Arts
15 நிமிட வாசிப்பு

மன்னார், நானாட்டானில் கிடைத்த பண்டைய நாணயங்கள் தமிழகப் பாண்டியருக்கு உரியதா ?

December 5, 2023 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.

18.09.2020 அன்று மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் சந்திக்கு அருகில் உள்ள வடக்கு வீதி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக குழிகள் வெட்டியபோது ஒரு குழியில் காணப்பட்ட பானையில் இருந்து 1904 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி 25.09.2020 அன்றிலிருந்து  ஊடகங்களில் முக்கிய செய்தியாக காணப்பட்டது. இந்நாணயங்களை அச்சத்துடன் பார்த்த அக்கிராம மக்கள்  பூதம் பாதுகாத்து வந்த இந்நாணயங்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்து என கூறியதால் அவற்றால் அச்சமடைந்த நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.புவனம் அவர்கள் அந்நாணயங்கள் அனைத்தையும் முருங்கன் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்திருந்தார். அந்நாணயங்கள் நீதிமன்றத்தின் ஊடாக இலங்கைத் தொல்லியற் திணைக்களத்திடம் ஒப்படைக்க இருப்பதாக அறிந்தோம். வடஇலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான நாணயங்கள் முதன் முறையாக ஒரேயிடத்தில் கிடைத்திருப்பதால் அந்நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையாவது பார்ப்போம் என்ற ஆவலில் மன்னார் மாவட்ட கௌரவ பாராளமன்ற உறுப்பினர்; திரு.சாள்ஸ் அன்ரனி மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.புவனம் அவர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் உரிய இடத்தைப் பார்வையிடுவதற்கான சகல வசதிகளையும் ஏற்படுத்தி தந்தனர். இக்களவாய்வில் எனது மாணவர்களும் தொல்லியல் ஆய்வு உத்தியோகத்தர்களுமான திரு. கபிலன், மணிமாறன், தசிந்தன், கிரிகரன் ஆகியோருடன் நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.சிறிஸ்கந்தகுமார், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜொனி, மதகுரு அருண் புஸ்பராஜ், அக்கிராமத்து இளைஞர்களான திரு.செல்வம், கணேஸ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரும் எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் பங்கெடுத்தமை மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

ancient coins 1

நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பல குழிகள் தோண்டப்பட்டிருந்தன. ஆனால் அக்குழிகள் எவற்றிலுமே புராதன குடியிருப்புக்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. மாறாக இக்குழிகளில் காணப்படும் களிமண் அருகிலுள்ள காணிகளின் மண்ணின் நிறத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. இது பற்றி வீட்டு உரிமையாளரிடம் கேட்டபோது இற்றைக்குப் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணை அருகில் உள்ள குளத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டியதாகக் கூறினார். இதனால் இங்கு பானையோடு கிடைத்த நாணயங்கள் குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணோடு வந்தவை என்பது உறுதியாகத் தெரிகின்றது. இந்நாணயங்களில் மீன் சின்னங்களும், வாளும் பொறிக்கப்பட்டுள்ளதால் இவை பாண்டியர் முடியாட்சிக்குரிய நாணயங்கள் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. தென்னிலங்கை ஊடகங்களில் இவை அநுராதபுர இராசதானிகால நாணயங்கள் என செய்திகள் வெளிவந்திருந்ததையும் அறிந்தோம். இந்நாணயங்கள் அனைத்தையும் நேரில் பார்வையிட எமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆயினும் முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நானாட்டான் பாடசாலை ஒன்றில் காட்சிக்கு வைப்பதற்காக கொடுத்த நாணயங்களையும், களவாய்வின் போது எமக்கு கிடைத்த இரு நாணயங்களையும், ஊடகங்களில் வெளிவந்த நாணயங்களின் புகைப்படங்களையும் வைத்துப் பார்த்த போது இந்நாணயங்களின் முன்பக்கத்தில் மூன்று கோடுகளால் வடிவமைக்கப்பட்ட பீடத்தின் மேல் இடப்பக்கமாக அல்லது வலப்பக்கமாக பார்த்த நிலையில் படுத்திருக்கும் நந்தியின் உருவமும், இதற்கு இரு புறத்திலும் குத்துவிளக்கும், நந்தியின் தலைக்கு மேல் பிறைச் சந்திரனும், நாணய விளிம்பினை ஒட்டி சிறுபுள்ளிகளும் காணப்பட்டன. நாணயத்தின் பின்பக்கத்தில் பீடத்தின் மேல் கிடையாக அல்லது நேராக இரண்டு மீன் சின்னங்களும் இவற்றின் இரு புறத்திலும் குத்துவிளக்கும், விளிம்பை ஒட்டி பிறைச் சந்திரனும், சிறு புள்ளிகளும் காணப்பட்டன. ஆயினும் நாணயங்களின்,  அளவு, நிறை, வடிவமைப்பு, அழகு, தெளிவு என்பவற்றில் வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

