Arts
18 நிமிட வாசிப்பு

சமூகவியலாளர் கணநாத் ஒபயசேகரவின் ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ எனும் கருத்தாக்கம்

October 2, 2023 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஆங்கில மூலம் : கணநாத் ஒபயசேகர

கணநாத் ஒபயசேகர அவர்கள் கொம்பிரிட்ஜ் என்ற அறிஞருடன் இணைந்து ‘Buddhism Transformed : Religious change in Ceylon’ என்ற நூலை 1988 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந் நூல் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் இலங்கையின் மரபுவழிப் பௌத்தம் (Traditional Buddhism) நவீனத்துவக் கூறுகளை  உள்வாங்கியதை விபரிக்கிறது. நவீனத்துவம் பௌத்த சமயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) என இந்நூல் வருணிக்கிறது. கணநாத் இது குறித்து பல கட்டுரைகளையும் எழுதினார்.  ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ பற்றிய அவரின் கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக இக் கட்டுரை அமைகிறது.

Buddhism Transformed

19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்

19 ஆம் நூற்றாண்டு இலங்கையின் பௌத்த சமய வரலாற்றில் ஒரு திருப்பு முனையான காலம் என்று கூறலாம். அந்நூற்றாண்டின் முடிவில் சிங்கள மக்களின் ஒரு சிறு பிரிவினர் மத்தியில் புதிய இயல்புகளைக் கொண்ட பௌத்தம் ஒன்று உருவாகியிருந்தது. மரபுவழிப் பௌத்தத்தில் இருந்து வேறுபட்ட இப்பௌத்தம், நகரம்சார் மத்தியதர வர்க்கத்தின் மதமாகக் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு உருவானது. அக்காலத்தில் பௌத்தர்களோடு கிறிஸ்தவ மிசனரிகள் கடுமையான போட்டியில் ஈடுபட்டிருந்தனர். பௌத்தர்களிடையே உருவாகிய இப்பௌத்தத்தின் இயல்புகளை அக்காலத்தில் ‘அங்ளிக்கன்’ திருச்சபையின் பிக்ஷப்பாக இருந்தவர் 1892 ஆம் ஆண்டில், இதை அடையாளம் கண்டு “இன்று இலங்கையில் இரண்டு பௌத்தங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டார். ஐரோப்பிய பண்பாட்டின் தாக்கத்திற்கு உட்படாத கிராமிய மக்களின் பௌத்தம், நகரம் சார் மத்திய வகுப்பின் பௌத்தம் என இரு பௌத்த சமயங்கள் உள்ளன என்பதே அவரது மேற்கூறிய கூற்றின் உட்பொருளாகும்.

இருபதாம் நூற்றாண்டில் பௌத்தம் பற்றிய முக்கியமான ஆய்வுகளை வெளியிட்ட பெர்செட் (Berchert கித்சிறி மலல்கொட, கணநாத் ஒபயசேகர, கொம்பிரிட்ஜ், எச்.எல்.செனவிரத்தன ஆகிய ஆய்வாளர்கள் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், இம்மாற்றங்களின் பயனாக மரபுவழிப் பௌத்தத்தில் இருந்து வேறுபட்ட இயல்புகளையுடைய புதிய பெளத்தம் நகரம் சார்ந்த மத்தியதர வகுப்பினரிடம் தோன்றியிருப்பதனையும் தம் ஆய்வு நூல்கள், கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார்கள். இப்பௌத்தம் ஆய்வாளர்களால் ‘புதிய பௌத்தம்’ (New Buddhism), பௌத்த நவீனத்துவம் (Buddhist Modernism) புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) எனப் பலவாறாக அழைக்கப்பட்டது. சில ஆய்வாளர்கள் இதனை அரசியல் பௌத்தம் (Political Buddhism) என்றும் குறிப்பிட்டார்கள். புதியது, நவீனமானது, சீர்திருத்த எதிர்ப்பு தன்மையுடையது (Protestant) ‘அரசியல் சார்ந்தது’ ஆகிய அடைமொழிகளை இணைத்து மேற்குறித்த ஆய்வாளர்கள் 19ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற புகழ் பெற்ற பாணந்துறை விவாதம் (1873) என்ற நிகழ்வுக்குப் பிந்திய காலத்தின் சமய எழுச்சியையும், சமூக பண்பாட்டு மாற்றங்களையும் விபரித்தனர். இவ் ஆய்வுகளில் கொம்பிரிட்ஜ் மற்றும் கணநாத் ஒபயசேகர எழுதிய “Buddhism Transformed : Religious change in Ceylon” (1988) என்னும் நூல் பௌத்த சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ (Protestant Buddhism) என்ற தொடரால் விபரித்தது. நவீன காலத்தில் இலங்கைப் பௌத்தத்தில் ஏற்பட்ட மாற்றங்களை விபரிக்கும் இக் கருத்தாக்கத்தை விளக்குவதும், இக் கருத்தாக்கத்தின் துணையுடன் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட சமய மாற்றங்களின் பின்னணியை விளக்குவதும் எனது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Theravada buddhism

