Arts
16 நிமிட வாசிப்பு

மகாசேனன் காலம் வரை கிழக்கு உரோகணம்

April 15, 2024 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

அனுராதபுரத்தை ஒரு அரசன் ஆளும் போது அவனுக்கு அடுத்து அரசராகத் தகுதி உடைய அரசரின் நெருங்கிய உறவினன் ஒருவன் ‘உபராசன்’ என்ற பெயரில் மகாவலி கங்கைக்கு கிழக்காக இருந்த உரோகணப் பகுதியை ஆள்வது வழக்கமாக இருந்தது. உரோகணத்தின் முதன்மையான நகரங்களாக சம்மாந்துறைப்பற்று தெற்கு தீகவாவியும், அம்பாந்தோட்டையின் மாகம்பற்று மாகாமமும் (இன்றைய கிரிந்த) திகழ்ந்தன. இவற்றில் ஒன்றையே அனுராதபுரத்தின் உபராசன் தன் ஆட்சித்தானமாகக் கொண்டிருந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் அனுரையின் மேலாதிக்கத்தை நீங்கி உரோகண அரசர்கள் சுயாட்சி செலுத்தியதும் நிகழ்ந்திருக்கிறது. 

பொமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் பொபி முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கீழைக்கரையின் தீகவாவி மாத்திரமன்றி, அதன் தென் மேற்கே அமைந்துள்ள விந்தனைப்பற்று வடக்கு (உகண) இராசக்கல் மலையைச் சூழ்ந்த பகுதி, வடக்கே அமைந்திருந்த ஏறாவூர்ப்பற்றுப் (செங்கலடி) பகுதி என்பனவும், அதன் தெற்கே அமைந்திருந்த பாணமைப்பற்றுப் பகுதியும் கூட குறிப்பிடத்தக்க மக்கள் தொகையினருடன் முக்கியமான குடியிருப்புகளாகத் திகழ்ந்திருந்தன. இங்கெல்லாம் வாழ்ந்த மக்களில் பலர் புத்த சமயத்தைத் தழுவியிருந்ததுடன், அச் சமயத் துறவிகளை நன்கு ஆதரிப்போராகவும் காணப்பட்டனர். பேரா. பத்மநாதனின் கருதுகோளின் படி, அங்கிருந்த நாகரில் பலர் தொடர்ந்தும் நாக வழிபாட்டினராகவும் சைவராகவும் இருந்ததுடன், கைத்தொழில்களும் நெற்செய்கையும் இப்பகுதிகளில் செழித்திருக்கிறது (பத்மநாதன், 2016:341 –  342). இந்த வளர்ச்சிக்கு தீகவாவிக்கு அருகே கல்லாறு, மட்டக்களப்பு வாவி என்பவற்றிலும் மாகாமத்தின் அருகே கிரிந்தி ஓயா – மாணிக்க கங்கையிலும் இடம்பெற்று வந்த வெளிநாட்டு வணிகமும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். 

தீகவாவி பின்னாளைய கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் ‘தீகவாபிமண்டலம்’ என்றே சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் முதலாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் தீகவாவிக்குத் தெற்கே வேகம்பற்று தெற்கு (தமண) பகுதியிலுள்ள கிங்குராணை, மலையாளிக்கண்டம், எக்கலாறு ஆகிய இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன (Dias, 1991:4). இந்த மண்டலத்தின் சரியான எல்லைகள் இன்று அறியக்கூடவில்லை. 

ஆனால் சாகாமத்திலுள்ள நூறானைக்கண்டக் கல்வெட்டு சத்தா திசையன் காலத்தில் அமைக்கப்பட்ட விகாரம் பற்றிச் சொல்வதால், சத்தா திசையனின் காலத்தில் தீகவாவி மண்டலத்தின் ஆட்சிப்பரப்பு அக்கரைப்பற்று தெற்கு (திருக்கோவில்) சாகாமம் வரை நீடித்தது என்பதை உறுதிப்படுத்தலாம். சாகாமத்துக்கு அருகே தான் பத்து உடன்பிறந்தோர் குல இளவல் உபராசன் நாகனின் கல்வெட்டுப் பொறித்த மொட்டையாகல் கல்வெட்டு பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

