாளத் தலைமைக்காரர்கள் விவசாயக் குடிமக்களை டச்சுக்காரருக்கு எதிராகக் கலகம் செய்யும்படி தூண்டிவிட்டனர். அவர்கள் இவ்விதம் விவசாயக் குடியான்கள் மீது தமக்கிருந்த செல்வாக்கை வெளிப்படுத்தினர். இதற்குப் பின்னர் டச்சுக்காரர் வேளாளத் தலைவர்களுடன் முரண்படாமல் கவனமாக நடந்து கொண்டார். வேளாளர்களின் அதிகாரத்தைத் தட்டிக்கேட்க டச்சுக்காரர் துணியவில்லை. ஆயினும் டச்சுக்காரர் ஒரு சமூகப் பிரிவினரை இன்னொரு சமூகப் பிரிவினருக்கு எதிராக பலப்படுத்தும், பலவீனப்படுத்தும் சமன் செய்யும் (Balancing) தந்திரோபாயத்தை கைவிடாது தொடர்ந்தனர். போர்த்துக்கேயருக்கு ஆதரவாக இருந்தனர் என்ற காரணத்தால் டச்சுக்காரரின் சந்தேகத்திற்கு ஆளாகியிருந்த சமூகப் பிரிவினருக்கு டச்சுக்காரர் சலுகைகளை வழங்கும் நிலை உருவானது.  வேளாளர்களின் பலத்தை குறைத்துச் சமன் செய்வதற்காக டச்சுக்காரர் 1690களில் சுதேசத் தலைமைக்காரர் பதவி நியமனங்களை வேளாளருக்குப் போட்டியான சமூகப் பிரிவினருக்கு வழங்கினர். ஒரு உத்தியோகப் பதவியில் இரண்டு நியமனங்கள் செய்யப்பட்டால் அவற்றுள் ஒரு பதவியை வேளாளர் ஒருவருக்கும், இன்னொரு நியமனத்தை மடப்பள்ளி சமூகப் பிரிவினருக்கும் வழங்கினர். இவ்வாறாக கணக்கப்பிள்ளை, முதலியார் போன்ற அதிகாரம் மிக்க பதவிகள் சமூகப் பிரிவினர்களிடையே பகிரப்பட்டன. இக்கொள்கையை யாழ்ப்பாணம் முழுவதற்குமாக டச்சுக்காரர் செயற்படுத்தியபோது, வேளாளர் எதிர்ப்பைத் தூண்டிவிட்டு கலகத்தை விளைவித்தனர். மடப்பள்ளி சாதியினருக்கு பதவிகளை வழங்கியதால் வேளாளர்களால் ஏற்படுத்தப்பட்ட மோதல்களைத் தவிர்ப்பதன் பொருட்டு மடப்பள்ளியினருக்கான பதவி வழங்கல்களை டச்சுக்காரர் தற்காலிகமாகப் பிற்போட்டனர். மடப்பள்ளிகள் மட்டுமன்றி, பரதேசிகள், அகம்படியர், தனக்காரர், செட்டிகள் என்போரும் டச்சுக்காரர் காலத்தில் தலைமைக்காரர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களில் உள்ளடங்குவர். மேற்குறித்தவாறான தந்திரோபாயங்களை டச்சுக்காரர் கையாண்ட போதும், வேளாளர்கள் உயர் பதவிகளிலும், இரண்டாம் நிலைப் பதவிகளிலும் பெரும் பங்கைத் தமக்குரியதாக வைத்திருந்தனர். இவ்வுண்மையை ஆவணச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