இக்கட்டுரையை எழுதுவதற்கு நான் பிரதான உசாத்துணையாக கொம்பிரிட்ஜ் எழுதிய ‘தேரவாத பௌத்தம் பண்டைய வாரணாசி முதல் நவீன கொழும்பு வரையான சமூக வரலாறு’ (Theravada Buddhism : A Social history from Ancient Benares to Modern Colombo – 2014) என்ற நூலைப் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக இந்நூலின் 8ஆவது அத்தியாயம் (பக் 171 – 196) புரட்டஸ்தாந்திய பௌத்தம் (Protestant Buddhism) என்னும் தலைப்பில் இவ்விடயங்களை மிகவும் தெளிவான முறையில் சுருக்கிக் கூறுகிறது. கொம்பிரிட்ஜ் என்பவர்  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பௌத்த கற்கைகளுக்கான நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராவார். 1976 – 2004 காலப் பகுதியில் அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதப் பேராசிரியராகவும் பணியாற்றினார். கணநாத் ஒபயசேகரவின் மாணவரான கொம்பிரிட்ஜ் 1988 இல் கணநாத் ஒபயசேகர அவர்களுடன் இணைந்து மேற்குறித்த ‘நிலைமாற்றம் பெற்ற பெளத்தம்: இலங்கையில் சமய மாற்றம் (Buddhism Transformed: Religious Change in Ceylon) நூலையும் எழுதினார்.

புரட்டஸ்தாந்திய பௌத்தம் என்ற கருத்தாக்கத்தை முதன் முதல் அறிமுகம் செய்தவர் கணநாத் ஒபயசேகர அவர்களே ஆவர். 1970 களில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் இவ்விடயம் பற்றி விளக்கப்பட்டது. பின்னர் இக் கருத்தைப் பயன்படுத்தி கித்சிறி மலல்கொடவும் 1976 இல் தாம் எழுதிய நூலில் விளக்கங்கள் தந்துள்ளார் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுதல் வேண்டும்.

புரட்டஸ்தாந்திய பௌத்தம் வரைவிலக்கணம்

‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ என்ற தொடரை அறிமுகம் செய்த கணநாத் ஒபயசேகர அத்தொடரில் உள்ள ‘Protest’ (எதிர்ப்பு) என்ற சொல்லை பௌத்தத்தின் அடைமொழியாக சேர்த்துக் கூறியபோது, அதில் உள்ளடங்கியுள்ள இரு விடயங்களை எடுத்துக் காட்டினார்.

  1. மெகட்டுவத்தே குணானந்த தேரர், அநகாரிக தர்மபால போன்றவர்களின் பௌத்த சமய எழுச்சி இயக்கம் கிறிஸ்தவத்திற்கு எதிரான ‘Protest’ (எதிர்ப்பு) ஆகும்.
  2. அவ்வாறு தோன்றிய பௌத்த எதிர்ப்பு இயக்கம், இலங்கையின் மரபு வழிப் பௌத்தத்தின் எதிர்ப்பாக, அதன் மறுதலிப்பாகவும் இருந்தது.