dynasty

நாம் மீண்டும் விட்ட இடத்திலிருந்து வரலாற்றுக்குத் திரும்புவோம். வட்டகாமணியின் மைந்தனான சோரநாகன் அனுராதபுரத்தை ஆளும் போது (பொமு 62 – 50), அவனது அரசி அனுலா தேவியால் (பொமு 50 – 41) நஞ்சூட்டிக் கொல்லப்பட்டான். பதவியிலும் சிற்றின்பத்திலும் திளைத்துவந்த அரசி அனுலை அடுத்தடுத்து ஆடவரை தன் அழகால் மயக்கி அரியணையில் அமர்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். ஒருவனை கணவனாக வரித்திருக்கும் போதே இன்னொருவன் மீது மையல் கொண்டு முந்தையவனை நஞ்சூட்டிக் கொன்று அடுத்தவரை அரியணையில் பொம்மை அரசனாக அமர்த்தி, அனுராதபுரத்தை தானே ஆண்டு கொண்டிருந்தாள் (மவ. 16 –  27).   

வட்டகாமணியின் அண்ணனான கல்லாட நாகனின் மகன் குடாக்கண்ணன் அபயன், அனுலையின் ஆட்சியில் அவளுக்கு அஞ்சி உரோகணத்திற்குத் தப்பியோடி அங்கேயே வாழ்ந்து வந்தான் (மவ.28 – 29). அவன் அனுரை மீது படையெடுத்து அனுலா தேவியைக் கொன்று முடிசூடும் வரை (பொமு 41 ஆம் ஆண்டு) தீகவாவி மண்டலத்திலேயே உபராசனாக வாழ்ந்து வந்திருக்கிறான். இராசக்கல் மலையில் தன் சிற்றப்பன் இலஞ்ச திசையன் கட்டிய இராசக்கல் மலையில் இருந்த விகாரத்துக்கு அவன் திருப்பணி செய்ததுடன், அவனால் ‘புடகண |கமணி தி`ச’ என்ற பெயரில் ஒரு பிராமிக் கல்வெட்டும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது (Ranawalla, 2018:66-67).  

குடாக்கண்ண திசையனின் மகன் உபராசன் நாகன் ‘கபடுகம்’ எனும் நீர்த்தேக்கத்தை ‘கும்பிளாபிதிச’ விகாரத்துக்கு ஒப்படைத்ததாக இராசக்கல் மலையின் இன்னொரு கல்வெட்டுச் சொல்லும். இவனை குடாக்கண்ணனின் இளைய மகனான அனுரை அரசன் மாதாடியன் மாநாகனாக (மஃகாடாதிக மஃகாநா|க, Mahādāthika Mahānāga) இனங் காண்பர். இவன் அனுரையை ஆள முன்னர் உரோகணத்தை உபராசனாக ஆண்டு வந்ததுடன், அக்காலத்தில்  இவன் பாணமைப்பற்று பொத்துவில்லின் அருகே இருந்த ‘ஃகுவாசகண்ணிகா’ (Huvāca kannikā) எனும் பகுதியில் சூலநாக பர்வதம் எனும் விகாரத்தை அமைத்திருந்தான் (மவ. 34:90 – 91). 

மாதாடியன் மகாநாகனின் மகன் வழிப் பேத்தி சீவள்ளிக்குப் பிறந்த ஈழநாகன் என்பவன் பற்றிய தகவல்கள் திசமாராமத்தில் (தி`ச்`சமஃகாராம – Tissamahārāma) கிடைக்கின்றன. ஈழநாகன் ‘இலம்பகர்ணர்’ எனும் வம்சத்தாருடன் முரண்பட்டு மேற்குக்கரைக்கு (சேர நாட்டுக்கு) தப்பிச் சென்று விடுகிறான். அனுரையை இலம்ப கர்ணர் ஆளும் போது, சேரநாட்டில் படை திரட்டி, உரோகணத்தின் சக்கரசொப்ப துறைமுகத்தில் வந்திறங்கும் ஈழநாகன், இலம்பகர்ணருடன் போரிட்டு வென்று அனுரையில் முடிசூட்டினான்.

