Arts
13 நிமிட வாசிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் பங்குபற்றலும் வாய்ப்புக்களும்

July 14, 2023 | Ezhuna

ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி என்பது அந்நாட்டின் நிலைபேறுகைக்கு ஸ்திரத்தினை வழங்குகின்றது. இலங்கையில் உள்ள வளச் செழிப்பு நாட்டின் அபிவிருத்திக்கு பெரும்பங்காற்றக்கூடியது. இலங்கையின் கால்பங்குக்கும் அதிகமான நிலப்பரப்பை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன. இந்தவகையில் இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிலப்பரப்பு, அதில் அடையாளப்படுத்தக்கூடிய வளங்கள் அல்லது இதுவரை கண்டறியப்பட்ட வளங்கள் தொடர்பாக தெளிவுடுத்துவதாகவும், அந்த வளங்களின் இப்போதைய பயன்பாடற்ற முறைமையை மாற்றியமைத்து உச்சப்பயனைப் பெறுதல், அதனூடே வடக்கு – கிழக்கின் விவசாயத்துறை, உட்கட்டமைப்பு, கடல்சார் பொருளாதாரம் என்பவற்றை அபிவிருத்தி செய்வது பற்றியும் ‘வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர்ப் பொருளாதார அபிவிருத்தியும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடர் விளக்குகின்றது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் மற்றுமொரு வாய்ப்புமிக்க வளமாகக் காணப்படும் கால்நடைத் துறையில், இப்பிரதேசத்தில் காணப்படும் நிலவளம் முக்கிய ஆதாரமாகக் காணப்படுகிறது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 15.2 சதவீதத்தைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினதும் 13.5 சதவீதத்தைக் கொண்ட வடக்கு மாகாணத்தினதும் நிலப்பரப்புக் கூட்டுத்தொகை 28.7 வீதமாகக் காணப்படுகின்றது. இந்த அதிகளவான நில அமைவின் காரணமாக திறந்தமுறைக் கால்நடை வளர்ப்புப் பாரம்பரியத்தைக் கொண்ட கால்நடைத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. கால்நடை வளர்ப்புத் துறையின் ஆதாரத்துடன் மேலதிக வருமானத்தைக் பெற்றுக் கொள்ளும் வாழ்வாதார வாய்ப்பு ஏற்படுவதனால் இத்தொழில்துறை ஒரு கவர்ச்சிமிக்க வாழ்வாதார மூலமாகச் செயற்பட்டு வருகிறது. இத்துறையின் அபிவிருத்தியிலும் ஆக்கத்திறனிலும் அரசு, மற்றும் அரசுசாரா முதலீடுகளின் காரணமாக துறைசார் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடைத்துறையின் பிரதான வகிபாகத்தில் மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, எருமை வளர்ப்பு, கோழிவளர்ப்பு என்பன பாரிய அளவிலும் பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு என்பன குறைந்த மட்டத்திலும் இடம்பெற்று வருகின்றன. நாட்டின் போசாக்கு மட்டத்தை உயர்ந்த தரத்தில் பேணுவதற்கும் போசாக்கு உணவை வழங்குவதற்கும், புரதம் நிறைந்த நிறை உணவான பால், இறைச்சி, முட்டை என்பவற்றுடன் இதனோடு தொடர்புடைய இணை உணவு வகைகளும் பங்களிப்புச் செய்வதுடன், தாவர உணவை உண்போரின் பிரதான உணவாக பாலும் பால் சார்ந்த உணவுகளும் காணப்படுகின்றன. எருது மாடுகளிலிருந்து கிராமிய மட்டத்தில் இழுவைச்சக்தி பெற்றுக் கொள்ளப்படுவதுடன் நிலச்செழிப்பை பாதுகாப்பதற்கும் பேணுவதற்கும் சூழலுடன் நட்புக் கொண்ட இயற்கை உரமும் பெறப்படுகிறது.

