Arts
9 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் வசித்த அமெரிக்க சனாதிபதியின் சகோதரி : அனா நீல் கிளீவ்லாண்ட் ஹாஸ்ரிங்ஸ்

August 10, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

யாழ்ப்பாணக் கல்லூரியும் புகழ்பெற்ற மாணவர்களும்

அண்மையில் தனது 200 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய யாழ்ப்பாணக் கல்லூரியானது 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைக் கல்விக்கழகம் (Batticotta Seminary) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. வட்டுக்கோட்டை கல்விக்கழகமானது அன்று ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு இணையானதாக விளங்கியது. கிறித்துவ சமயத்துக்கு அதிகமான மாணவர்களை உள்ளீர்க்க முடியாத காரணத்தால் 1855 இல் இதன் கற்றல் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.

post card

வட்டுக்கோட்டை கல்விக்கழகம் இருந்த இடத்திலிருந்தே அதாவது “பற்றிக்கோட்டா செமினரி”யின் சாம்பலிலிருந்தே 1872 இல் யாழ்ப்பாணக் கல்லூரி மீள உயிர்த்தது. வட்டுக்கோட்டைக் கல்விக்கழகத்தின் கடைசி அதிபராகவும் யாழ்ப்பாணக் கல்லூரியின் முதலாவது அதிபராகவும் வண. ஈ.பி. ஹாஸ்ரிங்ஸ் அடிகளார் விளங்கினார்.

2005 ஆம் ஆண்டு இலண்டன் ‘Cambridge Bibliographical Association’ ஆல் ‘International Bibliography Intellectual’ விருதை பெற்றவரும் யாழ். பல்கலைக்கழக தற்போதைய வேந்தரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சி. பத்மநாதன், தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் ஆயர்களான வண. சபாபதி குலேந்திரன், டி. ஜெ. அம்பலவாணர் மற்றும் கலாநிதி எஸ். ஜெபநேசன், கல்வியியலாளர்களான சீலன் கதிர்காமர், றஜனி திரணகம, சற்றடே ரிவியூ ஆசிரியர் எஸ். சிவநாயகம், மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ், உயர் நீதிமன்ற நீதியரசர் பி. ஸ்ரீஸ்கந்தராசா, செனற்றர் நாகலிங்கம், ஹண்டி பேரின்பநாயகம், பேராசிரியரும் வானியல் அறிஞருமான அலன் ஆபிரகாம் முதலான பல புகழ்பூத்த கல்விமான்களை யாழ்ப்பாணக் கல்லூரி உருவாக்கியது. (விரிவஞ்சி பேரறிஞர்கள் பலரது பெயர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை.)

Prof. Pathmanathan (6)

யாழ்ப்பாணக் கல்லூரியை பட்டக் கல்லூரியாக்க அயராது பாடுபட்ட மருத்துவர் கிறீன்

1874 ஓகஸ்ட் மாதமளவில் கிறீனது சகோதரி லூசி, மறைந்த தமது தந்தையின் நினைவாக 1000 அமெரிக்க டொலரை யாழ்ப்பாணக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் இயற்கை விஞ்ஞான கிறீன் பேராசிரியத்துவ பதவிநிலையை (Green Professorship of Medicine and Natural Science) உருவாக்கும் நிதியத்துக்கு வழங்கினார்.

green

1874 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி மருத்துவர் கிறீன் ABCFM க்கு எழுதிய கடிதத்தில் 1876 ஆம் ஆண்டு நிறைவில் யாழ்ப்பாணம் செல்லும் ஆர்வத்தை மீளவும் வெளிப்படுத்தியிருந்தார். கிறீன் இவ்வாறு கடிதம் எழுதிய போதும் கிறீன் மற்றும்   அவரது மனையாள் ஆகியோரின் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கவில்லை.

டேவிட் எ. வெல்சு பண்டிதர் எழுதிய இரசாயனவியல் (Chemistry) நூலை மருத்துவர் கிறீன் , மருத்துவர்களான சப்மான் வைத்திலிங்கம் மற்றும் எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் உதவியுடன் மொழிபெயர்த்திருந்தார். 1875 ஆம் ஆண்டு அச்சிடும் பணி நிறைவடைந்தது. இந்நூல் ’கெமிஸ்தம்’ என்ற பெயரில் 520 பக்கங்களில் தமிழில் வெளிவந்தது. இந்நூல் அமெரிக்க இலங்கை மிசனுக்காகத் தென்னிந்தியாவிலுள்ள நாகர்கோயில் இலண்டன் மிசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

மருத்துவர் கிறீன், யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக இருந்த வண. ஈ. பி. ஹாஸ்ரிங்ஸ் அடிகளாரது வேண்டுகோளுக்கு ஆதரவாக 1875 ஆம் வருடம் செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி ABCFM க்கு ஒரு கடிதம் அனுப்பினார். இந்தக்கடிதத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியை இயக்குவதற்கு ஹாஸ்ரிங்ஸ் அவர்களுக்கு உதவியாக இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் அனுப்புமாறு கேட்டிருந்தார்.  