வேகம்பற்றின் முவாங்கல்லிலுள்ள முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று ‘சப’ என்ற அரசனின் மைந்தன் திசைய மகாராசன் என்பவன் தீகவாவியை அண்டிய அப் பகுதியை ஆண்டு கொண்டிருந்ததாகச் சொல்லும் (Ranawalla, 2018:70). ‘சப’ என்பதை ‘சுப’ என்பதன் ஈழப்பாகத வடிவம் எனக் கொண்டால், ஈழநாகனின் மகனான யசலாலக திசையனைக் கொன்று அனுராதபுர அரசைக் கைப்பற்றிய சுபமகாராசனே (60-65) இவன் எனலாம். அது உண்மையாயின் வழமைப்படி, சுபமகாராசன் அனுரையில் அரசாண்ட போது, தன் மகன் திசையனை தீகவாவியில் உபராசனாக நியமித்திருக்க வேண்டும். 

அனுரையை சுபமகாராசன் ஆண்டு வரும்போது (பொபி 59 – 65) அவனை அடுத்து ‘வசபன்’ என்ற பெயருடைய ஒருவனே அரசில் அமர்வான் என்ற எதிர்வுகூறல் சொல்லப்பட்டதால், அவன் நாட்டிலுள்ள எல்லா வசபரையும் கொல்ல ஆணையிடுகிறான். இதையறிந்து இலம்பகண்ண குலத்தைச் சேர்ந்த வசபன் என்பான் (67 – 111) உரோகணத்துக்குத் தப்பிச் சென்று அங்கு ஈராண்டுகள் தங்கியிருந்து படை திரட்டி வந்து சுபனை வென்று ஆட்சியைக் கைப்பற்றுகிறான். 

வசபன் உரோகணத்தில் தீகவாவியை அண்டிய பகுதியிலேயே தங்கியிருந்தான் என்பதற்கு கீழைக்கரையில் கிடைக்கும் இரு கல்வெட்டுகள் சான்றாகின்றன. ஏறாவூர்ப் பற்றுக் காசிமோட்டைக் கல்வெட்டு வசப இராசனின் கீழ் உரோகணத் துணைப் போசகன் (ரோகண சுள்ளபோ|சிக, Rōhana cullabōjika) என்ற பதவி வகித்த ‘அமைச்சன் ஃகோணையன்’ என்பவனின் மகனான தேவநாகன் ப`ச்`சிமநகரம் (passimanagara, மேற்கு நகரம்) எனும் பகுதியை ஆண்டு வந்ததைச் சொல்கிறது. இன்னொரு கல்வெட்டு அம்பாறை கொன்றைவட்டுவானில் கிடைத்தது. சுபமகாராசனின் மைந்தன் திசையனை வசபன் தீகவாவியிலிருந்து அகற்றியிருக்கலாம் என்பதற்கு இக்கல்வெட்டை ஒரு சான்றாகக் கூறலாம்.

வசபனின் பேரனே சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டதாகச் சொல்லப்படும் முதலாம் கயவாகு (114 – 136). அவனது ஆட்சிக்காலத்தில் பத்தினி வழிபாடு இலங்கைக்கு அறிமுகமானது என்பர். எனினும் இதற்கு தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை. அவனுக்குப் பின்னர் அவன் மகன் வழிப்பேரன் இரண்டாம் பாதிய திசையனும் (143-167) அவனுக்குப் பின்னர் பாதிய திசையன் தம்பி இளைய திசையனும் (167 – 186) ஆண்டனர். சிங்களக் கல்வெட்டுகள் இளைய திசையனை மலுதிச என்றும் பாளி நூல்கள் அவனை ‘கனித்த திச’ என்றும் குறிப்பிடுகின்றன.