கால்நடை வளர்ப்பானது சமூக, கலாசார, பாரம்பரியப் பெறுமதிகளுடன் மட்டுமன்றி மிக வறிய குடும்பங்கள் எதிர்நோக்கும் எதிர்பாராத ஆபத்துக்களின் போதெல்லாம் காசாக்கக்கூடிய பணச்சொத்தாகவும் இருந்து வருகின்றது. அத்துடன் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பதனிடப்படாத தோலானது, தோல் கைத்தொழிலுக்கான பிரதான மூலப்பொருளாகாவும் இருந்து வருகிறது. இந்தக் கைத்தொழில் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பும் அதிகளவானதாகவே காணப்படுகின்றது. இலங்கையின் மொத்தப் பால் உற்பத்தியில் 17 சதவீதத்தினை கிழக்கு மாகாணமும் 12 சதவீதத்தினை வடக்கு மாகாணமும் வழங்கி வருவதுடன், நாட்டின் 30 சதவீதக் கால்நடையை கிழக்கு மாகாணமும் 24 சதவீதக் கால்நடையை வடக்கு மாகாணமும் உள்ளடக்கி, மொத்தக் கால்நடையில் 54 சதவீதப் பங்கை  வழங்கி வருகின்றன.

மாடு வளர்ப்பு

free ranged cattle

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் கால்நடைத்துறையின் பிரதான பங்கை வகிக்கும் துறையாக மாடுவளர்ப்புக் காணப்படுகின்றது. அதிலும் பண்ணைமுறை வளர்ப்புக்குப் பதிலாக திறந்தவெளி மாடு வளர்ப்பே பிரதான இடத்தைப் பெறுகிறது. தரிசாக விடப்பட்டுள்ள நிலங்களிலும் ஒதுக்கீட்டு நிலங்களிலும் மேய்ச்சலுக்காக திறந்த  முறையில் வளர்க்கப்படும் மாடுகள், அதிகளவில் பாரம்பரிய இனங்களாகவும் உள்ளூர் வர்க்கங்களாகவும் காணப்படுகின்றன. கால்நடைகளைத் தரமுயர்த்தும் திட்டம் நடைமுறைப்படுத்தாத காரணத்தினால், தேறிய வருவாய் மிகக் குறைந்த வளர்ப்பு முறையாகவே இது இருந்து வருகிறது. ஒப்பீட்டு அடிப்படையில் பராமரிப்புச் செலவு குறைந்த வளர்ப்பு முறையாக இருந்தபோதும் அடிக்கடி விபத்துக்குள்ளாதல், காட்டு மிருகங்களின் தாக்கத்துக்குள்ளாதல், களவுபோதல் போன்றன காரணமாக எதிர்பாராத இழப்பைப் பெற்றுவருகின்றது. வளர்ப்பு மாடுகளின் எண்ணிக்கையை ஆராயும்போது கிழக்கு மாகாணத்தில் கலப்பின மாடுகள் 129,153 ஆகவும், உள்ளூர் இன மாடுகள் 409,761 ஆகவும், மொத்தமாக 538,914 மாடுகள் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் கலப்பின மாடுகள் 192,907 உம், உள்ளூர் மாடுகள் 210,548 உம் என மொத்தமாக 413,455 மாடுகள் காணப்படுகின்றன. இவ்வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 952,369 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மாடுகளில் வடமாகாண மாவட்டங்களான வவுனியாவில் 101,947 மாடுகளும் முல்லைத்தீவில்  88,595 மாடுகளும் மன்னாரில் 80,883 மாடுகளும் கிளிநொச்சியில் 53,215 மாடுகளும் யாழ்ப்பாணத்தில் 76,815 மாடுகளும், கிழக்கு மாகாண மாவட்டங்களான திருகோணமலையில் 105,272 மாடுகளும் மட்டக்களப்பில் 310,641 மாடுகளும் அம்பாறையில் 123,001 மாடுகளும் வளர்க்கப்படுகின்றன.

