Arts
13 நிமிட வாசிப்பு

மலையக இளைஞர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வியும் தொழில்சார் பயிற்சியும்

July 18, 2022 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

ஒரு நாட்டினது பொருளாதார அபிவிருத்திக்கும் கல்வித்துறையில் அந்நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக – பொருளாதார முன்னேற்றங்களுக்குமிடையேயான நெருங்கிய தொடர்பு அண்மைக்காலங்களில் பல்வேறு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. சிறந்த கல்வியும், சிறந்த சுகாதார நிலைமைகளும் ஒரு நாட்டினது பொருளாதார அபிவிருத்திக்கு ஆக்கபூர்வமாகப் பங்களிப்பதோடு, தனிமனிதரது திறமைகளையும், ஆற்றல்களையும் மேம்படுத்துவதனூடாக அவர்களது சுயமுன்னேற்றத்திற்கும் உதவுகின்றன. கல்வியானது வறுமை, சனத்தொகை வளர்ச்சி, போசாக்கின்மை, சிசு மரணவிகிதம் என்பவற்றைக் குறைப்பதற்கும், வருமானம், உற்பத்தி, வாழ்க்கைத்தரம் என்பவற்றை உயர்த்துவதற்கும் உதவுவதாலேயே அபிவிருத்திக் கொள்கைகளில் அதற்கு முதன்மை இடம் அளிக்கப்படுகின்றது. மேலும், கடந்த சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கல்விக்கான வாய்ப்பினைப் பரவலாக்குவதைத் தமது அபிவிருத்திக் கொள்கைகளின் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன.

மலையக பாடசாலை

கல்வியில் ஒரு சமூகம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கு பொதுவாக, அந்தச்சமூகத்தின் அங்கத்தவர்களிடையே காணப்படும் படிப்பறிவு விகிதம், சிறார்கள் பாடசாலைகளில் சேரும் விகிதம், பாடசாலைக்கல்வியை இடைநடுவில் கைவிடாது தொடர்ந்து மேற்கொள்ளுதல் ஆகிய மூன்று சுட்டிகள் கையாளப்படுகின்றன. ஏனைய வளரும் நாடுகளோடு ஒப்பீட்டுரீதியில், இலங்கை இம்மூன்றிலுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கல்வியில் எமது நாடு தேசியரீதியில் அடைந்துள்ள நிலைக்கு மாறாக, மலையகத் தமிழரிடையே படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ளதோடு, பாடசாலை செல்லாதோர் விகிதம், பாடசாலைக்கல்வியை இடைநடுவில் விட்டு விலகுவோரின் விகிதம் என்பன உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன. அத்துடன், கல்விப்பொதுத்தராதர (சா.த)ப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரவகுப்பிற்கு செல்வோரின் விகிதம், உயர்தரப்பரீட்சையில் சித்தியடைவோரின் விகிதம் என்பன ஒப்பீட்டுரீதியில் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளன. மலையக மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலைமை, பிள்ளைகளின் கல்வி தொடர்பான அவர்களது பெற்றோரின் அலட்சியப்போக்கு, பிள்ளைகளிடம் கல்வியில் ஆர்வம் போதாமை, இரண்டாம் நிலைக்கு அப்பால் கல்வியைத் தொடர்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கு மலையகத் தமிழ்ப்பாடசாலைகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் போதாமை, பாடசாலைகளில் ஏனைய பௌதீக வளங்கள் குறைவாகவிருத்தல் போன்றவற்றாலேயே மலையக மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். இளம்பெண்களைப் பொறுத்தவரை, பாடசாலைகள் வீட்டிற்கு வெகுதொலைவில் அமைந்திருத்தல், போக்குவரத்துப்பிரச்சினைகள், மொழிப்பிரச்சினை, பாதுகாப்பின்மை என்பன அவர்கள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கட்டாயப்பாடங்களில் சித்தியெய்தத் தவறுவதால் பெரும்பாலான மலையக மாணவர்கள் அப்பரீட்சையைப் பூர்த்தி செய்யாமலே, பாடசாலையை விட்டு விலகுகின்றனர். பாடசாலையில் இணையும் மாணவர்களில் சுமார் இருபது வீதமானோர் மட்டுமே சாதாரண தரப்பரீட்சைக்கு அப்பால் கல்வியைத் தொடருகின்றமை இதற்கு சான்றுபகருகின்றது.

