Arts
16 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 10

March 4, 2024 | Ezhuna

“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது.

காரைநகர்ச் சைவமகாசபை நூல்நிலையம்

காரைநகர்ச் சைவமகாசபை பொன்விழா மலர் 1967 இல் வெளிவந்தது. இம்மலராசிரியராக வைத்தீஸ்வரக் குருக்கள் சிறப்புறப் பணியாற்றி சைவமகாசபையின் வரலாற்றை முடிந்தவரை பதிவுசெய்ய முயன்றுள்ளார்.  

அவரது குறிப்புகளின்படி காரைநகர்ச் சைவமகாசபை 1926 ஆம் ஆண்டிலேயே  347 தமிழ்ப் புத்தகங்களும் 279 ஆங்கிலப் புத்தகங்களும் கொண்டதொரு நூலகத்தை தன்னகத்தே கொண்டிருந்துள்ளதென்ற செய்தியை அறியமுடிகின்றது. அந்த ஆண்டில் மாத்திரம் 126 புதிய புத்தகங்கள் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருந்தனவென்ற செய்தியும் காணக்கிடைக்கின்றது. 13 புதினப் பத்திரிகைகளும் உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்து வரவழைக்கப்பட்டு வாசகர்களுக்கு நூலகத்தில் வாசிப்பிற்காக வழங்கப்பட்டு வந்துள்ளது. 

காரைநகரைச் சேர்ந்த சைவாபிமானியான திரு.க. கதிரவேலு அவர்களின் முன்முயற்சியின் பயனாக திருவாளர்கள் மு. திசைநாயகம், இ. நாகலிங்கம், ஆ. முருகேசு, இ. கந்தையா, ஆ.ச. கதிரைவேல், வே. தம்பிஐயா, அ. சின்னத்தம்பி, க. நவரத்தினம், பிரம்மஸ்ரீ கா.சி. மகேசசர்மா ஆகியோர் காரைநகர்ப் பிரதேசத்தில் சமூகத் தொண்டு செய்யும் நோக்கில் ஒன்று திரண்டார்கள். 15.03.1915 அன்று ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை மண்டபத்தில் திரு மு. திசைநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் ’காரை இளைஞர் கல்வித் தேர்ச்சிச் சங்கம்’ என்ற பெயருடன் ஒரு சங்கம் ஆரம்பமாகியது. காரைநகர்க் கிராமத்து மாணவர்களைக் கல்வியில் முன்னேற்றமடையச் செய்வதே அவ்வேளையில் அச்சங்கத்தின் மேலான நோக்கமாகவிருந்தது. 

மேற்படி சங்கம் தமது நோக்கத்துக்கமைய மாணவர்களைச் சேர்த்து சமயம், தமிழ் மொழி என்பவற்றையும் கல்வித் தேர்ச்சிக்குரிய பிற பாடங்களையும் போதித்து வந்தனர். 1918 இல் (21.12.1918) இச்சங்கத்தின் பெயரை ’காரை இந்து வாலிபர் சங்கம்’ என்று மாற்றினார்கள். காரை இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக திரு பொ. வேலுப்பிள்ளை அவர்களும் உபதலைவர்களாக திருவாளர்கள் மு. திசைநாயகம், ஐ. ஆறுமுகம், பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்சரஐயர் ஆகியோரும், காரியதரிசியாகத் திரு இ. நாகலிங்கம் அவர்களும் உப காரியதரிசியாக திரு இ. கந்தையா அவர்களும் தனாதிகாரியாக திரு ஆ.ச. கதிரவேல் அவர்களும் உப தனாதிகாரியாக திரு க. நமசிவாயம் அவர்களும் கல்வி விருத்திக் காரியதரிசியாக திரு.சு. இராமநாதன் அவர்களும் கல்வி விருத்தி உப காரியதரிசியாக திரு சி.வே. தம்பிஐயா அவர்களும் நிர்வாகசபை அங்கத்தவர்களாக திரு வே. சபாபதி, பிரம்மஸ்ரீ கா.சி. மகேசசர்மா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். 

