Arts
22 நிமிட வாசிப்பு

மாக்ஸ்சிசக் கொள்கை அறிமுகமாதல்

July 22, 2022 | Ezhuna

இலங்கையில் அதிகாரத்துக்காகவும் அதனை தக்க வைப்பதற்காகவும் சிங்கள, தமிழ் தலைவர்களினால் அடையாள அரசியல் முன்னிலைப்படுத்தப்பட்டது. அது இனத்துவ அரசியலாக வளர்ச்சியடைந்து சிறுபான்மையினரின் உரிமைகளையும் அவர்களின் இருப்பையும் இல்லாதொழிக்கும் அரசியலாக உச்சம் பெற்றது.இதன் தொடர்ச்சி இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு எவ்வாறு வழிவகுத்தது என்ற அடிப்படை காரணிகளை உள்ளார்ந்த ரீதியில் ஆய்வுசெய்ய ‘இலங்கையில் அடையாள அரசியல் – சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப்புரிதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் எத்தனிக்கின்றது. இதன்படி, அடையாள அரசியல் என்றால் என்ன என்ற  கோட்பாட்டுப் புரிதலை உண்டாக்கி, இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும், தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இத்தொடர் முனைகிறது.

1890 ஆம் ஆண்டுகளிலிருந்தே மாக்ஸ்சிசச் சிந்தனைகள் இலங்கைக்கு அறிமுகமாயின. இக் காலப்பகுதியில் தொழிற்சங்க இயக்கங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் முனைப்புப் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர்கள் தங்களுக்கிடையிலான இனம், மதம், மொழி, சாதி, பிரதேசம் என்பவற்றைக் கடந்து வர்க்கங்களாக அணிதிரண்டனர். உதாரணமாக 1893 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைக் குறிப்பிட முடியும். இதில் சிங்களவர், தமிழர், பறங்கியர்கள் சங்க உறுப்பினர்களாகவும் தலைமைப்பீடத்தின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இது போன்றே 1906 ஆம் ஆண்டு இடம் பெற்ற வண்டித் தொழிலாளர் வேலை நிறுத்தத்திலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றுபட்டு கொழும்பு மாநகர சபையின் சட்டங்களை எதிர்த்தனர். இந்தப் போராட்டத்தின் ஒற்றுமையினை ‘சிலோன் இன்டிப்பென்டன்ட்’ என்ற பத்திரிகை பாராட்டியது. அதில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கடிதத்தில் “வண்டித் தொழிலாளரின் வேலை நிறுத்தம் எல்லா இனத்தவருக்கும் ஒற்றுமையின் பெறுமதி பற்றிய பாடத்தைப் புகட்டியுள்ளது. வண்டிக்காரர் பல்வேறு சாதியையும் இனத்தையும் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் சகல இன, மத வேறுபாடுகளையும் ஒரு பக்கத்தில் ஒதுக்கி மிக வெற்றிகரமாக ஒன்றுபட்டுள்ளனர்.” (மேற்கோள் குமாரி ஜயவர்த்தன) எனக் குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம்

இதுபோன்றே 1912 இல் நடந்த ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தமும் சிங்கள, தமிழ், மலையாள, பறங்கியர் இனத்தவர்களின் ஒற்றுமையின் மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை நிலைகுலையச் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக இருந்தது.

1917 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சி மாக்சிச சிந்தனையாளர்களுக்கும் தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டோருக்கும் புத்துயிர் அளிப்பதாக இருந்ததினால் 1890 களிலிருந்து 1930 கள் வரையுள்ள 40 பெருமளவுக்கு இன, மத, மொழி, சாதி, பிரதேச  வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் தங்களது ஒட்டுமொத்த தொழிலாளர் நலன்களுக்காகவும் அணிதிரண்டு தொழிலாளர் ஒற்றுமையினை எடுத்துக்காட்டினர்.

 பெரிசுந்தரம்

1919 ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டது.  இதற்கு  சேர். பொன். அருணாச்சலம் தலைவராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெரிசுந்தரம் செயலாளராகவும் செயற்குழுவில் பௌத்த மது விலக்குத் தலைவர்களும் பல இனத்தவர்களும் அங்கம் வகித்தனர்.

1920 களில் ரயில்வேத் தொழிலாளர்களை இணைத்து தொழிற்சங்கம் அமைக்கும் ஆரம்பக் கூட்டம் சிங்களம், தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்வேத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் துறைமுகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