இவ்வகையான  நாணயங்கள் இலங்கையில் சிறப்பாக வடஇலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பிரின்செப் (1858), எலியட் (1858), கொட்றிங்ரன் (1924), டுல்பே(1966), மிச்செனர்(1998) முதலான நாணயவியல் அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். சேயோன் என்ற நிலவியலாளர் வடஇலங்கையில் மாதோட்டம், மன்னார், கந்தரோடை முதலான இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான இவ்வகை நாணயங்களைக் கண்டுபிடித்து 1982 இல் வெளியிடப்பட்ட தனது இலங்கையின் பண்டைய கால நாணயங்கள் என்ற நூலில் ஆவணப்படுத்தியுள்ளார். 1997 களில் பேராசிரியர் கிருஸ்ணராஜா கந்தரோடையில் மேற்கொண்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1990 களில் இருந்து வடஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட எமது தொல்லியல் மேலாய்வின் போது பூநகரி, ஈழவூர், மாதோட்டம், உடுத்துறை, இயற்றாலை, கட்டுக்கரை முதலான இடங்களிலும் இவ்வகை நாணயங்கள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இக்கண்டுபிடிப்புக்களின் தொடர்ச்சியாக நானாட்டானில் கிடைத்த நாணயங்கள் காணப்பட்டாலும் அவை வகையிலும், தொகையிலும் அதிகமாக இருப்பதால் வடஇலங்கையின் வரலாறு பற்றிய எதிர்கால ஆய்வில் இந்நாணயங்கள் அதிக முக்கியத்துவம் பெற இடமுண்டு என்பதில் ஐயமில்லை.

பொதுவாக பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னர் அதாவது யாழ்ப்பாண அரசின் தோற்றத்திற்கு முன்னர் இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்கள் தமிழகத்துடனான அரசியல் வாணிபத் தொடர்பால் வந்தவை என்றே கூறப்பட்டு வந்துள்ளது. இதற்கு, யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னரே இலங்கைத் தமிழரிடம் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றியது என்ற நம்பிக்கை முக்கிய காரணமாகும். ஆனால் இலங்கையின் சமகாலத் தொல்லியல் கண்டுபிடிப்புக்களில், சங்க காலத்தின் சமகாலத்தில் இருந்து தமிழகத்தைப் போல் இலங்கைத் தமிழரிடமும் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றி வளர்ந்ததற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 

நானாட்டானில் கண்டுபிடிக்கப்பட்ட நாணய வகைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் அந்நாணயங்கள் வடஇலங்கையில் கிடைத்ததாகவே கூறுகின்றனர். இவற்றின் எண்ணிக்கை யாழ்ப்பாண அரசு காலத்தில் வெளியிடப்பட்ட சேது மொழி பொறித்த நாணயங்களின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. வடஇலங்கைக்கு வெளியே இவ்வகை நாணயங்கள் மிக அரிதாக அநுராதபுரத்திலும், அக்குறுகொட என்ற இடத்திலும் கிடைத்துள்ளன. தமிழ் நாடு, சென்னை அருங்காட்சியகத்தில் இவ்வகையான நான்கு நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவையும் யாழ்ப்பாணத்தில் இருந்தே பிற்காலத்தில் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் நானாட்டானில் கிடைத்த நாணய வகைகளை வடஇலங்கையில் இருந்த அரசோடும், ஆட்சி செய்த அரசர்களோடும் தொடர்புபடுத்திப் பார்ப்பதே பொருத்தமாகும். இந்நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சின்னங்கள், குறியீடுகள் முதலியன இந்து மதத்தை, சிறப்பாக சைவ சமயத்தைப் பிரதிபலிப்பதால் இந்நாணயங்களை வெளியிட்ட அரசின் மதமாக இந்து மதம் இருந்துள்ளதெனக் கூறலாம்.

