Arts
6 நிமிட வாசிப்பு

வாணிபம் ஆரம்பிக்க தேவையான 4 நிதி தொடர் அடிப்படைகள்

February 28, 2023 | Ezhuna

திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள். உலக வணிகத்துறையில் மிகமுக்கியமான இடம் தமிழர்களுக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் இன்றோ பழங்கதைகளாகிவிட்டன. வணிகம் என்றாலே, தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாதது போலவும், தம்மால் ஒருபோதும் வணிகத்துறையில் சாதிக்கவே முடியாதென்பது போலவும் நம்மவர்கள் ஒதுங்கி, ஒடுங்கிக் கொண்டுள்ளனர். உண்மையில் இத்தகைய முற்கற்பிதங்கள் தான் வணிகத்துறையில் அவர்கள் நுழைவதற்கும், சாதிப்பதற்கும் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றைக் களைந்து, சரியான படிமுறைகளுக்கூடாக, உலகின் எதிர்காலத்துக்குப் பொருத்தமான வணிகத்தில் காலடி எடுத்து வைத்தால், நம்மாலும் சாதிக்க முடியும். இவை வெறுமனே மேம்போக்கான வார்த்தைகள் அல்ல. ஈழத்தில், புலோலி என்ற கிராமத்தில் பிறந்து, அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் வணிகத்துறையில் சாதித்த பின்னர் வெளிவருகின்ற கட்டுரையாளரது பட்டறிவின் மொழிதலே இது. ‘ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை’ என்ற இக்கட்டுரைத்தொடர் உலகில் மிகப்பிரபலமான தொழில் நுட்பதாரிகளைப்பற்றியும் அவர்களது ஆரம்ப நிலை தொழில் நிறுவனங்களை (Startup Companies) அமைக்கும் போது எதிர் கொண்ட சில முக்கியமான நுணுக்கங்களை (Nuances)  அடிப்படையாகக் கொண்டும், கட்டுரையாளரின் வணிகரீதியான சாதிப்பு அனுபவங்களைப் பகிர்வதாக அமைகிறது.

“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை” – திருக்குறள் (672)

மு.வரததாசனார் விளக்கம்

காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக்கூடாது.

நான் ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்ப தொழில் நிறுவனங்களைத் தொடங்கியபோது, ஈழத்தில் சின்ன வயதில் கற்ற மற்றும் அனுபவித்த பல விடயங்கள் எனக்கு மிக்க துணையாக இருந்தன. அவற்றில் சில விடயங்கள் வகுப்பறைகளில் படித்தவை, மற்றவை வெளியே அனுபவரீதியாகக் கற்றுக்கொண்டவை. எனது குடும்பம்  யாழ்ப்பாணத்திலுள்ள கிராமமொன்றில் பலசரக்குக் கடை ஒருபக்கமும், விவசாயம் மற்றும் கட்டடப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை மற்றப்பக்கமும் வைத்திருந்தது. அதோடு பருவக்காலங்களுக்கேற்ப விவசாயங்களும் செய்து வந்தோம்.

அதனால் சின்ன வயதிலிருந்தே வணிகம் செய்வதற்கும் அதன் மூலம் பல நடைமுறைக் கொள்கைகளைக் கற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் என் அண்ணாமாரும் பள்ளிக்கூட நேரங்களைத்தவிர மற்ற நேரங்களில் கடையில் வேலை செய்வோம். சில நாட்களில் பள்ளிக்கூடம் போக முன் தோட்டத்துக்குப் போய் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, அதன் பிறகே பள்ளிக்குப் போவோம். அறுவடைக் காலம் எல்லோரும் தேவையான வேலைகளைச் செய்வோம். இப்போதும் இரவில் பெற்றோமாக்ஸ் வெளிச்சத்தில் வெங்காயத்தை காய வைத்து, அதை அணையாகக் கட்டி,  தூக்கில் போட்டது நினைவுக்கு வருகிறது. இப்படி நாங்களும் சேர்ந்து வேலை செய்ததால் வேலையும் விரைவாக முடியும்,  அத்தோடு வேலையின் சிக்கல்களையும் அறியக்கூடியதாக இருந்தது. அதை வைத்து புதிய முறைகளில் வேலை செய்யக்கூடியதாகவும் இருந்தது. இதையே ஐக்கிய அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் செய்யும் போது தொடர்ந்து செய்தேன். அதன் மூலம் எனது அணியினரின் மதிப்பைப் பெற்றது மட்டுமன்றி அவர்களின் கஷ்டங்களையும் புரிந்து, எமக்கான இலக்கை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.

