Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றமும் வளர்ச்சியும்

June 21, 2022 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும்,   1948 முதல்  இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்கும் இத்தொடர் கட்டுரை இரு பகுதிகளாக அமையும். முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் ஆராய்கிறது. இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும்  பொருளாதார நெருக்கடியிலும்  இனவாத அரசியலின் பாத்திரம் பற்றி  ஆராய்கிறது.

இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றமும் வளர்ச்சியும்

பின்வரும் இரு தலைவர்களின் செயற்பாடுகள் இலங்கை அரசியல் போக்கு காலத்துக்கு காலம் எவ்வாறு  மாற்றமடைந்தது  என்பதை விளக்கும்.

இரு தலைவர்கள் – இரு நிகழ்வுகள் – ஒரு  போக்கு!

1)    எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா

1956  முதல்  1959 வரை இலங்கையின் பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike) பிரித்தானியாவிலே  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்  தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு1925 இல் நாடு திரும்பினார்.  அவர் இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்து அரசியல் சுயராஜ்யத்தின் இலக்கை அடைய முற்போக்கு தேசிய கட்சி (PNP- Progressive National Party) என்ற அமைப்பை உருவாக்கினார். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் சி. பொன்னம்பலம் அக்கட்சியின் செயலாளராக இருந்த போது திரு. பண்டாரநாயக்கா அதன்  தலைவராக செயற்பட்டார். அப்போது திரு. பண்டாரநாயக்கா இலங்கையில்  ஒரு கூட்டாட்சி அமையவேண்டும் என்ற  கருத்தைக் கொண்டிருந்தார். அவரது கருத்தின்படி,  ‘நாட்டில் உள்ள மூன்று முக்கிய குழுக்களான  கரையோர  சிங்களவர்கள், மலையக சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் ஆகியோரின் உரிமைகளை அங்கீகரிக்கும்  சமஷ்டி – கூட்டாட்சிக்கான   அரசியல் யாப்பு  ஒன்று உருவாக்கப்படுதல் வேண்டும்.   ஒன்பது மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி உருவாக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் முழுமையான சுயாட்சியைக் கொண்டிருக்க வேண்டும்.’

1951 செப்டம்பர் 02 ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பம்

இப்பிரேரணை அக்கட்சியில் முன்வைக்கப்பட்டபோது ஒரே ஒருவர் மாத்திரம் ‘சமஷ்டி -கூட்டாட்சி முறை மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும், கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிக்கப்படுவார்கள்’ என்று கூறி அதனை  எதிர்த்தார். அது ஒரு தமிழர். ஆம் திரு பண்டாரநாயக்காவின் நெருங்கிய நண்பரான ஜேம்ஸ் டி. ருத்னம் என்ற தமிழர் ஒருவரைத்  தவிர PNP யின் அனைத்து உறுப்பினர்களும், (பெரும்பாலும் சிங்களவர்கள்)  சமஷ்டி – கூட்டாட்சி  பிரேரணையை ஆதரித்தனர்.

திரு. பண்டாரநாயக்கா “சிலோன் மோர்னிங் லீடர்” நாளிதழில் இதுபற்றி ஆறு கட்டுரைத் தொடரை எழுதினார், அதில் அவர் சமஷ்டி – கூட்டாட்சி பற்றிய தனது பார்வையை வெளிப்படுத்தினார். இதன் முதல் கட்டுரை மே 19, 1926 இல் வெளிவந்தது.

அதன் பின்னர், சமஷ்டி – கூட்டாட்சி பற்றி உரையாற்றுவதற்காக திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸால்  (பின்னர் இது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என மறுபெயரிடப்பட்டது). யாழ்ப்பாணம் அழைக்கப்பட்டார். 1926 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதியன்று நடைபெற்ற இக் கூட்டத்தில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.   டாக்டர் ஐசக் தம்பையா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். “எமது அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டி – கூட்டாட்சி தான் ஒரே தீர்வு” என்ற தலைப்பில் இளம் பண்டாரநாயக்கா உருக்கமாக பேசினார். இனவாத வேறுபாடுகளைக் கையாள்வதற்கு பிராந்திய சுயாட்சியே சிறந்த வழி என்று பண்டாரநாயக்கா வாதிட்டார்.