இளைய திசையன் சற்று பலம் வாய்ந்த ஆட்சியாளனாகவே இனங் காணப்படுகின்றான். இவனது கல்வெட்டுகள் தம்புள்ளை, பொலனறுவை, அம்பாந்தோட்டைப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன. கீழைக்கரையில் பாணமைப்பற்றின் பொத்துவில் லைனாமலையும் வாகூரை நெலும்பற் பொக்குணையும் இவன் கல்வெட்டுக் கிடைத்த முக்கியமான இடங்கள் ஆகும். 

பொத்துவிலுக்கு மேற்கே உள்ள லைனாமலையில் இளைய திசையனின் கல்வெட்டுகள் இரண்டு பொறிக்கப்பட்டுள்ளன. ‘காலராம ராயரையன்’ குளத்தை விலை கொடுத்து வாங்கிய மன்னன் அருகில் ஊரொன்றை உருவாக்கி குளத்துக்கான நீர் வரியை விகாரத்துக்கு காணிக்கையாகக் கொடுத்தான். சீபருவத மடத்திலிருந்த துறவிகளின் உணவுக்காக இது பயன்பட்டது. இந்தக்குளம் ஃகுவாவ கண்ணிகா பகுதியை நாகன் முல்லையன் ஆண்டபோது ரதியன் சோணையன் தேவையன் என்பவனால் கட்டப்பட்டது. 

அதன் கீழுள்ள இளைய திசையனின் இன்னொரு கல்வெட்டின் படி அவனால் கிரிகாமவாவி, மல்லகேதகம் எனும் வயல்வெளி, சோரவாவி எனும் குளம் என்பன சீபருவதத்து மடத்திலுள்ள பிக்குகளுக்கு உணவுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது (Paranavitana, 2001:137-139).

ruhunu

பாணமைப்பற்றின் தென்பகுதியில் பூமுனைக் காட்டில் வாகூரைக்கு அருகே நெலும்பற் பொக்குணை என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டில் நாக மகாராசாவின்  மைந்தனான இளைய திசைய மகாராசன், ஆரிய வருசச் சடங்குக்காக மகாநகரப் புறக் கால்வாய்க்கான நீர் வரியை நீக்கியமை சொல்லப்படுகின்றது (Paranavitana, 2001:148). ஆரிய வருசச் சடங்கு என்பது மழை பொழிவதற்கான புத்தச் சடங்கு. வாகூரைக்கு அண்மையில் புதிதாக நகரொன்றை உருவாக்கி அந் நகரின் நீர் வரியை புத்த மடத்துக்கு அவன் கொடுத்திருக்கலாம்.

இளைய திசையனுக்குப் பின்னர் ஒரு நூற்றாண்டு காலம் கீழைக்கரை அல்லது தீகவாவியின் நிலை என்னவாக இருந்தது என்ற விபரம் அறியக் கூடவில்லை. ஆனால் இடைப்பட்ட காலத்தில் புத்த சமயத்துக்கு இணையாக சைவமும் சமணமும் கீழைக்கரையில் தழைத்தது என்பதை அறிய முடிகின்றது. நாகரின் தமிழி வடிவம் பொறித்ததாக பேரா.சி. பத்மநாதன் இனங்காணும் கொட்டியாரப்பற்றில் கிடைத்த கரைசையம்பதிச் சிவலிங்கம் பொபி இரண்டாம் நூற்றாண்டுக்குரியதே. போரதீவுப்பற்று வெல்லாவெளியில் சமணப் பெண் துறவியரின் குகைகள் அமைக்கப்பட்டு பேணப்பட்டன. 

ஆனால் அடுத்த நூற்றாண்டில் அனுரையில் பதவியேற்ற மகாசேனன் (276-303) புத்த சமயத்தின் மகாயானக் கிளையைக் கடைப்பிடித்ததுடன் தேரவாத புத்த சமயத்தையும் சைவம் முதலிய ஏனைய சமயங்களையும் கடுமையாக ஒடுக்கினான். அவனது அடக்குமுறை தாங்கொணாது அனுராதபுரத்தின் மகாவிகாரத்தில் தங்கியிருந்த புத்தத் துறவியர் இடம்பெயர்ந்து உரோகணத்துக்குக் குடிபெயர்ந்தனர். உரோகணத்தின் திருக்கோணமலைக் கோவிலும், ஏரகாவில்லில் அமைந்திருந்த கோவிலும், பிராமணன் கலந்தன் ஊரிலிருந்த கோவிலும் அவனால் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் விகாரங்கள் எழுப்பப்பட்டன (மவ. 37 – 41).

