Arts
18 நிமிட வாசிப்பு

வடக்கு கிழக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி : வளங்களும் வாய்ப்புகளும்

March 15, 2024 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வாழ்வாதாரத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்துவரும் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையானது நன்னீர் மீன்பிடி நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தியடைந்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் காணப்படும் நன்னீர் மூலங்களாகவுள்ள பாரிய மற்றும் நடுத்தர குளங்களும் 1,740 சிறிய குளங்களும் 1,605 சிறு குட்டைகளும் 60 அணைக்கட்டுக்களும் நன்னீர் மீன்பிடியை பெரிய, சிறிய அளவுகளில் மேற்கொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் 15,455 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டு காணப்படும் பாரிய மற்றும் நடுத்தர நீர்மூலங்களான குளங்கள் வருடம் முழுவதிலும் இந்த வாழ்வாதாரத்தில் தங்கியுள்ளோருக்கு துணை வளமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக கிளிநொச்சியில் இரணைமடுக்குளம், கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம், பிரமந்தனாறுக்குளம், அக்கராயன்குளம், வன்னிக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், குளமுறுட்டிக்குளம், ஆகிய 9 குளங்களையும் அடிப்படையாகக் கொண்டு 173,812 ஏக்கரடி நீரை கொள்ளளவாக கொண்ட 4,957 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பானது காணப்படுகின்றது. இதில் தொடர்ச்சியாக வருடம் முழுவதிலும் நீர் காணப்படும் வாய்ப்புக் காணப்படுவதால் இதனை நம்பி வருடம் முழுவதும் நன்னீர் மீன்பிடியாளர்கள் தம் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அதே போல் மன்னார் மாவட்டத்தில் அடம்பன் குளம், சாராய்குளம், மருதமடுக்குளம், பெரிய மடுக்குளம், வெளிமுறித்த மடுக்குளம், பெரிய பண்டி விரிச்சான் குளம், தட்சணாமருதமடுக்குளம், முள்ளிக்குளம் ஆகிய குளங்களின் 17,055 ஏக்கரடி நீரைக் கொள்ளளவாகக் கொண்ட 2,946 சதுர கீலோமீற்றர் நீர்ப்பரப்பு நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நீர் நிலைகளாக காணப்படுகின்றன. இதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலப்பெருமாள்குளம், ஐயன்குளம், கல்வியான்குளம், கோட்டைக்கட்டிய குளம், மல்லாவிக்குளம், மருதங்குளம், முறுகண்டிக்குளம், தென்னியங்குளம், தேராங்கண்டல்குளம், கொல்விளான் குளம், பனங்காமம் குளம், வவுனிக்குளம், கணுக்கேணிக்குளம், மதவளசிங்கம் குளம், நித்திகைக்குளம், தண்ணிமுறிப்புக்குளம், முத்தையன்கட்டுக்குளம், உடையார்கட்டுக்குளம், விஸ்வமடுக்குளம், மருதமடுக்குளம், ஆகிய 17 குளங்களின் 206,121 ஏக்கரடி நீரைக் கொள்ளளவாகக் கொண்ட 4,967 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பானது நன்னீர் மீன்பிடிக்கான வளமாக காணப்படுகின்றது. இதே போல் வவுனியா மாவட்டத்தில் அவியா மருதமடுக்குளம், சேமமடுக்குளம், கல்மடுக்குளம், வேலண்குளம், கொம்பு வைத்த குளம், மல்லிகைக்குளம், மகாறம்பைக்குளம், முனையா மடுக்குளம், நாம்பன் குளம், பம்மைப்குளம், வவுனியாக்குளம், கனகராயன் குளம், இறப்போதன்னக் குளம், மடுக்கந்தக்குளம், மகா கச்சக் கொடிக்குளம், மாமடுவக்குளம், பெரிய தம்பனைக்குளம் ஆகிய 17 குளங்களையுள்ளடக்கிய 2,585 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பை கொண்ட 19,021 ஏக்கரடி நீர் காணப்படுகின்றது.

Image 4

இதே போல கிழக்கு மாகாணத்தின் 22 சதவீதமான நீர்ப்பரப்பு நன்னீர் மீன்பிடிக்கு உகந்ததாக காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் 635 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட 63,500 ஏக்கரடி நீர் காணப்படுவதுடன் 20 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 45 நடுத்தரக்குளங்களும் 1,613 சிறிய நீர்ப்பாசனக்குளங்களும் கிழக்கில் காணப்படுகின்றன. 

