Arts
5 நிமிட வாசிப்பு

மலையகத்தில் வாக்குரிமையின் விஸ்தரிப்பும் மாற்றங்களும்

December 16, 2022 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.

தோட்டத்தமிழ் மக்களின் மறைந்த தலைவர் திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டதும், அமரத்துவம் அடையும்வரை அவர் மந்திரிசபையில் ஒரு உறுப்பினராக இருந்துவந்ததும், 1988 ஆம் ஆண்டு பெருந்தோட்டச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டதும், மாகாணசபைமுறையுடன் நாடாளுமன்றம், மாகாணசபைகள், பிரதேசசபைகள் என்பவற்றிற்கான தேர்தல்களில் விகிதாசாரப்பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்யப்பட்டதும் தேர்தல் செயல்முறையில் இச்சமூகத்தைச் சேர்ந்தோர் கூடுதலான ஈடுபாடு காட்டுவதற்கு வழிவகுத்தன. மேற்படி காரணிகள் அரசியல் உரிமைகளைப்பற்றி அவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன:

சௌமிய மூர்த்தி தொண்டமான்
  • வடக்கு – கிழக்கைச் சேர்ந்த இளைஞர்களின் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம், பெருந்தோட்டத்தமிழரின் உரிமைகள் மறுப்பு, அவர்களுக்கெதிராக காட்டப்பட்ட அரசியல் பாரபட்சங்கள் என்பன அவர்களிடையே பாரியதொரு விழிப்புணர்வினை ஏற்படுத்திற்று.
  • விடுதலைப்போராட்டம் நடைபெற்றுவந்த காலப்பகுதியில் வீதிச்சோதனைச்சாவடிகளிலும், வீதிமறிப்புக்களிலும் நடைபெற்ற பல்வேறு கெடுபிடிகளினால் மனஉளைச்சல்களுக்கு உட்படுத்தப்பட்டமை அவர்களிடையே தமது இனஅடையாளம் பற்றிய விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்திற்று.
  • இதுவரைகாலமும் மலையக அரசியலில் தொழிற்சங்கத்தலைமைத்துவமே பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தது. மலையகச் சமூகத்தின் சமூகச்சேர்க்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை எதிர்காலத்தில் இத்தலைமைத்துவம் உண்மையிலேயே பிரதிபலிக்குமா என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. எனவே, மாறிக்கொண்டுவரும் சமூகநிலைமையைப் பிரதிபலிக்கக்கூடிய புதியதொரு தலைமைத்துவம் உருவாக வேண்டியதற்கான தேவை இப்போழுது உணரப்பட்டு வருகின்றது. மேற்படி மாற்றங்களினால் பெருந்தோட்டச் சமூகத்தினரிடையே இப்பொழுது புதியதொரு அரசியல் கருத்தியல் உருவாகத் தொடங்கியுள்ளது.
  • பொதுசன ஊடகங்கள், அதிலுங்குறிப்பாக, இலத்திரனியல் ஊடகங்களினூடாக (தொலைக்காட்சி) வெளியுலகநிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளமை தோட்டப்புற மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படிக்காரணங்களினால் இச்சமூகத்தினது வகுப்புசார்ந்த குணாம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சமூகத்திற்குள்ளேயே வகுப்புப் பாகுபாடுகள் வலுவடைந்து வருவதோடு அம்மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசம்சார்ந்த பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. மேற்படிக் காரணங்களினால் இச்சமூகத்தினை தோட்டத்தொழிலாளர் என்ற தனியொரு வகுப்பினைக் கொண்ட சமூகமாக தொடர்ந்தும் கருதமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றின் பிரதிபலிப்பாக இச்சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே புதிய பல அமைப்புக்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.

நாட்டின் எப்பகுதியில் வாழுகின்றோமென்ற வேறுபாடு இன்றி முழுச்சமூகத்திற்குமே பொதுவான சில பிரச்சினைகளை இச்சமூகம் எதிர்நோக்கும் அதேவேளையில், தாம் வாழும் பிரதேசத்திற்கே உரித்தான சில விசேட பிரச்சினைகளையும் அது எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அவர்கள் செறிந்துவாழும் பிரதேசங்களைப் பின்வருமாறு இனங்காணக்கூடியதாக உள்ளது:

  • நுவரெலியப் பிரதேசம் : இங்கு இந்தியத்தமிழர் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடியதாக இருப்பதோடு பிரதேசசபை அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், மாகாணசபைக்கும் பல உறுப்பினர்களைத் தெரிவுசெய்து அனுப்பியுள்ளனர்.
  • பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
  • காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அவர்கள் மொத்த சனத்தொகையில் சிறு குழுவினராக உள்ளனர்
  • கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் இந்தியவம்சாவழி மக்கள் செறிந்து வாழுகின்றனர்.
  • நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தோர் அங்கு ஒன்றில் விவசாயத் தொழிலாளர்களாகத் தொழில்செய்கின்றனர் அல்லது பல வருடங்களாக அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

