Arts
7 நிமிட வாசிப்பு

பிரச்சினைகளுக்கான தீர்வும் இயற்பியல் அடித்தளப் பயன்பாடும்

March 25, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் (620)

மு.வரததாசனார் விளக்கம்:

எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

ஐக்கிய அமெரிக்காவில்  என் வாழிடம்  சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி. அதை சிலிக்கன் வலியென்றும் சொல்வர். அது முன்தொழில் நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவோருமுண்டு. இந்த இடம் இப்படி  தொழில்நிறுவனங்களுக்கெல்லாம் தலைமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த இடம் உலகில் பிரசித்தி பெற்ற இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு (ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகம், பேக்கிலி பல்கலைக்கழகம்)  அருகாக அமைந்திருத்தல் அந்தக் காரணிகளில் மிகமுக்கியமானது.    1960களில் சிலிக்கன் புரட்சி தொடங்கியபோது ஆராய்ச்சியாளர்களும் தொலைநோக்குப் பாவனையாளர்களும் ஃபெயர்சையில்ட் செமைக்கொண்டக்டர் என்ற நிறுவனத்தில் ஆரம்பித்து அதன் பிறன் இன்ரல்  போன்ற  பல நிறுவனங்களைத் தொடங்கி உலகின் தகவல் தொழில்நுட்ப விரிப்பை செய்து உலக மக்களை இணைத்தார்கள்.

Tesla

நான் எனது முதலாவது மின்சார வண்டியை 2013 இல் வாங்கினேன். அமெரிக்காவில் வாகனங்கள் உற்பத்தி செய்வதில் முதன்மையான நகரம் டிற்றோய்ட் என்ற இடம் தான். அதற்குப் போட்டியாக சிலிக்கன் வலியில் ரெஸ்லா நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன்  நிறுவுநர் எலோன் மஸ்க். அவர் ரெஸ்லா நிறுவனத்தைத் தொடங்காவிட்டாலும் அவரது தலைமையால் அந்த நிறுவனம் உலகின் மிக உயர்ந்த வலுவுள்ள நிறுவனமாக இருக்கிறது. அது மட்டுமன்றி எலோன் மேலும் பல நிறுவனங்களுக்கு தலைவராக அல்லது உயர்ந்த வைப்பாளராக உள்ளார். அவற்றில்  சோலர் சிற்றி (Solar City), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), நியூறா லிங்க் (Neural ink) என்பன சிலவாகும். எலோனைப் பார்த்தீர்களென்றால் அவரது பல்கலைக்கழக பட்டம் பௌதீகவியல் தான். ஆனால் அவரது நிறுவனங்கள் பல வெவ்வேறான  சந்தைகளை நோக்கி உருவாக்கப்பட்டன. அவர் இப்படியான நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு எப்போதும் விஞ்ஞானத்தின் துணையையே நாடுவார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் நாங்கள் எல்லோரும் அடிப்படைக்கல்வியை கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், உயிரியல் என்பவற்றில்   சிறப்பாகவே பெறுகிறோம். அந்தக் கற்றல் அறிவை,  வாழ்க்கையில்  உரியவகையில் பிரயோகித்தால் தான்  எதிர் காலத்தில் நாட்டையும் மக்களையும் முன்னேற்ற உதவியாக இருக்கும். அதற்கான சில படிமுறைகளை இங்கே பகிர்கிறேன்.

