Arts
14 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பழப்பயிர் உற்பத்தியும் வாய்ப்புகளும்

April 24, 2023 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

வடக்கு – கிழக்கின் விவசாயத்துறையில் மற்றொரு வாழ்வாதார வளமாக காணப்படும் பழப்பயிர்ச் செய்கையில் பல சாத்தியமான வளங்கள் இவ்விரு மாகாணங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையின் பழச்சந்தையில் கணிசமான ஒரு வீதத்தை  நிரம்பல் செய்யும் இவ்விருமாகாணங்களிலிருந்தும் வாழை, மா, பப்பாசி, தர்பூசணி, தேசி, தோடை, கொய்யா, மாதுளை ஆகிய பழப்பயிர்கள் முதன்மை பெறுகின்றன.

வடக்கு – கிழக்கு மாகாண  வாழைச்செய்கை

banana

வாழைப்பழச்செய்கை பிரபல்யம் பெற்றுள்ள இலங்கையின் மாகாணங்களில் வடக்கும் கிழக்கும் பிரபல்யமானவை.  வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுமே வாழைச்செய்கை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது நடுத்தர காலப்பயிர் என்ற வகையில் 4-6 ஆண்டுகள் தொடர்ந்து பயன்தரக்கூடியதான பயிராகும். இந்த வகையில் வடமாகாணத்தில் 2627 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வாழைச்செய்கை இடம்பெறுவதுடன் கிழக்கு மாகாணத்தில் 825 ஹெக்டேயர் பரப்பிலும் இது பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 1057 ஹெக்டேயரிலும் வவுனியாவில் 753 ஹெக்டேயரிலும் கிளிநொச்சியில் 4 ஹெக்டேயர் 34 ஹெக்டேயரிலும் மன்னாரில் 232 ஹெக்டேயர் பரப்பிலும் முல்லைத்தீவில் 152 ஹெக்டேயர் பரப்பிலும்  வாழை  பயிரிடப்பட்டுள்ளது.   மட்டக்களப்பு மாவட்டத்தில் 284 ஹெக்டேயர் பரப்பிலும் திருகோணமலையில் 426 ஹெக்டேயர் பரப்பிலும் அம்பாறையில் 115 ஹெக்டேயர் பரப்பிலும் இது செய்கைபண்ணப்பட்டுள்ளது. வருடாந்தம் உற்பத்தி மதிப்பீட்டின் படி திருமலையில் 4254 மெற்றிக்தொன்னும் மட்டக்களப்பிலிருந்து 5675 மெற்றிக்தொன்னும் அம்பாறையில் 1868 மெற்றிக்தொன்னுமாக கிழக்கிலிருந்து 11797 மெற்றிக்தொன் வாழைக்குலை வருடாந்தம் கிடைக்கப்பெறுகிறது.   யாழ்ப்பாணத்தில் 18534 மெற்றிக்தொன்னும் கிளிநொச்சியிலிருந்து 8232 மெற்றிக்தொன்னும் மன்னாரிலிருந்து 4732 மெற்றிக்தொன்னும் முல்லைத்தீவிலிருந்து 2126 மெற்றிக்தொன்னும் வவுனியாவிலிருந்து 13287 மெற்றிக்தொன்னுமாக வடமாகாணத்தில் 47011 மெற்றிக்தொன் வாழைக்குலைகள் வருடாந்தம் பெறப்படுகின்றன.