நிலத்தை உழுது பயிர்செய்பவர்

முதலியார் என்ற பதவியை வகித்தவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. தமிழரசர் ஆட்சிக் காலத்தில் முதலியார் பதவி மிகவும் உயர்ந்த மதிப்புடைய பதவியாகக் காணப்பட்டது. காலனிய ஆட்சியாளர்கள் பலசமூகப் பிரிவினர்களுக்கும் முதலியார் என்ற நியமனத்தை வழங்கியதால் அந்தப் பதவிக்கான பெருமை குறைந்ததாக ஆதிக்கசாதியினர் கருதினர். தலைமைக்காரர் பதவிகளில் எவ்வெச் சமூகப்பிரிவினர் இருந்தனர் என்பதைப் புள்ளி விபரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 1760 ம் ஆண்டு டச்சுக்காரர் ஒருகுடிசனக் கணக்கெடுப்பை நடத்தினர். அப்போது முதலியார் பதவிகளில் இருந்தோர் தமது நியமனக் கடிதங்களை காண்பித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்கப்பட்டனர். இவ்வாறு நியமனக் கடிதங்களைப் பார்வையிட்டு நியமனங்கள் உறுதி செய்யப்பட்டபோது, யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 516 முதலியார்கள் இருப்பது தெரியவந்தது. சமூகப் பிரிவுகளின் படி இந்நியமனங்களின் தொகை பின்வருமாறு அமைந்தது. வேளாளர் (317), மடப்பள்ளி (127), செட்டி (37), பரதேசி (14), மலையாளி (10), கரையார் (6), சிவியார் (3), தனக்காரர் (2). இப்புள்ளிவிபரங்களின்படி வேளாளர்களே கூடிய எண்ணிக்கையான பதவிகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் பிற சமூகப் பிரிவினரைவிட அதிகாரம் மிக்கவர்களாக இருந்தனர் என்பதும் தெளிவாகிறது. அடுத்த நிலையில் மடப்பள்ளி என்ற சமூகப்பிரிவினர் விளங்கினர். இவர்களால் மட்டுமே வேளாளர் அதிகாரத்திற்கு அறைகூவல் விடுப்பதற்கு ஓரளவு இயல்வதாக இருந்தது. போர்த்துக்கேயர் காலத்தில் செல்வாக்கு உடையவர்களாய் விளங்கிய கரையார் சமூகப் பிரிவினரின் செல்வாக்கு பிரித்தானியர் காலத்தில் ஒப்பீட்டளவில் குறைந்ததையும் காணமுடிகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் இச்சமூகப் பிரிவினர் அதிகாரம் மிக்க பல பதவிகளில் இருந்தனர் என்பதை அறியமுடிகிறது. தென்னிலங்கையில் சிங்களவர் மத்தியில் கராவ சமூகப் பிரிவினர் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பகுதிகளின் கரையார் சமூகப் பிரிவினரைவிட பொருளாதார நிலையிலும், சமூக அந்தஸ்திலும் உயர்ந்து சென்றதையும் காண முடிகிறது.

வேளாளர் சாதியின் மேலாதிக்கம் அதிகரித்துச் சென்றதற்குரிய காரணத்தை விளங்கிக் கொள்வதற்கு நாம் அதன் உருவாக்கத்தின் இயல்பை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். வேளாளர் தம்மோடு பல சமூகப் பிரிவினரையும் சேர்த்துக் கொண்டு எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் ஆயினர். வேளார்கள் நிலத்தை உழுது பயிர்செய்பவர்களாகவும், நில உடைமையாளர்களாகவும் இருந்தனர். வருவயைத் திரட்டுதலை அடிப்படையாகக கொண்ட பதவிகளை வகிப்போராகவும் வேளாளர்கள் இருந்தனர்.வோளாண் தொழிலோடு தொடர்புடைய ஏனைய சமூகப் பிரிவினரையும் இணைத்துக் கொண்டு வேளாளர் சாதி விரிவாக்கம் பெற்றது.