இதுவரைகாலமும்  இந்நாணயங்களை ஆய்வு செய்த நாணயவியல் அறிஞர்களில் ஒருசாரார், நாணயங்களில் மீன் சின்னங்கள் காணப்படுவதால் இவை பாண்டியரால் வெளியிடப்பட்டு  தமிழகத் தொடர்பால் இலங்கைக்கு வந்ததாகக் கூறுகின்றனர். இன்னொரு சாரார், இலங்கையில் பாண்டியர் ஆட்சி இருந்ததன் அடையாளமாக இந்நாணயங்களை வெளியிட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர். வேறு சிலர் வடஇலங்கையில் கிடைத்த நாணயங்கள் சமகாலத்தில் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் இருந்து சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதால் இவற்றைப் பாண்டியர் வடஇலங்கைக்கென வெளியிடப்பட்ட தனித்துவமான நாணயங்கள் எனக் கருதுகின்றனர். ஆயினும் இக்கருத்துக்கள் பொருத்தப்பாடாகத் தோன்றவில்லை. காரணம் தமிழகத்தில் சங்ககாலம் தொட்டு வெளியிடப்பட்ட நாணயங்கள் சமகாலத்தில் இலங்கையில் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்துள்ளதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் வடஇலங்கையில் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ள மீன் சின்னங்கள் பொறித்த ஒரு நாணயமாவது தமிழக ஆய்வுகளில் கிடைத்ததாகத் தெரியவில்லை. இவை தமிழகத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களாக இருந்தால் வடஇலங்கையைக் காட்டிலும் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கிடைத்திருக்கவேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை பாண்டியர் இலங்கை மீது பல தடவைகள் படையெடுத்ததற்குப் பாளி இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன. இப்படையெடுப்புக்கள் மூலம் சோழரைப் போல் பாண்டியர் ஆட்சி இலங்கையில் ஏற்பட்டதற்கு எந்த ஆதாரங்களும் காணப்படவில்லை. மாறாக இப்படையெடுப்புக்கள் மூலம் இலங்கை மன்னர்களிடம் பாண்டியர் திறைபெற்றதற்கே சான்றுகள் காணப்படுகின்றன. இதனால் இலங்கையில் பாண்டியர் ஆட்சி இருந்ததன் அடையாளமாக இந்நாணயங்கள் வெளியிடப்பட்டன எனக் கூறுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வடஇலங்கையில் கிடைத்த மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்கள் தனித்துவமானது என்பதில் நாணயவியல் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்துக்கள் காணப்படவில்லை. அத்தனித்துவம் பாண்டியருக்குரியதல்ல. மாறாக இலங்கையில் தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் காணப்படும் தனித்துவமான அம்சமாகப் பார்ப்பதே பொருத்தமாகும்.

