Arts
26 நிமிட வாசிப்பு

சிலப்பதிகாரமும் ஆசீவகமும் – பகுதி 2

April 29, 2024 | Ezhuna

ஈழநாடானது தமிழகத்திலிருந்து கடலால் பிரிக்கப்பட்ட நாடாக அமைகின்ற போதும், பண்டைக்காலந்தொட்டே தமிழர்களின் மரபுத் தொடர்ச்சியான பண்பாட்டுக் கூறுபாடுகளை உடைய மண்டலமாக காணப்பட்டு வருகிறது. தொல்காப்பியம் சுட்டும் பல இலக்கண விதிகள் இன்று தமிழகத்தில் வழக்கில் இல்லாத போதும் ஈழத்தில் அவை வழங்கப்பட்டு வருகின்றன. பண்பாட்டு வாழ்வியல்களின் அடிப்படையிலும் பண்டைத் தமிழரின் மரபுகள் பலவற்றை ஈழத்தில் காணவியலும். இந்நிலையின் தொடர்ச்சியாகவே பண்டைத் தமிழரின் சமயப் பண்பாட்டு மரபுகளையும் கருதலாம். அந்த வகையில், வடக்கே பருத்தித்துறைமுதல் தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களிடமும் காணப்படும் வழிபாட்டு முறைகளில் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படும் வழிபாட்டு மரபுகளை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இலக்கணங்களிலும் காணப்படும் வழிபாட்டு மரபுகளில் இலங்கையில் இன்றளவும் வழங்கி வருகின்ற மரபுத் தொடர்ச்சியினை ஆராய்வதே ‘இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள்‘ எனும் இத் தொடரின் நோக்கமாகும். இத் தொடர், இலங்கையில் பண்டைத் தமிழரின் வழிபாட்டு மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன என்னும் கருதுகோளினை அடையும். 

கனவும் நிமித்தமும்

கனவும் நிமித்தங்களும் நிகழவிருக்கும் நிகழ்வினை முன்னுரைக்கும் தன்மையுடையன. கனவிற்கும் நிமித்தங்களுக்குமான பலன்களைத் தமிழ்க்கணியன்கள் ஆய்ந்துரைப்பர்.

  1. கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே கனவும் கனவின் தன்மையும் கனவிற் தோன்றும் காட்சிகளும் எவ்வகையில் பலிதமாகக்கூடியன.
  2. பகலிற் காணும் கனவு பலிக்காது என்ற நம்பிக்கை.
  3. கனவு காணும் காலம் : இதனை இரவின் முன் யாமத்தில் கண்ட கனவு, நடு யாமத்தில் கண்ட கனவு, பின் யாமத்திற் கண்ட கனவு என மூன்றாகப் பகுப்பர். இதனை ஒட்டியே கனவின் நிகழ்வு யாருக்கு, எப்பொழுது பலிதமாகும் என்பன அறியக் கூடுதலாகும் என்ற நம்பிக்கை.
  4. கனவிற்காணக் கூடாதவை: சில விலங்குகள், சில ஊர்ந்திகள், சில தொழில் முனைவோர், சில மங்கல நிகழ்வுகள், சில புழங்கு பொருட்கள், சில பயணங்கள், சில சடங்கியல்கள், காவலர், தூதுவர் முதலானவை கனவிற்காணக் கூடாதவையாம்.
  5. கனவிற் காணக்கூடியவை: சில மனிதர்கள், சில மங்கல நிகழ்வுகள், சில அமங்கல நிகழ்வுகள், நிலைத்திருத்தல், மகிழ்ந்திருத்தல், தேவரடியார், மலர்கள், கனிகள், பறவைகள், அருவி, மலை, ஆறு முதலானவை கனவிற்காணக் கூடியவையாம்.

இவ்வாறான கனவுகள் குறித்து ஆராய்ந்து எழுதப்பட்ட நூலாகவே ‘பொன்னவன் கனாநூல்’ விளங்குகின்றது. சோழர் காலத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது. அக் காலகட்டத்தில் ஆசீவக நெறி தமிழகத்தில் வழக்கிலிருந்ததேயாகும். இப் பொன்னவன் கனாநூலில் இருந்தே சிலப்பதிகாரத்தில் வரும் கனவுகள் குறித்தான விளக்கத்திற்குரிய மேற்கோற் செய்யுட்களினை அடியார்க்கு நல்லார் தமது உரையில் எடுத்தாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிலப்பதிகாரத்தில் மூன்று கனவுகள் ஊழின் தன்மையில் இயங்கும் தீக்கனவாக இளங்கோவடிகளாற் காட்டப்பட்டதெனலாம். மூன்று கனவுகளின், பின்நிகழ்வும் ஒன்றுதான்; ஒரே வகையான பலனைக் கொடுக்கக் கூடியதுதான். மூன்று கனவினைக் கண்டவர்களும் மாண்டே அதன் பலனைக் கண்டனர். மூன்று கனவும் ஒரு தொடர் நிகழ்வாகவே பலித்ததெனலாம். துன்பத்தில் உழன்று அதில் சிறிது இன்பம் காணுதல் என்பதை உலக இயற்கையாக ஆசீவக சமயம் கொண்டது. அவ் அடிப்படையிலேயே இத் துன்பக் கனவுகளை நோக்க வேண்டியதாகின்றது.

