Arts
19 நிமிட வாசிப்பு

தேயிலையின் பசுமையும், சோர்வின் விளிம்பிலே நின்று உழைக்கும் தோட்டத்தொழிலாளரும்

June 19, 2022 | Ezhuna

மலையக சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமை பிரச்சினைகளையும், தோட்ட தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்தியதாக ‘மலையகம் : சமூக – பொருளாதார அரசியல் பரிமாணங்கள்’ இந்தத்தொடர் அமைகின்றது. அத்தோடு இந்தத்தொடர் மலையத்தில் தேயிலை கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகள், தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களையும்  வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைக்கின்றது.


இலங்கையின் மலைநாட்டில் அடியெடுத்து வைக்கும் எவருக்குமே அப்பிரதேசத்தின் இயற்கை வனப்பினைக்கண்டு அதில் தமது உள்ளத்தைப் பறிகொடுக்காதிருக்க முடியாது. பச்சைக்கம்பளம் விரித்ததுபோன்று மலைச்சரிவுகளிலே பரந்துவிரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களும், அங்குத் தேயிலைச் செடிகளிலே செழித்து வளர்ந்திருக்கும் பசுந்தளிர்களும், மலைமுகடுகளிலிருந்து பாய்ந்துவரும் அழகிய நீரோடைகளும், முகில்களால் அரவணைக்கப்பட்ட மலைச்சிகரங்களும் பார்ப்போருக்குப் பரவசமூட்டும் காட்சிகளாகும், இயற்கையின் இந்த எழில்கொஞ்சும் காட்சிகளிலிருந்து எமது பார்வையைச் சற்றுத்திருப்பி அங்கு தேயிலைச் செடிகளுக்கிடையே மழை, வெயில், பனி, காற்று எனப்பாராது வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் பக்கம் செலுத்துவோமாயின் ஏதோ ஒன்று எம்மை உலுக்குவதை உணரலாம். அங்குக் காணப்படும் இயற்கையின் செழுமைக்கு மாறான தோட்டத் தொழிலாளரின் வாடியவதனங்களும், ஒட்டியகன்னங்களும், இருளடைந்த கண்களும், இயற்கையான முதுமைநிலையினை அடையுமுன்னரே முதுமைக்கோலத்தை எட்டிவிடும் நடுத்தரவயது பெண்தொழிலாளர்களின் தோற்றமுமே எம்மை இந்நிலைக்கு இட்டுச் செல்வனவாகும். கடுமையான உழைப்பு, மந்தபோஷாக்கு, மோசமான காலநிலையின் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்குப் பொருத்தமான மேலாடைகளும் உரிய இருப்பிடவசதிகளும்; இல்லாமை, கடுமையான உழைப்பிற்கு மத்தியிலும் அத்தொழிலாளரிடையே நிலவும் வறுமை போன்றவற்றின் கோரவிளைவுகளே இவை என்பதை நாம் விளங்கிக்கொள்ள அதிகநேரம் செல்லாது. தோட்டத் தொழிலாளரிடையே நிலவும் வறுமையின் தன்மையையும் அதற்குப் பங்களிக்கும் காரணிகளையும் தொட்டுக்காட்ட முயலுகின்றது இச்சிறு கட்டுரை.

தேயிலைத் தோட்டங்கள்

தோட்டத்தொழிலாளருக்கு ஓரளவு நிரந்தரமான வேலைவாய்ப்புக்களும், இலவச வீட்டுவசதி, அடிப்படை சுகாதார – மருத்துவ வசதிகள் போன்றனவும் கிடைக்கக்கூடியதாக இருப்பினும், அவற்றில் காணப்படும் குறைபாடுகளினாலும், வரலாற்றுரீதியானதும் வேறு காரணங்களினாலும் அவர்களிடையே காணப்படும் மோசமான வறுமைநிலை என்பவற்றை பல்வேறு ஆய்வுகள் வெளிக்கொணர்ந்துள்ளன. தோட்டமக்களே இலங்கையில் ஆகக்கூடிய வறுமை நிலையிலிருப்பதாக அண்மைய உலகவங்கி அறிக்கையொன்றும் சுட்டிக்காட்டியது. தோட்டத்தொழிலாளரின் வறுமை நிலைக்கு நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியுண்டு. அவர்களது வறுமை நிலையானது அவர்கள் இங்கு வந்து தொழில் செய்யத்தொடங்குவதற்கு முன்னரே அவர்களிடம் இருந்துவந்த ஒன்றாகும். இந்தியக் கிராமங்களில் சாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கப்பட்டோரும், பிரித்தானிய ஆட்சியாளரின் பாரபட்சமான வர்த்தக – கைத்தொழில் கொள்கைகளினால் தமது வேலை வாய்ப்புக்களை இழந்து வறுமைநிலைக்கு தள்ளப்பட்டிருந்தோரும், கடன்சுமையால் பாதிக்கப்பட்டிருந்தோருமே பல்வேறு பிரித்தானிய காலனித்துவ நாடுகளுக்குத் தொழிலாளராகக் கொண்டு செல்லப்பட்டனர் அல்லது சுயவிருப்பின்பேரில் தாமாகவே அங்கு குடிபெயர்ந்து சென்றனர். அம்மக்களிடையே காணப்பட்ட மோசமான வறுமைநிலையே அவர்களது குடிப்பெயர்விற்கான பிரதான உந்துசக்தியாக செயற்பட்டது எனக்கூறின் அது மிகையாகாது.

தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகள்

கங்காணிமுறையின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இவர்கள் சொந்தக்கிராமங்களில் தாம்பெற்றிருந்த கடன்களை அடைப்பதற்கும், பிரயாணச்செலவிற்குமாக கங்காணிமாரிடம் பெற்ற கடன் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே இங்கு வந்துசேர்ந்ததால் மோசமான வறுமைநிலையே அவர்களது குடிப்பெயர்விற்கான பிரதான உந்துசக்தியாக செயற்பட்டது எனக்கூறின் அது மிகையாகாது. கடனாளிகளாகவே அவர்கள் இலங்கையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இங்கு வந்து தொழில்செய்ய ஆரம்பித்த பின்னருங்கூட, அவர்களது வருமானங்கள் அன்றாட வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லாதிருந்ததால் அவர்கள் மேலும் மேலும் கடன் பெறநேரிட்டது. அத்துடன், அக்காலத்தில் நடைமுறையிலிருந்த துண்டுமுறையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கங்காணிமார்கள் அக்கடன்களின் அளவினை படிப்படியாக உயர்த்தி வந்ததால் அவர்களது கடன்பளு குறைவதற்குப் பதிலாக தொடர்ந்தும் அதிகரித்து வந்தது. காலப்போக்கில் துண்டுமுறை ஒழிக்கப்பட்டு இந்த நாட்பட்ட கடன்களும் அழிக்கப்பட்ட பின்னரே (1921 இல்) அவர்கள் தமது கடன்சுமையினின்றும் விடுபடக்கூடியதாகவிருந்தது. இருந்துங்கூட, வேதனங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே இருந்துவந்ததாலும், தமது அறியாமை காரணமாக தாம் பெற்ற சிறிய வருமானத்தைக்கூட சரியானமுறையில் செலவிடத்தவறியதாலும் கடன்பெறுவது அவர்களிடையே நிரந்தரமான ஒரு வழக்கமாக மாறிவிட்டதோடு அவர்களை வறுமைநிலைக்குத் தள்ளும் ஒரு முக்கிய காரணியாகவும் செயற்பட்டு வருகின்றது.