இந்த வகையில் நன்னீர் மீன்பிடித்தொழிலில் வருடம் முழுவதும் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக திருகோணமலையில் மகாதிவுல்வேவா, மொறவேவா, கந்தளாய், வெண்டரசன்குளம், அல்லைக்குளம், யான் ஓயா, வன்எல,  ஜனறஞ்சன் வேவா, ஆகிய பாரிய குளங்களும் மட்டக்களப்பில் புலுகுனாவக்குளம், கடுகாமுனை குளம், மியாங்கல்குளம், உன்னிச்சை, நவக்கிரிவாகனேரி, றுகம் ஆகிய பாரிய குளங்களும் அம்பாறை மாவட்டத்தில் சங்கமாங்குளம், சடையான்தலங்குளம், தோனிக்கல் அணைக்கட்டு திட்டம், கஞ்சிக் குடிச்சாறுக்குளம், சேனனாயக்க சமுத்திரம், பல்லன் ஓயா, பன்னலகம குளம், அம்பலன் ஓயா, றம்புக்கன் ஓயா, ஏக்கல் ஓயா, நாமல் ஓயா, றொட்டைக்குளம் ஆகிய பாரிய குளங்களும் காணப்படுகிறது. 

Image 2

நடுத்தரக் குளங்களின் வகைப்பாட்டின் கீழ் திருகோணமலையில் ஆண்டான்குளம், கிலிமிட்டியாவகுளம், பரவிப்பாஞ்சான் குளம், குரங்குப்பாஞ்சான் குளம், உல்லைக்குளம், இலக்கந்தைக்குளம், பிற்றாவக்குளம், மதவாச்சியாக்குளம், புலிகண்டிக்குளம், கிவுலக்கடைக்குளம், பெரியகுளம், பெரிய எறும்புருக்கிக்குளம், மடவாக்குளம், ஏதண்டமுறிப்புக்குளம், நீலாப்பணிக்கன்குளம், அட்டச்சக்கல்குளம், மருதங்கேணிக்குளம், மகிழூர் பெரியகுளம், போறதீவு பெரிய குளம், ஆனைக்கட்டுக்குளம், சீவகப்பற்றுக்குளம், பளுகாமம் பெரியகுளம், கிறிமிச்சையோடைக்குளம், தரவைக்குளம், மகிழடித்தீவுக்குளம், தும்பங்கேணி, புனானை, வடமுனை, கித்துள், வெலிகக்கண்டிய ஆகிய குளங்களும், அம்பாறை மாவட்டத்தில் ரெம்பிற்றிய குளம், லகுகலகுளம், பாணமகுளம், ரடில்லா குளம், றூவுஸ்குளம், போனபொலகுளம், வம்மியடிகுளம், நாவலகுளம், செம்மணிக்குளம், தலப்பிட்டி ஓயா அணைக்கட்டு ஆகிய குளங்களும் காணப்படுகின்றன. 

இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் 28 பாரிய குளங்களின் கீழ் 1,367,514 ஏக்கரடி நீரும் ஆண்டு முழுவதும் நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடியதாக காணப்படுவதுடன் 1,613 சிறிய நீர்ப்பாசன நீர் மூலங்களின் கீழ் பருவகாலமாகவும் நன்னீர் மீன்பிடி மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ் வளங்களை அடிப்படையாக கொண்டு 9,768 குடும்பங்களும் ஆறுகள், ஓடைகள் சார்ந்து 2,622 குடும்பங்களும் நேரடியாக நன்னீர் மீன்பிடித்துறையில் வாழ்வாதாரம் பெற்று வருகின்றன. இவர்களது மீன்பிடிக்கென 2,430 சிறிய வள்ளங்கள் இம்மாகாணத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 20,120 மெற்றிக் தொன் மீனை வருடாந்தம் மொத்தத் தேவைக்கு இம்மாகாணம் கொடுத்து வருகிறது. இது இலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் 22.2 சதவீதமாகும். ஆனாலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டிலும் நன்னீர் மீன்பிடி துறைக்கு ஏதுவான வருடம் முழுவதும் நீரைப் பெறக்கூடிய பாரிய மற்றும் நடுத்தரக் குளங்கள் காணப்பட்ட போதும் இத்தொழில் துறையிலிருந்து உச்சப்பயன் பெறப்படவில்லை என்ற குறைபாடும் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக நன்னீர் மீன்பிடி தொழில்துறை தொடர்பில் எதிர்கொள்ளப்படும் பிரதான பிரச்சினைகளை பகுத்தாய்வு செய்வது இத்தொழில் விருத்தி தொடர்பில் அவசியமானதாகும். 

