Arts
10 நிமிட வாசிப்பு

20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் சாதி

May 16, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

மொழிபெயர்ப்புக் கட்டுரை : க. அருமைநாயகம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை மிகத் தெளிவாக வெளிப்பட்டது. படித்த முற்போக்குச் சிந்தனையுடைய உயர்சாதி இந்துக்கள் சிலரும், தாழ்ந்த சாதியினர் எனப்படுவோரும் சாதிய நடைமுறைகளையும், அதன் தீங்கான  அம்சங்களையும் ஒழிக்க வேண்டும் என்று முயற்சித்ததைக் காண்கிறோம். ஒடுக்கப்பட்டோர் சமத்துவ உரிமைகளையும் சலுகைகளையும் கோரிநின்றனர். மரணச் சடங்கின் போது மேளமடித்தல், பாடசாலைகளில் தம் பிள்ளைகளிற்குச் சம ஆசனம், கோயில்களில் உள்மண்டபத்திற்குள் சென்று வழிபடுதல், நவீன பாணி உடைகளை அணிந்து கொள்ளுதல் ஆகிய உரிமைகளை அவர்கள் கோரிநின்றனர்.

கலகங்கள்

மேற்குறித்த விடயங்கள் சார்ந்த பிணக்குகள் வேளாளர்களுக்கும் சாதிப் படிநிலையில் கீழ்ப்பட்டவர்களுக்கும் இடையிலான கலகங்களாக வெடித்தன. 1914 ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பில் தச்சர்களுக்கும்  வேளாளாருக்கும் இடையில் கலகம் மூண்டது. இதே ஆண்டில் தன்னக்காரக்குறிச்சியில் பொற்கொல்லர்களுக்கும் வேளாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 1922 இல் கெருடாவில் (பள்ளர்) , வரணி (பள்ளர்களும் நளவர்களும்) உரும்பிராய் (பள்ளர்), சிவியாதெரு (வண்ணார்) ஆகிய இடங்களில் கலகங்கள் ஏற்பட்டன. 1926 இல் மூளாய் (நளவர்) யாழ்ப்பாணம் (நளவர்) ஆகிய இரு இடங்களில் கலகங்கள் நிகழ்ந்தன.  பெரும்பாலான இந்தக் கலகங்கள் பள்ளர்,  நளவர் ஆகிய இரு சாதியாரும்  சடலங்களை எரிப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டைகளாகும். 1931 ஆம் ஆண்டில் பிரான்பற்று என்ற இடத்தில் சாண்டார் சாதியினர் பள்ளர் சாதியாட்கள் இறந்த ஒருவரின் சடலத்தை எரிப்பதைத் தடுத்தப்போது கலகம் மூண்டது. அதே ஆண்டில் இந்தக் கிராமத்தில் மீண்டும் கலகம் மூண்டது. இதனால் மூன்று மாதகாலம் இப்பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு தொடர்ந்தது.

1933 ஆம் ஆண்டில் பறையர் சாதியைச் சேர்ந்த உரோமன் கத்தோலிக்கர் ஒருவர் சப்பாத்து அணிந்து கொண்டபோது கலவரம் மூண்டது. இக்கலவரத்தின் போது பலர் கொல்லப்பட்டனர். புங்குடுதீவு என்ற இடத்தில் உயர் சாதியினர் பறையர் சாதியினரின் வீடுகளுக்கு தீவைத்துக் கொழுத்தினர்.

சமயம் மாறுதல்

மேற்குறித்த சாதிக் கலவரங்கள் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த பாதிரி ஒருவர் பெரும் எண்ணிக்கையிலான பள்ளர்களையும், நளவர்களையும் கத்தோலிக்கத்திற்கு மாற்றுவதற்குத் துணைச் செய்தது. இக்கத்தோலிக்க சமய குருவின் செயல்கள் உயர் சாதியினரின் சாதிப் பெருமையை ஊறுசெய்து, அவர்களைக் கோபம் கொள்ளச் செய்தது. அவர்கள் இதனால் வன்முறையில் இறங்கினர். இவ்வித சூழலில் கத்தோலிக்கத்திற்கு ஆட்களைச் சமயம் மாறச் செய்தமை பற்றி கத்தோலிக்கரான எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

கத்தோலிக்கத்திற்கு ஆட்களை மதம் மாறச் செய்தமை

இந்த அடிமைச் சாதிக் குழுமங்கள் உயர் சாதியினரால் துன்புறுத்தப்பட்டதால், அந்தச் சூழ்நிலையை குறிப்பிட்ட பாதிரியார் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். இச்சாதிக் குழுமங்கள் பெருந்தொகையில் கத்தோலிக்கம் காட்டிய இலட்சியத்தை ஏற்று அதனைத் தழுவிக் கொண்டனர் என்றோ, குறிப்பிட்ட பாதிரியார் தீவிரமான உணர்ச்சிவேகத்தோடுச் செயற்பட்டார் என்றோ கூறுவது விடயங்களை மிகை எளிமைப்படுத்துவதாகும்.  சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் கத்தோலிக்கத்தைத் தழுவினால் அவர்களைச் சமூக பொருளாதார நிலையிலும் கல்வியிலும் உயர்த்திவிடுவதற்கு சுவாமி ஞானப்பிரகாசர் வாய்ப்பான நிலை இருப்பதை உணர்ந்து செயற்பட்டார். இவ்வாறு கத்தோலிக்கத்திற்கு மாறியவர்கள் எண்ணிக்கை 3000 என்று குறிப்பிடப்பட்டது. ஆயினும் சிறிது காலத்தின் பின் கத்தோலிக்கத்தைக் கைவிட்டு நீங்கியவர்களை இப்புள்ளி விபரம் உள்ளடக்கவில்லை என்றே கூறவேண்டும். ஞானப்பிரகாசர் 37 கத்தோலிக்கத் தேவாலயங்களை நிறுவினார். இவற்றுள் ஒன்று வேளாளருக்குரிய கத்தோலிக்க தேவாலயம் ஆகும். ஏனையவை நளவர்(12),  பள்ளர்(10), துரும்பர்(4) குருகுலத்தோர்(1), பறையர்(2) என்று வெவ்வேறு சாதிகளுக்குரிய தேவாலயங்களாகும். இவற்றோடு நான்கு தேவாலயங்கள் மேற்கூறியச் சாதிகள் சிலவற்றின் பொதுக் கோவில்களாகவும் ஏனைய மூன்று யாவருக்கும் பொதுவானவையாகவும் இருந்தன.