இந்த வகையில் நாட்டின் மொத்த தேவையில் 58808 மெற்றிக்தொன் வாழைப்பழங்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலிருந்து நிரம்பல் செய்யப்படுகின்றன. நிலவும் காலநிலையுடன் ஒப்பிட்டு பண்னை முறையில் உற்பத்தி இடம்பெறும் இப்பிரதேசங்களில் இன்னமும் இந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. நாட்டின் தென்பகுதியில் அதிகளவிலான மக்களின் தேவைக்காக வடக்கு-கிழக்கிலிருந்தே வாழை உற்பத்தி செய்யப்படுகின்றது.மகாவலி வலயத்திலும் தற்போது பரவலாக வாழைச் செய்கை இடம்பெறும் போதும் வடபுல பங்களிப்பே காத்திரமானது. தொடர் பராமரிப்பும் கவனமும் தேவைப்படாத இப்பயிர்செய்கையில் மாற்றுத் தொழில்களில் உள்ளவர்களும் கூட ஈடுபட வாய்ப்புண்டு.  இதற்கு அதிகளவில் மனிதவலு தேவை இல்லையாயினும்   பண்படுத்தல், பழம்பறித்தல், நீர் விநியோகம் என்பவற்றால் மனிதவலு கட்டாயமானதாகவுள்ளதால் அதிகரித்துள்ள மனிதக் கூலியினால் பலர் இந்தச் செய்கையினை இலாபகரமானதாக இல்லை என ஒதுக்கி வருவதும் நிகழ்ந்து வருகிறது.

மாமரச் செய்கை

mango-2

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பழப்பயிர் செய்கையில் அடுத்து முக்கியம் பெறும் பயிராக காணப்படுவது  மாமரச்செய்கை. கிழக்கில் திருகோணமலையில் 498 ஹெக்டேயர் பரப்பிலும் மட்டக்களப்பில் 485 ஹெக்டேயர் பரப்பிலும் அம்பாறையில் 124 ஹெக்டேயர்  பரப்பிலும் விளைவிக்கப்படும் இப்பயிர்செய்கையானது , வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 800 ஹெக்டேயர்    பரப்பிலும் வவுனியாவில் 761 ஹெக்டேயர்   பரப்பிலும் முல்லைத்தீவில் 495 ஹெக்டேயர்  பரப்பிலும் கிளிநொச்சியில் 337 ஹெக்டேயர் பரப்பிலும் மன்னாரில் 336 ஹெக்டேயர்  பரப்பிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வகையில் வடமாகாணத்தில் 2729 ஹெக்டேயர்  பரப்பிலும் கிழக்கு மாகாணத்தில் 1107 ஹெக்டேயர்  பரப்பிலுமாக மொத்தமாக 3836 ஹெக்டேயர்  பரப்பில் மாம்பழத்தோட்டங்கள் காணப்படுகின்றன. விளைச்சல் என்ற அடிப்படையில் கிழக்கில் திருகோணமலையில் 3550 மெற்றிக்தொன்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4851 மெற்றிக்தொன்னும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 2502 மெற்றிக்தொன்னும் விளைவு பெறப்படுகிறது இவ்வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து 10903 மெற்றிக்தொன் விளைவு வருடாந்தம் பெறப்படுவதுடன் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 5600 மெற்றிக்தொன்னும் வவுனியாவிலிருந்து 5110 மெற்றிக் தொன்னும் முல்லைத்தீவிலிருந்து 3542 மெற்றிக்தொன்னும் கிளிநொச்சியிலிருந்து 2426 மெற்றிக்தொன்னும் மன்னாரிலிருந்து 2110 மெற்றிக்தொன்னும் விளைவாகப் பெறப்படுகிறது. இவ்வகையில் இவ்விரு மாகாணங்களிலும் பயிரிடப்படும் மாமரங்களில் பாரம்பரிய இனங்களே அதிகளவில் காணப்படுகின்றன. குறிப்பாக கறுத்தக் கொழும்பான், விளாட், அம்பலவி, கிளிச்சொண்டான், வெள்ளைக்கொழும்பான் போன்ற இனங்கள் பிரபலமாகவுள்ளன. நவீன வகையை சார்ந்த Tom md; தேசி வகையை சார்ந்த பல தோட்டங்கள் அண்மைக்காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