Warren-Buffett

உலகில் வணிகத்துறையிலும் முதலீட்டுத்துறையிலும்  முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் கோடீஸ்வரரான வோறன் பஃபெட் (Warren Buffet). அவர் பிறந்து வளர்ந்தது அமெரிக்காவில் கொஞ்சம் பின்தங்கிய ஊரான ஒமாகாவில்.( நெப்ராஸ்கா மாநிலத்தில் உள்ளது) . அவரது வாழ்வுமுறை மிகச் சிக்கனமானது. அவர் முதலீட்டைக் கொண்டு நிறுவனங்களைக் கொள்வனவு செய்வார். அவரது முதலீட்டுக் கொள்கையை மற்றவர்கள் “மதிப்பு முதலீடு” (Value Investing) என்று கூறுவார்கள். அவர் ஒரு நிறுவனத்தின் “மதிப்பை” பல பொருளாதார அடிப்படைகளையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் ஆராய்ந்து முதலீடு செய்வார். அப்படியான சில அடிப்படைகளை இந்தக் கட்டுரை மூலம் கூறலாமென்று இருக்கிறேன்.

  • விநியோகமும் தேவையும் அதன் சமநிலையும் (Supply Demand and their equilibrium): திறந்த சந்தையில், பொருட்களை உருவாக்கும் உற்பத்தியாளர்கள் தாங்கள் உருவாக்கிய பொருட்களையோ சேவைகளையோ விற்பதற்கு ஒரு விலையை வைத்திருப்பார்கள். அப்போது விநியோகம் பாவனையிலும் அதிகமானால் பொருளின் விலை மேலே கீழே போகச் சந்தர்ப்பம் அதிகம், கூடுதலாக விலை குறையும்.அதேபோல் பாவனை விநியோகத்திலும் அதிகமென்றால் விலை கூடும். இதனால் பொருட்களை உற்பத்தி செய்வோர் சந்தை அறிவை அறிந்து அதற்கேற்ப உற்பத்தி செய்வது அவசியம். நான் சிறுவயதில், போர்க்காலத்தில் வாழ்ந்த போது, இது ஒரு முக்கியமான  படிப்பாக இருந்தது. அப்போது எமது கடையின் வாடிக்கையாளர் குறைவான வருமானத்துடன் இருந்தார்கள். அதே நேரம், போரினால் பொருட்களின் விநியோகங்களும் குறைவாக இருந்தது. அத்தோடு பொருட்களை மற்றைய இடங்களிலிருந்து வாங்குவதும் கடினமாக இருந்தது. இவற்றையெல்லாம் அறிந்து ஆராய்ந்து பொருட்களை விற்க வேண்டியிருந்தது. இப்போதும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் விநியோகத்தின் சமநிலை குறையும் சந்தர்ப்பங்களில், நான் இந்தப் பாடத்தை எனது ஆரம்பத் தொழில் நிறுவனங்களில் பாவிக்க வேண்டி வந்தது. நான் இதைப்  பிரயோகித்து  பொருட்களின் விலைகளையும் ஆக்குவிக்கும் பொருட்களின் எண்ணிக்கைகளையும் திட்டமிட்டுச் செய்தோம்.
  • விளையாட்டு கோட்பாடும் அதன் பாவனையும் (Game Theory and Its applications):  பொருளியல் பாடங்களை  அதிகமாக பல்கலைக்கழகத்தில்  நான் எடுக்க முக்கியமான காரணம் “விளையாட்டுக் கோட்பாடு” (Game Theory) என்ற பகுதி. இந்தப் பாடத்தில் விநியோகம்/ தேவையைத் தவிர  வேறுசில மன விளையாட்டு தந்திரங்களையும்   பிரயோகிக்க வேண்டி வரும். இந்தத் தந்திரோபாயங்களை பொருளியலில் மட்டுமன்றி   அரசியல், சட்டம் என ஏனைய துறையினரும்  பயன்படுத்துவார்கள்.
  • நுண் பொருளியல்/பேரினப் பொருளியல் (Micro and Macro Economics): வணிகத்தைத் தொடங்க முதல் பொருளியலைப்பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். நுண் பொருளியலானது ஒரு தனிமனிதரின் பொருளியல் அனுபவங்கள், அவரது ஆதாயம் மற்றும் பரிமாற்றங்களைக் குறிப்பாகக் கொண்டது. அதே நேரம் பேரினப் பொருளியல் மக்களை ஒரு குழுவாகப் பார்த்து முடிவு எடுக்கப்படுவதைக் குறிக்கும். எனது பல்கலைக்கழக நாட்களில் முதலாவது பாடமாக நுண் பொருளியல் எடுத்தேன். அப்போது சமூகத்தில் ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகள் எப்படி சமூகத்தைத் தாக்குமென்று கற்றுக்கொண்டேன். அதை எனது ஆரம்பத் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களைப் பணியமர்த்தும்போது பாவனை செய்தேன். இதன் மூலம்  வாணிப நுணுக்கமுள்ளவர்களை அணிக்குச் சேர்க்க முடிந்தது.
  • சந்தர்ப்ப விலை (Opportunity Cost): இதன் நேரடி அர்த்தம் ஒரு முடிவு எடுக்கும்போது அந்த முடிவால் தள்ளப்பட்ட மற்ற முடிவுகளால் ஏற்படக்கூடிய இழப்பு. இதைத் தொடக்கத்திலிருந்தே நன்றாக ஆராய்ந்து செய்ய வேண்டும். இதை முறையாகப் பகுப்பாய்வு செய்து ஒரு முடிவின் நன்மை தீமைகளை அறிந்து  மேற்கொண்டால் சந்தர்ப்ப வலை  என்னும் பொறியிலிருந்து தப்பிக்கமுடியும். அது மட்டுமன்றி முறையாகப் பகுப்பாய்ந்து,  அதை எழுதி வைத்தால்,  சில சந்தர்ப்பங்களில் நாம்   பிரயோகித்த முறைமை பிழையாக   இருந்தாலும் கூட,  திரும்பவும் அதே தவறைச் செய்யாமல் வேலையை முடிக்கக் கூடியதாக இருக்கும்.