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நன்னீர் மீன்பிடியிலுள்ள சவால்கள்

வடக்கிலும் கிழக்கிலும் நன்னீர் மீன்பிடித் தொழில்துறையில் ஈடுபடும் மீன்பிடியாளர்கள் மீன்பிடி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்:

  1. மீன்பிடிக் கலங்களை பெற்றுக்கொள்ள முடியாமை.
  2. மீன்பிடி வலைகளை வருடாந்தம் புதிப்பித்துக் கொள்ள முடியாமை.
  3. குளங்களில் அதிகரித்து வரும் முதலைகளால் ஏற்படும் தொழில் நட்டங்கள்.
  4. மீன் குஞ்சுகளையும் இறால் குஞ்சுகளையும் சேமிப்பதிலுள்ள சவால்கள்
  5. சட்ட ரீதியான மீன்பிடி முறைகளுக்கு அப்பால் செயற்படும் தொழிலாளர்கள்.
  6. அமைப்பு ரீதியாக ஏற்படும் நிர்வாக முரண்பாடுகளும் அவற்றை வழிப்படுத்தலில் காணப்படும் இடைவெளிகளும்

நன்னீர் மீன்பிடிக் கலங்களும் நன்னீர் மீன்பிடியும்

சிறிய நீர்ப்பாசன குளங்களிலும் பாரிய நீர்ப்பாசன குளங்களிலும் மீன்பிடியில் ஈடுபடும் வறிய மீன்பிடியாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்வதற்காக பாதுகாப்பற்ற தெப்பங்கள், மிதவைகள், ரயர்கள் போன்றவற்றை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் போது அதிகளவில் முதலைகளினால் ஆபத்துகள் உள்ளாவதுடன் மிகக் குறைந்த தூரத்தில் மட்டும் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக மிகக் குறைந்த வருமானத்தையே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வகையில் சிறிய ‘கனோய்’ வகை படகுகளையாவது அவர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் 2,430 சிறிய படகுகளும் வடமாகாணத்தில் 2,420 சிறிய படகுகளும் பாவனையிலுள்ளன. கடல் தொழில்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அளவுக்கு நன்னீர் மீன்பிடிப் படகுகளை வழங்குவதில் நிறுவனங்களோ அரசோ அதீத அக்கறை காட்டுவதில்லை என்பதால் போதிய வளங்கள் உள்ள இவ்விரு மாகாணங்களிலும் எதிர்பார்க்கப்படும் விளைவைப் பெறுவதில் வறிய மீனவர்கள் நெருக்கடியை எதிர் கொள்கின்றனர். சிறிய படகுகளை பெற்றுக் கொண்ட மீனவர்களும் கூட படகுகள் காணாமல் போதல், பொருத்தமான இறங்குதுறை காணப்படாமை போன்ற காரணங்களால் அதனை பயன்படுத்தாது உள்ளனர். அதனைவிட நிதி வழங்கும் தொண்டு நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒன்றினைத்து படகுகளை வழங்குவதால் உடமை பாராட்டுதல், பாராமரிப்பு செய்தல் போன்றனவற்றில் உள்ள பிரச்சினைகளால் அவை கைவிடப்பட்டுகின்றன.