இந்து வாலிபர் சங்கம், இந்து சமயப் பிரசங்கங்களைச் செய்வித்தும், சமய வகுப்புகளை நடத்தியும் அக்காலத்தில் நிலவிய காலனியாதிக்கவாதிகளின் மதமாற்றச் சூழலில் எதிர்நீச்சல் அடிக்கவேண்டியிருந்தது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலையின் (பின்னாளில் காரைநகர் இந்துக் கல்லூரியாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது) தலைமை ஆசிரியராக இருந்த பிரம்மஸ்ரீ ஈ.கே. சுப்பிரமணியஐயர் சமய வகுப்பகளை நடத்திவந்தார். உதவியாளர்களாக பிரம்மஸ்ரீ ச. பஞ்சாட்சரஐயர் அவர்களும் திரு மு. திசைநாயகம் அவர்களும் இயங்கிவந்தனர். 

சிறப்புடன் இயங்கிவந்த காரை இந்து வாலிபர் சங்கத்திற்கு சொந்தக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு நிர்வாக சபை தீர்மானித்தது. அமரர் இ. நாகலிங்கம் அவர்களின் பெருமுயற்சியால் ‘பூதனடைப்பு’ என்னும் காணியில் இரண்டு பரப்பு நிலம் அதன் உரிமையாளர் திருமதி வே. வள்ளியம்மையிடம் நன்கொடையாகப் பெறப்பட்டு 17.7.1919 அன்று புதிய கட்டிடத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. புதுக்கட்டிடப் பிரவேசம் 1921 சித்திரை மாதத்தில் நடந்தேறியது. சில மாதங்களின் பின்னர் அக்கட்டிடத்தில் ஒரு நூல்நிலையம் தொடங்கப்பெற்று வாசகர் சேவையும் நடைபெற்றது. 

1924 ஆம் ஆண்டு ஆனி மாதம் 14 ஆம் திகதி சேர்.வை. துரைசுவாமி அவர்கள் தலைமையில் மேற்படி சங்கத்தின் ஒன்பதாவது வருடாந்தக் கூட்டத்தை கூட்டியிருந்தனர். அக்கூட்டத்தில் பிரசங்கம் செய்த ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தர் அவர்கள், இளைஞர் முதியோர் என்ற பாகுபாடின்றி யாவரும் பயனடையும் வகையில் ’இந்து வாலிபர் சங்கம்’ என்ற பெயரை ‘சைவமகாசபை’ என்று மாற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். அவர் கூற்றுப்படியே காரை சைவமகாசபை என்ற பெயர்மாற்றம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

சைவமகாசபையில் பெரிய கூட்டங்கள் நடத்தும் பொருட்டும் தேசிய வகுப்புகளை நடத்தும் வகையிலும் தற்போதைய மண்டபம் பெருப்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதனை எவ்வித சிக்கலுமின்றி ஆயிரம் ரூபா வரையில் செலவிட்டு 12.12.1924 அன்று கட்டிமுடித்தார்கள். மேற்படி வகுப்புகளை நடத்த ஒரு ஆசிரியரும் நியமிக்கப்பட்டார். 

1925 இல் காரை சைவமகாசபையின் பத்தாவது வருடாந்தக் கூட்டம் சேர்.பொன். இராமநாதன் அவர்களின் தலைமையில் வெகு விமரிசையாக நடந்தது. 

தொழிற்கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் நெசவுப் பாடசாலை ஒன்றினை நிறுவும் வகையில் சைவமகாசபையினர் திட்டமிட்டனர். இதற்கென காரை-மலாய ஐக்கிய சங்கத்தினர் சைவமகாசபைக்கு 1200 ரூபா நன்கொடையாக வழங்கினர். சைவமகாசபையில் இடவசதி இல்லாமையால், வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலை நிர்வாகி திரு இ. நாகலிங்கம் அவர்கள், தமது பாடசாலையில், சைவமகாசபையின் ஆதரவுடன் நெசவு வகுப்பொன்றை நடத்த ஒப்புக்கொண்டார். இரண்டாண்டுகள் இவ்வகுப்பு நடைபெற்று, பின்னர் பணத்தட்டுப்பாடு காரணமாக இம்முயற்சி கைவிடப்பட்டது. 