கனாத்திற முரைத்த காதையில் கண்ணகி கண்ட கனவு குறித்தான செய்தி இடம் பெறுவதாகின்றது. முதலில் கண்ணகி கூற்று நிகழ்த்துமிடமாகவும் இக்காதையே அமைகின்றது. பார்ப்பனத் தோழியான தேவந்தியிடம் இக்கனவு குறித்த செய்தியைக் கண்ணகி கூறுகின்றாள்.

“கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுட் பட்டோம்
பட்ட பதியிற் படாத தொருவார்த்தை
இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன்மேற்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோ
டூர்க்குற்ற தீங்குமொன் றுண்டா லுரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனொ டுற்ற உறுவனோ டியானுற்ற
நற்றிறங் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ”

எனத் தானுற்ற கனவினை விபரிக்கின்றாள். இதன் பின் நிகழவுள்ள நிகழ்வுகள் யாவும் கண்ணகியை மையப்படுத்தி நிகழ்வதினைக் கவனிக்கலாம். பெருநகரினை அடைதல், கோவலன் துயருறல், பழிச்சொல் எழுதல், மன்னனிடம் வழக்குரைதல், நகரைத் தீக்கிரையாக்கல் இவை போன்ற கொடுமையான உள்ளத்தினை நடுங்கச் செய்யும் துன்ப நிகழ்வுகளுக்குப் பின், கோவலனும் தானும் விண்ணோர் உலகமான சுவர்க்கத்தில் இருத்தலை நகைப்பிற்குரியதாகக் கண்ணகி குறிப்பிடுகின்றாள். கடுமையான துன்ப நெறிகளுக்கிடையேயும் துன்பங்களினூடேயுமே இன்பத்தினைக் காணவியலும் என்பது ஆசீவகர்களது கொள்கை. அக்கொள்கையினை அடியொற்றியதாகவே கண்ணகியின் இக் கனவும் அமைவதினைக் காணலாம். கடுமையான வாழ்வியற் துன்பங்களுக்கிடையில் இனிதாய மறுமையுலகு அமைவது இக் கனவின் வழி விளங்குவதாகின்றது. இவள் கனவு கண்ட பொழுதும் கங்குற் பொழுதாகும்.

kannaki

இனி, கோவலன் தான் கண்ட கனவினைக் குறித்து மடல மறையோனிடமும் கவுந்தியிடமும் கூறுவான். அக்கனவினை இனிக் காண்போம்.

“கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
காறைங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்
கனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிது ஈங்குறும்”

(95-106)

என்ற கனவின் வழி கோவலன் உடுத்திய ஆடை பிறரால் களையப்பட்டு கோட்டுமா என்னும் எருமைக் கிடாவின் மேல் ஏறுவது போலவும், கண்ணகி இச் செய்தி கேட்டு நடுக்குறுதல் போலவும், கண்ணகியுடன் உம்பாரார் பதியினை அடைவது போலவும், மணிமேகலையைப் பௌத்தப் பிக்குகளிடம் துறவு நோற்க மாதவி வழங்குவது போலவும், விடியற்கால வைகறைப் பொழுதில் கனவு கண்டதாகக் கூறுகின்றான். இத் தெளிவான கனவிலும் பல துண்பங்களுக்கிடையே சுவர்க்கத்தை அடைவதான இன்பம் என்னும் ஆசீவகக் கருத்தியல் விளக்கப்பட்டுள்ளமை எண்ணத் தகுந்ததாகும். கண்ணகி கண்ட கனவிலும் கோவலன் கண்ட கனவிலும் தீக்கனா தங்களைச் சார்ந்து நிகழ்வதாகவே சுட்டப்பட்டுள்ளது. அத் துன்ப நிகழ்வுகளுக்குள் இருவருக்கும் பெறற்கரிய பேறான வீடு பேறு ஒருமைத்துக் கூறப்பட்டுள்ளது. ஆசீவகத்தின் வீடு பேற்றுக் கோட்பாட்டினை வலியுறுத்துவதாக இவை உள்ளமையினைக் காணக் கூடியதாகின்றது.

இனி, மூன்றாவதாகக் சுட்டப்படும் கனவு கோப்பெருந்தேவியின் கனவாகும். மற்றை இரு கனவிலும் கனவுக்குரியோர் துன்பமுறும் காட்சிகள் தெளிவுற இடம் பெற்றமை போல் கோப்பெருந்தேவியின் கனவில் துன்ப நிகழ்வுகள் இடம் பெறவில்லை. அரசன் குறித்தோ கோப்பெருந்தேவி குறித்தோவான நிகழ்வுகள் இடம் பெறவில்லை. ஆயினும் கனவு முழுதும் தீநிமித்தங்களே எழுந்தன. கண்ணகியும் கோவலனும் கண்ட கனவில் துன்பங்களுக் கிடையேயும் இன்பமுண்டு; ஆனால் கோபெருந்தேவி கனவில் தீநிமித்தங்களே உண்டு.