jaffna coins

இலங்கையில் நாணயங்களை வெளியிடும் மரபு தோன்றுவதற்கு இந்தியத் தொடர்பு முக்கிய காரணமாக இருந்தாலும், பண்டுதொட்டு இலங்கையில் தமிழ், சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் சில தனித்துவமான அம்சங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட சதுரவடிவிலான நாணயங்களில் முன்பக்கத்தில் நிற்கும் நிலையில் காளையின் உருவமும், நாணயத்தின் பின்பக்கத்தில் பாண்டியரின் அரச இலட்சனையான மீன் சின்னமும் காணப்படுகின்றன. சமகாலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட சதுர நாணயங்களின் முன்பக்கத்தில் பாண்டியர் வெளியிட்ட நாணயங்களில் உள்ளதைப் போன்ற காளை உருவம் இடம் பெற்றாலும் நாணயத்தின் பின்பக்கத்தில் பாண்டியரின் மீன் சின்னத்திற்குப் பதிலாக ஒரு வட்டமும் வட்டத்திற்குள் மூன்று அல்லது நான்கு சிறு புள்ளிகளும் காணப்படுகின்றன. இச்சின்னங்களே சற்றுப் பிற்பட்ட காலத்தில் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட சதுரவடிவிலான நாணயங்களின் பின்பக்கத்திலும் காணப்படுகின்றன. ஆனால் நாணயங்களின் முன்பக்கத்தில் காளைக்குப் பதிலாக சிங்கள மன்னர் வெளியிட்ட நாணயங்களில் சிங்கம் முக்கிய இலட்சனையாக இடம்பெற்றுள்ளது. இவற்றில் இருந்து சிங்கள மன்னர்கள் சிங்கத்தையும், தமிழர்கள் காளையையும் (நந்தி) தமது அரச இலட்சனையாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது. இம்மரபு பிற்காலத்திலும் தொடர்ந்துள்ளது. நாணயங்களின் பின்பக்கத்தில் உள்ள சின்னங்களில் காணப்படும் ஒற்றுமை அநுராதபுர அரசை அல்லது நாட்டைக் குறித்திருக்கலாம்.

கிபி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் பாண்டியர் வெளியிட்ட சதுர வடிவிலான நாணயங்களில் அவர்களின் அரச இலட்சனையான மீன் சின்னம் கோட்டுருவில் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் கிடைத்த சதுர நாணயங்களில் அவை முழு உருவமாகவே பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வேறுபாடு வடஇலங்கையில் கிடைத்த  மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்களிலும் காணப்படுகின்றன.

sinhala coins

நானாட்டானில் கிடைத்த நாணய வகைகளில் மூன்று கோடுகளால் அமைந்த பீடத்தின் மேலேயே நந்தியும், மீன் சின்னங்களும் காணப்படுகின்றன. இந்த அம்சம் சிங்கள மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் பௌத்த சின்னங்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கை நாணய மரபுக்குரிய தனித்துவமான அம்சமாகும். இந்த அம்சத்தை தமிழக நாணயங்களிலோ அல்லது இந்திய நாணயங்களிலோ காணமுடியவில்லை. பாண்டியர் இன்னொரு நாட்டை வெற்றிகொண்டு ஆட்சி செய்யும் போது தாம் வெளியிட்ட நாணயங்களில் தமது அரச இலட்சனையான மீனையே பொறித்தனர். ஆனால் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் புதிய அரசைத் தோற்றுவித்த பாண்டியரின் படைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகள் மீனுக்குப் பதிலாக நந்தியையே அரச இலட்சனையாக நாணயங்களிலும், அரச கொடிகளிலும், அரச ஆவணங்களிலும் பயன்படுத்தினர். இதற்கு, யாழ்ப்பாண அரசிற்கு முன்னோடியாக நந்தியை அரச இலட்சனையாகக் கொண்ட  தமிழ் அரசு வடஇலங்கையில் இருந்தது காரணம் எனலாம். ஆயினும் யாழ்ப்பாண இராசதானிக்கு முற்பட்ட நாணயங்களில் நந்தியின் வடிவம் மூன்று கோடுகளாலால் அமைந்த பீடத்திற்கு மேல் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண இராசதானி கால நாணயங்களில் பீடத்திற்குப் பதிலாக சேது என்ற மங்கல மொழி பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாண இராசதானியை முதலில் தோற்றுவித்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னர்கள் தமிழ் நாடு, இராமேஸ்வரம் சேது தலத்துடன் தமக்குள்ள தொடர்பை அடையாளப்படுத்திக் கொண்டனர் எனக் கூறலாம்.