mango

மாமரச் செய்கையில் அதிகளவு வாய்ப்புக்கள் காணப்படினும் அதன் செய்கை தொடர்பில்  பாரிய சவால்கள்  இருக்கவே செய்கின்றன. வடக்கு-கிழக்கில் மாமரங்களில் பெருமளமானவை குடியிருப்புக்களைச் சூழவே காணப்படுகின்றன. குடியிருப்புக்களில் இப்போது விவசாயத்துக்கு சவாலாக மாறியிருக்கும் குரங்குகளினால் அதிகம் பாதிப்படையும் விவசாயப் பயிராக மாமரமே காணப்படுகின்றது. வருடத்துக்கு இரு போகம் விளைச்சலைத் தரும் இப்பயிரிலிருந்து மெய் வருமானம் பெறப்படுவது பாரிய பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. மாமரங்கள் முறைப்படியாக கத்தரித்து வளர்க்கப்படாத நிலையில் பாரிய வளர்ச்சியுடன் காணப்படுகின்றன. இந்த  மரங்களிலிருந்து பெருந்தொகையான விளைவு பெறப்பட்ட போதும் அதனை பயனுடைய விளைச்சலாக மாற்றிக் கொள்வதுவே பிரச்சினையாகியுள்ளது. நூற்றுக்கணக்கில் கூட்டம் கூட்டமாக நாட்டுக்குள் நகர்ந்துள்ள குரங்குகள் உயர்ந்த மாமரங்களில் ஏறி சேதம் விளைவிக்கும் போது அவற்றை விரட்ட முடியாதுள்ளது. அத்டன் இந்தமரங்களிலேயே குரங்குக: இரவிலும் தங்கி வருவதால் அவை  இப்போது நாட்டு விலங்குகளாக மாறியிருக்கின்றன.

கடந்த தசாப்தத்தில் இடம்பெற்ற உள்நாட்டு மோதலின் போது காடுகளிலிருந்து குடிமனைகளுக்கு வந்து தங்கி கொண்ட குரங்குகள் மீள் குடியமர்வின் பின்னர் காடுகளுக்கு கொண்டு சென்று விடப்படவில்லை. அத்துடன்  வன ஜீவராசிகள் திணைக்கள வகைப்பாட்டினுள்ளும் குரங்குகள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் குரங்குகளை முகாமை செய்யும் நிலை தெரியாது வடக்கு-கிழக்கு விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். குடும்ப மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மா, பலா, கொய்யா, பப்பாசி போன்ற பல பழப்பயிர்களிலிருந்தும் முறையான வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் எந்தப் புது முதலீடுகளும் இத்துறை நோக்கி இடம்பெற முடியாதுள்ளது. உலகளாவிய நிலையில் பிரபல்யம் வாய்ந்த கறுத்தக் கொழும்பான் மாம்பழங்கள் இப்போது உயர் நுகர்வுக்கு கூட கிடைக்கமுடியாத நிலையை குரங்குகளின் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் விவசாயிகளினால் அழிப்பு செய்யப்படக் கூடிய விவசாயத்துக்கு சேதம் தரும் விலங்கு வகையில் குரங்குகள் உள்ளடக்கப்பட்டிருப்பினும் அவற்றைக் கொல்வது பொருத்தப்பாடனாதாக அமையாது என்பதுடன் உயிர் பல்வகைமைக் கோட்பாட்டின் படி எல்லா உயிரினங்களினும் வாழும் சூழலாகவே இது அமைய வேண்டும் என்பதால் திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆள்திரட்டலுடன் கட்டம் கட்டமாக குரங்குகளை காடுகளுக்கு விரட்டிவிடக்கூடிய செயல்திட்டங்களே அமுலாக்கப்படல் வேண்டும்.