ஆலயப்பிரவேசம் என்ற பிரச்சினையில் நீதிமன்றங்கள் பழமையான வழக்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தீர்ப்புக்களை வழங்கின. இந்தியாவில் உயர்சாதியினரின் கோவில்களுக்குள் வண்ணார் சாதியினரை அனுமதிப்பதில்லை. ஆனால் அம்பட்டர் சாதியினர் அங்கு அனுமதிக்கப்படுவர். இதற்கு மாறாக யாழ்ப்பாணத்தில் கோவில்களுக்குள் பிரவேசிப்பதற்கு வண்ணார் அனுமதிக்கப்படுவதையும், அம்பட்டர் சாதிக்குத் தடையிருப்பதையும் காணலாம். 1910 ஆம் ஆண்டில் பலாலியில் உள்ள கோவில் ஒன்றில் அம்பட்டர் சாதியினர் நுழைவதற்கு தடுத்தமையை எதிர்த்து மனுச்செய்த போது உயர் நீதிமன்றம் அம்மனுவை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கியது. இந்து சமயம், வழக்கம் என்பனவற்றின்படி ஆலயம் ஒன்றிற்குள் அம்பட்டர் சாதியைச் சேர்ந்தவர் நுழைவதற்கு உரிமை கிடையாது. கோவிலின் முகாமையாளர்கள்  அவ்விதம் நுழைவதைத் தடுக்கும் உரிமை உடையவர்களாவர். நீதிமன்றம் இதற்காக தடையுத்தரவை வழங்கலாம் என்று உயர் நீதிமன்றத்தீர்ப்புக் கூறியது.

இந்தியாவில் ஏற்பட்ட சீர்திருத்தங்களின் தாக்கம்

மேற்குறித்த வகையான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் படித்த உயர்சாதி இந்துக்களிடையே படிப்படியாக மனமாற்றமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்த மனமாற்றம் ஒருபாதி சுயமாக ஏற்பட்டது. மறுபாதி அயலில் உள்ள இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்களின் பாதிப்பால் ஏற்பட்டது என்று கூறலாம். இந்திய தேசிய இயக்கம் மகாத்மா காந்தியின் திறமைமிகு வழிகாட்டலின்படி ஒரு வெகுஜன இயக்கமாயிற்று. இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சமூக விடுதலை என்ற உறுதிமொழியை வழங்காமல் மகாத்மா காந்தியால் அவர்களை பொதுநீரோட்டத்திற்கு கொண்டுவந்திருக்க முடியாது. காந்தியைப் போன்றே இலங்கையின் சீர்திருத்தவாதிகளும் ராணடேயின் கருத்துக்களால்  கவரப்பட்டனர். ராணடே சுதந்திரம் என்பதை மனிதர்களின் அனைத்து வாழ்க்கை அம்சங்களிலும் ஒருங்கிணைந்த சுமூக நிலையும் அமைதியும் ஏற்படுவதாகும் என்று விளக்கினார். அவர் கூற்றொன்று வருமாறு.

சிலர் அரசியல் உரிமைகளின்படி கீழ்ப்படியில் வைக்கப்படும்போது அத்தகைய சமூகமுறைமையைச் சிறந்தது என்று கூறுவது எப்படி? அது பகுத்தறிவு நீதி என்ற இரண்டிற்கும் முரணான சமூகமுறைமை ஆகும். அங்கே கீழ்ப்படியில் உள்ள ஒருவர் தனது அரசியல் உரிமைகளையும், அதன் பயன்களையும் பெறுவது சாத்தியமில்லை. சமூக ஒழுங்கமைப்பு பொருத்தமற்றதாக இருக்கும் போது கீழ்நிலையில் உள்ளோர் பொருளாதார நிலையில் உயருவதும் சாத்தியமாகாது. சமய நடைமுறைகள் தாழ்வுற்றுக் கீழ்மையடையும் போது, அச்சமயத்தினைச் சேர்ந்தவர்கள் கீழ்நிலையில் கிடந்து உழலும் போது, அவர்கள் பொருளாதார நிலையில் உயருவது எங்கனம்? இவ்விடயங்கள் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதும் தங்கியிருப்பதும் தற்செயல் அன்று. இயற்கையின் விதியே அப்படித்தான் உள்ளது”.

Gandhi, harijan work at madras

மேற்குறித்தவை போன்ற உயர் லட்சியங்களில் நம்பிக்கை கொண்டவர்களான காந்தியும் அவரது சீடர்களும் சாதியத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். அவர்களுடைய கிளர்ச்சி, அழுத்தம் காரணமாக உயர் சாதியினர் ஆலயப் பிரவேசம் தொடர்பான நடைமுறைகளைத் தளர்த்த முன்வந்தனர். சென்னை மாநில அரசில் ஆலயப் பிரவேச சட்ட மசோதா கொண்டுவரப்படவும் சட்டமாக்கப்படவும் பிராமணத் தலைவர்களான ராஜகோபாலாச்சாரியாரும், டாக்டர் ரி.எஸ்.எஸ்.ராஜனும் துணை நின்றனர். இன்னொரு பிராமணத் தலைவரான டாக்டர் ஏ.வைத்தியநாத ஐயர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்றார். இத்தகைய நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தின் படித்த வர்க்கத்தினரின் மனச்சாட்சியைத்தொட்டு அவர்களை விழிப்படையச் செய்தது. இதனை விட இந்தியச் சஞ்சிகைகளான மொடோர்ன் ரிவியு, இந்தியன் ரிவியு,  சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும், சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களும் யாழ்ப்பாணத்து உயர் குழாத்திடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தப் பின்னணியில் தான் யாழ்ப்பாணத்தவர் மத்தியில் சமூக உணர்வு கிளர்ந்து எழுந்ததனைப் புரிந்து கொள்ளலாம். நாவலாசிரியர்களும் கவிஞர்களும் சாதிப்பிரச்சினை குறித்து எழுதவும் முன்வந்தனர்.