இவ்விரு காரணங்களாலும் நவீன சீர்திருத்த பௌத்தம் ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ ஆக விளங்கியது. அடிப்படையான இந்த வரைவிலக்கணத்துடன் ஆரம்பிக்கும் இவ்விவாதம் அநகாரிக தர்மபால தலைமையிலான பௌத்த சீர்திருத்தவாதம், கிறிஸ்தவம் கையாண்ட அதே வழிமுறைகளைக் கையாண்டு, கிறிஸ்தவத்தை எதிர்த்துப் பிரச்சார இயக்கங்களை நடத்தியதோடு, கிறிஸ்தவ விழுமியங்களையும், மேற்கத்தைய பண்பாட்டு அம்சங்களையும் கூட உள்வாங்கிக் கொண்டு புரட்டஸ்தாந்திய பௌத்தமாக உருமாற்றம் பெற்றதென கணநாத் ஒபயசேகர விளக்கினார். கொம்பிரிட்ஜ் உடன் சேர்ந்து ஒபயசேகர எழுதிய புகழ்பெற்ற நூல் இக் கருத்தை விரிவாகப் பல கோணங்களிலும் விளக்கியது.

ஒல்கொட் வருகை

olcott

19 ஆம் நூற்றாண்டில் பௌத்த சமய சீர்திருத்தம் இரண்டு காரணிகளால் தூண்டுதல் பெற்றது. அவற்றுள் முதன்மையானது அமெரிக்கரான ஒல்கொட் அவர்களின் வருகையாகும். இவர் 1890 ஆம் ஆண்டு இலங்கை வந்தார். இவர் இலங்கைக்கு வரும் முன்னரே இந்திய சமயங்களில் ஈடுபாடு காட்டினார். இவர் 1875 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ‘தியோசோபிக்கல் சொசைட்டி’ (பிரம்மஞான சங்கம்) என்ற அமைப்பை தொடங்கியவர்களில் ஒருவராவர். அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றிய இராணுவ வீரர் ஆகிய இவர் ஓய்வுபெற்ற பின் ஆத்மிகவாதியாகி கீழைத் தேச சமயங்களில் ஈடுபாடு கொண்டவராகவும், கிறிஸ்தவத்தின் எதிரியாகவும் செயற்பட்டார். பாணந்துறை விவாதத்தைப் பற்றி அறிந்து கொண்ட இவர் 1890 ஆம் ஆண்டில் கொழும்புக்கு வந்தார். இவர் பௌத்தத்தின் கிறிஸ்தவ மத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவினார். பௌத்த தியோசோபிக்கல் சபை (BTS) கொழும்பில் தலைமையகத்தை அமைத்தது. அநகாரிக தர்மபால இச் சபையின் முக்கிய பொறுப்புக்களை ஏற்றுச் செயற்பட்டார். ஒல்கொட் – பிளவாட்ஸ்கி அம்மையார் போன்ற தியோசோபிஸ்டுகளை கித்சிறி மலல்கொட என்ற ஆய்வாளர் “மிசனரி எதிர்ப்பு மிசனரிகளான (Anti – Missionary Missionaries) தியோசோபிஸ்டுகள்” என்று மிகப் பொருத்தமான தொடரால் வருணித்தார். தியோசோபிஸ்டுகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அத்தகைய தீவிரம் வெளிப்பட்டது. அது மட்டுமல்லாமல் புரட்டஸ்தாந்திய மதத்தின் பிரச்சார உத்திகளை புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவச் சூழலில் இருந்து வந்த தியோசோபிஸ்டுகள் பிரயோகித்ததோடு, இலங்கையின் பௌத்தர்களுக்கு தலைமைத்துவத்தையும் வழங்கினர்.