இலங்கை சார்பளவில் குறைந்த தலாவருமானத்தைக் கொண்ட ஒரு நாடாகவிருந்தபோதும், மனித அபிவிருத்தியில் அது சிறந்ததொரு நிலையை அடைந்துள்ளது என்பது பல்வேறு ஆய்வாளர்களினாலும் சர்வதேச தாபனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். மனித அபிவிருத்தியானது நீண்டதும் சுகநலத்துடன் கூடியதுமான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பு, அறிவு என்பவற்றோடு, அறிவுசார் உலகில் பங்குபற்றுவதன் மூலம் எழும் நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான தனிமனிதர்களின் இயலுமைகள் அல்லது ஆற்றல்கள், சீரிய வாழ்க்கையொன்றினை அமைத்துக் கொள்வதற்கான சக்தி (ஒருவனது தொழிலும், வருமானமும் இதனை நிர்ணயிக்கும்) என்பவற்றில் தங்கியிருக்கும். ஒரு நாடு எந்தளவிற்கு மனிதஅபிவிருத்தியை அடைந்துள்ளது என்பதை அளவிடுவதற்கு அந்நாட்டு மக்களது சராசரி ஆயுள்எதிர்பார்க்கை, தேசிய ரீதியிலான எழுத்தறிவு விகிதம், தலாவருமானம் என்பன கையாளப்படுகின்றன. 1930ம் ஆண்டுகளின் நடுப்பகுதிதொட்டே இந்நாட்டில் அமுலாக்கப்பட்டு வந்த பல்வேறு சமூகநலன் செயற்றிட்டங்களினாலேயே இலங்கை உயர்ந்த மனித அபிவிருத்தியை அடைந்துகொள்வது சாத்தியமாகிற்று. அரிசி, மா, சீனி போன்ற அத்தியாவசிய உணவுப்பண்டங்களை மானியவிலைகளில் பங்கீடு செய்தல், நாடுதழுவியரீதியில் மக்களுக்கு இலவசக்கல்வி, இலவச சுகாதார-மருத்துவ வசதிகள் என்பவற்றை வழங்குதல், மானியவிலையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய இச்சமூகநலன் நடவடிக்கைகளில் பல இன்றும் அமுலிலுள்ளன. இவற்றின் விளைவாக நாட்டுமக்களிடையே பொதுவான மரணவிகிதம், தாய்சேய் மரணவிகிதம், பிறப்புவிகிதம் என்பன கணிசமான வீழ்ச்சியை அடைந்துள்ளன. மறுபக்கத்தில், எழுத்தறிவுவிகிதம், ஆயுள்எதிர்ப்பார்க்கை, பாடசாலையில் சேரவேண்டிய சிறார்களில் உண்மையிலேயே சேருவோரின் விகிதம் என்பன படிப்படியாக அதிகரித்து வந்துள்ளன. எனினும், இலங்கை அடைந்துள்ள இந்த மனித அபிவிருத்தியானது நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கிடையிலும் சமூக – இனக்குழுக்களுக்கிடையிலும் சமமாக பங்கிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக, சமூக – பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரதேசங்களும் பின்தங்கிய சமூக – இனக்குழுக்களும் தொடர்ந்தும் நாட்டில் இருந்து வருகின்றன. கிராம விஸ்தரிப்புத் திட்டங்களின் கீழ் போதிய வருமானமும் வசதிகளுமின்றி கஷ்டவாழ்க்கை நடத்திவரும் வரண்டவலய குடியேற்றவாசிகள், நகர்ப்புற சேரிவாழ்மக்கள், தனிமைப்படுத்திய பிரதேசங்களில் வாழும் மீனவ சமூகத்தினர் போன்றோரை இதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறலாம். இனவன்முறைகளாலும் போர் அனர்த்தங்களாலும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் அகதிகளாக வாழ்வோரையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இடப்பெயர்வு காரணமாக இவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் மலையக தோட்டத்தொழிலாளரும் பின்தங்கிய ஒரு சமூக-இனக்குழுவினராக கருதப்படவேண்டியவர்களே. அத்துடன், மேலே குறிப்பிட்ட ஏனைய சமூக – இனக்குழுவினரிடையே இல்லாத ஒன்றும் இம்மக்களிடையே காணப்படுகின்றது. ஏனைய சமூக – இனக்குழுவினரிடையே ஒரு சில பிரிவினர் மட்டுமே பின்தங்கிய நிலையிலிருக்க மலையகத் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை முழுச் சமூகமுமே ஏதோ ஒரு வகையில் பின்தங்கி இருப்பதே இந்த வேறுபாடாகும்.

தோட்டத் தொழிலாளர்கள்

தேயிலை, றப்பர் என்பவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி என்பவற்றிற்கூடாகத் தோட்டத்தொழிலாளர் இந்நாட்டின் செல்வவளத்திற்கு கணிசமாக பங்களித்து வருகின்றனர். கடந்த காலங்களில் அவர்களது கடும்உழைப்பே நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினர் அடைந்துள்ள பௌதீக வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் ஆதாரமாகவிருந்தது. இன்றுங்கூட, அவர்களது கடுமையான உழைப்பே நாட்டுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு செலாவணியில் கணிசமான பகுதியை ஈட்டிக்கொடுக்கின்றது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், அண்மைக்காலம்வரை அரசாங்க வரிவருமானத்திற்குங்கூட அவர்களது உழைப்பு பெரும் பங்களித்து வந்தது. ஆனால் இதற்கு மாறாக, பொருளாதார அடிப்படையிலும், கல்வி, சுகாதாரம், சமூகஏற்புடமை, சமூக-கலாசார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் என்பவற்றிலும் அவர்களது நிலை துரதிர்ஷ்டவசமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. சுகாதார – இருப்பிடவசதிகள், கல்வி, சிசு மரணவிகிதம், போஷாக்கு போன்ற பல்வேறு சமூகஅபிவிருத்திக் குறிகாட்டிகளினடிப்படையில் தோட்டத்தொழிலாளர் இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளனர்.