Image 1

மீன்பிடி வலைகளும் அவற்றை இற்றைப்படுத்துதலும்

நன்னீர் மீன்பிடிக்கென பாவிக்கப்படும் வலைகள் முதலைகளின் தாக்கம், காட்டுத் தடிகளில் சிக்குதல், தவறான வலையிடல் முறை போன்ற காரணங்களால் ஆறு மாத காலத்தினுள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதனால் வருடத்தில் இரு தடவை அவற்றை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த முதலீட்டை இடுவதற்கு சாதாரண மீனவர்களுக்கு, சேமிக்கப்பட்ட நிதி எதுவும் கையிருப்பில் இருப்பதில்லை என்பதனால் வலைகளை இற்றைப்படுத்தும் தேவையை அவர்கள் உரிய காலப்பகுதியில் நிறைவேற்றுவதில்லை. அத்துடன் ஒரு தடவை வலைகள் கிடைத்து அது பயன்படும் மட்டும் தொழிலில் ஈடுபட்டு பின்னர் ஒதுங்கிக் கொள்ளும் போக்கே அதிகளவில் மீனவர்களிடத்தில் காணப்படுவதால் தொடர்ச்சியான வருவாய் ஒன்றை உறுதி செய்வதற்கு முடியாதுள்ளது. மேலும், சேமிப்பு பழக்கமற்ற மீனவர்கள் பெருந்தொகை முதலீடு ஒன்றை வலைகளுக்காகச் செய்ய முடியாதுமுள்ளனர். உண்மையில் மீன்பிடிக்கப்படும் காலத்திலேயே வருவாயில் ஒரு பகுதி வலைகளின் முதலீட்டுக்காக ஒதுக்கப்படவில்லையாயின் இந்த பிரச்சினைக்கு நடைமுறைக்கு சாத்தியமான தீர்வை எட்ட முடியாது என்பதால், விற்பனை வருமானத்தில் இந்த ஒதுக்கீட்டை பிடித்து வைக்கும் முறையினை நிறுவன அல்லது சங்க மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.

அதிகரித்து வரும் முதலைகள் 

குளங்களை மையப்படுத்தி ஆயிரக்கணக்கில் நிரம்பல் செய்யப்படும் மீன் குஞ்சுகளும் இறால் குஞ்சுகளும் வகை தொகையின்றி பெருகி வரும் முதலைகளினால் உரிய வளர்ச்சியை எட்ட முதலே இல்லாமல் ஆக்கப்படுவதுடன் வலைகளில் சிக்கியுள்ள சந்தர்ப்பத்திலும் முதலைகள் அவற்றை உண்பதனால் நன்னீர் மீன்பிடிக்கு முதலைகள் பாரிய சவாலாகவே காணப்படுகின்றன. விவசாயிகளின் பயிர்ச் செய்கையில் குரங்கு பெருக்கம் எவ்வாறு சேதங்களை விளைவிக்கிறதோ அதே அளவில் நன்னீர் மீன்பிடியில் முதலைகளின் தாக்கம் காணப்படுகிறது. மரங்களில் பெருவாரியாக தங்கியிருக்கும் குரங்குகள் மலைப்பாம்புகளால் உணவாக்கப்பட்டதால் அவற்றின் பெருக்கம் சமனிலை உடையதாகவே இருந்தது. நாம் மலைப்பாம்பு உட்பட அனைத்து வகைப் பாம்புகளையும் அழிப்பதில் காட்டிய தீவிரம் குரங்குப் பெருக்கத்துக்கு காரணமாகியுள்ளது. இதே போலவே முதலைகளும் வகை தொகையின்றி பெருகி வருகின்றன. குளங்களுக்குச் செல்லும் ஆடு, மாடுகள் அவற்றுக்கு இரையாவதும் சில சந்தர்ப்பங்களில் மீனவர்களும் கூட பாதிக்கப்படுவதையும் நாம் காணமுடிகிறது. அண்மைய நாட்களில் தென்னிலங்கைப் பகுதியிலிருந்து முதலைகள் பிடிக்கப்பட்டு, வடக்கு-கிழக்கு மாகாணக் குளங்களில் விடப்படுவதால் முதலைகளின் பெருக்கம் நியாயமற்றுப் பெருகுகிறது எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

மீன் மற்றும் இறால் குஞ்சுகளின் சேமிப்பு

பருவகாலக் குளங்களில் கட்டாயமாகவும், பாரிய நடுத்தரத் குளங்களில் தேவை பொறுத்தும் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்து அவற்றை உரிய வளர்ச்சியின் பின் அறுவடை செய்வதன் மூலம் நன்னீர் மீன்பிடித் தொழில் விருத்தியடைந்து வருகிறது. மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வது இப்போது அரச மற்றும் அரச சாரா நிதியில் மட்டும் இடம் பெற்று வருகிறது. இந்த நிதி மூலங்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பருவகாலக் குளங்கள் பயனற்றுப் போகின்றன. பாரிய நடுத்தரக் குளங்களும் நீர்ப்பாசனக் குளங்களாக காணப்படுவதால் நீர் வெளியேறும் போதும் பெருமளவு மீன்கள் வெளியேறிச் செல்வதனால் மீன் இழப்பு அதிகமாகிறது.

