Arts
17 நிமிட வாசிப்பு

பத்தினித் தெய்வ வழிபாடும் சிங்கள – பௌத்தப் பண்பாடும்

July 10, 2023 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

ஒரு விமர்சன அறிமுகம்

பத்தினி வழிபாடு கேரளத்தில் இருந்து வந்து குடியேறிய மக்களால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தக் குடியேற்றம் 12-14 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது. இந்தக் குடியேறிகள் தற்போதைய வகைப்படுத்தலாக அமையும் மேல் மாகாணம், தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம் ஆகிய இடங்களில் குடியேறினர். இவர்கள் சிங்கள மொழி பேசுவோராகவும் பௌத்தர்களாகவும் காலப்போக்கில் மாறினர். இவ்வாறாக அவர்கள் பௌத்த – சிங்களப் பண்பாட்டில் தம்மைக் கரைத்துக் கொண்டனர். கேரளத்தில் இருந்து வந்து இலங்கையில் குடியேறிய இன்னொரு பகுதி மக்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பாணமைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் குடியேறினர். இங்கு வாழ்ந்து வந்த தமிழர்களுடன் கலப்புற்ற இந்தக்குடியேறிகள் பத்தினி வழிபாட்டைக் (கண்ணகி வழிபாடு) கிழக்கு மாகாணத்தில் வேரூன்றச் செய்தனர். சிங்களப் பகுதிகளிலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பகுதிகளிலும் பரவிய பத்தினி வழிபாட்டு மரபு பற்றி விரிவான ஆய்வு நூல் ஒன்றைப் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர எழுதியுள்ளார். The cult of Goddess Pattini என்னும் இந்நூல் 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகப் பிரசுரமாக வெளிவந்தது. இந்நூல் பற்றிய அறிமுகமாகவும் விமர்சனமாகவும் இக்கட்டுரை அமைகின்றது.

பண்பாட்டு வேர்களைத் தேடுதல்

The-cult-of-Goddess-Pattini

பத்தினித் தெய்வ வழிபாடு (The Cult of Goddess Pattini) என்ற பெயரில் 629 பக்கங்கள் கொண்ட பெருநூலை மானிடவியலாளர் கணநாத் ஒபயசேகர 1984 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூல் சிக்காகோ பல்கலைக்கழக வெளியீடாக அமைந்தது. அவ்வேளை அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தார். இலங்கையின் மேற்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் சிங்களவர் மத்தியிலும், கிழக்கு மாகாணத் தமிழர்களிடையேயும் பெருவழக்காக இருக்கும் இவ்வழிபாடு பற்றி அவர் விரிவான கள ஆய்வுகளைச் செய்தார். ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் படித்துப் பட்டம் பெற்ற கணநாத் ஒபயசேகர மானிடவியல் துறையில் தீவிர அக்கறையோடு ஈடுபடத் தொடங்கினார். இந்நூலின் நூன்முகத்தில் அவர் கூறியிருப்பவை அவரின் புலமை ஆளுமையின் குண இயல்புகளை நன்கு விளங்கிக் கொள்ள உதவக் கூடியன.