தமக்கென சீரான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாதிருப்போரே வறுமை நிலையிலிருப்பதாகக் கூறப்படுகின்றது. பொதுவானதொரு கருத்தில், தனிநபரொருவரோ, ஒரு குடும்பமோ அல்லது ஒரு சமூகமோ தனது அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாதிருக்கும் நிலையிலேயே அது வறுமைநிலைக்கு தள்ளப்படுகின்றது. வறுமையை நிர்ணயிப்பதில் பொருள்சார்ந்த காரணிகளோடு பொருள் சாராத காரணிகள் சிலவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தவகையில் மனிதனது அடிப்படைத் தேவைகளை இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். அவற்றுள் முதலாவது, மக்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதனவாக இருக்கும் போதுமான அளவு உணவு, தேவையான போஷாக்கு, சுகாதார – மருத்துவ – இருப்பிட வசதிகள், தூயகுடிநீர் வசதி, பாதுகாப்பான எரிபொருட்களின் கிடைக்குந்தன்மை போன்றவற்றை உள்ளடக்கும். இது அடிப்படை பௌதீகத் தேவைகளாகும். மற்றையது, மக்களது சமூக-கலாசாரதேவைகளைக் குறிக்கும். தொட்டு உணரமுடியாத தேவைகளாகும். ஆரம்பக்கல்விக்கான வசதிகள் உட்பட ஒருவனுக்கு அரசியலில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் என்பவற்றோடு மனித சுதந்திரங்கள், சமூக பாதுகாப்பு, சுயகௌரவம், சிறந்த வேலைநிலைமைகளை அனுபவிப்பதற்கான உத்தரவாதம் என்பன இதிலடங்கும்.

மனிதனது வாழ்க்கை திருப்திகரமானதாக அமைவதற்கு மேலே குறிப்பிட்ட இருவகைத் தேவைகளுமே ஓரளவிற்காவது பூர்த்திசெய்யப்படுவது இன்றியமையாததாகும். பொதுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆகக்குறைந்த மட்டத்திலாவது இவற்றை பூர்த்தி செய்யமுடியாதிருக்கும் நிலையிலேயே வறுமை தோன்றுகின்றது. தோட்டத் தொழிலாளரைப் பொறுத்தவரை, அவர்களது அடிப்படை பௌதீகத்தேவைகள் திருப்திகரமாக இல்லாவிடினும் அவை ஓரளவிற்காவது பூர்த்தி செய்யப்பட்டபோதும், அவர்களது சமூக-கலாசாரத்தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் சமூக-கலாசார அடிப்படையிலும் அவர்கள் வறுமை நிலையில் இருக்கின்றன.

1970ம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட முன்னர் பொதுவான நோய்களுக்குட்படல், தொற்றுநோய்களின் தாக்கம், மரணவிகிதம் என்பன அவர்களிடையே மிகவும் உயர்வாகவிருந்தன. தோட்டங்களை முகாமை செய்த தனியார் கம்பெனிகள் தமது ஊழியரைப் பராமரிப்பதிலும் பார்க்க நிலத்தையும் நிலத்தோடு தொடர்புள்ள ஏனைய சாதனங்களையும் பராமரிப்பதிலேயே கூடிய கவனம் செலுத்தியமையே இதற்கான முக்கிய காரணமாகும். தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் அவற்றை முகாமை செய்வதற்கென உருவாக்கப்பட்ட அரச கூட்டுத்தாபனங்களிரண்டும் தத்தமது தலைமையகங்களில் தனித்தனி சமூகஅபிவிருத்திப் பிரிவுகளைத் தாபிப்பதன்மூலம் தொழிலாளரதும் அவர்களது குடும்பத்தாரதும் சுகாதார-மருத்துவப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் புகுத்தின. இதற்கு பெருமளவு வெளிநாட்டு உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டது. நோய்த்தடுப்பு ஊசியேற்றல், வயிற்றோட்டம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தல், குடும்பத்திட்டமிடல் என்பவற்றின் மூலம் அவர்களது சுகநலத்தைப் பேணுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பான குடிநீர்விநியோகம், சுகாதாரமேம்பாடு, வீடமைப்புத்திட்டங்கள் என்பனவும் இதிலடங்கின. 1992ம் ஆண்டின் பின்னர் தோட்டத்துறையினரின் சமூகநலனுக்கும் வீடமைப்பிற்குமாக நிறுவப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு, சமூகநலன் என்பவற்றிற்கான பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் என்ற தாபனத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இம்மக்களிடையே தாய்-சேய் மரண விகிதங்கள், இறந்துபிறக்கும் குழந்தைகளின் விகிதம், பொதுவான நோய்களுக்குட்படுதல், தொற்றுநோய்களுக்குள்ளாதல் போன்றன ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ள போதும், ஏனைய துறைகளோடு ஓப்பிட்டுரீதியில் சுகாதார – மருத்துவ நிலைமைகளில் இம்மக்கள் இன்றும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