காரை சைவமகாசபையின் அபிவிருத்திப் பணியில் ஓரங்கமாக வியாவில் கடற்கரையில் ஒரு மடாலயம் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ருத்ரோற்காரி ஆண்டு (1923 ஆம் ஆண்டு) சித்திரை மாதம் 11 ஆம் திகதி மடாலயக் கட்டிட வேலைகள் தொடங்கப்பெற்றன. இம்மடாலயம் சம்பந்தமான பணிகளை காரைநகரின் கருங்காலி, பலூகாடு ஆகிய குறிச்சிகளைச் சேர்ந்த மக்கள் மேற்கொண்டனர். மேலும் இம்மடாலயத்தில் ஒரு சைவ ஆசாரியரைக் குடியிருத்தவும், நூல்நிலையத்தை மடாலயத்தின் கட்டிடத்தில் விரிவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

காரை சைவமகாசபை 19.09.1955 அன்று பொது ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டமை மற்றுமொரு முக்கியமான நிகழ்வாகும். 

ஆரம்பகாலந் தொட்டுச் சமய வகுப்புகளும் சமயப்பாடப் பரீட்சைகளும் காரை சைவமகாசபையில் நடைபெற்று வந்தன. 1926-1927 ஆண்டுக் காலத்தில் ‘சிவஞானசித்தியார்’ வகுப்பு பரமேஸ்வரா கல்லூரியின் உப அதிபர் திரு மு. ஞானப்பிரகாசம் அவர்களாலும், 1935-36 காலகட்டத்தில் தமிழ்ப் பாலபண்டித வகுப்பு ஸ்ரீமத் சி. சுப்பிரமணிய தேசிகர் அவர்களாலும் நடத்தப்பட்ட வேளையில் காரை சைவமகாசபையின் நூல்நிலையம் மாணவர்களின் பாவனைக்குப் பெரும் உதவியாக இருந்துள்ளது. மேற்படி இரு ஆசிரியர்களாலும் தமிழ் இலக்கண, இலக்கிய வகுப்புகள் தொடர்ந்தும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்துள்ளமையும் இம்மாணவர்களுக்கு மாத்திரமல்லாது, ஆசிரியர்களுக்கும் இந்நூலகம் தனது சேவையை ஆரவாரமின்றி அமைதியாக ஆற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காரை சைவமகாசபையினரின் அறிவுச் செழுமைக்கு அவர்களால் வெளியிடப்பட்டுவந்த நூல்கள் சாட்சியமாக உள்ளன. Our young men and their Culture, நரகசதுர்த்தசி ஸ்நானம், திருமுறைப் பெருமை, நித்திய கருமம், நடராஜ வடிவம், தில்லைத் திருநடனம், குருகுல வித்தியாலயம், மஹோற்சவ விளக்கம், புதுவருஷ சோபனம், திருவெம்பாவை விளக்கம் என்பன சபையினரால் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்டு வந்த நூல்களாகும். 

1924 முதல் 1966 வரை காலத்திற்குக் காலம் வருகைதந்து சொற்பொழிவாற்றிய அறிஞர்கள் 38 பேரின் பட்டியல் ஒன்று காரைநகர் சைவமகாசபையின் செழுமைக்கும் அக்காலத்தில் அச்சபையின் வகிபாகத்திற்கும் சான்றாக உள்ளது. 