1922 இல் ஏ. ஈ. குணசிங்கா தலைமையில் இலங்கைத் தொழிற்சங்கம் உருவாகியது. இது 1923 ஆம் ஆண்டு 20,000 தொழிலாளர்கள் கலந்து கொண்ட பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் ஈட்டியது. “இலங்கைத் தொழிற்சங்கத்தின் பல்லினத் தன்மையை அதன் தலைமைத்துவம் பிரதிபலித்தது. சிங்களத் தலைவர்களான குணசிங்கா, சி. ஏச். சற். பெர்னான்டோ, ஜோர்ச் ஈ. டீ. சில்வா, விக்டர் கொரியா போன்றோருடன் இலங்கைத் தமிழரும் சங்கத்தின் நடவடிக்கைகளிற் கூட்டாக ஈடுபட்டனர். ஏ. பி. தம்பிஐயா இச்சங்கத்தின் கிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைத்து ஊர்காவற்றுறைத் துறைமுகத் தொழிலாளரை அமைப்பு ரீதியாக ஒழுங்கமைத்தார். 1929 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ரத்தினம் நுவரெலியா ‘கிறாண்ட் மோட்டர்’ வேலை நிறுத்தத்துக்குத் தலைமை தாங்கினார். இந்தியத் தமிழரும் பத்திரிகையாளரும், சட்ட சபை உறுப்பினருமான கே. நடேச ஐயர் சங்கத்தின் உப தலைவர் பதவியை வகித்தார். மாநகரசபை உறுப்பினரும் சங்கத்தின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரும், பேச்சாளருமான எம். எல். உம். றியால் வழக்கறிஞர்களான எம். என். என் ஹனிபா, காசிம் இஸ்மாயில் போன்ற முஸ்லிம்களும் இத்தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தர்களாக விளங்கினர். சங்கத்தின் தலைமைப் பதவியும் பௌத்த சமயத்தவரின் தனி உரிமையாக இருக்கவில்லை. சி. எச். சற். பெர்னான்டோ, வலன்ரைன் பெரேரா, விக்டர் கொரியா, ஜேம்ஸ் ரத்தினம் போன்ற கிறிஸ்தவர்களும் இப்பதவியில் இருந்தனர். ஏ. ஈ. குணசிங்காவின் தலைமையில் 1928 இல் இலங்கைத் தொழிற் கட்சி நிறுவப்பட்டபோது அதன் நிர்வாகக் குழுவில் பல சிங்களவரும் ஏ. மகாதேவா, டொக்டர் முத்தையா, திரு. திருமதி சத்தியவாகீஸ்வர ஐயர் போன்ற தமிழர்களும் அங்கம் வகித்தனர்.” (குமாரி ஜயவர்த்தன) “ஏ.ஈ.குணசிங்கா சகல நாடுகளினது தொழிலாளர் வர்க்கத்திடையே ஒற்றுமையை வேண்டி இந்திய தொழிற்சங்க இயக்கம் உட்பட வேற்று நாட்டு தொழிலாளர் இயக்கங்களுக்கு தோழமை வாழ்த்து அனுப்பி தொழிலாளர் இயக்கத்துக்கு ‘சாதி, இன, நிற, வேறுபாடு இல்லை என்று உறுதியாகக் கூறினார்.” (குமாரி ஜயவர்த்தன)

1929ம் ஆண்டு இடம்பெற்ற 150 ட்ராம் வண்டித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழிலாளர்களின் மோதல்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவ் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி எழுதிய பிலிப் குணவர்த்தன “தொழிலாளர் தமது வர்க்க நலன்களைப் பாதுகாக்கவும் முதலாளித்துவ அதிகாரச் சின்னத்தை உடைத்தெறியவும், அசாதாரணமான புரட்சிகர உணர்வெழுச்சியுடனும் தியாக சிந்தையுடனும் எழுச்சியுற்றனர், நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொள்ளும் அரிய திறனையும் உந்துதலையும் வெளிக்காட்டினர்” எனக் குறிப்பிட்டார்.

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் வர்க்கம் பல முக்கியமான வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் வர்க்க உணர்வுடனும் வர்க்க ஒற்றுமையுடனும் நடத்தியிருந்த போதும் 1930 ஆம் ஆண்டுகளில் அடையாள அரசியல் முன்னிலைப் படுத்தப்பட , வர்க்க ஒற்றுமை சிதைவடையத் தொடங்கியது.

உலகின் பல பாகங்களிலுமுள்ள தொழிலாளர்கள் ரஷ்யப் புரட்சியினால் ஊக்கம் பெற்று தொழிலாளர் வர்க்கம் பலம் பெற்று வருகின்றபோது இலங்கையில் பலவீனப்பட்டுப் போவதற்கு அல்லது அதன் பலத்தினைப் பேணுவதற்கு இலங்கையின் முதலாளித்துவ முறைமையினையும் சமூகநிலமையினையும் சரியாகக் கணிப்பிட்டு அதற்கேற்றாற் போல் மாக்ஸ்சிசத்தை நாம் கையாளவில்லை போலத் தெரிகிறது. ஏனெனில் எங்களுடைய தொழிற்சங்கத் தலைவர்களும் மாக்ஸ்சிசச் சிந்தனையாளர்களும் ஐரோப்பிய முதலாளித்துவ மாதிரியையும் அதன் போராட்ட வழிமுறைகளையுமே பின்பற்றியிருக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக இலங்கைச் சமூகமானது சாதிரீதியானதாகவும் மதரீதியானதாகவும் இனரீதியானதாகவும் பிரதேச ரீதியானதாகவும் உருவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்து , இயங்கி வந்த சூழலில் காலனித்துவ ஆட்சி ஒரு திணிப்பாக இலங்கையர்களுக்கு ஏற்படுகின்றது. இதன் மூலம் இங்கு அறிமுகமான முதலாளித்துவம் மேற்கு ஐரோப்பிய பெரு நகர மையங்களில் பொருளுற்பத்தியுடன் கூடிய வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம் அல்ல. இது வணிக முதலாளித்துவமாகும். இந்த வணிகமும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் பெருமளவுக்கு கொழும்பையே மையமாகக் கொண்டிருந்தன. இதன் காரணமாக ஏற்கனவே குறிப்பிட்ட தொழிலாளர் போராட்டங்கள் எல்லாம் கொழும்பையே மையங்கொண்டிருந்தன. கிராமங்களிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் பற்றியோ அல்லது அவர்களுடைய நலன்கள் பற்றியோ எந்தப் போராட்டமும் இக்காலப் பகுதியில் இடம்பெற்றதாக தகவல் இல்லை. இதனால் வர்க்கம், வர்க்க நலன் தொடர்பான பிரக்ஞை பெருமளவான இலங்கையர்களுக்கு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில் இந்த வணிக முதலாளித்துவத்துக்குள் உள்ளீர்க்கப்பட்டவர்களே இலங்கைத் தொழிலாளர்களாக கொள்ளப்படுகின்றனர். இந்தத் தொழிலாளர் வர்க்கத்தை பருமட்டாக இரண்டாக வகைப்படுத்தலாம்.