வயிறு, சுவாசக்குழாய் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட நோய்கள் (Bronchitis, Asthma) இவர்களிடையே பரவலாகக் காணப்படுகின்றன. தோட்டமக்களிடையே இப்பொழுது நடைமுறைபடுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட கருத்தடைமுறைகள் பற்றியும் பலத்த கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள் இதில் காணப்படும் முக்கிய குறைபாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளன. குடும்பக்கட்டுப்பாடு ஒரு முன்னேற்றகரமான செயற்பாடு என்பதையும், உயர்ந்த பிறப்புவிகிதங்கள் காரணமாக கடந்த காலங்களில் தோட்டத்தொழிலாளர் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வந்துள்ளன என்பதையும் எவருமே மறுக்கமுடியாது. எனினும் குடும்பக் கட்டுப்பாட்டுமுறையானது இயன்றளவிற்கு சுயவிருப்பின்பேரில் மேற்கொள்ளப்படுவதாகவும், ஒவ்வொருவரும் தத்தமக்குப் பொருத்தமான கட்டுப்பாட்டு முறைகளைத் தெரிவுசெய்து கையாளுவதுமாக இருப்பதுவே சிறந்த குடும்பக்கட்டுப்பாட்டுமுறையாகும். தோட்டப்புற மக்களைப் பொறுத்தவரை, இவை பின்பற்றப்படுகின்றனவா என்பது பற்றி ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. நவீன குடும்பக்கட்டுப்பாட்டுமுறைகள் சுகாதாரமான முறையில் செய்யப்படுவதில்லையென்றும், இவற்றைக்கையாளும் பெண்களிடையே இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதென்றும், குடும்பக்கட்டுப்பாடு கண்மூடித்தனமான முறையில் அவர்கள் மீது திணிக்கப்படுவதாகவும் பரவலான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. தோட்டப்பெண்களிடையே இப்பொழுது கருவளவிகிதம் வெகுவாகக் குறைந்து வருகின்றது. கல்வியிலும் ஏனையதுறைகளிலும் முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தினரின் மத்தியில் குடும்பக்கட்டுப்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியுமென்பது இது பற்றிய ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாகும்.

மனித அபிவிருத்தி சார்ந்த பல்வேறு அம்சங்களில் பின்தங்கிய நிலையிலிருக்கும் தோட்டத்துறை மக்களிடையே குடும்பக்கட்டுப்பாடு இந்தளவு வெற்றியடைந்திருப்பதற்கு வெளியாரின் திட்டமிட்ட தலையீடுகளே காரணமென்பதில் கருத்து வேறுபாட்டிற்கு இடமிருக்க முடியாது. இவ்வித குடும்பக்கட்டுப்பாடு காரணமாக தோட்டப்புற மக்களிடையே பிறப்புவிகிதம் குறைந்து வருவதோடு, அது இலங்கையினது சராசரி பிறப்புவிகிதத்திலும் பார்க்கக் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆரம்பப் பாடசாலைகளில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கையிலும் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை சமீபத்திய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. மிகஅண்மிய எதிர்காலத்தில் இது இலங்கையினது மொத்த சனத்தொகையில் தோட்டமக்களின் விகிதாசாரத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, அவர்களது அரசியல்சக்தியையும் பாதிக்குமென்பதில் ஐயமில்லை. இம்மக்களது அறியாமையையும் வறுமைநிலையையும் சாதகமாகப் பயன்படுத்தியே குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் அவர்களிடையே செயற்படுத்தப்படுவதாகத் தெரிகின்றது. சனத்தொகையை இவ்வாறு பலவந்தமாக கட்டுப்படுத்த முயலுவது மனிதாபிமான ரீதியில் தவறான ஒரு செயல் என்பதை இங்கு வலியுறுத்திக் கூறவேண்டியுள்ளது. இவ்வித குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள்கூட அவர்களது வறுமைநிலையின் ஒரு வெளிப்பாடாகவே உள்ளன என்று துணிந்துகூறலாம். கருத்தடைமுறைகளை மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் சிறு பணவெகுமதிகளுக்காக ஆண் தொழிலாளர்கள் பலர் அவற்றை விரும்பியே ஏற்றுக்கொள்வதாகக் கூறப்படுகின்றது. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மறைமுகமான பல்வேறுபட்ட பலவந்தங்களினூடாகவே கருத்தடைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது பல்வேறு ஆய்வாளர்களின் கருத்தாகும். எனவே, தோட்டமக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றியமையாதது.

தோட்டத்தொழிலாளரின் வறுமைநிலைக்குப் பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. இச்சிறு கட்டுரையில் அவையனைத்தையுமே விரிவாக ஆராய்வது இயலாத காரியமாகும். எனவே, முக்கியமான காரணிகள் சில மட்டுமே இங்கு இனங்காணப்பட்டுள்ளன.

