Arts
6 நிமிட வாசிப்பு

வட இலங்கையில் சாதி : பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் – 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு – பகுதி 1

October 15, 2022 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

ஆங்கிலத்தில்  பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளை

ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலம்

British colonial history

பிரடரிக் நோர்த் (1798 – 1805) முதலாவது ஆங்கிலேய ஆளுநராக இருந்தார். இவர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சாதிய ஒழுங்கமைப்பு நிர்வாகத்தின் அடிப்படையாக இருந்தது. இதனை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டது.  வடஇலங்கையில் சாதித் தலைமைக்காரர் முறையை (Caste headman system) நடைமுறைப்படுத்திய பிரித்தானியர், கரையார் போன்ற சாதியினரின் தலைமைக்காரர்களாக அவ்வச் சாதிகளைச் சேர்ந்தவர்களே கடமையாற்ற அனுமதித்தனர். 1806 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டம் உயர்சாதியினருக்குரிய மரியாதைகளை மரபுவழி வழமைகளின்படி வழங்கவேண்டும் என்று விதித்தது. (அருமைநாயகம் 1976). 1859 ஆம் ஆண்டில் குடியேற்ற நாட்டுச்செயலாளராக இருந்த எமர்சன் ரெனன்ட் சாதிமுறை கொடுமையானது எனக் கருத்துரைத்தாராயினும், சாதிமுறை மீது அரசாங்கம் நேரடியாகத் தலையிடுவது முறையன்று என்ற முடிவுக்கே வந்தார். பிரித்தானியர் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகள் உணர்த்தும் உண்மை – சாதி காலமாற்றத்தால் ஒழிந்து போக வேண்டிய தீய நடைமுறை என்பதாகும். அறிவின் வளர்ச்சியினால் படிப்படியாக இத்தீங்கு மறைந்துவிடும் எனவும் கருதப்பட்டது. (ரெனன்ட் 1859)

19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவமுடைய மாற்றம் ஒன்று, சாதிக்குழுக்கள் அரசுக்குச் சாதி அடிப்படையிலான நேரடி கடப்பாடுகளில் இருந்தும் சேவைகள் வழங்குவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டமையாகும். ஆயினும் அரசுக்கு அடுத்த இரண்டாம் நிலையில் மரபுவழி முறைமை தொடர்ந்தது. உதாரணமாக வடஇலங்கையில் கிராம மட்டத்தில் வேளாள உயர்சாதியினரைத் தலைமையாகக் கொண்ட சாதிமுறைமையும், சாதி உறவுகளும் தொடர்ந்தன. 

மீன்பிடி, விவசாயம் என்ற இரண்டு மரபுவழித்தொழில்களோடு தொடர்புப்பட்டதாகச் சாதிமுறைமை வடபகுதியில் இயங்கியது. வடபகுதியின் தமிழ்ச் சமூகத்தில் நபர் ஒருவரின் சாதி அந்தஸ்து பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதாக இருந்தது. சாதி அடுக்கமைவில் சாதிகளும், உபசாதிகளும் குறிப்பிட்ட வகை வகிபாகத்தை (role) ஏற்றுச் செயற்பட்டன. சாதிச் சமூகம் ஓர் உயிரியின் தன்மையுடையதாய் (organic system) விளங்கியது. வேலைப்பகுப்பின் அடிப்படையில் சாதிகளின் தொழில்கள் அமைந்தன. ஒரு குழு இன்னொரு குழுவுடன் பரஸ்பர தங்கியிருத்தல் தொடர்புடையதாய் இருந்ததோடு தொழில்சார்போட்டி சமூகத்தில் இருக்கவில்லை.

வடபகுதியின் தமிழர்களிடையே 19ம் நூற்றாண்டிலும், அதற்குப் பிந்திய காலத்திலும் கூட சாதியமுறைமையின் மூன்று இயல்புகள் தொடர்ந்து நிலைபெற்றிருந்தன. அவையாவன.