Hastings (1)

தொடர்ந்து 1875 ஆம் வருடம் ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி கிறீன் ABCFM க்கு எழுதிய கடிதத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டங்களை வழங்கும் தகுதியை, பட்டயத்தைக் கொண்டிருக்காவிட்டால் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஒரு சட்டவாக்கத்தின் மூலம் பட்டம் வழங்கும் அதிகாரத்தை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்குமாறு கேட்டிருந்தார். அவ்வாறில்லாவிடில் யாழ்ப்பாணக் கல்லூரியை அம்கர்ஸ்ட் அல்லது கொலம்பிய பல்கலைக்கழகங்களின் (Amherst or Columbia University) இணைந்த கல்லூரியாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டிருந்தார்.

கிறீனின்  மானிப்பாய் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 9ஆவது அணியினரே அதிக எண்ணிக்கையான மாணவர்களைக் கொண்டிருந்தனர். இவர்கள் 1875 ஆம் ஆண்டு தமது மருத்துவக் கல்வியை நிறைவு செய்தனர். 1876 இல் 10 ஆவது அணி மருத்துவ மாணவர்கள் தமது கல்வியை ஆரம்பித்தனர். கிறீன் அமெரிக்கா சென்ற பின்னர் மானிப்பாய் மருத்துவப்பீடம் அவரிடம் கல்வி பயின்ற மருத்துவர்களால் நடத்தப்பட்டது.

கிறீன் அமெரிக்காவுக்குச் சென்ற பின்னரும் ஓய்வெடுக்கவில்லை. பிரபல்யமான மருத்துவக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வந்தார். கண், காது, கை மற்றும் வாய் (The Eye, The Ear, The Hand & The Mouth) முதலான உடற்கூற்றியலின் ஓரங்கம் பற்றிய தனியான ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கிறீனது கையெழுத்துப்படிகள் தபால் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு வந்தன. இவை யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

1877 ஆம் ஆண்டு சனவரி மாதம் கிறீன் ABCFM க்கு அனுப்பிய வரைவு ஆவணத்தில் யாழ்ப்பாணக் கல்லூரியின் நம்பிக்கைச்சபை நிதியத்துக்குப் புதிதாக மூவரது பெயர்களை முன்மொழிந்திருந்தார். அத்துடன் யாழ்ப்பாணக் கல்லூரியை அம்கர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் (Amherst University) இணைந்த கல்லூரியாக்கும் அவசியத்தையும் நினைவூட்டியிருந்தார்.

இந்தக்காலப் பகுதியில் மருத்துவர் சப்மான் வைத்திலிங்கம் டால்ரன் பண்டிதருடைய (Prof. John C. Dalton, M.D.) உடற்றொழிலியல் (Human Physiology) நூலை மொழிபெயர்த்து அமெரிக்காவிலிருந்த கிறீனுக்கு அனுப்பி வந்தார். கிறீன் அவற்றில் தேவையான திருத்தங்களைச் செய்ததுடன் ஆங்கில மருத்துவச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்ப்பதங்களை (கலைச்சொற்கள்) உருவாக்குவதிலும் ஏற்கனவே உருவாக்கிய சொற்களை மேம்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தினார். 1877 ஆம் வருட இறுதிப்பகுதியில் இந்நூலின் மொழிபெயர்ப்புப் பணி பூர்த்தியாகியது. அமெரிக்க இலங்கை மிசன் 590 பக்கங்களைக் கொண்ட இந்நூலை ’மனுஷ சுகரணம்’ என்ற பெயரில் மானிப்பாயில் அச்சிட்டு வெளியிடத் தீர்மானித்தது. இந்நூலின் அச்சாக்கப் பணி 1883 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

குரோவர் கிளீவ்லாண்ட் அமெரிக்க அதிபராக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரி அனா!

Cleveland family

ஓர் அமெரிக்க சனாதிபதியின் பதவிக்காலம் முழுவதும் அந்த சனாதிபதியின் சகோதரி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார் என்பது வியப்பானதாக இருக்கலாம். 1884 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் சனநாயகக் கட்சி வேட்பாளரான குரோவர் கிளீவ்லாண்ட் வெற்றிபெற்று அமெரிக்காவின் 22 ஆவது சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குரோவர் அடுத்த தடவை (1888) நடைபெற்ற தேர்தலில் தோற்ற போதிலும் மீண்டும் 1892 இல் போட்டியிட்டு 2 ஆவது தடவையாகவும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சிறப்புக்குரியவர்.

Grover (1)

குரோவர் கிளீவ்லாண்ட் 1885-1889 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் 22 ஆவது சனாதிபதியாகப் பதவியில் இருந்த போது அவரது சகோதரி அனா கிளீவ்லாண்ட் வட்டுக்கோட்டையில் வாழ்ந்தார். அனா கிளீவ்லாண்ட் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராக விளங்கிய வண. ஹாஸ்ரிங்ஸ் (Rev. E. P. Hastings) அடிகளாரின் மனைவி. இதனைப் பின்வருமாறு பிறிதோர் விதமாகவும் கூறலாம். குரோவர் கிளீவ்லாண்ட் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவரின் மைத்துனரே (சகோதரியின் கணவர் – வண. ஈ. பி. ஹாஸ்ரிங்ஸ்) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபராக இருந்தார்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11973 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)