மலையக பாடசாலை மாணவர்கள்

மலையக இளைஞர்கள் பாடசாலைக் கல்வியில் மட்டுமன்றி, தொழில்நுட்பப்பயிற்சி, வினைத்திறன் ஆற்றல்கள் என்பவற்றிலும் பின்தங்கியே காணப்படுகின்றனர். அதாவது, பல்வேறுபட்ட தொழில்களை செய்வதற்குத் தேவைப்படும் அடிப்படை வினைத்திறன்கள் அவர்களிடையே இல்லாதிருக்கின்றது அல்லது போதாதிருக்கின்றது. தோட்டத்துறையில் வேலையின்றி இருக்கும் இளைஞர்களில் 93.0 வீதமானோரிடம் எவ்வித தொழில்சார் தகைமைகளோ, தொழில்நுட்பத் தகைமைகளோ இல்லையென மதிப்பிடப்பட்டுள்ளது. தோட்டங்களுக்குள்ளேயே சிற்சில தொழில்வாய்ப்புக்கள் காணப்பட்டபோதும், தோட்ட இளைஞர்களுக்கு அவற்றை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வினைத்திறன்கள் அவர்களிடையே இல்லாதிருப்பதால் அவ்வித தொழில்வாய்ப்புக்கள்கூட வெளியாருக்கே செல்கின்றன. அதேவேளையில், அவர்களோ சீவனமட்ட வேதனங்கள் அல்லது அதற்குக் குறைந்த வேதனங்களை உழைக்கும் வினைத்திறனற்ற தொழிலாளராக இருந்து வருகின்றனர். வினைத்திறனுள்ள தொழிலாளர் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தோட்ட முகாமையாளர் வெளியிலிருந்து அவர்களை நேரடியாகவோ, ஒப்பந்தக்காரர்களினூடாகவோ பெற்றுக் கொள்கின்றனர். ஒப்பந்தக்காரர்கள் தமக்குத் தேவைப்படும் வினைத்திறனுள்ள தொழிலாளரை கிராமப்புறங்களிலிருந்தே தம்முடன் அழைத்துவரும்முறை இன்று நேற்று மட்டுமன்றி, பெருந்தோட்டங்களின் ஆரம்பகாலந்தொட்டே நடைமுறையிலிருந்து வந்துள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது. தோட்டங்களை திறப்பதற்காக காடுகளை அழித்து காணிகளை சுத்தம் செய்வதற்கும், தொடர்ந்து தோட்ட முகாமையாளருக்கும் தொழிலாளருக்குமான இருப்பிட வசதிகளை அமைத்துக்கொடுப்பதற்கும் கீழ்நாட்டு சிங்கள ஒப்பந்தக்காரர்களே கையாளப்பட்டனரென வரலாறு கூறுகின்றது.

தோட்ட இளைஞர் யுவதிகளிடையே வேலையின்மை

கடந்த காலங்களில் தோட்ட இளைஞர், யுவதிகளிடையே வேலையின்மை ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. பருவ வயதையடைந்த உடனேயே அவர்கள் தோட்டத் தொழிலாளராகப் பதிவுசெய்யப்பட்டதால் கல்விகற்பதிலோ, தமது வினைத்திறன்களை அபிவிருத்தி செய்து கொள்வதிலோ அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கடந்த சுமார் இரு தசாப்தங்களில் தோட்டப்புறங்களில் ஆரம்பக்கல்வியையும் கனிஷ்ட இரண்டாம் நிலைக்கல்வியையும் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும், வாய்ப்புக்களும் அதிகரித்துள்ள நிலையில் அவர்களிடையே கல்வியறிவானது ஓரளவு உயர்ந்துள்ளதுடன், தொழில் தொடர்பான அவர்களது அபிலாசைகளும் மாற்றமடையத் தொடங்கியுள்ளன.