ஆனால் சமஷ்டி – கூட்டாட்சி தத்துவம் தமிழ் பார்வையாளர்களைக் கவரவில்லை.  பண்டாரநாயக்க சரமாரியான கேள்விகளை எதிர்கொண்டார். மிகுந்த புலமையுடன் பதிலளித்தார். ஆனால் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மத்தியில் சமஷ்டி – கூட்டாட்சி தத்துவத்திற்கு  ஆதரவு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று  “இந்த முறைமைக்கு  எதிராக ஆயிரத்தொரு ஆட்சேபனைகள் எழுப்பப்படலாம், ஆனால் படிப்படியாக குழப்பம் தெளியும்போது, ​​எதோ ஒரு வடிவிலான   கூட்டாட்சி அரசாங்கம் மாத்திரமே ஒரே தீர்வாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.[1]” என வாதாடினார்.

இவ்வாறு இலங்கையில் சமஷ்டி – கூட்டாட்சி தத்துவத்தை முதன் முதலில் முன்வைத்தவர்  எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா. அதன் பின்னரே ஏ. கொடாமுன (A. Godamune) தலைமையிலான கண்டியன் நேஷனல் அசெம்பிளி (Kandyan National Assembly) 1927 ல் கண்டியர்களுக்கு சமஷ்டி வேண்டும் என்ற கோரிக்கையை  டொனமூர் கமிஷன் முன்னிலையில் சமர்ப்பித்தது.

அதுமாத்திரமல்ல அவர் 1952 வரை சிங்களமும்  தமிழும்  உத்தியோக மொழியாக இருத்தல் வேண்டும் என்று  மொழி சமத்துத்தை முன்வைத்தார். அக்காலத்தில் தனி சிங்கள மொழி கொள்கையை முதன் முதலில் முன்வைத்தவர்கள் ஜே. ஆர். ஜெயவர்த்தனவும்,  டட்லி சேனநாயகவுமே.

ஐக்கிய தேசிய கட்சியில்  1947 முதல் இணைந்திருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்காவுக்குமிடையே நீண்டகாலம் கருத்து வேற்றுமை நிலவிவந்தது.  வயதடைந்த டி. எஸ். சேனநாயக்கா தனது மகன் டட்லி சேனநாயக்கவுக்கு முக்கியத்துவம் கொடுத்து  தனது அரசியல் வாரிசாக உருவாக்கிவந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட திரு. பண்டாரநாயக்கா அக்கட்சியை விட்டும் அரசாங்கத்தை விட்டும் வெளியேறி 02 செப்டம்பர் 1951ல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை உருவாக்கி அடுத்த தேர்தலுக்கு தயாரானார். இதற்கிடையில் பிரதமர் டி. எஸ். சேனநாயக்க 22.03.1952 குதிரையில் இருந்து விழுந்து அகால மரணமெய்திய பின்னர் மே 1952 ல் நடைபெற்ற தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையிலான சுதந்திர கட்சி முதல் தடவையாக  போட்டியிட்டது.  அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்களமும் தமிழும் அரசகரும மொழியாக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அவரது சுதந்திர கட்சி 9 ஆசனங்களை மாத்திரமே பெற்று படுதோல்வியடைந்தது. இவரது இத்தோல்விக்கு இவர் கடைப்பிடித்த மொழிசமத்துவ கொள்கை மாத்திரம் காரணமல்ல. டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்தினால் ஏற்பட்டிருந்த அனுதாப அலையும் மகன் டட்லி சேனநாயக்கவுக்கு சாதகமாக அமைந்தது. அதன் பின்னர் நடைபெற்ற 1956 தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், திரு. பண்டாரநாயக்கா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நான்கு கட்சிகளின் கூட்டான மகாஜன எக்சத் பெரமுன, (Mahajana Eksath Peramuna) ஆகிய இரண்டுமே ‘தனி சிங்கள சட்டத்தை நிறைவேற்றுவோம்’ என்ற கோஷத்தை முன்வைத்து போட்டியிட்டன. இதில் திரு. பண்டாரநாயக்கா ஒருபடி மேலே போய் “நான் ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலங்களுக்குள் சிங்களத்தை அரசகரும மொழியாக்குவேன்” என வாக்குறுதியளித்து 95 ஆசனங்களில் 51 ஆசனங்களைப் பெற்று அறுதி பெரும்பான்மையுடன்  பிரதமரானார். அதே தனி சிங்கள கோஷத்தை முன்வைத்து போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி 8 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. இதற்கு 1953ல் வெடித்த ஹர்த்தாலை ஐக்கிய தேசிய கட்சி  துப்பாக்கி முனையில் அடங்கியதும், இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டமையும்   ஒரு காரணமாகும்.  