கொய்யாப் பயிர்ச் செய்கை

guava

பழப்பயிர்களின் மற்றொரு முக்கியமான வகை  கொய்யாச் செய்கை. கிழக்கு மாகாணத்தில் 156 ஹெக்டேயர்  பரப்பிலும் வடமாகாணத்தில் 360 ஹெக்டேயர் பரப்பிலும் இது பயிரிடப்பட்டு வருகிறது. வட மாகாணத்தில் வவுனியாவில் 114 ஹெக்டேயர்  பரப்பிலும் யாழ்ப்பாணத்தில் 48 ஹெக்டேயர்  பரப்பிலும் முல்லைத்தீவில் 18 ஹெக்டேயர்  பரப்பிலும் இது உற்பத்தி செய்யப்படுவதுடன் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் 97 ஹெக்டேயர்  பரப்பிலும் மட்டக்களப்பில் 42 ஹெக்டேயர்  பரப்பிலும் அம்பாறையில் 17 ஹெக்டேயர்  பரப்பிலும் இது உற்பத்தி செய்யப்படுகிறது. கொய்யா மரங்களின் விளைச்சலை அறுவடை செய்வதில்   அணில் மற்றும் கிளிகள் என்பன சவாலாக உள்ள காரணத்தால் உற்பத்தியில் பெரும்பகுதி சேதத்துக்குள்ளாகின்றது. பயிரிடப்பட்டு அறுவடைக்கு பொருத்தமாக உள்ள 3-4 வருடங்களின் பின் இவை கத்தரிக்கப்பட்ட வளர்ப்பு செய்வதிலும் சிரமம் காணப்படுவதால் மெய் விளைவு பெறப்படுவது கடினமாகவேயுள்ளது. விளைவு மதிப்பீட்டை ப்பார்க்கும் போது திருகோணமலையில் 165 மெற்றிக்தொன்னும் மட்டக்களப்பில் 423 மெற்றிக்தொன்னும் அம்பாறையிலிருந்து 71 மெற்றிக்தொன்னுமாக 660 மெற்றிக்தொன் கொய்யா வருடாந்தம் கிழக்கு மாகாணத்திலிருந்து பெறப்படுவதுடன் வட மாகாணத்தில் வவுனியாவியலிருந்து 686 மெற்றிக்தொன்னும் மன்னாரிலிருந்து 720 மெற்றிக்தொன்னும் கிளிநொச்சியிலிருந்து 248 மெற்றிக்தொன்னும் யாழ்ப்பாணத்திலிருந்து 200 மெற்றிக்தொன்னும் முல்லைத்தீவிலிருந்து 68 மெற்றிக்தொன்னும் வருட விளைச்சலாகப் பெறப்படுகின்றது. நீண்டகால முதலீட்டுப் பயிர்களில் ஒன்றான கொய்யாவின், பயிர்ச்செய்கையில் பண்ணை முறை பயிர்ச்செய்கையே அதிக நன்மை தரக்கூடியதாகும். நன்கு தரமுயர்த்தப்ட்ட ஆனைக்கொய்யா வகையைப் பயிரிடுவதன் மூலம் தரமான வருமானத்தைப் பெறக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதுடன் கொய்யா பயிரிடும் நிலப்பரப்பில் ஊடுபயிர் செய்கையிலும் ஈடுபடமுடியும் என்பதால் பண்ணைமுறைச் செய்கைக்கு ஊக்கப்படுத்துதல் அவசியமாகும். ஆரம்பத்தில் இருந்து அதிக முதலீட்டை வழங்க தேவையற்ற இப்பழப்பயிரில் ஊடுபயிர்களின் செய்கையுடன் ஆரம்பித்து பலன் தரும் வரை பராமரிப்புச் செலவின்றியே இதனை ஆரம்பிக்க முடியும். அறுவடைக்கும் இலகுவான இப்பயிர்செய்கையில் முறையான கவனிப்பின் மூலம் விலங்குப் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. காலபோகப் பயிர்களுக்கென பெருமளவு நிலங்களை பயன்படுத்தும் வடக்கு-கிழக்கு விவசாயிகளின் உறுதியான வருமானத்தில் இந்தப்பழப்பயிரின் விரிவாக்கம் மேலும் பல வாய்ப்புக்கயை வழங்க கூடியதாகவே உள்ளது.