  • அடிப்படையுடன் தொடங்குவது: எந்த நிறுவனத்தைத் தொடங்கும் போதும் அங்கு உருவாக்கப்படவிருக்கும் பொருட்களிற்குத் தேவையான அடித்தள தொழில்நுட்பத்தை ஆராய்ந்து அறிய வேண்டும். அப்படித் தொடங்குவதன் மூலம் அதற்கான அறிவும் தொழிலாளர்களும் உங்கள் குழுவில் இருக்கிறார்களா என்று அறிய முடியும். அதற்குத் தகுந்தவர்கள் இல்லாவிட்டால் தகுந்தவர்களை தேடிப்பிடித்து குழுவில் சேர்க்க முடியும். நான் எனது முதலாவது நிறுவனத்தை  சிறுவயதில் ஆரம்பித்தேன். அப்போது எனக்கு  தொழில் அனுபவம் குறைவு. என்றாலும் நான் இலங்கையில் படித்த கணக்கியல், பௌதீகம், இரசாயனம் மற்றும் வர்த்தகம் என்பவற்றின் அடிப்படைகளைப் பயன்படுத்தி பெரிய பிரச்சினைகளுக்குக்கூட  தீர்வுகாண முடிந்தது.
Elon-Reeve-Musk
  • அடிப்படையை நாடுவது: தற்போதைய காலத்தில் பிரச்சினைகள் பிரமாண்டமானவை, அவற்கான தீர்வுகள் மேலும் சிக்கலானவை. அப்படியான திட்டங்களில் உட்படும்போது  ஈடையே தலையீடு செய்து, பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டிவரும். அதற்கு பலர் அடிப்படைப்பிரச்சினையை அறியாமல் தீர்வுகாண முயல்வர். இத்தகைய அணுகுமுறை சரியான மூலகாரணத்தையறிந்து பிரச்சினையை தீர்க்காமல்   ஒரு தற்காலித் தீர்வுக்கே வழிகோலும்.  ஆனால் பிரச்சினையின் அடிப்படையை அறிந்து,  அதற்குப் பொருத்தமான  தீர்வை தொலைநோக்குப் பார்வையுடன் முன்வைத்தால், குறித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதோடு,  நிறுவனங்களை விரிவுபடுத்தி, திட்டமிட்டதற்கு மேலதிகமாகவும் பொருட்களை உற்பத்திசெய்ய உதவியாக இருக்கும். இத்தகைய ஒருநிலையை  எனது இரண்டாவது நிறுவனத்தில் எதிர்கொண்டேன். அப்போது எனது குழு செய்த ஸ்ரோறேஹ்  என்ற பொருள் ஒரு சில இடங்களில்   சில நேரங்களில் சரியாக வேலை செய்யவில்லை. குறித்த பொருளை உருவாக்கிய பொறியியலாளர் மாதக்கணக்காக அடிப்படைப் பிரச்சினையைச் சிந்திக்காமல், உடனடித் தீர்வாக அதனை  மூடி மூடி ஒட்டுதலை மட்டுமே செய்துவந்தார். அந்த முறைமை பிரச்சினையைத்  தீர்ப்பதற்குப் பதிலாக வேறு புதிய பிரச்சினைகளை உருவாக்கியது.  இந்தநிலையில் தான், குறித்த பொருளின் அடிப்படைப் பிரச்சினையை சிலநாட்கள் செலவிட்டுக் கண்டறிந்து, ஒரு நிரந்தரத் தீர்வை முன்வைத்தோம். அதனால் எமது வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்து எமது பொருட்களை கோடிக் கணக்கில் வாங்கினார்கள்.
  • அடிப்படையுடன் தொடர்வது: புதிய தொழில் நிறுவனங்களில் உற்பத்திகளை மேற்கொள்ளும்போது,  அவை இப்போது சந்தையில் இருக்கும் பொருட்களைப் போன்றதால இருப்பதைத் தவிர்த்து, ஏலவே இருக்கும் பொருள்களில் இருந்து  கொஞ்சமேனும் வித்தியாசப்படுத்தி, படைப்பாற்றலை உபயோகித்து, பயனுள்ள புதிய  பொருட்களை உருவாக்கலாம். அதன் மூலம் விரைவாக  பொருட்களை சந்தைக்குக் கொண்டுவர முடியும். அது குறுகியகாலப்பரப்புக்கு  சரியாக இருந்தாலும் அதன் அடிப்படையை அறியாமல் தொடங்குவது, பிற்காலத்தில் நிறுவனங்களை சிக்கலுக்கு உட்படவைக்கலாம். எனவே அடிப்படைக் கொள்கைகளை அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடப்பதன்மூலம் தேவையில்லாத  சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
  • அடிப்படையை விளக்குவது: புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்கும்போது அதற்கு தகுந்த ஆட்களை வேலைக்கு வைப்பது முக்கியம். அப்போது தான் அவர்களது படிப்பறிவு மற்றும் அனுபவங்களை வைத்து சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அப்படியான புத்திசாலித்தனமான ஆட்களை வேலைக்கு சேர்ப்பது சுலபமில்லை. அதற்கு நான் செய்த யுக்தி, அவர்களுக்கு எங்கள் தொழில்னுட்பத்தின் அடிப்படையை எளிமையாக விளங்கப்படுத்தியது தான். அதன் மூலம் அவர்களுக்கு எங்கள் மீது  நம்பிக்கை வந்ததுடன் அந்தப் பொருட்களை உருவாக்க தங்களது யோசனைகளையும் பகிரும்  நம்பிக்கை வந்தது .அது மட்டுமன்றி அவர்கள் தங்கள் வட்டாரங்களிலுள்ள சிறந்த பொறியியலாளர்களையும் எங்களுடன் இணைய வைத்தார்கள். இதை டோமினோ விளைவு (Domino effect) என்று கூறுவார்கள். இந்த யுத்தியை நான் எமது பெறுமதிகூடிய   வாடிக்கையாளர்களுக்கும் பிரயோகித்து எமது பொருட்களின் தொழில்னுட்பத்தை இலகுவாக விளக்கி பல வெற்றிகண்டோம்.
  • அடிப்படையால் வேறுபடுத்துவது: உலகில் உள்ள தயாரிப்புக்கள்  ஒரு தேவைக்கு அல்லது பிரச்சினைக்கு பல தீர்வுகளைத் தருபவையாக இருக்கும். அந்த தீர்வுளை  வெவ்வேறு அடிப்படைக் கொள்கைகளிலிருந்து தொடங்கியிருப்பார்கள்.  புதியதொழில் ஆரம்பிப்போரைப்பொறுத்தவரையில் தாங்கள் உருவாக்கிய தயாரிப்புகளை சந்தையிலிருக்கும் மற்றத் தயாரிப்புகளுடன் வேறுபடுத்தி விற்பதுதான் அவசியம். அதற்கு அடிப்படைக் கொள்கைகளை எடுத்துரைத்து வாடிக்கையாளர்களின் மனத்தை சமாதானப்படுத்துவதன் மூலம் எமது நோக்கை அடையலாம்.