கலப்பின மாடுகள், கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்கைமுறை சினைப்படுத்தல் மூலமாகவும் உள்ளூர் பண்ணையாளர்களுக்கு நல்லினக் காளைகளை வழங்குவதனூடாகவும் வேறு மாகாணங்களிலிருந்து கலப்பின மாடுகளை இடமாற்றுவதனூடாகவும் பெருக்கப்பட்டு வருகின்றன. இவ்வகை இனங்களில், எமது இரு மாகாணங்களுக்கும் பொருந்தக்கூடிய வர்க்கங்களாக கேர்சி கலப்பினங்களும், சகிவால் கலப்பினங்களும் காணப்படுகின்றன. கலப்பின மாடுகளிலிருந்து அதிகளவில் பாலினைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் இவை வீடுகளிலேயே வளர்ப்புச் செய்யப்படுவதால் எதிர்பாராத இழப்புக்கள் குறைவாக இருந்துவருகிறது. உணவு, மருந்து ஆகியவை முறையாக விநியோகிக்கப்பட்டு உரிய காலத்தில் சினைப்படுத்தும் போது நல்ல பயனைத் தரக்கூடியதாகவுமுள்ளது. இதற்கென மேய்ச்சல் தரையின் தேவைப்பாடும் இல்லை என்பதனால் நிலப்பரப்புக் குறைந்த பண்ணையாளர்களும் இவ்வளர்ப்புக்குப் பொருத்தமானவர்கள் ஆகின்றனர். நல்லினப் புற்களை சிறிய தரைப்பகுதியில் வளர்ப்பு செய்வதனூடாகவும் பண்ணை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு பதனிடப்பட்ட புல்லினை வழங்குவதனூடாகவும் வீட்டுக் கழிவுகள் மற்றும் சூழலிலுள்ள பொருத்தமான இலை, குழைகளை வழங்குவதனூடாகவும் பலர் இவ்வளர்ப்பு முறையில் வெற்றிகரமாகச் செயற்பட்டு, பண்ணை அடிப்படையில் அதிகளவில் ஈடுபடும் பண்ணையாளர்களாக மாறி வருகின்றனர்.

மொத்தப் பால் நிரம்பலில் இப் பகுதியினரே அதிகளவிலான பாலினை வழங்கி பங்களித்து வருகின்றனர். வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கால்நடை வளர்ப்பில் பால் உற்பத்தியே பிரதான பங்கு வகிக்கிறது. வடக்கு மாகாணத்தின் மொத்த மாடுகளில் 110,940 மாடுகளும் கிழக்கு மாகாணத்தின் 101,726 மாடுகளும் பால் தரும் மாடுகளாக காணப்படுகின்றன. அம்பாறையில் 47,470 மாடுகளும் மட்டக்களப்பில் 32,966 மாடுகளும் வவுனியாவில் 28,240 மாடுகளும் யாழ்ப்பாணத்தில் 25,311 மாடுகளும் முல்லைத்தீவில் 22,468 மாடுகளும் மன்னாரில் 22,406 மாடுகளும் திருகோணமலையில் 21,290 மாடுகளும் கிளிநொச்சியில் 12,569 மாடுகளும் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. மொத்தப் பால் உற்பத்தி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் நாள் ஒன்றுக்கு 154,505 லீற்றர் பாலும் வடமாகாணத்தில் 114,045 லீற்றர் பாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தியளவில் கிழக்கு மாகாணத்தில் 18,920 லீற்றர் பால் குடும்ப நுகர்வுக்கும் 22,210 லீற்றர் பால் உள்ளூர் விற்பனைக்கும் பயன்படுவதுடன் நாளாந்தம் 101,636 லீற்றர் பால் ஏனைய பகுதிகளுக்கும் சென்று சேர்கிறது. மில்கோ, நெஸ்லே, கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும்  தனியார் துறையினர் ஆகியோரால் இவ்விரு மாகாணங்களிலும் பால் கொள்வனவு செய்யப்படுகிறது.