பப்பாசிப் பயிர்ச் செய்கை

வருமானம் தரும் பழப்பயிர்களில் ஆண்டு முழுவதும் அறுவடையை உறுதி செய்து தொடர்ந்து வருமானம் பெறக்கூடிய பயிர்களில் பிரதானமாகக் காணப்படும் பப்பாசிச் செய்கையை குறிப்பிடலாம். பண்ணை முறையில் இலகுவில் ஆரம்பிக்கக் கூடியதும் குறுகிய காலத்தினுள்ளேயே வருமானத்தைப் பெறக்கூடியதும் குறிப்பிட்ட வருடங்கள் தொடர்ந்து சிறந்த விளைச்சலை பெற்று பின்னர் புதிப்பிக்கப்படுவதன் மூலம் தொடர் வருமானத்தை உறுதி செய்யக்கூடியதுமான இந்தப்பயிர்செய்கையில் இயற்கை இடரான காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு என்பனவும் குரங்கு மற்றும் குருவிகளும் சவாலாக அமைந்துள்ளன. எனினும் வடக்கு-கிழக்கின் பழ உற்பத்தியில் பப்பாசிச் செய்கை காத்திரமிக்க பங்கை  வகித்துள்ளது. வடமாகாணத்தில் 1093 ஹெக்டேயர்  நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படும் இப்பயிரானது வவுனியாவிலேயே அதிகளவில் செய்கை பண்ணப்படுகிறது. அங்கு 409 ஹெக்டேயர்  நிலப்பரப்பில் செய்கை பண்ணப்படும் இப்பயிர் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் அதிகளவில் பண்ணை முறையில் செய்கைப்பண்ணப்பட்டு வருகிறது. வவுனியாவிற்கு அடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 190 ஹெக்டேயர்  பரப்பிலும் மன்னாரில் 201 ஹெக்டேயர்  பரப்பிலும் முல்லைத்தீவில் 155 ஹெக்டேயர்  பரப்பிலும் கிளிநொச்சியில் 138 ஹெக்டேயர்  பரப்பிலும் இது செய்கை பண்ணப்படுவதுடன் கிழக்கு மாகாணத்தில் 240 ஹெக்டேயர்  இது செய்கை பண்ணப்படுகிறது. அதில் 141 ஹெக்டேயர்   பரப்பில் திருமலையில் தான் இது அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குச்சவெளி, நிலாவெளி கமநலப்பிரிவுகளிலேயே  இது அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடை விளைச்சல் என்ற வகையில் திருமலையில் 2055 மெற்றிக்தொன்னும் மட்டக்களப்பில் 1412 மெற்றிக்தொன்னும் அம்பாறையில் 598 மெற்றிக்தொன்னும் அறுவடையாக கிடைக்கப் பெறுகின்றன. வட மாகாணத்தில் வவுனியாவிலிருந்து 8500 மெற்றிக்தொன்னும் மன்னார் மாவட்டத்திலிருந்து 4356 மெற்றிக்தொன்னும் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 4472 மெற்றிக்தொன்னும் கிளிநொச்சியிலிருந்து 4300 மெற்றிக்தொன்னும் முல்லைத்தீவிலிருந்து 4830 மெற்றிக்தொன்னுமாக மொத்தமாக வடமாகாணத்திலிருந்து 26452 மெற்றிக்தொன் விளைச்சலாகவும் கிழக்கு மாகாணத்திலிருந்து 4066 மெற்றிக்தொன்னுமாக 30518 மெற்றிக் தொன் பப்பாசிப்பழங்கள் இவ்விரு மாகாணங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