old coins

பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொலநறுவை இராசதானியில் கலிங்கமாகன் ஆட்சியால் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள அரசும் தெற்கு நோக்கி நகர்ந்த போது வடக்கே தமிழருக்குச் சார்பான அரசு கலிங்கமாகன், சாவகன் தலமையில் தோன்றியதாகப் பாளி, சிங்கள இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வரசின் படைகள், பாதுகாப்பு அரண்கள் திருகோணமலை, கந்தளாய், பதவியா, குருந்தன் குளம், கோணாவில், மன்னார், மாதோட்டம், இலுப்பைக்கடவை, காக்கதீவு, ஊர்காவற்துறை, வலிகாமம் முதலான  இடங்களில் நிலை கொண்டிருந்ததாக இவ்விலக்கியங்கள் மேலும் கூறுகின்றன. இதைச் சமகாலத்திற்குரிய பாண்டியரது கல்வெட்டும் உறுதி செய்கின்றது. இவ்வாதாரங்களை வைத்துப் பார்க்கும் போது மன்னார் நானாட்டனிலும், வடஇலங்கையின் ஏனைய வட்டாரங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட நந்தி, மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்கள் யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக வடஇலங்கையில் நந்தியை அரச இலட்சனையாகக் கொண்டு ஆட்சிபுரிந்த தமிழ் அரசால் வெளியிடப்பட்டவை எனக் கூறுவதே பொருத்தமாகும்.

குறிப்பு

old coins 2

ஆதிகால, இடைக்கால இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்களின் முன்பக்கத்தில்  நந்தியும், நாணயங்களின் பின்பக்கத்தில் மீன் வடிவங்களும் முக்கிய சின்னங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நந்தியின் வடிவம் அரச இலட்சனையையும், மீன் சின்னங்கள் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளில் கடல்சார் தொடர்புகள் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கலாம். மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் அங்குள்ள அருங்காட்சியங்கள் பலவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாணயங்களையும், தனிநபர்களின் சேகரிப்பிலுள்ள நாணயங்களையும் நேரில் பார்வையிட்டு ஆராயும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் இலங்கையில் கிடைத்துள்ள மேற்கூறப்பட்ட சின்னங்கள் கொண்ட நாணயங்களை அங்கு  காணமுடியவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்குமேல் தமிழகத்தின் குக் கிராமங்களுக்கெல்லாம் சென்று நாணயங்களைச் சேகரித்து பதினைந்துக்கு மேற்பட்டநூல்களையும், நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்ட தஞ்சாவூர் அளக்குடி ஆறுமுகம் சீதாராமனுடம் பல தடவைகள் இலங்கையில் கிடைத்து வரும் நாணயங்கள் பற்றி கலந்துரையாட முடிந்தது. அவர் நந்தியும், மீன் சின்னமும்பொறித்த நாணயங்களின் வடிவமைப்பும், அவற்றின் கலைமரபு, தொழில்நுட்பத் திறன், அழகு என்பவற்றை தமிழக நாணய மரபிற்கு அந்நியமானவை என்றே உறுதிபடக் கூறுகின்றார். ஆகவே யாழ்ப்பாண இராசதானிக்கு முன்னர் இலங்கையில் புழக்கத்தில் இருந்த தமிழ் நாணயங்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்ற பாரம்பரிய நம்பிக்கையை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி அவற்றை இலங்கை மண்ணோடொட்டி வாழ்ந்து வரும் தமிழருடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதே பொருத்தமாகும். அதன் மூலம் இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கு புதுமுகவரி கிடைக்கும்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

7878 பார்வைகள்

About the Author

பரமு புஷ்பரட்ணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரான பரமு புஷ்பரட்ணம் அவர்கள், தனது இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தைத் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார்.

இவர் எழுதிய பதினைந்து நூல்களில் நான்கு நூல்கள் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், மூன்று நூல்கள் மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றன. இவர் 82இற்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச ரீதியிலான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இதுவரை 55 சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் பங்குபற்றியுள்ளார்.

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 18 இடங்களில் இவரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் மூன்று அகழ்வாய்வுகள் தொடர்பான விடயங்கள் நூல்வடிவில் வெளிவந்துள்ளன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)