தொழிற்சந்தையை வந்தடையும் மலையக இளைஞர்களும், யுவதிகளும் தமது பெற்றோர்களிலும் பார்க்க சற்றுக்கூடுதலான கல்வியறிவைப் பெற்றுள்ளதால், பெற்றோர்களைப் போலன்றி தோட்டத்தொழிலில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஓரளவு அதிகரித்த வருமானத்தைத் தருவனவும், கௌரவமானவையென ஏனையோரால் மதிக்கப்படுவனவுமான தொழில்களையே அவர்கள் நாடுகின்றனர். வேலையின்றி இருப்போரில் 70.4 வீதமோனார் தோட்டங்களுக்கு வெளியில் தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதையே விரும்புவதாக மலையக மக்களின் சமூக-கலாசாரப் பிரச்சினைகளை ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணைக்குழு குறிப்பிடுகின்றது (Presidential Committee, 1996). அதேவேளை, தோட்டங்களுக்கு வெளியே சென்று வேறு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான தொழிற்பயிற்சியோ, வினைத்திறன்களோ அவர்களிடம் இல்லாததனால் அவர்களிடையே இன்று வேலையின்மையானது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. கடந்த காலங்களில் ஏனைய துறைகளோடு ஒப்பீட்டுரீதியில் தோட்டத்துறைசார்ந்த இளைஞர்களிடையே வேலையின்மை குறைந்தமட்டத்திலேயே இருந்து வந்தது. உதாரணமாக, நகரத்துறையிலும் கிராமத்துறையிலும் 14-18 வயதுப் பிரிவினரிடையே வேலையின்மையானது முறையே 51.0 வீதமாகவும், 49.0 வீதமாகவும் இருந்த நிலையில், தோட்ட இளைஞர்களிடையே அது 42.1 வீதமாகவிருந்தது. அதேபோன்று, இத்துறைகளைச் சேர்ந்த 19-25 வயதுப்பிரிவினரிடையே அது முறையே 37.3, 39.0, 17.8 வீதங்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது (1986/87). ஏனைய துறைகளிலும் பார்க்க, தோட்ட இளைஞர்களிடையே வேலையின்மை குறைவாக இருந்ததை இப்புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆனால், அண்மைக்காலத்தில் இந்தநிலை மாறி வேலையில்லாப் பிரச்சினை அவர்களிடையே தீவிரமடைந்து வருகின்றது.

தோட்டங்களிலே பல தொழில்வாய்ப்புக்கள் காணப்பட்டபோதும், தோட்ட இளைஞர்கள் அவற்றை நிராகரிக்கத் தொடங்கி விட்டனர். தமக்கான தொழில்களைத் தெரிவுசெய்வதில் அவர்கள் மாற்றமடைந்து கொண்டிருக்கும் ஒரு நிலையை அடைந்துள்ளதையே இது பிரதிபலிக்கின்றது. தோட்டங்களில் தொழிலாளராகச் சேருவதற்கு அவர்களது கல்விநிலை சற்று உயர்வாகவிருக்கும் அதேவேளையில், வெளியிடங்களில் சென்று தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு போதிய கல்வி உட்பட வேறு தகைமைகள் இல்லாததாலேயே அவர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகின்றது. தோட்டஇளைஞர் தோட்டத்து வேலைகளை நிராகரிப்பதற்கு பல காரணங்களைக் கூறலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவையாகும்:

  1. மற்றையோரால் அவை கௌரவமான ஒரு தொழிலாக ஏற்கப்படாமை.
  2. எதிர்கால முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதில் இல்லாமை.
  3. தோட்டங்களில் காணப்படும் கஷ்டமான வேலைநிலைமைகள்.
  4. மோசமான காலநிலைகளில் திறந்த வெளிகளில் வேலை செய்யவேண்டிய கட்டாயம்.
  5. தோட்டமுகாமையாளரின் கெடுபிடியான செயற்பாடுகள்.