1. வணிக முயற்சிகளுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் – உதாரணம் ரயில்வே தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், வண்டித் தொழிலாளர்கள், அச்சுத் தொழிலாளர்கள் போன்றோரைக் குறிப்பிட முடியும். இவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய கிராமங்களில் இருந்து வந்து நகரில் தொழில் செய்தவர்கள் கிராமத்துடனும் அந்தப் பண்பாட்டுடனுமான தொடர்பை விலக்காதவர்கள்.

2. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் – இவர்கள் தனிக்குழுமமாகவே கொண்டவரப்பட்டு குடியேற்றப்பட்டு தொழிலுக்கு அமர்த்தப்பட்டவர்கள். இவர்கள் தாங்கள் எந்தெந்த சமூகத்தில் என்ன என்ன பண்பாட்டு விழுமியங்களுடனும் மரபுகளுடனும் வந்தார்களோ அதே பண்பாட்டு விழுமியங்களையும் மரபுகளையும் தங்களுடைய புதிய தொழில் சூழலிலும் பேணினார்கள். அத்துடன் ஏனைய பிரதேச தொழிலாளர்களுடனும் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவும் இல்லை.

இந்த வணிக முதலாளித்துவம் மேற்குறிப்பிட்ட இருவகைத் தொழிலாளர்களைத் தவிர மேலும் ஒரு வர்க்கத்தை உருவாக்கியது. இன்று பெருமளவுக்கு எல்லோராலும் குறிப்பிடப்படுகின்ற மத்தியதர வர்க்கம் என்போர்கள். இவர்கள் ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்று தமது ஆங்கில அறிவை காலனியரசின் நிர்வாக இயந்திரத்துக்கு வழங்கியவர்கள். இதன் மூலம் ஓரளவு நல்ல வேதனத்தைப் பெற்றதுடன் சமூக ரீதியாக உயர் அந்தஸ்தைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

1930 களில் பெருமளவிலான மலையாளத் தொழிலாளர்கள் இலங்கையின் பல்வேறு தொழிற்துறைகளிலும் வீடுகளிலும் கடைகளிலும் தொழில்செய்தனர். இதனைவிட தேனீர்க்கடை உரிமையாளர், உணவக உரிமையாளர், சிறுவணிகர்கள், குட்டிமுதலாளிகள் எனப் பலதரப்பட்டவர்களும் இங்கு தொழில்புரிந்தனர். அத்துடன் குறைந்த ஊதியத்துக்கும் தொழில் செய்யக்கூடியவர்களாகவும் இவர்கள் இருந்தனர். இவர்களுடைய நலன்களுக்காக நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்புக்களும் அவர்களுக்கான பல பத்திரிகைகளும் இருந்தன. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது ’இலங்கை மலையாளி மகாஜன சபை’ ஆகும்.

ஏ. ஈ. குணசிங்காவின் இன அடையாளவாதம்

இக்காலப்பகுதியில் உலகில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் இலங்கையினையும் பாதித்தது.  இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, றப்பர், தென்னை போன்ற விவசாயப் பொருட்களின் விலைகள் பெருமளவில் வீழ்ச்சியடைந்ததால் பெருந்தோட்டங்கள் பல மூடப்பட்டன. அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் சம்பளக்குறைப்பு ஆட்குறைப்பு என்பன செய்யப்பட்டன. வறுமை, நோய் என்பனவற்றால் மக்கள் விரக்தியுற்றிருந்தனர். தொழிற்சங்க இயக்கத் தலைவர்கள் இதனை முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையின் விளைவு என்பதை எடுத்துக்காட்டாமல், தங்களுடைய செல்வாக்கைத் தக்க வைப்பதற்காக இனவாதத்தை அதற்குரிய கருவியாக்கினர்.

