Arts
8 நிமிட வாசிப்பு

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் பேரம்

December 1, 2023 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1978 ஆம் ஆண்டு, இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு, சுமார் 30 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவிடமிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமானுக்கு ஒரு அழைப்பு வந்தது. தொண்டமான், ஜனாதிபதி மாளிகையில் ஜெயவர்த்தனவை சந்தித்தார். அச் சந்திப்பை அடுத்து தொண்டமான் அவர்களுக்கு அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்பட்டது. கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியைப் பெற்றுக்கொண்ட தொண்டமான், நீண்ட காலமாக தமது மக்களுக்கு எந்தவித உரிமையும் கிடைக்காமல் போயிருந்த நிலையில், இப் பதவி தம் மக்களின் வரண்ட வாழ்க்கையில் வளமான நீரை பாய்ச்ச உதவும் என்று எண்ணினார். இந்திய வம்சாவழி மலையக தமிழ் மக்கள் தொடர்பாக, நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை மீளக் கொடுக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜே.ஆர். ஜெயவர்த்தன தொண்டமான் அவர்களிடம் உறுதிமொழி வழங்கினார். 

ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் இந்தத் தீர்மானம், அவர் மலையக இந்திய வம்சாவழி மக்கள் மீது கொண்டிருந்த அக்கறையால் ஏற்பட்டதல்ல என்பதனை அரசியல் அவதானிகள் உடனடியாகவே புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. எதிர்க் கட்சியில் அமர்ந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு என ஒரு தனியான தமிழீழக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். தொண்டமான் அந்தக் கூட்டணியை ஆதரிக்காது விலகி இருந்தார். இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் இருந்த ஓட்டு வங்கியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதே ஜெயவர்த்தனவின் குறிக்கோளாக இருந்தது.

இந்த அரசியல் தீர்மானத்தின் காரணமாக, 1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்த ஸ்ரீமா –  இந்திராகாந்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நாடற்றவர்களை இந்தியாவுக்கு அனுப்பி விடுதல் என்ற உடன்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தத் தீர்மானத்தின் மூலம்  மலையக தமிழ் மக்கள் மத்தியில் வாக்காளர் பட்டியல் அதிகரித்தது. தமது தொழிற்சங்கத் தலைவர் ஒரு அந்தஸ்து வாய்ந்த அமைச்சராக உருவாகியிருக்கிறார் என்பது தொடர்பில் மக்கள் பெருமை அடைந்தனர். அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தொண்டமான் மாறி இருந்தார். தமது கோரிக்கைகள் எல்லாம் இனி படிப்படியாக நிறைவேறும் என்ற இறுமாப்பில் மலையக மக்கள் மகிழ்ந்திருந்தனர்.

முன்பு, வடக்கு கிழக்கு அரசியல் கட்சிகளுடன் தொண்டமான் கொண்டிருந்த அரசியல் உறவால் மலையக தமிழ் மக்களுக்கு பெரும் நன்மைகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை; அது கேடுகளை உண்டு பண்ணுவதாகவே இருந்தது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து தனியான சுயாட்சி பிரதேசமாக பிரகடனம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தினர். 1976 ஆம் ஆண்டு இதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்ற வட்டுக்கோட்டை மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. இம் மாநாட்டின் போது  தொண்டமான், கூட்டணியின் உப தலைவராக இருந்தார். இதனால் தமிழீழப் போராட்டத்தில் மலையகத் தமிழர்களும் இணைந்து கொண்டார்கள் என்ற மாயத்தோற்றம் உலகெங்கும் பரப்பப்பட்டது. தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழர்களும் மலையகத் தமிழர்களும் ஒன்றிணைந்திருந்தனர். ஆனால், புவியியல் ரீதியாகவும் தமக்கே உரித்தான பிரச்சினைகளின் அடிப்படையிலும் தாம் வேறு ஒரு இனக்குழுவினராகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதை மலையக மக்கள் உணர்ந்திருந்தனர். 

இவர்களை இரண்டு இனமாக பிரித்துப் பார்க்க வடக்கு கிழக்கில் இயங்கிய அரசியல் இயக்கங்களோ தெற்கின் இனவாத அரசியல் தலைவர்களோ விரும்பவில்லை. வடக்கு கிழக்கில் யுத்தம் நிகழ்ந்த போது, இராணுவம் மலையக மக்கள்  செறிந்து வாழ்ந்த பிரதேசங்களை இலக்குவைத்து வன்முறைச் செயலிலும் இன அழிப்பிலும் ஈடுபட்டது.

இந்த இன அழிப்பு செயல்முறைக்கு 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. இன அழிப்பின் உச்சக்கட்டமாக 1981 ஜுன் மாதம் அனைவரது மனங்களையும் உலுக்கும் விதத்தில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் செயலாற்றிய காமினி திசாநாயக்க, சிறில் மேத்யூ ஆகிய இரண்டு அமைச்சர்கள் மீது இது தொடர்பாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்குப் பின்னரும், தமிழர் பிரதேசங்களில் வன்முறைகள், கலவரங்கள் இடம்பெற்றபோதும் அது தொடர்பில் ஒரு போதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த வன்முறைகள் மலையக மக்களையும் விட்டு வைக்கவில்லை. மலையகத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி நகரம், பெல்மடுள்ள, கஹவத்த, பலாங்கொட, இறக்குவானை, மாதம்பை போன்ற தோட்டக் குடியிருப்புகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலின் போது 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டனர்.

jaffna library

இது தொடர்பில் ஆய்வாளர் மு.சி. கந்தையா ‘சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்’ என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார் : 

“சிங்களவர்களின் ‘கண்ணுக்குத் தெரியாத பகைவர்கள்’ என்ற துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால், இந்த நாட்டில் பெருந் தோட்டங்களையும் வர்த்தகத் துறையையும் கட்டுப்படுத்துபவர்கள், அந்நியர்களான இந்தியர்களே. அவர்களிடமிருந்து சிங்கள மண்ணுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்காக அவர்களை இந்தியாவுக்கே துரத்தி அடிக்க வேண்டும். கொழும்பு புறக்கோட்டை மத்திய சந்தையில் இடம்பெறும் மொத்த வர்த்தகத்தில் சிங்களவர்களுக்கு 5 சதவீதம் கூட கிடைப்பதில்லை. இந்த வியாபாரங்கள் எல்லாம் இந்தியாவின் ‘போரா’ மற்றும் ‘சிந்தி’ இனத்தினரின் கையிலேயே காணப்படுகின்றன.”

black july

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற இனக் கலவரம் தொடர்பில் ராஜன் ஹுல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :   

“இந்தக் கலவரத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆகும். காயமடைந்தவர்களில் தொகை 3869. இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் 1735. தமிழரின் 1200 கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, குடியிருந்த வீடுகள், வாடகை வீடுகள் ஆயிரக்கணக்கில் அழித்தொழிக்கப்பட்டன. அரசாங்கத்தின் அகதிமுகாம்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தஞ்சமடைந்தனர். இந்த இன ஒழிப்பு நாசகாரச் செயல்கள் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.”

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

4810 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • April 2024 (21)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)
  • March 2023 (25)