பெரும்பாலான தோட்டப்புற இளைஞர்கள் தோட்டங்களுக்கு வெளியில் சென்று வேலை செய்வதையே விரும்புகின்றனர். இளைஞர்களைப் பொறுத்தவரை, சிற்றுண்டிச்சாலைகளில் அல்லது உணவு விடுதிகளில் வேலைசெய்தல், வாகனச்சாரதி வேலை, மேஸ்திரிவேலை, உலோக – உருக்கு ஒட்டும் வேலை போன்றன அவர்கள் விரும்பும் தொழில்களாக உள்ளன. ஓரளவு கல்விகற்ற யுவதிகள் ஆசிரியத்தொழில், தட்டச்சாளர் வேலை, மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாக செல்லுதல், தைத்த ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைசெய்தல் போன்றவற்றை விரும்புவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், இவற்றிலும் உயர்வான தொழில்களை பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு பொருத்தமான கல்வித்தகைமைகளோ, தொழில்நுட்ப அறிவு, தொழில்சார் பயிற்சி என்பனவோ இல்லாததோடு, வேலையற்றோரில் 10.0 வீதமானோர் மட்டுமே க.பொ.த சாதாரண பரீட்சைக்கு அப்பால் கல்வி பயின்றுள்ளனர். ஏறக்குறைய 32.0 வீதமான தோட்டச்சிறார்கள் பாடசாலை செல்லாதோராக உள்ளனர். மேலும் தோட்டங்களுக்கு வெளியே நல்ல தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு அவர்களுக்குத் தேவையான சமூகவலையமைப்புக்களோ (Social Network), தனிநபர் செல்வாக்கோ இருப்பதில்லை. அதிலும்மேலாக, எல்லாத்தகைமைகளும் இருந்தாலுங்கூட, அவ்வித தொழில்வாய்ப்புக்களில் அவர்கள் இனரீதியாகப் புறக்கணிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. நாட்டில் நிலவிவந்த(உள்நாட்டு யுத்தம்) பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாளஅட்டை, வெளிநாட்டு கடவுச்சீட்டு போன்ற அத்தாட்சிப்பத்திரங்கள் இல்லாத அவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தோட்டங்களுக்கு வெளியே செல்வோர் பாதுகாப்புத்துறையினரின் கெடுபிடிகளுக்கு உள்ளாகுதல், அநாவசியமாக கைதுசெய்யப்படுதல், விசாரணைகளின்றி நீண்ட காலங்களுக்குத் தடுத்துவைக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்குட்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படிக்காரணிகளால் பெருந்தொகையான இளைஞர்கள் எவ்வித வேலை வாய்ப்புகளுமின்றி தோட்டங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதோடு, சுயதொழில் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகினர். தொழில்நுட்பப்பயிற்சி, வினைத்திறன்கள், தொழிலனுபவம், சந்தைப்படுத்தல் ஆற்றல், நிதிவசதி, தொழிலைக்கொண்டு நடத்துவதற்கான இடவசதி என்பன இல்லாமை இவற்றுள் சிலவாகும். மேற்படிக்காரணிகளால் இவ்விளைஞர்கள் ஒன்றில் வேலையற்றோராகவோ அல்லது தோட்டங்களை அண்டிய பகுதிகளில் பகுதிநேர வேலைசெய்வோராகவோ இருந்தனர். தொடர்ச்சியான வேலையின்மை, உயர்ந்து செல்லும் வாழ்க்கைச்செலவு, சமூகரீதியானதும், புவியியல் ரீதியானதுமான அசைவின்மை என்பவற்றால் இன்று அவர்களிடையே ஒருவித விரக்தி மனப்பான்மையும், வெறுப்புணர்ச்சியும் உருவாகியுள்ளதோடு, அவர்கள் வாழும் சமூகத்தில் அது அமைதியின்மையையும், ஏற்படுத்தி வருகின்றது. இளைஞர்களிடையே காணப்படும் இவ்வாறான விரக்திநிலையானது பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவல்லது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்விளைஞர்கள் வெளியிடங்களில் சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின், அவர்கள் பொருத்தமான தொழில்நுட்பப் பயிற்சிகளையும் வினைத்திறன்களையும் கொண்டிருப்பது இன்றியமையாததாகும்.

தொழில்நுட்பக் கல்வியும், தொழில்சார் பயிற்சியும்

தொழில்நுட்பக்கல்வி என்பதை பரந்த ஒரு கருத்தில், தொழிலாளர் தாம் செய்யும் தொழில்களை முன்னரிலும் பார்க்க சிறப்பாகவும் திறமையாகவும் செய்வதற்குத் தேவையான வினைத் திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கான பயிற்சி எனலாம். அதாவது, பல்வேறுபட்ட உற்பத்தித்துறைகளிலும் சேவைகள் துறைகளிலும் குறிப்பிட்ட உற்பத்தி சம்பந்தமான வேலைகளுக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் நடைமுறைசார்ந்ததும், கோட்பாடு சார்ந்ததுமான எல்லாவிதக்கல்வியுமே தொழில்நுட்பக் கல்விக்குள் அடங்கும்.