ஏ.ஈ.குணசிங்கா

தொழிற்சங்கத் தலைவராக இருந்த ஏ.ஈ.குணசிங்கா மாக்ஸ்சிசக் கருத்துக்களின்பால் வளர்க்கப்பட்டவரல்லர். அவர்களுடனான உறவுகளையும் பெரிதளவுக்கு விரும்பி வளர்த்தவராகவும் தெரியவில்லை. அவர் அநாகரிக தர்மபாலாவின் சிங்களப் பௌத்த மறுமலர்ச்சி, தேசியவாதம் போன்ற உணர்வுகளாலும் கருத்தியலாலும் பாதிக்கப்பட்டவராகவும் இருந்தார். இதன் காரணத்தினால் பொருளாதார நெருக்கடியினை இன நெருக்கடியாக எடுத்துக்காட்டினார். வேலையில்லாக் காரணத்துக்கும் வறுமைக்கும் இலங்கையில் தொழில்புரியும் மலையாளிகளே காரணம் என்று அவர்களுக்கு எதிரான பிரசாரத்தினை தீவிரப்படுத்தினார். ஆரம்பத்தில் தொழிலாளர் ஒற்றுமை பற்றிப் பேசியவராக இருந்தாலும் நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியத் தொழிலாளர்களை அந்நியப்படுத்தி அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதே அவருடைய நோக்கமாக இருந்தது. இதனால் நடேச ஐயர் குணசிங்காவை ஒரு இந்திய எதிர்ப்பாளர் என்றும் சிங்கள பௌத்த இனவாதி என்றும் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இதனால் கோபமுற்ற குணசிங்கா நடேச ஐயரை தொழிற்சங்கத்தை விட்டு வெளியேற்றியது மட்டுமல்லாது எல்லா இந்தியத் தொழிலாளர்களையும் தனது சங்கத்தில் இருந்து வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து முதன் முதலாக தனது தொழிற்சங்கத்தினூடாக தொழிலாளர் வர்க்கத்தின் மற்றொரு பகுதித் தொழிலாளர்களுக்கெதிரான மலையாளி எதிர்ப்புப் போராட்டத்தினை தலைமைதாங்கி நடத்தினார். 

இவருடைய தொழிற்சங்கத்தினுடைய சிங்கள மொழிப் பத்திரிகையான ‘வீரயா’ எனும் பத்திரிகை மலையாள எதிர்ப்புப் பிரசாரத்தில் முன்னணியில் நின்றது.

‘மலையாளிகளை நாம் ஒதுக்கலாமா?’  என்ற ஆசிரியத் தலையங்கத்தில் ‘வீரயா’ (1 ஏப்ரல் 1936) ஏடு மலையாளிகளை ஒதுக்கும் இயக்கத்துக்கு ஆதரவு நல்கும் படியும் சிங்களவரை ஒன்றுகூடும்படியும் வேண்டுகோள் விடுத்தது. மறுவாரம் ‘எவ்வாறு நாம் மலையாளிகளை ஒதுக்கலாம்?’ என்ற ஆசிரியத் தலையங்கத்தில் ‘வீரயா’ எல்லாத் திசைகளிலுமிருந்து மலையாளிகளை ஒதுக்கும் குரல் கேட்கிறது என எழுதியது. அது தொடர்ந்துஉங்கள் தொழிற்சாலை, தோட்டம், கடை, மாளிகை, காணி, என்பவற்றில் பணியாற்றும் மலையாளிகளை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய இடத்தில் சிங்களவர் நியமிக்கப்பட வேண்டும்  என்று கேளுங்கள். இது வன்முறையின்றி அமைதியாக நிகழும் எனக் கூறப்பட்டது. (குமாரி ஜயவர்த்தன)

மலையாளிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஒழுங்கு பண்ணப்பட்ட ஒரு கூட்டத்தில் ஏ. ஈ. குணசிங்கா உள்ளூர்க்காரர்களின் வேலையினை மலையாளிகள் எடுத்துக்கொள்வதால் வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களை ஆட்குறைப்புச் செய்யாதது பற்றியும் நாடு கடத்தாதது பற்றியும் அரசாங்கத்தை வன்மையாகக் கண்டித்தார்.

டி.எஸ். சேனாநாயக்க

1939ல் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டக் கூட்டமொன்றில் “சிங்களவராகிய நாம் அனைவரும் ஒரே கொடியின் கீழ் அணிதிரளவேண்டும்” என்று பிரகடனம் செய்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அப்போதைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா சிங்கள மக்களை தூண்டிவிடும் வகையில் பேசினார். “(சிங்களவராகிய) எம் உடலில் ஓடுவது ஒரே குருதி. நாம் ஒரே இனத்தவர். நாம் தனிச் சிறப்புள்ள மக்கள் 5500 ஆண்டுகளுக்குத் தன் மதம் நிலைக்குமென்று புத்தர் கூறினார். புத்தமதத்தின் பாதுகாவலர்கள் என்ற முறையில் நாமும் அதே அளவு காலம் நிலைத்து வாழ்வோம். (மேற்கோள் குமாரி ஜயவர்த்தன, (சிலோன் டெயிலி நியூஸ், 17, ஏப்ரல் 1939)