papaya

பப்பாசிச் செய்கையை பொறுத்தவரை மிக லாபம் தரும் பயிர்களில் ஒன்றாகக் காணப்படுவதுடன் அதிக சந்தை வாய்ப்பை கொண்ட ஒரு பயிராகவும் இது அமைந்துள்ளது. சுற்றுலாவிகளின் அதிக வரவு காரணமாக இன்னமும் வளர்ச்சியடையக்கூடிய ஒரு தொழிலாக இது அமைந்துள்ளதுடன் உள்ளூரிலும் இதன் நுகர்வு கணிசமாகவே உயர்ந்து வருகிறது. எல்லாக்காலங்களிலும் இதனைப் பயிரிட்டு பலன் பெற முடியும் என்பதால்  விவசாயிகளால் இது பெரிதும் விரும்பப்படும் பயிராகவே இருந்து வருகிறது. நல்லின விதைகளின் மூலம் மட்டுமே கன்றுகளை உருவாக்கி பயிரிட முடியும் என்பதால் இதன் விதையாக்கம் தனியாரது கம்பனிகளின் செல்வாக்கு உட்பட்டதாகவே உள்ளது. பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வந்த பப்பாசி விதையினை நாம் கவனிப்பாரற்று விட்டதனால் விதைப்பிறக்கத் தனியுரிமை கொண்ட பயிர்ச்செய்கை தொழில்நுட்பம் இப்பயிரினை முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. இதனால் சாதாரணமாக வீட்டுத்தோட்டங்களில் பயிரிடக்கூட நாற்றுக்களை கொள்வனவு  செய்து கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு இலகுவில் கிடைக்கக்கூடிய பழப்பயிர்களாக வாழை மற்றும் பப்பாசி மட்டுமே இருந்து வருகின்றன.

தேசிச்செய்கை

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் மற்றமொரு வாய்ப்பான பழப்பயிராக தேசிச் செய்கையை எடுத்துக் கொள்ளலாம். வட மாகாணத்தில் 995 ஹெக்டேயர்  பரப்பிலும் கிழக்கு மாகாணத்தில் 156 ஹெக்டேயர்  பரப்பிலுமாக மொத்தமாக 1151 ஹெக்டேயர்  பரப்பில் உற்பத்தி செய்யப்படும் இப்பழப்பயிரனது ஒரு வாய்ப்பான பயிராகவே காணப்படுகின்றது. வட மாகாணத்தில் அதிக பிரதேசங்களில் பயிரிடப்படும் இப்பழமானது வவுனியா மாவட்டத்தில் மிகவும் அதிகளவாக 435 ஹெக்டேயர்  நிலப்பரப்பிலும் யாழ்ப்பாணத்தில் 216 ஹெக்டேயர்  நிலப்பரப்பிலும் முல்லைத்தீவில் 157 ஹெக்டேயர்  நிலப்பரப்பிலும் கிளிநொச்சியில் 93 ஹெக்டேயர்  நிலப்பரப்பிலும் மன்னாரில் 53 ஹெக்டேயர்  பரப்பிலும் இது உற்பத்தி செய்யப்படுவதுடன் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் 66 ஹெக்டேயர்  பரப்பிலும் மட்டக்களப்பில் 46 ஹெக்டேயரிலும் அம்பாறையில் 45 ஹெக்டேயர் பரப்பிலும் இது பயிரிடப்பட்டு வருகின்றது. விளைச்சல்  என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் 955 மெற்றிக்தொன்னும் வட மாகாணத்தில் 4850 மெற்றிக்தொன்னும் விளைவாக கிடைத்து வருகிறது. வவுனியா மாவட்டத்தில் அதிகம் விளைச்சலை தரும் இப்பயிருக்கு தேவையான வாய்ப்பான பல ஏக்கர் நிலங்கள் பயிரிடப்படாமல் இருப்பதுடன் மிகக் குறைந்த அளவில் பயிரிடும் விவசாயிகளால் தான் இவ்விளைச்சல் உறுதி செய்யப்படுகிறது. துணை உணவுப்பொருட்களின் உற்பத்திகளுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுத்தக்கூடிய இப்பழப்பயிரானது நேரடி நுகர்வுக்கு அப்பாலும் தொழில் மற்றும் இலாப வாய்ப்பை கொண்ட ஒரு பயிராகவே இது காணப்படுகின்றது.