தென்னிந்தியா போன்ற விரிந்த புவியியல் பிரதேசத்தில் இவ்வாறான ஒன்றிணைவு சாத்தியமாயிற்று. வேளாளரிடையே பல உபபிரிவுகள் இருப்பது இத்தகைய ஒன்றிணைவு ஏற்பட்டதை எடுத்துக் காட்டுகிறது. வெவ்வேறு சாதிகள் என அடையாளம் காணப்பட்ட சமூகப்பிரிவுகள் பல உழுதுபயிரிட என்ற தொழில் அடிப்படையில் வேளாளர் என்ற பொது அடையாளத்தில் ஒன்றிணைந்தன. அத்தோடு யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியால் ஏற்பட்ட குழப்பநிலையின் போது கலப்பு சாத்தியமானது. புதிதாக வந்து குடியேறிய தனிநபர்களும், சமூகக் குழுக்களும் யாழ்ப்பாணத்தில் குடியிருப்புகளை ஏற்படுத்தியபோது முயற்சியடையவர்களாகவும்,உழைப்புத் திறன் மிக்கவர்களாகவும் விளங்கிப் பொருளாதார நிலையிலும், சமூக அந்தஸ்திலும் உயர்நிலையைப் பெற்றனர்.காலப்போக்கில் பழமையான வேளாளர் குடும்பங்களுடன் திருமண உறவால் இவர்கள் கலப்புற்றனர். வேளாளர் என்ற புதிய அடையாளமும் கிடைத்தது. வேளாளரிடை ‘தூய இரத்தம்’ என்ற ’தூய்மையும் துடக்கும்’ கருத்தியல் அக்காலத்தில் இருக்கவில்லை. இதனால் ஏனைய சமூகக் குழுக்களை இணைத்துக் கொள்வதில் தடையிருக்கவில்லை. இக்கலப்பு இயல்பான ஒன்றாக இருந்தது.

பழைய மரபின்படி வேளாளரை வெளியே இருந்து வந்தோர் என்ற கருத்தில் ‘பரதேசிகள்’ என்று கூறும் வழமை இருந்தது. மடப் பள்ளி, அகம்படியர், தனக்காரர், செட்டி, மலையாளி என்னும் சமூகப்பிரிவுகளும் காலப்போக்கில் வேளாளர்களுடன் ஒன்றிணைந்தன. நவீனகால யாழ்ப்பாணத்தில் மேற்குறித்த சமூகப் பிரிவுகள் அடையாளம் தெரியாது மறைந்துவிட்டன.

யாழ்ப்பாணத்தில் பிராமணர்:

 பிராமணர்

பிராமண வைதிகக் கருத்தான தூய்மையும் துடக்கும் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி இருந்திராதது மேற்குறித்தவாறு சமூகக் குழுக்கள் ஒன்று கலப்பதை சாத்தியமாக்கியது. யாழ்ப்பாணத்தில் பிராமணர் குடும்பங்கள் மிக அரிதாகவே காணப்பட்டன. இங்கு குடியேறிய பிராமணர்களும் கோவில் பூசகர்களாக, நில உடைமையாளர்களான உழுகுடிகளின் தலைவர்களின் கோவில்களில் பணி செய்வோராகவே இருந்தனர். பெரும்பான்மையான கோவில்களின் முகாமையாளர்களாக வேளாளர் விளங்கினர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகிய இரு அந்நியர் ஆட்சியின்போது கோவில்களுக்கு அரச ஆதரவு கிடைக்கவிலை. கோயில் வழிபாடும் சடங்குகளும் இரகசியமாக நடத்தப்பெற்றன. ஆகையால் சாதி அந்தஸ்து, சடங்கியல் தூய்மை ஆகியன கோவில் வழிபாட்டிலும் சடங்குகளிலும் முக்கியம் பெறவில்லை. பொருளாதாரக் காரணிகளே சாதி உறவுகளில் முக்கியம் பெற்றன.

நெல் உற்பத்தி:

குறிப்பிட்ட சில பொருளாதாரத் துறைகள் சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகள் 18 ஆம் நூற்றாண்டில் வேளாளர் ஆதிக்கம் மேலோங்கக் காரணமாயிற்று. சில விவசாயப் பயிர்களின் உற்பத்தி இலாபம் தருவதாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அரிசியின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து சென்றது. குறிப்பாக ஆந்திரா, தமிழகத்தின் கிழக்குக் கரையை அண்டிய பகுதியான கர்நாடகம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக போர்கள் இடம் பெற்ற காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு அரிசி இறக்குமதி செய்வது தடைப்பட்டது. போர்ச் சூழலால் ஏற்பட்ட குழப்பநிலை இதற்குக் காரணமாயிற்று. ஏறக்குறைய 50 ஆண்டு காலத்திற்குள் யாழ்ப்பாணத்தில் அரசியின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தது. இதனால் தமது நுகர்வுத் தேவைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யக்கூடிய யாழ்ப்பாண விவசாயிகள் திறந்த  சந்தையில் நெல்லை விற்பனை செய்து இலாபம் ஈட்ட முடிந்தது. யாழ்ப்பாணத்திற்குத தெற்கே வன்னியில் வேளாளர்களுக்கு நிலங்கள் உடைமையாக இருந்தன. இவ்வயல்களின் உற்பத்தியை யாழ்ப்பாணத்திற்குக்கொண்டு சென்று அங்கு விற்பனை செய்யமுடிந்தது. அரிசி தமிழர்களின் பிரதான உணவாகும். அரிசியின் விலை உயர்வு விவசாயத்தோடு தொடர்பற்ற சாதிகளின் வாழ்க்கையைப் பாதித்தது, இதனால் அச்சாதியினர்களில் பலர் விவசாயத்தை துணைத்தொழிலாக மேற்கொள்ளத் தொடங்கினர். இக்காரணத்தால் காணிகளின் விலை உயர்ந்தது. நில உடைமையாளராக இருந்த வேளாளர்கள் காணிகளின் விலை உயர்வால்  நன்மை பெற்றனர்.

புகையிலை உற்பத்தி:

புகையிலை உற்பத்தி

வேளாளரின் செல்வச் செழிப்பின் அடையாளமாக விளங்கிய இன்னொரு உற்பத்திப் பண்டமாக புகையிலை அமைந்தது. புகையிலைச் செய்கைக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களின் அளவு அதிகரித்தது. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்து புகையிலை ஒரு காசுப்பயிராக யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டு வந்தது. புகையிலை யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட புகையிலையின் பெரும்பங்கு மலையாளக் கரைப் பகுதிக்கு ஏற்றுமதியாயிற்று. 1740 களில் திருவிதாங்கூர் அரசு வலிமைமிக்க அரசாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட அரசாகவும் எழுச்சி பெற்றது. திருவிதாங்கூர் அரசு யாழ்ப்பாணப் புகையிலை வர்த்தகத்திற்கு பெரும் ஊக்குவிப்பாகச் செயற்பட்டது. மலையாளத்தில் புகையிலைக்கான கேள்வி அதிகரித்தது. யாழ்ப்பாணப் புகையிலையின் விலை உயர்ந்து சென்றது, தரகர்கள் புகையிலை உற்பத்தியாளர்களுக்கு முற்பணம் கொடுத்து, அறுவடை செய்யப்பட்ட புகையிலைக்கு உடன் சந்தை வாய்ப்பை வழங்கினர். யாழ்ப்பாணத்தில் அதுவரை காலமும் வேறு பயிர்கள் விளைவிக்கப்பட்ட காணிகளில், விவசாயிகள் புகையிலையைப் பயிரிட ஆரம்பித்தனர். புகையிலைப் பயிரினால் கூடிய பயனை அவர்களால் பெற முடிந்தது. புகையிலை உற்பத்தியின் முன்னேற்றம் தொடர்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் சில உள்ளன.

  • புகையிலை சிற்றுடமையாளர்களின் பயிராக இருந்தது.
  • இதனைப் பயிரிட்டோர் குடியான் விவசாயிகள் (Peasant Farmers) ஆவர்.
  • அதுவரை காலமும் பிழைப்பூதிய நிலையில் (Subsistent Level)வாழ்ந்த விவசாயிகளுக்கு காசுப்பயிரான புகையிலையின் உற்பத்தி காரணமாக குறிப்பிடத்தக்க அளவு பணம் கிடைத்தது.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து மலையாளத்திற்கு 2 மில்லியன் இறாத்தல் புகையிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆண்டுதோறும் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு லட்சம் ரூபா வரை முற்பணமாகப் பெற்றனர் எனவும், மொத்தமாக 2 லட்சம் ரூபா வரை ஆண்டு வருமானமாகக் கிடைத்தது எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவோர் முக்கியமான மாற்றமாகும்.