சேர் வை. துரைசுவாமி (1924), ஸ்ரீமத் சுவாமி விபுலானந்தா, ஸ்ரீமத் சுவாமி சதானந்தா, ஸ்ரீமத் சுவாமி சர்வானந்தா, மகாத்மா காந்தியடிகள், ஸ்ரீ இராஜகோபாலாச்சாரியார், பண்டித ஜவஹர்லால் நேரு, ஸ்ரீமதி கமலா நேரு, ஸ்ரீமதி இந்திரா காந்தி, ஸ்ரீமதி கமலாதேவி சட்டோபாத்தியாய, சுவாமி சச்சிதானந்த ராஜயோகிகள் (சங்கரசப்பையர்), ஸ்ரீமத் மகாதேவ சுவாமிகள், ஸ்ரீமத் நாகலிங்க சுவாமிகள், திரு. சத்தியமூர்த்தி, சாத்தூர் வழக்கறிஞர் தூ.ச. கந்தசாமி, டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, கோவை ஸ்ரீ சுப்பிரமணிய முதலியார் என்னும் சம்பந்த சரணாலயத் தம்பிரான், கோவை ஸ்ரீ எம். இராமச்சந்திரன் செட்டியார், தூத்துக்குடி ந. சிவகுருநாதபிள்ளை, ஸ்ரீ. ச. சச்சிதானந்தபிள்ளை, சித்தாந்த சரபம் ஈசானசிவாச்சாரியார், சு. முருகேச முதலியார், திரு அ.ச. ஞானசம்பந்தன், திருப்புகழ் மணி ரி.எம். கிருஷ்ணசுவாமிஐயர், சு. சிவபாதசுந்தரம்பிள்ளை, சி. அருணைவடிவேலு முதலியார், பண்டிதமணி சு. நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதர் வே. மகாலிங்கசிவம், டாக்டர் ஜே.சீ. குமரப்பா, திரு சு. நடேசபிள்ளை, கௌரவ வி.வி. கிரி, கௌரவ எம்.எஸ். ஆனே, சித்தாந்த சிகாமணி க. வச்சிரவேலு முதலியார், திரு ஈ.டபிள்யூ. அரியநாயகம், திரு மு. ஞானப்பிரகாசம், வித்துவான் கி.வா. ஜகந்நாதன், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, டாக்டர் பீம்சேன் சச்சார் (1966) ஆகியோரே இக்காலகட்டத்தில் காரை சைவமகாசபைக்கு விஜயம் செய்து உரையாற்றிச்சென்ற அறிஞர்களாவர். 

மாவிட்டபுரம் ஆதீனச் சுவடிச்சாலை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் ஆதீனத்தில் சிறந்த சுவடி நூலகம் ஒன்று செயற்பட்டது என்ற தகவலைப் பெற முடிகின்றது. இக்கோவிலின் அருகாமையில் அமைந்து காணப்பட்ட ஆலயங்களின் தேவைகளுக்கும் இச் சுவடிகள் கொடுத்து உதவப்பட்டன என்ற செய்தியும் மாவை ஆதீனச் சுவடிச்சாலை பற்றிய தேடலுக்குரிய ஆர்வத்தினை வலுப்படுத்தியது. 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆரம்ப காலங்களில் சுவடிச் சாலைகளில் காணப்படுவதை விட ஏராளமான சுவடிகள் தனிநபர்களிடம் காணப்பட்டிருந்தன என்று பொதுவாகக் கருதுவோருளர். ஓலைச் சுவடிகளின் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களான ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை முதலானோரின் இத்துறை அனுபவங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டிற்கு உரியதாகக் கருதப்படுகின்றது. ஆலயத் தோற்றம் பற்றிய கதை யாழ்ப்பாண வைபவ மாலையிலும் காணப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ள மேற்படி கோவில் தொடர்பான செய்திகள் கர்ணபரம்பரை மரபைக் கொண்டு எழுதப்பட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களின் காலத்தில் இவ்வாலயத்தின் நிலை பற்றியோ அதற்கு முன்னைய கால கட்டிட அமைப்பு பற்றியோ விரிவான செய்திகள் எவையும் இன்று கிடைக்கக்கூடியதாக இல்லை. இவ்வாலயம் பற்றிய வரலாற்றுப் பண்புகள் எதிர்காலத்தில் விரிவாக ஆராயப்பட வேண்டியவை.  

இவ்வாலயச் சூழலில் இக்கோவிலின் வரலாற்றுப் பழமையை உணர்த்தும் தொல்பொருட் சின்னங்கள் எவையும் இதுவரை அகழ்ந்தெடுக்கப்படவில்லை. இவ்வாலயம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றிய விபரமான கர்ணபரம்பரையிலான வரலாற்றுக் குறிப்பினை அக்கோயிலின் பரம்பரைக் குருக்களான சு.து. ஷண்முகநாதக்குருக்கள் எழுதிய ‘மாவிட்டபுரத் திருத்தல வரலாறு’ என்ற நூல் தருகின்றது. 