“ஆங்கு…………………….. குடையொடு கோல்வீழ, நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென் காண்எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா!
விடுங்கொடி வில்இர, வெம்பகல் வீழும் கடுங்கதிர்
மீன்இவை காண்பென்காண் எல்லா!”

(1-7)

என்றவாறான மேற்கண்ட கனவில் வெண்கொற்றக் குடையும் செங்கோலும் வீழ்தல், பகலில் இருளுதல், பகலில் மீன் விழுதல் என்பவனவான தீமித்தங்கள் குறிக்கப்படுகின்றன. இந் நிமித்தங்கள் யாவும் துன்பத்திற்கே உரியனவாதலைக் காணலாம். இவ்வகையில் சிலப்பதிகாரத்தில் கனவின் வழி துன்பம் நிறைந்த, ஆனால் சிறிதே இன்பமுடைய உலகு என்னும் ஆசீவக கோட்பாட்டின் மேலாண்மை இருத்தலைக் காணக் கூடியதாகின்றது.

நிமித்தம்

ஆசீவக சமயச் சிந்தனையில் கணியன்களின் பங்களிப்பு மிகப் பெரிதாக இருந்துள்ளமைக்குப் பல சான்றுகள் உண்டு. கணியன்கள் நிமித்தங்களை நோக்குவதிலும் அதனது பலிதங்களை அறிவதிலும் திறனுடையோர். வானியலில் திறனுடைய அவர்கள், மக்களின் உளவியல் சார்ந்த நிகழ்வுகளிலும் திறனுடையோராகவே விளங்கினர். சிலப்பதிகாரக் காப்பியப் போக்கிலும் சில நிமித்தங்கள் இளங்கோவடிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண் துடித்தல் என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழர்கள் நம்பிக்கைக்குரியதாகிய நிமித்தமாகும். அவ்வகையில் கண் துடித்தல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறிய பலனைக் கொடுக்கும். ஆண்களுக்கு வலது கண் துடித்தல் சிறப்பானது. பெண்களுக்கு இடது கண் துடித்தல் சிறப்பானதாகும். இவை போன்ற நிமித்தங்கள் நடப்பனவற்றை முன்கூட்டியே அறியத் தகும் குறியீடுகள் என ஆசீவகர்கள் நம்பினர். அவ்வகையில் இந்திர விழவூரெடுத்த காதையில் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு முறையே இடக் கண்ணும் வலக் கண்ணும் துடித்ததாகக் குறிப்பிடுவர். இதனை :

“உள்ளுக நறுந் தாது உறைப்ப, மீது அழிந்து,
கள் உக நடுங்கும் கழுநீர் போல;
கண்ணகி கருங் கணும், மாதவி செங் கணும்,
உள் நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன;
எண்ணு முறை, இடத்தினும் வலத்தினும் துடித்தன”

(இந்திர விழா ஊர் எடுத்த காதை. 235-239)

என்பனவற்றின் வழி கூறக் காணலாம். இவ்வடிகளுக்கு உரை கூறிய அரும்பத உரையாசிரியர் “கருங்கணென்றது, கண்ணகிக்குப் புணர்ச்சியில்லாமையால் நிறை கரந்து துன்பத்தால் கண்கள் நீருகுத்தன; செங்கணென்றுரைத்தது, மாதவிக்குப் புணர்ச்சி விதும்பலாகி, அகத்து நிறை கரந்து இன்பத்தால் கண்கள் நீருகுத்தன. கண்ணகிக்கு நிறை கரத்தல், கற்பாற் பரிகாரப்பட்டதால் ஆற்றாமை மிகுதி கூறிற்று. மாதவிக்கு நிறுத்தலைக் கரந்து காமத்தாலே நீருகுத்தன. கண்ணகிக்கு அழுகைக்கண்ணீர்; மாதவிக்கு உவகைக் கண்ணீர்; எண்ணுமுறை எண்ணினவடைவே. பின்பு கண்ணகிக்குக் கூட்டமுண்டாகையால் இடக்கண்டித்தன; மாதவிக்குப் பின்பு பிரிவுண்டாகையால் வலக்கண் துடித்தன” என்றமை, கண்ணகியின் இடக்கண் துடித்தது நற்செய்தியாகக் கணவன் வருகையை உணர்த்தியும் மாதவிக்கு வலக்கண் துடித்தமை கோவலனின் பிரிவினை உணர்த்துதற்குமான அறிகுறி நிமித்தங்களாகும். ஆசீவகர்களைப் பொறுத்தவரை தனி மனிதனின் வாழ்வில் வரும் இன்பம் – துன்பம் பெறுமதி – இழப்பு, வாழ்வு – தாழ்வு முதலியவை யாராலும் தடுக்க இயலாமல் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவையாகும். அந் நிகழ்வுக்குரிய குறியீடுகளாகவே இச் சமிக்கைகளைக் கருதினர். ஒரே நிகழ்வு போல் உள்ள இச் சமிக்கை இடம் – வலம் மாறி நிகழ்தலின் வழி, அடையக் கூடிய பலன்களும் மாறுகின்றமையினைக் காணலாம். அடுத்த சமிக்கையாகக் கோவலன் கொலையுண்ட பின், இடைச்சேரியிலே ஏற்பட்ட தீநிமித்தங்களைக் குறிப்பிடலாம். கோவலன் கொலைக்களப்பட்ட செய்தியை ஆயர் பாடியிலுள்ள கண்ணகியோ மாதரியோ யாரும் அறிந்திலர். ஆயினும், அங்கு நிகழ்ந்த நிகழ்வுகள் நிமித்தங்களாக அச்செய்தியை வலியுறுத்தினவாக அமைந்தமையை,

“குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்
மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு;
உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு;
நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும்
மான்மணி வீழும் வருவதொன் றுண்டு”

(ஆய்ச்சியர் குரவை.1, 2, 3, 4)

என்பனவற்றால் அறியலாம். குடத்தில் உறையிட்ட பால் உறையாமலிருத்தல், இளைய எருதின் கண்களிலிருந்து நில்லாமல் கண்ணீர் பெருகிக் கொண்டிருத்தல், தயிர் கடைவோர் கடைந்த போதும் வெண்ணை திரளாமல் பிரிந்தோடுதல், ஆட்டு மறிகள் துள்ளி விளையாடுதலை ஒழித்து குழைந்து கிடத்தல், நிரைகள் நடுங்கிக் கத்துதல், அவற்றின் கழுத்திற் கட்டிய மணிகள் அறுந்து விழுதல் போன்றன அந் நிமித்தங்களாம். ஆதலால் தமக்கு வருவதோர் உற்பதம் உண்டென்றால், ஊழின் தன்மை உயர்திணை வாயிலாகவும், அஃறிணை வாயிலாகவும் நிமித்தமாக வெளிப்படும் என்பது கணியன்களான ஆசீவகர்களது நம்பிக்கையாகும்.

ஆசீவகச் சமயக் கொள்கையினை வரையறை செய்தவர்களுள் ஒருவரான மற்கலி கோசலர் தனது நோயுற்ற காலத்தில் வேட்கோ மரபில் வந்த ‘ஆலகாலா’ என்ற தனது மாணவியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்பொழுது அவர் ஆசீவகத்திற்குரிய எட்டுக் கொள்கைகளைத் தொகுத்து வெளியிட்டார். அவை,

இறுதிப்பருகல், இறுதிப்பாடல், இறுதியாடல், இறுதிவரவேற்பு, இறுதிப் பெரும்புயல் முகில், இறுதியானை நீரூற்று, இறுதிப்போர், 24 ஆவது தீர்த்தங்கரர் என்பனவாம். இவைகுறித்து பகவதி சூத்திரம் என்ற சமண நூல் குறிப்பிடுகின்றது. இவ் எட்டு அமைப்பினை ஒத்த பல பகுதிகள் சிலப்பதிகாரத்தில் காணக்கூடியதாகின்றன.

இறுதி விருந்து

கவுந்தியடிகள் கண்ணகியை மாதரி என்னும் இடைக்குல மடந்தையிடம் அடைக்கலமாகக் கொடுத்து அனுப்ப மாதரி கண்ணகியை மங்கல நீராட்டி கோவலனுக்கும் அவளுக்கும் சமைப்பதற்குரிய நற்கலங்களையும், பல்வேறு பசுங்காய்களையும் கனிகளையும் சாலி அரிசியினையும் கொடுத்தாள். இவற்றையெல்லாம் விரைந்து பாகம்பன்னி, கோவலன் சாவக நோம்பிகள் என்பதனால் அவனுக்குப் பரிமாறி உண்பித்தாள். இதுவே கோவலனுக்குக் கண்ணகி அளித்த இறுதி விருந்தாகும். அதனாற்றான் போலும் இவ்விருந்துக் காட்சி எழிலுறக் கூறப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

“வையெரி மூட்டிய ஐயை தன்னொடு
கையறி மடைமையிற் காதலற் காக்கித்
தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக்
கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த
செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின்
கடிமல ரங்கையிற் காதல னடிநீர்
சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்
தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு
அமுத முண்க அடிக ளீங்கென
அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின்
உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு
ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ
நல்லமு துண்ணும் நம்பி யீங்குப்
பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத்
தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை”