பனம்பொருள் உற்பத்தி:

பணவருவாயைப் பெற்றுக் கொள்வதற்கான இன்னொரு வழியாக பனம்பொருள் உற்பத்தியும் அதன் வர்த்தகமும் அமைந்தது. இவ்விடயத்திலும் பிற சாதிகளைவிட வேளாளர் கூடிய நன்மையைப் பெற்றனர். யாழ்ப்பாணத்தின் பனந்தோப்புகள் வேளாளரின் உடைமையாக இருந்தன. அத்தோடு கிராமத் தலைமைக்காரர் போன்ற உத்தியோகப் பதவிகளை வகித்தவர்களான வேளாளர்கள், குடியிருப்புகள் இல்லாத வெற்றுநிலங்களை தமது உடைமையாக ஆக்கிக் கொண்டனர். யாழ்ப்பாணத்திலும், தென்இலங்கையிலும் அக்காலத்தில் இடம்பெற்ற கட்டுமான வேலைகளுக்கு பனைமரம் தேவைப்பட்டது. பனைகளைத் தறித்து ஏற்றுமதி செய்யும் வர்த்தகம் வளர்ச்சியுற்றது. தென்னிந்தியாவிற்குப் பனைமரம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அத்தோடு பனையில் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்களின் வர்த்தகமும் வளர்ச்சி பெற்றது. இதனால் சிற்றுடமை விவசாயிகளின் பணவருவாய் அதிகரித்தது. சிறுதுண்டு நிலங்களை உடைமையாக வைத்திருந்த குடியான்கள் நன்மைபெற்றனர். பல ஏக்கர் காணிகளுக்குச் சொந்தக்காரர்களான நில உடைமையாளர்களின் காணிகளில் பனைமரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. அக்காணிக்காரர்கள் அவற்றில் இருந்து பணவருவாய் பெற்றனர்.

உழைப்பு:

விவசாய உற்பத்திக்கு வேண்டிய உழைப்பை வழங்கக்கூடிய உழைப்பாளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தனர். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் உழைப்பாளர் தொகை யாது, அவ்வுழைப்பாளர்களில் அடிமைகளாக இருந்தோர் எவ்வளவு தொகையினர் என்பது முக்கியமான தரவுகளாகும். யாழ்ப்பாணத்தின் வழமைச்சட்டமான தேசவழமைச்சட்டம் அடிமைச் சாதிகளின் அந்தஸ்துப் பற்றிய தகவல்களைத் தருகிறது. 17 ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் செல்வந்தர்களான யாழ்ப்பாணத்து நில உடைமையாளர்கள் தென்னிந்தியாவில் இருந்து அடிமைகளைக் கொண்டுவந்தமை பற்றியும், அடிமைகளை விலைகொடுத்துக் கொள்வனவு செய்தமை பற்றியும் ஆவணங்களில் குறிப்புகள் உள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட ஒவ்வொரு அடிமைக்கும் ரூபா 2.00 வரியாகச் செலுத்தப்பட்டது. உதாரணமாக 1694 – 96 ஆண்டுக்காலத்தில் சோழமண்டலப் பகுதியில் இருந்து 3,589 அடிமைகள் தனிநபர்களால் கொள்வனவு செய்யப்பட்டமை பற்றிய பதிவுகள் உள்ளன. ‘குடிமை’ என்ற சொல் வழக்கை தென்னிந்தியாவில் இருந்த நிலமானிய அடிமைநிலை (Feudal Bondage) என்ற வகையில் பொருள் கொள்ள முடியாதுள்ளது. யாழ்ப்பாணத்தில் ‘குடிமை’ எனப்பட்டோர் அடிமைகளாக இருந்தனரா என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாது. நாம் முன்னரே குறிப்பிட்டது போல் மரமேறிகள் என்ற சமூகப் பிரிவினர் யாழ்ப்பாணத்தில் அடிமைகள் என்ற நிலையில் குடியேறவில்லை. பறைமேளமடிக்கும் தொழிலைச்செய்த சமூகமும் சுதந்திரமான நெசவுத்தொழிலைச் செய்தது எனத் தெரிகிறது. ஆகையால் தேசவழமை குறிப்பிடும் ‘குடிமை’ என்ற வகைமையில் அடங்குவோர் எவ்வெச்சமூக பிரிவினர் என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாது. உழுது பயிரிட, தோட்டவேலை என்பவற்றுடன் தொடர்புடைய இரு சமூகப் பிரிவினர் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் பிற்பட்ட நிலையில் இருந்தமையையும், விவசாயக் கூலிகளாக அச்சமூகப் பிரிவினர் வேலை செய்தமையையும் காணமுடிகிறது.