ஒல்கொட் வருகை என்பது முதன்மையான தூண்டுதல் என்றால் இரண்டாவதான இன்னொரு துாண்டுதலும் பௌத்த சீர்திருத்தவாதத்திற்குத் துணையாக அமைந்தது என்பதையும் கொம்பிரிட்ஜ் போன்ற ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டினர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோப்பிச் செய்கையும், அதனைத் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற தேயிலைத் தோட்டப் பொருளாதார முறையும் மிக அடிப்படையான சமூக பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தின. இதன் பயனாக சிங்கள – பௌத்தர்கள் மத்தியில் செல்வந்தர்களான முதலாளிகள் உட்பட உயர் தொழில்களில் உள்ளோர், மத்தியதர வர்க்கத்தினர் எனப் பல பிரிவினர்களையும் உள்ளடக்கிய படித்த நகரம் சார் வர்க்கங்கள் உருவாகின. ஒல்கொட் தலைமையிலான பௌத்த சீர்திருத்தவாதிகள் விதைத்த கருத்துக்கள் படித்த மத்திய தரவர்க்கம் என்ற வளமான நிலத்தில் விழுந்த வித்துக்கள் போன்று அமைந்தன. இம்மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி இல்லாமல் நவீன பௌத்தமாகிய புரட்டஸ்தாந்திய பெளத்தம் உருப்பெற்றிருத்தல் முடியாது.

சீர்திருத்தவாத இயக்கத்தின் பிரச்சார உத்திகள்

புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கர்களும் தமது மதம் பரப்பும் பணியில் மூன்று சாதனங்களை மிகவும் திறமையான முறையில் கையாண்டனர்.

  1. பாடசாலைகளை அமைத்து ஆங்கிலக் கல்வி என்ற தூண்டுதலை வழங்கி மக்களை மதம் மாற்றினர்.
  2. அச்சு இயந்திராலைகளை நிறுவி சமயப் பிரச்சாரத்திற்கென பைபிளையும் ஏராளமான பிறநூல்களையும் சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அச்சிட்டு விநியோகித்தனர்.
  3. நிறுவனக் கட்டமைப்புக்களை உருவாக்கி கிறிஸ்தவத்திற்கு மாறிய சிங்களவர்களை ஒன்று திரட்டி திருச்சபையின் தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரட்டினர்.

மேற்குறித்த மூன்று வழிமுறைகளையும் 1860 க்கு முற்பட்ட காலத்தில் கிறிஸ்தவ மிசனரிகளே தமது ஏகபோக உரிமையாக வைத்திருந்தனர். அதனால் கிறிஸ்தவ பாதிரிகளிடையே அசாத்தியமான துணிச்சலும், உற்சாகமும் காணப்பட்டது. 1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற விவாதத்தில் கிறிஸ்தவர்கள் முதலாவது தடவையாகத் தோல்வியடைந்தனர். விவாத மேடையில் பேச்சுத் திறமையாலும், வாதத் திறமையாலும் வெற்றி கொள்வதில் மட்டும் திருப்தியடையாத பெளத்த தலைவர்கள் 1. பாடசாலைகள் 2. அச்சு இயந்திரம் 3. நிறுவனக் கட்டமைப்புகள் என்ற மூன்றையும் சிறப்பாகக் கையாண்டு கிறிஸ்தவ மிசனரிகளைத் திகைப்படைய வைத்தனர். கிறிஸ்தவர்கள் உபயோகித்த கருவிகளை பௌத்தர்களும் உபயோகித்தனர் என்பதால் மட்டும் பௌத்தம் புரட்டஸ்தாந்திய பௌத்தமாகியது என்பது மிகைப்படுத்திய கூற்றாகவே முடியும். புதிய பௌத்தத்தின் வடிவங்களைக் கொண்டு அதனை மதிப்பீடு செய்தல் தவறு. வடிவத்தோடு, அதன் உள்ளடக்கத்தையும் பார்த்தல் வேண்டும். உருவத்திலும், உள்ளடக்கத்திலும் மத்தியதர வகுப்பினரிடையே தோன்றிய பௌத்தம் புரட்டஸ்தாந்திய பௌத்தமாக இருந்தது. அது மரபுவழிப் பௌத்தத்தின் (Traditional Buddhism மறுதலிப்பாகவும் இருந்தது.

