Arts
8 நிமிட வாசிப்பு

நமது வியர்வையில் தான் இந்த நாடு கட்டி எழுப்பப்படுகிறது

January 2, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோப்பித்-தோட்டம்

இலங்கைத் திருநாட்டை ஒரு சடுதியான வளர்ச்சிக்கு உட்படுத்தி ஒரு நவீன பொருளாதாரமாக மாற்றி அமைத்தவர்கள் பின்னர் வந்தேறு குடிகள் என்று கொச்சையாக அழைக்கப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தான். இந்த நாட்டின் முதல் நவீன பொருளாதாரமான கோப்பிக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தொழில் புரிவதற்காக முதன் முதலாக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் இலட்சக்கணக்கான ஏக்கரில் கோப்பியைப் பயிரிட்டுவிட்டு அதனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி எழுந்த போதுதான் அதனை எங்கெல்லாம் ஏற்றுமதி செய்யலாம் என்று பலமாக யோசித்தனர். அவர்களின் முதல் இலக்கு அவர்தம் முதல் தாயகமான இங்கிலாந்து தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் இங்கிலாந்தை மட்டும் தமது சந்தை நாடாகக் கொண்டால் இலங்கைப் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தமது ஏனைய காலனித்துவ நாடுகளையும்  ஏற்றுமதி இலக்கு நாடுகளாகக் குறிவைத்து திட்டமிட்டனர்.

இத்தகைய ஒரு திட்டமிடலின் விரிவாக்கமாகவே கொழும்பு நகரம் ஏற்றுமதி நகரமாக மிக விரைந்து வளர்ச்சி பெற்றது. ஏற்றுமதிப் பொருளாதாரத்துக்கு மிக வசதியாக பாரிய துறைமுகம் ஒன்று தேவைப்பட்டது. கொழும்புத் துறைமுகம் மிக விரைவில் தென்கிழக்காசியாவில் பெரிய துறைமுகமாக வளர்ச்சி கண்டது. இங்கு தொழில் புரிய ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அழைத்து வரப்பட்டனர். கொழும்பு நகரின் போக்குவரத்துக் கைத்தொழில் மிக விரைந்து வளர்ச்சி அடைந்தது. மோட்டார் போக்குவரத்து, டிராம் வண்டிகள் போக்குவரத்து என்பன அபிவிருத்தி செய்யப்பட்டன. ரிக்‌ஷா இழுப்பவர்கள் அதனை ஒரு கைத்தொழிலாகச் செய்தனர். வர்த்தகப் பெருக்கத்திற்கு வசதியாக அச்சுக் கைத்தொழில், தபால் தந்தி தொழில்துறை என்பனவும் வளர்ச்சி அடைந்தன. கொழும்பு மாநகர சபை ஒரு பாரிய நிர்வாக அலகாக அபிவிருத்தி அடைந்தது. கொழும்பு நகரையும் நாட்டின் ஏனைய பிரதேசங்களையும் இணைக்கும் வகையில் பெருந்தெருக்கள் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என்பவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் அரசியல் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நாட்டுக்கேயுரிய முதலாவது பரம்பரைக் குட்டி முதலாளித்துவம் ஒன்றும் உருவாகியிருந்தது. இவை அனைத்துமே ஆரம்பத்தில் கோப்பிக் கைத்தொழிலை மையமாகக் கொண்டும் பின்னர் தேயிலை, இறப்பர், கொக்கோ, தெங்கு போன்றவற்றைப் பின்னணியாகக் கொண்டும் உருவாகியிருந்தன.

Old Town Hall was active until 1928

கொழும்பு மாநகரின் வர்த்தகத்தை இந்தியவம்சாவழி வர்த்தகர்களே பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். குறிப்பாக நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், வட இந்திய வர்த்தகர்களான பார்சி, போரா, மேமன், குஜராத்தியர்கள் வர்த்தகத் துறையில் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர்.