வேளாளர் மேற்குறித்த ‘குடிமை’களிடமிருந்து இலவச உழைப்பை (சேவைக் கடமையை) பெற்றனர் என்றால், அது சட்டமுறையற்ற வழிகளாலேயே பெறப்பட்டது எனலாம். கிராமிய சமுதாயத்தில் வேளாளர்களான தலைமைக்காரர்கள் பெற்றிருந்த அதிகாரமும் செவாக்கும் சட்டமுறையற்ற வழிகளில் இலவச உழைப்பைப் பெற்றுக்கொள்ள உதவியது. அரசுக்குச் செய்யவேண்டிய இலவச வேலைகளை (கட்டுமானப் பணிகள்) வேளாளர்களான தலைமைக்காரர்கள் தமக்குரிய இலவச சேவையாக மாற்றிக் கொண்டனர்.

வருமானவரி அறவிடும் அதிகாரம் தலைமைக்காரர்களிடம் இருந்தமை இதனைச் சாத்தியமாக்கியது. தலைமைக்காரர்கள் இலவச உழைப்பை வழங்க வேண்டியவர்களின் ஆவணப் பதிவுகளைப் பேணிவந்தனர். இவ்வாவணங்களில் முழுமையாகப் பெயர்களைப் பதிவு செய்யாது மறைத்து, தம் சொந்த அடிமைகள் போல் இலவச உழைப்பை வேளாளர்கள் பலரிடமிருந்தும் பெற்றனர். தொடக்கத்தில் சுதந்திர உழைப்பாளர்களாக (Free Labour) இருந்தோர் காலப்போக்கில் அடிமை உழைப்பாளர்களாக மாற்றப்பட்டதற்குப் பொருளாதாரக் காரணங்களும் உதவின.

காணிகளிற்கான கேள்வி அதிகரித்தமை பற்றியும் காணிகளின் விலை உயர்வு பற்றியும் முன்னர் குறிப்பிட்டோம். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காணிகளின் உடைமை மாற்றம் குறிப்பிடத்தக்க அளவு ஏற்பட்டிருந்தது. சமூகத்தின் வறிய பிரிவினர் நிலமற்றவர்களாக மாறிக்கொண்டிருந்தனர். காணிகளின் உடைமை மாற்றம் முறைகேடான வழிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. இதைத் தடுப்பதற்காக அரசாங்கம் காணிகளைப் பதிவு செய்யும் நடைமுறையைச் செயற்படுத்தியது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளின் நிலை முன்னர் இருந்த நிலையிலும் வேறுபட்டதாக இருந்தது. காணியற்றவர்களான சமூகப்பிரிவினர் வேளாளர்களின் காணிகளில் குடியிருப்போராக இருந்தனர். இவ்வாறு குடியிருப்பதற்குப் பதிலீடாக வேளாளர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் இலவச உழைப்பை அல்லது குறைந்த கூலிக்கு உழைப்பை வழங்குபவர்களாகவும் இருந்தனர். இலவச உழைப்பு அல்லது குறைந்தளவு கூலிக்கு உழைப்பை இச்சமூகப்பிரிவினர் வழங்கினர்.