புதிய பௌத்தப் பண்பாடு

புதிய பௌத்தம் மரபுவழிப் பௌத்தத்திற்கு மாறான புதிய பண்பாட்டையும், அற விழுமியங்களையும் உருவாக்கியது. எழுச்சிபெறும் புதிய மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கைக்கு ஏற்றதான அற விழுமியங்களாகப் புதிய பௌத்தத்தின் அறநெறி அமைந்தது. மக்ஸ்வெபர் என்ற சமூகவியலாளரால் முன்வைக்கப்பட்ட புரட்டஸ்தாந்திய அறம் (Protestant Ethic) என்ற எண்ணக்கரு புதிய பண்பாட்டை விளக்கக்கூடியது. ஆய்வாளர்கள் இவ் எண்ணக்கருவையும், அதனோடு இணைந்த பல கருத்துச் செறிவுள்ள சொற்களையும், சொற் தொடர்களையும், சீர்திருத்த பௌத்தமாகிய புதிய பௌத்தத்தின் பண்பாட்டை விளக்குவதற்கு உபயோகித்தனர். அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

I. புரட்டஸ்தாந்திய அறம்

இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே, நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்பவன் நற்கதியை அடைவான். இறைவன் அவனை இரட்சிப்பார் என்று புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவம் போதித்தது. நற்கதியை அடைவதற்குரிய வழி, இவ்வுலக வாழ்வைத் துறத்தல் அன்று, இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே துறவு வாழ்க்கையை வாழுதலே ஆகும். விடாமுயற்சி, சிக்கனம், புலனின்பங்களில் அளவுக்கு மீறிய ஈடுபாடு கொள்ளாதிருத்தல், நேர்மை ஆகியன விரும்பத்தக்க அறவிழுமியங்களாகப் போற்றப்பட்டன. கடவுள் மறுப்புக் கொள்கையுடைய பௌத்தம் ‘நிர்வாணம் பிறவித் துன்பத்தில் இருந்து நீங்குதல்’ என்ற இலட்சியங்களை போற்றுவது. சீர்திருத்தவாத பௌத்தம் உலகியல் வாழ்க்கைக்கு அவசியமான அறக் கருத்துக்களையே போதித்தது. புதிதாகத் தோன்றிய மத்தியதர வகுப்பின் ஆன்மிகத் தேவைகளுக்குப் பொருத்தமான சமயப் பண்பாட்டை இது உருவாக்கியது. இப் பண்பாடு மேற்கத்தைய புரட்டஸ்தாந்தியத்தின் இயல்புகளை தன்னகத்தே சேர்த்தும் கொண்டது.

II. இவ்வுலக வாழ்க்கைசார் துறவு (This Worldly Asceticism)

சீர்திருத்த பௌத்தம் இவ்வுலக வாழ்க்கைசார் துறவு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. மரபுவழிப் பௌத்தம் துறவிகளுக்கான ஒழுக்க விதிகளை (விநய) கூறியது. சமயிகளிற்கு (Laity) வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றி அது அதிக அக்கறை கொள்ளவில்லை. சீர்திருத்த பௌத்தம் தனிமனிதனுக்கான சமய ஒழுக்க விதிகளை வகுத்தது,

III. சமயத் தனிமனிதவாதம்

ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய ஆன்மிக முன்னேற்ற வழியைத் தானே தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து நவீன பௌத்தத்தில் மேலோங்கிய கருத்தாகும். இதனைச் சமயத் தனிமனிதவாதம் என்று கூறலாம்.

IV. சமயத் தூய்மைவாதம்

மரபுவழிப் பௌத்தம், பெளத்த சமயத்திற்கு அந்நியமான இந்துக் மதக் கலப்பற்ற கடவுளர்களின் வழிபாட்டு முறைகளை இணைத்துக் கொண்டதாய் விளங்கியது. சீர்திருத்தப் பௌத்தம் இந்து தூய்மைவாதத்தை ஆதரித்தது. பௌத்த தேரவாதப் பிரிவின் ஒழுக்க நெறிகளையும் போதித்தது. பில்லி, சூனியம், பேய் ஓட்டும் சடங்குகள் பௌத்த சமயத்திற்கு அந்நியமானவை என்ற கருத்து தூய்மைவாதிகளால் பரப்பப்பட்டது. மரபு வழிப்பட்ட குடியான் சமூகத்தின் (Traditional Peasant Society) சமயத்தில் இருந்து வந்த மூடத்தனமான சடங்குகளையும், பழக்கவழக்கங்களையும் படித்த மத்தியதர வர்க்கப் பௌத்தர்கள் பௌத்தத்திற்கு அந்நியமானவை எனக் கருதினர். நகரம் சார் படித்த வகுப்பின் பௌத்த தூய்மைவாதம் சமய அடிப்படைவாதத்தின் (Fundamentalism) அம்சங்களையும் கொண்டது என்பதும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது.