என்பனவற்றின் வழி, தான் இனிதுற சமைத்த கறிகளைக் கோவலனுக்கு வழங்குதற்கு முன் பனையோலையாலே செய்யப்பட்ட தவிசில் கோவலனை இருக்கச் செய்து அவனுடைய கால்களைப் புதிய மட்கல நீரால் கழுவி வழிபட்டு அவனுக்கு முன் இருந்த இடத்தில் மண் புழுதி எழாமல் இருத்தல் பொருட்டு மண் மகள் மயக்கத்தினைத் தெளிவிப்பது போல் நீரினைத் தெளித்துத் தனது கைகளால் பூசி, பின்னர் குமரி வாழையின் விரியாத குருத்திலையினை விரித்து அதில் கறிகளைப் பரிமாறி ‘அமுதமுண்க அடிகளீர்’ எனக் கண்ணகி உணவுண்ணக் கோவலனை அழைத்தமை கூறப்பட்டுள்ளமையினைக் காணலாம். உணவுண்ட கோவலனும் தாம்பூலம் மென்றிருத்தமையும் கூறப்படுதலாயிற்று. இக்காட்சியினைக் கண்டு வந்த மாதரியும் ஐயையும் கோவலனைக் கண்ணனோடு ஒப்பிட்டு வாழ்த்தினர். இந் நிகழ்ச்சியே கோவலனுடைய இருதிப் பருகல் என்னும் இருதி விருந்தாகவும் இறுதி வரவேற்பாகவும் அமைந்து செல்வதினைக் காணலாம். காப்பியம் முழுதும் கோவலன் உணவுண்டமையைப் பெரிதும் காட்டாத இளங்கோவடிகள் இவ்விடத்தில் மாத்திரம் இவ்விருந்துக் காட்சியைச் சிறப்புறக் குறிப்பிட்டுக் காட்டுவதாவது எங்ஙனமாம்? இது கோவலன் உண்ணும் இறுதி விருந்து என்பதனாலேயே அதற்கான தரவுகளும் இவ்வடிகளின் உள்ளேயே தொடர்ந்து காணப்படுகின்றதெனலாம்.

“மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல்
குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்”

எனக் கூறுவதன் வழி, கோவலனுக்கு உள்ள துயரம் உவமை வழிப்பட்டு உரைக்கப்பட்டுள்ளமையினைக் காணலாம். எனவே, கோவலனின் இவ்விருந்து ஆசீவக சமயத்தார் குறிப்பிடும் இறுதி விருந்துடன் ஒப்புமையுடையதே எனலாம்.

இறுதிப் பாடலும் துன்பத்தில் இன்பமும்

ஆசீவகச் சமயம் துன்பத்தில் இன்பம் காணக்கூடியது. இவ்வுலக வாழ்க்கை துன்பமானது. அதில் கிடைக்கும் சிறிதான இன்பத்தினைப் போற்றுகிறேன் என்னும் சிந்தனைப் போக்குடையது. இத்தன்மையினைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். கதையின் தலைவன் கோவலன், ஊழ்முறையால் கொலையுண்டு மாண்டு கிடக்கின்றான். மிகப்பெரிய துன்பம் நிகழ்ந்துவிட்டது. காப்பியத்தின் போக்கு முழுவதும் துன்பத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இனித் துன்பமல்லாமல் வேறில்லை என்ற நிலையில் காப்பியத்தைக் காண்போர் நெஞ்சு வெடித்துவிடும். கோவலன் கொலைபட்டு மாண்ட செய்தி அறிந்து கண்ணகி படும் துன்பத்தையே முழுவதும் பொருளாகக் கொண்ட துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரை காதை, வஞ்சிமாலை எனக் காப்பியமே துன்பத்தினை நோக்கித் தள்ளப்பட்ட நிலையில், கொலைக்களக் காதைக்கும் துன்பமாலைக்கும் இடையில் ‘ஆய்ச்சியர் குரவை’ என்ற இன்பப் பாடற் பகுதியை வைத்தமைக்கு யாது காரணம்? துன்பம் சூழ்ந்த நிலையில் துன்பங்களுக்குகிடையில் வெளிப்படும் சிறிது இன்பத்தினை வெளிப்படுத்துதலுக்காகவேயாம்; அவ்வாசீவகக் கோட்பாட்டின் போக்கிலேயே காப்பியம் அமைக்கப்பட்டுள்ள பாங்கினாலேயாம். மற்கலி கோசலர் வகுத்த எண்வகைக் கொள்கைகளுள் இறுதிப் பாடலும் ஒன்றேயாம். அவ்வகையில் கோவலன் மாண்டவுடன் வரும் இறுதிப்பாடல் பகுதியாக அமைவது ஆய்ச்சியர் குரவையாகும். அல்லாமல் கதைத்தலைவன் மாண்டு கிடக்கும்போது:

“வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே”

என்பன போன்ற இனிய பாடல்களை வட்டப்பாதையில் நின்று பாடுதலை உலகக் காப்பியங்கள் யாவற்றிலும் காணாத புதுமையாக அமைத்ததும் ஆசீவகச் சிந்தனையின் வழிப்பட்டமையாலேயே எனலாம். இசையில் ஆசீவக சமயத்தார் மிகுந்த ஆர்வமும் ஆராய்வும் கொண்டிருந்தனர். இதனை அரிச்சலூர்க் கல்வெட்டு முதலானவை தெளிவுறுத்தும். அவ்வகையில் சிலப்பதிகாரக் கதைப்போக்கின் மாற்றத்தை இசைப்பாடலின் ஊடாக வடிவமைத்தமையும் எண்ணத்தகும். மாதவியை கோவலன் பிரிவதினைக் கானல்வரிப் பாட்டினால் கூறியும், வேனிற் காதையிலே பண்ணுப் பெயர்ச்சி (கிரகபேதம்) என்னும் நுட்பத்தினைப் பயன்படுத்தி கதையின் போக்கு மாறுதலினை அறிவுறுத்தியும், வரந்தரு காதையில் வரும் இனிய பாடல்களைக் காப்பியத்தின் இறுதிப் பாடலாகவும் கொண்டு காப்பியத்தினை நகர்த்தியிருத்தலின் வழி, சிலப்பதிகாரம் ஆசீவக இசை மரபிற் செல்வதினை அறியலாம். அதுபோலவே காப்பியத்தில் இடம்பெறும் ஆடல் வகைகளையும் குறிப்பிடலாம். ஆடலும் பாடலும் கட்டமைக்கப்பட்ட முறையை உற்று நோக்குவோர் அதன் ஆசீவகத் தன்மையை அறிவர்.