“1955 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாக நான் வெளிவந்தேன். பேராதனையில் நான் படித்த காலத்தில் எனது தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் பலரைப் போன்று, எனது தனிநபர் அடையாளம் யாது? சமூக அடையாளம் யாது? என்பன பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். நான் எனது சொந்த ஊரைவிட்டு சிறுபிள்ளையாக இருந்த காலத்திலேயே வெளியேறி, கொழும்பிலும் பின்னர் கண்டியிலும் வாழ்ந்து வந்தேன். பாடசாலை விடுமுறைக் காலத்தில் நான் எனது கிராமத்திற்கும் போயிருக்கிறேன். ஆனால் நான் எனது பிறந்த ஊரின் சமூக இருப்பின் (Social Existence) பாகமாக, அதனோடு இணைந்தவனாக, ஒருபோதும் இருக்க முடியவில்லை. மேற்கு, தெற்கு மாகாணங்களின் பெரும்பாலான கிராமங்களைப் போன்றே எனது கிராமமும் உள்வந்த பண்பாடுகளை இணைத்துக் கொள்ளும் செயல்முறையின் (Acculturation) தாக்கத்திற்கு உட்பட்டிருந்தது. மனோரதியத் தேடல் உணர்வால் உந்தப்பட்ட நான் கிராமத்தின் உண்மையான வாழ்வை உள்ளபடி அறிந்து கொள்வதற்காக வார இறுதி நாட்களிலும் பல்கலைக்கழக விடுமுறையின் போதும், வடமத்திய மாகாணத்தின் ஒதுக்குப் புறமான கிராமங்களுக்குப் போய், அங்கு திரிந்து, நாட்டார் பாடல்களையும், கிராமத்துப் புராண ஐதீகக் கதைகளையும் சேகரித்தேன். கிராமப் பண்பாடு பற்றிய தெளிவான புரிதல் நோக்கி நான் பயணிப்பதையும், எனது அந்நியமாதலில் இருந்து நான் விடுதலை பெறலாம் என்பதையும் உணர்ந்தேன். (ஆனால் அந்நியமாதலில் இருந்து விடுதலை பெறுதல் இயலாத, பயனற்ற முயற்சி என்பதை விரைவில் உணர்ந்து கொண்டேன்)” 

பத்தினி வழிபாடு

பத்தினி வழிபாடும் அதனோடு இணைந்த சடங்குகள் தொடர்பாகவும் பல்வேறு மரபுகள் இருந்து வந்தன. அவற்றுள் பிரதானமானவையான ஆறு மரபுகளைத் தெரிந்து கள ஆய்வினை தாம் 1956 ஆம் ஆண்டில் நடத்தியதாக கணநாத் கூறுகிறார். கள ஆய்வுக்காக அவர் தேர்வு செய்த பகுதிகள் கரையோரப்பகுதி (மேற்கு மாகாணமும், தெற்கு மாகாணமும்) சப்பிரகமுவ, மாத்தளை, சீனிகம, உறுபொக்க, இரத்தினபுரி ஆகிய ஆறு பகுதிகளாகும். இந்த இடங்களின் பெயர்களால் அறியப்பட்ட ஆறு மரபுகளின் விரிவான கள ஆய்வு பத்தினி வழிபாடு பற்றிய ஆழமான அறிவைப் பெற்றுக் கொள்ள அவருக்கு உதவியது.

Pattini

இலங்கையில் பத்தினித் தெய்வத்தின் பிரதான கோவில் றூவன்வெலவில் (சப்பிரகமுவ) நவகமுவ என்ற இடத்தில் உள்ளது. இன்று இந்தக் கோயில் பௌத்த மடாலயம் ஒன்றின் பகுதியாக உள்ளது. கோயிலோடு, பௌத்த மடாலயம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நவகமுவவில் பத்தினித் தெய்வத்திற்குரிய ஆண்டுத் திருவிழா இப்போது வர்த்தக மயப்படுத்தப்பட்ட முறையில் பெருவிழாவாக நடைபெறுகிறது. பத்தினிக் கோயிலின் பூசாரி கப்புரால என அழைக்கப்படுவர். இவ்வழிபாட்டுடன் தொடர்புடைய பிரதான சடங்கு “ஹம்மடுவ” எனப்படும். ”ஹம்” என்றால் கிராமம் என்றும் “மடுவ” என்றால் மண்டபம் என்றும் பொருள். கிராமத்து மண்டபத்தில் மக்கள் கூடி நடத்தும் சடங்குதான் ஹம்மடுவ சடங்கு. இது அறுவடை முடிந்த பின் நடத்தப்படும் அறுவடைச் சடங்கு ஆகும். ஆண்டு தோறும் நடத்தப்படும் ஹம்மடுவ நோய், வரட்சி போன்ற பொதுவான இடர்களில் இருந்து நீக்கம் பெறவும் நடத்தப்படும். தனிப்பட்ட ஒரு குடும்பம் அல்லது நபரின் நோய், துன்பம் என்பனவற்றின் நீக்கத்திற்காகவும் ஹம்மடுவ நடத்தப்படுவதுண்டு. அச்சடங்கு ஒரு குடும்பத்தோடு அல்லது தனி நபரோடு தொடர்புடையதாயின் ஆண்டுச் சடங்கு போன்று விஸ்தாரமானதாக இல்லாது சுருங்கிய வடிவில் நிகழ்த்தப்படும்.