இலங்கையில் முதலாளித்துவத்தின் எழுச்சியும் புதிய சமயப் பண்பாடும்

பௌத்த மத சீர்திருத்த இயக்கத்திற்கு நிதி உதவியும், வேறு பல வழிகளிலும் ஆதரவு கொடுத்தவர்கள் கரையோர மாகாணங்களில் புதிதாக எழுச்சிபெற்ற முதலாளித்துவ வகுப்பினராவர். இப் புதிய முதலாளித்துவ வகுப்பை வர்த்தக முதலாளிகள் வகுப்பு என்றே அடையாளம் காணலாம். சாராயக் குத்தகை வியாபாரம், சாராயம் வடித்தல், கைத்தொழில் ஒப்பந்த வேலைகள், காரீயச் சுரங்கத் தொழில் உள்ளூர் வர்த்தகம் போன்ற பல தொழில்களில் ஈடுபட்ட உயர்நிலை பெற்ற வர்த்தகர்களான முதலாளி வகுப்பினர் பௌத்த சமய சீர்திருத்த இயக்கத்தின் பின்னணியில் செயற்பட்டனர். கரையோர மாகாணங்களில் 18 ஆம் நூற்றாண்டில் கண்டியின் சியாம் நிகாய பிரிவைச் சேர்ந்த அஸ்கிரிய மல்வத்தைப் பீடங்களின்றும் வேறுபட்ட அமரபுர நிகாய, ராமணிய நிகாய என்பன தோற்றம் பெற்றன. இப் பிரிவுகள் கொவிகம சாதியினரின் சியாம் நிகாயவில் இருந்து வேறுபட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் பௌத்த நிகாயங்களாக இருந்தன. கராவ, சலாகம, துராவ என்னும் மூன்று சாதிகள் இப் புதிய நிகாயங்களின் சமூகத் தளமாக அமைந்தன. புதிய வர்த்தக வகுப்பினர்களில் கணிசமான எண்ணிக்கையினர் இம் மூன்று சாதிகளில் இருந்து தோன்றியவர்களாக இருந்தனர். புதிய பௌத்தத்தின் விழுமியங்களும், சமயக் கருத்தியலும் புதிய முதலாளித்துவத்தின் உலக நோக்குக்கு (World view) ஏற்றதாக அமைந்தது. பாடசாலைகளை நிறுவுதல், பத்திரிகைகளை ஆரம்பித்துச் சமயப் பிரச்சாரத்தை நடத்துதல், புத்தகயாவை இந்துக்களின் பிடியில் இருந்து மீட்டெடுத்து புனர்நிர்மாணித்தல். அநுராதபுரத்தின் பௌத்த விகாரைகளைப் புனரமைத்தல் போன்ற செயற்பாடுகளை பின்னின்று இயக்கியவர்கள் சிங்கள வர்த்தக சமூகத்தினரேயாவர். ஓல்கொட் தொடக்கி வைத்த பௌத்த தியோசோபிக்கல் சபை வர்த்தக முதலாளித்துவப் பிரிவினரின் ஆதரவைப் பெற்று வளர்ச்சி பெற்றது. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டின் பௌத்த சமய சீர்திருத்த இயக்கத்தை ‘வர்த்தகம், சமயம் என்ற இரண்டினதும் கலப்பான’ விடயம் எனச் சமூகவியலாளர்கள் விபரித்துள்ளனர். 1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அரசாங்கம், ‘வர்த்தகம் + சமயம் + அரசு’ என்ற புதிய சமன்பாட்டை உருவாக்கியது.

