Arts
8 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தில் கிறீனது இறுதி நாள்கள்

July 8, 2023 | Ezhuna

ஆங்கிலேயர்களின் ஆட்சியால் இலங்கைக்கு கிடைத்த சில பேறுகளில், மேலைத்தேச மருத்துவமுறையின் உள்நுழைவும் ஒன்றாகும். அதுவரை தனியே சுதேச மருத்துவத்தையே நம்பியிருந்த இலங்கை மக்கள், மேலைத்தேய மருத்துவத்தின் அறிமுகத்தோடு தீர்க்கப்படமுடியாத பல நோய்களையும் குணப்படுத்த முடிந்தது. இறப்புவீதம் பெருமளவுக்கு குறைந்தது. இவ்வாறான மேலைத்தேய மருத்துவத்துறையை இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் வளர்த்தெடுக்க, அமெரிக்க மருத்துவ மிஷனரிகள் மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை. அவ்வாறு மேலைத்தேய மருத்துவத்தை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வளர்த்தெடுக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவர்களையும், அவர்களது பணிகளின் தனித்துவத்தையும், இலங்கையின் வடபகுதியில் மேலைத்தேச மருத்துவத்துறை 1820 முதல் இப்போதுவரை வளர்ந்து வந்த முறைமைகளையும் தொகுத்து தருவதாக ‘யாழ்ப்பாண மருத்துவ வரலாறு’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் அமைகின்றது.

1838.11.29 அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்த மருத்துவர் எட்வின் லோசன் கொச் ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணத்தில் பயின்று தனது 20 ஆவது வயதில் அரச புலமைப்பரிசிலைப் பெற்று கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவப் பட்டம் பெற்றார். இவர் கொழும்பு மருத்துவபீடத்தின் ஆரம்ப விரிவுரையாளர்களில் ஒருவராகவும் இதன் 2 ஆவது அதிபராகவும் கடமையாற்றினார்.

koch

1870 இல்  ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு மருத்துவபீடத்தின் முதலாவது அணி மாணவர்களது 2 ஆவது விரிவுரையின் போது உரையாற்றிய மருத்துவர் எட்வின் லோசன் கொச், அந்தக் காலப்பகுதியில் வடபகுதியில் பிரபல்யமடைந்துவரும் ஐரோப்பிய மருத்துவத்தின்  மகத்துவத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் :

“ ஏராளமான வடபகுதி மக்கள் ஐரோப்பிய மருத்துவத்தின் நன்மையை அனுபவிப்பதை எனது நேரடி அனுபவத்திற் கண்டிருக்கிறேன். அங்கு அமெரிக்க மிசனரியினரால் ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய மருத்துவத்தை இலங்கையின்  வேறெந்தப் பகுதி மக்களையும் விட அதிகளவானோர் பின்பற்றுகின்றனர். வடபகுதி மக்கள் சுதேச மருத்துவர்களைக் கைவிட்டு மேலைத்தேச மருத்துவத்துக்கு  திரும்பியுள்ளமையக் காணமுடிகிறது. இலங்கைத்தீவில் வேறு எந்த மருத்துவமனையை விடவும் யாழ்ப்பாணத்தில் ஆபத்து உதவி மருத்துவமனையை நாடிவந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமானதாகும்.

இது மேலைத்தேச மருத்துவம் அப்பகுதி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வெற்றிபெற்றிருப்பதை உணர்த்துகிறது. இதனால் அப்பகுதியில் சேவையாற்ற அதிக எண்ணிக்கையான மருத்துவர்களது தேவையை உணர்ந்த மருத்துவர் கிறீன்  அங்கு சுதேச மொழியில் ஐரோப்பிய மருத்துவத்தைப் போதிக்க வேண்டிய  நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதற்காக ஆங்கில மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

கிறீனுக்கு 3 ஆவது பெண் குழந்தை (Mary Ruggles Green) 1870 இல் பிறந்தது. கிறீனது சகோதரி மேரியின்  பெயரால்  இந்தக் குழந்தை அழைக்கப்பட்டது.

மானிப்பாயிலிருந்த கிறீனது மருத்துவக் கல்லூரியில் 1871 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 பேர் கொண்ட புதிய மாணவர் அணியினர், மருத்துவம் பயில ஆரம்பித்தனர். இவர்களில் மூவர் அந்தக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த முன்னணி சுதேச மருத்துவர்கள் மூவரின் நெருங்கிய உறவினர்களாக இருந்தமை  கிறீனுக்கு மகிழ்ச்சியையும்  தனது பணிகுறித்த திருப்தியையும் ஏற்படுத்தியது.