கண்டிப் பகுதியில் பத்தினி வழிபாடு

கரையோரப் பகுதிகளிலும், சப்பிரகமுவவிலும் கிராமத்தின் பிரதான தேவதையாகப் பத்தினி போற்றப்படுகிறாள். கண்டிப்பகுதியில், பத்தினி காவல் தெய்வமாக கருதப்படுகிறாள். கண்டி இராச்சியத்தின் அரசுச் சடங்குகளின் பாகமாக  நான்கு காவல் தெய்வங்கள் உள்ளன. இவை விஷ்ணு, நாத, ஸ்கந்த (கத்தறகம) பத்தினி என்பனவாகும். இந்நான்கு கடவுளரின் கோயில்களையும் கூட்டாக “ஹத்தற தேவாலய” (நான்கு தேவாலயங்கள்) என அழைப்பர். கண்டியில் பிரதான பத்தினித் தேவாலயம் உள்ளது. இத்தேவாலயத்துடன் சடங்கு முறையில் தொடர்புபட்ட பத்தினித் தேவாலயங்கள் பல கண்டிப் பகுதியில் உள்ளன. இவற்றுள் “ஹங்குரன்ஹெட்ட”, மாத்தளையின் “அன்பொக்க” ஆகியன முக்கியம் வாய்ந்தவை. கண்டிப் பகுதியில் பல சிறிய பத்தினித் தேவாலயங்களும் உள்ளன.

கிராமியத் தெய்வம் என்ற நிலையில், கண்டியில் பத்தினித் தெய்வத்தினை பிரதான கிராமத் தெய்வமாகக் கொள்ள முடியாது. கண்டியின் கிராமங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்கு “கொஹம்ப கங்கரிய” எனப்படும். இச்சடங்கு கூட்டமாகப் பல கிராமியத் தேவதைகளுக்காக நடத்தப்படுகிறது. “கொஹம்பதெய்யோ” என்ற தெய்வம் ”யக்கு” எனவும் அழைக்கப்படும். இதனை விட “தொளகதெய்யோ” (பன்னிரண்டு தெய்வங்கள்) என்று அழைக்கப்படும், பன்னிரண்டு தெய்வங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்றின் பெயர் “கிரி அம்மா” (பால்தாய்). கிரி அம்மா தெய்வம் கண்டியில் பத்தினியின் இடத்தை பெறுகிறது. கண்டி அரசுடன் இணைந்த பௌத்த சமயமரபில், பத்தினி புத்த சமயத்தையும்  அரசையும் காவல் செய்கின்ற காவல் தெய்வமாக விளங்குகிறது. அங்கு பத்தினி வழிபாடு அரசுசார் சடங்கியலின் பாகமாக உள்ளது. கிரி அம்மா நாட்டார் சமய வழிபாடாக உள்ளது. 