போர்த்துக்கேயர் அழித்த நல்லூர் கந்தசுவாமி கோவில், திருக்கோணமலை கோணேசர் கோவில் ஆகியவை பற்றிய செய்திகள் போர்த்துக்கேயர்களின் பதிவேடுகளில் காணப்படுவதை வரலாற்றாய்வாளர்கள் பலவிடங்களிலும் பதிவு செய்துள்ளார்கள். மாவிட்டபுரம் ஆலயம், கீரிமலை ஆலயம் பற்றிய செய்திகள் எவையும் போர்த்துக்கேயரால் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும் கவனத்திற்கெடுக்க வேண்டியுள்ளது. மாவிட்டபுரம் கோவில் பராமரிப்பாளர்களின் செவிவழிக் கதைகள் வாயிலாக, மாவிட்டபுரம் சம்பந்தமான பட்டயம் மூலஸ்தானத்துக்குள் வைக்கப்பட்டிருந்து பின்னர் அங்கேயே கட்டப்பட்டதாக அறியப்படுகின்றது. சு.து. சண்முகநாதக் குருக்களின் ‘மாவிட்டபுரத் திருத்தல வரலாறு’ என்ற நூல் குரும்பசிட்டி சன்மார்க்க சபையினரால் 1965 இல் வெளியிடப்பட்டது. சு.து. சண்முகநாதக் குருக்களின் கருத்துப்படி இவ்வாலயத்தின் இன்றைய கட்டிட அமைப்பானது பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிந்தைய வளர்ச்சியைச் சார்ந்ததாகவே கருத முடிகின்றது. 

book

இது பற்றிய விபரங்களை ’மாவிட்டபுரத் திருத்தல வரலாறு’ என்ற நூலில் அதன் ஆசிரியர் சு.து. ஷண்முகநாதக் குருக்கள் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“யாழ்ப்பாணக் கச்சேரியிலுள்ள கோவில்களின் இடாப்பின் பிரகாரம் இப்போதுள்ள கோவில் 1782 ஆம் ஆண்டில் குமாரசாமிக் குருக்கள், சபாபதிக் குருக்கள் ஆகியோராற் கட்டப்பட்டதென அறியப்படுகிறது. சபாபதிக்குருக்கள் வயோதிப நிலையடைந்ததும் இக்கோவிலின் நிர்வாகப் பொறுப்படையாளங்களை குமாரசாமி ஐயர் சொக்கநாதர் ஐயர் அவர்களுக்கு 13.12.1825 இல் கையளித்திருந்தார்.” 

சு.து. ஷண்முகநாதக்குருக்கள் தொடர்ந்து, கோவில் பராமரிப்பு கைமாறிய விபரங்களை உள்ளடக்கிய 18 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட அண்மைக்கால வரலாற்றை இந்நூலில் திகதிவாரியாக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். 

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் சுற்றாடல் பகுதியில் விரிவானதொரு தொல்லியலாய்வினை மேற்கொண்டால் மட்டுமே இவ்வாலயத்தின் பழைமை பற்றியும், அதன் வரலாற்று அந்தஸ்து பற்றியும் உறுதியாக ஏதும் கூறமுடியும். அதுவரையில் பக்தி இலக்கியங்களும், செவிவழிக் கதைகளுமே இவ்வாலயத்தின் வரலாற்றை சந்ததிகள் தோறும் காவிச்செல்லப் போகின்றன.