இந்து வாலிபர் சங்கமும் சாதியும்

 சாதிக் கலவரங்களின் பின்னணியில்  கிறிஸ்தவம் வேகமாகப் பரவுவதைக் கண்ட இந்து இளைஞர்கள் தமது சமயிகளுக்கு சமூகம் எதிர் நோக்கும் ஆபத்துக்கள் பற்றி எடுத்துக் கூறினர். தாழ்ந்த சாதியினரை இனிமேலும் தொடர்ந்து இழிநிலையில் வைத்திருக்க முடியாது. புறக்கணிக்க முடியாது. அவர்களின் நலன்கள் பற்றி உயர் சாதியினர் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். குறிப்பாக அவர்களின் கல்வி பற்றிக் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். கல்வியின் மூலம் சாதியால் தாழ்ந்த நிலையில் உள்ளோரை உயர்த்தி விடலாம் என அவர்கள் நம்பிக்கை கொண்டனர். அவர்களின் வாதம் இவ்வாறு இருந்தது.

சைவ சமயத்தவர்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறையுடையவர்கள் பஞ்சம மக்களின் கல்வி பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். நாம் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான கல்வியிலும் அவர்களின் சமயக் கல்வியிலும் உடனடிக் கவனம் செலுத்தாவிடின் கிறிஸ்தவ மிசனிரிகள் இவ்விடயத்தில்செயற்பட்டு சைவர்களை தம் மதத்திற்கு மாற்றி விடுவர். பின்னர் இது பற்றி வருத்தம் அடைவதால் பயனில்லை. இப்பிரச்சினையை எதிர்கொண்டு இதற்குத் தீர்வு காணும் துணிச்சல் எமக்கு இல்லையெனில், மற்றச் சமயத்தவர்கள் செய்யும் வேலைகளை ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருப்பதே மேலானது. புத்திசாலித்தனமானது. பஞ்சமர்களின்  கல்வி உயர்வுக்கு வேண்டியதை அவர்கள் செய்யட்டும் நாங்கள் அவர்களின் நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவற்றை வரவேற்றுப் பாராட்டவும் வேண்டும். எமது தலைவர்கள் சிலருக்கு நாம் இப்படிக் கூறுவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் ஒன்றைக் கருத்திற் கொள்வார்கள் என நம்புகிறோம். உலகம் விரைவாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வைக்கல் பட்டடை நாய் மனப் பான்மையுடன் நாம் வாழ்தல் ஆகாது. பொது விடயங்களில் நாம் உலக நடப்புகளோடு ஒத்துப் போக வேண்டும். பொறுத்திருந்து நடப்பவற்றைப் பார்ப்போம் என்ற மூடத்தனமான தலையிடாக் கொள்கையைக் கைவிட்டு முன்னேற்றத்தின் பக்கம் நாம் சார்ந்து நிற்க வேண்டும்.

மேற்குறித்தவாறான கருத்துக்கள் சாதி பற்றி முந்திய நூற்றாண்டில் நிலவிய சிந்தனையில் இருந்து வேறுபட்டனவாயும்  அர்த்தமுடையனவாயும் அமைந்தன. கிறிஸ்தவ மிசனரிகளின்  பங்களிப்பால் தாழ்த்தப்பட்டோர் உயர் நிலை பெற்றனரா என்பது முற்றிலும் வேறுபட்ட விடயமாகும். ஆயினும் அவர்கள் பங்களிப்பை பற்றி வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் மனமாற்றம் இந்து வாலிபரிடம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்து வாலிபர் சங்கம் 1919 ஆம் ஆண்டு யூலை 9 ஆம் திகதியன்று ஆனைப்பந்தியில் தாழ்த்தப்பட்ட  சாதியினருக்காக ஒரு பாடசாலையைத் துவங்கியப் போது அது தன் இலட்சியத்தை நடைமுறைப்படுத்தியது.

 யாழ்ப்பாணத்தில் நிலவிய மரணச் சடங்குகள் நடைமுறைகளின் சில அம்சங்கள் பற்றி இந்து வாலிபர் சங்கம் கண்டனம் செய்தது. அந்நடைமுறைகள் இந்தியாவில் நிலவிய வழக்கங்களிற்கு எதிர்மாறானதாக  அமைந்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதிகள் மரணச்சடங்களின் போது மேளம் அடிப்பதையும், தாம் விரும்பியபடி மரணச்சடங்கை நடத்தவும் உயர்சாதியினர் அனுமதித்துள்ளனர். ஆனால் இங்கு தாழ்ந்த சாதிக்காரர்கள் அவ்வாறு செய்வதைத் தமக்கு இழுக்காகனதென்று கருதுகின்றனர். அத்தோடு அவ்வாறு செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களின் மண்டைகளை உடைகின்றனர். சைவ வேளாளர்களின் இந்த நடத்தையின் நியாயத்தையும் தகுதியையும் சிந்தித்துப் பார்க்குமாறும் நாம் வேண்டுகிறோம். 1916 – 1917 ஆம் ஆண்டுகளில் இந்து வாலிபர் சங்கம் செய்த கிளர்ச்சியும் பிரசாரமும் செவிடன்காதில் ஊதிய சங்கு போன்று அமைந்தன. சங்கத்திற்கு பரந்துப்பட்ட ஆதரவும், நிதி உதவியும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களால் தம் கருத்துக்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க முடியவில்லை. ‘சோசியல் ரிபோமர் (Social Reformer) என்ற பத்திரிகை இந்து வாலிபர் சங்கத்தின் பணியில் திருப்தி தெரிவித்து அபிப்பிராயம் வெளியிட்டது. சங்கம் பஞ்சமர் மத்தியில் பொதுச் சுகாதாரம், சுத்தம் பற்றிய போதனை வகுப்புக்களை நடத்தினர். மது ஒழிப்பு, அறவொழுக்கம் ஆகியன பற்றியும் போதனை வகுப்புக்கள் நடத்தப்பட்டன. எவ்வாறிருப்பினும்  தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற முனைவு வெளிப்பட்டதை இது எடுத்துக் காட்டுகிறது.