இது போன்றே சிங்கள இனம் ‘ஆரிய இனம்’ என்ற கற்பிதத்தை ‘வீரயா’ பத்திரிகை மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து இனத்தூய்மையை வலியுறுத்தியது. ‘கலப்புத் திருமணங்களும் தேசிய அபிவிருத்தியும்’ என்ற பி. சிறிசேனா என்பவரினால் எழுதி வெளியிடப்பட்ட கடிதத்தில்  “ஜேர்மனியின் தலைவரான ஹிட்லர் ஆரியக் குருதி ஓடாத எவனிடமும் தலைமைப் பண்பைக் காணமுடியாது என்று கூறினார். எனவே அவர் தமது நாட்டில் ஆரியரும் ஆரியர் அல்லாதாரும் மணம்புரிவதைத் தடுத்துள்ளார். ஆரியர் அல்லாதார் வீடுகளில் இளம் ஆரிய ஜெர்மன் பெண்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதம் ஆகும் என ஹிட்லர் பிரகடனம் செய்தார். கலிபோர்னியா, பேர்ச்சியா போன்ற நாடுகளில் கூட அந்நியரை மணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் நோக்கமெல்லாம் தூய ஆரிய இனத்தை உருவாக்குவதேயாகும். ஆரியருக்கும் ஆரியர் அல்லாதவருக்கும் பிறந்த பிள்ளைகள் எவ்வித உயர் பண்புகளுமின்றி அழிந்துபடுவர் என அவர்கள் நம்புகிறார்கள் (மேற்கோள் குமாரி ஜயவர்த்தன, (வீரயா, 17 ஏப்ரல், 1936)

இது போல சிங்கள பெண்களும் வேறு இனத்தவரை மணம்முடியாது சிங்களவர்களையே மணம் முடித்து தங்களுடைய இனத்தூய்மையைப் பேண வேண்டும் என்று சொல்லப்பட்டது.

தொழிற்சங்கங்களினூடாக தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி வர்க்க உணர்வையும் வர்க்கப் போராட்டத்தையும் வளர்க்க வேண்டிய தொழிற்சங்கத் தலைவர்களே இனவாதத்தை வளர்த்து தமது சக தொழிலாளர்களை விரோதிகளாக்குகின்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டமை இலங்கை அரசியலின் சாபக்கேடாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஏ. ஈ. குணசிங்கா போன்ற தொழிற்சங்கத் தலைவர்கள் உழைக்கும் மக்களின் வர்க்க நலனில் அக்கறை கொண்டவர்கள் அல்லர். காலனித்துவ அரசு வழங்கிய பொருளாதார நலன்களையும் சமூக அந்தஸ்தினையும் பெறுவதற்கான ஒரு வழியாக தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தினார். குணசிங்கா கொழும்பு மத்திய தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் இருந்தார். இந்த சட்டசபை உறுப்புரிமையை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகள் அவருக்குத் தேவையாக இருந்தன. இவற்றை பெறுவதற்கான சுலபமான வழி ஏற்கனவே சமூகத்தில் உள்ளுறைந்து கிடக்கும் இனம், மதம், போன்ற அடையாளங்களை மக்கள் முன்வைப்பதேயாகும். தொழிற்சங்கங்கள் உடனடியாக அரசியலுக்குள் சென்றதன் விளைவு இது எனலாம்.

இந்த நிலையினை பேராசிரியர் ந. முத்துமோகன் பின்வருமாறு விளக்குகின்றார்,

“காலனிய ஆட்சிக்காலத்தில் வர்க்கம் / குழுமம் ஆகியவற்றுக்கிடையிலான இயங்கியலை தோராயமாக கீழ்க்கண்டவாறு வரையறுக்கலாம். ஐரோப்பியம், காலனியம், நவீனம் ஆகியவற்றுக்கு எதிராக கூட்டுத் தற்காப்பு உணர்வு மரபுரீதியான குழுமங்களை அடையாள இயக்கங்களாக உருப்படுத்தகிறது. சாதி, மத, வட்டார, மொழி வழி அடையாளங்கள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. காலங்காலமாக குழுமம் வழங்கிய பாதுகாப்பு உளவியல் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது. மற்றொரு புறம், ஐரோப்பியம், காலனியம், நவீனம், ஆகியவை வழங்கும் புதிய அரசியல், பொருளாதார, கலாசார வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு உயர்வு பெறுதல் என்ற வர்க்க உணர்வும் தொழிற்படுகிறது. காலனிய அரசு அதன் நவீன அரசியல் வடிவில் எண்ணிக்கைக்கு வழங்கும் முக்கியத்துவம் உணர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே பிற சமூகப் பகுதியினரோடு எண்ணிக்கைப் போட்டியில் ஈடுபடும் அவசியம் தோன்றுகிறது. அடையாள நலனும் வர்க்க நலனும் இரண்டறக் கலந்திருப்பதை இங்கு காணுகிறோம்”   

இலங்கையின் இடதுசாரிகளும் இந்த அடையாளங்களை எவ்வாறு உழைக்கும் மக்களின் நலனுக்கு கையாளலாம் என்பதில் போதிய தத்துவார்த்த தளத்தினைக் கொண்டவர்களாக இருந்ததாகத் தெரியவில்லை. இந்தத் தத்துவார்த்த வறட்சி இன்றைவரை எமது அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாக இருக்கின்றது. 

