Arts
10 நிமிட வாசிப்பு

இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் – இன மரபும் பண்பாட்டுச் சமூகவியலும்

November 21, 2022 | Ezhuna

இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக ‘இலங்கை முஸ்லிம்கள் – இனத்துவ மரபும் சமூகவியலும்’ என்ற இந்த கட்டுரைத்தொடர் அமைகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் என்போர் இன மரபு சார்ந்து அரபு மூலத்தையா அல்லது தமிழ் மூலத்தையா தங்கள் இனத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளனர், இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமாக தமிழைக்கொள்ள முடியுமா?, ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகள், உள்ளக வேறுபாடுகள் மற்றும் முரண்கள் அவற்றின் சமூகவியல் தன்மை ஆகியவற்றை இந்தத் தொடர் பரந்த ஆய்வுக்குட்படுத்துகிறது.

அறிமுகம்

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் (ஆய்வுகளில் போதாமை இருக்கிற போதிலும்) ஆய்வுகளின் அளவுக்கு அவர்களின் இனத்துவ மரபு, சமூகவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் குறித்து முஸ்லிம் வரலாற்றாய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சார்பியத்தன்மையும், மதப் புனித நோக்குகளையும் கடக்க முடியாத அகச் சிக்கலுடன் இருப்பவை. இந்த ஆய்வுகளை நோக்கும் போது முஸ்லிம்கள் குறித்து ஓரளவு அறிவியல் தன்மையுடன் கூடிய ஆய்வுகள் இங்கு நிகழவில்லை என்பதே உண்மை. இந்தப் புள்ளியிலிருந்து இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக இந்தக் கட்டுரைத் தொடரை தொடக்குகிறேன்.

20th-century-Srilankan-moors

இலங்கை முஸ்லிம்கள் பற்றிய இதுவரைகால வரலாறு பெரும்பாலும் அவர்களின் அரபு மூலத்தையே அதிகம் கவனப்படுத்துகிறது. அதன் பின் அரேபியாவில் நிகழ்ந்த இஸ்லாத்தின் தோற்றத்துடன் இலங்கை முஸ்லிம் வரலாற்றை இணைத்து நோக்குகிறது. உண்மையில் இந்த நோக்குகளுக்கு அப்பாலும் செல்வதன் மூலமே இலங்கையில் முஸ்லிம்களின் இனத்துவ மூலத்தை கண்டறிய முடியும் என நம்புகிறேன். இலங்கைக்கு அரபுகளின் வருகையுடனோ, இஸ்லாத்தின் வருகையுடனோ முஸ்லிம்களின் இனத்தொடர்ச்சியை சுருக்கிக்கொள்வது, அதன் அசல் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவப் போவதில்லை.

பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்துக்குள் பல்வேறு இனங்களின் கலவையைக் காணலாம்.

  1. இலங்கைச் சோனகர் (Ceylon Moors).
  2. இந்தியச் சோனகர் (Indian Moors)
  3. மலேயர்கள் (Malays)
  4. ஜாவாக்கள் (Javas)
  5. ஆப்கனியர்கள் (Afghans)
  6. மேமன்கள் (Memons)
  7. பெங்காலிகள் (Bengalis)
  8. போராக்கள் (Bohras)
  9. கோஜாஸ் (Khojas)

என பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுதியையே முஸ்லிம் எனும் ஒற்றை அடையாளம் பூண்டுள்ளது. இந்த உப மரபினங்கள் குறித்து எம். எம். எம். மஹ்ரூஃப் குறிப்பிடத்தக்களவு தனது வரலாற்றுப் பார்வையினைச் செலுத்தியுள்ளார். இதுதொடர்பிலான அவரது ஆய்வுகள் இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கன. பின்னரான அத்தியாயங்களில் அவரது ஆய்வுநோக்குகள் குறித்து விரிவாக நோக்க உள்ளேன். இத்தகைய அனைத்து உப மரபினங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரே புள்ளி இஸ்லாம் எனும் சமயமாகும். இவ்வாறு மதம் என்ற அடையாளத்தில் இணைந்திருக்கும் முஸ்லிம்களை இனரீதியாக பகுத்துப் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட இனக் கலவையைக் காணமுடியும். இதனால் இலங்கை முஸ்லிம்களின் இன மரபானது பல்வேறு பண்பாடுகளில் வேர் கொண்டிருப்பதாகக் கருதலாம். எனினும் மதத்தால், பண்பாட்டால் அவர்கள் மத்தியில் ஒரு பண்பாட்டு ஒற்றைத் தன்மையையும் ஒருங்கிணைவையும் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரே மரபினமாக மாற்ற முடியாது. அது அவர்களுக்கிடையில் நிகழும் கலப்புத் திருமணங்கள் மூலமே நிகழக்கூடிய சாத்தியம் உள்ளது. (இன்று கிட்டத்தட்ட அது நிகழ்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன்) ஏனென்றால் இனம் (race) என்பது பண்பாடு சார்ந்தது அல்ல. அது உடலியல், உயிரியல் சார்ந்தது. ‘அண்மைக்கால எழுத்துக்களில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் எழுத்துகளில் இனத்துவம் (ethnic) என்பதும் (உடற்கூற்றியல் அடிப்படையிலான) மரபினம் (race) என்பதும் பெரும்பாலும் ஒரே பொருளிலேயே பயன்படுத்தப்படுகின்றன’ என ஆர். எல். எச். குணவர்தன[i] குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது. இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்வதானால் ஓர் இனம் இன்னொரு இனத்திலிருந்து உயிரியல் ரீதியாக, இயற்கையாக வேறுபடுவதையே மரபினம் குறிக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் இந்தப் பன்முக கலவை என்பது பல்வேறு மரபினங்களின் தொகுப்பாகவே இருக்கிறது. இதிலுள்ள மரபினங்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து, பண்பாடுகளிலிருந்து, வெவ்வேறு காலகட்டங்களில் இலங்கைக்கு வந்தவர்கள்.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்கள் என முன்பு அறியப்பட்டவர்கள் யார்? இந்த முஸ்லிம் என்கிற இன அடையாளத்துக்குள் பெரும்பான்மையாக இருக்கும் இனக்குழுமம் எது எனப் பார்த்தால் அது இலங்கைச் சோனகர்தான். இலங்கையில் முஸ்லிம் அடையாளத்துக்குள்ளிருக்கும் இனக்குழுமங்களில் இலங்கைத் தன்மையையும், பூர்வீகத்தையும் சோனகரிலேயே காண முடியும். (ஆனால் தற்போது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் அரபுத் தூய்மைவாத இயக்கங்களின் செயற்பாடுகளால் முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக இந்திய – இலங்கைத் தன்மையை பெரும்பாலும் இழந்துவிட்டனர்) இந்தியா எனும் பெருநிலத்திலிருந்து, பண்பாட்டிலிருந்து உருவான இந்து மதம், பௌத்தம் போன்ற மதங்களும், தமிழ், சமஸ்கிருதம், பாளி, சிங்களம் போன்ற மொழிகளும் சங்கமித்த இந்திய-இலங்கை மண்ணின் அசல் தன்மையைக் கொண்டவர்களாக இலங்கையில் சிங்களவர், தமிழர்களைக் கருதுவது போன்று சோனகரையும் கருத முடியும்.

இந்த ‘சோனகர்’, ‘முஸ்லிம்’ போன்ற இனப்பெயரிடலே பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக பல மாறுதல்களுக்குட்பட்டு வந்திருப்பதை முஸ்லிம் அறிஞர்கள், வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். ‘இலங்கை முஸ்லிம் சமூகம் பல இனக்குழும அடையாளங்களைக் கொண்டுள்ளது. ஒரு கலவையான அரபு, பாரசீக, இந்திய, மலாய் அடையாளங்களில் இருந்து முஸ்லிம் அடையாளம் வரை; முஸ்லிம் அடையாளத்திலிருந்து மூர் (சோனகர்) அடையாளம் வரை, மீண்டும் மூர் அடையாளத்திலிருந்து முஸ்லிம் அடையாளம் வரை இச்சமூகம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனது அடையாளத்தை மாற்றி வந்திருக்கிறது’.[ii] என பேராசிரியர் அமீர் அலி தன் ஆய்வொன்றில் முன்வைக்கிறார்.