அநகாரிக தர்மபால

19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளின் பௌத்த சமய சீர்திருத்த இயக்கத்தில் மிக முக்கியமான வகிபாகத்தைப் பன்முக ஆளுமைமிக்கவரான அநகாரிக தர்மபால பெறுகின்றார். இவரது தந்தையார் டொன் கரோலிஸ் ஹேவவித்தாரண தளபாட உற்பத்தியாளரும் வர்த்தகரும் ஆவர். பெரும் செல்வம் படைத்த குடும்பப் பின்னணியில் தோன்றிய தர்மபால தம் வாழ்வை சிங்கள பௌத்தர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். தியோசோபிக்கல் சபையின் நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய தர்மபால, ஒல்கொட் உடன் முரண்பாடு கொண்டவராய் அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறி தாம் அமைத்த மகாபோதி சங்க நடவடிக்கைகளில் தம் முழுக் கவனத்தையும் செலுத்தினார். இவரது சகோதரர்களான எட்மண்ட் ஹேவவித்தாரணவும், டாக்டர் சீ.ஏ.ஹேவவித்தாரணவும் மதுவிலக்கு இயக்கத்தில் தீவிர பங்கெடுத்தனர். எட்மண்ட் ஹேவவித்தாரண 1915 இல் பெளத்த – முஸ்லிம் கலவரத்தின் போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளை, காய்ச்சல் நோயினால் மரணத்தைத் தழுவினார்.

அநகாரிக தர்மபாலவின் வாழ்வும், பணிகளும் வகிபாகமும் தனியாக ஆராயப்பட வேண்டியவை. பௌத்த சமய சீர்திருத்த இயக்கத்திற்குச் “சிங்கள – பெளத்த தேசியவாதம்” என்ற பரிமாணத்தை வழங்குவதிலும், புதிய பௌத்தத்தை அரசியல் பௌத்தமாக வடிவமைப்பதிலும் அநகாரிக தர்மபால முக்கிய பங்காற்றினார் என்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது.

இலங்கையின் பௌத்த சீர்திருத்த இயக்கத்தின் விளைவாக ஏற்பட்ட மாற்றங்கள் புதிய பௌத்தம் (New Buddhism) என பெர்செட் என்ற ஆய்வாளரால் அடையாளம் காணப்பட்டது. கணநாத் ஒபயசேகர அதனை புரட்டஸ்தாந்திய பௌத்தம் என வரையறை செய்தார். கொம்பிரிட்ஜ் மற்றும் ஒபயசேகர ஆக்கமான “நிலைமாற்றம் பெற்ற பௌத்தம்: இலங்கையில் சமய மாற்றம்” (1988) என்ற நூல் இக் கருத்தை விரிவாக ஆராய்ந்து விளக்குவதாக உள்ளது. கித்சிறி மலல்கொட, எச்.எல்.செனிவிரத்தின, ஸ்டான்லி தம்பையா ஆகியோரும் கவனிப்புக்குரிய ஆய்வுகளை எழுதினர். புரட்டஸ்தாந்திய பெளத்தம் நவீனமானது. “அரசியல் சார்ந்தது” என்ற அடைமொழிகளாலும் அழைக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல் செல்நெறியில் மிக முக்கிய வகிபாகத்தைப் பெறும் சிங்கள – பௌத்த தேசியவாதம் என்ற தோற்றப்பாட்டை அதன் வரலாற்றுப்  பின்புலத்தில் புரிந்து கொள்வதற்கு மேற்குறித்த ஆய்வாளர்களின் ஆய்வு நூல்களும், கட்டுரைகளும் உதவக்கூடியன. தமிழில் இவை பற்றிப் பேசப்படவேண்டும் எழுதப்படவேண்டும். அதனால் தமிழ் அறிவுலகில் சமகால சமூக அரசியல், பண்பாட்டு விடயங்களைப் பற்றிய அறிவு விருத்தியாகும்.

ஆதாரம் :

  1. Gombrich Richard F. Theravada Buddhism: A Social History from Ancient Benares to Modern Colombo. 2nd Edition, Oxford (2014)
  2. Gombrich Richard F. and Obeyesekere Gananath (1988) Buddhism Transformed: Religious Change in Ceylon.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7098 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)