1. அகமண முறை: சாதிகள் தமக்குள்ளேயே திருமண உறவுகளை வைத்திருத்தல் (Endogamy) 

2. மேல் – கீழ் என்ற படித்தர அமைப்பு (hierarchy) 

3. தொழில் அடிப்படையிலான சிறப்பு தேர்ச்சி

பிரேத ஊர்வலத்தின் போது தீண்டதகாதவர்களின் வேலைகள்

ஆயினும் காலப்போக்கில் இவற்றில் ஓரளவு நெகிழ்ச்சித் தன்மை ஏற்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் லியானாட் வூல்ப் (Leonard woolf)  யாழ்ப்பாணத்தின் உதவி அரசாங்க அதிபராக இருந்தார். அவர் காலத்தில் கூட சாதி வேற்றுமையும் சாதி உணர்வும் அங்கு பலமாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். ‘சாதி வழமை பற்றியும், அவற்றை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்தும் ஒருவர் அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார். உயர்சாதி நபர் ஒருவரின்  பிணத்தை தாழ்த்தப்பட்ட சாதியாட்கள் தூக்கிச்செல்லுதல் தொடர்பான பிணக்கு பற்றியும் லியனாட் வூல்ப் குறிப்பிட்டுள்ளார். (வூல்ப் 1961)

ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சமூக ஒழுங்கமைப்பும், சமூக நீதியும் பற்றிய மனச்சாட்சியுணர்வு இருந்தது. ஆயினும் உள்ளூர் வழமைகளை பேணுதல் சமூக அமைதியைப் பாதுகாத்தல் என்ற நிர்வாகத் தேவை பற்றிய முரண்பட்ட கருத்தும் இருந்து வந்தது. இந்த இக்கட்டான நிலையில் அவர்கள் சமூக நீதி என்ற இலட்சிய நோக்கிலான தீர்வைத் தேர்ந்துக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. சமூகத்தில் அமைதியையும் ஒழுங்கையும் பேண வேண்டும் என்பதற்காக பண்டைய படித்தர அமைப்புடைய சமூக ஒழுங்கை பேணிப் பாதுகாத்தனர். வரலாற்று நோக்கில் பார்க்கும் போது பிரித்தானியர் ஆட்சியின் மறைமுகத் தாக்கம் மிகப்பெரிது. ஆயினும் சாதிமுறைமையின் மீது பிரித்தானிய ஆட்சியின் நேரடித்தாக்கம் மிகவும் குறைவு. நேரடித்தாக்கத்தால் சாதிக்கட்டமைப்பில் குலைவு ஏற்படவில்லை. பிரித்தானிய காலனிய ஆட்சி வடபகுதியின் மேலாதிக்கச் சாதியினை பலப்படுத்துவதற்கே துணைப்புரிந்தது. 

சாதிக்குழுமங்களாலான சமூகமுறைமை இலங்கையின் சமூக அமைப்பை அடுக்கமைவுடையதாக்கியது. சாதிகள் தொடர்பாக பின்பற்றப்பட்ட வழமைகளும் வேறுபாடுகளும் பிரித்தானிய ஆட்சியில் நிர்வாக பிரச்சினைகளை ஏற்படுத்தியது. பழமையான மரபுகளையும் வழக்கங்களையும் மீறுவதும் இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச அதிபர் பி. ஏ. டைக் வடமாகாணத்தில் பதவி வகித்த காலத்தில் (1827 – 1867) யாழ்ப்பாணம், வன்னி, சிங்கள வன்னி எனப்படும் நுவர கலாவாவி பகுதி ஆகியன வடமாகாண எல்லைக்குள் அமைந்திருந்தன. இவர் அரசாங்க அதிபராக பதவி ஏற்கும் முன்னர் யாழ்ப்பாணத்தின் ‘கலக்டராகவும்’ இருந்தவர்: நிர்வாக அதிகாரி என்ற முறையில் சாதிமுறைமை ஒரு சிக்கலான பிரச்சினையாகவும் சவாலாகவும் டைக் கருதினார். 