பாடசாலையில் சம ஆசனம்

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 80 பதுகளுக்குப் பிற்பட்ட இருபது ஆண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டில் 1920 வரையான காலத்திலும் சைவ மக்களின் நன்மை கருதி தமிழ்ப் பாடசாலைகளும், சைவாங்கிலப் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் இப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் பிள்ளைகள் அனுமதிக்கப்படவில்லை. பாடசாலை முகாமையாளர்களும், ஆசிரியர்களும் அத்தகைய முயற்சிக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையும் இந்து போர்ட் (Hindu Board of Education) அமைப்பும் பாடசாலை முகாமையாளர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் பிள்ளைகளை அனுமதிக்கும்படி இணங்கச் செய்தவதற்கு எடுத்த எத்தனங்கள் பயனளிக்கவில்லை. 1926ம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி இந்துப் பாடசாலை முகாமையாளர்களதும் அதிபர்களதும் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது  அதில் உரையாற்றிய சேர். பி. இராமநாதன் அவர்களை (தாழ்த்தப்பட்ட மக்களை) சமூகப் படிநிலையில் உயர்த்துவதற்குள்ள ஒரே ஒரு வழி கல்வியே என நாம் நம்புகிறோம் என்று குறிப்பிட்டார். அவர்களை இன்றைய தாழ்ந்த சமூக நிலைமையில் இருக்கும்படி விடுவது எமது நாகரிகத்தின் மீது ஒரு கறையாகவே இருக்கும்  என்றும் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட பாடசாலைகளில் கூட அவர்களுக்கு சம ஆசனம் வழங்கப்படவில்லை. அக்காலத்தின் ஆவணங்களில் கிடைத்த சான்றுகளின்படி தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் ஏனைய சாதிப்பிள்ளைகளில் இருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர் அல்லது அவர்களுக்கு  சம ஆசனம் வழங்கப்படவில்லை. நிலத்தில் இருந்து படிக்கும் படி கூறப்பட்டனர்.

1929 ஆம் ஆண்டில் கல்வித் திணைக்களப் பணிப்பாளர் ஒரு சுற்ற நிருபம் அனுப்பிவைத்தார். இச்சுற்று நிருபத்தின்படி அரசாங்க பாடசாலைகளும் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளும் எல்லாப் பிள்ளைகளுக்கும் இனம், சாதி, மொழி, சமயம் என்ற பேதம் காட்டாது சம ஆசனம் வழங்க வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டது. இதனைப் பாடசாலைகளின் முகாமையாளர்கள் வன்மையாகக் எதிர்த்தனர். ஆயினும் இந்து போர்ட்  அரசாங்க அறிவுறுத்தலுக்கு ஆதரவு கொடுத்தது. இந்து போர்ட் முகாமையாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அரசாங்கம்  தனது கட்டளைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கும் எதிர்ப்புக்கும் பணிந்து போகாது உறுதியாக நின்ற போது வேளாளர்கள் வன்முறை மூலம் எதிர்ப்பை வெளியிட்டனர். 1929 – 1932 காலத்தில் யாழ்ப்பாணத்தில் சமூக அரசியல் கொந்தளிப்பு உச்ச கட்டத்தில் இருந்தது. அதிகாரிகளின் முழுக்கவனமும் யாழ்ப்பாண மாவட்டம் பற்றியதாகவே சிறிது காலம் இருந்தது. சில இடங்களில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பாடசாலையில் இருந்து விலக்கிக் கொண்டனர். கல்வித் திணைக்களத்தின் கட்டளைக்கான அவர்களின் எதிர்வினையாக இது அமைந்தது. தாழ்த்தப்பட்ட மக்களும் அச்சம் காரணமாக தம்பிள்ளைகளைப் பாடசாலை செல்வதை அனுமதிக்க வில்லை. சில இடங்களில் நடைபெற்ற தீவைப்புச் சம்பவங்களை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. துன்னாலை, உரும்பிராய், புத்தூர், ஆகிய இடங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அவ்விடங்களில் பொலிஸ் பாதுகாப்பும் கண்காணிப்பும் தொடர்ந்தது.

 பாடசாலைகளில் அனுமதி பெற விரும்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் நிலத்தில் இருந்து படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையில் சிறிய தொகையினராகவும் நீதிமன்றம் செல்வதற்குப் பணமில்லாதவர்களாயும் இருந்தனர். 1932 இல் நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் சில சம்பவங்கள் இடம் பெற்றன. சிறுப்பிட்டியில் பாடசாலை நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளை அச்சுறுத்தினர். அரசாங்க அதிபரும், பாடசாலைகளின் பரிசோதகரும் இது பற்றி விசாரணை நடத்திய பின் பாடசாலையின் பதிவை ரத்துச் செய்தனர். பிள்ளைகள் வரவு குறைவடைந்ததன் காரணமாக சிக்கல் எழுந்தது.  வரவு பற்றிய புள்ளிவிபரங்கள் வருமாறு. 1932 – 14286, 1931 – 8093, 1930 – 9447, 1929 -5376. இவ்வாறு பிள்ளைகளின் வரவு வீழ்ச்சியுற்றதைப் பற்றி அரசாங்க அதிபர் எழுதிய அறிக்கையில்  சம ஆசனம் கொள்கை பற்றி 1929 ஆம் ஆண்டில் அனுப்பிய சுற்று நிருபத்தினால் இவ்வாறான  வழமைக்கு மாறான வரவு வீழ்ச்சி ஏற்பட்டது. உயர் சாதியினர் தம்பிள்ளைகள் பாடசாலை செல்வதைத்  தடுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் அச்சுறுத்தல் காரணமாகத் தடுக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டார்.