அப்போதைய மாக்சிஸ்ட் தலைவர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கல்வி கற்று வந்தவர்களாக இருந்தனர். இவர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சென்றது மாக்ஸ்சிசம் கற்று இலங்கையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி சோசலிச அரசொன்றை அமைப்பதற்கல்ல. இலங்கையில் மிக உயர்வர்க்கமாக இருந்த இவர்கள் தங்களுடைய வாழ்க்கைச் சுகபோகங்களை அனுபவிப்பதற்கே அங்கே கல்வி கற்கச் சென்றனர். அங்கு அவர்கள் எதிர்கொண்ட நிறவாதத்தினை எதிர்ப்பதற்கான கருவியாக மாக்ஸ்சிசம் காணப்பட்டதனால் மாக்ஸ்சிசவாதிகளாயினர். பின்னர் நாடு திரும்பியதும் அதே மாக்ஸ்சிச முத்திரையுடன் இருந்தார்களே தவிர அவர்களிடத்தில் குணாம்சரீதியான வேறுபாடு ஏற்படவில்லை. உயர் வர்க்க குணாம்சங்களுடனான மாக்ஸ்சிசவாதிகளாக அரசியலில் இவர்கள் ஈடுபட்டனர்.

இலங்கை மாக்ஸ்சிசவாதிகளின் இந்த வர்க்க இயல்பு காரணமாகத்தான் அவர்களால் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக தொழிற்சங்கப் போராட்டங்களைத் தவிர்த்து எதுவும் செய்யாததுடன் சிங்கள பௌத்த இனவாதத்துக்கு எதிராகவும் எதுவுமே செய்யமுடியவில்லை.

“இலங்கைத் தேசிய காங்கிரஸ்” உருவாக்கம்

 சேர். பொன். அருணாசலம்

இலங்கை தேசியவாதிகள் காலனித்துவ ஆட்சிக்கெதிராக போராடி இலங்கையர்களுக்கு சுயாட்சி பெற்றுக்கொடுப்பதற்காக 1919ம் ஆண்டில் “இலங்கைத் தேசிய காங்கிரஸ்” எனும் அமைப்பினை உருவாக்கினர். இதன் முதலாவது தலைவராக சேர். பொன். அருணாசலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இந்திய தேசிய காங்கிரசின் வழியில் எல்லா மக்களையும் ஒன்றிணைத்து காலனித்துவத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த போதிலும் அதற்குள் காணப்பட்ட ‘சிங்கள பௌத்தம்’ பிரதேச ரீதியான மற்றும் தமிழ் அடையாளங்கள்;  முன்னுரிமை பெற்றதினால் எல்லா மக்களையும் ஒன்றிணைத்து காலனித்துவத்துக்கு எதிராக போராடுவது இவர்களாலும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.

1919 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தேசாதிபதியாக இருந்த வில்லியம் மானிங் பிரதேசவாரியான தேர்தல் தொகுதிமுறையினை அறிமுகம் செய்தார். இது தமிழ், சிங்கள அடையாளத்தினை தனது ஆட்சிக்கு சார்பாக அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கை எனக்கூறப்படுகின்றது. இதன் விளைவாக 1921 ஆம் ஆண்டு சட்டபையில் 13 சிங்களப் பிரதிநிதிகளும் 3 தமிழ் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். தமிழ்த் தலைவர்கள் தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்கு 1920க்கு முன்பிருந்த பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அதாவது சட்டசபையில் இரு சிங்களவர்களுக்கு ஒரு தமிழர் என்ற விகிதாசாரத்தையும் மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர். இது சிங்களத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ‘இலங்கை தேசிய சங்கம்’ ‘இலங்கை சீர்திருத்தக் கழகம்’ எனும் அமைப்பின் தலைவர்களான ஜேம்ஸ் பீரிசும், ஈ. ஜே. சமரவிக்கிரமாவும் தமிழர்களுக்கு மேல்மாகாணத்தில் தனியானதொரு தேர்தல் தொகுதி அமைத்துத் தரப்படும் என்ற உறுதிமொழியை ‘யாழ்ப்பாண சங்கத்துக்கு’ வழங்கினர். பின்னர் இவ்வாறு உறுதிமொழி வழங்கி ஒப்பமிட்ட மேற்கூறிய அமைப்புக்களின் தலைவர்கள் அவ்வுறுதி மொழியினை மறுத்தனர். இதன் காரணத்தினால் சேர். பொன். அருணாசலம் அவர்கள் இவ்வாறான தலைவர்களுடன் இருந்து தேசியப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்ற விரக்தியில் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து விலகினார்.