இவ்வாறு ‘தனி சிங்களம்’ என்ற பிரதான கோஷத்தை முன்வைத்து சிங்கள பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று திரு. பண்டாரநாயக்கா  பிரதமராக பதவி ஏற்றவுடன் அவசர அவரசமாக 1956 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி, 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தை – ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களினதும் இடதுசாரிகளினதும் ஆட்சேபனையை பொருட்படுத்தாமல் – நிறைவேற்றி, சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக மாற்றினார். ‘சிங்களம் மட்டும்’ அல்லது ‘தனி சிங்கள  சட்டம்’ என வர்ணிக்கப்படும் இவ்வினவாத சட்டம் தான் இலங்கையை முதல் தடவையாக இனரீதியில் பிளவுபடுத்தியத்துடன் தமிழ் பேசும் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக்கியது.

இத் ‘தனி சிங்கள சட்டம்’  பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது – 1948 ல் மலையக மக்களின்  பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டப் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தினதும்  தமிழ் பேசும் மக்களினதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பலவீனப்பட்டிருந்த சூழலில் – சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களைப்  பெரும்பான்மையாகக் கொண்டிருந்த  பாராளுமன்றத்தினால் அவ்வநீதியை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் – தமிழரசு கட்சி  பாராளுமன்றிற்கு வெளியே காலி முகத்திடலில் காந்திய பாணியிலே  வன்முறையற்ற சத்தியாகிரகத்தை 05.06.1956 ல் நடத்தியது.

1956 காலிமுகத்திடல் சத்தியாகிரகம்

தீவிர சிங்கள இனவாத அமைப்புகளின் முன்னோடியான கே. எம். பி. ராஜரட்டன தலைமையில்  சிங்களக் குண்டர்கள் கூட்டம் ஒன்று தமிழ் சாத்தியாகிரகிகளை  தாக்கத் தொடங்கியது. சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாக்கப்பட்டனர்.  பொலிஸார் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இலங்கை வரலாற்றில் இதுபோன்று மக்கள் பிரதிநிதிகள் தாக்கப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். சிலர் துர்நாற்றமடிக்கும் பேர குளத்தில் (Beira Lanka ) தூக்கி எறியப்பட்டனர்.

தமிழரசு கட்சியின்  செயற்பாட்டாளரும், முதல் தடவையாக அப்போது  நாடாளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவருமான  A. அமிர்தலிங்கம், தலையில் காயமடைந்து  அதிலிருந்து  இரத்தம் வழிந்தது.  அவரை சுந்தரலிங்கம் எம். பி. நாடாளுமன்ற அறைக்குள் அழைத்துச் சென்றார். அவர்களைக்கண்டதும் – நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய – பிரதமர் திரு. பண்டாரநாயக்கா –  “வாருங்கள் நண்பர்களே .. யுத்தத்தின் கெளரவமான காயங்கள்” (Come my friends…Honorable wounds of war), என இரக்கமற்ற குத்தல் – கருத்துடன் கேலிசெய்து வரவேற்றார். சில சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ரசித்து கேலி கூச்சலிட்டனர். இந்த இழிவான செயலால் ஆத்திரமடைந்த சுந்தரலிங்கம் “ஆம், ஜூன் 5, 1956 இல் போர் தொடங்கிவிட்டது” என்று  கடுமையாக பதிலளித்தார். இந்த பதில் நாட்டில் ஏற்பட்டுக்கொண்டிருந்த மோசமான இனவாத போக்கினை  சரியாக சித்தரித்தது. ஆம் இலங்கையில் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான  முதலாவது இனவாத வன்முறை தாக்குதல் 1956 கல்லோயாவில் தொடங்கியது.

கேள்வி இது தான்; தமிழ் மக்களுக்கான  பிரத்தியேக பிரச்சினைகள்  முனைப்படையாத 1920 – 30 களில் அவர்களின் உரிமைகளையும் சுய கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு சமஷ்டிமுறை மாத்திரமே ஒரே தீர்வு என இலங்கை வரலாற்றில் முதலாவதாக பிரேரித்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, 1952 வரை – ஜே. ஆர். ஜெயவர்தனவும், டட்லி சேனநாயகவும் தனி சிங்கள கோரிக்கையை முன்வைத்தபோதும்  சிங்களமும் தமிழும் சமஉரிமையுடன் ஆட்சி மொழிகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக  இருந்த இவர் 1956 ல் இப்படியான பச்சை இனவாதியாக மாத்திரமல்ல ஜனநாயக விரோதியாகவும் மாறியது எவ்வாறு?  இந்த கேள்விக்கு விடை காணும் முன்னர் இன்னொரு தலைவரைப்பற்றியும் பார்த்துவிடுவோம். இவர் ஒரு காலகட்டத்தில் உன்னதமான  வரலாற்று  பாத்திரம் வகித்தவர்.