கிறீனது 8 ஆவது அணி மருத்துவ மாணவர்கள் : தமிழ் மொழி மூலம் மருத்துவம் பயின்ற 3 ஆவது அணி (1871-1873)

  1. ஜே. அமரசிங்கர்
  2. எஸ். அருணாசலம்
  3. எம். இராமலிங்கம்
  4. வி. சித்திரவேலு
  5. வி. சதாசிவம் பேற்ஸ்
  6. எஸ் சரவணமுத்து
  7. எஸ். சின்னத்தம்பி
  8. எஸ். சின்னையா
  9. கே. தில்லையம்பலம்
  10. கே. வைத்திலிங்கம்
  11. கே. வேலுப்பிள்ளை

மருத்துவர் கிறீன் 1871 இல் குழந்தை பிறப்புப் பற்றிய சிறு நூலை தமிழில் எழுதி 3000 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டார். இந்தக் காலப்பகுதியில் கிறீனும் மனைவியும் தமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியநிலைக்கு ஆளாயினர். கிறீன் தனது மருத்துவத் தேவை கருதி யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஓரிரு  ஆண்டுகளில் திரும்புவது குறித்து போஸ்ரன் அமெரிக்க மிசன் சங்கத்துக்குக் கடிதம் எழுதினார்.  யாழ்ப்பாணத்தில் தனது இடத்துக்கு வேறு ஒரு மருத்துவரை நியமிக்குமாறு இந்தக்கடிதத்திலே கேட்டிருந்தார்.

1871 இல் கிறீன் தம்பதியினருக்கு 4 ஆவது குழந்தை கிடைத்தது. கிறீன் தம்பதியினருக்குக் கிடைத்த முதலாவது ஆண் மகவு இது. கிறீன் தனது பெண்பிள்ளைகள் மூவருக்கும்  சகோதரிகளின் கிறித்துவப் பெயரையை வழங்கியிருந்தார்.

culcatta

கிறீன் தனது மகனுக்கு அமெரிக்கர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான  ஒரு பெயரையே வழங்க விரும்பினார். “Nathan”, அமெரிக்கர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான ஒரு பெயராகும். இந்தப்பெயரை அமெரிக்கர் ”நேத்தன்” என்று உச்சரிப்பார்கள். தமிழர் ”நாதன்” என்று சொல்வார்கள். யோகநாதன், கணநாதன், சிவநாதன், கடம்பநாதன் முதலான இறைவனை நினைவூட்டும் பெயர்களைத் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் மரபு தமிழர்களிடையே இன்றும் வழக்கில் உண்டு. தமிழிலே வழங்கப்படும் நாதன் என்பது நாதா என்ற சம்ஸ்கிருத மூலச்சொல்லிருந்து வந்தது. இச்சொல் தலைவன், கடவுள், கணவன் முதலானோரைக் குறிக்கப் பயன்படுகிறது. அதேவேளை நாதன் என்பது கிறித்துவப் பெயராகவும் விளங்குகிறது. இந்த நாதன் என்ற சொல் தமிழில் இயேசுநாதரைக் குறிக்கவும் பயன்படுகின்றது.

கிறீனது மகன் நேத்தன் (நாதன்) 1894 இல், யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவம் பயில்வதற்காக கிறீன் மருத்துவம் பயின்ற, நியூயோர்க்கில் உள்ள மருத்துவர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் சேர்ந்து 1898 இல் எம்.டி. பட்டத்தைப் பெற்றார். நேத்தன் நியூயோர்க்கிலிருந்த சென் லூக்ஸ் மருத்துவமனையில் நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணராகப் (Thoracic Surgeon) பணியாற்றினார்.  இவர் அமெரிக்க நெஞ்சறை சத்திரசிகிச்சை கழகத்தின் தலைவராக 1925 இல் தெரிவு செய்யப்பட்டார். 1955 ஆம் ஆண்டு 83 ஆவது வயதில் கிறீனது மகன் மருத்துவர் நேத்தன் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

யாழ்ப்பாணத்தில் மருத்துவர் கிறீனது இறுதி நாள்கள்

மருத்துவர் கிறீன் 18 பேர் கொண்ட புதிய மாணவர்களது அணியை 1872 இல் ஆரம்பித்தார். ஓர் அணியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியை ஆரம்பித்து 3 வருடங்களுக்குப் பின்னரே அடுத்த அணியினர் மருத்துவம் பயில உள்ளீர்க்கப்படுவார்கள். கிறீன், தான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னரும் மானிப்பாய் மருத்துவக் கல்லூரியைத் தொடர்ச்சியாக இயங்கக் கூடியநிலைக்கு கொண்டுவருவதற்கு அயராது பாடுபட்டதுடன் உள்ளூரில் பணியாற்றக்கூடிய போதியளவு மருத்துவர்களை உருவாக்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 

கிறீனது 9 ஆவது அணி மருத்துவ மாணவர்கள் : தமிழ் மொழி மூலம் மருத்துவம் பயின்ற 4 ஆவது அணி (1872-1875)

  1.   ஏ. அமரசிங்கம்
  2. ஆர். அம்பலம்
  3. ரி. கனகசபை
  4. சி.குமாரவேலு
  5. ரிச்சாட் எஸ். அடம்ஸ்
  6. பென்ஜமின் லோரன்ஸ்
  7. வி. செல்லப்பா
  8. என். எல். ஜோசுவா
  9. என். தம்பிமுத்து
  10. எம். நன்னித்தம்பி
  11. ஆபிரகாம் வி. நரசிங்கர்
  12. ஜோசுவா கே. பெரியதம்பி
  13. வி. பொன்னம்பலம்
  14. கே. பொன்னம்பலம்
  15. எஸ். பொன்னம்பலம்
  16. முத்தையா எஸ். ரோப்ஸ்
  17. என். மூத்ததம்பி
  18. வி. வேதாவனம்