ஒப்பீட்டு அடிப்படையில் ஆராயும் போது 452,369 மாடுகள் காணப்படும் இவ்விரு மாகாணங்களிலுமிருந்து 10 சதவீதமான மாடுகளிலிருந்து மட்டுமே பால் உற்பத்தி பெறப்படுகிறது. மாடு வளர்ப்பு முறையை வாழ்வாதாரத் தொழிலாகச் செய்துவரும் கால்நடைப் பண்ணையாளர்களை நோக்கும் போது வட மாகாணத்தில் 05 மாடுகளுக்கும் குறைவாகக்  கொண்டவர்கள் 49,777 பேரும் கிழக்கு மாகாணத்தில் 30,388 பேரும் காணப்படுவதுடன், கிழக்கு மாகாணத்தில் 05 தொடக்கம் 15 மாடுகளைக் கொண்டவர்கள் 18,910 பேரும் 15 தொடக்கம் 25 மாடுகளைக் கொண்ட வளர்ப்பாளர்கள் 5,718 பேரும் காணப்படுகின்றனர். இதே போல் வட மாகாணத்திற்கான வளர்ப்பாளர்களில் 6 தொடக்கம் 10 மாடுகளைக் கொண்டோர் 11,928 பேரும் 11 தொடக்கம் 50 மாடுகளைக் கொண்டோர் 3,440 பேரும் 50 தொடக்கம் 100 வரையான மாடுகளைக் கொண்டோர் 607 பேரும் 101 இற்கு மேல் கொண்டவர்கள் 416 பேரும் காணப்படுகின்றனர். இவ்வகையில் பட்டியாக மாடுகளை வளர்ப்போர் என பார்க்கும் போது கிழக்கில் 5,798 பேரும் வடக்கில் 4,463 பேருமாக மொத்தம் 10,261 பேர் பண்ணையமைப்பில் மாடுகளை வளர்ப்பவர்களாகவும் பால், இறைச்சி, எரு என்பவற்றை நிரம்பல் செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். வடக்கு-கிழக்கு மாகாணங்களின் மேற்படி உரிமையமைப்பினை ஆராயும் போது, சிறியளவிலான கால்நடைச் சொந்தக்காரர்களின் உரிமையமைப்பே பெரியளவில் காணப்படுகின்றது. இவர்களால் பராமரிக்கப்படும் மாடுகள் உத்தமமான பால் உற்பத்தியை வழங்குகின்றன. பாரியளவில் மாடுகளை வளர்ப்பவர்களால் பால் தொடர்பில் போதியளவு விளைவை அவர்கள் சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. மாடுகளிலிருந்து பாலைக் கறப்பதில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உத்தமப் பயன்பாடு என்பது இடம்பெறாதேயுள்ளது.

caged cattle

மாடு வளர்ப்புத் தொடர்பில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை கால்நடைப் பொருளாதாரத்தில் சிறப்பு மிக்க பகுதிகளாகும். நாட்டின் மொத்தக் கால்நடைகளில் 54 சதவீதமான கால்நடைகள் இம்மாகாணத்திலேயே காணப்படுகின்றன. எனினும் இத்தொழில்துறையின் மீது ஈடுபடுபவர்கள் திருப்தியான வருமானத்தை உறுதி செய்வதற்குத் தடையாக பல சவால்களும் இருந்து வருகின்றன. திறந்த முறையிலான வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் வளர்ப்பு முறையில் இறைச்சிக்காக மாடுகள் வளர்ப்பு இடம்பெறுவது முதன்மையாகவும் பால் மற்றும் ஏனைய வருமானங்கள் உப நோக்கங்களாகவும் காணப்படுவது இதில் சவாலாக அமைகிறது. மாடுகளின் இறைச்சியைத் தடை செய்வது என்ற அறிவிப்பின் பின்னர் இவர்களின் வாழ்வாதாரம் மீது பலத்த ஒரு அடி விழுந்திருந்தது, எனினும் கொள்கையளவில் மட்டுமே இது கூறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமையால் இப்போது மௌனமாகியுள்ள பிரச்சினையாகக் காணப்படுகின்றது. எனினும் கொள்கையளவில் இம்முடிவு இன்னமும்  கைவிடப்படாமையால் இந்த முடிவினால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் அவதியுறப்போவது தடுக்கமுடியாததாகும்.