2)      கொல்வின் ஆர்  டி சில்வா

அவர் வேறு யாருமல்ல காலம்சென்ற பிரபல இடதுசாரி தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்  டி சில்வா (கொல்வின் ரெஜினோல்ட் டி சில்வா) தான். இலங்கை இடதுசாரி இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான இவர் இந்நாடு போற்றும் பிரபல சட்டத்தரணியுமாவார். 1930 களில் கொழும்பு  நகரில் நிறைந்து நின்ற – கொழும்பு நகரை தமது உழைப்பால் உருவாக்கிய – இந்திய தொழிலாளருக்கு எதிராக, இலங்கையின் முதலாவது  தொழிற்சங்கமான ‘இலங்கை தொழிலாளர் சங்கத்தை ‘ (Ceylon Labour Union) 1922ல் ஆரம்பித்து பலமிக்க தொழிற்சங்க தலைவராக உருவாகியிருந்த ஏ. ஈ. குணசிங்க, இந்தியர் எதிர்ப்புவாதத்தை கிளம்பியபோது, அவ்வினவாத பேரலைக்கு  எதிராக, என். எம். பெரேரா, லெஸ்லி குணவர்தன, பிலிப் குணவர்தன, ரொபர்ட் குணவர்தன ஆகிய ஏனைய இடதுசாரி தலைவர்களுடன் இணைந்து, துணிகரமாக நின்று நடத்திய தொழிற்சங்க போராட்டத்தில் தனது அரசியல் பிரவேசத்தை 1932 ல்  வெள்ளவத்தை மில் வேலை நிறுத்தத்துடன்  இவர் தொடங்கினார்.

கொல்வினுடன் பிறேஸ்கேர்டில்

அன்றிலிருந்து எண்ணிக்கையில் – சிறிய தேசியங்களின் சமத்துவ உரிமைக்காகவும் அரசியல் சீர்த்திருத்தத்திற்காகவும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும்  1960கள் வரை, முப்பது வருடகாலம், இவர் நடத்திய இடையறாத போராட்டங்கள் வரலாற்றில் என்றும் அழியாதவை. 

டிசம்பர் 18, 1935 ஆம் திகதி, அனைவருக்கும் சமவுரிமை வேண்டும் என்ற அர்த்தம் கொண்ட,  இலங்கையில் முறைப்படி உருவாக்கப்பட்ட முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜ கட்சியின்  அப்போதைய தலைவராக இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரேஸ்கேர்டில் விவகாரத்தில் [2] இவரும் சமசமாஜ கட்சியும்   வகித்த பாத்திரத்தால்  நாட்டின் முழுமக்களின் கவனத்தையும் ஈர்த்தனர்.

சிங்களம் – தமிழ் ஆகிய இரண்டும் அரச கரும மொழிகளாக  இருத்தல் வேண்டும் என்ற கொள்கையில்  நீண்டகாலம் உறுதியாக நின்ற – சிங்களவர்கள் மத்தியில் அடித்தளத்தைக் கொண்ட – ஒரே கட்சியாக லங்கா சமசமாஜக் கட்சி நீண்டகாலம் நிலைத்தது. 1955ல் தனி சிங்கள கோரிக்கையும்  சிங்கள பேரினவாதமும் மேலோங்கி நின்றபோது  1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொழும்பு நகர மண்டபத்தில் மொழிக்கொள்கை தொடர்பாக இக்கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தின் போது இனவாத குண்டர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தது. பொலிசார் அதனைத் தடுக்க வில்லை. அப்படியான நெருக்கடிக்கு மத்தியிலும் அக்கட்சி தனது இரு மொழிக்கொள்கையில் உறுதியாக நின்றது.