இத்தகைய ஒரு கலவையான இனங்களை உள்ளடக்கிய ஓர் ஒற்றை அடையாளச் சமூகமாக இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரம்தான் உருவானார்களா என்றால் அப்படி அல்ல. சிங்களவர்கள் கூட இத்தகைய ஒரு பல்லின மரபைக்கொண்ட இனமாகவே உள்ளனர். சிங்களவர் எனும் ஒற்றை இன அடையாளத்துக்குள் வரும் பல்வேறு இனக்குழுக்கள் பற்றி வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இலங்கை வரலாற்றியலாளர் பேராசிரியர் கா. இந்திரபாலா சிங்களவர்களின் இனத்துவப் பரிமாணம் பற்றி இப்படி எழுதுகிறார். ‘இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வாழ்ந்த பல்வகைப்பட்ட இனக்குழுக்களின் சேர்க்கையின் விளைவாய் இந்த இனக்குழு உருவாகியது'[iii].

சிங்கள சமூகத்திலிருந்து உருவான நேரிய வரலாற்றியலாளரான ஆர். எல். எச். குணவர்தனவின் கருத்துகளும் கூட இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ‘சிங்களவர் என்ற பதம் மௌரியர், குப்தர், பல்லவர், சோழர் போன்ற பிற தென்னாசிய அரச வம்சத்தைப் போன்று அநுராதபுரத்தை ஆண்ட அரச வம்சத்தைக் குறித்தது. இரண்டாம் கட்டத்தில்தான் இந்த அடையாளம் இந்த இராச்சியத்தின் அரச வம்சத்துடன் அரசியல் ரீதியில் தொடர்புகொண்டிருந்த குடும்பங்களையும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டது’ [iv] என அவர் எழுதுகிறார்.

இத்தகையதொரு இனப்பரிணாமமே முஸ்லிம்கள் மத்தியிலும் நிகழ்ந்துள்ளது. பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பண்பாட்டுக் காரணிகளுக்காக பல்வேறு மரபினங்களையும் உள்வாங்கி பரிணமித்துள்ள ஓர் இன அடையாளமாகவே இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தை நோக்க முடியும்.

moors

இதில் சோனகர்கள்,  அரபிகளின் வழித்தோன்றல்கள் என முஸ்லிம் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். முஸ்லிம் அல்லாத சில வரலாற்று அறிஞர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அந்தக் கருத்தை தங்களது ஆய்வுகளிலும் வெளிப்படுத்தியுள்ளனர். இலங்கைச் சோனகர் அரபிகளின் வழித் தோன்றல்கள் தான் என்பது மரபணுவியல் ஆய்வின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. இது குறித்து இவ்வாய்வில் பின்னர் விவாதிக்கப்படும்.

இலங்கையில் மரபினக் குழுக்கள்

இன்றைய உலகின் அறிவியல் துறையின் முன்னேற்றம் தொல்லியல் துறையிலும் புதிய ஆய்வுமுறைகளையும், அணுகுமுறைகளையும் தோற்றுவித்துள்ளது. இவை வரலாற்று ஆய்வு முடிவுகள் ஓரளவு அறிவியல் தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்கின்றன. ஒரு நாட்டிலுள்ள ஓர் இனம் எந்த இனத்தின் தொடர்ச்சி என்பதை அறிவியல் தெளிவோடு புரிந்துகொள்ள இந்தத் துறையில் அறிமுகமாகியுள்ள இந்த மரபணுவியல் ஆய்வு எனும் துறை உதவுகிறது. ஆதிகாலத்தில் நடைபெற்ற மக்கள் இடப்பெயர்ச்சிகளையும், பரம்பலையும் அடையாளங் கண்டுகொள்ள genetics துறையின் வளர்ச்சி உதவுகின்றது. தற்காலத்தில் ஓரிடத்தில் வாழும் மக்களுக்கும் வேறு இடங்களில் வாழும் மக்களுக்கும் இடையில் உள்ள DNA தொடர்புகளை வைத்து முற்காலத்தில் நடைபெற்ற மக்கள் பரம்பலை அறிந்துகொள்ள இடமுண்டு [v] என பேராசிரியர் இந்திரபாலா மரபினங்களைக் கண்டறிவதிலுள்ள இதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