ஒருவர் துன்பமும் ஒருவர் இன்பமும்

துன்பத்தையும் – இன்பத்தையும் எதிர்நிலைப் பொருளாக வைத்துப் பார்த்தல் ஆசீவக மரபு. அம்மரபில்,

  • இன்பம் – துன்பம்
  • பிறப்பு – இறப்பு
  • ஊதியம் – இழப்பு

என்னும் ஆறு உண்மைகளையும் ஆறு திசையாசிரியர்கள் கூடி வகுத்தனர் என்று கூறுவர். அவ்வழி இன்பமும் – துன்பமும் எதிர்நிலையினை உடையனவாம். சிலப்பதிகாரக் காப்பிய மரபினில் இக்கொள்கை பின்பற்றப்பட்டமையை, காதற் கோவலனைக் கூடியுள்ள மாதவியின் இன்ப நிலையினையும், காதற் கொழுநனான கோவலனைப் பிரிந்துள்ள கண்ணகியின் துன்ப நிலையினையும் விளக்குகின்ற பாடலடிகளின் வழிநின்று அறியலாம். தலைவனைச் சேர்ந்த பெண்களுக்கும், தலைவனைப் பிரிந்த பெண்களுக்கும் அந்தி மாலைப் பொழுது இன்பமும் துன்பமும் தருவனவான பொருண்மையில் அமைவதினைப் பின்வரும் அடிகளின் வழியறியலாம். சிறுபொழுதினைப் போற்றுவதாக அமைந்த இவ் அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் இன்பமும் துன்பமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றமையை:

“இல்வளர் முல்லையொடு மல்லிகை யவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து
செந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல்
அந்துகின் மேகலை யசைந்தன வருந்த
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியுங் காதலற் களித்தாங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக்
கோலங் கொண்ட மாதவி யன்றியும்”

என்ற அடிகளில் நிலா முற்றத்தில் மலர்ப் படுக்கையில் ஊடலும் கூடலுமாக கோவலனுடன் களித்து மகிழ்கின்ற மாதவியின் வழி அறியலாம். அவளை ஒப்பவே தலைவனோடுள்ள மகளிரும் மகிழ்கின்றனர். ஆனால் கணவனான கோவலனைப் பிரிந்த கண்ணகியின் நிலை வேறாக உள்ளது. அதனை:

“அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்
மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாணுதல் திலகம் இழப்பத்
தவள வாணகை கோவலன் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி யன்றியும்”

என்ற அடிகள், சிலம்பணியாமல் மேகலை அணியாமல் குங்குமம் எழுதாமல் மங்கள அணியில்லாமல் மற்றைய அணிகள் தவிர்த்துக் காதிற் குழை அணியாமல் கண்ணிற்கு மைதீட்டாமல் நெற்றியில் திலகமிடாமல் தலைக்கு நெய் தடவாமல் ஊதுலைக் குருகினை அன்ன மூச்சினையுடையோளாய்க் கண்ணகி விளங்கினாள் எனக் கூறுகின்றன. கண்ணகி மாத்திரமல்லாமல் அவ் அந்தி நிலாக் காலத்திலே தலைவனைப் பிரிந்த பெண்களின் நிலை யாவும் அவ்வாறே அமைந்திருந்த தெனலாம்.

ஒரு அந்தி மாலைப் பொழுதின் நிலவொளியில் சிலர் இன்பமாக உள்ளமையினையும் சிலர் துன்பமாக உள்ளமையினையும் இப்படைப்பில் ஒப்பீட்டு நிலையில் காட்டுதல் என்பது சங்கப் பாடலை நினைவுறுத்துவதாக உள்ளது. இதன்வழி இளங்கோவடிகள் ஆசீவக மரபில் கொண்டிருந்த நாட்டமும் அக்காலத் தமிழகச் சூழலில் ஆசீவக மரபு பெற்றிருந்த செல்வாக்கினையும் காணலாம்.