அதுமாத்திரமல்ல 1956 தனி சிங்கள சட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது சமசமாஜ கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்து அறிவுபூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் வாதிட்டனர். அவற்றுள் என். எம். பெரெராவும்  கொல்வின் ஆர். டி. சில்வாவும் நிகழ்த்திய உரைகள் பிரசித்தமானவை. அதிலும் குறிப்பாக கொல்வின் ஆர். டி. சில்வா ஆற்றிய உரை இன்றும் பலராலும் மேற்கோள் காட்டப்படுகிறது. அவர் தனது உரையில் இருமொழி கொள்கையை அமுல்படுத்தினால் இந்நாடு ஒரு சுதந்திர  நாடாக இருக்கும். ஒரு மொழி கொள்கையை அமுல்படுத்தினால்  இரத்தம் சிந்தும்  இரு நாடுகளாக பிளவுபட்டுவிடும் என எச்சரித்து “இரு மொழி ஒரு நாடு – ஒரு மொழி இரு நாடு” என்று கூறி தனது உரையை முடித்தார். அவ்வாசகம் வருமாறு:

“… எமக்கு ஒரு சுதந்திர இலங்கை வேண்டுமா அல்லது இந்த இந்தியப் பெருங்கடலில்  உலாவும் ஒவ்வொரு நாசகார ஏகாதிபத்திய அரக்கனாலும் விழுங்கப்படக்கூடிய இரத்தம் வடியும் இருபாதி இலங்கை வேண்டுமா? உண்மையில்  மொழிப் பிரச்சினை என்ற வடிவத்திலும் தோற்றத்திலும் இப்போது  நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் விவகாரங்கள் இவை தாம் .. ஒரு மொழி, இரண்டு தேசங்கள்: இரண்டு மொழிகள், ஒரு தேசம்”[3]

துரஷ்டவசமாக இதே கொல்வின். ஆர்.  டி. சில்வா தான்  ஸ்ரீமா பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அரசியல் யாப்பு  விவகாரத்திற்கும் (Constitutional Affairs) பெருந்தோட்டதுறைக்கும் (Plantation Industries) பொறுப்பான அமைச்சராக மே 1970 முதல் செப்டம்பர் 1975 வரை பதவி வகித்தார். 1972 நிறைவேற்றப்பட்ட குடியரசு அரசியல் யாப்பை தயாரிக்கும் குழுவுக்கும் இவரே தலைமை தாங்கினார்.

இக் குடியரசு அரசியல் யாப்பில் தான் அதுவரை  சிலோன்  (Ceylon) என்று வழங்கப்பட்டுவந்த இலங்கை ஸ்ரீ லங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டமையும் அதன் பெயர் மாற்றப்பட்டமையும் பாராட்டப்படவேண்டிய விடயங்களே. எனினும் 1958 தமிழருக்கெதிரான பாரிய  வன்முறை தாக்குதலுக்கான  உடனடி காரணம் வாகன பதிவு தகடுகளில் “புனித” என்று பொருள்படும் சிங்கள “ஸ்ரீ” எழுத்தை பொறித்தமைக்கு தமிழர்கள் எதிர்ப்பு காட்டியமையேயாகும். அதே ‘ஸ்ரீ’ எழுத்தைக் கொண்டதாக நாட்டிற்கு  பெயர் சூட்டியதுடன் நில்லாமல் பௌத்த மதத்திற்கு  விசேட இடத்தையும் இவர் தயாரித்த அரசியல் யாப்பு வழங்கியது. அது மாத்திரமல்ல அதுவரை அவர் பிரதிநிதித்துவப்படுத்திய இரு மொழிக்கொள்கைக்கு மாறாக தனி சிங்கள சட்டத்தை அவர் தயாரித்த யாப்பு உறுதி செய்தது.

மீண்டும் கேள்வி இது தான். இடதுசாரி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட கொல்வின் ஆர் .டி. சில்வா போன்ற ஒரு தலைவன் திரு. பண்டாரநாயக்கா காலத்தில் 1956ல் கூட இருமொழிக்கொள்கைக்காக துணிச்சலுடன் எதிர்நீச்சலடித்த இவர் 1970களில் இவ்வாறு மாறியதேன்? அதற்கான விடையைத்தான்  இவ்வாய்வு தேடுகிறது. 

தொடரும்.


குறிப்பு :

[1] “A thousand and one objections could be raised against the system, but when the objections are dissipated, I am convinced that some form of federal government will be the only solution.”