இதையும்  எனது நிறுவனத்தில்  பயன்படுத்தும் வாய்ப்புக் கிடைத்தது.  எங்களது தயாரிப்புக்கு போட்டியாக உள்ள நிறுவனமானது,  உலகளாவிய பிரபல்யமான நிறுவனங்களில் ஒன்று. எனவே அந்த நிறுவனப் பொருளுக்குச் சமமான இன்னொரு உற்பத்தியோடு நாம் சென்று போட்டியிட்டு வெல்வதென்பது சாத்தியமற்றது. எனவே அந்தப் பிரபல நிறுவனத்தின் பொருளைவிடவும்,   எட்டு மடங்கு நன்மையுள்ள தயாரிப்பை உருவாக்க முடிவு செய்தோம். அந்த உற்பத்தியின்  பின்னிருந்த கணித சூத்திரத்தை மிக எளிமையானவடிவத்தில் வாடிக்கையாளர்களிடமும் முதலீட்டாளர்களிடமும் எடுத்துக்கூறி விளங்கவைத்தோம். அதை வைத்தே  எழுபது மில்லியன் டொலர்  முதலீட்டையும் பெற்றுக்கொண்டோம். இப்படியான கணித சூத்திரத்தை செயற்படுத்திய முறைமையே  எனக்கு  முதலாவது காப்புரிமையைப் (Patent) பெற்றுக்கொடுத்தது.

நான் மேலே கூறியவற்றில் எந்த விடயங்களையும் செய்யத்தொடங்குமுன் அதன் அடித்தளத்தை பயன்படுத்தி அதற்கான விளக்கங்களையறிந்து தொடர்வதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிட பாதகவிளைவுகளை குறைக்கலாம். நான் குறைக்கலாம் என்று கூறுவதற்குக் காரணம் வாழ்க்கையில், வணிகத்தில் சிக்கல்கள் வராமல் இருப்பதென்பது மிக அரிதே.  எனவே பிரச்சினைகள் வரும் காலங்களில் அதையும் மீறி வெற்றி பெறுவது தான் ஒருவரின் முதிர்ச்சியையும் நல்ல செயல்முறைகளையும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் அவரது வாடிக்கையாளர்களுக்கும் காட்டும். பில் கேட்ஸ் தொடக்கம் எலோன் மஸ்க் வரைக்கும் அவர்கள் சில பிழையான முடிவுகள் எடுத்தார்கள். ஆனால் அவர்கள் அடிப்படை அறிவையும், இயற்பியலின் அடித்தளத்தையும் எப்போதும் மனதில் கொண்டு  தம்  உற்பத்திகளை ஆரம்பித்ததால் அவர்களால் தோல்விகளிலும் பார்க்க  வெற்றிகளை அதிகம் காண முடிந்தது. அதேபோல் நீங்களும் அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்தி தயாரிப்புகளை வடிவமைப்பதன் மூலம் வெற்றிகாண முடியும்.


ஒலிவடிவில் கேட்க

6487 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)