தோட்ட இளைஞர்கள் பல்வேறு பயிற்சிநெறிகளில் சேர்ந்து பயிற்சி பெறாதமைக்கு முன்னர் கூறிய கேள்விப்பக்கக் காரணிகளை விட சில நிரம்பல் பக்கக்காரணிகளும் உள்ளன:

  1. இப்பயிற்சி நெறிகளில் சேர்வதற்குத் தேவையான ஆகக்குறைந்த தகைமைகளாவது அவர்களிடம் இல்லாதிருத்தல்.
  2. பெரும்பாலான பயிற்சிநெறிகள் சிங்கள மொழியில் மட்டுமே நடத்தப்படுதல்.
  3. இப்பயிற்சிநெறிகள் தொடர்பான தெளிவான தகவல்கள், விளக்கங்கள் என்பன தோட்ட இளைஞர்களுக்குக் கிடைக்காமை.
  4. இப்பயிற்சிநெறிகளில் சேர்ந்து கொள்வதற்கு வேறுதுறைகளைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து எழும் கடும்போட்டிக்கு மலையக இளைஞர்களால் ஈடுகொடுக்க முடியாமை.
  5. அவர்களது பொருளாதாரநிலை சார்ந்த பிரச்சினைகள்.
  6. தொழிற்பயிற்சி மையங்கள், நிறுவனங்கள் என்பன தோட்டங்களுக்கு வெளியே தொலை தூரங்களில் அமைந்திருத்தலும் அதனால் எழும் போக்குவரத்துப் பிரச்சினைகளும் இவற்றுட் சிலவாகும்.

மலையக மக்கள் செறிந்துவாழும் கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கும் தொழில்நுட்பக்கல்லூரிகளில் தமிழ்மொழி மூலமான பாடநெறிகள் ஒரு சில நடத்தப்பட்டன. இவற்றிற்கான பாடத்திட்டத்தில் சுமார் 20 தொடக்கம் 30 வீதமானவை கோட்பாடு சார்ந்ததாகவிருப்பதால், பயிலுனரிடம் கணிதம், விஞ்ஞானம் போன்றவற்றில் ஓரளவு அறிவு இருப்பது அடிப்படைத்தேவையாக உள்ளது. மலையகத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சித்திபெறத்தவறுவதால் ஒரு சிலர் மட்டுமே இப்பயிற்சி நெறிகளில் இணைந்து கொள்வதற்கு தகுதி பெறுகின்றனர். பதுளை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும், இரு கனிஷ்ட தொழில்நுட்ப கல்லூரிகளிலும் பல்வேறு பயிற்சிநெறிகள் போதிக்கப்பட்டன. இவைதவிர, கல்வி அமைச்சின் முறைசாராத் தொழில்நுட்பக் கல்வி அலகுகள் பலவும் அங்கு செயற்பட்டன. 17 தமிழ்மொழி மூல பாடசாலைகளையும் 3 சிங்களமொழி மூல பாடசாலைகளையும் உள்ளடக்கிய கொட்டகல கொத்தணி கல்வித்திட்டத்தின் கீழ் ஜேர்மனியினது உதவியுடன் ‘பெரக்கும்’ வித்தியாலயத்தில் முறைசாராத்தொழிற்கல்வி அலகொன்று தாபிக்கப்பட்ட்டது. பாடசாலையைவிட்டு விலகுவோருக்கு முறைசாராப் பயிற்சி அளிக்கும் நோக்கத்தைக் கொண்ட இது தோட்டப்புறஇளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உதவுகின்றது. கொட்டகலையில் அமைந்திருக்கும் காங்கிரஸ் தொழிற்பயிற்சி நிறுவனம் முற்றுமுழுதாக தோட்டப்புற இளைஞர்களுக்கென்றே நிறுவப்பட்டதாகும். தச்சுவேலை, மேஸ்திரிவேலை, மின்சார இணைப்புவேலை, மோட்டார்பொறிமுறை, கைத்தறி, நெசவுத்தொழில் போன்ற துறைகளில் பயிற்சியளிப்பதற்கான வசதிகள் அங்குள்ளன.