இலங்கையிலுள்ள மரபினங்கள் குறித்தும் இத்தகைய மரபணுவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் இந்த ஆய்வுமேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கிடையில் இருக்கும் மரபணு நெருக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பற்றி மிக ஆழமாக பக்தவத்சல பாரதி தனது இலங்கையில் சிங்களவர் எனும் நூலில் தகுந்த ஆதாரங்களோடு எடுத்துக் காட்டுகிறார்.  ‘இந்த ஆய்வுக்காக கொழும்பிலிருந்தும், சுற்றுப்புறங்களிலிருந்தும் 102 சிங்களவர், 100 தமிழர், 100 முஸ்லிம்கள், 103 பேர்கர்கள் (Burghers), 103 மலாய்க்காரர்கள் ஆகியோரிடம் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக இரத்த வகைகள், சிவப்பணு என்சைம்கள், சீரம் புரோட்டீன்கள் ஆகிய மூன்று வகையான கூறுகளை ஆய்வுசெய்தனர்’.[vi] என இது பற்றி விரிவாக எழுதிச்செல்லும் பக்தவத்சல பாரதி, மரபணு ரீதியாக சிங்களவருக்கு முதலாவது நெருக்கமாகத் தமிழர்கள் இருப்பதையும், இரண்டாவது நெருக்கமாக முஸ்லிம்கள் இருப்பதையும் இந்த ஆய்வு முடிவு நிரூபித்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறார். அதாவது மரபணு ரீதியாக சிங்களவர்-தமிழர்-சோனகர் (Moor)-மலாய்க்காரர்-பேர்கர்  என்ற ஒழுங்கில் அமைந்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவின்படி பார்த்தால் இலங்கையில் மரபினரீதியாக தமிழர்களுக்கு முதல் நெருக்கமாக முஸ்லிம்கள் இருப்பது தெளிவாகிறது. அதேநேரம் அரபு மூலத்தோடு தொடர்பில்லாமலும் இல்லை. மரபினரீதியான அரபுக் கலப்பும் சோனகர் மத்தியில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அதுவே அவர்களின் முதன்மையானதும் மையமானதுமான மரபினத் தொடர்ச்சி அல்ல. அவர்கள் இந்திய-இலங்கைத் தன்மையுள்ள தமிழர்-சிங்களவர் இனத்துவ மூலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே யதார்த்தம். இதனால்தான் அரபிகள் இலங்கை முஸ்லிம்களை தங்களின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதில்லை. அரபிகளைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் அஜமிகள்தான் (அரபி அல்லாத முஸ்லிம்). இதனால் அரபுத் தூய்மைவாதத்துக்குள் இலங்கை முஸ்லிம்கள் எந்தவிதத்திலும் நுழைய முடியாது. எனவே, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரபுத் தூய்மைவாதத்துக்காக இயங்கும் இஸ்லாமிய இயக்கம்/ங்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவையாகவே தோன்றுகின்றன.  

தொடரும்.

அடிகுறிப்புகள்

[i] ஆர். எல். எச். குணவர்தன, இனமுரண்பாடும் வரலாற்றியலும் (சமூக விஞ்ஞானிகள் சங்கம்,2000) p.02

[ii] அமீர் அலி, முஸ்லிம் சாஹித்தியத்தின் பன்முக அடையாளங்களும் அரசியல் தேர்ந்தெடுப்புகளும் (மார்க்கா நிறுவனம்,2001) p.01

[iii] கா. இந்திரபாலா, இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம்பெற்ற வரலாறு (குமரன் புத்தக இல்லம், 2006)

[iv] ஆர். எல். எச். குணவர்தன, இனமுரண்பாடும் வரலாற்றியலும் (சமூக விஞ்ஞானிகள் சங்கம்,2000) p.28

[v] கா. இந்திரபாலா, இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம்பெற்ற வரலாறு (குமரன் புத்தக இல்லம், 2006) p.58

[vi] பக்தவத்சல பாரதி, இலங்கையில் சிங்களவர் (அடையாளம் பதிப்பகம், 2016) p.25


ஒலிவடிவில் கேட்க

19708 பார்வைகள்

About the Author

ஜிஃப்ரி ஹாசன்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஜிஃப்ரி ஹாசன் அவர்கள் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவர். மேலும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், தற்போது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வு, மொழிபெயர்ப்பு என விரிந்த தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’, ‘அகாலத்தில் கரைந்த நிழல்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன.

இலங்கை முஸ்லிம் பண்பாடு, சமூகவியல், ஈழ இலக்கியம், சிங்கள இலக்கியம் முதலான கருபொருள்களில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)