கோவலன், கண்ணகியின் வீடு பேறு

கோவலன், கண்ணகி ஆகியோரது வீடுபேறு இக் காப்பியத்தில் எவ்வகையில் இடம் பெற்றது என்பதை நோக்குகின்ற போது அதன் சமயத் தன்மையினை உணரலாம். ஏனெனில் ஒவ்வொறு சமயமும் வீடுபேற்றினை மாறுபட்ட வகைகளிலேயே கூறிச் செல்கின்றன. மறுபிறப்புக் கொள்கையிலும் வீடுபேற்றுக் கொள்கையிலும் தெற்காசியச் சமயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தன்மையினையே கொண்டன. ஆயினும் இவ்விரண்டு கொள்கைகளையும் பெரும்பாலான தெற்காசிய சமயங்கள் ஏற்றுக் கொண்டனவாகவே உள்ளன. பெருந்துறவு மேற்கொண்டே வீடுபேற்றினை அடைய முடியும் என்றும் பெண்களுக்கு வீடுபேறில்லை என்றும் பெண்கள் துறவுமேற் கொண்டு தவமியற்றி அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்து துறவு மேற்கொள்ளவதன் வழியிலேயே வீடுபேற்றினை அடைய முடியும் என்ற கொள்கை சமணத்தில் உண்டு. இவ்வாறான மாறுபட்ட சிந்தனைகளினுடாகவே கோவலன், கண்ணகி ஆகியோரது வீடுபேற்றினைப் பற்றி ஆராய வேண்டியதாகின்றது. சிலப்பதிகாரக் கொலைக்களக் காதையில் கோவலன் கொலையுண்ட செய்தி பின்வருமாறு கூறப்படுகின்றது:

“கல்லாக் களிமக னொருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது
புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்றுயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை யுருத்தென்”

(சிலம்பு, கொலைக்களக் காதை.212-127)

இவ்வடிகளில் ‘கல்லாத அறிவற்ற களிமகன் ஒருவன் கோவலனைத் திடுமென வாளால் வெட்டினான். வாள் அவன் உடற்கு இடையில் சென்றுவிட்டது’ என்பதாக உள்ளது. இவ்வடிகளுக்கு உரை கூறும் அரும்பத உரையாசிரியர் “வெள்வா ளெறிந்தனன் விலங் கூடறுத்தது” என்பதற்கு “குறுக்காகற் ஊடறுத்தது அந்த வாளென்க” எனக் குறிப்பிடுவர். அடியார்க்கு நல்லார் “இங்ஙனம் இவர் கூறலின், அறிவின்மையாற் கொலையஞ்சான் ஒரு களிமகன் தன்கையில் வெள்வாளாலே வெட்டினானாக. அது குறுக்கே துணிந்தது. துணிந்த உடற்குறைப் புண்வழியே கொப்புளிக்கின்ற குருதி குதித்து எங்கும் பரக்க நிலமடந்தை தனக்கு ஆவது உணர்ந்து மிக்க துயரமுற….” என்றவாறு கூறுவதினைக் காணலாம். அறிவற்றவன் எறிந்த வாள் என்னும் ஆதம் உடலுக்கு இடையே சென்றுவிட்டது அதனால் கோவலன் உயிர் பிரிந்தது என்பதாம். ஆசீவகம் அணுக்கள் அழிவதில்லை என்னும் கொள்கையினை உடையது. கொலை முதலியவற்றையும் ஏற்றில்லது. அதனால் ஆயுதம் உடலின் குறுக்கே சென்றுவிட்டது என்னும் மொழியில் கோவலனின் கொலை குறிக்கப்பட்டுள்ளமையினைக் கொண்டு இதனை ஆசீவக சமயக் கருத்தியலாகக் கொள்ளலாம். கோவலன் கொலைக்குப்பின் கண்ணகி கோவலன் கொலையுண்ட இடத்தினை அடைத்து அவனது வெட்டுண்ட உடலைப் பொருத்தி நெஞ்சோடு பொருத்தியழ அவன் உயிர் பெற்று எழுந்து ‘மதிபோன்ற முகம் வாடியதென்ன’ எனக் கூறி, கைகளால் அவள் கண்ணீரைத் துடைத்து நீ இங்கிருக்க எனக்கூறி உடலினை உதறி, அமரர்கள் சூழ அமரர் குழாத்துள் ஓருவனாகச் சுவர்க்கம் புகுந்தான் என்பதனை,

“என்றிவை சொல்லி யழுவாள் கனவன்றன்
என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள
நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம்
கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற
அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்
தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப்
பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான்”

(ஊழ் சூழனி.60-66)

marriage

என்றமையால் அறியலாம். ஆசீவகச் சமய அடிப்படையிலேயே கோவலனின் வீடு பேறானது அமைந்துள்ளமையினைக் காணலாம். இனிக் கண்ணகியின் வீடு பேறு குறித்த செய்திகளைக் காண்போம். கோவலனின் பழம் பிறப்பினைக் கண்ணகிக்கு மதுராபதித் தெய்வம் உரைத்து இன்றிலிருந்து பதினான்காம் நாள் பகற் பொழுதினுக்குப் பிறகு நின் கணவனைக் கண்டு அடைவாய் எனக் கூறியது. மேற் திசை வாயிலின் வழி வைகைக்கரையில் மேற்கு நோக்கிச் சென்ற கண்ணகி செங்குன்றென்னும் மலைமீது ஏறி ஒரு வேங்கை மரத்தின் நிழலில் நின்று பதினான்காம் நாள் பகற்பொழுதிற்குப் பின் அங்குத் தெய்வ உருவுடன் வந்த கோவலனைக் கண்டு அவனுடன் வானூர்தியிலேறித் தேவர்கள் யாவரும் போற்றத் சுவர்க்கத்தை அடைந்தாள் எனக் கூறப்பட்டுள்ளமையினை,

“அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி
எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்
தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி
வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
வான வூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்”

(கட்டுரை காதை.189-200)