மருத்துவர் கிறீனிடம் மருத்துவம் பயின்ற மாணவர்களான  மருத்துவர் சப்மான் வைத்திலிங்கம், மருத்துவர் சி.ரி. மில்ஸ்  ஆகியோர் மானிப்பாய் மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவமனையிலும் கிறீனுக்கு உதவியாகப் பணிபுரிந்தனர். எல்லாமாக 6 பேர் இங்கு பணிபுரிந்தனர். இவர்களுக்கான வேதனம் பிரித்தானிய அரசிடமிருந்து கிடைத்த  நன்கொடையிலுருந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட கட்டணத்திலிருந்தும் வழங்கப்பட்டது. மருத்துவர் கிறீனுக்கு அமெரிக்க மிசனரியினர் ஊதியம் வழங்கினர்.

அக்காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் மேலைத்தேச மருத்துவ வசதிகள் போதியளவு கிடைக்கவில்லை. இதனால் கீழைத்தேசத்தில் பணியாற்றும் கிறித்துவ மிசனரி ஊழியர்களதும் அவர்களது குடும்பத்தவர்களதும் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்காவின் போஸ்ரனிலுள்ள அமெரிக்க மிசன் சங்கம், மருத்துவ மிசனரிகளையும் காலத்துக்குக்காலம் பிறதேசங்களுக்கு அனுப்பிவந்தது. மருத்துவர் கிறீனும் யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க மிசன் சங்கமும்,  (ACM in Jaffna) அமெரிக்க மிசன் சங்கத்தின் பிரதான நோக்கத்தை விட்டு விலகிச் செல்வதான எண்ணம் போஸ்ரனிலுள்ள பிறதேசங்களுக்கு மிசனரிகளை அனுப்பும் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு (ABCFM) ஏற்பட்டது. எனினும் யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க மிசனரியினரும் மருத்துவர் கிறீனும் ஆற்றும் நற்பணியைக் கருதி இதனை ABCFM மன்னித்திருக்கலாம்.

ஆசியாவின் பழைமைவாய்ந்த மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரிகளும்

1820 இல் யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு என்ற இடத்தில் அமெரிக்க மிசனரி மருத்துவரான ஜோன் ஸ்கடர், டிஸ்பென்சரி ஒன்றை நிறுவினார். இதுவே மேலைத்தேச (ஐரோப்பிய) மருத்துவத்தைப் பரப்பும் நோக்குடன் உலகிலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட  மேலைத்தேய மருத்துவ மிசன் டிஸ்பென்சரியாகும் (The First Western Medical Mission Dispensary of the World).

1823 இல் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு அரசாங்கத்தால் மேலைத்தேச மருத்துவக் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது (Ecole de Medicine de Pondicherry). இதுவே ஆசியாவின் மிகப் பழைமைவாய்ந்த மேலைத்தேச மருத்துவக் கல்லூரியாகும். 1956 இல் இது இந்திய அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது.

இந்தியாவின் முதலாவது பிரித்தானிய கவர்னர் ஜெனரலாக விளங்கிய லோர்ட் வில்லியம் பென்ற்றிங் அவர்களால், கல்கத்தா மருத்துவக்கல்லூரி 1835 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமன்றி ஆசியாவில் தாபிக்கப்பட்ட  மிகப் பழைமைவாய்ந்த மேலைத்தேச மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. சென்னை மருத்துவக் கல்லூரியும் 1835 இல் ஆரம்பிக்கப்பட்டது.  

1852 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட, கல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துமனைக் கட்டடம் ஒன்று ஆசியாவில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த மருத்துவமனைக் கட்டடமாகத் தற்போதும் விளங்குகிறது.  அந்தக்கட்டடம் வெறும் தட்டையான சுவர்களால்  கட்டப்படவில்லை. கட்டடக்கலையின் அழகியலே அதன் சிறப்பம்சம். யாழ்ப்பாணத்தில் இவ்வாறான கட்டடக்கலையின் அழகியலைக் கொண்ட எந்த ஒரு அரச மருத்துமனைக் கட்டடமும் கடந்த 100 வருடங்களில் கட்டப்படவில்லை.

மருத்துவர் கிறீன் 1848 இல் மானிப்பாயில் ஆரம்பித்த மருத்துவக் கல்லூரி அமெரிக்க மருத்துவ மிசனரிகளால் ஆசியாவில் ஆரம்பிக்கப்பட்ட மிகப் பழைமைவாய்ந்த மருத்துவமனையாகும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5005 பார்வைகள்

About the Author

பாலசுப்ரமணியம் துவாரகன்

பாலசுப்ரமணியம் துவாரகன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியர்.

கடந்த 14 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)