வடமாகாணத்தின் தமிழர்களினதும், சிங்களவர்களதும் சாதிமுறைமை ஒன்றுக்கொன்று மாறுபட்ட இயல்புகள் பலவற்றை கொண்டிருந்தது.  வன்னி, மன்னார் பகுதியின் சாதிமுறை தனித்த இயல்புகளை கொண்டிருந்தன. வன்னி, மன்னார் ஆகிய இடங்களின் தமிழ்மக்களின் சாதிமுறையில், சிங்களவர் சாதிமுறையில் இருந்து வேறுபட்ட தனித்த இயல்புகள் பல காணப்பட்டன.  

பொதுப்படையாக நோக்கும்போது உணவு, நீர் என்பவற்றை கொள்ளல். கொடுத்தலில் தூய்மை துடக்கு விதிகளை அனுசரிப்பதில் தமிழர்கள் நெகிழ்ச்சியற்ற போக்கை வெளிப்படுத்துகின்றனர். இந்துசமயம் சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் பாரபட்சம் காட்டுதல் என்பவற்றிற்கு சமய அங்கீகாரம் வழங்குவது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். இதை விட வேளாளர் சாதிக்குள் உபபிரிவுகள் இருத்தல், மடப்பள்ளிகள் என்ற உபபிரிவு ஆகிய கூறுகள் யாழ்ப்பாணத்திற்கே உரிய தனித்துவப் பண்புகளாகும். இவ்வாறான உப சாதிப்பிரிவினர் தாம் இந்தியாவின் சைத்திரிய குலங்களின் வழிவந்தோர் எனக் கூறினர். இவற்றைப்போன்று பிரச்சினைகள் சாதியைச் சிக்கலுடையதாக்கி பிரித்தானிய அரசாங்க அதிபருக்கு நிர்வாகச் சிக்கல்களை உருவாக்கியது. 

காதணி அணியத்தடை 

காதணி மற்றும் மேலாடை அணிய தடைசெய்யப்பட்ட சாதியினர்

1830 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் உயர்சாதியினர் தம்மிலும் தாழ்ந்தவர் எனக் கருதியோரின் பெண்கள் காதணிகள் போன்ற ஆபரணங்களை அணியக்கூடாதென எதிர்ப்பு வெளியிட்டனர். அது மட்டுமன்றி கிராம மட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட சாதியினரை காதணி போன்ற அணிகலன்களை அணியவேண்டாம் எனப்பணித்ததோடு பணிப்புரையை மீறியவர்களைத் தண்டம் விதித்துத் தண்டித்தனர். 

இவ்வாறு அணிகலன்களை அணியவிடாது தடுக்கப்பட்டோர் நிலமற்ற கூலித்தொழிலாளர்களாவர். சமத்துவக்கொள்கையில் நம்பிக்கையுடைய அரசாங்கத்தால் இவ்வாறு ஆட்களிடைக்காட்டப்படும் பாரபட்சத்தை அனுமதித்தல் இயலாது.  இக்காரணத்தால் அரசாங்கம் தண்டம்விதித்து தண்டிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சாதிப்பிரச்சினைகளை கிராமமட்டத்தில் கிளப்புவதற்கு அனுமதிக்ககூடாது என கிராம அதிகாரிகளுக்கு அரசாங்கம் கட்டளையிட்டது.

குறிப்பு : ‘CASTE IN NORTHERN SRI LANKA AND BRITISH COLONIAL ADMINISTRATIVE PRACTICE IN THE MID 19TH CENTURY : COMPROMISE AND EXPEDIENCY, என்ற தலைப்பில் 1988 ஆம் ஆண்டு Sri Lanka journal of social sciences (j. s. s) 1988 11 ( 1&2) என்னும் இதழில் பேராசிரியர் B. E. S. J. பஸ்தியம்பிள்ளைஅவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

12662 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)