த. சண்முகசுந்தரம் அவர்களின் ‘கலையும் மரபும்’ என்ற நூல் தெல்லிப்பழை கலைப்பெருமன்ற வெளியீடாக 1974 இல் வெளிவந்தது. அதில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தோடு தொடர்புகொண்ட கலைஞர்களின் வரலாறும் பாரம்பரியமும் கூறப்பட்டுள்ளது. கோவிலின் பண்டைய கலாசாரத்தின் எச்சங்களையும் சமுதாய அமைப்பையும் இந்நூல் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இந்நூலில் மேற்படி கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் மரபுகள் பற்றி விரிவாக ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

‘பூர்வகலா’ என்ற தலைப்பிலான தொல்பொருள் ஆய்வுச் சஞ்சிகையொன்று யாழ்ப்பாணத் தொல்பொருளியற் கழகத்தினால் 1973 இல் வெளியிடப்பட்டது. இக்கழகம் யாழ்ப்பாணக் கல்லூரியின் பின்புலத்தில் இயங்கியது. இதன் முதலாவது இதழ் 1973 இல் பிரசுரமாகியிருந்தது. இதன் பதிப்பாசிரியர்களாக வி. சிவசாமி, ஆ. சிவநேசச்செல்வன் ஆகியோரும் பதிப்பாலோசகராக கா. இந்திரபாலா அவர்களும் பணியாற்றியிருந்தனர்.

poorvakala

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பின்புலத்தில் இவ்விதழின் ஒரு இதழே வெளிவந்திருப்பதாகக் கருதுகின்றேன். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்துக்காக திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி சுவீகரிக்கப்பட்டு, பல்கலைக்கழக கல்விசார் தேவைக்காக யாழ்ப்பாணக் கல்லூரியின் நூலகத்தின் பட்டக்கல்லூரிப் பிரிவு (Undergraduate Section) நூலகமும், நூலகர் உள்ளிட்ட ஊழியர்களும், பட்டதாரிப் பிரிவின் சிறந்த பல விரிவுரையாளர்களும் பல்கலைக்கழகத்தினால் உள்வாங்கப்பட்ட காலத்திலே ‘பூர்வகலா’ வெளிவந்த நிலையில், அவ்வேளை நிலவிய குழப்பகரமான சூழலில் அவ்வாய்விதழைத் தொடர்வதற்கு சம்பந்தப்பட்டவர்களால் முடியாமல் போனது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதன் பின்னர் எதிர்கொண்ட சிக்கல்கள் இன்று வரலாறாகிவிட்டது. 

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய திரு ஆ. சிவநேசச்செல்வன் (பின்னாளில் 1984 முதல் வீரகேசரியின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்-தற்போது கனடாவில் வாழ்கின்றார்), ‘பூர்வகலா’ இதழில் ‘மாவிட்டபுர ஆதீனச் சுவடிச் சாலையும் ஏட்டுப் பிரதிகளும்’ என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரை மாவிட்டபுரம் சுவடி நூலகம் பற்றிய பல தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருந்தது. யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய வேளையில் திரு ஆ. சிவநேசச்செல்வன் அவர்கள் திரு த. சண்முகசுந்தரம் அவர்களின் உதவியுடன் மாவிட்டபுரம் ஆலயத்தின் பரம்பரைவழி வந்த பிரம்மஸ்ரீ சு. துரைச்சாமிக்குருக்களின் இல்லத்தில் அவருடன் நேரடியாக உரையாடும் பாக்கியத்தைப் பெற்றவர். அத்துடன் அவரது இல்லத்தில் பேணிவைக்கப்பட்டிருந்த மாவிட்டபுர ஆதீனச் சுவடிச்சாலைக்குரிய ஏடுகளையும் பிற ஆவணங்களையும் நேரில் பார்த்து அதிசயிக்கும் வாய்ப்பினையும் பெற்றவர். 

“சூழலும் பாரம்பரியமும் உணர்த்தும் இவ்வாலயத்தின் பழைமை, கல்வியையும் கலைகளையும் பேணிய தன்மையைக் குறிப்பாக விளக்குகின்றது. இன்று இவ்வாதீனச் சுவடிச்சாலையிற் காணப்படும் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட ஏட்டுப் பிரதிகளும், அவை பற்றி ஆதீனம் கூறும் கதை மரபுகளும் நீண்டதொரு வரலாற்றுத் தடத்தின் தொடர்பையும், சமூகத்தில் இவ்வாலயம் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவூட்டுகின்றன. இப்போதைய ஆதீனகர்த்தா பிரம்மஸ்ரீ சு. துரைச்சாமிக் குருக்கள் வாழையடி வாழையாக வந்த மரபை நினைவூட்டும் வகையில் ஆதீனச் சவடிச்சாலை பற்றியும், ஆதீனம் அவற்றைப் பேணிய மரபையும் தமது நினைவைக் கொண்டும் முன்னோர் ஞாபகங்களைக் கொண்டும் கூறினார்” என்று குறிப்பிடும் திரு ஆ. சிவநேசச்செல்வன், தனது கட்டுரையில் பிரம்மஸ்ரீ சு. துரைச்சாமிக் குருக்களின் உரையாடலை அவரது வாய்மொழியாகவே கீழ்க்கண்டவாறு பதிவுசெய்திருக்கிறார்: 