இதனைத்தவிர இரண்டாவது பிரச்சினையாக  திறந்த வளர்ப்பில் உள்ள மாடுகளின் தரம் படிப்படியாகக் குறைந்து வருவதும் பாரம்பரிய இனங்களால் பலன் எதுவும் கிடைக்காத காரணத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாரம்பரிய சினைப்படுத்தல் தொழில்நுட்பம் காரணமாக மாடுகளின் தரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதனால் இறைச்சிக் கிடைப்பனவுக்கும் இவை பொருத்தமற்றதாகி விடுவதுடன் இதில் ஈடுபடும் வளர்ப்பாளர்களின் மெய்வருமானத்தில் மிகக் குறைந்த அடைவுமட்டத்திற்கே வருவாய் பெற்றுக் கொள்ளக்கூடியதாக மாறிவருகிறது. இருந்தபோதும் இப்பிரச்சினையைத் தவிர்த்து உண்மை வினைத்திறனைப் படிப்படியாக உயர்த்திக் கொள்வதற்காக கால்நடை அபிவிருத்தி திணைக்களம் காத்திரமான பங்கை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் 36 கால்நடைப் போதானாசிரியர் பிரிவுகள் மூலம் 33,490 கால்நடைகளுக்குச் செயற்கை முறைச் சினைப்படுத்தல் செய்ய திட்டமிடப்பட்டு, 23849 மாடுகளுக்குச் செயற்கை முறைச் சினைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல கிழக்கு மாகாணத்தில் 39 கால்நடைப் போதானாசிரியர் பிரிவுகள் மூலம் 20,000 மாடுகளுக்குச் செயற்கை முறைச் சினைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தரமுயர்த்தும் திட்டங்களில் நல்லின விந்துக்களை நேரடியாகப் பெற்றுத் தரமுயர்த்துவதுடன் நல்லினக் காளைகளை பண்ணை முறையில் மாடு வளர்ப்பவர்களுக்கு வழங்கி அதன் மூலமும் இயற்கையான தரமுயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை விட திறந்த வளர்ப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு பிரச்சினையாக மேய்ச்சல் தரைப் பிரச்சினையைக் குறிப்பிடலாம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பெருமளவு தரிசு நிலங்கள் காணப்படும் போதும் இவை சட்டரீதியாகப் பிரகடனப்படத்தப்பட்ட மேய்ச்சல் தரைகளாக இல்லாதுள்ளதனால்,  பெரும்போக காலத்தில் திறந்த வளர்ப்பாளர்களால் முறையான வளர்ப்பை உறுதிசெய்ய முடியாது போகிறது. நல்ல வயல் நிலங்கள் அண்டியுள்ள இந்தத் தரைப்பரப்புக்கள் நெல் விவசாயிகளினால் வரையறையற்று நெற்செய்கைக்கு பயன்படுத்தப்படுவதனாலும் கமநல கட்டளைச்சட்டத்தின் கீழ் மாடுகளை வேறு இடங்களுக்கு இடம்மாற்ற வேண்டி ஏற்படுவதனாலும் ஐப்பசி தொடக்கம் மாசி வரையான காலப்பகுதியில் பண்ணை முறையிலான மாடு வளர்ப்பாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மாவட்டங்கள் மாறி வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லுதல், பாதுகாப்பற்ற காடுகளுக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் போது ஏற்படும் விலங்குத்தாக்கம், நீர் பெருக்கெடுத்து செல்லும் வாய்க்கால் தரைகளில் மேய்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் போது ஏற்படும் உயிரிழப்பு, அடைமழைக்காலத்தில் ஏற்படும் கன்றுகளின் உயிரிழப்பு, குளிர்த்தாக்கம் போன்ற காரணங்கள் தொடரான நட்டத்தை இவ்வளர்ப்பாளர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன. இதனை விட திருடர்களினால் திட்டமிட்டு நடாத்தப்படும் திருட்டு நடவடிக்கைகளும் அவற்றை ஆதாரப்படுத்தி, கட்டுப்படுத்த முடியாத சூழலை உண்டாக்கி, திறந்தமுறை மாடு வளர்ப்புக்குச் சவாலை ஏற்படுத்துகின்றது.

இவ்வகையில் சவால் நிறைந்த வாழ்வாதாரத் தொழிலாக மாடு வளர்ப்பு காணப்பட்ட போதும் நிலைபேறுடைய ஏனைய தன்மைகளினால் வடக்கு – கிழக்கின் முக்கியமான பொருளாதார வாழ்வியல் தொழிலாக தொடர்ந்து முதன்மை பெற்றுச் செயல்படுவதை இவ்வாய்வில் உறுதி செய்ய முடியும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7501 பார்வைகள்

About the Author

அமரசிங்கம் கேதீஸ்வரன்

பொருளியல் துறையில் சிரேஷ்ட வளவாளராகவும், பயிற்றுனராகவும் செயற்பட்டு வருகின்ற அமரசிங்கம் கேதீஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளராவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் இளமாணி மற்றும் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் 2012ஆம் ஆண்டு ‘திட்டமிடல் மூல தத்துவங்கள்’ என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)