1. தனிநபர் ஒருவருக்கோ, ஒரு குடும்பத்திற்கோ ஆகக்குறைந்த சீவன மட்டத்திலாவது வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவைப்படும் பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கும் நிலையிலேயே அவர்கள் வறுமைநிலைக்கு தள்ளப்படுகின்றனர். தோட்டத்தொழிலாளரது நாளாந்தவேதனங்கள் குறைவானவை என்பதை இங்கு வலியுறுத்திக் கூறத்தேவையில்லை. எனினும், ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோர் தோட்டங்களிலேயே வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால் அவர்களது குடும்பவருமானம் ஓரளவு உயர்வாக இருக்கின்றது. நாட்டின் ஏனைய துறைகளைச் சேர்ந்தோரின் குடும்பவருமானங்களோடு ஒப்பீட்டுரீதியில் இது குறைவாக இருந்தபோதும், வருமானத்தின் அடிப்படையில் அவர்கள், முழு வறுமைநிலையில் இல்லையென பல ஆய்வுகள் காட்டுகின்றன. வருமானத் தினடிப்படையில் அவர்களிடையே வறுமை குறைவாகவிருப்பதற்கு அவர்களது நலனை மேம்படுத்தும் எவ்வித விசேடஏற்பாடுகளோ, பாதுகாப்புவலையமைப்புகளோ காரணமாகவிராது, கிரமமான வருமானத்தைத்தரும் தோட்டத்துறை தொழில்வாய்ப்புக்களே காரணம் என்பதை இங்கு வலியுறுத்திக் கூறவேண்டியுள்ளது. அவர்கள் வாழுகின்ற கஷ்டமான இயற்கைச்சூழல், வேலைநிலைமைகள் என்பன காரணமாக அவர்களுக்கு அதிகமான சக்தி தேவைப்படுவது வருமானக்கணிப்பீடுகளில் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பதும், வாழ்க்கைத்தரத்தைப் பொறுத்தமட்டில் தோட்டத்துறையே மிக மோசமான நிலையிலுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கன. தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையும், சிறந்த கல்வியையும், பொதுத்துறைப் பதவிகளையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் வரையறுக்கப்பட்டிருப்பதையும், தோட்டத்துறைக்குள்ளேயே உயர்மட்டப்பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்படுவதையும் இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. மனித சுதந்திரங்கள், சமூக பாதுகாப்பு, சுயகௌரவம், சிறந்த வேலைநிலைமைகள் போன்ற பொருள் சாராத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் அவர்கள் ஒருவித வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

2. வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்கள், பொருட்கள் என்பன கிடைக்கக்கூடியதாக இருத்தல், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுதல் என்பவற்றிற்கும் மேலாக அவ்வாறு கிடைக்கும் சாதனங்களையும் வாய்ப்புக்களையும் கையாண்டு தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு வறியமக்களிடம் அதற்கான ஆற்றல்களும் இயலுமைகளும் உள்ளனவா என்பது முக்கியமானதாகும். ஒரு தனிமனிதனின் ஆற்றல்களையும் இயலுமைகளையும் அவன் வாழுகின்ற சமூகசூழல், இயற்கைச்சூழல், அவனது தனிமனிதஅடைவுகள் (கல்வியறிவு, சிந்தனாசக்தி, செயலாற்றல்) என்பனவே நிர்ணயிக்கின்றன. முன்னேற்றத்திற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்பட்டாலும் ஒரு தனிமனிதன் தான் வாழுகின்ற இயற்கைச்சூழல், சமூகச்சூழல் என்பன காரணமாக அவ்வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நன்மைகளைப் பெறமுடியாதநிலை காணப்படலாம். உதாரணமாக, தோட்டங்கள் தெருவமைப்புகளிலிருந்து தொலைதூரங்களில் அமைந்திருப்பதாலும், அவை பொருளாதார ரீதியாக தனிமைப் படுத்தப்பட்டிருப்பதாலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், மொழிப்பிரச்சினைகளாலும் (பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்மொழியில் மட்டுமே பேசக்கூடியவர்களாவர்) தோட்டங்களில் வேலை செய்வது ஏனையோரால் சமூகரீதியாக கௌரவமான ஒரு தொழிலாக கருதப்படாததனாலும் கல்வி, சுகாதாரம், மருத்துவம் என்பவற்றிற்கான வசதிகள் ஓரளவிற்கு கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும், அவற்றைப் பயன்படுத்தி அவற்றின் நன்மைகளைப் பெறுவதில் தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இறப்புவிகிதங்கள் அவர்களிடையே உயர்வாகவிருப்பதற்கும், கல்வியடைவுகள் குறைவாகவிருப்பதற்கும் இவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன. அத்துடன், குடும்பச்சூழலும் அவர்கள் வாழுகின்ற சமூகச்சூழலும் முன்னேற்றத்திற்குத்தடையாக உள்ளன. தோட்டச்சூழல் நாட்டில் இடம்பெறும் அபிவிருத்திச் செய்முறையினின்றும் அவர்களை தனிமைப்படுத்துகின்றது. பெற்றோரின் வறுமைநிலையும் கல்வியறிவின்மையும் பிள்ளைகளின் கல்வியைப்பாதிக்கின்றன. பல்கலைக்கழக அனுமதிபெற்ற மலையக மாணவர்கள் சிலர் கடந்த காலங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்ளாதுவிட்டதற்கும், அதனை இடைநடுவில் கைவிட்டதற்கும் பெற்றோரின் வறுமைநிலை காரணமாக இருந்துள்ளது. மேலும் இச்சமூகச்சூழல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சாதகமாக இருப்பதில்லை. ஓரளவு கல்விகற்ற தோட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாதிருப்பது சமூகத்தில் ஏனையோர் சிறந்த கல்;வி அடைவுகளைப் பெறுவதற்குத் தூண்டுகோளளிக்கத் தவறுகின்றது. சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதில் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களிடையே காணப்படும் போட்டிமனப்பாங்கு, ஆர்வம் என்பவற்றிற்கு மாறாக மலையக இளைஞர், யுவதிகளிடையே இவ்வித போட்டிமனப்பாங்கு, ஆர்வம் என்பன குறைவாக இருப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணமெனலாம். மேலே கூறிய அனைத்தும் அவர்களது இயலுமைகளைப் பாதிப்பதன் மூலம் முன்னேற்றத்திற்குத் தடைக்கற்களாக இருக்கின்றன.