பெருந்தோட்டச் சமூகத்தினர் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகளாகப் பின்வருவனவற்றை இனங்காணலாம்:

  • இன்றுவரையும் குடியுரிமை பெறாதோர் எவராவது இருப்பார்களாயின் அவர்கள் அதனை பெற்றுக்கொள்ளுதல்
  • கல்வியையும் கல்விக்கான சமவாய்ப்பையும் பெற்றுக்கொள்ளுதல்
  • காணிப்பங்கீடு, காணியுரிமை, காணிக்குடியேற்றம் என்பவற்றிற்கான உரிமைகளை உறுதிசெய்து கொள்தல்.
  • தோட்டச் சமூகத்தினதும் தனிப்பட்டோரினதும் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளுதல்.
  • பெருந்தோட்ட இளைஞர்களிடையே காணப்படும் வேலையின்மை.
  • தோட்டப்புறமக்கள் தமது மனிதஉரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுதல்.

மாறிக்கொண்டுவரும் சமூக – வகுப்புச்சேர்க்கைகளினாலும், பிரதேச அடிப்படையில் காணப்படும் வேறுபட்ட பிரச்சினைகளினாலும் அவர்களது சமூகத்தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு தொழிற்சங்க இயக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவம் போதுமானதாக இல்லை. எனவே, பூரணத்துவம் வாய்ந்ததும், பரந்த அரசியல் அடிப்படையைக் கொண்டதுமான அரசியல்கட்சிகள் இங்கு உருவாக வேண்டியது அவசியமாகும். இதற்கான தேவையினை இங்கு மிகைப்படுத்திக்கூறுதல் இயலாது.

தோட்டத்தொழிலாளி

பெருந்தோட்டச் சமூகத்திற்கெதிராக காலத்திற்குக்காலம் இடம்பெற்று வந்த வன்முறைகள், அரசியல் பாரபட்சங்கள் என்பவற்றிற்கு மத்தியிலும் அது தனது சமூகஅந்தஸ்தினை ஓரளவு உயர்த்திக் கொண்டுள்ளது. எண்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அவர்களது குடியுரிமைகள் உறுதி செய்யப்பட்டதும், அவர்களது கல்விநிலையில் ஏற்பட்டு வந்த முன்னேற்றங்களுமே இதற்கான காரணங்களாகும். முன்னையது, ஒரு சிறுபான்மைக்குழுவினராக அவர்களது நிலை வலுப்படுத்துவதற்கும் பின்னையது, அவர்களது அதிலுங்குறிப்பாக, இளைஞர்கள் தமது எதிர்பார்ப்புக்களையும் விருப்பங்களையும் மாற்றிக்கொள்வதற்கும் உதவியுள்ளன. எனினும், ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டுரீதியில் மனித அபிவிருத்தியில் இன்றும் அவர்கள் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமூக அசைவு என்பது ஒரு சமூகத்திற்குள்ளேயே மக்கள் ஒரு சமூக வகுப்பிலிருந்து வெளியேறி இன்னொரு சமூகவகுப்பில் இணைந்து கொள்வதைக் குறிக்கும். ஒரு சமூகத்திற்குள்ளேயே ஏற்படும் இவ்வித அசைவினை சமயம்சார்ந்த, அரசியல்சார்ந்த அல்லது சட்டம்சார்ந்த வழிமுறைகளால் தடுத்து நிறுத்தமுடியாதபோதும் அதற்கு வேறு காரணிகள் தடையாக இருக்கலாம். ஒரு சமூகக்குழுவானது பிறப்பினால் நிர்ணயிக்கப்பட்ட சாதிப்பிரிவோடு இனங்காணப்படுமாயின் அது அம்மக்களினது மேல்நோக்கிய அசைவிற்கு தடையாக செயற்படலாம். பெருந்தோட்டச்சமூகத்தை இதற்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம். பெருந்தோட்டச் சமூகத்தின் மேல்நோக்கிய அசைவு சாதிப்படிமுறை அமைப்பின் மேல்மட்டத்தில் இருப்போருக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். இந்த அமைப்பின் கீழ்மட்டத்தில் இருப்போர் தமது நிலையை உயர்த்திக்கொள்வதில் பல தடைகளை எதிர்நோக்குகின்றனர். இதன் காரணமாக, இன்றைய பின்தங்கிய நிலையிலிருந்து அவர்களை வெளிக்கொணர்வதற்கு ஏதாவது விசேடநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அல்லாவிடில், அவர்கள் தொடர்ந்தும் அதேநிலையிலேயே தேக்கமடைய நேரிடும் என்பதில் ஐயமில்லை.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

6071 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)