மகாயானம் மகாசேனனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நெறியன்று. அது முன்பும் இங்கிருந்தது. மகாசேனனுக்கு சில தசாப்தங்கள் முன்பு ஆண்ட வியவகாரிக திசையன் (209-231) காலத்தில் அவன் வேதுல்ய (வைதூலியம் – மகாயான புத்தம்) கொள்கையை ஒடுக்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவம்ச உரைநூல் தெளிவாகவே சிவலிங்கம் அமைந்த ஆலயங்கள் உட்பட புத்தத்தைக் கடைப்பிடிக்காதோரின் கோவில்கள் மகாசேனனால் சிதைக்கப்பட்டன என்று குறிப்பிடுகின்றது (Geiger, 2000:270). ஆனால், மகாசேனனின் ஆட்சியில் தேரவாதப் பிக்குகள் உரோகணத்துக்கு அடைக்கலம் தேடிச் சென்றதும், அங்கிருந்த (சைவக்?) கோவில்கள் இடிக்கப்பட்டதும் சைவத்துக்கும் தேரவாதத்துக்கும் ஆதரவான சக்தியொன்று உரோகணத்தில் நிலைத்திருந்தது என்று ஊகிக்க வைக்கின்றது. அது பற்றிய குறிப்பெதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அந்தச் சக்தி புத்தமும் சைவமும் சார்ந்திருந்த பழைய நாகக் குடிகளின் சிற்றரசுகளாகலாம்.

ஆனால், மகாயான புத்தத்தைச் சார்ந்த மகாசேனன் திருக்கோணேச்சரத்தை இடித்த கதை வாய்வழியாக் கடத்தப்பட்டு உருத்திரிந்து மட்டுக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் பதிவாகி இருக்கிறது. திருக்கோணமலைத் தொன்மங்களில் குளக்கோட்டனாக இனங்காணப்பட்ட ஆடகசவுந்தரியின் நாயகனாக இந்த மகாசேனனை அடையாளப்படுத்திய அந்நூல், அவன் கடைப்பிடித்த வைதூலியத்தை (மகாயான புத்தம்) சைவ சமயப் பிரிவாகப் புரிந்து கொண்டதுடன், அவன் திருக்கோணேச்சரத்துக்கு திருப்பணிகள் செய்தான் என்றும் கூறுகின்றது (கமலநாதன் & கமலநாதன், 2005:22-23). 

mahasenan

பாளி வம்ச இலக்கியங்களில் மகாசேனனுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. முதலாவது, அவன் பழுத்த வைதூலியன். எனவே சைவத்தையும் தேரவாத புத்தத்தையும் ஒடுக்கினான். இரண்டாவது, அவன் நீர்ப்பாசனத்தை வளப்படுத்துவதில் இணையற்ற சாதனைகள் படைத்தவன். இந்த இரண்டுமே குழப்பகரமான நிலையில் மட்டுக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் பதிவாகியுள்ளன. முதலாவது விடயம், அவன் வைதூலியன் என்பதால் புத்தாலயங்களை இடிப்பித்தான் என்றும், இரண்டாவது விடயம், அவனே மணிச்சிறை வாவி (இன்றைய மின்னேரி) உள்ளிட்ட நீர்நிலைகளை அமைத்தான் என்றும், கந்தளாய்க் குளத்தையும் கட்டியவன் அவனே என்கிறது பூர்வ சரித்திரம்.