[2] பிரேஸ்கேர்டில் விவகாரம்: மார்க் அந்தனி லெஸ்டர் பிரேஸ்கேர்டில்  (Mark Anthony Lyster Bracegirdle) என்ற பிரிட்டனில் பிறந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இளம் இடதுசாரியான இவர்  ஏப்ரல் 4, 1936 ல்  இலங்கைக்கு தோட்ட துரையாக பயிற்சி பெறுவதற்காக மாத்தளைக்கு அருகில் உள்ள மடுல்கெல்லையில் உள்ள ரெலுகாஸ் தோட்டத்திற்கு வந்தார். அங்கு தோட்ட தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டியதுடன் லங்கா சமசமாஜக் கட்சியின்  நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்கத் தொடங்கினார்.

தோட்ட ராஜாக்களான வெள்ளை துரைமார் இதனை தங்களுடைய கௌரவத்தை பாதிக்கும் செயலாக கருதினர்.  அவர்களது செல்வாக்கின் காரணமாக அப்போது ஆளுனராக  இருந்த சேர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் (Sir Reginald Stubbs) ஒரு நூற்றாண்டு பழமையான சட்டத்தின் கீழ் பிரேஸ்கேர்டிலை நாடுகடத்துவதற்கான உத்தரவை வழங்கினார். இவ்வுத்தரவின் படி 48  மணிநேரத்துக்குள் நீராவி கப்பல் மூலம் இவர் வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்டிருந்தது.

இதனை சமசமாஜ கட்சி ஒரு சவாலாக எடுத்தது. பிரேஸ்கேர்டலின்  ஒப்புதலுடன் கட்சி அவ்வுத்தரவை மீற முடிவு செய்தது. பிரேஸ்கேர்டல் தலைமறைவாக்கப்பட்டார். ஏப்ரல் 24 ம் திகதி அவருக்காக காத்திருந்த  நீராவி கப்பல் அவர்  இல்லாமலே  வெளியேறியது. ஆளுநரும் தோட்ட துரைமாரும் ஆத்திரமடைந்தனர். அவரைத்தேடி  நாடு முழுவதும் போலீஸ் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. ஆனாலும் அவரை கைது செய்யமுடியவில்லை.

அடுத்த சிலநாட்களில் நடைபெற்ற கட்சி  மே தினத்தில் “எங்களுக்கு பிரேஸ்கேர்டில் வேண்டும் – ஸ்டப்ஸை நாடு கடத்துங்கள்” என்ற பதாகைகள் ஏந்தப்பட்டு முழக்கமிடப்பட்டன.  அதுமாத்திரமல்ல பிரேஸ்கேர்டில் விவகாரம் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல் அமைப்பு நெருக்கடியை (first  constitutional crisis) தோற்றுவித்தது. இரண்டு சமமாஜ கட்சி அரச சபை (State Council) உறுப்பினர்களான என்.எம். பெரேராவும்  பிலிப் குணவர்தனவும்  உள்துறை அமைச்சரின் ஆலோசனையின்றி பிரேஸ்கேர்டலை நாடு கடத்துவதற்கான ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக மே 5ஆம் திகதி, அவரது அதிகாரத்தை கட்டுப்படுத்தும்  வாக்கெடுப்பை முன்மொழிந்தனர். இப்பிரேரணை 7க்கு 33 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் பிரேஸ்கேர்டில் சார்பில் உச்ச நீதிமன்றில் ஆட்கொணரு  மனு  ஒன்றும் இவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சேர்  சிட்னி ஆபிரஹாம்ஸ் தலைமையிலான மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் சட்டப் போராட்டம் நடந்தது. இந்த வழக்கு சட்ட வரலாற்றை உருவாக்கியது. இலங்கையின் முன்னணி சிவில் சட்டத்தரணியான திரு எச்.வி. பெரேராவும் 29 வயதேயான இளம் கொல்வின் ஆர் டி சில்வாவும்  பிரேஸ்கேர்டில் சார்பாக இலவசமாக வாதாடினர். இறுதியில் மே 18 ஆம் திகதி உச்ச நீதிமன்றம், பிரேஸ்கேர்டில் ஒரு சுதந்திரமான மனிதர் அவரது பேச்சு உரிமையில் குறுக்கிடமுடியாது எனக்கூறி கவர்னரின் நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்தது.

[3] “… Do we want an independent Ceylon or two bleeding halves of Ceylon which can be gobbled up by every ravaging imperialist monster that may happen to range the Indian Ocean? These are issues that in fact we have been discussing under the form and appearance of the language issue… One language, two nations; Two languages, one Nation…”


ஒலிவடிவில் கேட்க

12064 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)