கப்புரால

தேவாலயச் சடங்குகளைச் செய்பவர் கப்புரால என அழைக்கப்படுவார். கப்புராலவிற்கும் பௌத்த சமயத் துறவிகளான பிக்குகளிற்கும் இடையில் முக்கியமான வேறுபாடுகள் சில உள்ளன. பௌத்த பிக்கு ஒருவர் ஒருபோதும் ஹம்மடுவ போன்ற தேவதைச் சடங்குகளை நடத்துவதில்லை. அச்சடங்குகளின் போது சமுகமாகி இருப்பதும் இல்லை. கப்புரால சாதாரண பௌத்தர்களில் ஒருவராக இருப்பார். நவகமுவ பத்தினித் தேவாலயம் பௌத்த மடாலயம் ஒன்றுடன் சேர்ந்திருப்பது ஒரு விதிவிலக்கு. பாலத்தோட்ட, கஹட்டதுவ ஆகிய பத்தினித் தேவாலயங்களும் இவ்வாறு பௌத்த மடாலயங்களுடன் இணைந்து காணப்படுகின்றன. கரை நாட்டிலும் சப்பிரகமுவவிலும் கப்புரால, தேவாலயங்களின் பூசாரிகளாக உள்ளனர். இவர்கள் இப்பகுதிகளின் மேலாதிக்க சாதியான கொவிகம சாதியைச் சேர்ந்தவர்களாய் இருப்பர். கரையோரப் பகுதிகளின் கராவ, சலாகம கிராமங்களின் கப்புராலாக்கள் கராவ, சலாகம சாதியினராக இருப்பர். பேய், பிசாசு, ஆவிகள் ஆகியவற்றின் பூசாரிகள் கட்டாடிரால எனப்படுவர். கண்டி மாகாணத்தின் ஒதுக்குப் புறமான கிராமங்களில் கப்புரால வேலையைச் செய்பவர்களே, கட்டாடிரால வேலைகளையும் செய்கின்றனர். பத்தினித் தேவாலயப் பூசகர்களாக உள்ள கப்புரால, ஆண்களாகவே உள்ளனர். பெண்கள் பூசகர்களாக இருக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. அது இப்போது மறைந்து வருகிறது. கப்புரால பூசாரிக் குடும்பங்கள் ஒன்றோடொன்று திருமண உறவுகளால் தொடர்புடையவனவாக உள்ளன. இவ்வேலை பரம்பரைத் தொழிலாக உள்ளது. கப்புரால உருவந்து ஆடுதல், பேயோட்டுதல் ஆகிய சடங்குகளைச் செய்வதில்லை. இவை கட்டாடிராலாக்களின் தொழிலாகும். பத்தினி போன்ற தெய்வங்கள் நல்ல தெய்வங்கள். அவை ஒருவரின் உடலுக்குள் புகுந்து அவரை உருவரச் செய்து ஆடப் பண்ணுவதில்லை. கப்புராலவும் “நல்ல” தெய்வங்களின் பூசகர் ஆதலால் அவர் இப்பணிகளைச் செய்வதில்லை. மத்திய மாகாணங்களின் கிராமப்புறங்களில் மட்டும் கப்புரால, கட்டாடிராலவின் பணிகளையும் ஆற்றுவார். ஆயினும் கண்டி நகரில் உள்ள பத்தினித் தேவாலயம் போன்ற தேவாலயங்களின் பூசாரிகள் கட்டாடிராலவின் பணிகளைச் செய்வதில்லை.

தூய்மையும் துடக்கும்

பத்தினித் தெய்வம் “தூய்மை”யுடைய தெய்வம். அத் தெய்வத்தின் ஆலயத்தின் பூசாரியான கப்புராலவும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். துடக்கை ஏற்படுத்தும் புலால் உணவு, மதுபானம் என்பன விலக்கப்பட்டவை. இந்து சமயத்தின் வழிவரும் “தூய்மை” என்ற கருத்து தேவாலயத்தின் கப்புராலவின் ஒழுக்க விதிகளின் பின்னணியில் உள்ளது. ஆயினும் இன்று இவை இலட்சியங்களே. நடைமுறை வாழ்க்கையில் இவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினரே. ஆயினும் “கம்மடுவ” காலத்தில் கப்புராலவும், கிராமத்தவர்களும் தூய்மையைக் கடைப்பிடிக்கின்றனர். பிள்ளைப் பேறு, மரணம் ஆகியன ‘கில்லி’ எனப்படும் துடக்கை ஏற்படுத்தும். மாதவிலக்கில் உள்ள பெண்களும் துடக்கு உடையவர்கள். கிராமத்தில் மரணம் நிகழ்ந்தமை காரணமாக ‘ஹம்மடுவ’ சடங்கை துடக்கு நீக்கம் வரை ஒத்திப் போடுவதுண்டு. இது ‘சமுதாயம்” (Community) முழுமையும் துடக்குடன் தொடர்புடைய குடும்பத்தோடு பிரிக்க முடியாத பிணைப்பை உடையது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