பூர்வ சரித்திரம் குறிப்பிடும் இன்னுமிரு விடயங்கள் சுவையானவை. கலிங்கத்திலிருந்து இலங்கைக்கு வந்து அனுரையை ஆளும் தத்தீசனோடு ‘சகோதர முகமன்’ உரைத்து உறவாடுகிறான் மகாசேனன். மகாவம்சத்தின் படி தத்தீசனும் (|சேட்டன் திசையன், Jettha Tissa, 266 – 276) மகாசேனனும் உடன்பிறந்தோர்; கோதாபயனின் மைந்தர்கள். இன்னொரு விடயம், மகாசேனன் இடித்தழிப்பித்த புத்த விகாரங்களுக்கு பகரமாக தத்தீசன் ஒவ்வொரு விகாரைத் தலத்திலும் கதிரேசன் ஆலயம் இயற்றுவிக்கிறான். சிங்கள வரலாற்றாசிரியர்கள் இலங்கையின் முருக வழிபாட்டுக்கு மகாசேனனிலிருந்தே ஆரம்பம் தேடுவது இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது. அத்துடன், மகா விகாரத்தை இடித்து வைதூலிய விகாரங்களை அமைக்கும் மகாசேனன் பிற்காலத்தில் தன் நண்பன் கோட்டக அபயனுக்காக மனம் மாறி மீண்டும் தேரவாத புத்த விகாரங்களை மீளக்கட்டியதை மகாவம்சம் சொல்லும்.  ஒரு வேளை தேரவாத விகாரங்களுடன் சேர்த்து, தான் முன்பு இடித்த சைவக் கோவில்களையும் மகாசேனன் மீளக்கட்டினானா, அதுவே பூர்வ சரித்திரத்தில் அவன் கோணேச்சரத்துக்கு திருப்பணி செய்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பது சுவாரசியமான ஒரு வினா. 

அடிக்குறிப்புகள்

1. siddha kakavana tisa maha rajaha puti tisa maha raji vejagala vihara karaya avijavaya dini maha parika ceyata bahidiya viharahi dini biku saga hata.

சித்||த ககவன தி`ச மஃகர|சஃக புதி தி`ச மஃகர|சி வெ|ச|கல விஃகர அவி|சவய |திணி மஃக பரிக செயத |பஃகி||தியவிஃகரஃகி திணி |பிகு ச|க ஃகத.

சித்தம். காக்கைவண்ண திசைய மகாராசனின் மைந்தன் திசைய மகாராசனால் வைத்தியக்கல் விகாரைக்காக செய்த அவி|ச வாவியை மகா பரிகார சைத்தியத்துக்கும் |பஃகிடிய (bahidiya) விகாரத்துக்கும் செய்து பிக்கு சங்கத்துக்கு வழங்கினான். (Gamage, 2020:57)

வைத்தியக்கல் – வெ|ச|கல, (Vejagala), அவி|சவய (Avija vaya) இன்றுள்ள சாகாமக் குளத்தைக் குறிக்குமெனின் அதை அமைத்தவன் சத்தா திசைய மன்னன் என்றாகும்.

2. இலஞ்ச திசையன் ‘கிரிகும்பீள’ எனும் விகாரத்தை தீகவாவியில் அமைத்ததாக மகாவம்சம் பாடுகின்றது (33:14-15) இராசக்கல் மலையிலிருந்த விகாரமே “கிரிகும்பீள” (சங்கதம்: |கிரிகும்|பீர, girikumbīra, முதலைமலை) என்பது அங்கு கிடைத்த குடாக்கண்ண திசையனின் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகின்றது.

3. இந்தத் துறைமுகம் எங்கிருந்தது என்று தெரியவில்லை. ஈழநாகனை “அலுநாகன்” அல்லது “எலுநாகன்” என்று குறிப்பிடும் கல்வெட்டுகள் திசமாராமத்தில் கிடைத்துள்ளதால் அது தென்னிலங்கையில் எங்கோ அமைந்திருக்கக்கூடும். 

4. வசபன் – வ்ரு_^ச||பன், Vrsbhan, காளை போன்றவன்.