இப்படியான நிதி தொடர்பான அடிப்படைக் கொள்கைகளை சிறு வயதிலேயே இலங்கையில் படித்து அனுபவித்தமையானது, என்  வாழ்க்கையில்  பின்னைய நாட்களில் நான் வெற்றிகரமாக இருக்க முடிந்தது. வோரன் பஃபற் சின்ன வயதிலிருந்தே மிக்க சிக்கனமாக இருந்தவர். அவர் கோடீஸ்வரர் என்றாலும் இப்போதும்   பழைய காரைத்தான் வைத்திருக்கிறார். அவரது வீடும்   மிகச் சிறியது. அவர் நிதி முதலிடும் போது அந்த நிறுவனம் நீண்ட காலத்தில் எப்படி இருக்குமென்றும் அதனுடன் அந்த நிறுவனத்தின் மேலாளர்கள் கவனமாக நடத்துகிறார்களா என்று பார்த்தே முதலிடுவார். வாணிபம் தொடங்க நினைப்பவர்கள் இப்படியான நிதி தொடர்பான அடிப்படைகளைத் தெரிவதன் மூலம் தவறுகளைக் குறைத்து பெரும் வெற்றி பெறலாம். இது உங்கள் வெற்றிக்கு அடிக்கல்லாக இருக்கும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

16068 பார்வைகள்

About the Author

கணபதிப்பிள்ளை ரூபன்

கந்தரூபன் (ரூபன்) கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ் மாவட்டத்தின் புலோலியைச் சேர்ந்தவர். போர் காரணமாக ஆபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து பின் அங்கிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று இளமாணி, முதுமாணிப் பட்டங்களை இயந்திரவியலில் பெற்றுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பல புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி பல கோடி டொலருக்கு விற்றுள்ளார். மேலும் இவர் “Accidental Entrepeneur by Ruban” என்ற தலைப்பில் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளை தன்னுடைய அனுபவங்களை உள்ளடக்கி ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)