3. மனித உரிமைகள் மறுக்கப்படுவது மக்களிடையே வேலையின்மை, அதனாலேற்படும் குறைந்தமட்ட வருமானம், கல்வியையும் மருத்துவ-சுகாதார சேவைகளையும் முறையாகப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி வறுமையைத் தோற்றுவிக்கின்றன. 1948ம் ஆண்டு முதல் தோட்டத்தொழிலாளர் உட்பட இந்தியத் தமிழர்களுக்கு இந்நாட்டில் குடியுரிமை மறுக்கப்பட்டிருந்தமை அவர்களது முன்னேற்றத்தைப் பெரிதும் பாதித்தது. வாக்குரிமை, கல்வி, தொழில் என்பவற்றுக்கான வாய்ப்புக்கள், வர்த்தகநடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்தல், காணியுரிமை போன்றவற்றைப் பாதிப்பதன் மூலம் இது அவர்களது முன்னேற்றத்திற்கு பெறும் முட்டுக்கட்டையாக இருந்தது. வரலாற்றுரீதியாக அவர்களிடையே காணப்பட்ட வறுமைநிலை தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கு இது முக்கிய பங்களித்தது எனலாம்.

4. சமூக – பொருளாதார ரீதியாக ஒரு தனிநபரோ, ஒரு சமூகமோ, ஒரு சமூகக்குழுவோ சமூகச் செயற்பாடுகள், சனநாயக செயல்முறைகள் என்பவற்றில் பங்குபற்றுவதினின்றும் முற்றாகவோ, ஓரளவிற்கோ ஒதுக்கி வைக்கப்படுவதும் வறுமை நிலையிலிருந்து அச்சமூகம் விடுபடுவதற்கு முக்கிய தடையாக செயற்படலாம். தோட்டத்துறைசார்ந்த மக்கள் நாட்டின் ஏனைய சமூகத்தினரால் சமூக-கலாசார ரீதியாக ஒதுக்கிவைக்கப்படும் அதேவேளையில், அச்சமூகத்திற்குள்ளேயே உயர்சாதியினராக கருதப்படுவோரால் ஏனையோர் ஒதுக்கிவைக்கப்படுவது சகஜமாக உள்ளது. இவ்வாறு ஒதுக்கிவைக்கப்படுவோரே அவர்களிடையே பெரும்பான்மையினராக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆலயமுகாமை அல்லது பரிபாலனம், தொழிற்சங்கத் தலைமைத்துவம் போன்றவற்றில் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுவதை இதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறலாம். மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவிருக்கும் சுயகௌரவத்தை இது பாதிப்பதோடு மனிதசுதந்திரம், மனிதஉரிமை என்பவற்றிற்கு எதிராகவும் செயற்படுகின்றது.