‘ஆதுர’ – கூட்டு வழிபாட்டுக் குழுவும்  நோயாளிகளும்

ஹம்மடுவ சடங்கில் பங்கு பெறும் கிராமத்தவர் ஒவ்வொருவரும் கூட்டு வழிபாட்டுக் குழுவின் (Congregation) உறுப்பினராக விளங்குகிறார். ஹம்மடுவ சடங்கு ‘நோயாளிகளை பீடித்த நோய்களையும் தோஷங்களையும் நீக்கும் சடங்கு ஆகும். ஆகையால் அச் சடங்கில் பார்வையாளராக இருப்போரும் நோயாளியாகவே பங்கேற்கின்றனர். கூட்டு வழிபாட்டுக் குழு + நோயாளி என்ற இரண்டு அர்த்தங்களையும் உள்ளடக்கிய கருத்தே ‘ஆதுர’ என்ற சொல்லால் சுட்டப்படுகிறது. நாட்டார் சமயத்தின் இவ்வுலக (This Worldly) அக்கறைகளை இது எடுத்துக் காட்டுகிறது. பௌத்த சமயத்தின், அப்பால் உலக (Other Worldly) அக்கறைகளில் இருந்து இது வேறுபட்டது. சிங்களக் கிராமிய சமூக வாழ்க்கையில் கப்புரால, பிக்கு ஆகிய இருவரதும் வகிபாகம் வேறுபட்ட இயல்புகளையுடையது. 

சடங்குகளை நடத்தும் நபர்கள்

ஹம்மடுவ சடங்கில் கப்புரால முக்கியமான பங்கினைப் பெறுகிறார். ‘பெரவ’ சாதியினரான மேளம் அடிப்போர் சடங்கின் போது மேளம் அடிப்பார்கள். ‘ரதவ’ என்று அழைக்கப்படும் துணி வெளுக்கும் சாதியினர் சடங்கிற்குத் தேவையான சுத்தமான துணிகளை வழங்குவர். “நவண்டன” (ஆசாரி) கப்புகளை வெட்டி நடுவதற்குரிய கத்திகளை வழங்குவார். ‘கும்பல்’ (குயவர்) குடம், பானை ஆகியவற்றை வழங்குவார். இன்று நவண்டன, கும்பல் என்ற இரு சாதியினரதும் சடங்கியல் முக்கியத்துவம் கிராமங்களில் குறைந்து வருகிறது. கிராமத்தவர்களும் சடங்குகளில் உதவி ஆட்களாகப் பங்குபற்றுவர். ‘வட்டாண்டி’ என்ற உதவியாளர்கள் கொம்பு முறிப்புச் சடங்கில் (அங்கிலிய) முக்கியமான பங்கேற்பர்.

நாட்டார் இலக்கியமும் நாட்டார் சமயமும்

ஒரு நாட்டார் சமயத்திற்கு இணையான நாட்டார் இலக்கிய மரபும் இருப்பதுண்டு. சிங்கள சமூகத்தில் பத்தினி வழிபாட்டோடு தொடர்புடைய நாட்டார் இலக்கியம் 35 பாடல் தொகுப்புகள் (பந்திஸ் கொல்முற – Thirty five song books) வடிவில் உள்ளது. கப்புரால பூசாரிகள் இப்பாடல் தொகுப்புக்களை நன்கு கற்றவர்களாகவும், அவற்றின் படியான சடங்குகளை நிகழ்த்தும் தொழில்முறை நிபுணத்துவம் மிக்கவர்களாகவும் உள்ளனர்.

கிராமத்து மந்திரவாதிகளுக்கும் பேயோட்டுச் சடங்குகளை நிகழ்த்துபவர்களுக்கும், கப்புராலவிற்கும் உள்ள வித்தியாசத்தை கணநாத் ஒபயசேகர , மக்ஸ்வெபரின் மேற்கோள் ஒன்றை எடுத்துக்கூறி விளக்குகிறார். அம்மேற்கோளில் (பக் 22) உள்ள கருத்துக்களை எளிமைப்படுத்திய மொழிபெயர்ப்பாகக் கீழே தந்துள்ளேன்.