தமிழர் மகாசன சபையின் தோற்றம்

1921ம் ஆண்டு சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை முன்வைப்பதற்கு ‘தமிழர் மகாசனசபை’ எனும் அமைப்பினை சேர்.பொன்.அருணாசலம் உருவாக்கினார். இதே ஆண்டு சிறுபான்மைச் சமூகங்களின் ஒற்றுமை தொடர்பான மகாநாடு ஒன்று கூட்டப்பட்டது. இதில் மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கான தனித் தேர்தல் தொகுதி வழங்கப்படல் வேண்டும் என்ற தமது கோரிக்கையில் தமிழ் தலைவர்கள் உறுதியாக இருக்க, சிங்களத் தலைவர்கள் அதனை ஏற்கமறுத்து நிராகரித்தனர். இதனால் பெரும்பான்மையினத்தவர்களுடனான ஒற்றுமை கேள்விக்குறியானது.

1924 ஆம் ஆண்டு மீண்டும் மனிங்கினால் கொண்டுவரப்படட அரசியல் சீர்திருத்தத்தில் மேற்படி சிங்கள தமிழ்த் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவ விகிதாசாரம் அமுலாக்கப்பட்டது. அதன் பிரகாரம் சட்டநிருபண சபையில் 16 சிங்களவர்களும் 8 தமிழர்களும் இடம்பெற்றனர். எட்டுத் தமிழ்ப் பிரதிநிதிகளில் ஒருவரை மேல்மாகாணத்துக்கான பிரதிநிதியாக தேர்வு செய்வதற்கான அங்கீகாரத்தினை தேசாதிபதி வழங்கியிருந்தார். மிகுதி ஏழு பேரில் ஐவர் வடமாகாணத்திலிருந்தும் இருவர் கிழக்குமாகாணத்திலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

டொனமூர் அறிக்கை

இவ்விடயம் தொடர்பாக இலங்கையர்களுக்கு சர்வசன வாக்குரிமையினை சிபார்சு செய்த டொனமூர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “சென்றமுறை யாப்பு மாற்றியமைக்கப்பட்டபோது தமிழர் மேலும் கொழும்பில் ஓர் இடம் தங்கட்கு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இவ்விடம் மேல் மாகாணத் தமிழ் இடம் என அழைக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கு இடம் விட்டுக்கொடுக்கப்பட்டது. ஆயின் இது பற்றிய நிலை பின்னர் யாப்பு மாற்றியமைக்கப்படும்போது மீண்டும் ஆராயப்படும் என்ற தெளிவான கட்டுப்பாடுடனேயே இவ்வுறுதி அளிக்கப்பட்டது. பொதுவாகச் சட்டசபையில் விகிதத்திற்கேற்ப இடம் அளிக்கும் விடயத்தில் சிங்களவர் தமிழர்க்குப் பெரிய அளவில் விட்டுக்கொடுக்க ஆயத்தமாயிருந்தனர். உண்மையில் கொடுத்தனர் எனினும் அவர்களின் நாட்டின் மகாசபை (இதில் சிங்களவர் பெரும்பான்மையாயிருந்தனர்) மேற்கு மாகாணத்தில் தமிழர்க்கு இடம் அளிக்கப்படுவதை எதிர்த்தது.  மேற்கு மாகாண இருக்கை பற்றியும், தமிழர் அதைத் தொடர்ந்து வைத்திருப்பது பற்றியும் உள்ள கேள்வியை இவ்வாணைக்குழு நன்கு ஆராய்ந்துள்ளது. ஆயின் இவ்விருக்கை தொடர்ந்திருப்பதற்குத் தக்க காரணம் ஏதும் காணமுடியாதிருக்கிறது. புவியியல் முறையில் தமிழ் மக்கள் பரவியுள்ள வகையை நோக்குமிடத்து, அவர்கட்குப் போதியளவு இருக்கைகள் கிடைக்கும் என்பதும் உறுதியாகிறது, ஆதலால், சிங்களவர்க்கும் தமிழர்க்கும் எவ்விகித முறையில் இருக்கைகள் அமைய வேண்டுமென்பது பற்றி மனம் போன போக்கில் ஒழுங்கு செய்ய வேண்டிய தேவை இல்லை, என இவ்வாணைக்குழு கருதுகிறது”. (யாப்பினை ஆய்ந்த சிறப்பாணைக் குழுவின் அறிக்கை டொனமூர் அறிக்கை) என எவ்வித பக்கச்சார்புமின்றி அறிக்கை செய்துள்ளனர்.   

தமிழ் பிரதிநிதிகளின் வர்க்க நலன்

மேல் மாகாணத்துக்கான தமிழ் பிரதிநிதித்துவம் தொடர்பான தமிழ்த் தலைவர்களின் கோரிக்கை மக்கள் நிலைப்பட்டதா என்பதும் அது நியாயமானதா என்பதும் இந்தக் கோரிக்கைக்காக தமிழ்த்தலைவர்கள் எடுத்த நடவடிக்கை சரியானதா என்பதும் இவ்விடத்தில் நோக்கப்பட வேண்டியவைகளாகும்.