5. தோட்டத்துறை மக்களிடையே நிலவும் வறுமையைக் குறைப்பதற்கென உலகவங்கியின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட ஒரு உபாய அறிக்கையானது ((Moving Out of Poverty in the Estate Sector in Sri Lanka, 2005: CEPA) இலங்கையில் எல்லாச் சமூகத்தினரிடையேயும் பொதுவான மதுப்பழக்கம் அதிகரித்து வருவது உண்மையாகவிருப்பினும், தோட்டத்துறை மக்களிடையேதான் அது உயர்வாக உள்ளதாகக் கூறுகின்றது. தோட்டத்தொழிலாளர் தமது வருமானத்தின் ஆகக்கூடிய விகிதாசாரத்தை மதுஅருந்துவதற்காக செலவிடுவதாக கணிக்கப்பட்டுள்ளது. தமது வருமானத்தில் அவர்கள் 8.5 வீதத்தை இதற்காக செலவிடுகின்றனர் (ஏனைய சமூகத்தினரிடையே இது சற்றுக்குறைவாகும்). அவர்களிடையே அதிகரித்துவரும் கடன்நிலை, சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு போதுமான வசதியின்மை என்பவற்றையும் இம்மக்களின் வறுமை தொடர்பான முக்கிய பிரச்சினைகளாக இவ்வறிக்கை இனங்கண்டுள்ளது. இவர்களிடையே காணப்படும் வறுமையைக் குறைப்பதற்கு அது பின்வரும் சிபாரிசுகளை முன்வைத்துள்ளது:

(i). தோட்டப்பகுதிகளில் முறைசார்ந்தும் முறைசாராததுமான கல்விக்கான வசதிகளை மேம்படுத்தல்.


(ii). இளைஞர்களைக் கவரும்வகையில் தோட்டத்துறை தொழில்நிலைமைகளை மாற்றியமைத்தல்.


(iii). மலையகமக்கள் மதுவுக்கும் போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையாவதைத் தடுக்கும் வகையில் மலையகப்பகுதிகளில் மதுபான விற்பனைக்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களின் விநியோகத்தை மட்டுப்படுத்தல்.


(iv). சிறந்த வங்கிமுறை, கலாசாரம், விளையாட்டு என்பவற்றுக்கான வசதிகளை உருவாக்குதல்.


(v). தோட்டத்தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டங்களை மேம்படுத்தல்.

மேற்படி சிபாரிசுகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுமாயின், மலையக மக்களிடையே வறுமையைக் குறைப்பதற்கு அவை பெரிதும் உதவக்கூடும். இவற்றுடன் ஏற்கனவே நாம் இனங்கண்டுள்ள சமூகரீதியான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதும் முக்கியமானதாகும். மலையக இளைஞர்களிடையே தமது சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இவ்வித விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மலையகமக்களது நலனில் அக்கறைகொண்ட அனைத்து சாராருக்குமே பாரிய பொறுப்புண்டு. இது எந்தளவிற்குத் துரிதமாகவும், செயற்றிறன் மிக்கவகையிலும் மேற்கொள்ளப்படுகின்றதோ அந்த அளவிற்கு இந்த இளைஞர்களிடையே சமூக விழிப்புணர்வும், அதனூடாக மலையகச் சமூகத்தினது விமோசனமும் துரிதமாக ஏற்படுமெனலாம்.

தொடரும்.

குறிப்பு : பேராசிரியர் மு.சின்னத்தம்பியின் கட்டுரைகள் கலாநிதி. ரமேஷ் இராமசாமியால் தொகுக்கப்பட்டு, நூலுருவக்கமாக வெளிவரவுள்ளது.

தொகுப்பாளர்: கலாநிதி. ரமேஷ் இராமசாமி, சிரேஷ்ட விரிவுரையாளர், அரசறிவியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்

ஒலிவடிவில் கேட்க

16107 பார்வைகள்

About the Author

முத்துவடிவு சின்னத்தம்பி

முத்துவடிவு சின்னத்தம்பி அவர்கள் 1965ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் சிறப்புப் பட்டத்தைப் பெற்று அதே பீடத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றி இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகினார். 1969இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணிப் பட்டத்தைப்பெற்றார்.

1993ஆம் ஆண்டு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற முத்துவடிவு சின்னத்தம்பி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை அலங்கரித்த மலையகத்தின் முதலாவது பேராசிரியர் என்ற சிறப்புக்குரியவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • May 2024 (12)
  • April 2024 (23)
  • March 2024 (26)
  • February 2024 (27)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)
  • July 2023 (21)
  • June 2023 (23)
  • May 2023 (20)
  • April 2023 (21)