Image 3

இலங்கையில், மீன் குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் 13 இடங்களில் செயற்பட்டு வருகின்றன. கலாவேவ, தம்புள்ள, செவனபிட்டிய, இரனைமடு ஆகிய நான்கு பகுதிகளிலேயே வடக்கு கிழக்கிற்கான மீன்குஞ்சுகள் பெறப்பட்டு வருகின்றன. உள்ளூரில் தனியார் முதலீட்டில் கிளிநொச்சியில் ஒருவரும், முல்லைத்தீவில் 03 பேரும் சிறிய அளவில் இவ் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதுடன் முத்தையன்கட்டு, மற்றும் புது முறிப்பில் சிறிய அளவிலான குஞ்சு பொரிக்கும் நிலையங்களும் செயற்படத் தொடங்கியுள்ளன. கிராமிய மீன்பிடிச் சங்கங்கள் தமது சங்க நிதியில் இருப்பை மேற்கொள்ள, ஏலமிடுவதன் மூலம் வருமானத்தை திரட்டும் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும், சங்கங்கள் செயற்படாமை – களவாக மீன்பிடித்தல் – பிரதேச ரீதியான வேறுபாடுகள் காரணமாக இது ஒழுங்காக செயற்படுத்தப்படுவதில்லை. இதனால் மீன் குஞ்சுகளை இருப்பிடுவதற்கான செயல்படு நிதி ஒன்றை குளங்களின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள முடியாதுள்ளது. மீன் மற்றும் இறால் உற்பத்தியில் இது பெரும் சவாலாகக் காணப்படுவதுடன், முறை சார்ந்த தொழில் துறையாக உருவாகுவதிலும் இது சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனைவிட மீன்களுக்கான உணவின் உள்ளீட்டு பொருட்களான சோயா, சோளம், என்பவற்றின் அதிகரிப்பு காரணமாக, அவற்றின் உணவு நுகர்வு (feed consumption) அதிக செலவுடையதாக மாறியுள்ளது. 1 கிலோ மீனை உற்பத்தி செய்ய 900 ரூபா தேவைப்படும் போது மீனின் விலை 500 ரூபாயாக காணப்படின் வளர்ப்புத் திட்டங்களை செயற்றிறன் உடையதாக கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் வளர்ப்பு திட்டங்களில் ஈடுபடும் நாட்டமும் குறைந்து வருகிறது.

வளர்ப்பு திட்டங்களும் குடாக்கள் ஏரிகளின் பயன்பாடும் 

மீனினங்களையும், அட்டை, கடல்பாசி போன்றவற்றையும் வளர்க்கும் பொறிமுறையின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல செயல் திறன் வாய்ந்த பகுதிகள் இயற்கையாக அமைந்துள்ளன. வட மாகாணத்தில் பூநகரி, இரனைதீவு பிரதேசம் ஆகியன அட்டை மற்றும் கடல்பாசி வளர்ப்புக்கேற்ற பொருத்தமான பிரதேசங்களாக காணப்படுகின்றன. பண்ணை அடிப்படையில் அட்டை வளர்ப்பு இப்போது இப்பிரதேசங்களில் அறிமகமாகி வருகிறது. இதேபோல மன்னார் பகுதியிலும் அட்டை வளர்ப்புக்கேற்ற பகுதிகள் பண்ணை முறையாக வளர்ச்சியடைந்து வருகிறது. பாலை மீன் வளர்ப்பிற்கான வாய்ப்புகள் குடமுறுட்டி மற்றும் மண்டல்கல் ஆறு பகுதிகளில் காணப்படினும், அது இன்னமும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. 