“எமது ஆதீனத்தில் சுவடிச்சாலையொன்று நீண்டகாலமாகப் பேணப்பட்டு வருகின்றது. முன்னர் ஆலயத்தில் இதற்கெனவுரிய இடத்தில் வைத்துப் பேணப்பட்டது. இன்று ஆதீனகர்த்தரின் இல்லத்தில் மிகவும் பாதுகாப்பாகப் பேணி வைக்கப்பட்டுள்ளது. செல்லரிக்காமலிருப்பதையும் ஏடுகள் கைமாறாமலிருப்பதையுமே இங்கு குறிப்பிடுகின்றேன். உற்சவ தினங்களை யொட்டிய அல்லது படிப்புத் தினங்களை யொட்டிய ஏடுகள் மட்டும் தற்போது பிள்ளையார் வாசலுக்கருகிலுள்ள களஞ்சியத்தில் வைக்கப்பட்டு வேண்டிய நேரம் எடுத்துப் புராணம் படிப்பவர்களிடம் உரிய முறையில் வழங்கப்படுகின்றன. எமது முன்னோரால் எழுதிப் பேணப்பட்ட ஏடுகள்தாம் இவை. எமது ஆதீனத்தில் நான் அறிந்த காலம் வரை மூன்று அல்லது நான்கு பேர் ஏட்டுச் சட்டங்களைத் தயாரிப்பதற்கும் படியெடுப்பதற்கும் பொறுப்பாக இருந்தார்கள். மரபு வழி வந்த ஏடுகளின் பிரதிகளே இவை.”

திரு ஆ. சிவநேசச்செல்வன் அவர்கள், பிரம்மஸ்ரீ சு. துரைச்சாமிக் குருக்களின் இல்லத்தில் பேணப்பட்டுவந்த மாவை ஆதீனச் சுவடிச்சாலையின் எச்சங்கள் பற்றி தனது நேரடி அவதானிப்பினை கீழ்க்கண்டவாறு தனது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்:

“மாவை யாதீனத்தில் உள்ள ஏடுகளிற் பெரும்பாலானவை கிரந்தத்திலுள்ளவை.  கோவிலுக்குரிய கிரியை விதிகள் அடங்கியவை. உற்சவ விபரங்களை அளிக்கும் பத்ததிகளும் பல காணப்படுகின்றன. கோவிலமைப்புப் பற்றிய சிற்ப நூல்களும், சிறந்த இலக்கண நூல்களும் காணப்படுகின்றன. பல தமிழ் மொழிபெயர்ப்புக்களுடன் உள்ளன. கிரந்தத்தில் உள்ள பல தத்துவ நூல்களும் காணப்படுகின்றன. தொல்காப்பியம், வீரசோழியம், திருவாசகம், தேவாரம் ஆகிய ஏடுகளுடன் புராண ஏடுகளே இன்று எஞ்சியுள்ளன. கவனக் குறைவினாலும்  ஆவணங்களை செவ்வனே பேணாமையினாலும் இவற்றிற் பல சிதைந்துவிட்டன. தொல்காப்பிய ஏடு அங்கு உரையுடன் காணப்படுகின்றது. அது ஆறுமுக நாவலருடையது” என ஆதீனகர்த்தர் குறிப்பிட்டார். இது ஆய்விற்குரியது. அதில் குறிப்புரைகளும் காணப்படுகின்றன.  