அந்தவகையில் பார்க்கும்போது கொழும்பு மாநகர சபையில் கொழும்பு வாழ் வர்த்தக சமூகத்தினரின் அக்கறைகளைக் கவனித்துக்கொள்ள பல இந்திய வம்சாவழித் தமிழர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். கொழும்பு மாநகர சபை 1866 ஆம் ஆண்டு முதன் முதலாக உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இலங்கைச் சோனகர்களும் இந்திய வம்சாவழித் தமிழர்களும் அங்கம் வகித்தனர். அக்காலத்தில் கொழும்பு நகரில் 16 சதவிகிதமானோர் இந்தியத் தமிழர்களும் 6 சதவிகிதமானோர் சோனகர்களும் மேலும் 5 சதவிகிதமானோர் வட இந்திய இனங்களைச் சேர்ந்த இந்தியர்களும் வாழ்ந்தனர். அவர்களில் முதலாவதாக கொழும்பு மாநகர சபையில் அங்கத்தவராக இடம்பெற்றவர் டீ ரிகுவர் (De Riguer) என்பவராவார்.

அதனைத்தொடர்ந்து வட இந்திய பார்சி இனத்தைச் சேர்ந்த பிராம்ஜி பிகாஜி கான் (Framji Bhikaji Khan) 1902 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கொழும்பு மாநகரசபையில் அங்கம் வகித்தார். அவரைத் தொடர்ந்து அதே குடும்பத்தைச் சேர்ந்த எம். எஃப். கான் (M. F. Khan), பி.  எஃப். கான் (B. F. Khan), ஜே. ஹோர்முஸ் ஜி (J. Hormuajee), எப். தாதா பாய் (F. Dadabhoy) முதலானோர் 1937 வரை உறுப்பினர்களாக இருந்தனர்.

கொழும்பு-மாநகர-சபை

1930 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் பரபரப்பு மிகுந்த ஒரு செயற்பாட்டாளராக இருந்த ஒரு அங்கத்தவர்தான் எம். சுப்பையா என்ற நாட்டுக்கோட்டைச் செட்டியார் இனத்தைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் ஆவார். இக்காலத்தில் ஏ. இ. குணசிங்க கொழும்பு மேயராகப் பதவி வகித்த போது உதவி மேயராகவும் இவர் பதவி வகித்தார். இவர்கள் எல்லோருமே அப்பொழுது உருவாகிக் கொண்டிருந்த தொழிலாளர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் மேம்பாட்டுக்காக குரல் கொடுத்தனர். 1900 களில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து கொழும்பு வந்து சேர்ந்த பரத குலத்தவரான ஜோர்ஜ் ஆர்.மோத்தா அப்போதைய அச்சக ஊழியர் சங்கத் தலைவராக இருந்த டொக்டர் பி.எம்.லிஸோபா பின்டோவுடன் தொழிற்சங்கச் செயற்பாட்டாளராக இணைந்துகொண்டார். அவர் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததுடன் சட்டப் பட்டம் பெற்ற சட்டத்தரணியாகவும் இருந்தார். அவர் பின்னர் இலங்கையின் மலைநாட்டு பிரதேசங்களில் பிரயாணம் செய்தபோது அங்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் அவதானித்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனது ஒளிமயமான சட்டத் தொழிலைத் துறந்து இந்திய வம்சாவழி மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இலங்கை இந்திய காங்கிரஸின் இணைச் செயலாளராக இணைந்துகொண்டார். இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது பொதுக்கூட்டம் 1940 ஆம் ஆண்டு கம்பளையில் இடம்பெற்றபோது அவரது குரல் மட்டுமே அங்கு ஓங்கி கோபத்தில் ஒலித்ததாக ஆய்வு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பல ஆண்டுகளாக இந்த அமைப்பின் இணைச் செயலாளராகக் கடமையாற்றிய போதும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதைப் பொறுத்தவரையில் அந்த அமைப்பு மிகத் தாமதமாகவே செயற்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