இதே இயற்கை வளர்ப்புத்திட்டம் இடம்பெறும் சுண்டிக்குளம், ஆனையிறவு கடல் நீரேரிப் பகுதிகள் இயற்கையாக நன்னீரும் கடல்நீரும் கடலில் கலக்கும் பகுதிகளாகக் காணப்படுவதால் கால போகத்தில் கடலிலிருந்து இறால் இப்பகுதி நோக்கி வந்து பெருமளவு முட்டைகளை இடுகின்றன. பின்னர் அம் முட்டைகளை கடலுக்கு திரும்பி செல்லாது தடுப்பதன் மூலம் இப்பகுதி மீனவர்கள் நான்கு மாதங்களில் நிறைந்த அறுவடையொன்றைப் பெற்றுக் கொள்கின்றனர். இதில் 2000 வரையான மீனவக் குடும்பங்கள் தொடர்ச்சியாக நன்மை பெற்று வருவகின்றன. ஆயினும் அதிகளவு இயற்கைச் செயற்பாட்டின் காரணமாக பெருமளவு பொரித்த இறால் குஞ்சுகள் கடலை நோக்கி மீளத் திரும்பிச் செல்வதால் இத் திட்டத்தில் சிறந்த அறுவடை கிடைப்பதில்லை. மேலும் இரணைமடுக் குளத்தின் நீர், பெரும் போகத்தில் கடலுக்குள் இப்பகுதியூடாகச் செல்வதை தடுக்கும் அல்லது சேமிக்கும் பொறிமுறை ஒன்றைச் செய்வதன் மூலம் இப்பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் இறால் வளர்ப்பை மேற்கொள்ளக் கூடிய சாத்தியங்களை உருவாக்கலாம். ஆறுமுகம் திட்டத்தின் கீழ் இதனை நன்னீராக்கி யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் வளமாக்குவதற்கான ஏற்பாடுகள் 1960 களில் முன்மொழியப்பட்டிருந்ததும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இதே போல கிழக்கு மாகாணத்திலும் 7790 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கடலும் நன்னீரும் கலந்த வளர்ப்புத் திட்டங்களுக்கு பொருத்தமான பிரதேசங்கள் காணப்படுகின்றன.

சட்ட ரீதியற்ற தொழில் முறைகளும் நன்னீர் மீன்பிடியும்

நன்னீர் மின்பிடித் தொழில் துறையில் சட்ட ரீதியாக பாவிக்கக்கூடாத வலைகளையும் வெடிகளையும் பாவித்து மீன் பிடிக்கும் சில மீனவர்களால் மீன்பிடிச் சங்கங்கள் பாரிய சவால்களை எதிர் கொண்டுள்ளன. பிடிக்கும் மீன்கள் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தால் மீன்பிடி உற்பத்தி அதிகரிப்பதுடன் நுகர்வோருக்கு தரமான உணவும் கிடைக்கும். நன்னீர் மீன்களே வறிய மக்கள் இலகுவாக புரத நுகர்வை நிறைவு செய்யக்கூடிய மூலமாக அமைவதால் நன்கு வளர்ச்சியடைந்த மீன்களை அறுவடை செய்வது குறித்து கவனமெடுக்க வேண்டும். மாறாக தடை செய்யப்பட்ட வலைகளை பாவிக்கும் போது வளர்ச்சி குறைந்த மீனினங்கள் பெருமளவில் பிடிக்கப்படுவதுடன் சில சந்தர்ப்பங்களில், எவ்வித பாவனைக்கும் உட்படுத்த முடியாத மீன்களை நிலத்தில் கொட்டிவிடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. தங்கூசி வலையென அழைக்கப்படும் இவ்வலைகள் நன்னீர் மீன்பிடியில் குறைந்த அளவில் பாவிக்கப்பட்டு வருவது நிம்மதி தரும் விடயம். நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை இதனைக் கட்டுப்படுத்தி வருகிறது. அதிகார சபை அலுவலர்கள் நன்னீர் மீன்பிடிக் குளங்கள் அனைத்திலும் தமது கண்காணிப்பைச் செய்வதுடன், நன்னீர் மீன்பிடிச் சங்கங்களை சட்டபூர்வமாக உருவாக்கி பதிவுகளை மேற்கொண்டு முகாமைத்துவம் செய்து வருவதால் கிராமிய மட்டத்தில் பல பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்கள் மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தால் முகாமை செய்யப்பட்டு வரும் அதேவேளை, சிறிய நீர்ப்பாசன நீர் மூலங்கள் அனைத்தும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றன. இந்தத் திணைக்களம் தன்னிச்சையாக எடுக்கும் நீர் வழங்கல் சம்பந்தமான தீர்மானங்கள் சில முரண்பாடுகளை உண்டாக்கி வந்தாலும் ஆகக் குறைந்த மட்ட நீரினை குளங்களில் பேணுவதில் அவை ஒத்திசைவோடு தான் செயற்பட்டு வருகின்றன. குளங்களின் புனரமைப்புக்காக முழுமையாக நீரைத் திறந்து விடுதல், நீரைச் சேமிக்காது விடுதல் போன்ற சந்தர்ப்பங்களில் பருவகால தொழில் இழப்பும் நட்டமும் மீன்பிடியாளர்களுக்கு ஏற்படுகிறது. இக்காலப்பகுதியில் பாதிப்படையும் மீனவர்களுக்கு தொழில் இழப்பு நிவாரணங்கள் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. 