ஆதீனத்தில் தங்கி ஓலை எழுதிப் பணிபுரிந்தவர்களைப் பற்றி ஆதீனகர்த்தர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“மூல ஏடு ஒன்று சற்றுப் பழுதடைந்த நிலையில் இருக்குமாயின் அதனை மறுபிரதி செய்தலே இவர்கள் பணியாகும். இது தவிர, கோவிலுக்கு வேண்டிய பட்டோலை, உற்சவத்துக்கு வேண்டிய அறிவித்தல்கள் செய்தல், கோவிலுக்கு வேண்டிய வருமதிகள்-செலவினங்கள் நிலபுல வருவாய்கள் ஆகியனவற்றைப் பதிந்து வைத்தலும் இவர்களது கடமையாகவிருந்தது. இவ்வாறான பதிவேடுகள் பல இருந்தன. அவை இப்பொழுது அழிந்துவிட்டன.”

தமிழ்நாட்டு ஆலயங்களில் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் பேணப்பட்ட மரபு போன்றதே இது. இம்மரபு நீண்டகாலமாகப் பேணப்பட்டதாக ஆதீனகர்த்தர் குறிப்பிட்டார். ஓலை படியெடுப்பவர்களும் ஆதீனத்தில் தங்கிப் பணிபுரிந்தார்கள். அச்சுக்கலை விருத்தியடையத் தொடங்க முன்னர் மாவையாதீனத்தில் சுந்தரக் குருக்கள், இராமநாதக் குருக்கள் என்போர் பஞ்சாங்கம் கணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இது மரபுவழியாக வந்ததொன்றாகும். பஞ்சாங்கங்களைத் தயாரித்து அவற்றை ஏட்டுப் பிரதிகளிற் பொறித்து வைத்தனர். இவற்றைப் படியெடுத்துப் பலரும் உபயோகித்தனர். இன்றும் இப்பஞ்சாங்கம் வாசிக்கும் மரபு வருஷ உற்சவம் முடிந்த பின்னர் கொடிஸ்தம்பத்தின் அருகில் நடைபெற்று வருகின்றது. 

மாவையாதீனத்தில் சுவடிச்சாலை தொடர்பான திண்ணைப் பள்ளிக்கூட மரபும் நிலவிவந்துள்ளது. வடமொழிக் கல்விக்கும் தமிழ்க் கல்விக்கும் அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிராமணச் சிறுவர்களும், பிறரும் இங்கே பயின்றுவந்தனர். 

ஏட்டுப் பிரதிகளைச் சூழவுள்ள ஆலயங்களுக்குப் படிப்புக் காலங்களில் கொடுத்துதவும் பணியையும் சுவடிச்சாலை மேற்கொண்டிருந்தது. பல அறிஞர்கள் இங்குள்ள ஏட்டுப் பிரதிகளை இரவலாகப் பெற்றுப் படித்தனர். இதனால் பல ஏட்டுப்பிரதிகள் கைதவறியும் போயுள்ளன. ஒரு வகையில் மாவையாதீனச் சுவடிச்சாலை அக்காலத்தில் பலருக்கு உடனுதவும் நூலகமாகவும் விளங்கிவந்துள்ளது. கோவில் மரபின் சின்னமாக விளங்கும் இச்சுவடிகள் பேணப்பட வேண்டியவை. அச்சுவாகனம் ஏறாத ஏட்டுப் பிரதிகளும் அங்குள்ளதை அறியமுடிகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நூலக நிறுவனம் போன்றவை இவ்வாவணங்களை மேலும் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு  தமது பங்களிப்பினை நல்குவார்கள் என நம்புவோம்.  

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5161 பார்வைகள்

About the Author

நடராஜா செல்வராஜா

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகரும், நூலகவியல் காலாண்டுச் சஞ்சிகையின் தாபக ஆசிரியராகவும் செயற்பட்டார். ஊடகத்துறையிலும் பணியாற்றிவிட்டு, தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இவர், ரோயல் மெயில் தபால் நிறுவனத்தின் அந்நிய நாணயப்பிரிவில் அதிகாரியாக தற்போது பணியாற்றுகின்றார். இவர் நூலகவியல் பற்றி தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், நூலகவியல் பற்றியும் பல வெளியீடுகளை செய்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)