தொழில்நுட்ப, தொழில்சார்கல்வியைப் பெறுவதில் மலையக இளைஞர்கள், பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் என்பது மேலே கூறியவற்றினின்றும் தெளிவாகின்றது. இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே அவர்கள் இவ்வித கல்வியையும் பயிற்சியையும் பெற்றுக்கொள்ள முடியும். இவ்விளைஞர்கள் தொழில்நுட்பக்கல்வியிலும் தொழில்சார் கல்வியிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அதில் காணப்படும் முட்டுக்கட்டைகள் அகற்றப்படவேண்டும்:
முதலாவதாக, மலையக இளைஞர்களின் தொழில்நுட்ப, தொழில்சார்கல்விக்கு முட்டுக்கட்டையாகவிருக்கும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் போதனையை மலையக தமிழ்ப்பாடசாலைகளில் மேம்படுத்த வேண்டும். அதாவது, இப்பாடங்களைப் போதிப்பதற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இப்பாடசாலைகளில் நியமிக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, இப்பாடங்களைக் கற்பதிலும் பொதுவாகவே, தொழில்கல்வி, தொழில்சார்கல்வி என்பனவற்றை பெற்றுக்கொள்வதிலும் மலையக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இன்றியமையாதது.

மூன்றாவதாக, மேற்படி கல்விநெறிகள் பற்றி மலையக இளைஞர்களிடையே தெளிவான விளக்கமின்மை காணப்படுதல். இதனால் தொழிற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் தொழில்வாய்ப்புக்களும் தோட்டத்தொழில் போன்றனவே என்ற ஒருவித மயக்கநிலையை அவர்களிடையே ஏற்படுத்துகின்றது. இதனைக்களைவதற்கு வேறுபட்ட நிறுவனங்களால் நடாத்தப்படும் பாடநெறிகள் பற்றியும், தமக்கு பொருத்தமான பாடநெறிகளை அவர்கள் எவ்வாறு தெரிவுசெய்து கொள்ளலாம் என்பது பற்றியும், அப்பாடநெறிகளைக் கற்பதால் அவர்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் அவர்களுக்குத் தெளிவான விளக்கங்கள் கிடைப்பதற்கு ஆவன செய்யவேண்டும்.

நான்காவதாக, இப்பாடநெறிகளில் சேர்ந்து பயிற்சிபெற்று வெளியேறும் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைப்பதையும், சுயதொழில் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதற்குத் தேவைப்படும் உதவிகள் கிடைப்பதையும், உறுதி செய்யத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐந்தாவதாக, மலையக மாவட்டங்களில் செயற்படும் தொழில்நுட்பநிறுவனங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் என்பவற்றில் தமிழ்மொழி மூலமான போதனைக்கு ஆவண செய்யவேண்டும். தமிழ்மொழியில் பயிற்சிநெறிகளை நடத்தக்கூடிய போதனாசிரியர்களுக்கு அங்கு காணப்படும் கடும் தட்டுப்பாட்டை அகற்றுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

ஆறாவதாக, பயிற்சி மையங்களும் நிறுவனங்களும் இயன்றஅளவிற்கு தோட்டங்களை அண்டிய இடங்களில் நிர்மாணிக்கப்பட வேண்டும். பயிலுனர்களுக்கு போக்குவரத்து, உணவு என்பவற்றிற்கான செலவுகளுக்கு போதுமான அளவு நாளாந்தப்படிகள் செலுத்தப்பட வேண்டும்.

ஏழாவதாக, சுயதொழில் முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதற்கு பாடநெறிகளில் நிதிமுகாமை, முயற்சியாண்மை அபிவிருத்தி என்பவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இறுதியாக, ஏற்கனவே பயிற்சிபெற்று தொழிலின்றி இருக்கும் இளைஞர்களுக்கு பொருத்தமான தொழில்வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இப்பயிற்சிநெறிகளில் சேரவிரும்புவோருக்கு இது ஒரு தூண்டுகோலாக அமையுமெனத் திட்டவட்டமாகக் கூறலாம்.

மலையக மாணவர்கள் பாடசாலைக்கல்வியில் மட்டுமன்றி தொழில்நுட்பக்கல்வி, தொழிற்பயிற்சி என்பவற்றிலும் முன்னேற்றமடைவதன் மூலமே சிறந்த தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அவர்கள் கட்டாயமாகவே இத்துறைகளில் முன்னேற்றமடைவது சமூக முன்னேற்றத்திற்கும் அவர்களது சுயமுன்னேற்றத்திற்கும் இன்றியமையாததாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8892 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)