இன்றைய சமூக நிலைமையினையும் வாக்குரிமையினையும் அடிப்படையாகக் கொண்டு அன்றைய சமூக நிலைமையினை நோக்கக் கூடாது. இன்று போல் அன்று மேல் மாகாணத்தில் பெருமளவான தமிழர்கள் வசிக்கவில்லை. இலங்கை மக்கள் வாக்குரிமையும் கட்சிகளும் அற்ற நிலையிலே காணப்பட்டனர். படித்தவர்களும் சொத்துக்கள் உள்ளவர்களுமே அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 1924இல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை 209,997 ஆகும். இது இலங்கையின் சனத்தொகையில் நூற்றுக்கு 4 வீதமாக இருந்தது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது தமிழ் வாக்காளர்களாக 20,000 பேர் இருந்திருக்கின்றார்கள். இது மொத்த இலங்கைத் தமிழர்களுடைய வாக்காளர் தொகையாகும்.  இந்நிலையில் மேல் மாகாணத்துக்கான பிரதிநிதித்துவம் என்பது அங்கு இருந்த ஒரு சில தமிழ் உயர் வர்க்கத்தினருக்கான தேவையின் பொருட்டு முன்வைக்கப்பட்டதே தவிர சாதாரண மக்களின் தேவைக்காக முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையல்ல. அத்துடன் அன்றைய சனத்தொகையில் முப்பத்தி மூன்று இலட்சம் பேர் சிங்களவர்களாகவும் 5 இலட்சத்தி நாற்பதினாயிரம் பேர் தமிழர்களாகவும் இருந்த நிலையில் இரு சிங்களவர்களுக்கு ஒரு தமிழர் என்ற பிரதிநிதித்துவ விகிதாசாரம் தமிழர்களுக்கு அதிகமானதேயாகும். தமிழ்த் தலைவர்கள் இதைச் சரியானமுறையில் பயன்படுத்தாமல் ஒரு சிலருடைய நன்மைக்காக நியாயமற்ற கோரிக்கையினை முன்வைத்து தேசிய காங்கிரசில் இருந்து விலகி ‘தமிழர் மகாசன சபை’ எனும் அமைப்பினை ஒட்டுமொத்த தமிழர்களுடைய அமைப்பாக அடையாளப்படுத்தி நிறுவியமை,தமிழ் அடையாளத்தினை ஒரு குறிப்பிட்ட சாராரின் நன்மைக்காக பயன்படுத்தகின்ற முதல் சந்தர்ப்பமாகும்.

இது போன்றே எதிர்காலத்தில் தமிழர்களுடைய உரிமை தொடர்பாக முற்போக்குச் சிந்தனைகொண்ட சிங்களத் தலைவர்களுடனும் பிரித்தானிய அதிகாரத்துடனும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற தமிழ்மக்கள் நலன் சார்ந்த பார்வை உயர் வர்க்க தமிழ்த்தலைமைகளிடம் இருக்கவில்லை. உதாரணத்திற்கு இலங்கைத் தேசிய காங்கிரசில் கண்டியை பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய பிரமுகர்களான ஏ. எப். மொலமுரே, டி. பி. கொப்பேகடுவ, பி. பி. ரத்னாயக்கா போன்றோர் 1924 ஆம் ஆண்டு தேசிய காங்கிரசிலிருந்து விலகி ‘கண்டிய தேசிய அசெம்பிளி’ என்ற பிரதேச ரீதியான அமைப்பினை உருவாக்கினர். இவ் அசெம்பிளி இலங்கையில் ஒரு சமஷ்டி அரசு உருவாக்கப்பட்டு அதில் கண்டியர்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை 1927ம் ஆண்டு முன்வைத்தது. இக் கொள்கையில் அவர்கள் தொடர்ந்து ஒரு பத்து ஆண்டுகள் நிலையாக இருந்தனர். இதற்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா ஆதரவளித்த போதும் அன்றைய உயர்குழாம் தமிழ்த் தலைவர்களும் எவரும் இதற்கு ஆதரவளிக்கவில்லை.  இது எதனைக் காட்டுகின்றது என்றால் அன்றிருந்த சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், முத்துகுமாரசாமி போன்ற தமிழ்த் தலைவர்களை சிங்களத் தலைவர்களும் மக்களும் முழு இலங்கைக்குமான தலைவர்களாகவே நோக்கினார்கள். இந்த தலைமைத்துவ நிலையிலிருந்து இறங்கி பிரதேசத் தலைமைத்துவங்களை ஏற்பதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. இது போன்றே சர்வசன வாக்குரிமையினை டொனமூர் பிரேரித்த போது அதனை தமிழ்த் தலைவர்கள் எதிர்த்தனர். ஆனால் தங்களுக்கு முழுமையான பொறுப்புடைய அரசாட்சி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். இது மக்கள் ஆட்சியில் பங்கெடுக்கக்கூடாது அவர்களை ஆள்பவர்களாக நாங்களே இருக்க வேண்டும்  என்ற அதிகாரத்துவ மனநிலையின் வெளிப்பாட்டைக் காட்டுகின்றது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5382 பார்வைகள்

About the Author

சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

கலாநிதி சு. சிவரெத்தினம் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் இளமாணிப் பட்டத்தையும் முது தத்துவமாணிப்பட்டத்தையும் பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் கலைவரலாற்றில் கலாநிதிப் பட்டம் பெற்று, தற்போது சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புல தொழில்நுட்பக் கலைகள் துறையின் தலைவராகப் பணிபுரிகின்றார்.

கலைவரலாற்றில் மட்டுமன்றி நாடகம், இலக்கியம், அரசியல், சமூகவியல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)