நன்னீர் மீன்பிடி உற்பத்தியின் பங்குபற்றல்

வடக்கு கிழக்கு மாகாணங்களின் நன்னீர் மீன்பிடி உற்பத்தி பற்றி ஆராயும் போது கிழக்கு மாகாணத்தில் 20,120 மெற்றிக்தொன் மீன்கள் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நாட்டின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியின் 22 சதவீதமாக அமைகிறது. வடக்கு மாகாணத்தில் 800 மெற்றிக்தொன் நன்னீர் மீன் உற்பத்தி வருடாந்தம் இடம்பெற்று வருகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் உள்ளூர் நுகர்வாளர்களால் நுகரப்படும் நன்னீர் மீனின் அளவு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணம் இம் மாகாணங்களில் அதிகளவு கடல் மீன்கள் சந்தைக்கு வருவதும் கடல் சார்ந்த மீன்கள் விரைவாக நுகர்வாளருக்கு சென்று சேருவதுமாகும். இப்பகுதியில் வசிக்கும் பெருமளவான மக்களின் உணவுப்பழக்கமும் இதற்கு காரணமாகும். இதனால் வடக்கு மாகாணத்தில் பிடிக்கப்படும் அதிகளவான நன்னீர் மீன்கள் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் தென்னிலங்கைக்கு ஏற்றப்படுகின்றன. அங்கு ஏற்றப்படும் மீன்களுக்கான கொள்முதல் விலையும் குறைவாகவே காணப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்கும் குளிரூட்டிகள், ஐஸ் வசதிகள் வடக்கு, கிழக்கில் இல்லாமையினால் குளங்களிலிருந்து மீன்களை எடுத்துச் செல்வதும் சிரமமாகிறது. 

Image 5

உற்பத்திக்கு பங்களிப்புச் செய்யும் மாவட்டங்கள் எனப் பார்க்கும் போது வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 536 மெற்றிக்தொன் நன்னீர் மீன்பிடி இடம் பெறுகிறது. அதனையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில 179 மெற்றிக்தொன் மீன் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 12,480 மெற்றிக்தொன்னும் திருகோணமலை மாவட்டத்தில் 4,850 மெற்றிக்தொன் உற்பத்தியும் கிடைத்து வருகிறது. இந்த நான்கு மாவட்டங்களுமே நன்னீர் மீன்பிடி தொடர்பில் அதிக வாய்ப்புள்ள மாவட்டங்களாக காணப்படுகின்றன. 

இந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் வாழ்வாதார வளங்களில் முக்கியமான துறையாக நன்னீர் மீன்பிடித்துறை செயற்பட்டு வருகின்றது. எனினும் இத் துறை சார்ந்து மெய்யான வளங்களின் உச்சப்பயன் அடையப்படவில்லை என்பதனால் புதிய முதலீட்டு வாய்ப்புகள் பற்றிக் கலந்துரையாடுபவர்கள் இத் துறை சார்ந்து பல முதலீடுகளை செய்யக்கூடிய வாய்ப்பையும் கவனத்திலெடுக்க வேண்டும். குறிப்பாக வளர்ப்புத் தொழில்நுட்பம் சார்ந்த மீன்பிடி முறைகளைக் கொண்டு அதிகளவிலான அந்நியச் செலாவணியை உழைக்கக் கூடிய அட்டை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு போன்ற துறைகளை அபிவிருத்தி செய்து வளங்களை உச்ச பயன்பாட்டிற்கு கொண்டுவரலாம். அடையாளப்படுத்தப்பட்ட பிரதேச வளங்களைப் பயன்படுத்துவது உள்நாட்டு வருமானம், வேலைவாய்ப்பு ஆகியவற்றோடு நாட்டின் ஒட்டுமொத்த நலனிற்கும் உகந்ததாக அமையும் எனலாம். 

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4472 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)