Gandhi addressing the public meeting in jaffna

அரசாங்க அறிக்கையின்படி நிலைமையில் மாற்றம் ஏற்பட்டதாகக்  கூறப்பட்டதேனும் பிரச்சினை தொடர்ந்தது. 1940 களில் கூட இப்பிரச்சினை நீடித்ததை எஸ். சுப்பிரமணியம், எஸ். எச். பேரின்பநாயகம் ஆகியோரின் அனுபவங்களில் இருந்து அறிந்துக் கொள்ள முடிகிறது. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசின் முக்கிய தூண்கள். தங்கள் இளமைக் காலத்தில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிராகத் தாம் இயக்கம் நடத்தியபோது 1940களிலும் அந்தப்பிரச்சினை மாற்றமடையாது நீடித்தததை அவர்கள் குறிப்பிட்டனர். ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் அதிபர் பதவிக்கான நேர்முகப் பரீட்சைக்கு திரு. எஸ். சுப்பரமணியம் போயிருந்தார். அக்கல்லூரியின் ஆரம்ப கர்த்தாவான கந்தையா உபாத்தியாயருக்கு சுப்பிரமணியம் குறித்து உள்ளுர ஒரு பயம் இருந்தது.  கந்தையா உபாத்தியாயர் பழமைவாதி, சுப்பிரமணியம் கிளர்ச்சிவாதி, கூடச் சென்ற பேரின்பநாயகமும் அப்படிப்பட்டவரே. புதிய அதிபர் தன் கிளர்ச்சித் தத்துவத்தைப் பாடசாலையில் நடைமுறைப்படுத்தி விடுவாரோ என்ற சந்தேகம் அவருக்கிருந்தது. அவர் மிகவும் அடக்கமான குரலிலும் தொனியிலும் சுப்பிரமணியம் தாழ்த்தப்பட்டவர்களின் பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்த்து தலையிடி கொடுத்து விடுவாரோ என்று உடன் சென்ற எஸ். எச். பேரின்பநாயகத்தைப் பார்த்துக்கேட்டாராம். சில கணங்கள் சுப்பிரமணியமும்,  பேரின்பநாயகமும் மௌனமாக நின்றனர். அவர்கள் ஆம் என்று கூறி காரியத்தைக் கெடுத்து விட விரும்பவில்லை. இல்லை என்று கூறி இலட்சியத்தில் இருந்து விலகவும் விரும்பவில்லை. சுப்பிரமணியம் முகாமையாளருடன் முதலில் கலந்து ஆலோசிக்காமல் எந்த முக்கிய முடிவையும் எடுக்கமாட்டார் என்ற உறுதி மொழியை வழங்கினாராம். யாழ்ப்பாணத்தின் சமூக மதிப்புக்கள் விரைவிலேயே மாறின. சுப்பிரமணியம், கந்தையா உபாத்தியாரின் சம்மதத்தைப் பெற்று தாழ்த்தப்பட்டவர்களின்  பிள்ளைகளைப் பெரும் எண்ணிக்கையில் அனுமதித்தார். பாடசாலைச் சமூகத்தில் இருந்து பெரும் எதிர்ப்புகள் எவையும் கிளம்பவில்லை. சமூக மாற்றங்கள் வேண்டும் என்ற கிளர்ச்சி தீவிரவாத இளைஞர் இயக்கத்தின் தோற்றத்துடன் உத்வேகம் பெற்றது. இவ்வியக்கம் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பிரதானமாக ஆசிரியர்களும் மாணவர்களும் இருந்தனர். இத்தகைய ஓர் இயக்கம் முன்னர் ஒரு போதும் இலங்கையில் இருக்க வில்லை. இளைஞர் காங்கிரசிடம் முழுமையான ஒரு வேலைத்திட்டம் இருந்தது. தேசிய மட்டத்தில் அவர்கள் பூரண சுதந்திரத்தைக் கோரினர். இந்திய காங்கிரஸ் போன்று சுதந்திரத்தோடு, இன ஒற்றுமை, இலக்கியம் உட்பட பழையான மரபுகளையும் பண்பாட்டையும் மீள  மலர்ச்சி பெறச் செய்தல், சமூக அநீதிகளை ஒழித்தல், சாதி ஒழிப்பு என்பன இவர்களது வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டடிருந்தன.

Handy perinbanayagam

இளைஞர் காங்கிரசின் ஆரம்பக் கூட்டத்திலேயே அதன் வேலைத்திட்டம் வரையறைசெய்து பிரகடனம் செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் உப அதிபரான ஜே. வி. செல்லையா மாநாட்டின் தொடக்கவுரையை நிகழ்த்தும்போது பின்வருமாறு கூறினார். வெட்கத்திற்குரிய வழக்கங்களான சாதிபேதம் காட்டுதலும், சீதனம் பெறுதலும் ஒழிக்கப்படவேண்டும் என்று நாம் ஒன்றுபட்டு உழைத்திருந்தால் தூய்மையான அரசியல் சமூக வாழ்க்கையை அமைக்க வேண்டும். இந்நாட்டின் வெவ்வேறு இனங்களுக்கும் சமூகக்குழுக்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் போட்டியும் பூசலும் பொறாமையும் இல்லாது தேசிய ஒற்றுமைக்காக நாம் எல்லோரும் உழைத்திருந்தால் எங்கள் தேசம் எத்தகைய உயர்நிலையை இன்று அடைந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய உயர்ந்த இலட்சியங்களால் உந்தப்பட்டவர்களும், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தினால் ஆதர்சம் பெற்றவர்களுமான இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துக் கொண்டனர். மகாத்மாகாந்தி, ராஜகோபாலாச்சாரியார், கல்யாணசுந்தர முதலியார், கமலாதேவி சட்டோபாத்யாய முதலிய இந்தியத்தலைவர்களை இலங்கைக்கு வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தனர். இலங்கை மக்களுக்கு சாதியத்திற்கு எதிராக அறிவுரை கூறும்படியும் வேண்டினர். மகாத்மா காந்தி இங்கு வந்த போது சாதியம் பற்றிக் கண்டனம் செய்து பேசினார். கிறிஸ்தவப் பாடசாலைகள் சாதிக் கட்டுப்பாடுகளை தம்பாடசாலைகளில் கைவிட்டதைப் பாராட்டிப்பேசினார்.