ஏ.ஈ.குணசிங்கவை-கேலிசெய்து-முதற்பக்கத்தில்-வெளியிட்ட-கேலிசித்திரம்

இது இப்படி இருக்க மலைநாட்டு தோட்டத் தொழிலாளர் மத்தியில் அவர்களை ஸ்தாபனபடுத்துவதற்காக ஒரு தொழிற்சங்க அமைப்பு இல்லாதிருப்பதை உணர்ந்து ஒரு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என கோதண்டராம நடேசய்யர் முயற்சிகளை மேற்கொண்டார். 1920ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளராக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கோ. நடேசய்யர் “தேசநேசன்” மற்றும் ஆங்கிலப் பத்திரிகையான “த சிட்டிசன்” ஆகிய இரண்டு கடும்போக்கு கொண்ட பத்திரிகைகளுக்கு ஆசிரியராக கடமையாற்றினார். ஏ. ஈ. குணசிங்க என்ற தொழிற்சங்கத் தலைவருடன் இணைந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டார். அதுமட்டுமன்றி 1927 முதல் 1931 வரை இலங்கை சட்ட சபையிலும் மற்றும் 1936 முதல் 1947 வரை இலங்கை அரசாங்க சபையிலும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சமூக அக்கறையுள்ள மக்கள் பிரதிநிதியாக இருந்தார். இந்த அனுபவங்களைக் கொண்டு 1931ஆம் ஆண்டு மலைநாட்டு பெருந்தோட்டக் கூலித் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை நடத்தும் பொருட்டு அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்தை தோற்றுவித்தார். இதன் பெயர் பின்னர் இலங்கை இந்தியத் தொழிலாளர் கூட்டமைப்பு என்று மாற்றி அமைக்கப்பட்டது. அவரது இந்தத் தொழிற்சங்க முயற்சியில் அவரது துணைவியார் மீனாட்சி அம்மாள், வி. பி. நாதன் மற்றும் சத்தியவாகீஸ்வர ஐயர், அவரது துணைவியார் டொக்டர் நல்லம்மாள் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

நடேசய்யரும், மீனாட்சி அம்மாளும்

மலையகத்  தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாடு நோக்கிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆரம்பகட்டச் செயற்பாட்டின் போதும் அதற்குப் பின்னரும் நடேசய்யருக்கு பேருதவியாக இருந்தவர் அவரது பாரியார் மீனாட்சி அம்மாள் தான் என்றால் அது மிகையாகாது. மீனாட்சி அம்மாளின் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் அவரது பிரசன்னத்தின் போது தொழிலாளர்களைப் பெரிதும் கவர்வதாக இருந்தன. மீனாட்சி அம்மாள் கணீரென்ற குரலில் உச்சக் குரலெடுத்து பாடும் வல்லமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தொழிலாளர்கள் முன்னிலையில் சுப்பிரமணிய பாரதியின் எழுச்சிப் பாடல்களையும் தான் எழுதிய உணர்ச்சிப் பாடல்களையும் சேர்த்தே பாடினார். அவரது அநேகமான பாடல்கள்:- “கிளர்ந்தெழுந்து வாருங்கள். உங்கள் உரிமைக்காகப் போராடுங்கள். நமது வியர்வையில் தான் இந்த நாடு கட்டி எழுப்பப்படுகிறது. உங்கள் ஒற்றுமை ஒருபோதும் வீண் போகாது. உங்கள் ஒற்றுமையே உங்களின் பலம் உரிமையை வென்றெடுக்க முன்வைத்த காலைப் பின்னுக்கு எடுக்காதீர்கள்” என்ற பாணியிலேயே இருந்தது.

அவுஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த பிராஸ்கேர்டல்  (Brasgirdle) என்ற துரை கம்யூனிசக் கொள்கைகள்பால் கவரப்பட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தபோது அவரை “கலகம் விளைவிப்பவர்” என்று நாமகரணம் சூட்டி நாட்டில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் முயற்சி செய்தது. அந்தக் கட்டளையை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கோரி இலங்கைக் கம்யூனிஸ்டுகளும் இடதுசாரிகளும் தொழிற்சங்கங்களும் 1937ஆம் ஆண்டு காலிமுகத்திடல் கடற்கரையில் பாரிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. அக்கூட்டத்தில் பேச மீனாட்சிஅம்மையாரை அழைத்தபோது அவர் பிராஸ்கேர்டலின் போராட்டத்தை ஒரு கவிதையாக்கி, அதனை உருக்கமாகப் பாடி அங்கு கூடியிருந்தோரை உணர்ச்சிவசப்படச் செய்தார். அந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வெற்றி அடையச் செய்யுமாறு ஆணித்தரமாகக் கோரிக்கை விடுத்தார். அவரது பாடல்கள் அடங்கிய நூல் ஒன்று முன் அட்டையில் அவருடைய படத்துடன் 1940ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7033 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)