5. பச்சிமநகரம் – மேற்கு நகரம். இது முந்தனை ஆற்றுக்கு மேற்கிலிருந்த ஏதும் நகரமா என்பது தெரியவில்லை. சுல்ல ரோகண போ|சிக (Culla Rohana Bojika) 

6. பாதிகன், வட. |ப்ராதிக, Bhratika, உடன்பிறந்தான். இளைய திசையன், பாதிய திசையனுக்கு இளையவன் என்பதால் மூத்தவன் உடன்பிறந்தான் என்று அழைக்கப்பட்டிருக்கக்கூடும். அப்பெயரைப் பெற்றிருக்கக்கூடும். இவன் இரண்டாம் பாதியன். முதலாம் பாதியன் குடாக்கண்ண திசையனி மூத்த மகன். குடாக்கண்ணனின் இரு மைந்தரும் திசையன் என்றே அறியப்பட்டனர். அவர்களில் இளையவனான மாதாடியனே புகழ்வாய்ந்தவன். இளையவர் மூத்தவரை விடப் புகழுறும் போது இளையவர் ஆட்சிக்காலத்தில் மூத்தவரை இவ்வாறு மரியாதையாக “உடன்பிறந்தார்” என்று அழைப்பது வழக்கம் போலும்.

7. மலு/மள – இன்றைய சிங்கள மல்லி (தம்பி). கனித்த – வடமொழி கனி`ச்ட (Kanistha)

8. இந்த ரதியன் (வடமொழி: ரா^ச்ட்ரி_ய, Rastrya) என்ற சொல், தமிழ் நாடனுக்குச் சமனானது. கண்ணிகை, பழைய நிருவாகப்பிரிவுகளுள் ஒன்று. ஃகுவாவ (Huvava) என்பது மகாவம்சத்தில் ஃகுவாச (Huvaca) என்று இடம்பெற்றுள்ளது (சங்கதம்: சுவாப, நல்ல விதைப்புக்குரிய). இதிலிருந்தே இன்றுள்ள சிங்கள ‘ஊவா’ என்ற சொல் வந்தது. எனினும் இன்றைய ஊவா எனும் நிருவாகப்பகுதிக்கும், இக்கல்வெட்டிலுள்ள ஃகுவாவுக்கும் தொடர்பில்லை.

9. திருக்கோணமலையிலிருந்த கோவில் திருக்கோணேச்சரமாகலாம். ஏனைய இரண்டும் அடையாளம் காணப்படவில்லை. ஏரகாவில்லை ஏறாவூர் என்பர். அதனருகே காசிமோட்டைப் பகுதி வசபன் காலத்திலேயே குடியிருப்பாக இருந்ததால் அதற்கு வாய்ப்புண்டு. அல்லது ஏரகாவில் என்பதை தீகவாவிக்கு அருகே எரகம என்று முன்பு அறியப்பட்ட இறக்காமமாகவும் ஊகிக்கலாம். 

உசாத்துணை

  1. கமலநாதன், சா.இ., கமலநாதன், க. (2005). மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், கொழும்பு : குமரன் புத்தக இல்லம். 
  2. பத்மநாதன், சி. (2016). இலங்கைத் தமிழர் வரலாறு: கிழக்கிலங்கையில் நாகரும் தமிழரும் (கிமு 250 – கிபி 300). கொழும்பு: இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  3. Dias, M. (1991). Epigraphical Notes No. 1 – 18, Colombo: Department of Archaeology.
  4. Gamage, D.P. (2020). Epigraphical Notes No. 22 – 23, Colombo: Department of Archaeology.
  5. Geiger, W. (2000). The Mahavamsa or the Great Chronicle of Ceylon (Mabel Haynesbode Trans), New Delhi- Madras: Asian Education Services. 
  6. Paranavitana, S. (2001), Inscriptions of Ceylon, Volume II, part II, (Malini Dias Ed.), Colombo: Department of Archaeology.
  7. Ranawella, G.S. (2018). History of the Kingdom of Rohana: From the Earliest Times to 1500 AC. Colombo: Ministry of Higher Education and Department of Archaeology.

இவ்வத்தியாயத்தில் பிறமொழி ஒலிப்புக்களை சரியாக உச்சரிப்பதற்காக, ISO 15919 ஐத் தழுவி உருவாக்கப்பட்ட தமிழ் ஒலிக்கீறுகள் (Diacritics) பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஒலிக்கீறுகளின் முழுப்பட்டியலை இங்கு காணலாம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3874 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (6)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)