சாதிக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டதோடு இளைஞர் காங்கிரஸ் சமபந்தி போசனத்தைத் தமது மாநாடுகள் கூட்டங்களின் போது நடைமுறைப்படுத்தினர். காங்கேசன்துறை, திருநெல்வேலி, தெல்லிப்பளை ஆகிய இடங்களில் இவ்வாறு சமபந்திபோசனம் ஒழுங்கு செய்யப்பட்டது. திருநெல்வேலியில் நடத்தப்பட்ட சமபந்தி போசனம் முக்கியம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். ஏனெனில் இந்நிகழ்வுக்கு சைவசித்தாந்தத்தில் துறைபோகிய அறிஞரான எஸ். சிவபாதசுந்தரம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்பட்டன. உயர்சாதியினரும், கபடமிக்க அரசியல்வாதிகளும் சாதி உணர்வைத் துண்டியதோடு இளைஞர் மாநாட்டுப் பந்தல்களுக்கு தீ வைத்துக் குழப்பம் விளைவித்தனர். சமபந்திபோசனம் திருநெல்வேலியில் நடத்தப்படுவதற்குத் திட்டமிட்டிருந்தவேளை விசமிகள் இரவிரவாக திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அருகே இருந்த கிணறுகளை அசுத்தப்படுத்தி விட்டனர். மறுநாள் காலை மாநாடு நடைபெறவிருந்த ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையைச் சூழ நின்று கல்லெறி நடத்தினர். பொலிசார் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மாநாட்டில் பங்குபற்ற வந்தோருக்குப் பாதுகாப்பும் வழங்கினர்.

Srilankan parliament first sitting on October 14th 1947

இளைஞர் காங்கிரசின் வழிகாட்டிலின்படி டொனமூர் யாப்பின் படி  1931 இல் நடத்தப்பட்ட முதலாவது பொதுத் தேர்தலை மக்கள் பகிஷ்கரித்தனர். டொனமூர் பகிஷ்கரிப்பிற்கான பிரதான காரணம்  அது பூரண சுயராச்சியத்தை வழங்காதது தான் என்று கூறப்பட்டபோதும், சிலர் சாதியும் பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக இருந்ததெனக் கூறுகின்றனர். இண்டியன் ரிவியு(Indian Review) என்ற சஞ்சிகையின் நிருபர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.  சாதிப்போட்டியும், குழுக்களிடையான கருத்து பேதங்களும் ஐக்கியத்திற்கான தடையாக இருந்தது. அரசியல் ஒற்றுமையை அடைதல் சாத்திய மற்றதாயிற்று. வாக்காளர்கள் தேர்தலில் கலந்துக் கொள்ள விரும்பவில்லை. இதனால் மக்களின் ஒரு சிறு பகுதியினரின்  ஆதரவு பெற்றவராகவே தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவரை கருதும் நிலை இருந்தது. ஜே. ஜி. வோல் (J.G.Wall) என்பவர் எழுதிய Britain’s Folly”  என்ற நூலில் உயர்சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சென்று தமக்கு வாக்குக் கேட்பதை கௌரவக் குறைவாகக் கருதினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருத்துக்கள் உண்மையல்லவெனிலும் அக்காலத்தில் சாதிப்பிரச்சினை எந்தளவு மக்களின் சிந்தனையை ஆட்கொண்டிருந்தது என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

ஆலயப் பிரவேசமும் வழிபாட்டு உரிமையும் இந்துக்களில் படித்த முற்போக்காளரதும் தாழ்த்தப்பட்ட மக்களதும் கவனத்திற்குரிய ஒன்றாக நீண்ட காலமாக இருந்து வந்தது. 1928/ 29  காலத்திலேயே சைவ பரிபாலன சபை கோவில்களை தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டுக்காகத் திறந்து விடும்படி முகாமையாளர்களைக்  கேட்டுக் கொண்டது. இந்தியாவின் நிகழ்வுகள் இவ்விடயத்தில் உத்வேகத்தோடு செயற்பட்ட அவர்களைத் தூண்டியது இந்தியாவில் திருச்செந்தூர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்றனவும், இலங்கையில் கதிர்காமமும் எல்லாச் சாதியினருக்கும் திறந்து விடப்பட்டிருக்கும் போது யாழ்ப்பாணத்துக் கோவில்கள் மட்டும் இதற்கு மாறாகச் செயற்படுவது தவறு என்பதை அவர்கள் எடுத்துக் காட்டினர்.

அரசாங்கமும் தனிநபர்களும் ஆலயப்பிரவேச விவகாரத்தில் தலையிட முடியவில்லை காரணம் ஆலயங்கள் தனியார் உடமையாகவே கருதப்பட்டன. இந்து ஆலயங்களின் சொத்துக்கள் நிர்வாகம் என்பவனவற்றிலும் ஒழுங்கு காணப்படவில்லை இதனால்  1930 களிலும் 1940 களிலும் இந்துக் கோவில்களின் நிர்வாகம், ஆலயப் பிரவேசம் ஆகிய விடயங்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. மாற்றம் வேண்டிக் குரல் கொடுக்கப்பட்டது. ஆயினும் பிரித்தானிய அரசும், சுதந்திர இலங்கையின் அரசும் கோவில்களின் நிர்வாகம் தொடர்பான சட்டத்தையாக்கல் இந்துக்களின் பொறுப்பு என்ற கருத்தைக் கொண்டிருந்தன.