என்பனவாறு அறியலாம். கண்ணகி கோவலனுடன் வானூர்தியிலேறி சுவர்க்கம் புகுதல், பெண் வீடுபேறடையும் தகுதியற்றவள் என்ற சமணக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும். ஆசீவக மதமே பெண்ணின் வீடுபேற்றினையும் ஆணுக்குச் சமமாக ஏற்கின்றது. வீடுபேறடைந்த வீரபத்தினிக்கு வெட்சித் தினை மறவர்களுக்குக் கடைப்பிடிக்கும் அதே நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. இதனைக் காட்சிக்காதை, கால் கோள்க்காதை, நீர்ப்படைக் காதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை என்பனவற்றால் அறியலாம். தொல்காப்பிய மரபினைத் தாண்டி வரந்தருகாதை என்னும் காதையில் தெய்வ நிலையில் வரந்தருதல் என்னும் நிலைக்குக் கண்ணகியைக் கொண்டு சென்றார் இளங்கோவடிகள். இவை தமிழ் மரபை அடியொட்டிய ஆசீவகச் சமய நெறியின் வழிப்பட்ட படிநிலையே என்பதனை அறுதியிட்டுச் சொல்லலாம். இதன் வழிப்பட்ட கண்ணகியின் தந்தையும்:

“கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்”

(நீர்ப்படைக் காதை.97-100)

என்ற அடிகளின் வழி ஆசீவகச் சமயத்தில் இணைந்தமையைக் காணலாம். துன்பம் நிறைந்த இவ்வுலகத்தில் இன்பத்தினைப் பெறுதல் ஆசீவகர்களின் தன்மையாகும். இது துன்பத்தினையும் இன்பத்தினையும் சமமாகக் கருதும் மனப்போக்கினைக் காட்டுவதாகின்றது. கண்ணகியிடத்திலும் இப்போக்கினைக் காணலாம். நீண்ட காலம் கணவனைப் பிரிந்து மங்கல அணி தவிர மற்றவை துறந்து இருந்த போதும் கண்ணகியின் மொழியில் நகைச்சுவை மிளிர்வதை ஆங்காங்கே காணலாம். கண்ணகியின் தோழியான தேவந்தி கண்ணகியினைக் காணச்சென்று கணவனோடு வாழ்க என வாழ்த்தும் போது, தாம் கண்ட கனாவினை உரைத்த கண்ணகி நாங்கள் கனவில் பெற்ற நற்பேற்றினைக் கூறினால் உனக்கு நகையுண்டாகும் எனக் கூறுகின்றமையினை:

“கடுக்கும் என்நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு’ என்று அதுகேட்டு
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ! தீக்குற்றம்
உற்றோனொடு உற்ற உறுவனோடு யானுற்ற
நற்றிறங் கேட்கின் நகையாகும்”

(சிலம்பு.9:45-54)

என்றமையால் அறியலாம். அத்துடன் நீண்ட நாட்களுக்குப் பின் வந்த கோவலன் தமது கூடா ஒழுக்கத்தினால் செல்வமெல்லாம் இழந்தமையைக் கூற, கண்ணகி தனது காற் சிலம்பு உள்ளமையை நகை முகங்காட்டிக் கூறுதலினை:

“நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சில்லம்புள கொண்மெனச் சேயிழை கேளிச்”

(சிலம்பு.9:72-73)

என்னும் அடிகளின் வழி அறியலாம். துன்பங்களுக்கிடையிலும் இன்பத்தினைக் காணும் சம நிலைப் பாங்கை இவை உணர்த்துவதாக அமைவதினைக் காணலாம். அது போலவே வேட்டுவ வரியில் தெய்வ மேற்றப்பட்ட சாலினி தன்னைப் பலபட பாராட்டிக் கூறிய புகழுரையைக் கேட்ட கண்ணகி, இம் மூதறிவினையுடையாள் மயக்கத்தால் தம்மை இப்படிக் கூறினாள் என்று நகைச்சுவை தோன்றக் கூறுகின்றமையை:

“போதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டி என்று
அரும் பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி”

(சிலம்பு.12:51-52)

என்ற அடிகளின் வழியறியலாம். இதன்வழி துன்பமான சூழலிலும் இன்பத்தினைக் காட்டும் சமநிலைத் தன்மையினைக் கண்ணகியிடம் காணலாம். இது ‘இன்னாதம்ம இவ்வுலகம் இனியன காண்பதிலனே’ என்ற ஆசீவக அடிப்படைக் கருத்தியலை விளக்குவதாகக் காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3965 பார்வைகள்

About the Author

ஜெகநாதன் அரங்கராஜ்

முனைவர் ஜெ. அரங்கராஜ் யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்தவர். இவர் பழந்தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம் முதலான துறைகளில் தமது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிங்கப்பூர்த் தமிழ்ப் பாடநூற்கள் குறித்தும் பண்டைத் தமிழர்களின் அயலகத் தொடர்புகள் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ‘செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கிய மேற்கோள் அடைவு’ என்னும் இவரது நூல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் ஈழம், தமிழகம் என இரண்டு தலங்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ள ஆய்வாளராக இவர் திகழ்கின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (18)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)