  1. மந்திரவாதியும் பூசகரும் பல அம்சங்களில் வேறுபாடு உடையவர்கள். 
  2. பூசகர் தொழில்சார் நிபுணத்துவ அறிவை உடையவர்.
  3. பூசகரிடம் திட்டவட்டமான தெளிவான கிரியை ஒழுங்கும், கொள்கையும் இருக்கும். 
  4. பூசகர் தொழில் முறையான பயிற்சித் தகுதிகளை உடையவராய் இருப்பார். 
  5. மந்திரவாதிகள், தீர்க்கதரிசனம் கூறுவோர் போன்றவர்கள் தம்மிடம் உள்ள ஆளுமைக் கவர்ச்சியால் அற்புதங்களை நிகழ்த்தவும் அருள் வாக்குக் கூறவும் வல்லவர்கள்.

சிங்கள பௌத்தர்களால் வழிபடப்படும் நாத, விஷ்ணு, கத்தரகம (ஸ்கந்த) தெய்வங்களோடும் பிற நாட்டார் தெய்வங்களோடும் தொடர்புடைய நாட்டார் இலக்கியங்கள் பல உள்ளன. மேலும் பத்தினி தொடர்பான ’35 பாடல் தொகுப்புக்கள்’ ஒப்பீட்டளவில் வரையறையான ஒழுங்கமைப்பு உடையவை என அவற்றின் சிறப்பை ஒபயசேகர எடுத்துக் காட்டுகிறார். ஒபய சேகரவின் நூலின் இரண்டாம் பாகம் இப்பாடல் தொகுப்புக்களில் இருந்து பல பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகத் தருவதோடு, விரிவான விளக்கங்களையும் தருவதாக உள்ளது. கிழக்கு மாகாணத் தமிழர்களின் கண்ணகி வழிபாட்டோடு தொடர்புடைய நாட்டார் இலக்கியங்கள் இரண்டு உள்ளன. அவை (i) கண்ணகி வழக்குரை (ii) கண்ணகி அம்மன் குளிர்த்திப் பாடல்கள். இவை இரண்டையும் பற்றி விரிவான குறிப்புகளை நூலின் 15 ஆவது அத்தியாயத்தில் நூலாசிரியர் தந்துள்ளார். ‘கண்ணகி வழக்குரை” பண்டிதர் வீ.சி.கந்தையா அவர்களால் 1965 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Obayasekara

கணநாத் ஒபயசேகரவின் பெரு நூலைப் பற்றி ஒரு சிறிய அறிமுகமாகவே இக்கட்டுரை அமைகிறது. பத்தினித் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய சடங்குகள், கதைகள், பாடல்கள் பற்றிய விபரிப்பை 15 அத்தியாயங்களில் 620 க்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுத வேண்டுமா, அதன் நடைமுறைப் பயன் என்ன என்று வாசகர் மனதில் ஓர் ஐயம் தோன்றலாம். நாட்டார் சமயம் பற்றிய ஆய்வுகளை இருவகையாகப் பிரிக்கலாம். நிகழ்காலத்தில் ஒரு சமயச் சடங்கு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது?  அது சார்ந்த கதைகள், பாடல்கள் என்ன கூறுகின்றன? என்று எழுதுவதை விவரண முறை ஆய்வு என்பர். முதலாவது வகை ஆய்வு இம்முறையில் அமைவது. இம்முறை விபரிப்பை ‘Synchronic study’ என்ற கலைச் சொல்லால் மானிடவியலாளர்கள் குறிப்பிடுவர். இன்னொரு வகை ஆய்வு வரலாற்று முறை ஆய்வு ஆகும். இதனை மானிடவியலாளர்கள் ‘Diachronic study’ என அழைப்பர். கணநாத் ஒபயசேகரவின் ஆய்வு இரண்டாவதான வரலாற்று முறை ஆய்வாகும். அவ்வாய்வு விவரண முறையை உள்ளடக்கியதே. ஆயினும் அங்கு முதன்மை பெற்றிருப்பது வரலாற்று ஆய்வாகும். 12 – 14 ஆம் நூற்றாண்டுகளில் கேரளத்தில் இருந்து வந்த மக்கள் இலங்கையின் மேற்கு மாகாணம், தென்மாகாணம், சப்பிரகமுவ மாகாணம், ஆகிய இடங்களில் குடியேறினார்கள். கொழும்பு முதல் கிழக்கு மாகாணத்தில் பாணமை வரையாக உள்ள கடற்கரைப் பகுதியில் இக் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. இவ்வாறு குடியேறியவர்களால் கொண்டு வரப்பட்ட பண்பாடே பத்தினி வழிபாடு. 