1948 ஏப்ரல் 12ஆம் திகதி இந்துக் கல்லூரி மைதானத்தில் இந்து மாநாடு ஒன்று  நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் இந்து உறுப்பினர்களும் சைவ பரிபாலன சபையும் இணைந்து பொதுசன அபிப்பிராயத்தை ஆலயப்பிரவேசத்திற்கு சார்பானதாக உருவாக்கி ஹரிசனங்களைத் கோவில்களில் வழிபட அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொழும்பு விவேகானந்த சபையும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன்படி சைவபரிபாலன சபை ஹரிசனங்களுக்கு சம உரிமை வழங்கும் நோக்கம் பற்றி எடுத்துரைக்கும் அறிவூட்டல் வகுப்புக்களை நடத்தி அவர்களை ஆலயப் பிரவேசத்திற்கு தயார்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. 1948 யூலையில் பதுளைத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக எஸ். எம். சுப்பையா பிரேரணையொன்றைக் கொண்டுவரும் அறிவித்தலை விடுத்தார். இந்து ஆலயங்களில் முகாமையாளர்கள் ஹரிசனங்களிற்கு ஆலயக் கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்பதே இப்பிரேரணையாகும்.  இந்து சாதனம் பத்திரிகை இந்துக்களின் அபிப்பிராயத்தை வெளியிடும் பிரபலம் பெற்ற பத்திரிகையாக இருந்தது. அப்பத்திரிகை இந்துக் கோவில்களின் பரிபாலனம் தொடர்பாக ஏதும் சட்டம் இயற்றப்பட்டால் அதில் ஹரிசனங்களிற்கு ஆலயங்களைத் திறந்து விட  வேண்டும் என்ற விடயம் சேர்க்கப்படவேண்டும் என்று கருத்து வெளியிட்டது.

பாராளுமன்றத்தின் இந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேடகுழுவொன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவராக வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர். திரு. கே. கனகரத்தினம் நியமிக்கப்பட்டார். இக்குழு இந்து அறநிலையங்களின் நிர்வாகம், மிருகபலி, வழிபாட்டுச் சுதந்திரம் (Hindu Temporalities and endowment, Animal Sacrifice and Freedom of Worship) என்ற அறிக்கையைச் சமர்ப்பித்தது. உள்நாட்டு அலுவல்கள், கிராம அபிவிருத்தி அமைச்சரால் விசாரணைக் குழுவின்  நோக்கெல்லையை விளக்கும் நியமனக் கடிதம் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வழங்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினர்களான  பாராளுமன்ற அங்கத்தவர்களும் முழுவிருப்பத்தோடு விசாரணையை ஆரம்பித்தனர். வழிபாட்டுச் சுதந்திரம் பற்றிய அவர்களின் அறிக்கை மிக விரிவானதாக இருந்தது. அதனை ஏனைய விடயங்களை விட முக்கியமானதொன்றாகவும் அவர்கள் கருதினர். அறிக்கையில் இருந்து இரு மேற்கோள்கள் வருமாறு எமது சமயத்திற்குள்ளும் சமூகத்திற்குள்ளும் நுழைவதற்கான வழியொன்று இப்போது திறக்கப்பட்டுள்ளது. இது மிக ஆபத்தானது இந்தியாவின் ஹரிஜன இயக்கங்களின் பெரும்தலைவரால் ஒரு சர்வரோக நிவாரணி போன்ற தீர்வும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின்  மனித உரிமைகளை மீட்டெடுப்பதோடு மிக அடிநிலையில் வாழும் அம் மக்களுக்குக் கௌரவமான  வாழ்க்கையை வழங்கலாம் என அத்தலைவர் கருதுகிறார். இத்தலைவர் அண்மையில்  இலங்கைக்கு வந்து சென்றார். அவரின் வரவால் பல  விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் இந்து சமயத்தின் வரலாற்றில் முதல் தடவையாக இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் பௌத்தர்களாக மாறியுள்ளனர் என்றும் இது அத்தலைவரின் ஆசீர்வாதத்துடன் நடந்தது என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.

பழமைவாத இந்துக்கள் தமது நடவடிக்கைகளில் காட்டும் வேகத்தினை  தவிர்க்க  முடியாத விளைவு இதுவெனலாம். இந்த வேகம் தணியாது போனால் அத்தகைய பெரும் எண்ணிக்கையானோர் சமய மாற்றம் செய்து கொள்வது தொடரவே செய்யும். தாழ்த்தப்பட்ட மக்களின் பேச்சாளரான ஒருவர் தனது சமூகத்தினைரைப் பார்த்து நீங்கள் சிங்களவராக மாறுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று கூறினார். கையறு நிலையில் அவர் விடுத்த அழைப்பு இது. தமிழர்களாக இருப்பதிலும் இவ்வாறு கீழான நிலையில் வதைபடுவதிலும் எந்தவித அர்த்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தின் விசேடக் குழு தனது  அறிக்கையை 1950 நவம்பர் 16 ஆம் திகதி சமர்ப்பித்தது. அவ்வறிக்கை பருவகால அறிக்கை இல ஏ- 1951 (Sessional paper No V – 1951) வெளியிடப்பட்டது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட இன்னொரு முக்கியமாற்றம் தாழ்த்தப்பட்ட சாதியினர் தாம் ஒன்றிணைந்து தமக்கு சமுகத்தில் அந்தஸ்து வேண்டும் எனக் கோரி இயக்கம் நடத்தியது ஆகும். சுன்னாகம், வதிரி போன்ற இடங்களில் பிராந்திய அமைப்புக்களை ஏற்படுத்தியதோடு சிறுபான்மைத் தமிழ் முற்போக்குச் சமாசம், அகில இலங்கை சிறுபான்மைத்  தமிழர் மகாசபை போன்ற அமைப்புக்களும் உருவாகின. மேலே குறிப்பிட்ட இரு அமைப்புக்களும் சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தன. சோல்பரி ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் பல அங்கத்தவர் தொகுதியொன்று அமைக்கப்படுவதைச் சிபாரிசு செய்தது. அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் என ஆணைக்குழு கருதியது. 1946 ஆம் ஆண்டில் தேர்தற் தொகுதி நிர்ணய ஆணைக்குழு தனது விசாரணைகளின் போது இவ்விடயத்தைக் கவனமாகப் பரிசீலித்தது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பரவலாகச் சிதறி வாழ்வதால் பல அங்கத்தவர் தொகுதி எதனையும் அவர்களின் பிரதிநிதித்துவத்திற்காக அமைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அன்றுவரை இருந்துவந்த மனப்பாங்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டதைக் காணமுடிகிறது. இக்கால நிலைமைகளை நுணுகி  ஆராய்ந்தால் ஆலயப்பிரவேசத்திற்கு சார்பான முறையில் பொது உடன்பாடு உருவாக்கம் பெற்றிருந்தது. கோவில் முகாமையாளர்களும், அர்ச்சகர்களும் மட்டும் விதிவிலக்காக  எதிர்ப்பு மனப்பாங்கைக் கொண்டிருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் 40 களிலும் 50 களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இடதுசாரி அரசியலுக்குள் படிப்படியாகப் புகுந்து கொள்வதையும் காண்கிறோம். ஆரம்ப கட்டங்களில் இடதுசாரி இயக்கம் யாழ்ப்பாணத்தில் பரவலான வரவேற்றைப் பெறமால் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