தோடைச்செய்கை

வடக்கு – கிழக்கில் தோடைச் செய்கைக்கு மிக உகந்த பிரதேசமாக வடக்கு மாகாணமே காணப்படுகின்றது. வட மாகாணத்தில் இப் பயிர்ச் செய்கைக்குப் பொருத்தமான காலநிலை நிலவுவதாலும் மண் அமைப்பின் பொருத்தமுமே இதற்குக்  காரணம். 995 ஹெக்டேயர் பிரதேசத்தில் இது வட மாகாணத்தில் பயிரிடப்படுகின்றது. அதில் அதிகளவான தோடைச் செய்கை இடம்பெறும் மாவட்டமாக வவுனியா மாவட்டமே இருந்து வருகிறது. மொத்தமாக 586 ஹெக்டேயர் பரப்பில் இச் செய்கை வவுனியாவிலேயே இடம் பெறுகிறது. அடுத்து மன்னாரில் 34 ஹெக்டேயர் பரப்பிலும் முல்லைத்தீவில் 32 ஹெக்டேயர் பரப்பிலும் யாழ்ப்பாணத்தில் 26 ஹெக்டேயரிலும் கிளிநொச்சியில் 16 ஹெக்டேயர் பரப்பிலும் இப்பயிர்ச் செய்கை இடம்பெறுகிறது. நீண்டகால வருமானம் தரக்கூடிய இப்பயிர்,  பொருத்தமான பராமரிப்பும் மண்ணமைப்புமுள்ள பகுதிகளிலேயே  அதிக விளைவைத்தருகின்றது. ஏனைய இடங்களில் மரங்கள் நன்றாக வளர்ந்தாலும் கூட காய்ப்பதில்லை என்பதனால் இதிலிருந்து பயன் பெறுவது சில தடைகளுடன் கூடியதாகவே காணப்படுகின்றது.

விளாம்பழச்செய்கை

வடக்கு மாகாணத்தில், காடுகளில் அதிகளவில் காணப்படும்  விளாம்பழங்கள், பழுத்து விழும் காலத்தில்  அவற்றைச் சேகரித்து விற்பனை செய்து வருமானம் பெறுவதே அதிகளவில் இடம்பெற்று வருகிறது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் வீடுகளில் இது பழப்பயிராக பயிரிடப்பட்டு நன்மைகள் பெறப்பட்டு வருகின்றன. திருகோணமலையில் 89 ஹெக்டேயர் பரப்பிலும் மட்டக்களப்பில் 46 ஹெக்டேயரிலும் அம்பாறையில் 17 ஹெக்டேயர் பரப்பிலும் இது உற்பத்தி செய்யப்படுவதுடன் 595 மெற்றிக்தொன் விளைவு இம்மாகாணத்தில் வருடாந்தம் பெறப்பட்டு வருகிறது. துணை உணவுப் பதனிடலில் அதிக வாய்ப்புள்ள இப்பழங்கள் திட்டமிடப்பட்ட வகையில் வளர்ப்புக்கு உட்படுத்தப்பட்டாலே சிறந்த விளைச்சலைப் பெறக்கூடியதாக அமையும். உற்பத்திச் செலவின்றி காடுகளிலிருந்து பெறக்கூடிய இப்பழங்களை உரிய காலங்களில் முறையாக திரட்டி பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மிகச் சிறந்த வருமானத்தை பெறக்கூடிய ஓரு தொழிலாகவும் உச்ச மட்ட லாபத்தைப் பெறக்கூடிய தொழிலாகவும் இதனை மாற்றிக்கொள்ள முடியும்.

இவ்வகையில் வடக்கு-கிழக்கின் பொருளாதார வாய்ப்புக்களில் பழப்பயிர்களின் உற்பத்தியும் மிகப் பொருத்தமான ஒரு மூலவளமாகவே காணப்படுவதுடன் பெறுமதிசேர் தொழில்நுட்பத்தின் மூலம் பல துணை உணவுக் கூறுகளையும் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இந்தத்துறையில் காணப்படுவதனை நாம் அடையாளப்படுத்த  முடியும். சிறப்பான விளைச்சலைத் தரும் மாவட்டங்களில் கூடுதல் முதலீட்டை வழங்கி இத்துறைசார் பயிர்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மிகச் சிறந்த வருமானத்தையும் தொழில் வாய்ப்பையும் கொண்டதாக வடக்கு-கிழக்கு மாகாணங்களை மாற்றிக் கொள்ள முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8034 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)