கைவினைஞர்களின் உழைப்பு:

கைவினைஞர்

கைவினைத்தொழில்களை செய்தோர் (Artisans) சுதந்திரமானவர்களாக இருந்தனர். இவர்களின் உழைப்பு, சாதாரண உடல் உழைப்பை விட உயர்ந்த பெறுமதி உடையதாக இருந்தது. கைவினைஞர்களின் உழைப்புக்கு உயர்ந்த கூலி கிடைத்ததால், 18 ஆம் நூற்றாண்டின் வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு நோக்கும் போது பிற உழைப்பாளர்களை விட கைவினைஞர்களின் வருவாய் அதிகமாக இருந்தது. மரவேலை செய்வோர், கட்டட சிற்ப வேலை செய்வோர், இரும்பு வேலை செய்வோர், வெள்ளி-பொன் ஆபரணங்களைச் செய்வோர், பிற கைவினைத் தொழில்களை செய்தோர் ஆகிய கைவினைத் தொழிகளில் ஈடுபட்டோர் மாதாந்தக் கூலியாக ரூபா 8 வரை பெற்றுக்கொண்டனர். இது கிராமத்து உத்தியோகத்தர்கள் பதவிகளில் இருந்தோரது கூலிக்குச் சமமாக இருந்தது. ஆயினும் கிராமத்து உத்தியோகத்தர்கள், கைவினைஞர்கள் போல் அல்லாது, தம் பதவிகளுடன் இணைந்த சலுகைகள் பலவற்றைப் பெற்றனர். ஆகையால் கைவினைஞர்களுக்கு இல்லாத சமூக அதிகாரம் கிராம உத்தியோகத்தர்களுக்கு இருந்தது.

கைவினைஞர் சமூகப் பிரிவினரின் குடியிருப்புகள் வேளாளர் குடியிருப்புகளில் இருந்து தொலைவில், தொடர்பற்றனவாக இருந்தன. கைவினைஞர் சமூகங்களின் வரிகள், அவ்வச் சமூகங்களின் தலைவர்களால் அறவிடப்பட்டன. இவ்வாறாக கைவினைத்தொழில் செய்தோர்  சுதந்திர உணர்வு உடையவர்களாகவும், சுயத்துவம் உடையவர்களாகவும் இருந்தனர். கைவினைத் தொழில் சமூகப் பிரிவினர் சனத்தொகை அடிப்படையில் சிறிய தொகையினராகவே இருந்தனர். இக்காரணத்தால் யாழ்ப்பாணத்தின் சமூக உறவுகளில் கைவினைச் சமூகப் பிரிவினர் செல்வாக்குச் செலுத்தும் நிலை இருக்கவில்லை. இக்காரணத்தால் யாழ்ப்பாணத்தின் சமூக பொருளாதார உறவுகளில் கைவினைஞர்களின் நிலை பின்வரும் பண்புக் கூறுகள் கொண்டதாக இருந்தது.

  • கைவினைஞர்கள் நில உடைமையாளர்களாக உருவாக்கம் பெறவில்லை.
  • இச்சமூக பிரிவினர்களின் பொருளாதார நடவடிக்கைகளில் பன்முகத்தன்மை (Diversity) காணப்படவில்லை. பிறபொருளாதார நடவடிக்கைகளில் இப்பிரிவினர் நாட்டம் கொள்ளவில்லை.
  • கிராம மட்ட உத்தியோகப் பதவிகளைப் பெறுவதிலும் இச்சமூகப் பிரிவினர் வேளாளர்களுக்கு போட்டியாக இருக்கல்விலை.

அடுத்து, 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண சமூகத்தில் வர்த்தகமும் முயற்சியாண்மையும் (Entrepreneurial Activity) சமூகத்தில் மேல்நோக்கிய உயர்ச்சிக்கு (Social Mobility) உதவியதா ? என்ற விடயத்தைப் பார்ப்போம்.

குறிப்பு : ‘Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century, Social History of a Dominant Caste Society: The Vellalar of North Ceylon (Sri Lanka) in the 18th Century’, என்ற தலைப்பில் 1981 ஆம் ஆண்டு Indian Economic and Social History Review, xviii(3 and 4): 377-391 என்னும் இதழில் சின்னப்பா அரசரத்தினத்தால்  எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13429 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)