தாழ்த்தப்பட்ட மக்களில் மிசனரிப் பாடசாலைகளில் படித்தோரில் பலர் உயர்சாதியினரைப் போன்றே அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றனர். சலவைத் தொழில் செய்வோர் லோண்டறிகளை அமைத்தனர். முடித்திருத்துவோர் சலூன்களை அமைத்தனர். தமது தொழில்களை வர்த்தக முறையில் ஒரு தொழில் என்ற முறையில் இவ்விருசாதியினரும் நடத்தத் தொடங்கினர். மாதத்திற்கு ஒரு தடவையோ இரு தடவையோ வீடுகளிற்குச் சென்று செய்து வந்த இச்சேவைகள் இப்போழுது கடைகள் ஊடாக வேளாளர்க்கும் பிற உயர்சாதியினருக்கும் வழங்கப்பட்டது. இருப்பினும் லோண்ட்ரிகளும், சலூன்களும் ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தம்சேவையை வழங்கவில்லை. யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும் அச்சேவையைக் கேட்பதால் எழும் அசௌகரியத்தை தவிர்ப்பதற்காகக் தாமாகவே ஒதுங்கிக் கொண்டனர்.

குடிமகன் என்ற  கருத்து வெறும் ஆசார ஒழுங்கு பற்றிய எண்ணம் ஆக மட்டும் நிலைத்திருந்தது. பொதுப்போக்குவரத்தின் வளர்ச்சியும், மக்கள் பிரயாணம் செய்ய வேண்டிய தேவை அதிகரித்தமையும் பிரயாணத்தில் இருந்து வந்த சாதித் தடைகளை முற்றாகவே நீக்கியது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை எட்டும்போது சாதி வழமைகளின் மிச்ச சொச்சங்கள் மட்டும் எஞ்சியிருந்தன. சிலர் இவற்றை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தனர். உயர்சாதிகள் தமக்கு இருந்த அதிகாரங்கள் எல்லாம் பறிபோன பின்பும் வெறும் கௌரவம் கருதியே இவ்வழமைகளைப் பற்றிக் கொண்டு நின்றனர். தாழ்த்தப்பட்டோர் பொருளாதார ரீதியில் எங்கெங்கு பலமற்றவர்களாக இருந்தார்களோ அவ்விடங்களில் உயர்சாதியினரை எதிர்க்காமல் பணிந்து போயினர். அம்பலாங்கொட, பலப்பிட்டிய, கடுகண்ணாவ அகிய இரு இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் தாழ்த்தப்பட்ட சாதியினர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிச் செய்வதற்காக வழங்கப்பட்டது. கம்பஹா. கேகாலை, கம்பளை, குருணாகல், பிங்கிரிய ஆகிய இடங்களிலும் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்தப் போது சிறுபான்மைச் சாதிகளின் வாக்குகள் சிதறிப்போகா வண்ணம் எல்லைகளை அமைத்து தேர்தல்களின் போது அச்சாதியினரின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு இடமளித்தனர். இது முன்னர் அச்சாதிகளுக்கு இல்லாதிருந்த ஒரு உரிமையைக் கொடுத்து அவர்களைப் பலப்படுத்தியது. பௌத்தம் மனிதர்களுக்கிடையே பேதம் இல்லை என்ற சமத்துவக்கொள்கையை போதிப்பதே ஆயினும், பௌத்த துறவிகளின் சங்க அமைப்பு தம் மத்தியில் உள்ள பிரிவினைகளில் இருந்து  விலகி நிற்கவில்லை. சியாம்றிகாய கொவிகம் சாதியின் தனியுரிமையாகவே தொடர்ந்து இருந்து வந்தது. அமரபுரநிகாய, கராவ. சலாகம், துராவ ஆகிய சாதிகளைச் சேர்ந்த துறவிகளின் அமைப்பாக நிலைபெறலாயிற்று.

                இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தவர்கள் இலங்கையின் வெவ்வேறு பாகங்களுக்கு  இடம்பெயர்ந்து சென்றனர். பெரும்பான்மையினர் கொழும்பைத் தமது வதிவிடமாக்கிக் கொண்டனர்.  அவர்கள் சென்றவிடமெல்லாம் தமது சாதிப் பெருமையை கைவிடாது தொடர்ந்து பேணினர். குறிப்பாக சாதி பார்த்தே திருமணம் செய்து கொள்வதையும், தமது மூதாதையரின் மூலத்தை யாழ்ப்பாணத்தில் தேடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். இருப்பினும் யாழ்ப்பாணத்தில் உயர் சாதியினர் மத்தியில் ஓரளவு கலப்பு நிகழ்ந்துள்ளது. வேளாளர், செட்டிகள், மடப்பள்ளிகள் என்போர் ஒன்று கலந்தனர். இப்பிரிவினர்களிடையே கலப்புத்திருமணம் இடம்பெற்று வந்துள்ளது. கோவியர் சாதியின் நிலையும் உயர்ந்துள்ளது. அறிந்தும் சில வேளை அறியாமலும் வேளாளரும் கோவியரும் கலப்புத்திருமணம் செய்து கொள்கின்றனர்.

குறிப்பு : ‘Caste in Jaffna in the 19th Century’ என்ற தலைப்பில் 2000 ஆம் ஆண்டு Politics and Life in Our Times, Vol. 11, pp. 1699-1709. (Colombo: Une Art Pvt) எனும் நூலில்  க. அருமைநாயகம் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

13169 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (17)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)