கேரளத்தில் இருந்து குடியேறிய இன்னொரு பிரிவினர் பாணமைக்கு வடக்கே உள்ள கிழக்கு மாகாணத்தில் குடியேறினார்கள். இவ்வாறு குடியேறியவர்கள் கண்ணகி வழிபாட்டை மட்டக்களப்புப் பண்பாட்டில் வேரோடச் செய்தனர். இவ்விரண்டு குடியேற்றங்களும் சமாந்தரமாக ஏற்பட்டன. இவற்றிடையே தொடர்புகள் உள்ளன. கணநாத் ஒபயசேகரவின் பெருநூல் பத்தினி வழிபாடு பற்றிய வரலாற்று முறை ஆய்வாகும். இவ்வரலாற்று முறை ஆய்வின் பிரதான விடயம் புராணப் புனைவு உருவாக்கம் (Mythicization) பற்றியதாகும். பத்தினி வழிபாட்டை இலங்கைக்குக் கொண்டு வந்த வீர புருஷனான கஜபாகு மன்னனின் கதை ஒரு புராணப் புனைவுடன் கூடிய கதை. இக்கதையில் மறைந்திருக்கும் வரலாற்றுச் செய்திகள் எவை என ஒபயசேகர ஆராய்கிறார். கஜபாகு பற்றிய புனைவு, குடியேற்றம் பற்றிய புனைவு  (Colonization Myth) ஆகும். கேரளத்தில் இருந்து வந்தோர் சிங்களப் பகுதிகளில் குடியேறி சிங்கள பௌத்தப் பண்பாட்டுடன் தம்மை ஒன்றிக் கலத்தல் (Assimilation) என்ற செயல்முறை மூலம் இணைந்தனர். பௌத்த சமய வழிபாட்டு முறைகளுள் பத்தினித் தெய்வ வழிபாடு புகுந்து கொண்டது. கிழக்குக் கரையோரத்தில் குடியேறியோர் தமிழ் அடையாளத்தையும், இந்து என்ற அடையாளத்தையும் உடையவர்களாய் அங்கு கண்ணகி வழிபாட்டைப் பேணிப் போற்றினர். இவ்விரு குடியேற்றங்கள் தொடர்பான புராணப் புனைவுருவாக்கச் செயல்முறையை மானிடவியல் கோட்பாடுகளின் பின்னணியில் ஆராய்வதே ஒபயசேகரவின் நூலின் பிரதான நோக்கமாகும்.

பிற்குறிப்பு :

கணநாத் ஒபயசேகர : பிறப்பு 02. 02. 1930 – வயது 93, இலங்கை. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் தகைசால் பேராசிரியராக விளங்கும் கணநாத் ஒபேசேகரே, இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றவர். மானிடவியல், சமூகவியல் ஆகிய கல்வித் துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர், அத்துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆய்வாளராக விளங்கினார். இவரது Land Tenure In Village Ceylon: A Sociological And Historical Study எனும் ஆய்வு நூல், 1967இல் வெளிவந்தது. இந்நூலைத் தொடர்ந்து இலங்கையின் நாட்டார் சமயம், பௌத்த சமய சீர்திருத்த இயக்கம், வரலாறு, சமயம், பண்பாடு என்பன பற்றிய ஆய்வு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார்.

இவரது முக்கியமான சில நூல்கள் :

  1. Land Tenure In Village Ceylon : A Sociological And Historical Study, 1967
  2. The Cult Of The Goddess Pattini, 1984
  3. Buddhism Transformed: Religious Change in Sri Lanka (with  Richard Gombrich), 1988
  4. Cannibal Talk : The Man-Eating Myth and Human Sacrifice in the South Seas, 2005
  5. Karma and Rebirth, 2005
  6. The Doomed King: A Requiem For Sri Vikrama Rajasinha, 2017
  7. The Many Faces of the Kandyan Kingdom: 1591-1765, Lessons for our Time, 2020

ஒலிவடிவில் கேட்க

14417 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)